Saturday 30 June 2012


அவரவர்.

முன்னறிவிக்கப்படாத
மின்தடை இரவின் அடர்த்தியை
எந்த மனப் பிறழ்வு இன்றியும்
நீங்கள் அறிவீர்கள்.
அகவிருள் அகற்றியபடி
அசையாதிருந்தது
பரணிலிருந்து அன்றாடப்
பயன்பாட்டுக்கு வந்திருக்கும்
அம்மாவின் அம்மாவின் சிற்றகல்.
முன்னகர்ந்து பின்னகர்ந்து
மூதாதித் தொடர்மலையின்
தீ வரை எரிந்தது திசையெலாம்.
எது தூண்டிற்றோ
இந்த வினை செயல்?
இதுவரை கையில்வைத்து ரசித்த
என்னுடைய மார்பளவுப் ப்டம்
கருகிச் சுருள்கிறது
இரு விரல்களின் இடையில்.
நீங்களும்            
ஒருமுறையேனும் முயல வேண்டும்
அவரவர் நிழற்படத்தை
அவரவரே சாம்பராக்கும்
அலகிலா விளையாட்டை.

%


 நிசிச் சப்தம். 

எத்தனையோ வருடங்களுக்கு
முன்பிருந்த வீட்டின் வாசல்.
பாழும் இந்த பகலிரைச்சலிலும்
கேட்கமுடிகிறது
இறந்தகால நிசிச் சப்தத்துடன் உதிரும்
நெட்டிலிங்கக் கொட்டைகளைத்
துல்லியமாக.
இனியொருநாள் இதே போல
கிளைமாறும் கரும்பறவையிலிருந்து
கழன்று விழும் இறகுச் சப்தம்
காதில் விழுமெனில்
அத்துடன் செத்தே போவேன்
பித்தாகி
செஞ்சடை மேல் வைத்த என்
தீ வண்ணனே.

%

அமைதல். 

தெரியும்.
உங்கள் பாற்கடலில் எஞ்சியதும்
உங்களுக்கு ஒரு துளி விஷமே.
அவனுக்கும் இவனுக்கும் உவனுக்கும்
இதே ஆலகாலம் தான்.
தெரியாததல்ல
என்னுடைய குவளைக்கு மாற்றும்
உங்களின் இடைவிடாத
எத்தனங்கள் எல்லாமும்.
நான் கடைந்த நீலம்
ஒற்றைச் சிறு பூவாக என்
உள்ளங்கையில் மலர்ந்திருக்கிறது.
பொறுங்கள்.
வாடிவிடும் முன்னர் அதைச்
சூடிவிட்டு வருகிறேன்,
பெயக் கண்டு நஞ்சுண்டு
அமைய.


%


யாரை. 

வேப்பம் பூ அடர்த்தியாக்கிய
வேனில் இரவு.
வழக்கமான மின்மினிகள்
தேய்பிறை வானத்தில்.
ஒரு பெரும் இடைவெளி தாண்டி
இந்த இடத்தில் எனக்கு
நாற்காலி இட்டிருக்கிறது தனிமை.
என்னை வீடுகடத்தும்
உதிர்பூவின் வெள்ளைச் சத்தம்..
குழந்தையழுகையிட்டு
நந்தியாவட்டையின் கீழிருந்த பூனை
நகர்ந்து வந்து புறங்காலை
நக்கத் துவங்குகிறது.
எனக்குத் தெரியவில்லை
யாரை இழுத்தணைத்து இப்போது
ஒரு கசப்பு முத்தம்
இடப் போகிறேன் என்று.


%

கல்யாண்ஜி
உயிர் எழுத்து - 2012.

Thursday 28 June 2012

அவர் பொருட்டு..

மனம் இன்னும் சிகாபுதீன் பொய்த்தும் கடவுவின் ,’போதேஸ்வரனில்,  சதீஸ் பாபு பய்யனூரின் ‘ஆறாவது வார்டி’ல், அதைவிடவும் விலக முடியாதபடி, ‘குருவிளை ஸார், உலகச் சந்தையில் கதையிலும் இருந்தது.
ராமச்சந்திரன் தான் “யௌவனத்தின் கடல்” புத்தகத்தை எனக்குப் படிக்கத் தந்தார்.  அம்ருதா வெளியீடு. எல்லாம் சமீபத்திய மலையாளக் கதைகள். குளச்சல் மு. யூசுஃப் மொழியாக்கம்.

நான் ராமச்சந்திரனிடமிருந்து திரும்பி ராமச்சந்திரனிடமே போய்விடும் ஒரு
ஒற்றையடியையே இந்த வாசிப்புத் தந்தது. ராமச்சந்திரனின் எஸ்தர் போல, இந்த குருவிளை ஸார் கதையிலும் ஒரு எஸ்தர் வருகிறார்.  பாபு பய்யனூர் அவருடைய ஆறாவது வார்டில் கூட, ராமனுக்கு எஸ்தர் சித்தியின் சாயல்
இருக்கிறது. ராமனின் நடுங்கும் விரல்கள், எஸ்தர் சித்தியின் கைகளை விடவும் நேரடியாக,அந்த ராமகிருஷ்ண பணிக்கரின் கழுத்தில் மெல்ல இறங்குகின்றன. போதேஸ்வரனுக்கு அங்கங்கே என்னுடைய   படம் வரைகிற சுபாவம். என் கல்லூரி வகுப்புச் சகா  தங்கசாமி கொடுத்த க்ரூப்  ஃபோட் டோவில் அவருடைய  பால்யகால சகியின் முகம், வரையவே முடியாத அளவுக்குப் படு மங்கலாக, போதேஸ்வரனுக்கு ஏற்படுத்திய அத்தனை உளைச்சலையும் எனக்கும் கொடுத்ததுண்டு.


நான் இந்த மூன்று கதைகளாலும் ஒரு பெரும் நெருக்கடிக்குள்ளாகி இருந்தேன்.  எனக்குப் பிடித்தமான கதைகள் அனேகமாக எப்போதும் இப்படி ஒருவித துக்கம் கவியும் மனநிலையையே உண்டாக்கிவிடுகின்றன. இந்த வகையான துக்கம், என் அன்றாட ரணங்கள் சார்ந்து உண்டாகி, அப்புறம் தானாக ஆறிவிடுகிறவை அல்ல. பகலுமற்ற இரவுமற்ற ஒரு கருக்கலில் நம்மைத் தனியாக இவை நிறுத்தியும்,  படித்துறையிலும் அல்லாது நீச்சலிலும் அல்லாத ஒரு தக்கைத் தவிப்பில் ஒரு கசத்தில்சுழற்றி இழுக்கவுமாக என்னைத் தனிமைப்படுத்திவிடுவதில் மாற்றமே கிடையாது.

 நேற்று இரவுதற்செயலாக, மனதோடு மனோ நிகழ்ச்சியில் கேட்ட பண்டிட் ஜனார்தனன்அவர்களின் சிதார் மீட்டல் போல், கடைசி விள்ளல் தூண்டும் பெரும் பசியைஅந்தக் கதைகள் உண்டாக்கியிருந்தன.   இது போன்ற மனநிலையில், பெருமாள்புரத்திலேயே வெளியே போகத் தோன்றாது. இங்கே ஆதம்பாக்கம், லட்சுமி ஹயக்ரீவ நகர், முதல் நெடுந்தெருவில் இருந்து என்ன செய்ய?
ஏதாவது எழுதிவிட முடிந்தால், இது கொஞ்சம் தணியும்.  ராமச் சந்திரனே
எழுதாதிருக்கிறபோது எனக்கென்ன வந்தது?

நல்ல வேளை, மழை காப்பாற்றியது.முதலில் மழையின் சத்தம்தான் அழைத்தது.  எந்த நான்கு சுவர்களின் கனத்த இருட்டுக்குள் இருந்தாலும்,  எல்லாக் கதவுகளையும்  அகலத் திறந்து,  மழைச்சத்தம்   நம்மைக்  கையோடு வெளியே அழைத்துச் சென்றுவிடுகிறது.  ஒருமருத்துவ விடுதியின் படுக்கையில் இருக்கும்   முதிய பெண்ணின் பச்சை   நரம்புகளை நீவி, உள்ளங்கை பற்றி ஆறுதல்படுத்துவது போல மழைவாசம் நம் கையைப் பற்றுவதை ஒவ்வொரு முறையும் நான் உணர்ந்திருக்கிறேன்.

நான் வாசல் இரும்பு கேட் பக்கம் வந்து சேர்கையில் மழை என்னுடைய
கைகளை விட்டுவிலகி,  நடனமிடத் துவங்கியிருந்தது. அல்லது ஏற்கனவே நடந்துகொண்டிருந்த ஒரு ஈரநடனத்துடன் அது தன்னை இணைத்துக் கொண்டது.

நான் மனதால் ஆடத் துவங்கியிருந்தேன். எனக்குப் பிடித்த அத்தனை பேரும் என்னுடன் ஆடுகிற நடனமாக அது இருந்தது. .என் சின்ன வயதில் இருந்து இன்னும் தீராத பேரழகாகக் கொப்பளிக்கும் மழைக் குமிழிகள் இந்தத் தார்ச் சாலையில் கீழிருந்து நீர்ப்பூ மலர்த்தின. அதற்கான ஒரு உவமானத்தை
என்னால் இதுவரை உருவகிக்கவே முடியாதவனாகவே நான் இருக்கிறேன்.

தெருவில் நடமாட்டமே இல்லை. நடமாட்டமற்ற ஒரு சென்னைத் தெருவை
மழை மட்டுமே உண்டாக்கித் தரமுடியும். ஒரு கார் ட்ரைவர் எதிர் அடுக்ககச்
சுவர்ப் பக்கம் ஒண்டியிருந்தார். பழைய துணிகள் தைக்கிற தையல்காரர், அவருடைய வழக்கமான வாகை மரத்தின் கீழ், தன்னுடைய தையல் இயந்திரத்தைக் கூடாரமிட்டுக் காப்பாற்றியபடி இருந்தார். ஒரு பல்சர் பைக்
மழைக்கு எந்த பாதுகாப்புத் தலைக் கவசமும் அவசியமற்று, ஒரு  சாய்வான சுதந்திரத்துடன் நனைந்துநின்றது.
எந்த மரமும் ஆடவில்லை. எல்லா தனித்தனி இலையும் இந் த மழையின்
துளிக்குத் தன்னை ஒப்புக் கொடுத்திருந்தன.

மழை முதல் பாட்டம் முடிந்து இரண்டாவது பாட்டத்தையும் துவங்கி வீசியது. மழை தீயைப் போல எரிவதாகத் தோன்றியது. மழையில் குளித்தலும் தீக் குளித்தலும் ஒன்றென நினைக்கையில், எனக்கு எங்கள் ஊர் தீப்பாய்ச்சி அம்மன் ஞாபகம் வந்தாள்.  ‘ செம மழை சித்தப்பா’ - என்னிடம் பாலாஜி சொல்லிவிட்டுப் போனான்.
நான் அண்ணன் வீட்டுச் சலவை இயந்திரத்தைப் பழுது பார்க்கவந்திருக்கும் அந்த சுருட்டை முடிச் சீருடை இளைஞனிடம் கேட்டேன், ‘தம்பி, சென்னையில இந்த மூணு மாசமா இப்படி மழை பெஞ்சுருக்கா?’  .

அவர் என் பக்கம் திரும்பவே செய்யாமல்,  சலவை இயந்திரத்தின் உதிரி பாகங்களைக் கழற்றிப் போட்டபடியே சொன்னார், ‘இல்லீங்க ஸார்”. 

 இந்த அரை மணி நேரமாகப் பெய்யும் மழையை அவர்  ஒரு நொடி கூடப்
பார்த்திருக்கவில்லை.
 அவர் பொருட்டும்  பெய்து கொண்டிருந்தது மழை.

Tuesday 26 June 2012

மலர்தலினுடையது

விடுவித்தல்..

சிலுவை ஒரு அழகான வடிவம்
குறுக்கும் மறுக்குமான
கிராமத்துத் தெருக்களாக.
ஆணிகளின் உறுதிக்கும்
குறைவில்லை.
அறையப்பட்டவரை அகற்றினால்
விடுவித்துவிடலாம்
சிலுவையை.

இப்போதைக்கு. 

கொழுந்து இலைகளின்
கசப்பு நல்லது.
துளிர்
ஒப்பற்ற தாமிர நிறம் உடையது.
எல்லாம் தெரியும்,
இப்போதைக்கு அது
அசையாது இருக்கிறது
உறைந்த கண்ணீராக
அற்புதப் பிற்பகல் வெயிலில்
என்பது உட்பட.

காலக் கடல். 

விலங்கு எதுவுமில்லை
கை கால்களில்.
போதத்தின் சாயமிழந்த முகத்தில்
வெளிறிய அமைதி.
நுழைந்து நிற்கும் எங்களின்
சலனம் அறியா அறையில்
அழுகும் வெளிச்சத்தின் துர்வாடை.
கிழிந்து பறந்து கிடக்கின்றன
நாட்காட்டியின் தேதிச் சருகுகள்
ப்ராய்லர் தூவிகளாக.
ஃபெப்ருவரி 29ல் இருந்து
ஆகஸ்ட் 22க்கு விரைந்திருந்தது
அவனுடைய பித்தத்தின் விசைப்படகு.
காலத்தின் பெருங்கடல் வழிவிடக்
காத்திருக்கிறோம்.
கதவைத் தட்டித் திறக்கப் போகிற
ஒருவரின் வருகைக்காகவும்.


தன் மலர்வைத் தானே 

முற்றிய கோடையின் வைகறைக்கு
ஒரு மாயக் குளிர்.
இந்த இளவேனில் இரவுக்கு
இப்படி ஒரு வாசனை.
இரவே ஒரு ஒற்றைப்பூவாக
இடைவிடாது மலர்கையில் உண்டாகும்
கொஞ்சம் கொஞ்சமான வாசனை.
அது பூவினுடையது அல்ல.           
மலர்தலினுடையது.
தானறியாது தன்னைத் தானே
திறந்துசெல்லும் வளர்பிறை இரவு
சற்றே ஒரு கணம்
தன்னைக் குனிந்துபார்த்து,
தன் மலர்வைத் தானே
தரிசிக்கும் தருணம்.
மீன்புரளும் மின்னல் நொடியில்
ஒரு குமிழியுடைத்து பச்சைக்குளம்
சிமிழ் திறந்து காட்டும்
நீரின் நிர்மல சுகந்தம் என
அமர மணம் உணரும் அது.
உணர்தல் பொழுதின் சிரசிறங்கும்
இவ்வேளை இரவை நான் நுகர,
இரவும் எனை நுகராதா போகும்?
நுனிமூக்கு மலர்விளிம்பு தொடாது
நுகர்ச்சி ஏது?
இரவு பெரும் வெண்ணிதழுடன்
என்னை மிக நெருங்கி வர,
இரவையும் காணோம்.
என்னையும் காணோம்.

%

கல்யாண்ஜி
உயிர் எழுத்து.
Sunday 24 June 2012

யாரை முன்வைத்தாவது...
'மவுண்ட் ரிட்டர்ன்  ஒன்னு'
 மாம்பலம் மின் ரயில் நிலையத்தில்   சீட்டு வாங்கும் போதே   திரும்பி  வரும்போது  அசோக்நகர்  ஐம்பத்து  மூன்றாது தெரு வரை நடப்பது என்று தீர்மானித்திருந்தேன். எதற்குமே  தீர்மானங்கள் எடுக்கப் பழகியிராத நான், இது போலஎப்போதாவது எளிய தீர்மானங்களின்  மணல் வீடு கட்டிக் கொள்வது உண்டு. நாமே கட்டி, நாமே சந்தோஷமாகச் சிதைத்துவிட்டு, வீட்டுக்கு வந்த பின் மணல்வீட்டைமறந்து  கால்விரல்களுக்கு  
இடையே   மினுங்கும் மணல்பரல் பார்த்து ,  கனவில் மறுபடி கடல்கரையில் நிற்கமுடியும் சாத்தியம் அதில் எப்போதும் நிறைய அல்லவா.

வெள்ளிக் கிழமை மாலைதான்.  ஆனால் மின் ரயிலில் அப்படியொன்றும் நெரிசல் இல்லை. 90 சதவிகிதம் பேர்ஒரு முழு வேலைநாளின்  அலுப்பை கைபேசியில் தீர்த்துக் கொண்டிருந்தார்கள். பக்கத்தில் இரண்டு எதிர் எதிர் இளைஞர்களின் புல்லாங்குழல் இசைப் பகிர்வில்  ஒரு சிறுகணம் ரயிலில் மூங்கில் அசைந்து வேணுவனம் ஆயிற்று.   நான் மாம்பலம் நிலையத்தில் எனக்குப் பிடித்த படிக்கட்டின் எந்தப்பக்கத்தில்   ரயிலின்  என்னுடைய  இறங்கும் வாசல் நெருங்கும் என்ற விளையாட்டில் இருந்தேன்.  சேதாரமே இல்லாத விளையாட்டு.
  எனக்கு ஒரு விளையாட்டு உண்டெனில் ரயிலுக்கும் ஒன்று இருக்கும் அல்லவா?  அது  அதன் விளையாட்டில் ஜெயித்து, இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் அல்லாது, படிக்கட்டின் தராசு முள்ளில் நின்றது. கிண்டியில் ஏறி, சைதாப்பேட்டையில் தலைமுடி கலைய நின்று, எனக்கு முன்னே இறங்கின  நாலைந்து கலகலப்பரின் நிழலாக இறங்கினேன். மூன்றே  நிலையங்களின் இடைவெளியில், என்னிடம் எதையோ தந்து விட்டும் என்னிடமிருந்து எதையோ எடுத்துக்கொண்டும், நகர்கிற தொடர்வண்டியின் மெலிதான வேகம் எப்போதும் போல இப்போதும் எனக்குப் பிடித்திருந்தது.

நான் படிகளில் ஏறினேன். என் கால்களின் கீழ், 97, 98, 99ஆம் வருடப் படிகள் வந்து சேர்ந்திருந்தன.  2. ராஜு நாயக்கன் தெரு, மேற்கு மாம்பலத்துக்கு அழைத்துச் செல்லும் படிகள்.  இப்போது பயணச் சீட்டுகள் வாங்குகிற இடமாக மாறியிருக்கும் அந்தத் திருப்பத்தில்தான், அதற்கு   முந்திய தின இரவில்  தன் கிராமத்தில் இருந்து துரத்தப்பட்டு  இந்தத் திக்கற்ற நகரத்தில் கையேந்தும்படி அந்த முதியவரும் அவருடைய கிழவியும் நின்றார்கள். அந்த இருவரும் உங்களுடைய,  அல்லது  என்னுடைய  அல்லது  யாருடைய  வீட்டுப் பட்டாசலில் தொங்கக்கூடிய ஒரு குடும்பப் புகைப்படத்திலிருந்து கிழித்து எடுத்து அப்புறப்படுத்தி, இந்த மாம்பலம் நிலையப் படிக்கட்டில் வீசப்பட்ட முகத்துடன் இருந்தார்கள். ஒரு வேளை, இத்தனை வருடங்களிலும் ஒரே ஒரு புகைப்படம் கூட எடுக்கப் படாத முகங்களாகக் கூட அவை இருக்கலாம்.

அந்த அம்மா கட்டியிருந்தது ஒரு மஞ்சள் நிறப் புடவை. எங்கள் பக்கத்தில் மாம்பழக் கலர் என்று சொல்வார்கள் . ஒரு திருவிழாவுக்கு அல்லது அவருக்கு வேண்டிய ஒருத்தரின் கல்யாணவீட்டுக்குப் புறப்பட்டது போல,  தங்களின் மிக மோசமான ஒரு தினத்தில் பிரவேசிக்கிறதை அறியாமல்,  பின்கொசுவம் வைத்து அதை உடுத்தியிருந்தார்கள். 
 குங்குமம் வைத்த நெற்றியும் அடர்ந்தமீசையுமாக, கலங்கிச் சிவந்துதவிக்கும் கண்களுடன் அந்தப் பெரியவர் நின்ற கோலம் இன்னும் என்னை  வதைக்கிற நினைவுகளில் ஒன்று.  கும்பிட்டபடியே ஒரு கருஞ் சிலையென நின்ற அவர், நல்ல வேளை அந்த நொடி வரை, கையேந்தி எதுவும் கேட்டுவிடவில்லை. அப்படிக் கேட்டிருந்தால், சொல்ல முடியாது,  அப்போது  கடந்து   சென்ற மின்ரயில்கள் ஒன்று  மேலும் ஒரு விபத்துச் சிதைவைத்  தாண்டிப் போயிருக்கும்.

படிகளில் இறங்கி, பிள்ளையார் கோவில் தாண்டி, வாகனக் காப்பக வரிசை பார்த்து ஸ்டேஷன் ரோட்டில் திரும்பும் போது நான் அஜயன் பாலாவையும்
மாரிமுத்தாகிய யூமாவாசுகியையும் அந்த சப்போட்டாப் பழக்காரரையும் எதிர்காண விரும்பினேன். ஒரு இடிந்த சுவரை, ஒரு தொலைந்த தெருவை, ஒரு கிழிந்த பக்கத்தை நமக்கு நெருக்கமான ஒரு முகத்தின் ஞாபகங்களுடன் மீட்டுக் கொள்வது அருமையானது அல்லது துயரமானது.  அதற்கு அடுத்து ஸ்டேட் பாங்க் குடியிருப்பில் இருந்து ஜெயவர்மன் வர மாட்டாரா?. நாம் நினைத்த போதெல்லாம், நினைத்த இடங்களில் நினைத்த மனிதர் வர, இது என்ன தமிழ் சினிமாவா?  யாரும் வரவில்லை.

ஆனால் அந்தப் பூ விற்கிற பெண் அப்படியே அதே இடத்தில் இருந்தார். எனக்கு மேலும் வயதாகிவிட்டது போல,  இந்த  பதினான்கு  வருடங்கள்  அவர்  மீதும் மெல்லக் கிளையில் அமரும் பறவை போல இறங்கியிருந்தது. மூன்று நாட்களாக அவரை எங்கே காணோம்?’ என யாரோ பூ வாங்கியபடியே அவரிடம் விசாரித்துக் கொண்டு இருந்தார்கள். ஒரு வேளை அவர், என்னை எங்கே காணோம் இத்தனை வருடங்களாக என்று விசாரித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். பூ விற்கிறவர்கள் பூ வாங்குகிறவர்களை மட்டும்தான் விசாரிப்பார்கள் என யார்  சொன்னார்கள். அவர்கள்  அவர்களுடன் வாழ்கிற அனைவரையும் விசாரித்தபடியேதான் இருக்கிறார்கள். விசாரிப்பின் வாடாத பூவுடன் அவர்களின் பூக் கூடை ஈரமாகவே இருக்கிறது.

நான் அந்தப் பழக்கடையைத் தேடினேன். பழக்கடையைக் கூட அல்ல, பழம் விற்கிற அந்த முகத்தை. அவ்வளவு அழகான கருப்பு. அழகான முகக் களை, பொட்டு, சிரிப்பு எல்லாம்.  பூமா என்று ஒரு ரெட்டைச் சடை போட்டபெண் குழந்தை உண்டு என ஞாபகம்.  பூமாவுக்கு இப்போது கல்யாணம் ஆகிப் போயிருக்கலாம்.    ஒரு கணினிப் பொறியாளர் ஆகவோ    அவருடையதுணைவியாகவோ  கூட  இந்தப் பழைய மகாபலிபுரச் சாலையில் பூமா போய்த் திரும்பிக் கொண்டிருக்கலாம். சற்று, முன் பக்கங்களைத்  திருப்ப முடியும் எனில், ஜூனியர் விகடனின் காதல் படிக்கட்டுகள்வரிசையில், என் வரிகளில்   நீங்கள்  இந்த பழக்கடைக்கார முகத்தை வாசித்திருக்க முடியும்.

இது போதாதா? நீங்கள் வாசிக்கச் சில வரிகளை நானும், நான் வாசிக்கச் சில வரிகளை இந்த மேற்கு மாம்பலம் ஸ்டேஷன் ரோடும் விட்டுச் செல்லும் எனில், அந்த வரிகளை நிரந்தரப்படுத்த யாரோ ஒருவரின் முகமும் இன்னும் இருக்குமெனில். போதும்தானே.அந்த முகம் அந்த முகமாகவே இருந்தது. அந்தப் பழக்கடைக்குப் பின் ஒரு செருப்புக் கடை புதிதாக வந்திருந்ததே தவிர, அவர் அப்படியே இருந்தார். பட்டுப் புடவை போல மினுங்குகிற, பட்டுப் புடவை அல்லாத ஒன்றை அணிந்து, அதே மூக்குத்தியும் சிரிப்புமாக, அந்த செருப்புக் கடைவாசலில் ஒரு ஸ்டூலில் அமர்ந்திருந்தார்.  சந்தோஷம் ஒரு ராணியின் தோரணையை அவருக்குக் கொடுத்திருந்தது. அல்லது வாழ்வை அதன் போக்கில் மலர்ந்த நிம்மதியுடன்  வாழ்கிறவர்களுக்கு, ஒரு தாமரைக்குளத்தின் பறிக்காத பூவின் அப்படியொரு அழகு வாய்த்துவிடுகிறது. நான் அவரிடம் பேச விரும்பினேன். பேச வேண்டும் என நினைத்துப் பேசாமல் போகிற பாசாங்கு அல்ல, ஏதோ ஒரு கூச்சம், அவரைப் பார்த்தபடியே என்னைத் தாண்டிப் போகவைத்தது. பேச நினைக்கிறவர்களிடம் பேசமுடியாத சொற்களின் மிச்சமாகவே இந்த வரிகள் அதனுடைய அடுத்த வரிக்கு என்னை இட்டுச்செல்கின்றன. இந்தப் புள்ளிக்கு மேல், நான்முற்றிலும் வேறு ஒருவனாக ஆகியிருந்தேன்.ஏரிக்கரைச் சாலை, தம்பையா தெரு, ஆரிய கௌடா சாலை, போஸ்டல் காலனி மூன்றாம் தெரு, அஷோக் நகர் 49ஆம் தெரு எல்லாம் தாண்டி, நான் அந்த ஐம்பத்து மூன்றாவது தெரு, ரெங்க நாயகி அடுக்ககத்தை எப்படி இத்தனை விரைவில் அடைந்தேன் என்பது ஆச்சரியமாக இருந்தது. இடையில் பெயர் தெரியாத ஒரு தெருவில், மன நல மருத்துவர் ராமானுஜத்தை, நடனப் பயிற்சிமுடித்து நின்றுகொண்டிருந்த அவர் குழந்தையுடன் பார்த்ததும் பேசிவிடை பெற்றதும் மட்டுமே  நினைவில் இருந்தது. அப்படி உயரப் பறந்து வந்திருக்கிறேன்.
 சில முகங்கள் இப்படிச் சிறகுகளாக இப்படி நம் விலாப் புறங்களில் முளைத்து விடுகிறார்கள். அல்லது சில மனிதர்கள் பறவைகளாக நம்முடனே பறந்து வருகிறார்கள். மனிதர்கள்  அவ்வப்போது யாரை முன்வைத்தாவது பறவைகள் ஆவதும் பறக்கமுடிவதும் எவ்வளவு அருமையானது.

%

.Friday 22 June 2012


தொலைத்துத் தொலைத்து
---------------------------------------


மதுச் சாலை தொலைக்காட்சியில்
சிறுத்தை தாக்கிய தேயிலைத் தோட்டச் சிறுமி.
இடுக்கியை நீங்கிய ஐஸ்கட்டி அமிழல்
மினுமினுக்கும் திரவத்தில்.
தீவிர மறுப்பை மீறி, என்னை வல்லழைத்து
இங்கு இருத்தியிருக்கும் அவன்
அடுத்தடுத்த இரண்டாவது மிடறில்.
காளான் பொறுக்கிவந்து சமைத்தவளின்
பொன்னிறப் பூனைமுடி,
நீலநிற சீமெண்ணெய் விளக்கின்
அலையும் வெளிச்சத்தில் இட்ட
பின் கழுத்து முத்தங்கள்,
அதிகம் உவப்பற்ற உண்ணிப் பூ வாசனை
வரிசை தப்பும் முன்பின்னுடன்
எத்தனையாவது முறையாகவோ இன்றும்
சொல்கிறான் எதிர்-அவன்.
ஈரமான வெங்காயக் கீற்றுகளின்
அடுக்குகளுக்குள் புகத் தவிக்கும்
மல்லாக்கொட்டைப் பருப்புகளைக்
கிளறிக்கொண்டு நான்.
முட்கரண்டியின் கூர்மையும்  உலோகக் கனமும்
 எப்போதும் பிடிக்கிறது எனக்கு.
தாதன் குள்ம் வெயிலில் கிடக்கும்
தண்டவாளங்களில்
திருச்செந்தூர் பாஸஞ்சர் போகிற சப்தம்
தேய்கிறது உள்ளுக்குள்.
என்பங்கு அறைவாடகையை
இன்னும் கொடுக்காத தாழ்வுணர்ச்சி
கையோடு திருகி எடுக்கிறது
சட்டையின் இரண்டாவது பொத்தானை.
மின்தடையில் புள்ளிகள் மொய்க்கும்
முட்டாள் பெட்டியின் செவ்வகச் சீறல்
உண்டாக்கும் பதற்றம் அளவற்றது.
ஒரே மடக்கில் விழுங்கிய
முதல் மிடறின் இருட்டில்
தொடர்பின்றி விரிகிறது பிரும்மாண்டமாய்
“பூக்கள் நிரம்பிய அல்மாண்ட்ஸ்ஓவியம்.
அடுத்த மிடறுகளைக் குவளையில் வார்க்கும்
களகளப்பின் கண்ணாடி இசையை
உங்களில் ஒருவரும் ரசிக்கக் கூடும்
தொலைத்துத் தொலைத்துக் கண்டுபிடிக்கிறான்
கழிப்பறையிலிருந்து திரும்புகிற அவன்
அறிமுகமற்றவரின் தோளில் கையூன்றி
தொலைந்து போன அவனது இருக்கையை.
யாருடைய கைபேசியோ ஒலிக்கும்
நோக்கியா திசையில் பளீரிடுகிறது
ஒருமையில் பெயர்சொல்லி. என் குரல்.
அவனே ஒரு நிழலாக
அசைந்து வருகையில்,
செய்தித் திரையில் காட்டுகிறார்கள்
மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டவர்களின்
மூடிய ஐந்து நீல உடல்களை
மீண்டும் மீண்டும்.
எந்த மேஜையின் மத்தியில் இருந்தோ
தரையில் மோதும் கண்ணாடிச் சிதறலுடன்
பீறிட்டு எழுகிறது
நானும் சொல்லியிருக்கவேண்டிய
ஒரு மிக உரத்த வசை.

%

கல்யாண்ஜி
உயிர் எழுத்து