இது தென்மேற்கா, வடகிழக்கா என்பது எல்லாம் சீனு ராமசாமிக்குத் தெரிந்திருக்கும், ரமணனுக்குத் தெரிந்திருக்கும். எனக்குத் தெரிந்தது இது மழைக்காலம் என்பது மட்டுமே. அவ்வளவு தெரிந்தால் போதும் என்றுதான் தோன்றுகிறது.
ஒரு வாரமிருக்கும் இங்கு மழைக்காலம் துவங்கி.
முந்திய இரவு மழைபெய்திருக்க, மறு நாட் காலை. வெளிச்சம் ஈரமாக இருக்கிறது. அல்லது ஈரமே வெளிச்சமாக இருக்கிறது. இயற்கையான ஈரம் ஒரு அழைப்பைத் தன்னிடம் வைத்திருக்கிறது. எதற்கோ அது அழைக்க, நாம் வேறு எதற்கோ ஆட்படுகிறோம்.
தெருவில் இறங்கினால் பார்க்கிற இடமெல்லாம் காக்கைகளாக இருக்கிறது. அதிகாலைக் காக்கைகள் என்று இப்போது ஒரு கவிதை எழுதத் தோன்றுகிற அளவுக்கு, அன்றைக்கு அவ்வளவு எண்ணிக்கையில் அதிகமான காக்கைகள். சமீபத்தில் அவ்வளவு கூட்டமாகப் பார்த்ததில்லை. எந்தப் பறவைகள் கூடியிருப்பினும், ஒரு பறவையாக அதனிடமிருக்கும் பறவையழகை, மொத்தமாக இருக்கும் போது இன்னும் மேலதிகமாகக் கூடுதலாக்கிவிடுகிறது.
ஒரு கணம் அழகாகத் தெரிந்த காட்சி, அவை எல்லாம் அவசரம் அவசரமாக ஈசல்களை வேட்டையாடுகின்றன என்றுணர்ந்த மறு நொடியில் அழகிழந்து விடுகின்றது. வேட்டையில் என்ன அழகுண்டு. ஒரு வலிய உயிர், இன்னொரு எளிய உயிரின் மீது நடத்துகிற உயிர்வாழ் தாக்குதல் அது. தன் அலகில் கவ்வின ஈசலின் - ஒரு பறவையின் அலகுடைய கொள் அளவுக்கு வெளியே துடிக்கிற அந்தப் பழுப்பு இறகுகளை என்னைத் தவிர யாரும் பார்க்க வேண்டாம் - எண்ணிக்கை போதாமல், இந்தக் காலையின் எல்லா ஈசல்களையும் வேட்டை ஆடிவிடுகிற பெரும் தவிப்புடன், அதன் கருஞ் சாம்பல் சிறகுகள் முழுவதிலும் பூசப்பட்டுவிட்ட வேட்டையின் நிம்மதியின்மையுடைய, அந்த நகர்வு காக்கையுடையது அல்ல, ஒரு வனத்தின் விதியினுடையது. ஒரு தரையில் எழுதப்பட்ட கருப்புவெள்ளைச் சதுரங்கத்தில் தன்னுடைய இடங்களை நகர்ந்தும் நகர்த்தியும் மாற்றிக்கொண்டிருக்கும் அந்த மாபெரும் சூதாட்டத்திலிருந்து விலகி நடக்கிறேன்.
தரையில் இருந்து இரண்டு மூன்று சாண் உயரத்தில், நடை போகிற வழியெங்கும் ஈசல் பறத்தல். இப்போது நான் எழுதவேண்டிய கவிதையின் தலைப்பு ‘ஒரு நாள் சிறகுகள்’.
%
இவர்களுக்கு எல்லாம் ஒன்றுதான். ஒரு சாலை விபத்தையும் இவர்கள் இப்படித்தான் பார்த்தும் பாராமல் போவார்கள். எந்த இடத்தில் நிற்க வேண்டுமோ, அந்த இடத்தை அவசரமாகக் கடப்பார்கள்.
அந்தப் பெரு மரம் இந்த மழையில் வீழ்ந்து கிடந்தபோதும் அப்படித்தான் போனார்கள். சொல்லப் போனால் ஒரு மரம் வீழ்வதுதான் மெய்யாகவே ஒரு சாலை விபத்து. இந்தப் புற நகர்க் குடியிருப்பு தோன்றி ஒரு ஐம்பது வருடங்களாவது இருக்கக் கூடும். இந்த மரத்திற்கும் அதே வயதிருக்கும்.
இந்த ஏழு வருடங்கள் நான் பார்க்க, பெரும் குடை விரித்து, நிழல் பரப்பி, பூத்துச் சொரிந்த குல்மோஹர் மரம். தன் கரும்பச்சை இலை அடர்த்தியுடன். தீக் கங்கு போன்ற கோடைமலர்களுடன் அந்தத் திருப்பத்தை வசீகரமாக ஆக்கிக்கொண்டு நிற்கும். தன் வசீகரம் தெரியாமல், வசீகரமாக இருப்பது தானே தாவரங்கள். அது அடியோடு விழுந்து கிடந்தது. நான் மிகுந்த கவனத்தோடு ‘வேரோடு’ என்று எழுதாமல், ‘அடியோடு’ என்று குறிப்பிடக் காரணம் உண்டு. அத்தனை பெரிய மரத்திற்கு ஒரு பனங்கிழங்குக்கு இருக்கும் அளவுக்கே வேர் இருந்தது. ஆணி வேரோ சல்லி வேர்களோ அற்று, ரயில் பயணங்களில் படுக்கை இருக்கைகளுக்கு வெளியே நீட்டிக் கொண்டு தெரிகிற சில பாதங்கள் போல, அது அதன் எளிய வேருடன் புரண்டு கிடந்தது. ஒரு இத்தனை பெரிய வேம்பு சாய்ந்திருந்தால், பக்கச் சுவருக்கு அது பெரும் விரிசலை உண்டாக்கியொருக்கும். பத்தடி சுற்று அளவுக்கு நிலத்தைப் புரட்டி, மண்ணுக்குள் சேமித்துக் கொண்டிருந்த தன் ஐம்பது வருடங்களின் ஒளிச்சேர்க்கையை வெளியே கொட்டியிருக்கும். குல்மோஹர், பெரும் அமைதியுடன் மரணத்தைத் தழுவியது போல எந்த வாதையும் எழுதப்படாத, மழை ஈரம் இன்னும் மிச்சமிருக்கிற அடர்ந்த இலைகளுடன் கிடந்தது.
இவர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். நானும் போனேன் தான். சற்று நின்று போனேன். அப்படி நிற்கையில், அந்த இடத்தைத் தேர்ந்து, அந்த குல்மோஹர் நாற்றைத் தேர்ந்து அங்கே நட்ட, நானறியாத ஒரு ஆதிக் கிழவனை நினைத்துக் கொண்டேன். அவனுடைய சாயல்கள் என்னைப் போல இருக்கும் என்றும் தோன்றியது. நான் உருவகித்திருக்கிற அந்தக் கிழவனின் தலைப்பாகையில், நரைத்த கத்தரித்து ஒழுங்குசெய்யப்படாத மீசையில் நான் இன்னும் உயிர்ப்போடு இருந்திருப்பேன்.
%
மிகப் பெரிய பங்களாவெல்லாம் இல்லை இந்த வீடு. ஒரு நடுத்தர மாதச் சம்பளக்காரன் வங்கிக் கடனின் மாதாந்திரத் தவணைச் சுமைகளையும் சிமெண்டுடன் சேர்த்துக் குழைத்துக் கட்டியதுதான். எங்கள் மகனுடையது. அதிக பட்ச இடத்தைக் கட்டுமானத்திற்கு ஒப்புக்கொடுத்து, ஒரு எட்டுக்கு எட்டடி மண்ணை ஒருபக்கமும், அம்மாச்சி மூக்கமுதலியாரிடம் வாங்கிக் கட்டிக் கொள்கிற நூல் சேலைக் கரை போல ஒடுக்கமாக, வெளிப்பக்கச் சுற்றுச் சுவர்ப் பக்கம் ஒரு இருபதடி மண் நாடாவும் மட்டுமே இந்தச் செடிகளுக்கு. மஞ்சள் கொன்றை, நந்தியாவட்டை, வெள்ளை லில்லி எல்லாம் அந்த முன்பக்கச் சுவரை ஒட்டிதான்.
இன்று அந்த மஞ்சள் கொன்றையை ஒரு தேன்சிட்டு கொண்டாடிக் கொண்டு இருந்தது. ஒரு பறவை அமரும் போது, ஒரு செடியின் கிளை அந்தப் பறவையின் பாரத்திற்குப் பொருத்தமாக அமிழ்வதன் அழகு அந்தக் கொண்டாட்டத்தின் அழகைச் சொல்கிறது. ஆர்க்கிமிடிஸின் இடப்பெயர்ச்சி விதி போல, நம்மில் யாரேனும் ஒரு பறவை அமர்வுக்கான பௌதிக விதியை எழுதலாம். ஆனால், விதிகளுக்கு மெனக்கெடுகிற நேரத்தில் தேன் சிட்டு பறந்து போயிருக்கும்.
எனக்கென்னவோ பறவைகளைப் பறக்கவிட்டுவிடக் கூடாது, மஞ்சள் கொன்றைப் பூவில் இருந்து, விதிகளை வேண்டுமானால் பறக்கவிட்டு விடலாம் என்றுதான் தோன்றுகிறது.
மலையாள சினிமா பார்த்த ஒரு உணர்வு
ReplyDeleteமெலிதாக ஆரம்பித்து, இடையில் ஒரு பெரிய நிகழ்வைச் சொல்லி
இறுதியில் சிந்தனைகலத்ட் தூண்டி
அதே நினைவாக இருக்கச் செய்யும் பதிவு
நல்ல வாசிப்பனுபவத்தைக் கொடுத்ததற்கு கொடுப்பதற்கு
கோடானு கோடி நன்றிகள்
நான் கடன் வாங்கி இரண்டு நாட்கள் க்ளிக்கிக்கொண்டிருந்த நண்பனின் கேமெராவில் ஒரு வீடியோ பதிவு செய்தேன். என்னுடைய வீட்டின் மொட்டைமாடியில் இருக்கும் சதுரமான புகைகூண்டின் மேல் வைக்கப்பட்டிருந்த 'சரஸ்வதி பூஜை' பொரி கடலைகளை நான்கைந்து குருவிகள் தின்றுகொண்டிருப்பதை ஒரு 8 நிமிடம் பதிவு செய்தேன். அமைதியான மதிய நேரம் அது. மூன்று மணி இருக்கும். அப்போது அக்கா தூங்கிக்கொண்டிருந்தாள். அந்த வீடியோவை மறுபடியும் ஓட்டி பார்த்தேன். வெறும் குருவிகளின் சத்தம் மட்டும் தான். ஆறாவது நிமிடத்தில், 'பழைய பேப்பர்' என்று ஒரு தூரத்து குரலை தவிர. பாஷோவின் ஜென் கவிதைகள் உங்கள் குரலில் கேட்கவேண்டும் என்ற எண்ணம் அப்போது தோன்றி மறைந்தது. மாலை, அக்கா கொடுத்த தேநீர் அருந்தும்போது, மடிகணினியில் ஏற்றம் செய்து ஸ்பீக்கர்-ல் போட்டேன். சமையலறையில் இருந்து திடுமென வந்தால் அக்கா. 'என்ன டா இது, திடீர் நு குருவி சத்தம் என்று'. எட்டு நிமிடமும் தேநீர் அருந்திகொண்டே அந்த காட்சிகளை தான் மறுபடி பார்த்துகொண்டிருந்தேன். அப்படி இல்லையென்றால், உங்கள் கவிதை ஒன்றை வாசித்திருப்பேன். எனக்கு இரண்டும் ஒன்று தானே.
ReplyDelete