Monday, 1 October 2012

வேண்டுமென்றே...



போன வருடமே மண்டலப் போக்குவரத்து அலுவலகம் வழங்கியிருந்த வாகன ஓட்டுநர் உரிமத்தைப் பார்த்து அவர் சிரித்துக் கொண்டிருந்தார்.
‘முன்னால வண்டி எடுக்கத் தெரிஞ்சா, பின்னால எப்படி எடுக்கத் தெரியாமல் போகும்? அது என்ன மனுஷனா, முன்னால போவேன், ஆனால்
பின்னால போக மாட்டேன்னு முரண்டு பிடிக்கிறதுக்கு?’ என்று சொல்லி விட்டு  பக்கவாட்டில் இருந்து என் முகத்தைப் பார்த்தார். ‘மெஷின் சொன்னபடி கேக்கும். நாமதான் மக்கர் பண்ணுவோம் அப்பப்போ’ என்று சொல்லிவிட்டு, மறுபடியும் உரிம அட்டையில் இருக்கும் என் படத்தைப் பார்த்து,’அய்யப்பன் கோவிலுக்கு மாலை போட்டிருந்தீங்களோ?’  என்றார்.

அந்தப் படத்தில் நரைத்த தாடியுடன் இருந்தேன். தாடி வளர்க்கிற கிறுக்கு நிலக்கோட்டை காலத்தில் இருந்தே உண்டு. அப்போது மிளகு. இப்போது உப்பு நிறம். வளர்த்துப் பத்துப் பதினைந்து நாளில் ஒரு சீக்காளிக் களை வரும். ‘என்ன உடம்புக்குச் சரியில்லையா?’ என நம்மைப் பார்க்கிறவர்கள்
கேட்பார்கள்.    எடுத்துவிடலாமா என்று தோன்றும். அந்த இடத்தை சற்று உறுதியாகத் தாண்டிவிடவேண்டும். நான்காவது வாரத்தில், ‘ஜோரா இருக்கு’ என்று இரண்டு பேர் சொல்வார்கள்.  அவர்களை அப்படியே நம்பிவிடத்   தேவையில்லை.

அடுத்த ஆபத்து வீட்டில் இருந்துதானே வரும். நாம் கண்ணாடியில் இடம் வலம் எல்லாம் திரும்பி, அடுத்த சீனில் இள்வரசனுக்கு மகுடம் சூட்டப் போகிற மகராஜா வேஷம் கட்டி இருப்பது போல ரசித்துக் கொண்டு இருக்கையில், ‘ அந்த சனியனை முதல்ல எடுங்க. என்னமோ மாதிரி இருக்கு’ என்ற சத்தம் பின்னால் இருந்து கேட்கும். பின்னால் இருந்து கேட்கிற குரலை சகல திசைகளிலும் இருந்து கேட்கும் குரலாக வளர விடாது இருப்பது பொதுவாகவே நல்லது இல்லையா.   யாராவது ரொம்ப உருத்தாகக் கேட்பார்கள், ‘என்ன எடுத்திட்டீங்க?’ என்று. ‘வைக்கணும்னு  தோணிச்சு, வச்சோம். எடுக்கணும்னு தோணுச்சு, எடுத்தாச்சு’ என்று சொல்லிக் கொள்ள வேண்டியதுதான்.

’நான் அய்யப்பன் கோயிலுக்குப் போனதே இல்லை. சின்னக் கோபால்தான்
அடிக்கடி போவான்’ -  எனக்கு கோபால் ஞாபகம் வந்துவிட்டது. யாராவது இப்படித்  திடீர் என்று ஞாபகம் வரும்போது, எதிராளிக்கு அவர்களைத் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் அந்தப் பெயரைச் சொல்லுகிறதில் ஒரு சந்தோஷம் இருக்கிறது.

‘இப்போ என்ன, வாங்க. நான் கூட்டிக்கிட்டுப் போறேன்’

‘இதுவரைக்கும் அப்படித் தோணலை’

‘தோணனும். தோணினாத்தான் மலைக்கு வரணும். வேன் அமர்த்தி இருக்கு. ரெண்டு சீட் காலி .நீங்க ஏறுங்கன்னா ஏறியிர முடியுமா. உங்களுக்கா அது தோணனும். அவன் கூப்பிடணும்’ என்று சபரிமலைக்குப் போவது பற்றிச் சொல்லிக் கொண்டே வந்தவர், மறுபடியும் ஓட்டுநர் உரிமத்தைப் பார்த்து சிரித்தார். சற்று கேலி குறைவான, மரியாதை குறைந்துவிடாத சிரிப்பு. ஒருவகையில் அவருக்கு நான் மாமா.   மாமா கூட இல்லை. மாமனார். அதை விட்டுக்கொடுக்க அவருக்கு மனமில்லை.

‘ இதையே எடுத்துக்கிடுங்களேன். லைசன்ஸ் எடுத்து ஒரு வருஷம் ஆகப் போகுது. இன்னும் ரிவர்ஸ் வரலைன்னு வண்டியையே எடுக்காம ட்ரைவர் போட்டு இதுவரைக்கும் மேக்கப் பண்ணிக்கிட்டு இருக்கீங்க.  ஏன்?’ - இதை நம் முகத்தைப் பார்த்துக் கேட்டாரே தவிர, இதற்குரிய பதில் அவரிடமே இருந்தது. ‘வண்டியை எடுக்கணும் , ஓட்டணும், இங்க வரணும், அங்க
போகணும்னு உங்களுக்கே ஒரு ‘இது’ வரணும். ‘ இப்படிச் சொன்னது போதவில்லை என்று தோன்றியது போல. ‘உங்களுக்கே ஒரு ஆசை வரணும்.’ என்று மேலும் சொன்னார்.

‘ கைலாசமும் இப்படித்தான் சொன்னான்.  ‘சித்தப்பா உங்களுக்கு ட்ரைவ் பண்ணனும்கிற passion இல்ல. இருந்தால் இதுக்குள்ளே டவுண் வரைக்கும் நீங்களே எடுத்துக்கிட்டுப் போயிருப்பீங்க’  - நான் சொன்னது அவருக்கு உடனடியாகப் பிடித்திருந்தது.

‘கரெக்டா சொல்லியிருக்கான்.  ஃபேஷன் வரணும்.’

அது பேஷன்,  ஃபேஷன் இல்லை என்று திருத்தினால் நன்றாகவா இருக்கும். நான் கேட்டுக் கொண்டே இருந்தேன். எனக்குத் தெரியும், அவர் அந்தச் சொல்லில் இருந்து விலகி, தன்னுடைய சொல்லுக்கு அவராகவே வந்து விடுவார் என்று.   எல்லோரும் அவரவர் மனம் சொல்கிறபடிதான் பேசுவது கேட்பது எல்லாம்.  ஒரு பெரும் அம்பாரத்தில் இருந்து தனக்கு வேண்டிய தானியத்தையே ஒரு குருவி கொத்தியெடுத்துக் கொள்கிறது.

‘அந்த ஆசை யிருந்தா, நீங்களே இதுக்குள்ள எந்த முடுக்குக்குள்ளேயும் ஓட்ட ஆரம்பிச்சு இருப்பீங்க. யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டாம். இந்த ட்ரைனிங் ஸ்கூல்ல என்ன சொல்லிக்கொடுத்திருக்கான். துட்டக் கொடுத்து லைசன்ஸ் வாங்கிக் கொடுத்திருப்பான். இம்மியளவு கூட அவன் எதுவும் சொல்லியே கொடுக்கலை. நீங்களா கத்துக்கிட்டதுதான் எல்லாம்.  மனுஷன் ஆனா ஆவன்னா சொல்லிக் கொடுக்காட்டா,   உங்க கிட்டேயும் என் கிட்டேயும் பேச மாட்டானா?   பேசிக்கிட்டுதானே இருக்கான்.   உழவர் சந்தைக்குப் போனா, பத்துப் பேர் சுத்தி நிண்ணுக்கிட்டு கால் கிலோ, அரைக் கிலோண்ணு கத்திரிக்காய் வாங்கினா, கரெக்டா மிச்சம் கொடுக்கத் தெரியாமலா அவ உக்கார்ந்திருக்கா’ - இப்படிச் சொல்லும் போது, கத்தரிக்காய் விற்கிற அந்த அவளையும் உழவர்சந்தையையும் அவர் ஒரு கணம் காட்டிவிட்டுத் திரும்பி, என்னிடம் வந்தார்.

‘அதெல்லாம் சரியா வந்திரும் மாமா.  வராம எங்க போகப் போது? தினசரி எந்திரிங்க. பல் தேச்சுக்கிட்டே வண்டியைச் சுத்தி வந்து பாருங்க. ஏதாவது எங்கேயாது பொழிஞ்சிருக்கா? கீச்சி இருக்காண்ணு பாருங்க. லேசா வண்டிய உள்ளங் கையால தடவிக் கொடுங்க. தடவிக் கொடுக்கதுக்கு அது என்ன
குதிரைக் குட்டியா மாப்பிளைண்ணு தோணும். ஏன்? குதிரக் குட்டியாதான் இருக்கணுமா? சும்மா தடவிக் கொடுங்க.  இது நமக்குள்ளதுண்ணு உங்களுக்குத் தோணும். வண்டிக்கும் இவன் நமக்கு வேண்டப்பட்டவன்னு
தோணும். அது எப்படிண்ணு எல்லாம் கேக்கப்படாது. உலகத்தில தன்னை
அறியாம இப்படி நிறைய நடக்கு. தன்னை அறியாம நடக்கிறதை வச்சு தான் சாய்ஞ்சு போகாம எல்லாம் ஒழுங்கா சுத்திக்கிட்டு இருக்கு. ‘ - இப்படி சொல்லச் சொல்ல அவர் முகம் வேறு யாரோ மாதிரி ஆகிவருவது தெரிந்தது.

‘ சொட்டுண்ணு காக்கா எச்சம் போட்டிருக்கும். வெக்கப் படாம விரல்ல எச்சியைத் தொட்டு அழிங்க.  அது இன்னும் கொஞ்சம் பெரிசாகி இருக்கும். அஞ்சு விரலையும் பரப்பி, உள்ளங்கையால துடச்சு விடுங்க. இதில என்ன அசிங்கம் இருக்கு. நம்ம புள்ளைகள் ஆய் போனா நாம கால்கழுவி விட யோசிக்கவா செய்தோம்.  எதுக்கு சொல்லுதம்னா, எல்லாத்திலயும் ஒரு ஒட்டுதல் இருக்கணும். இருந்தா அதனோட காரியமே வேறே’ -   அவர்
வாகனம் குறித்து மட்டும் பேசுவது போல இல்லை. ஒன்றைச் சரியாகப்
பேசினால், அது எல்லாவற்றுக்குமே சரியாகத்தான் இருக்கும் போல.

ஓட்டுநர் உரிமத்தை என்னிடம் நீட்டினார். ‘அதெல்லாம் இருக்கட்டும். மாமா காலையில எப்ப ஃப்ரீயா இருப்பீங்க?  உங்க வாக்கிங் எல்லாம் முடிஞ்சு ஏழு ஏழரைக்கு வரட்டுமா?  வந்தா சரியா இருக்குமா?  உங்க சௌகரியத்தச் சொல்லுங்க. அது படி  நான் டாண்ணு வந்திருதேன். வண்டியை எடுத்துக்கிட்டு என் கூட நாலு நாள் வாங்க. இப்பிடீ எங்க தோணுதோ அங்க போவோம்.  முன்னால் பின்னால எல்லாம் ஓட்டுங்க.
அஞ்சாவது நாள் காலையில மெட்ராஸில இருந்து வீட்டுக்கு ரிவர்ஸ்லயே வந்திருவீங்க. முன்னால ஒருத்தன் பொறத்தால கூடியே நடந்துக்கிட்டு இருந்தானே, அப்படி’ -  இதைச் சொல்லும் போது அவருக்கு சிரிப்பு வந்து விட்டது.  அதையே இன்னும் கொஞ்சம் சொல்லப் பிரியப்பட்டவராக,
‘எந்த பேப்பரைத் திலுப்பினாலும் அப்ப அவம் படமால்லா இருந்துது’ என்று சொல்லி அதற்கும் சிரித்தார்.

நான் இன்னொரு படத்தை செய்தித் தாட்களில் கற்பனையாக அச்சடித்துக் கொண்டு இருந்தேன். அதில் நான் பின்பக்கமாகவே வாகனத்தை ரிவர்ஸில் ஓட்டியபடி தொலைக் காட்சி நிருபர் ஒருவருக்குப் பேட்டி அளிக்கிறேன்.

‘இப்படி ஒரு சாதனை செய்யவேண்டும் என்று உங்களுக்கு எப்படித் தோன்றியது’ - நிருபர் கேள்வி கேட்கும் போது அவர் முகத்தில் இருந்த மைக்கை, பதிலுக்காக என் முகத்திற்கு நெருக்கமாக நீட்டுகிறார்.

‘ரொம்ப காலமாக எனக்கு அப்படி ஒரு passion'  - என்றுதான்  சொல்ல நினைக்கிறேன். ‘ரொம்ப காலமாக எனக்கு அப்படி ஒரு ஃபேஷன்’ என்று வேண்டுமென்றே சொல்கிறேன்.

ரொமபவும் வேண்டியவர்கள் ஞாபகம் வந்தால்தானே இப்படியெல்லாம் வேண்டும் என்றே சிலவற்றைச் சொல்ல முடியும்.

*



No comments:

Post a Comment