அப்படியொன்றும் ஒரு நிம்மதியான நாளின் முடிவல்ல. நேற்றும் இன்றுமாகத் தொடர்ந்து வாசித்த, சு. வேணுகோபாலின் ’திசையெலாம் நெருஞ்சி’, ராஜகோபால் மொழிபெயர்த்த, மச்சடோ டி ஆசிஸ் உடைய ‘மனநல மருத்துவர்’, மற்றும் ‘லிவிங் ஸ்மைல்’ விதயாவின் ‘நான் வித்யா’ மூன்றின் பாத்திரங்களும், வாழ்வும் நிலைகுலைத்த மனநிலயோடு, அந்தந்த தினங்களின் அன்றாடநிரல்களோடு பொருந்தமுடியாமல் பொருந்தி முடித்து. விடுவித்துக் கொள்ளவும் விடுபடவும் முடியாதவனாக, ஒரு மாறுதலுக்கு ரொம்ப நாட்களாகப் பதில் எழுதாத ஒரு கடிதத்தின் மீள் வாசிப்பில் இருந்தபோது, மின்சாரம் போனது.
எனக்கு அந்த இருட்டுப் பிடித்திருந்தது. ஜன்னலுக்கு வெளியே இருந்து இருட்டு, லேசான காற்றைப் போல உள்ளே வருவதை உணர முடிந்தது. இருட்டு வியர்வைபோல என் மேலெங்கும் அப்பி அப்படியே வழிந்தது. என்னுடன் இரண்டு வார்த்தைகள் மட்டும் பேசிவிட்டு எனக்குப் பின்னால் குவிந்திருக்கும் இருட்டுடன் பேச அமர்வது, சுவர்கள் சினேகிதமாக நெளிந்து தன் கால்களைத் தளர்த்திக் கொள்வதில் தெரிந்தது. நான் மிக அழகிய ஒரு நட்சத்திரத்தைக் கற்பனை செய்துகொண்டேன். ஒரு கூரிய
நீல மினுமினுப்புடன் அது என்னை நெருங்கிக் கொண்டிருந்தது. அது என்னை அடையுமுன் என் வலது பக்கத்தில் ஒரு பேராற்றை நான் திறந்துவைத்தேன். இருட்டில் அது சலசலத்து ஓடுவது கேட்டது. பாறை இருக்கும் இடங்களில் அதன் உரையாடல் தணிவாக இருந்தது. . நான் அடுத்து வனப்பூக்களின் வாசனையை இந்த இருட்டுக்குள் தருவிக்க விரும்பினேன். பார்த்தறியா பெருமலரொன்றின் இதழ் அவிழக் காத்திருந்த பொழுதில் மின்சாரம் வந்துவிட்டது.
வெளிச்சம் பளீரென்ற அசிங்கமாக இருந்தது. இருட்டின் அழகுக்கு அது எந்த வகையிலும் ஈடில்லை.
%
அந்த மருத்துவ மனைக்கு நான் சென்றதில்லை. சற்றுப் புதியது. நன்றாக வடிவமைக்கப் பட்டிருந்தது. துல்லியமான பராமரிப்பும் கூட,
தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த என் உறவினர் ஒருவரைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டுப் புறப்படுகிறேன். எத்தனை படித்திருந்தாலும் மருத்துவ மனைகளில் வழி தப்பாமல் இருக்குமா. கீழ்த் தளத்திற்குப் போகும் வழி
எது எனச் சரியாகவே காட்டினார்கள். நான் மேல் தளத்திற்குப் போய், கீழே
இறங்குகிறேன். அறுவைச் சிகிச்சை முடிந்து நோயாளி வெளியே வரும் மின் தூக்கி-இறக்கி பக்கம் என்னுடைய இறங்கு பாதை. இருதய சிகிச்சை போல. செவிலியர், நோயாளி எல்லோரும் மின்வழியில் இறங்க, அந்த நோயாளியின் மனைவியும் குடும்பத்தினரும் முன்னால் செல்ல நான் சற்று இடைவெளி விட்டுப் பின் தொடர்கிறேன். அதே வழியில் தான் நான்
கீழிறங்க வேண்டும். வெயில் விழுகிற ஒரு திறந்த வெளி. ஒரு தடாகம். அதில் தாமரை உள்ளிட்ட நீர்த்தாவரங்கள். சிவந்த காரட் நிறத்தில் நீந்தும் ஒன்றிரண்டு மீன்கள்.
நோயாளியின் மனைவி என எழுதப்பட்டிருக்கும் நிச்சயமான முகமுள்ள அந்தப் பெண் சற்று நேரம் அந்தத் தடாகம் முன் நிற்கிறது. நீந்தும் அந்தச் சிவந்த மீன்களையே பார்க்கிறது. சட்டென்று முகம் முழுவதும் மலர்ந்து, உறவினர் பக்கம் திரும்பி, ‘ காலையில பார்க்கும் போது எத்தனை மீன் மொச்சுக்கிட்டு இருந்தது. இப்போ எல்லாம் வெயிலுக்குப் போய் செடிக்குள்ள ஒளிஞ்சுக்கிட்டு கிடக்கு” என்று சொல்லிவிட்டு, வளைவுக் கம்பியில் கையூன்றி ஒன்றிரண்டாக நீந்தும் அந்தச் சிவப்பு அசைவுகளை
மட்டுமே பார்க்க வந்திருக்கும் ஒரு சிறுமி போல பரிபூரண அமைதியுடன் நின்றது.
%
சைக்கிளில் பெண்களைப் பார்ப்பது இது போன்ற அதிகாலைகளில் மிக
அபூர்வம். இன்னொரு பகுதியில் இதே போல நடுத்தர வயதெல்லாம் கூடத் தாண்டிய ஒரு பெண் கீரை விற்றுக் கொண்டு போவார். இந்தச் சாலையில் இதுவரை யாரையும் பார்த்ததே இல்லை. இவருக்கும் பள்ளிக்கூடத்தில் படிக்கிற பிள்ளைகள் இருக்க வேண்டும் அவர்களுக்கு வழங்கப்படும் இளம்பச்சை நிற சைக்கிள்தான் அது. தூரத்தில் வரும்போதே அந்த சின்ன சைக்கிளில் திடகாத்திரமாக அந்தப் பெண் வருவது துண்டாகத் தெரிகிறது. ஒருவகையில் சைக்கிளின் கீழ் பாகங்களே தெரியாமல், அந்தப் பெண் தரைக்கு மூன்று நான்கு அடி உயரத்தில் காற்றில் ஒரு கசங்கிய குப்பைத் தாள் போலப் பறந்து வருகிறார். சோர்வு, அலுப்பு, துக்கம் எல்லாம் சேர்ந்து சைக்கிளில் வருகிற பெண்ணை வேகமாக மிதிக்கவிடாமல் தளர்த்தி
வைத்திருக்கிறதாகவே இங்கிருந்து பார்க்கும் போது தோன்றியது.
தேநீர் அருந்தியபடி நிற்கும், துப்புரவுத் தொழிலாளிப் பெண்ணுடன் ஏதோ தகவல் பறிமாறிக் கொண்டே, சைக்கிளையும் நிறுத்தாமல் அந்தப் பெண் வருவது இந்தக் காலையின் இளம் வெளிச்சத்தில் இந்த மொத்த இடத்தை
வேறு விதமாக வரைந்தது. இளநீர்ச் செதில்கள் கிடக்கிற வாகைமரத்தைத்
தாண்டி அந்தப் பெண் மிக அருகில் வந்துவிட்டது.
என்னையோ, இந்த உலத்தில் வேறு யாரையோ, அல்லது இந்த அற்பமான உலகத்தையோ அது பார்க்கவே இல்லை. அதிகம் உரக்க ஒலிக்காமல் ஒரு பாடலைப் பாடியபடி அது போய்க்கொண்டே இருந்தது.
%
முந்திய கண்ணியிலும் அடுத்த கண்ணியிலும் துக்கம் கனமாக கோர்க்கப் பட்டிருக்கும் போதும் மனிதமனம் வினோத வழிகளில் இயங்குகிறது. அது வலது பக்கம் நதிகளைத் திறந்துவிடுகிறது. வெயில் நேரத்து காரட் நிற
மீன்கள் குறித்து அக்கறைப்படுகிறது அல்லது இப்படி ஒரு அதிகாலையில் பாடிக்கொண்டே சைக்கிள் ஓட்டிச் செல்கிறது.
ஒரு நாளின் பல்வேறு வண்ணங்களைக் காட்டி விட்டீர்கள் ஐயா. இருளின் மைக் கறுப்பு,அலுப்புக்கு நடுவே அந்தப் பெண் ரசித்த ஆரஞ்சு மீன் அழகு, சைக்கிளில் பாடிச் சென்ற பெண் அழகு. அடிக்கடி நாம் செல்ல வேண்டிய மறு உலகம்.காட்சிக்கு நன்றி.
ReplyDelete