‘உன்னுடைய கைகள்தானே
வேறு யாருடைய கைகளோ போல்
பார்க்கிறாயே’ - என்றான்.
என்னுடைய கைகளைத்தான்
வேறு யாருடைய கைகளையோ போல்
பார்க்கிறேன்.
என்னுடைய கைகளை
என்னுடையதாகப் பார்ப்பதில்
என்ன இருக்கிறது?
%
விரலகளைப் பிரிக்கும்போதே
கைக்குள் இருந்தது
இலைகளை அசைப்பதற்கு முந்திய காற்று.
மணலை அள்ளினேன்.
கையில் காற்சுவடுகளுடன்
கரை இருந்தது.
நீரை அள்ளினேன்.
கையில் முடிவற்ற நதி இருந்தது.
அகண்டு கிடந்த
ஆகாயத்தை அள்ளிவிட்டு,
உள்ளேதான் இருக்கும் என்று
திறக்காமல் வைத்திருக்கிறேன்
கையை.
%
உள்ளங் கைக்குள் ஏந்தக்கூடிய
முட்டை அளவுக்கு அழகானது உண்மை.
நான் கை நழுவ விட்டிருக்கிறேன்.
அதைப் பொறுக்கி எடுத்ததும்
நான் தான் எனினும்
மஞ்சட் கருவும் வெள்ளைக் கருவும்
சிந்திச் சிதறி
உண்மையின் அருவெறுத்த முடை நாற்றம்.
தோடுகள் மட்டும் இன்னும் அழகாக்.
நீங்கள் உங்கள் முட்டைகளைச்
சிதறவிடுவதில்லை.
உயிரும் சிறகும் நிரம்பிய
ஒரு பறவையைப் பறக்க விட்டிருக்கிறீர்கள்
அதிலிருந்து.
ஏற்கனவே வானம் அழகானது.
மேலும் அழகாகியிருக்கிறது
அந்தப் பறவையால்.
%
கல்யாண்ஜி கவிதைத் தொகுப்பில் இருந்து.
அருமை!
ReplyDeleteபறவைகளின் உன்னதத்தை உங்கள் கவிதைகள் மூலமாக மிக ஆழமாக உணர்ந்தேன். அற்புதமான கவிதைகள், அங்கிள்.
ReplyDeleteகைகள் என்றதுமே என் நினைவில், அந்த சர்ச்சும் மணப்பாடு கடற்கரையும் தான் ஞாபகம் வரும். அந்த சர்ச்சில் இருந்து மணப்பாடு வரை நான் என் தோழியோடு நான் சென்ற அந்த பயணம் என் வாழ்வின் அழியாசித்திரங்களில் ஒன்று. கைகளை அழுந்த பற்றிக்கொண்டு கண்கள் பனிக்க அவளை பார்த்துக்கொண்டே சென்ற நிமிடங்கள். அன்றிரவு என் கைகளை வெகு நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்.
'என்னுடைய கைகளை என்னுடையதாய் பார்ப்பதில் என்ன இருக்கிறது' என்று நான் அன்றிரவு, சுழல்கின்ற மின்விசிறியை பார்த்து புன்னகைத்திருக்கக்கூடும்.