Thursday 5 February 2015

எல்லோரும் அற்புதர்கள்மரபின் மைந்தன் முத்தையா , அவருடைய ‘அற்புதர்’  நூலை அனுப்பி இருந்தார். சத்குருவுடனான அவருடைய அனுபவங்களை ‘சாய்வெழுத்திலும் நேரெழுத்திலும்’ செய்யப்பட்ட பதிவு அது.

அதில் முத்தையா சத்குருவுடன் காசிக்குச் சென்றிருந்ததைப் பற்றிய ஒரு பகுதி இருக்கிறது. இருவரும் விசுவநாதர் கோவிலுக்குச் செல்கிறார்கள். கங்கைக் கரையோரமாகச் சிறுவர்கள் பட்டம் விட்டபடி இருக்கிறார்கள். சத்குரு பார்க்கிறார். ‘ Oh! It is a long time since I flew a kite ‘ என்று அவர் சொல்கையில் சத்குருவின் வலது கரம் பட்டத்தின் நூலை விடுவது போலவும் சுண்டி இழுப்பது போலவும் பாவனை செய்கிறது. அப்புறம் அவர் பட்டம் விடுகிறார். அது கரணம் அடித்து எதிரே இருந்த ஒரு பள்ளத்தில் விழுகிறது. சிறுவர்கள் உற்சாகக் கூச்சல் இடுகிறார்கள். சத்குருவும் சேர்ந்து கொள்கிறார்.

எனக்கு இந்தக் காட்சியை உணர முடிந்தது. அதில் நான் இருந்தேன். பட்டம் விடும் சிறுவர்களில் நானும் ஒருவன். பள்ளத்தில் விழுந்த பட்டம் என்னுடையதுதான். அப்படி விழுந்ததற்காக ‘ஹோ’ என்று எழுந்த உற்சாகக் கூச்சலில், என்னுடைய உரத்த ‘ஹோ’ உண்டு.

நான் சிறுவயதில் மிகவிருப்பமாகப் பட்டங்கள் விட்டிருக்கிறேன். நடராஜ மாமாதான் எனக்குப் பட்டங்கள் செய்யச் சொல்லிக்கொடுத்தார். வானத்தைப் பற்றியும் காற்றைப் பற்றியும் கொஞ்சம்  அவரிடம் இருந்து அறிந்திருந்தேன். மூங்கில் ‘பிளாச்சு’  ஒன்றை வளைத்து பட்டத்தில் வில் வைக்கவும் பட்டத்தின் சூட்சுமக் கயிற்றைச் சரியாகக் கட்டவும் நடராஜ மாமாவிடம் இருந்தே என் விரல்கள் தெரிந்துகொண்டன. அது எப்போதுமே ஒரு மாயம் போல நிகழும். பத்தமடை சாய்பு கடையில் வாங்கிவந்த ட்வைன் நூல் கண்டு  முற்றிலும்  தீர்கிற உயரத்தில் வானில் என்னுடைய பட்டங்கள் பறந்திருக்கின்றன.

அது ஒரு ஆனி மாதமாக இருக்கலாம். எங்கள் வீட்டுத் ‘தட்டோட்டி’யில் இருந்து ஒரு நாள் அப்படிப் பட்டம் விட்டுக்கொண்டு இருக்கிறேன். சந்திப் பிள்ளையார் முக்கில் இருந்து மேல ரத வீதிக்குத் திரும்பிக்கொண்டிருந்த பெரிய தேரின் உச்சிக் கலசமும் சிவலிங்கக் கொடியும் என்னுடைய பட்டம்  எவ்வும் விரி வானத்தின் கீழ், கண்ணியிட்டுத் தொடரும் அடுத்தடுத்த வீட்டு உச்சந்தலைக் கூரைகள் தாண்டி, ஒரு கனவு போல நகர்வது தெரிந்தது.

அது ஓர் அழியாச் சித்திரம். அதே போல என்னிடம் இன்னொரு சித்திரம் உண்டு. அறுவடையான வயலில், இன்னும் மிச்சமிருக்கிற நெல்லின் அடித்தாள்கள் பழுப்புக் கத்திகளாகப் பாதங்களில் குத்த, விடுமுறைப் பையன்கள் பட்டம் விடுகிற ஒரு காட்சியை, முந்திய ஊர்த் திருவிழா முடிந்து இன்னொரு ஊர்த் திருவிழாவுக்குப் போகிற யானை, இடைத் தங்கலாக ஒரு உள்ளூர்த் தென்னந்தோப்பில் நின்று, தும்பிக்கை சுழற்றி ஓலை உண்பதைப் பட்டம் விடும் சிறுவர்கள் பார்ப்பது போன்ற ஒன்றை எல்லாம் பல  வருடங்களுக்கு முன், கலாப்ரியா, பாண்டிய ராஜ், நான் எல்லோரும் சேர்ந்து யோசித்த வண்ணநிலவனின் ‘எஸ்தர்’ திரைக் கதைக்கான குறிப்புகளில் வைத்திருந்தேன்.

இப்போதும் அந்த யானை அதே தென்னந்தோப்பில் தும்பிக்கை துளாவி நிற்கிறது. அந்தச் சிறுவர்கள் அறுவடையான வயலில் இன்னும் பட்டம் விட்டுக்கொண்டு இருக்கிறார்கள். காசியில் இட்ட ‘ஹோ; என்ற ஆனந்தக் கூவல் என் காதுகளில் இக் கணம் விழுகிறது.
அந்த யானை, அந்த அறுவடை வயல், அந்தப் பட்டம், அந்த ‘ஹோ’ எல்லோர்க்கும் உரியது.

எல்லோரும் ஒரே ஒரு பட்டமாவது செய்ய வேண்டும்.
எல்லோரும் ஒரே ஒரு முறையாவது பட்டம் விடவேண்டும்
எல்லோரும் ஒரே ஒரு முறை ‘ஹோ’ என்று கூச்சல் இடவேண்டும்.

பட்டம் ஒரு அற்புதம்.
பட்டம் விடுவது ஒரு அற்புதம்.
பட்டம் விடும் எல்லோரும் அற்புதர்களே.

%

Monday 2 February 2015

மீண்டும் இறகுகள்.

மீண்டும் இறகுகள் தான்.

துயரம் சார்ந்த மன நெருக்கடி மிகுந்த நாட்களில், ‘மீண்டும்’ என்ற ஒரு சொல்லையும் ‘மறுபடியும்’ என்ற சொல்லையும் அதிகம் உபயோகிக்க நேரும் போல.

மீண்டும் நான் இன்று இறகு பொறுக்கினேன். ஒன்றல்ல நான்கு இறகுகள். அதற்கு மேலும் சிதறிக் கிடந்தன. அதிலிருந்து நான் நான்கை மட்டும் எடுத்துக் கொண்டேன். வழக்கமாக எனக்கு அருளப்படும் காக்கைச் சிறகோ புறாச் சிறகோ அல்ல இது. இது பெயர் தெரியாத பறவை ஒன்றின் உடையது. நானும் தான் எங்கள் நிலக்கோட்டைக் காலத்தில் இருந்து ‘பெயர் தெரியாமல் ஒரு பறவை. என்ற சொற்றொடரை எத்தனை முறைகள் உச்சரித்து வருகிறேன். இந்தப் பறவைக்கும் பெயர் தெரியவில்லை.

உதிர்ந்தவை அல்ல. பிடுங்கப் பட்ட அடையாளமும் இல்லை. வேட்டையாடப் பட்டிருக்கலாம். இந்த அதிகாலைக் குளிருக்கு முந்திய இரவில் தைப்பூச நிலா வெளிச்சத்தில் ஏதோ ஒரு பறவை ஏதோ ஒரு மிருகத்தால்  தாக்கப் பட்டிருக்கலாம். தலைகுப்புறக் கவிழ்த்தப் பட்ட வானம் போலப் பரந்து கிடக்கிற, அவுரி போன்ற குத்துச் செடிகள் நிறைந்த மைதானத்தில் அப்படி ஒரு இரவு சாத்தியம் உடையது.

கீழ்ப்பகுதி வெள்ளையாகவும் மூன்றில் இரண்டான மேற்பகுதி பழுப்பாகவும் இருக்கிற இறகுடைய அந்தப் பறவையை என்னால் வரைய முடியவில்லை. இந்தப் பகுதியில் இரண்டு மூன்று வருடங்களாக, தனித்தலையும் ஒரு செம்போத்தை மட்டுமே பார்த்திருக்கிறேன். இந்த மைதானத்தில் அது தன் முதியோர் இல்லத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. ஆனால் அதன் வாழிடம் வேறு. அது தென்றல் நகர்ப் பக்கத்துக் குத்துச்செடியோரம் தன் காப்பகத்தை வைத்திருக்கும்.

இந்த இறகுகள் ஒரு புற நகர்க் குப்பைக் கிடங்கை ஒட்டிக் கிடந்தன. . அதிகமாகிக் கொண்டு வரும் மது போத்தல்களும், நெகிழி நீர்ப்பைகளும் போலக் கிடந்த ஏழெட்டு இறகுகளில் இருந்து நான் நான்கே நான்கை மட்டுமே ஏன் எடுத்துக்கொண்டேன் என்று தெரியவில்லை. விபத்தில் தவிப்பவர் இடையே அழகிய முகங்களை உடையவரை மட்டும் காப்பாற்றுபவனாகவே நான் இருப்பேன் போல. நான் பிசிறற்ற, கச்சிதமான தன் வடிவத்தை இழக்காத, வெவ்வேறு அளவுகள் உடைய நான்கு இறகுகளை மட்டும் குனிந்து எடுத்துக்கொண்டேன். அதற்கு மேல் பொறுக்க விடாமல் என் மேல் படைபடையாக காக்கைக் குரல்கள் கவிய ஆரம்பித்தன. நான் பறவைகளால் சினேகிக்கப்படுவேன் என்று நினைத்தது பொய்யாயிற்று. நான் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும் அந்தக் காக்கைகளால் சந்தேகிக்கப் பட்டேன். ’அது காக்கை இல்லை. ஆனால் அது ஒரு பறவை. அதை நீயே கொன்றாய். நாங்கள் அறிவோம்’ என்ற கூர்மையுடன் கருத்த பறவையின் மினுமினுக்கும் அலகுகள்  வியூகம் அமைத்துவிட்டதை நான் உணர்ந்தேன்.

அந்த இடத்தில் இருந்து நகர்ந்தேன். இன்னும் குறைந்தது முப்பது நிமிடங்களின் நடை பாக்கி இருந்தது வீடு அடைய. ஒரு முறை திரும்பிப் பார்த்தேன். வானத்தில் கலைந்து கலைந்து கதறும் பறவைகளின் சித்திரம் என்னை விரட்டியது. வெறும் நான்கே நான்கு இறகுகள் மிகுந்த பாரம் அடைந்தன. இதை எப்படி வீடு வரை கொண்டு சேர்க்கப் போகிறேன் என்று தோன்றுகிற அளவுக்குக் கனத்தன. இடது, வலது கைவிரல்களுக்கு மாறி மாறி மாற்றிக்கொண்டேன். காற்றின் வீச்சில் அந்த இறகுகளின் அடுக்கு சிதைந்துவிடக் கூடாது என்ற பதற்றம் எனக்கு இருந்தது.

மீதி இருந்த நடை தூரத்தில் நான் அமைதியற்றவனாகி இருந்தேன். ஒரு பறவையின் இரவு மரணம் என்றும் ஒரு இரவுப் பறவையின் மரணம் என்றும் நான், எனக்கே கேட்கும் அளவுக்கு சற்று உரக்கச் சொல்லியிருப்பேன் கூட. தப்பித்துச் செல்வது போல, பதுங்கி மறைவதாகக் கூட என் அசைவுகள் இருந்திருக்கலாம். சப்தமே எழுப்பாத பாதங்களுடன் தான் வீட்டில் நுழைந்தேன். வாசல் கதவுகளுக்குக் கூட என் மேல் பரிவு இருந்தது. அதன் வழக்கமான இரும்புச் சத்தத்தை இன்று இடவில்லை/

இறகுகளுடன் நுழையும் என் பைத்தியக்காரத்தனம் புதிது இல்லை என்பதால், ‘என்ன, இன்னைக்கு நாலைந்து வருது?’ என்ற கேள்வியுடன் வீடு என்னை அனுமதித்தது. வீடு என்பது இடவாகு பெயர் என்பது உங்களுக்குத் தெரியாதா?

ஏற்கனவே ஏழெட்டு இறகுகள் சேமிக்கப்பட்டிருக்கும் அந்த ரகசிய இடத்தில், ஒரு சிறுவனைப் போல இந்த நான்கு இறகுகளையும், ஒளித்துவைத்தேன். அந்தப் பறவையின் பெயர் என்னவாக இருக்கும் என்ற கேள்வியின் ஓயாத திமிறலைத் தணிக்கமுடியவில்லை.

தற்காலிகமாக, என்னுடைய பெயரை அதற்கு வைத்திருக்கிறேன். அந்த நான்கு இறகுகளும் இதை ஆட்சேபிக்காமல் இருக்கவேண்டும்.