Tuesday 31 July 2012

உட்படும் வேளை



 ஈரோடு C.K.K அறக்கட்டளையின் 34 வது ஆண்டு இலக்கிய விழா
29.07.2012, கடந்த ஞாயிறு நடந்தது. இந்த வருட இலக்கிய விருது
திரு. ஜெயமோகனுக்கு வழங்கப்பட்டது.     சென்ற வருடம் விருது
வழங்கப்பட்டவன் என்ற முறையில், நானும் கலந்துகொள்ள அழைக்கப்
பட்டிருந்தேன்.





இந்த முறை என் தனிப்பட்ட விழாவை அதற்கு முந்திய நாளே நான் துவங்கிவிட்டேன்.  ரவி உதயன், மனோகர், ராஜு சுப்ரமணியன், ராஜரத்னம்,
லதா ரவி,  அருள்மொழி என, சனிக்கிழமை முழுமையாக நிரம்பிவிட்டது.
எப்போதாவது ஊரை விட்டு வெளியே வருகிற எனக்கு,  இலக்கியம் சார்ந்தோ, சாராமலோ கிடைக்கிற இந்த மனிதர்களே போதுமானவர்களாக இருக்கிறார்கள்.

29.07.12 ஞாயிற்றுக் கிழமையை மரபின் மைந்தன் முத்தையாவும் ஜெய மோகனும் ஆறுமுக தமிழனும் வெண்ணிலாவும் பிரபஞ்சனும் இறையன்புவும் அவரவர் கைகளில் எடுத்துக் கொண்டார்கள்.  காலையில்
முதல் அமர்வில் முத்தையா தலைமையில், ’வெளிப்படும் வேளை’ என்ற தலைப்பில் கவியரங்கம். கவிஞர்கள் தங்கம் மூர்த்தி, சக்தி ஜோதி, சதீஷ் குமார், இசைக்கவி ரமணன், ஆண்டாள் பிரியதர்சினி மற்றும் கவி அன்பன் கே.ஆர். பாபு கவிதைகள் வாசித்தனர்.

அறிவிக்கப்படாத, ஏழாவது கவிஞனாக, நான் ’உட்படும் வேளை’  என்ற கவிதையை , வழக்கமான என் பதற்றத்தோடும் நடுங்கும் விரல்களோடும் வாசித்தேன்.  இன்று, ஆகஸ்ட் ஒன்றாம் தேதி, தன்னுடைய நாற்பத்து நான்காவது பிறந்த தினம் காணும் மரபின் மைந்தன் முத்தையாவுக்கு
அதைப் பதிவேற்றுவதன் மூலம் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவிக்க நினைக்கிறேன்.

பிறந்த நாள் நல் வாழ்த்துகள் முத்தையா. ‘நல்லா இருங்க’

%



 
தேரோடும் அந்தத் திருநெல்லைப் பதிக்காரன்
ஈரோட்டில் உம்முன்னே எழுந்துவந்து நிற்கின்றேன்.
யாரோடு இருந்தாலும் அவராகும் ரசவாதம்
வேரோடு வந்ததனால் வெளிப்பட்டு வருகின்றேன்.
பேரோடும் புகழோடும், பெருந்திருவின் அருளோடும்
ஊர் கூடி இருக்கின்ற ஒரு அவையின் மத்தியிலே.
*
முன்னைப் பழமைக்கும் முதிர்ந்துவரும் புதுமைக்கும்
தன்னை மரபாக்கித் தழைக்கிறவர் தலைமையிலே
என்னைப் புதிதாக்கி இணைக்கின்றேன். நிகழ்ச்சி நிரல்
தன்னில் பாயாத தாமிர நல் பரணியென.
*
இதற்கு முன்பு இறைவனாய் இருந்தவன்
இப்போதிங்கே தலைவனாய் இருக்கிறான்.
இதற்கு முன்பும் இச் சபையில் இருந்த நான்
இப்போது அவரது அவையில் நிற்கிறேன்.
நிற்பதும் நடப்பதும் நின் செயல் என்றும்
நினைப்பதும் நிகழ்வதும் நின்னருள் என்றும்
கற்பனாவல்லியின் துணைக்கரம் பிடித்து
கவிதையின் அழகுடன் வெளிப்படுகின்றேன்.
*
வில்லில் இருந்து கணையும்
வேரில் இருந்து விழுதும்
கல்லில் இருந்து சிலையும்
கருவில் இருந்து சிசுவும்
     வெளிப்படும் வேளை
மனதில் இருந்து கவியும்
மலரில் இருந்து மணமும்
கனவில் இருந்து நனவும்
கடலில் இருந்து கரையும்
     வெளிப்படும் வேளை
மண்ணில் இருந்து பயிரும்
மறைவில் இருந்து எதிரும்
கண்ணில் இருந்து துளியும்
கதிரில் இருந்து ஒளியும்
     வெளிப்படும் வேளை
புல்லில் இருந்து பனியும்
போ’வில் இருந்து வா’ வும்
அல்லில் இருந்து பகலும்
அகலில் இருந்து சுடரும்
     வெளிப்படும் வேளை
குனிவில் இருந்து நிமிர்வும்
குரலில் இருந்து இசையும்
துணிவில் இருந்து உயர்வும்
தொலைவில் இருந்து அருகும்
     வெளிப்படும் வேளை
உயிரில் இருந்து உடலும்
உடலில் இருந்து உயிரும்
கயிறில் இருந்து அரவும்
அரவில் இருந்து கயிறும்
     வெளிப்படும் வேளை
உள்ளில் இருந்து வெளியும்
உறவில் இருந்து துறவும்
முள்ளில் இருந்து மலரும்
முடிவில் இருந்து முதலும்
     வெளிப்படும் வேளை
வெளிப்படும் வேளையை, வியத்தகு பொழுதை
அளிப்பது அந்த ஆதியும் பகவனும்.
குளிப்பது ஒன்றே நம் கடன், ஆறாய்க்
குளிர்ந்து நடப்பது அவனின் நெடும் புனல்.
வெளி என்ற ஒன்று அன்றே இருந்தது.
வெளிப்படல் மட்டுமே மனிதன் அறிந்தது.
ஒளி என்ற ஒன்று உள்ளே இருப்பது
உள்ளே இருப்பதை வெளியில் தருகிற
வழியை மட்டுமே மனிதன் வகுத்தது.
வரவும் செலவும் அவனவன் தொகுத்தது.
வட்டங்களிட்டுக் குளம் அகலாத
மணிப்பெரும் தெப்பம் மிதப்பது போல
தொட்டுத் தொட்டு ஒன்றில் ஒன்று
தொடர்ந்து வெளிப்படும் சுழற்சியின் மத்தியில்
வெளிப்படும் வேளை இதுவென எப்படி
வெடிப்புறச் சொல்லி முடித்திட இயலும்?
உட்படும் வேளை இதுவென யாரும்
உங்களில் ஒருவர் சொல்லக் கூடுமா?
கவிதை எப்போது மனதுள் விழுந்தது?
கண்ணுள் எப்போது கரிப்பு நீர் புகுந்தது?
உடலுள் எப்போது உயிர் கலந்தது?
ஒளியுள் எப்போது இருள் நுழைந்தது?
கடலுள் எப்போது அலையடித்தது?
கல்லுள் எப்போது சிலை துடித்தது?
விதையுள் எப்போது வேர் முளைத்தது?
வெயிலுள் எப்போது மழை கருத்தது?
இது’வுள் எப்போது அது மறைந்தது?
எழுத்துள் எப்போது சொல் நிறைந்தது?
உட்படும் தருணம் உணர்ந்தால் மட்டுமே
வெளிப்படும் வேளை வெளிச்சம் அடையும்.
உள்ளிருந்துதான் எல்லாம் வெளிப்படும்.
உள்ளத்தனையதே உயர்வுகள் அனைத்தும்.
உட்பட உட்பட உள்ளிருந் தனைத்தும்
வெளிப்படும் எல்லா வித்தையும் விந்தையும்.
எய்கிற வில்லில் அல்ல, குவித்து
எய்பவன் உள்ளே இருப்பவை கணைகள்.
ஈன்று புறந்தரும் வேதனை அல்ல.
ஈரக் கருவறை வாசனை குழந்தை.
சொல்கிற சொல்லில் அல்ல, மனதில்
சுடர்விடும் பொழுதில் உள்ளது கவிதை.
கண்ணில் இருந்து வழிவது அல்ல
கனலும் நெஞ்சுள் கசிவது கண்ணீர்.
குரலில் இருந்து அல்ல, நல்லிசை
கூடுவதுள் உள ஏழு சுரங்களில்.
உடலில் இருந்தது அல்ல, அந்த
ஒன்பது வாசலுள் திரிந்தது உயிர்மை.
கட்புலம் மீறிய கருணையின் பெருக்கில்
கடந்து கடந்தவோர் காலக் கணக்கில்
உட்புறம் வெளிப்புறம் தாண்டிய நிலையில்
உருவாய் அருவாய் இருப்பதே அனைத்தும்.
வெளிப்படும் வேளை எதுவெனக் கேட்டால்
உட்படும் வேளையே அதுவெனச் சொல்வேன்.
நேர் விகிதம் போல் தலை கீழ் விகிதமும்
நிறைந்தவை தானே எல்லாக் கணிதமும்.
உட்படும் வேளைகள் கேள்விகள் என்றால்
வெளிப்படும் வேளைகள் விடையாய்க் கிடைக்கும்.
வெளியே உள்ள வெளிச்சம் அனைத்தும்
உள்ளே உள்ளதே என்பதைச் சொல்லி
மெல்ல மெல்ல விடை பெறுகின்றேன்
மீண்டும் அவைக்குத் தலை பணிகின்றேன்.
%

Tuesday 24 July 2012

தேர், ரதவீதிகள், நாம்.



சமீபத்தில்தான் எங்கள் ஊரில் தேரோட்டம் முடிந்தது.  ஒவ்வொரு வருடமும் ஆனி மாதம் தேர் ஓடும்.  இந்த வருடம் ஆனித் திருவிழாவுக்கு நான் வெளியூரில் இருக்கும்படி ஆகிவிட்டது.

வேறு என்றைக்கு இல்லாவிட்டாலும், தேரோட்டத்து அன்றைக்கு, எப்படியாவது ஊரில், அதுவும் பிறந்து வளர்ந்த வீட்டில் இருக்கமாட்டோமா என்று இன்றைக்கும் தோன்றத்தான் செய்கிறது.    யாருக்கும் அது இயற்கைதான்.  அந்தந்த ஊர்த் திருவிழாவை, அந்தந்த ஊரில், வீட்டில், அதே ஆட்களோடு பார்க்கவேண்டும் என்று தோன்றத்தானே செய்யும்.  அப்படித் தோன்றாவிட்டால், அப்புறம் நாம் என்ன மனிதன்?  அது என்ன சொந்த ஊர்?

இந்தத் தடவை, தற்செயலாக, தேரோட்டம் நடைபெறுகிற அன்றைக்கு நான் பெங்களூருவில் இருக்கிறேன்.     பரமனிடமிருந்து போன் வருகிறது, ‘கல்யாணி இன்றைக்கு நம்ம ஊரிலே தேரோட்டம்’.     அதைக் கேட்ட உடனே எனக்குள் ஒரு சத்தம் கேட்கிறது.  வடம் பிடிக்கிறவர்கள் சத்தம்.  நகரா அடிக்கிறவர்கள் சத்தம். வேட்டுப் போடுகிற சத்தம். இவையெலாம் மொத்தமாகச் சேர்ந்த ஆனித்திருவிழாச் சத்தம்.

எனக்குத் தேர் அசைந்து அசைந்து, வாகையடி முக்குத் திரும்பி, தெற்கு ரதவீதியில் வருகிறமாதிரித் தெரிந்தது. தேர் தேர்தான். நின்றாலும் அழகு. நகர்ந்தாலும் அழகு.  ‘தேர் அசைந்த மாதிரி இருக்கும்’ என்று சொல்வது எப்பேர்ப்பட்ட வார்த்தை.  தேர் அசைந்து வருவதுதான் அழகு. உச்சியில் கொடி பறக்கும். ஏழு தேர்த் தட்டும் லேசாக அசையும். நிஜமாகவே நான்கு மரக்குதிரைகளும் நமக்கு மேல் பாய்கிற மாதிரி இருக்கும். தூரத்தில் இருந்து பார்க்கிற போது,சாமியைக் கும்பிடத்  தோன்றுகிறதோ இல்லையோ, தேரைக் கண்டிப்பாகக் கும்பிடத் தோன்றிவிடும்.

நான் பரமனிடம் பதிலுக்குக் கேட்கிறேன், ‘தேர்ப் பார்க்கப் போயிருக்கியா?
தேர் எங்கே வருது?’

‘நான் எங்கே போக? மயூரியில, ஏ,எம்.என். டிவியில எல்லாம் லைவா காட்டுதான். பார்த்துக்கிட்டு உட்கார்ந்திருக்கேன்’  என்கிறான்.    இதைச் சொல்ல அவனுக்குக் கொஞ்சம் கூச்சமாக இருந்திருக்க வேண்டும். சிரிப்பு அப்படித்தான், நேரே நம் முகத்தைப் பார்க்காமல் லேசாகக் குனிந்து கொண்டது மாதிரி இருந்தது.

இது முடிந்து கொஞ்ச நேரம் ஆகியிருக்கும்.    அதிகமாகப் போனால் பதினோரு மணி கூட இருக்காது. மூங்கில் மூச்சு சுகா, அவருடைய முகப் புத்தகத்தில், ’தேர் லாலா சத்திர முக்கு திரும்பீட்டுதாம்’  என்று ஒரு தகவலைப் போடுகிறார்.  லாலா சத்திர முக்குத் திரும்பியாகிவிட்டது என்றால், இனிமேல் ராயல் டாக்கீஸ் முக்கு. அதற்குப் பிறகு நேராக தேர் போய் நிலையில் நிற்க வேண்டியதுதான்.

எதற்கு இப்படி அவசரப் படவேண்டும்?    நெல்லையப்பரை இப்படி ஷேர் ஆட்டோவில் ஏற்றிகொண்டுபோய், ‘ஸ்பீடாக’  நிலையில் நிறுத்துவதற்கு, எதற்கு இந்த கொடியேற்று, ஒன்பது நாள் திருவிழா, சப்பரம், சாமிபுறப்பாடு எல்லாம்?

நான்கு ரதவீதிகளில், ஒவ்வொரு ரதவீதி முக்கிலும் ஒரு நாளாவது தேர் நின்று புறப்பட்டால் நன்றாகத்தானே இருக்கும். என்ன அவசரம் அப்படி? பத்து மணிக்கு ஆரம்பித்து ஒரு மணிக்குள் முடிவதற்குப் பெயர் தேரோட்டமா?  இப்படி வேக வேகமாக முடித்துவிட்டு, அடுத்து நாம் என்ன செய்யப் போகிறோம்?  மிஞ்சிப் போனால், தொலைக்காட்சி, ஒரு திரைப்படம் அல்லது தூக்கம்.  அதுதான் என்றைக்கும் இருக்கிறதே. இன்றைக்குமா?

திருவிழாக்களை ஏன் ஆற, அமர நிதானமாக, சந்தோஷமாக நாம் கொண்டாடக் கூடாது?  பனி உருகுவது போல, பூ உதிர்வது போல, ஒரு தொட்டில் பிள்ளை தூக்கம் கலைந்து அழுவது போல, ஒரு திருவிழா ஏன் அதன் போக்கில் நிகழக் கூடாது?

இவ்வளவு கனத்த வடம் பிடித்து, இவ்வளவு பெரிய தேரை, இத்தனை பேர் இழுக்கிற காட்சி எவ்வளவு அருமையானது!
தேர் என்றாலும் சரி, வாழ்க்கை என்றாலும் சரி, கூடி இழுக்கும் போது அசைந்தசைந்து நகர்வது நன்றாகத்தானே இருக்கும்.

அது திருவிழாவாக இருக்கட்டும், 
நீங்கள் தொடுத்த பூவை உங்கள் சினேகிதியின் தலையில் சூடுவது போன்ற, அல்லது தொலைபேசியில் கூப்பிட்டு உங்களுடைய நண்பருக்குத் திருமண நாள் வாழ்த்து சொல்வது போன்ற எளிய சந்தோஷங்களாக இருக்கட்டும். நிதானமாகக் கொண்டாடுவோம்.

அறுபது நொடிகள் ஓட வேண்டிய தேரை, ஏன் ஒரே ஒரு நிமிடத்தில் இழுத்துமுடிக்க வேண்டும்?

கேட்பது நான் அல்ல, ரதவீதிகள்.

%

ஆனந்த விகடன் - இன்று, ஒன்று, நன்று
25-07-2012    ஒலிபரப்பப்பட்ட பதிவு.

Monday 23 July 2012

இன்னும் அழகான ஓவியங்கள்



இப்போதெல்லாம் வளரும் குழந்தைகளின் மேல் எல்லா ஊடகங்களுக்கும் ஒரு கவனம் இருக்கிறது. தவிர்க்கமுடியாத அக்கறை இருக்கிறது.

அனேகமாக எல்லாத் தினசரிகளும் சிறுவர்மலர் பகுதி வெளியிடுவதை நாம் பார்க்கிறோம். பெண்களுக்குரிய பகுதி என்றால், சமையல் குறிப்பு, கோலப் போட்டிகள். சிறுவர்களுக்கு என்றால், புகைப்படங்களுடன் பிறந்த நாள் வாழ்த்துகள்,  வயது மற்றும் பள்ளிக்கூட விபரங்களுடன் ஓவியங்கள்.

நான் சிறுவர் மலர்களில் வருகிற கதைகளையும் இந்த ஓவியங்கள் வெளியாகியிருக்கிற பக்கங்களையும்  தவறவிடுவதே இல்லை.  ஒரு களங்கமற்ற மாய உலகத்தின் மேல் ரத்தினக் கம்பளங்களில் நம்மைப் பறக்கவைக்க, அந்தக் கதைகளுக்கே முடியும்.  கதைகளாவது சிறுவர்களுக்காக, பெரியவர்களால் எழுதப்பட்டது. அது சிறுவர்களுக்காக உண்டாக்கப்பட்ட உலகமே தவிர, சிறுவர்களின் அசலான  உலகம் அல்ல.  ஆனால் அவர்கள்    வரைகிற ஓவியங்கள் முழுக்கமுழுக்க அவர்கள் உடையது.  ஒரு சிறு வயது மனம் இயங்கி, சிறு வயது விரல்களின் வழி வரையப்பட்ட ஓவியங்கள் அவை.    மெழுகு வண்ணங்களாக இருக்கட்டும். நீர் வண்ண ஓவியங்களாக இருக்கட்டும்.  சிறுவர்களின் ஓவிய உலகம் பறவைகளால் நிரம்பியிருக்கின்றன. முக்கியமாக கிளிகளாலும் மயில்களாலும்.

இன்றைக்கு வெளியாகியிருக்கும் ஏதாவது ஒரு சிறுவர்மலரில், நீங்கள்  இந்தப் படத்தை ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேலோ பார்த்திருக்க முடியும்.

இரண்டு மலைகள். ஒரு வட்டச் சூரியன். சுற்றிலும் கோடு கோடாக கிரணங்கள். இடது பக்கம் துண்டுதுண்டாக மேகம்.  வலது பக்கம் நான்கைந்து பறவைகள்.  மூக்கும் கிடையாது. முழியும் கிடையாது. வெறுமனே புல் முளைத்தது போல நான்கைந்து.  அசல் பறவைகளையும் விட அழகாகப் பறக்கிறவை இவர்களின் இந்த ஓவியப் பறவைகள்தான்.

இடது ஓரத்தில், கீழ்ப் பக்கத்தில், இரண்டு தென்னை மரங்கள். மலையை விடவும் அவை உயரமாக இருக்கும். அப்புறம் ஒரு ஜன்னல் வைத்த வீடு.  மலைக்கும் தென்னை மரங்களுக்கும் இடையில் ஊதா நிறத்தில் நிரம்பியிருக்கும் தண்ணீர்.  தண்ணீரில் சில சமயம் தாமரை அல்லது வாத்து. ஒன்று அல்ல. இரண்டு.  சிறுவர்கள் உலகத்தில் எதுவும் தனி கிடையாது.   தனிமையும் கிடையாது.

இதில் அருமையானது என்னவென்றால், அவர்கள் அப்படி வரைந்திருக்கிற
மலைகளையோ மேகங்களையோ நதியையோ சூரியனையோ அவர்கள் பார்த்திருக்கவே மாட்டார்கள்.  தென்னை மரங்கள் தவிர, அந்தத் தாமரைப் பூவையோ, வாத்துக்களையோ கூட, அந்த வயதில் அவர்கள் நேரடியாகப் பார்த்திருக்க வாய்ப்பில்லை.
ஆனால் அவர்களுக்குள், அவர்களின் மனதில் எல்லாமே இருக்கிறது.  இத்தனையும் பார்க்கிற, இவ்வளவையும் ஒன்றாகச் சேர்த்துவைத்துப் பத்திரப்படுத்துகிற ஒரு ஆதிமனம் சிறுவர்களிடம் இருக்கிறது.  நாம் இயற்கையில் இருந்து புறப்பட்டவர்கள் அல்லது ஒரு பேரியற்கை நம்மை இந்த உலகத்துக்கு அனுப்பிவைத்திருக்கிறது என்பதன் அடையாளம்தான் அந்த மலையும் சூரியனும் பறவையும் நிரம்பிய சிறுவர்களின் ஓவியங்கள். 

பெரியவர்களுக்கு அதைவிட அதிகமாக ஆறும் குளமும் பறவைகளும் வானமும் தெரியும்.  ஆனால் நாம் நம்முடைய ஆற்றை வற்றும்படியாக விட்டுவிடுகிறோம்.  உள்ளே இருக்க வேண்டிய பறவைகளை வெளியே விரட்டி விடுகிறோம். பொத்தல்கள் நிரம்பியவானத்தில்,  கைவிடப்பட்ட பட்டங்கள் போல அலைகின்றன மேகங்கள்.  உள்ளே நந்தவனமாக இருக்கவேண்டிய செடிகள், வெளியே பாலிதீன் பைகள் சிக்கிப் படபடக்க முள் நிறைந்த வெயிலில் வாடுகின்றன.

சிறுவர்களைப் போல, நாமும் இயற்கையை மனதுக்குள் பத்திரப்படுத்த வேண்டும். அப்படிப் பத்திரப்படுத்துகிறபோது,  நாம் வரைகிற ஓவியங்கள் நிச்சயம் இன்னும் அழகாக இருக்கும்.

%

ஆனந்த விகடன் - இன்று, ஒன்று, நன்று
23-07-2012    ஒலிபரப்பப்பட்ட பதிவு.

எல்லாவற்றையும் விட...


சமீப காலமாக எங்கள் வீட்டுப் பகுதியில், அவர் காலையில் நடந்து செல்கிறார்.
நேர்த்தியான மேல் உடை. கால் சட்டை. காலணிகள். அதைவிட முக்கியமான அடையாளம் நடந்துவரும்போதே அவர் விசிலடித்துப் பாடிக்கொண்டே வருவது.  அப்போதுதான் விசில்செய்யக் கற்றுக்கொள்வது போல இருக்கும். காற்றும் அந்த கிறிஸ்துவ கீதங்களின் மெட்டும் தனித்தனியாக ஒலிப்பதிவு செய்யப்பட்டது போல விலகும். கையில் ஒரு நேர்த்தியான ஒரு தோல்பட்டியில், மினுமினுக்கும் பித்தளைக் கண்ணியுடன், ஒரு நாயைக் கூட்டிக்கொண்டு வருவார். 

அவருடைய தோற்றத்திற்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் அந்த நாய் இருக்கும். நம்முடைய எந்தத் தெருவிலும், எந்தச் சந்திலும்  பார்க்கமுடிகிற சாதாரண நாய் அது. ஊட்டமாகக் கூட இல்லை. மெலிந்து இருந்தது. பொதுவாக, நாய்கள் அதற்கு வேற்று முகமாகப் படுகிற இன்னொரு தெரு நாய் அல்லது வளர்ப்பு நாயைப் பார்த்தால், குரைத்து  தன் வீரத்தை அல்லது பயத்தைக் காட்டும். தன் அதிகார எல்லையை நிரூபிக்கும். இது அப்படிக் குரைக்கவே இல்லை.  சாதுவாக அவருடைய வலது பக்கத்தில் வந்தபடி இருந்தது.

ஏன் இப்படி ஒரு நாயைத் தனக்குத் தேர்ந்தெடுத்திருக்கிறார்?  பார்த்தாலே நம்மை விரட்டுகிற, கன்றுக்குட்டி உயரச் செல்லங்கள் எவ்வளவோ இருக்கிறதே, இவர் ஏன் இதைப்போல ஒன்றை அழைத்துக்கொண்டார்?  என்னால் கேட்காமல் இருக்கமுடியவில்லை. ஆனல் கேட்கத் தயக்கம்.  சங்கரியம்மாவுக்கு இதுபோன்ற விஷயங்களில் தயக்கமே கிடையாது. அவர் கேட்டேவிட்டார்.

நேரடியாகக் கேட்கவில்லை. ‘என்ன அதுக்கு உடம்புக்குச் சரியில்லையா?’ என்று கேட்டார்.  அவர் விசிலடிப்பை நிறுத்திவிட்டுச் சிரித்தாராம்.  ‘ஏன்? நல்லாத்தானே இருக்கு’ என்று குனிந்து நாயினுடைய உச்சந்தலையைத்  தடவினாராம்.    அது அவர் இடுப்புவரை முன்கால்களைப் பதித்து, கொஞ்சுவது போலச் சத்தம் கொடுத்ததாம். அவர் வேறு ஒன்றும் சொல்ல வில்லையாம். ‘பார்த்தீங்களா?’ என்பது போல மறுபடி சிரித்தாராம். மறுபடியும் விசிலடித்துப் பாடிக்கொண்டு போக ஆரம்பித்தாராம்.

சங்கரியம்மாவும் இதை அதிகம் விவரிக்கவில்லை.  ‘இது நம்ம லட்சுமி  தத்து எடுத்த கதையால்லா இருக்கு’ என்றார்.  லட்சுமி அவருடைய சினேகிதி.  தாமதமாகத்தன் லட்சுமிக்குக் கல்யாணம் ஆயிற்று.   கணவர் பஸ் ஓட்டுநர். மிகச்சின்ன வாடகை வீடு. சந்தோஷமாகத்தான் இருந்தார்கள். பத்துப் பதினைந்து வருடமாகியும் குழந்தை இல்லை. இரண்டு பேரும் சேர்ந்து ஒரு முடிவு செய்தார்கள்.  இவர்களைப் போலவே, இன்னொரு சிறிய  வாடகை வீட்டில் பிறந்த அந்த நான்கு வயதுக் குழந்தையைத் தத்து எடுத்துக் கொண்டார்கள்.  அதற்கு நான்கு வயதுக்கு உரிய மனவளர்ச்சி இல்லை. சரியாகப் பேச்சு வரவில்லை.  அந்தக் குழந்தையை லட்சுமியின் கணவர் கொஞ்சுவதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கும்.

இதுவரை தரையில் படுக்கும் அவர், அந்தக் குழந்தைக்காக ஒரு கட்டில் வாங்கினார். சின்ன அளவு தொலைக்காட்சிப் பெட்டி வாங்கினார். லட்சுமி சங்கரியம்மாவிடம் சொன்னாளாம்,   ‘ஓடியாடுகிற பிள்ளைகளை வளர்க்கத்தான்  ஊரு உலகத்தில ஆயிரம் பேரு இருக்காங்களே’ என்று.

நம்முடன் இப்படி ஒரு லட்சுமி இருக்கிறார்.  நாயைக் கூட்டிகொண்டு விசிலடித்துப் பாடியபடி நடந்துபோகிற ஒருத்தர் இருக்கிறார்.

இவர்களிடம் இருந்தும் , இவர்களைப் போன்ற பலரிடம் இருந்தும்தான் நான் கற்றுக் கொள்கிறேன்.  நான் கற்றது கையளவு. ஆனால் அந்தக் கையளவு எல்லாம் இது போன்ற மனிதர்களின் மனதளவு.

எல்லாவற்றிற்கும் மனம்தான் அளவு.
எல்லாவற்றையும் விட மனம்தான் அழகு.

%

ஆனந்த விகடன் - இன்று, ஒன்று, நன்று
24-07-2012  ஒலிபரப்பப்பட்ட பதிவு/

Saturday 21 July 2012

மழை பார்த்தல்



ஞாபகம் இருக்கிறதா?
பத்து இருபது நாட்களுக்கு முன்பு சென்னையில் மழை பெய்தது.  மழைக்கு என்ன, அது எல்லா ஊரிலும் பெய்யும். எல்லோர்க்காகவும் பெய்யும். அன்று சென்னையில் பெய்தது. அவ்வளவுதான்.

மழை தான் பெய்கிற நேரத்தை அழகாகத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. சில சமயங்களில் இரவு முழுதும் விடிய விடிய.    சிலசமயம் விடியும் போது அதிகாலையில். நான் பார்த்த சென்னை மழை மாலையில் பெய்தது. இரவுக்கு முன்பு வருகிற மாலையில்.

ஒரு மோசமான கோடைகாலத்திற்குப் பின்பு பெய்த முதல் மழை அது.  தொடர்ந்து கனமாகப் பெய்துகொண்டிருந்தது. நான் வாசல் பக்கம் வந்து மழை பார்த்துக் கொண்டிருந்தேன். மழையைப் பார்க்கவும் செய்யலாம். கேட்கவும் செய்யலாம்.  உங்களுக்குப் பிடித்த நீர் வண்ண ஓவியத்தை அது பார்க்கத் தரும்.  உங்களுக்குப்  பிடித்த நீராலான பாடலை அது இசைத்துப் பெய்யும்.  உங்களை ஒரு ஈரநடனத்திற்கு மழை   இடைவிடாமல் அழைக்கும்.  மழையின் திருவிழாவில் குழந்தைகள் உடனடியாகவும், நாம் சற்றுத் தாமதமாகவும் தொலைந்து போவோம்.

ஆனால், அன்றைக்கு என்னைத் தவிர யாரும் தொலையக் காணோம்.  ஒரு வாடகைக் கார் ஓட்டுநர் புகைபிடித்தபடி நின்றார்.  ஒரு தையல்காரர் வாகை மரத்தின் கீழ், தன் தையல் இயந்திரத்தை மூடி, அவர் நனைந்து கொண்டு இருந்தார்.  வேறு யாரும் தெருவில் இல்லை. 
நான் எதிர்பார்த்தது மழையில் நனைகிற குழந்தைகளை.     வீட்டுக்குள்
இருந்து தெருவுக்கு ஓடிவந்து, கைகளை உயர்த்தி மழை நடனம் ஆடுகிற குழந்தைகளை.   அந்த நடனத்தில் மழை எப்போது உழந்தைகள் ஆகிறது என்றும்,   குழந்தைகள் எப்போது மழை ஆகிறார்கள் என்றும் நமக்குத் தெரியாது.  ஆனால் ஆகிவிடுவார்கள்.

அன்று மழை மட்டும் பெய்துகொண்டிருந்தது.  ஒரு தனித்த பூனைக்குட்டி போல மழை தன் வருத்தமான குரலில் குழந்தைகளைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தது.   தானியங்கள் இல்லாத இடத்திற்குக் குருவிகள் வருவதில்லை.   குழந்தைகள் நனையாத தெருவிற்கு மழை வராமல் போகும் சாத்தியங்களும் உண்டு.  ஒரே ஒரு காகிதக் கப்பல் விடுவதற்காகவும், அது சற்று தூரம் போய் சாய்வதற்காகவும் மழைத் தண்ணீர் தெருவில் ஓடவேண்டும்.


குழந்தைகளை மழை பார்க்கச் சொல்லுங்கள்.
நீங்கள் அப்படிச் சொல்லவே வேண்டாம். எப்போதும் போல, மழைபெய்யும் போதும் நீங்கள் அசையாது அமர்ந்து பார்க்கிற தொலைக்காட்சியை அணைத்துவிட்டு,   உங்கள் வாசலுக்கு,    உங்கள் அடுக்ககங்களின் விளிம்புகளுக்கு எழுந்துவந்து நில்லுங்கள்.  குழந்தைகளும் உங்களோடு வந்து நின்று மழை பார்க்கத் துவங்கிவிடும்.

உங்கள் கைகளை நீட்டி, மழைத் தாரைகளை ஏந்துங்கள்.
 ஒரு தலைவாழையின் பக்கக் கன்றுகள் போல, உங்கள் குழந்தைகளும் தன்னுடைய கைகளை நீட்டி மழையை ஏந்தும்.  இதுவரையில்  வந்த பண்டிகைகளில் கொளுத்திய மத்தாப்பூக்களை விடவும் கூடுதலான அழகுடன், அந்தப் பிஞ்சு உள்ளங் கைகளில் மழைத்துளி விழுந்து தெறித்து பிஞ்சு வானவில்களை உண்டாக்கும்.

மழை பாருங்கள்.
மழையும் உங்களைப் பார்க்க விரும்புகிறது.

%

ஆனந்த விகடன் -  இன்று, ஒன்று, நன்று.
22-07-2012  ஒலிபரப்பப்பட்ட பதிவு.

Friday 20 July 2012

தொடுகை.




’இன்றைக்கு யார் யாரையெல்லாம் பார்த்தீர்கள்? ’ என்று கேட்டால் சொல்லிவிடுவீர்கள்.  யார் யாரையெல்லாம் தொட்டீர்கள் என்றால் பதில் சொல்ல மாட்டீர்கள்.  சில பேருக்குக் கோபம் கூட வந்துவிடும், எத்தனை பேரைத் தொட்டீர்கள் என்று கேட்டதற்கு.

தொடுவது என்றாலே,  நாம்,  ஒரு ஆண் பெண்ணைத் தொடுவதையும், பெண் ஆணைத் தொடுவதையும் மட்டுமே நினைத்துக் கொள்கிறோம்.

போகிற வழியில் இருக்கிற செடியைத் தொடுகிறோம்.    நண்பருடைய வீட்டுக்குச் சென்றிருக்கையில், நம்முடைய காலை முகர்ந்து பார்க்கிற பாமரேனியன் நாய்க்குட்டியைத் தொடுகிறோம்.  பஸ்ஸில் முன் சீட்டில் அம்மாவின் தோளில் தலையைச் சாய்த்து உறங்குகிற குழந்தையின் சிகையைத் தொடுகிறோம்.     குளிர்பானம் வழங்கப்பட்ட கண்ணாடிக் குவளையின் வெளிப்புறத்தில் வழிந்திறங்கும் துளிகளைத் தொடுகிறோம். ஆனால் பார்க்கிற மனிதர்களைத் தொடமாட்டோம்.  தொடக் கூடாது. இது என்ன அநியாயம்?

நான் இப்போதெல்லம் நிறையப் பேரைத் தொடுகிறேன். மேலும் நிறையப் பேரைத் தொட விரும்புகிறேன். தொட எனக்குப் பிடிக்கிறது. முக்கியமாக, உங்கள் தோளை நான் தொட்டுவிடுகிறேன்.  என்னுடன் நீங்கள் நெருக்கமாக உரையாடுபவர் என்றால், என்னை அறியாமலேயே  உங்கள் கை விரல்களைப் பிடித்துக் கொள்கிறேன். சற்று நேரம் உங்கள் கைகளின் வெதுவெதுப்பை அல்லது குளிர்மையை ஏந்திக் கொள்கிறேன். சில கைகள் வெயிலில் கிடந்த கூழாங் கற்கள் போல இருக்கின்றன.  சில அப்போது தான் இடப்பட்ட பறவை முட்டை போல.   சில கீரைத் தண்டு போல.  சிவப்புத் தாள் ஒட்டிய புல்லாங்குழலை, திருவிழாவில் வாங்கியவுடன் நாம் உணர்கிற மூங்கிலின் வழவழப்பான  முதுகு போல. பிறந்த குழந்தைகளின் கைகள், நிஜமாகவே நிஜமாகவே பூப் போல.

எனக்கு தி. ஜானகிராமனின் ‘உயிர்த் தேன்’   நாவலில் வருகிற அனுசூயாவைப் பிடிக்கும்.  அனுசூயா எல்லோரையும் தொடுகிறவள். ஆண். பெண், அணில்குஞ்சு, கன்றுக் குட்டி,   செங்கம்மா,  பூவராகன் எல்லாம் அனுசூயாவுக்கு ஒன்றுதான்.  மனதைத் தொடுவதுதான் அவளுக்கு உடலைத் தொடுவது.

நான் அனுசூயாவைப் போல எல்லோரையும் தொடுகிறேன்.  முக்கியமாக
முதியவர்களை, நோய்ப் படுக்கையில் இருப்பவர்களை.  ஒரு தனித்து ஒதுங்கிய அறையின் கட்டிலில், ஜன்னல்வழி கசியும் இறந்தகாலங்களின்
மங்கல் வெளிச்சத்தில், தேயும் ஞாபகங்களுடன் உரையாடுபவர்களைச் சந்திக்க நேரும்போது. அதிகம் தொடுகிறேன்.

அந்த அறை இருட்டில் இருந்தால், நான் மின் விளக்குகளை ஏற்றுவது இலலை.  அவர்களை எழுந்து உட்கார விடுவதில்லை.  தரையில் அல்லது ஒரு மர ஸ்டூலில், அவர்களுடைய முகத்தின் அண்மை கிடைக்கும்படி உட்கார்கிறேன். உட்கார்ந்த முதல் நொடியிலேயே, அவர்களுடைய கையை என்னுடைய கையில் எடுத்துக் கொள்கிறேன்.  அவர்களிடமிருந்து விடை
பெறும் வரை, அந்தக் கையை நான் விடுவதே இல்லை.

இன்னொருவரால்,  வெதுவெதுப்புடன் தொடப்படாத நிறைய முதியவர்கள் இருக்கிறார்கள். அதுவும், எதிர்பால் ஆண் பெண்களின் தொடுகை தொலைந்து போன,  அந்தத் தொடுகைக்கு ஏங்குகிற முதியவர்களின் கைகள் நிறைய இருக்கின்றன.

தொடுவது நல்லது.  தொடுங்கள்.
தினசரி சில தோள்களையாவது.  சில கைகளையாவது.

%

ஆனந்த விகடன் - இன்று, ஒன்று, நன்று
21 - 07 -2012   ஒலிபரப்பப்பட்ட பதிவு.





காற்றாகவும்...







முகப்புத்தகப் பக்கங்கள் ஒன்றில், நீங்கள் கூட அந்தப் புகைப்படத்தைப் பார்த்திருப்பீர்கள்.

கார்த்திகை அகல்களை ஏந்துவது போல ஜோடி ஜோடியாக ஏழெட்டுக் கைகள்.   அந்தந்த இரண்டு கைகளுக்குள்ளும் கன்னங்கரேர் என்று பிசுபிசுத்திருக்கிற மண்.      கி. ராஜநாராயணன் மாமா வீட்டுக் கணவதி அத்தை பார்த்தால், இரண்டு விரல்களால் நுள்ளி எடுத்து, வாயில் போட்டுக் கொள்வார்.  அப்படியொரு கரிசல் மண்.  மண்ணின் நடுவில் முதல்முதல் விட்ட நான்கைந்து இலைகளுடன் ஒரு சின்னஞ்சிறு செடி.  பச்சை விளக்குகள் ஏற்றின மாதிரி.

எனக்கு அந்தப் படத்தைப் பிடித்திருந்தது.  அந்தக் கைகள்  என்னுடையதாக  இருக்க விரும்பினேன்.   அர்ச்சனாவுடையதாக, ஆதித்யா உடையதாக இருக்க விரும்பினேன். சின்னஞ்சிறிய கைகள் குவித்து ஏந்துகிற போது, அந்த மண்ணும் செடியும் இதைவிடவும் ஈரமாக,    இதை விடவும் பசுமையாக இருக்கும்.    பசுமை என்பது எவ்வளவு நல்ல வார்த்தை.

ஒரு விதை முளைப்பதை, ஒரு செடி வளர்வதை இந்தக் கால, நகர்ப்புறக் குழந்தைகள் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை.  வீட்டுக்கு அருகில் முளைக்கிற புளியங் கன்றையோ, வேப்பங்கன்றையோ அடுக்ககக் குழந்தைகள் பார்த்திருக்க மாட்டார்கள்.  அவர்களுக்குப் பேரீச்சம் பழ விளம்பரங்களின், ‘சிங்கம் போன்ற’   வாசகங்கள் தெரியும்.  ஆனால் ஜன்னலோரத்தில் முளைக்கும் பேரீச்சங் கன்றைத் தெரியாது.  அவர்கள் கைகளில் வழியவழிய சாக்லேட்களை ஏந்தியிருப்பார்கள்.  நெல்லை, மக்காச் சோளத்தை, கேழ்வரகை ஏந்துவது என்ன,   அவர்கள்    ஒருவேளை, பார்த்திருக்கவே மாட்டார்கள்.

எல்லாக் குழந்தைகளும் ஒரே ஒரு தடவை, ஒரே ஒரு விதையையாவது
அவர்களுடைய கையில் வைத்திருக்க வேண்டும்.  ஒரு விதையை வைத்திருப்பது ஒரு முழு வாழ்வையே வைத்திருப்பது என்பதைப் பின்னர் ஒரு நாள் அக் குழந்தை உணரக் கூடும். அப்பா, அம்மா, அண்ணன், தங்கை என, எல்லோரும் ஒன்றாக நிற்பதற்குப் போதுமான நிழலை, அந்த ஒரே ஒரு சின்ன விதை தனக்குள் வைத்திருக்கிறது என்பதை அந்தக் குழந்தை அறியும் எனில், இப்போது நம்முடன் இருக்கும் மரங்கள், இன்னும் ஆனந்தத்துடன் காற்றின் பாடல்களைப் பாடும்.

என்னுடைய ‘நடுகை’ என்கிற சிறுகதை,    ‘’ஒண்ணைப் பிடுங்கினால் ஒண்ணை நடணும் இல்லையா?” என்ற ஒரு வரியுடன் முடியும். பிடுங்குவதை எல்லாம் தங்க நாற்கரச் சாலை அமைப்பவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.  நடுவதை, ஒன்றே ஒன்றையாவது நடுவதை, நீங்களும் நானும்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பரவாயில்லை. ஜவுளிக்கடைகளில் இப்போது மரக்கன்றுகள் தருகிறார்கள். ஒன்றிரண்டு திருமண வீடுகளில் கூட, தாம்பூலப் பைகளுக்குப் பதிலாக இளம் நாற்றுகளைத் தரத் துவங்கி இருக்கிறார்கள்.  எனக்குக் கூட ஒரு கல்லூரிப் பயிலரங்கில், ஒரு மரக் கன்றைப் பரிசாகத் தந்தார்கள்.

இன்னும் சில வருடங்களில், நீங்கள் திருநெல்வேலிப் பக்கம்,  கல்லிடைக் குரிச்சி ஊரைத் தாண்டிப் போவீர்கள் என்றால், உங்கள் மேல் வீசுகிற காற்று, அனேகமாக எனக்குப் பரிசளிக்கப்பட்ட அந்த கன்று வளர்ந்து பெரிதாகிவிட்ட மரத்தில் இருந்துதான் இருக்கும்.

கதையாக மட்டும் அல்ல, காற்றாகவும் உங்களை நான் தொடலாம் அல்லவா?  இன்னும் சொல்லப் போனால், கதை என்பது கூட ஒரு விதை தானே.

%

ஆனந்த விகடன் - இன்று, ஒன்று, நன்று
20-07-2012  -  ஒலிபரப்பப்பட்ட பதிவு,

Thursday 19 July 2012

சந்தோஷம்



இன்று நீங்கள் நடைப்பயிற்சி செல்லும்போது, உங்களுடைய பாதத்தை,
பாதி கடித்தும் கடிக்காததுமாக, பச்சையும் மஞ்சளுமான நிறத்தில், ஒரு மாம்பழம் தடுக்கியதா?   இன்று உங்கள் வீட்டில் வாசல்  தெளிக்கையில், நேற்றுப் போட்ட கோலத்தின் மேல், செக்கச் சிவப்பாக ஒர் வாதாம்பழம் கிடந்ததா?    பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பிவருகிற உங்களுடைய பிள்ளையின் கையில் ஒரு காக்கைச் சிறகு இருக்கிறதா? 

சந்தோஷப்படுங்கள், உங்களுடைய இந்த நாள் நன்றாகத் துவங்கி இருப்பதற்காக.  சந்தோஷப்படுங்கள், இந்த நாள் நன்றாக நிறைந்துகொண்டு இருப்பதற்காக.  ஒரு கடிபட்ட மாம்பழத்திற்காக, ஒரு வாதாம்பழத்திற்காக், ஒரு காக்கைச் சிறகிற்காக  எல்லாம் ஒருவர் சந்தோஷப்பட முடியுமா என்று கேட்கிறீர்களா?

நிச்சயம் சந்தோஷப்படலாம். நீங்கள் மாமரங்களுக்கு அருகில், வாதா மரத்திற்கு அருகில் மட்டுமல்ல, பழம்தின்னி    வவ்வால்களோடும் அணில்பிள்ளைகளோடும் காகங்களோடும் இருக்கிறீர்கள். உங்கள் உலகம் பத்திரமாக இருக்கிறது.

அலுவலகத்திலிருந்து திரும்பிவரும்போது, உப்புப் போட்டுக் குலுக்கிய நாவல்பழங்கள் உள்ள ஒரு வெங்கலக் கிண்ணம் வீட்டில் உங்களை வரவேற்கிறதா?  சந்தோஷப்படுங்கள். 
உங்களுக்குப் பிடித்த பெரியம்மாவைப் பார்க்கவேண்டும் எனத் திடீரென்று தோன்றுகிறது. பஸ் ஏறிப் போகிறீர்கள். வீட்டுக்குள் கால்வைக்கும்போது மஞ்சள் பொடி வாசனையுடன் பனங்கிழங்கு வேகிற வாசனை வருகிறது. சந்தோஷப்படுங்கள்.
இலந்தம்பழம் கொண்டுவருகிற உகந்தான்பட்டி ஆச்சிக்காக, மருதாணி அரைத்து எல்லோருக்கும் வைத்துவிடுகிற மீனாக்காவுக்காக, திருவாசகம் படித்துக்கொண்டே, பழைய செய்தித்தாள்களில் விதம் விதமாகப் பொம்மை செய்துதருகிற பூசைமடம் தாத்தாவுக்காக, சந்தோஷப்படுங்கள்.

’கடவுளின் துகள்கள்’ கண்டுபிடிக்கப்பட்டுவிட்ட, மின்னணுமயமாகிவிட்ட வேகவேகமான பதிவிறக்க நாட்களில் இதற்கெல்லாம் ஒருவன் சந்தோஷப்படுவானா? - என்று உங்களை யாரும் கேலி செய்யலாம். அந்த மெட்ரோ கேலிகளை, மாநகரக் கிண்டல்களை ஒதுக்கித் தள்ளுங்கள்.  அவர்கள் சுத்திகரிக்கப்பட்ட பாட்டில் தண்ணீரை விலைக்கு வாங்கிக் குடிக்கிறவர்கள்.   அவர்களை அதிகம் பொருட்படுத்தாதீர்கள்.  ஓடுகிற ஆற்றில், கல்மண்டபத்துப் படித்துறையில் இருந்து வட்டப்பாறைகளுக்கு நீங்கள் உங்கள் போக்கில் நீந்திச் சென்றுகொண்டு இருங்கள்.

உங்களுடைய நாணல் திட்டுகளுக்கு,  தாழம்புதர்களுக்கு, புளியமரச் சாலைகளுக்கு நீங்கள் சந்தோஷப்படுங்கள்.  உங்கள் வீட்டுக்குப் போகிற வழியில் உதிர்ந்துகிடக்கும் வேப்பம் பூக்களுக்காக,  பூக்கொறித்து, பூ உதிர்த்துத் தாவும் அணில் குஞ்சுகளுக்க்காகச் சந்தோஷப்படுங்கள்,
அரி நெல்லிக்காய்களுக்காக, செம்பருத்திப் பூக்களுக்காக, விதையுள்ள கொய்யாப் பழங்களுக்காகச் சந்தோஷப் படுங்கள்.

இயற்கை உங்கள் அருகில்  இருக்கிறது. நீங்கள் இன்னும் இயற்கையின் நடுவில் இருக்கிறீர்கள்.

உங்கள் வீட்டுச் செம்மண் முற்றத்தில்தான் மழைக்குப் பிந்திய மண்புழுக்கள் நெளியும்.  உங்கள் வீட்டுச் சுவரோரம்தான் மார்கழி மாதம் வளையல்பூச்சிகள் ஊர்ந்துசெல்லும்.  சரியாகச் சுடப்பட்ட ஒரு பேக்கரி ரொட்டியின் நிறத்தில், ஒரு குடைக்காளான் நீங்கள் புகைப்படம் எடுப்பதற்கு நிற்பதுபோல முளைத்திருக்கும்.

உங்களுடைய தினங்களில், அணில்கடித்த பழமாக, வவ்வால் போட்ட வாதாங் கொட்டையாக, காக்கைச் சிறகாகக் கிடப்பவை எல்லாம் உங்களுக்கு மட்டுமே கிடைத்திருக்கிற சந்தோஷங்கள்.

கொஞ்சம் குனியுங்கள்.
உங்கள் சந்தோஷங்களைப் பொறுக்கிக் கொள்ளுங்கள்.

%

ஆனந்த விகடன் - இன்று, ஒன்று, நன்று.
19.07.2012 ஒலிபரப்பப்பட்ட பதிவு.

Sunday 15 July 2012

பின்னிக்கொள்ளும் விரல்கள்



ன்றைக்கு அசோகமித்திரன் ஞாபகமாக இருக்கிறேன்.

கணையாழி, ஜூலை இதழில், ‘படிப்பதற்கு ஐம்பது ஆண்டுகள் பிடித்த
புத்தகம்’  என்ற அவருடைய கட்டுரை வந்திருக்கிறது.    கட்டுரையின்
துவக்கத்தில் இருக்கும் அவருடைய புகைப்படம் அவ்வளவு நேர்த்தி மிக்கது. சமீபத்திய ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்.  அவர் உடையைப்
பார்க்கையில் வெளிநாட்டில் எடுத்ததோ என யோசிக்க வைக்கிறது.  இங்கு,
அத்தனை பெரிய பித்தான்கள் உள்ள ஒர் மேல் கோட்டை அணிய அவரை
நிர்ப்பந்திக்கிற பருவ நிலை இருந்திருக்க வாய்ப்பில்லை.

ஒரு மெல்லிய ஏணியின் படியில் வலது கையையும், இடுப்பில் அவரது இன்னொரு கையையும் வைத்துக்கொண்டு நிற்கிறார். அவர் வாழ்வின்
மொத்தக் காலமும் அவரின் காலணிகளுக்குக் கீழ் இருப்பதை, கண்களும்
அவருடைய சற்றே ஒதுங்கிய இடது கன்னமும் சொல்கின்றன. எந்தக்
கலையின் கீழும் வரமுடிகிற ஒரு முதிர்ந்த கலைஞன் போல இருக்கிறார்.
அசோகமித்திரனாக மட்டும் அல்ல,    இப்போதுதான்  இசைக்கோர்வை ஒன்றிற்கான குறிப்புகளை எழுதிவிட்டு வந்த இசைமேதையாக,  அல்லது
சர்வதேசப் பரிசு ஒன்றைப் பெறுவதற்கு முன் அலுப்பாக,  நேர்காணல்
நிமித்தமான ஒரு புகைப்படத்திற்கு நிற்கும் அயல்திரைப்பட இயக்குநராக,
புகை பிடிப்பதற்கு அல்லது ஒரு மிடறு அருந்துவதற்காக ஸ்டுடியோவை
விட்டு விலகி வந்து, தன் சினேகிதியை எதிர்பார்த்து நிற்கும் ஓவியனாக
எல்லாம் உருவகித்துக் கொள்ள முடிகிறபடி அவருடைய புகைப்படம் ஒரு உலகீய அடையாளத்துடன்  இருக்கிறது.

அவருடைய முகத்தின் சம அளவுக்கு, அவருடைய இரு கைகளின் விரல்களை எனக்குப் பிடித்திருக்கிறது.  விரல்கணுக்களின் மேல்தோல்
சுருக்கங்கள் விடையற்ற கணிதங்கள் நிரம்பியவை. கூடுதலாகச் சற்று
நேரம் அவற்றை உற்றுப் பார்ப்போம் எனில்,  அழகு குறித்து நாம் எழுப்பி
இருக்கும் மாயக் கோபுரங்கள் தகர்ந்து போகக்கூடும்.

இரண்டு மோதிர விரல்களிலும் மோதிரங்கள். வலது கை விரல்கள், ஒரு
பெரு மரத்தின் அசையும் விழுதுகள் எனக் கீழ்நோக்கித் தொங்குகின்றன.
அந்தத் தொங்கும் விரல்களால்தான், அவர் இந்தக் கட்டுரை வரைக்கும்
எழுதியிருப்பார்.

நற்றிணை பதிப்பகம் சமீபத்தில், ’அப்பாவின் நண்பர்’ என்கிற அவருடைய
நவம்பர்-2011 வரைக்குமான படைப்புகளின் தொகுப்பை அழகான பதிப்பாக வெளியிட்டிருக்கிறது.  அதன் பின்னட்டை வரிகள் உண்டாக்கும் வலி, அசோகமித்திரனுடைய கதைகள் உண்டாக்கும் வலியை விடக் கூடுதல்
ஆனது.

“வயதான  காரணத்தால், இன்று என் கைவிரல்கள் பேனாவைப் பிடித்தாலே
பின்னிக்கொண்டு விடுகின்றன.    எழுதுவது அனேகமாக அசாத்தியமாகி
விட்டது. இக் கதைகள் மங்கலாக இருந்த என் கடந்தகால நினைவுகள்
சிலவற்றைத் தெளிவாக்கின”  என்று அசோகமித்திரனே எழுதியிருக்கிறார்.

’பேனாவைப் பிடித்தாலே பின்னிக்கொள்கிற கைவிரல்’களுடன், அசோக
மித்திரன் போன்ற ஒருவர், ஐம்பது ஆண்டுகள் பாதுகாத்த ‘இரு பெண்கள்’
எனும் அல்பெர்டோ மொராவியோ புத்தகத்தைப் பற்றி இரண்டு பக்கங்கள்
அளவில் ஒரு கட்டுரை எழுதுகிறார்.

நமக்கும் விரல்கள் இருக்கின்றன. நாம் அந்த விரல்களால் அனேகமாக
என்ன செய்கிறோம்?     ‘அப்புறம் படித்துக் கொள்ளலாம்’ என அந்தப் பக்கங்களை, எச்சில் தொட்டுப் புரட்டி, அடுத்த பக்கத்திற்குச் சென்று விடுகிறோம். அந்த ‘அப்புறம்’ வருவதே இல்லை என்பதுதான் துயரமானது.

ஒரு வேளை, அந்தத் துயரத்தையும் ஏற்கனவே புரிந்துவிட்ட ஒன்றுதான் அசோகமித்திரன் அவர்களின் அந்தப் புகைப்படச் சிரிப்பிலும் இருக்கிறதோ
என்னவோ.

#

Friday 13 July 2012

ஒரு மாலை, ஒரு முன்னிரவு.



இதற்கு முன்பு, மதுரை இறையியல் கல்லூரி வளாகத்தில், ஒலிப்பதிவுக்
கருவிக்கு முன்பு இருந்தேன். ஆழி பதிப்பகம் , என்னுடைய தேர்ந்தெடுக்கப் பட்ட கவிதைகள் சிலவற்றை, தொகுப்பாகவும் , குறுந்தகடாகவும் வெளியிட்டது. அதற்கான பதிவு அது.  சற்றும் இடைவெளி இல்லாமல், ஒரே இருப்பில், அதிலிருந்த மொத்தக் கவிதைகளையும்  வாசித்தேன்.   அந்தக் குறுந்தகடைக் கேட்டிருப்பவர்களுக்கு , என் கவிதைகளையும் மீறி, அல்லது அவற்றின் அடிக்கோடு போல் என் ஆஸ்த்மா குரலின் பிசிறும்  வாசிக்கக் கிடைத்திருக்கும்.

விகடன் ஒலிப்பதிவு அறையிலும், அந்தப் பிசிற்றுக் குரலிலேயே பதிவு செய்தேன். எனக்கு என் குரலின் விரிசல் தெரியவில்லை. ஆனால் பதிவு
செய்த நண்பர் நியூட்டன் அதை உடனடியாகச் சொன்னார். அதை அவர் என்னுடைய ஒலிப்பதிவு பயமாக நினைத்திருப்பார். பேசுகிற போது எனக்கு இன்னும் இருக்கிற மேடைப் பதற்றம், ஒலிப்பதிவுகளில் கொஞ்சம் கூட இருப்பதில்லை.  அகில இந்திய வானொலியில் முப்பத்தைந்து வருடங்கள்
முன்பு நான் வாசித்த கவிதைகளின் குரலை, இப்போதும் நான் மிகவும்  விரும்புகிறேன். ஒரு கவிதை வாசிப்பை இப்போதும் மிக உயிர்ப்போடு நிர்வகிக்கமுடியும் என்றே தோன்றுகிறது.

விகடன் ஒலிப்பதிவு கவிதைகளுக்கானது அல்ல.
இந்த வாரம் தமிழ்ச்செல்வன் குரலில் ஒலிபரப்பாகிற, ‘இன்று, ஒன்று,நன்று,’
சார்ந்தது.  வழக்கமான என் தயக்கத்துடன், கூச்சத்துடன், ஒத்திப்போடலுடன், கதிர்வேலன் மூலம்  விகடன் தந்த இடைவிடாத தூண்டுதலை முறையாக கௌரவிக்கும் விதத்தில், அங்கே இருந்தேன். விகடனின் அலுவலகத்தை இதற்கு முன் எட்டிக் கூடப் பார்த்ததில்லை.  நான் தனியாக அப்படிப் போகமுடியும் என்பது எனக்கே தெரியாத ஆச்சரியம்.  ஒருகொத்துப் பூவில் நானும் ஒரு பூவாக, என்னைப் பூக்கச் சொன்னால், ரொம்பசந்தோஷத்துடன் பூத்துவிடுவேன். ஒற்றைப் பூவாக எனில், வாய்ப்பில்லை.

அன்றைய என் மலர்ச்சிக்குக் காரணம் இருந்தது. பாவை சந்திரனின்  புதிய பார்வை காலத்தில், அதற்கும் முன்பே எனக்கும்  நா.கதிர்வேலனுக்கும் பழக்கமும் நெருக்கமும். வரவேற்பறையிலிருந்து அவர் என்னை தத்து எடுத்துக் கொண்டார்.  கதவைத் திறந்து உள்ளே நுழையக் கூட இல்லை. ராஜு முருகன் எனும் முருகன் எதிரே வந்துகொண்டிருந்தார்.  நான் பற்றிக் கொள்ள நினைத்த கைகள், அணைத்துக் கொள்ள விரும்பிய தோள்கள் அவருடையது. அவருடைய, ‘வட்டியும் முதலும்’மனிதர்களால் என்னுடைய சமீபத்திய ஒரு வருட வாழ்வு நிரம்பியபடியே இருக்கிறது. எனக்கு வாழ்வு எனில் மனிதர்கள். உயர்ந்தோர், தாழ்ந்தோர் எல்லாம் அல்ல. வென்றோர் வீழ்ந்தோர் அல்ல. சிரிப்போர் அழுவோர் அல்ல. எந்தப் பிரிவும் அற்று, மனிதர் எனும் சொல்லின் கீழ் வரும் அத்தனை மனிதர்களும். ராஜு முருகன் எனக்கு அப்படியான  நிறைய மனிதர்களின் அண்மையைத்  தந்திருக்கிறார்.

ராஜு முருகனின் கையைப் பிடித்துக் கொண்டதன் பின் என் குரலில் எந்த
நடுக்கத்திற்கும் இடமில்லை.  அதிக பட்சம் மூன்று நிமிடங்கள். அதற்குள்
அவரை என்னால் உணர முடிந்தது. அவர் எழுதியவற்றை மேலும் உணர்த்தும் படியாகவே அவரும் இருந்தார். அவர் உணரும்படியாகவே நானும் இருந்திருப்பேன்.

நான் ஏற்கனவே எழுதித் தயாரித்து வாசிப்பதற்கு வைத்திருந்தவை, அந்தப்
பதிவின் நேர அளவுகளுக்கு மேல் நிரம்பி வழிந்தன.  அதே தண்டவாளங்களில் பாஸஞ்சர் ரயிலும் எக்ஸ்ப்ரெஸ் ரயிலும் ஓடுகின்றன தானே.  நான் என் வரிகளைக் குறைத்துக் கொள்ளாமல், என் வாசிப்பின் வேகத்தைக் கூட்டிக்கொண்டேன்.  அந்தக் கூடுதல் வேகத்தின் தடதடப்பு நிச்சயம் அந்தக் குரலில் இருக்கும் என்று எனக்கே தோன்றுகிறது.

அப்புறம் புகைப்படம் எடுத்தார்கள்.   அவர்களுடைய நூலக,   ஆவண வரிசைகளின் இடையில். நான் தேனி ஈஸ்வரையும்,  வின்சென்ட்பாலையும்
தளவாய் சுந்தரத்தையும் நினைத்துக் கொண்டேன். ‘மீண்டும் அந்தக் கனவு
வந்தது’ க்காகவும், அகம் புறம் தொடருக்காகவும் எடுக்கப்பட்ட அந்தப் படங்கள் அல்ல, அவை எடுக்கப்பட்ட பொழுதுகள் நினைவுக்கு வந்தன. அந்தக் கல் மண்டபத்தில் இருந்து இத்தனை வருடங்கள் கழித்தும் யாரும் என்னை இன்னும் எழுந்திருக்க விடவில்லை. அந்த வெள்ளைச் சட்டையும் வேட்டியும் கூட இன்னும் இருக்கின்றன. அந்தச் சிரிப்பு அனேகமாகத் தொலைந்துபோய் விட்டது என்றே சொல்லவேண்டும்.  ஒரு  சிரிப்பைத் தொலையாமல் பாதுகாக்க அப்படியெல்லாம் பெரிய உத்தரவாதம் இந்த வாழ்வில் இல்லை.
வரவேற்பறைக்கு வரும்போது, எனக்காக சாம்ராஜும், ஆகாச முத்துவும், சீனி என்கிற சீனிவாசன் என்கிற திருமால் அழகனும் காத்திருக்கிறார்கள். சிறு காத்திருத்தலுக்குப் பின் கவின் மலர் வந்து சேர்கிறார். போதும். என் இத்தனை வருட எழுத்தில், இந்த ஐந்து பேரை அடைந்ததே போதும்.  ஒரே ஒருவரை அடைவதற்கு என் எழுத்து என்னை நகர்த்தி இருக்குமெனில் கூட அது போதுமானதே. இந்த வாழ்வில், இறுதிவரை, ஒருவரைக் கூட அடைய முடியாதவர்கள் பலர், மிகப் பலர் இருக்கிறார்கள்.

சீனியை அப்போதுதான் அறிமுகம் செய்துவிக்கிறார் சாம்ராஜ். திருவிழாக் காலத்தில் புல்லாங்குழல் விற்பார்கள்.   ஒரு சிவப்புத் தாள்,   அல்லது தங்கத்தாள்  சுற்றப்பட்ட அந்தப் புல்லாங்குழலை, அவர் கையிலிருந்து நம் கைக்கு மாற்றி, வாங்கிக்கொள்ளும் முதல் நொடியில் நம்மை  அந்த மூங்கிலின் தொடு உணர்வு என்னவோ செய்யும். அந்த முதல் முதல்
நொடியின் தொடு உணர்வைத்தான் கடைசி வரை அந்தக் குழலில் நாம் வாசிக்க முயல்கிறோம்.  அந்த மூங்கில் குழல் போல இருந்தது சீனியின்
கைகள். அது மெலிவு அல்ல மென்மை. மென்மையும் அல்ல, திண்மை.

நான் அவரை வரைய விரும்புகிறேன். நான் இப்படி வரைய விரும்புகிற முகங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அப் பட்டியலின்  முதல் முகத்தையே வரைந்துவிடாத போது, இன்னும் அதிகம் மிச்சமில்லாத வாழ்வின் திரைச்சீலையின் அகல நீளம்  குறித்த கவலையும் எனக்கு இல்லாமல் இல்லை.
சீனிக்கு சுருட்டை சுருட்டையான முடி. அப்படியொரு கூர்மையான மூக்கு.
சிரிப்பு ஒரு அம்பு மாதிரி, அல்லது நம்மைத் தாண்டிச் சிறகடித்து விரைந்து விடுகிற பறவை மாதிரி இருக்கிறது.  சொற்களை விரயம் செய்யத் தயாராக இல்லை.   அவர் தன்னுடைய கைபேசியில் இருந்து, சமீபத்தில் அவர் செய்து இருந்த ஒரு களிமண் சிலையை மட்டும் காட்டினார்.  இப்படிச் சிலை செய்யும் விரல்களும் மனமும் வாய்த்து உள்ளவர்களுக்கு வாய்ச் சொற்களில் நிச்சயம் நம்பிக்கை இருக்க முகாந்திரமில்லை. அவசியமுமில்லை.

கீழிறங்கி ஒரு தே நீர் குடித்தோம். விகடன் வளாகத்தின் வெளி வாசலுக்கு வரும்போது , விஜியின் முரட்டு பைக் வந்து நின்றது. அவர் வாகனத்தின் பின்னிருக்கையில் ஏறி உட்காரும்போது எனக்குத் தெரியாது, ரஷ்யன் கலாச்சார மையத்தில் நான் அப்படியொரு மனதை உலுக்கும். ” 13 ரோஜாக்கள்”  என்ற அயல்படத்தைப் பார்க்கப் போகிறேன் என்று.
ஒரு மாலைக்கும் முன்னிரவுக்கும் இடையில், இப்படி நான்கைந்து மனிதரை, ஒரு களிமண் சிலையை’ இப்படியொரு திரைப்படத்தைப் பார்க்கமுடியும் எனில், அன்றிரவில் மழை பெய்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.

%

Tuesday 10 July 2012

தூண்டில் தருணங்கள்

ஆதிமலை
ஆதிப் பயலை
மலை வரையச் சொன்னேன்.
மலையை மட்டும் வரையவில்லை.
மலையை
இரண்டு தென்னை மரங்களை
இரு பறவைகளை
ஒரு சூரியனை வரைந்திருந்தான்.
மலையை மட்டும் வரையாதவர்கள்
இருக்கும் வரை
மலை இருக்கும்
ஆதி அழகுடன்.


அணிலிடமிருந்தும்

அழகிய செம்பூவுடன்
எங்கள் வீட்டுச் செடியின்
முதல் மாதுளம் பழம் குறித்த
கனவும் விரிந்திருந்தது.
உங்களுடைய உள்ளாடைகளை
யாரோ களவாடியிருக்க,
எங்களின் இளம்கனவைப் பறித்தல்
எப்படி பதிலியாகும்?
அறிந்து கொள்ளுங்கள்,
ஒரு மாதுளம் பிஞ்சை
அதன் செடியிலிருந்து,
எங்களிடமிருந்து மட்டுமல்ல
ஒரு அணிலிடமிருந்தும்
அப்புறப்படுத்தி இருக்கிறீர்கள்
என்பதை.

நமக்குரியவற்றுள்
என்னுடைய அறைதான்.
எங்களுடைய வீடுதான்.
மறதியாக என்னை
உள்வைத்துப் பூட்டிவிட்டு
நீங்கள் போய்விட்டால் எப்படி?
என் சொல்தான்.
என் கவிதைதான்.
வேண்டும் என்றே என்னை
அதற்குள் அடைத்துவிட்டு
நீங்கள் வெளியேறிவிட்டால் எப்படி?
மிகவும் பதற்றம் உண்டாக்குவது
நமக்குரியவற்றுக்குள்
நாம் சிறைவைக்கப் படுவதுதான்
இல்லையா?


போல
சில சமயம் கடலைப் போல,
சில சமயம் ஆற்றைப் போல,
ஓடையைப் போல,
கிணற்றைப் போல,
கண்ணாடித் தொட்டியைப் போல
சுருக்கமாக
நீரைப் போல இருக்கிற மீன்
மீனைப் போலவும் இருக்கிறது
தூண்டில் தருணங்களில்.

%

கல்யாண்ஜி
உயிரெழுத்து - 2012.


Saturday 7 July 2012

ஆதிச்ச நல்லூரில்...



மீண்டும்  முத்து குமார்
மீண்டும் அகழாய்வு
மீண்டும் ஆதிச்ச நல்லூர்


%


அன்புமிக்க வண்ணதாசன் சாருக்கு,

வணக்கம்நேற்று முன் தினத்திற்கு முன் தினம் நிறைய விஷேசம்ஆனித் தேரோட்ட திருவிழா நிறைவுநாளையொட்டி பல்லக்குகளில் அப்பனும்அம்மையும் வீதி உலா.. தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி.. அப்புறம்நிறை பெளர்ணமிஎங்கள் வீட்டு மொட்டைமாடியிலிருந்து பார்க்கையில் வெளிர் நீல வானத்தில்சின்னஞ்சிறு திட்டுகளாகதவழப் பழகிய குழந்தை நெட்டித் தள்ளிய பால் பாட்டிலிலிருந்து சிந்திச் சிதறியவெண்ணிறத் திட்டுகளாக திரிந்திருந்த மேகத்திரட்டுகளுக்கு மத்தியில் நிலா தெளிவாக தெரிந்தது.கல்லூரிப் பருவகாலத்தில் ஒருவித சந்நியாச மனோபவத்துடன் கடனாநதிக் காடுகளில் சுற்றிதிரிந்தகாலத்தில் பார்த்த பெளர்ணமி நினைவுக்கு வந்ததுநானும் துறவி நிர்மலானந்தாவும் நீண்ட கல்திண்டில்ஆளுக்கொரு திசை பார்த்து அமர்ந்திருந்தோம்ஏதேதோ பேசிக் கொண்டிருந்தவர் இந்த நிலாவெளிச்சத்தில் உனக்கென்ன தோன்றுகிறது எனக் கேட்கயாரையாவது வீணை வாசிக்கச் சொல்லி கேட்கவேண்டும் போல இருக்கிறது என்றேன்தனக்கு அரியலூரில் பழகிய சிலம்பாட்டம் ஞாபகத்துக்குவருகிறதெனச் சொல்லி நீண்ட கம்பொன்றை எடுத்துக் கொண்டு சிலம்பு சுற்ற ஆரம்பித்துவிட்டார்.விறுவிறு கம்பு நாதத்தின் சந்தமாக அவர் அணிந்திருந்த ஸ்படிக மாலையும்ருத்ராட்ச மாலையும்ஒன்றோடொன்று உரசிக் குலுங்க, அன்று  வேறொர் இசையில் நான் லயித்தேன்துறவியானாலும்,இளைஞனானாலும் எல்லோர்க்குள்ளிருக்கும் ஆசையை சற்று கிள்ளி கிளறிப் பார்க்க வைத்து விடுகின்றனஇது போன்ற பெளர்ணமி நிலாக் காலங்கள்நேற்றைக்கு முன் தினத்திற்கு முன் தினமிருந்த பெளர்ணமிவெளிச்சத்தின் மிச்சம் முந்தா நாளுமிருந்தது ; நேற்றுமிருந்தது ; இன்றும் இருக்கின்றது; நாளையும்இருக்கலாம். நாளைய இரவுக்குப் பிந்தைய விடிகாலையில், வானத்தின் எல்லையிலே சிவந்து எழுதுகிறசூரியன் பொன்னிற வண்ணத்தை வரையலாம்இயற்கையின் வண்ணக் கலவையினை மனத்தினுள்பெருக்க முடியுமா ?

முன்பொரு முறை வாசித்த பொதுவுடைமைக் கவிதையின் வரிகள் இத்தருணத்தில் நினைவில்ஊர்கின்றன, நேற்றைக்கு முன் தின நள்ளிரவில் நகர்ந்த நிலா போல. இந்தக் கவிதையின் 'சிகப்பு'நெடியும்வண்ணமும் எனக்கு நிரம்பப்  பிடித்திருக்கிறது ; கூடவே பெங்களூருவிலுள்ள உங்களைநினைத்து நினைத்து நாசி உளைய வைத்திருக்கிறது .


%



எத்தனைதான் வாழ்க்கை
இடம்மாறிப் போனாலும்
குத்துகிற முட்காடாய்க்
கோலம் எடுத்தாலும்
நீராடும் விழிவேலை
நிறுத்தங்கள் செய்தாலும்
போராடு எனக் கால்கள்
புறப்பட்டு விட்டாலும்

இன்னும் கவிதைக்கு
இடமுண்டுதொட்டியிலே
சின்ன இதழ் விரித்துச்
சிரிக்கின்ற பூப்பார்த்து
நிற்பதற்குக் கூட
நேரமுண்டுஇம்மனதை
விற்பதற்கு இல்லையென
விதிசெய்வோம் தோழர்களே !

அந்தமன நிழலின்
அடியிருந்து நம்பிக்கை
சிந்துகிற உதிரிப்பூச்
சேகரித்து வருகின்றேன்
சூடுங்கள்சூடாதோர்
சுற்றிநின்று என்னுடனே
பாடுங்கள்பாடாதோர்
பாடலிதைக் கேளுங்கள்

சொல்லுதற்கும்சொல்லாமல்
சொல்லத்தான் நினைத்துவிட்டுச்
செல்லுதற்கும் தோன்றுகிற
சிநேகிதத்தின் நெகிழ்ச்சியினில்
எல்லோர்க்கும் பொதுவாகி
இதையிங்கு சொல்லுகிறேன்
வெல்லுங்கள் ! வாழ்க்கை
வீதிகளில் வாய்ப்புக்கள்

மெல்ல வரலாம்
மிகவிரைந்தும் தான் வரலாம்
எல்லோர்க்கும் ஒருவாய்ப்பு
இடையினிலோ முதலினிலோ
சொல்லாமல் நிச்சயமாய்ச்
சுடர்விளக்கு ஏந்திவரும்
வருகின்ற சுடர்விளக்கு
வாய்ப்பதனின் வெளிச்சத்தைப்

பெறுவதற்கும் அப்படிநாம்
பெற்ற வெளிச்சத்தில்
நாளை உலகத்தை
நமதாக்கி நடப்பதற்கும்
வேளை இதுதான்
வெல்லுங்கள் தோழர்களே !

வென்றவுடன் வாழ்வின்
வெற்றிச் சிகரத்தில்
நின்றவுடன் எல்லாம்
நிறைந்துவிடு  மா என்ன ?
நிறைவதுவும் குறைவதுவும்
நெஞ்சத்தைப் பொறுத்ததென
அறிவதுதான் வாழ்வென்று
அறியுங்கள் தோழர்களே !

வாழ்க்கையதன் வெற்றி
வாசல்களில் நின்றாலும்
தோள்மீது மலர்மாலை
தொடர்ந்து விழுந்தாலும்
பள்ளத்தில் மேட்டில்
பக்கத்தில் தூரத்தில்
உள்ளத்துள் உறவுக்குள்
ஊருக்குள் எனப்பலவாய் –

உமைச் சுற்றி வாழ்கின்ற
உலகத்தைஉலகத்தின்
சுமைதாங்கி வருகின்ற
சுற்றத்தைசுற்றத்தின்
சகமனிதன் படுகின்ற
சந்தோஷம் துக்கத்தை
முகத்தோடும் அகத்தோடும்
முழுதாகப் பகிருங்கள்

தனியாக ஒற்றையடித்
தடம்போட முனையாமல்
இணையுங்கள் மக்களுடன்
இவ்வுலகம் பொதுவுலகம்
பணம் வேண்டாம் உலகமுடன்
பாலம் இட அவரவர்கள்
மனம்போதும் பிரியத்தால்
மாலையிட தோழர்களே !

பிரியத்தால் மாலையிட்டுப்
பேசுகையில் இவ்வுலகம்
விரிகிறது தாய்மடியாய்
விளையாட தோழர்களே !
ஆடுகையில் புல்தரையாய்
அணிவகுத்துப் போராட
ஒடுகையில் போர்க்களமாய்
உருமாறும் வாழ்க்கையதில்

எல்லோரும் ஒன்றாக
இணையுங்கள் வானத்தின்
எல்லையிலே சிவந்து
எழுதுகிறதோர் பொன்னுலகம்

%கல்யாண்ஜி

வே.முத்துக்குமார்