Sunday 29 March 2020

அடிக் கிளைப் பூ.இப்போது இருக்கும் இந்த வீட்டில் மட்டும் அல்ல, எங்களுடைய பூர்வீக சுடலைமாடன் கோவில் தெரு வீட்டிலும் ஒரு மா மரமோ, தென்னை மரமோ, நெல்லி மரமோ, சப்போட்டா, கொய்யா எதுவுமே  கிடையாது.

நான்கு பங்காளிகளுக்கும் பாகப் பிரிவினை செய்வதற்கு முந்திய காலத்தில் இருந்தே , இந்தக் கதை தான். இத்தனைக்கும் இவ்வளவு சொத்தையும் பாடு பட்டுச் சம்பாதித்த மூத்த சிவசங்கரன் பிள்ளைக்குக் கிட்டத்தட்ட, கருவ நல்லூர் கிராமத்தில் முக்கால் வாசி நிலம் இருந்தது. நஞ்சை, புஞ்சை, ஏகப்பட்ட பனைகள். நான் சின்னப் பையனாக இருக்கும் போது, லாரிகளில் இருந்து மூடை மூடையாக  நெல்லை மச்சுக்கு ஏற்றியிருக்கிறார்கள். குடம் குடமாகப் பதினியும், கூப்பதினியும் வரும். தோசைக்குக் கூப்பதினி விட்டுத் தொட்டுச்  சாப்பிட்ட கடைசிப் பரம்பரை எங்களோடு முடிந்து போயிற்று. வெட்டித் தின்பார் இல்லாமல் குலை குலையாய் நுங்கு கிடக்கும். நுங்குவண்டி தள்ளி விளையாடின காலம் எல்லாம் வெறும் கதை இப்போது. தவண், பனங்
கிழங்கு எல்லாவற்றையும் விளையாட வருகிற பிள்ளைகள்  எல்லோருக்கும்
கூப்பிட்டுக் கூப்பிட்டுக் கொடுத்தது உண்டு.

பனை ஓலை மட்டையோடு வண்டி வண்டியாக வந்து இறங்கும். பச்சை ஓலை, நல்ல அகலமான கருக்கோடு இருக்கிற பச்சை மட்டை. ‘பயிர் வைக்கிறவர்கள்’  யாராவது அதற்கென்று  வந்து ஓலை வேறு மட்டை வேறு தனியாகத் தறித்துப் போடுவார்கள். பச்சை மட்டையில், அப்படிச் சாய்வாக அரிவாள் சவுக்கென்று இறங்கி, முக்கால் வாசி  வெட்டியிருப்பதைப் பிடுங்கி மறுபடி வெட்டிப் போடுவார்கள். சில சமயம் சின்ன ஓலை என்றால், இடது கையில் தூக்கிப் பிடித்து, ஒரே போடாகப் போட்டால், ஓலை ஒரு பக்கம் மட்டை ஒருபக்கம் துண்டாக விழும்.

மிளகாயப் பழத்தை எல்லாம் தட்டோட்டியில் பரத்திக் காயப் போடுவோம். அதற்குக் காவல் இருக்கும் போதுதான் ஏழெட்டு வீடுகளுக்கு அந்தப் புறம் இருந்த சாவடிப் பிள்ளை வீட்டுப் புறாக்கள் எங்கள் வீட்டில் வந்து இறங்குவதைப் பார்த்தேன். அதன் பின் என் மேல் அமர்ந்த சாம்பல் புறாக்கள் என்னைவிட்டு அகலவே இல்லை.

மிளகு செடி மாரும், பருத்தி மாரும், எள்ளு மாரும் அந்தந்தப் பருவத்தில் தோட்டத்தில் அடைந்துவைத்திருப்பார்கள். அதிலிருந்து சூவைப் பாம்பு வெளியே வந்திருக்கிறது. எங்களுடையது தோட்டத்தை ஒட்டிய வீடு. எங்கள் வீட்டுப் பட்டாசல்  விளக்கு மாடத்தில் கன்னங்கரேர் என்று ஒரு பாம்பு சுருண்டு படுத்துக் கிடந்தது  உண்டு. அது அப்படி வந்ததாகத் தான் இருக்கும். எள் விளைச்சல் நன்றாக இருந்தால், மாடசாமியோடு எண்ணெய் ஆட்டச் செக்கடிக்குப் போயிருக்கிறேன். எண்ணெய் ஆட்டி முடிக்கிற சமயத்தில் செக்கில் சதசத என்று அப்பியிருக்கிற ஈரப் பிண்ணாக்கின் ருசி, அதை  ஒரு துண்டுக் கருப்பட்டியோடு சாப்பிட்டுப் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். செக்குச் சுத்தும் போது, ஞீ.. ஞீஈ.. என்று செக்குப் பாடின பாட்டு இன்னும் மறக்கவே இல்லை

நெல், கேப்பை, காணம், எள், பருத்தி, பிரண்டை என்று எல்லா அருமையும் தெரிந்த , விவசாயத்தை அப்படிப் பார்த்த பெரியதாத்தாவுக்குத் தன்னுடைய அவ்வளவு பெரிய வீட்டில் ஏன் இரண்டு தென்னையையோ, மா மரத்தையோ, அல்லது வீட்டு உபயோகத்திற்கு இன்றைக்கு இல்லாவிட்டாலும் நாளைக்குக் காய்க்கும் ஒரு ‘பயன் மர’த்தையோ வைத்து வளர்க்க வேண்டும் என்று தோன்றவில்லை? அது இன்னும் ஒரு அதிசயமான கேள்விதான் எனக்கு.

தோட்டத்தில் ஒரேஒரு மிகப் பெரிய வேப்ப மரம் இருந்தது. இந்த உலகத்தில் உள்ள அத்தனை பறவைகளும் வந்து அடைந்த மரம் அது. நான் இன்று  ஒரு கிறுக்கனைப் போல் உதிர் இறகு  பொறுக்கித் திரியும் பழக்கத்தின் வேரை அந்த வேப்ப மரமே விட்டிருந்தது. எவ்வளவு அழகழகான, புள்ளிகள் இட்ட, பெரிய பெரிய இறகுகளை எல்லாம் அந்த வேப்ப மரத்தடியிலும் அதன் கீழிருந்த வைக்கோல் போரிலிருந்தும் நான் சேகரித்திருக்கிறேன். அடர் பச்சை நிறத்தில் முட்டைகள் இருக்க முடியும் என்பதை ஏழு எட்டு வயதில் ஒரு பறவைக் கூட்டிலிருந்து அறியத் தந்த கிளையை அந்த வேப்ப மரமே வைத்திருந்தது.

அந்த வைக்கோல் படப்பு, வேப்ப மரம், இன்னொரு வாதமுடக்கி மரம் மூன்றும் இல்லாவிட்டால் நான் இத்தனை சரியான மனிதனாக வளர்ந்திருக்கவே வாய்ப்பில்லை. இதை ஒரு சத்தியப் பிரமாணமாகவே நான் எழுதிவைக்கலாம்.

வீட்டில் இருக்கிறவர்கள் உபயோகிக்கும் படி இரண்டே இரண்டு முருங்கை மரங்கள் மட்டும் இருந்தன.  ஒன்று இந்த வைக்கோல் படப்புக்குப் பின்னால், கக்கூஸிற்குப் போகிற வழிக்கு முன்னால். இன்னொன்று புறவாசலில் இருந்த பெரிய உரக் குழிக்குப் பக்கத்தில். அந்த முருங்கைப் பூக்களும் கருவண்டுகளும் அணில் கொறிப்புகளும் இன்னொரு தனிக் கண்காட்சி வைப்பதற்குரிய சித்திரங்கள்.

எதைச் சொல்லவோ வந்து, எதை எதையோ சம்பந்தத்தோடும் சம்பந்தம் இல்லாமலும்  சொல்லிக்கொண்டு இருந்திருக்கிறேன். இந்த வரியைக் கூடப் பழக்கத்தில் எழுதிவிட்டேனே தவிர, இந்த வாழ்வில் சம்பந்தம் இல்லாதது என அப்படி ஒன்று உண்டா என்ன? எல்லாவற்றோடும், எல்லோரோடும் ஒரு சம்பந்தத்தை இந்த வாழ்வு உண்டாக்கித்தான் வைக்கிறது. வாழ்வின் காரியமே நோக்கமே கூட அதுதான்.

எனக்கும் அந்த மயிலாடுதுறை மருதசாமிக்கும் என்ன சம்பந்தம்? ஆனால் சம்பந்தம் உடையவராகவே நாங்கள் இருந்திருக்கிறோம். இப்போது அல்ல, மீரா அன்னம் பதிப்பகத்தின் நவகவிதை வரிசையில் என்னுடைய ‘புலரி’ தொகுப்பை வெளியிட்ட காலத்தில் இருந்தே அது தொடங்கியிருக்கிறது. அதன் இரண்டாவது பதிப்பை வெளியிடலாம் என, சந்தியா பதிப்பகம் நடராஜன் சார் தேட, என்னிடம் இல்லாத ‘புலரி’ முதல் பதிப்பின் பிரதியை ,மயிலாடுதுறை மருதசாமி அனுப்பிவைக்கிறார். 1981-82ல் பார்த்திருக்க வேண்டிய நபரை, 2019 வரை காத்திருந்து பார்க்கவைக்கிறது வாழ்வு. ஆ.சிவசுப்ரமணியம் ஐயாவுக்கும் எனக்கும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் அளிக்கிற நாளில் மருதசாமியின் கனிந்த சிரிப்பையும் உறுதியான கைகளையும் நான் முதன் முதலாக அறிகிறேன்.

அந்த தினத்தில் இருந்து நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். சந்தியா நடராஜன், அக்கலூர் ரவி, மருத சாமி எல்லோரும் மயிலாடுதுறைக் காரர்கள். என்னை எப்படியோ நடுவில் வைத்துக்கொண்டார்கள். ஒருவர் மாற்றி ஒருவர் பேச்சில் வந்துவிடுகிறோம். இதில் மருதசாமி தினம் தோறும்  ‘காலை வணக்கம்’ சொல்கிற செய்திகளை, படங்களைப் பகிர்ந்துகொள்கிறவரானார். நான் என் அதிகாலை உற்சாகங்களுக்கு உகந்த படி, அவர் அனுப்பிய காலை வணக்கப் படங்கள் சார்ந்து அவ்வப் போது மரபில் கவிதைகள் எழுதி அனுப்பி வருகிறதாகிவிட்டது.  நண்பர் மருதசாமிக்கு நான் வண்ணதாசன் இல்லை. கல்யாண்ஜி இல்லை. ‘கவிஞர் ஐயா’.   

மருதசாமிதான் பத்து தினங்களுக்கு முன் அந்த -- மேலே பதிவிட்டிருக்கும் - பூத்திருக்கும் மாமரத்தின் படத்தை அனுப்பியிருந்தார். அது அவருடைய மயிலாடு துறை வீட்டில் இருக்கிற மா மரம். பார்த்தால் ரொம்ப வருடங்களாக நின்று பூத்துக் காய்த்தபடி நிற்கிற ஒன்றுதான்.புதிதாக ஒரு வீட்டுக்குப் போகும் சமயம், நம் வருகையை எதிர்பாராமல் உட்கார்ந்திருக்கும் அந்த வீட்டு மூத்த மனுஷியைச் சந்திப்பது போல அது இருக்கிறது.

இந்த முறைதான் அது ‘மேல் கிளைகளில்’ இவ்வளவு பூத்திருக்கிறதாம். இதற்கு முன் அந்த மரம் அதன் மேல் கிளைகளில் இப்படிப் பூத்ததே இல்லையாம். மருதசாமி அதை அப்படியே படம் எடுத்து, ‘கவிஞர் ஐயா, எங்கள் வீட்டு மாமரம் அப்படிப் பூத்திருக்கிறது. இதுவரைக்கும் இப்படி அது மேல் கிளைகளில் இவ்வளவு பூத்ததே இல்லை. சந்தோஷமாக இருக்கிறேன்’ என்று வாட்ஸாப் செய்தியாக அனுப்பிவைத்திருந்தார்.

என்னிடம்  இது வரைக்கும் அப்படி யாரும்,  ‘எங்களுடைய வீட்டுச் செடி பூத்திருக்கிறது, எங்களுடைய வீட்டு மரம் காய்த்திருக்கிறது, எங்கள் வீட்டுப் பசு ஈன்றிருக்கிறது’ என்று வாய் வார்த்தையாகக் கூடச் சொன்னதில்லை. இதை மருதசாமி மட்டுமே சொன்னார். அது ஒரு விவசாயியின் மனமாக இருக்கலாம். ஒரு தஞ்சாவூர்க் காரனின் மனமாக இருக்கலாம்.

எனக்கு அதை எல்லாம் விட இப்படித் தோன்றுகிறது. அது அப்பழுக்கில்லாத,  தன்  வாழ்வைத் தானே கண்டடைந்து  கொண்டாடும்  ஒரு மனுஷனின் மனம்.
நிச்சயம் அந்த  மாங்கன்று  மருதசாமியால் தான் நடப்பட்டிருக்கவேண்டும். அதற்கு அவர்தான் தண்ணீர் ஊற்றி வளர்த்திருக்க வேண்டும்.  அவருடைய மகளையோ மகனையோ, ஒரு செம்புத் தண்ணீரைக் கோதிக் கொடுத்து அந்தச் செடியின் மூட்டில் ஊற்றச் சொல்லியிருக்க வேண்டும்.ஒரு அணிலும் அவரும் சேர்ந்துதான் அதன் அடிக்கிளையில் காய்த்த மாம்பழத்தை முதலில் கடித்திருக்க வேண்டும்.

நல்லது மருதசாமி.  உங்கள்வீட்டு மா மரம் இந்த வருஷம்  மேல்கிளையில்
பூத்திருக்கிறது.  நீங்கள் எப்போதும் எல்லா வருஷமும் உங்கள் அடிக்கிளையில் பூத்துக்கொண்டே இருக்கிறீர்கள். இந்தப் படத்தை நீங்கள் உங்கள் கை பேசியில் எடுத்த போது, உங்களையும் நீங்கள் ஒரு ‘செல்ஃபி’ எடுத்திருக்கவேண்டும்.

நீங்களும் அந்த மா மரம் போல்தான் இருந்திருப்பீர்கள். ஒரு வித்தியாசமும் இருந்திருக்காது.

Thursday 12 March 2020

அக்காக் குருவி.ஒரு கட்டத்தில் நம்முடைய காதுகள் அன்றாடங்களில் இருந்து விலகிய ஒரு குரலுக்கு, ஒரு ஒலிக்குக் காத்திருக்கின்றன. மற்றெல்லா இரைச்சலுக்கான வாசல்களையெல்லாம் அடைத்துவிட்டு, ஏதோ ஒரு அது விரும்பும், அது தவிக்கும் ஒரு ஒலி இழைக்கு, ஒலியின் கீற்றுக்கு மட்டும் காதுகள் தன்னைத் திறந்து வைத்திருகின்றன. குருத்தெலும்புகளால் ஒரு மடல் போல் புறத்தே மடிந்து விரிந்திருக்கும் அவையூடே ஒரு காத்திருப்பின் வெயில் ஊடுருவிச் சிவந்து அப்பால் போவதைப் பார்க்க முடியும். வனத்தில் எங்கோ வரும் பெரு மிருகத்தின் காலடி அதிர்வை மண்ணில் உணரும் புழுப்போல், எங்கோ சருகடியில் ஊரும் ஒரு புழுவின் அசைவை நுண்ணுணரும் ஒரு பெரு மிருகமாகக் காதுகள் காத்திருக்கின்றன.

கோபாலுடைய  காதுகள், என்னுடைய காதுகள் எல்லாம், பிப்ரவரி முடிந்து மார்ச் ஆரம்பிக்கும் போதே ‘அக்காக் குருவி’யின் குரலுக்கு ஏங்க ஆரம்பித்து விடும். முதல் அக்காக் குருவியின் குரலைக் கேட்பதற்காக, அவனும் நானும் எங்கள் வாழ்வின் அனைத்து ஓசைகளையும் அதன் சிதறிக்கிடத்தலில் இருந்து  ‘ ஒதுங்க வைக்க’ ஆரம்பித்துவிடுகிறோம்.

இன்றைக்கு ஒரு யூ ட்யூபைப் பார்க்கிறேன். எல். சுப்ரமணியன் என்ற பெயரைப் பார்த்தாலே கேட்க ஆரம்பித்துவிடும் கிறுக்கு இருக்கும் எனக்கு, அவரும் அவருடைய மகன் அம்பி சுப்ரமணியனும் பஹுதாரி ராகத்தில் வாசிக்கும் ப்ரோவ  பாரமா  ஓடுவதைத் தாண்டமுடியவில்லை. இத்தனைக்கும் எனக்கு பஹுதாரி ராகம், ப்ரோவ பாரமா இரண்டின்  திசையே  தெரியாது. அவற்றுக்கும் அப்பால் அந்த இருவரின்  வயலின்  வில் மற்றும் நரம்புகளில் இருந்து பெருகும் ஏதோ, வழியும் ஏதோ ஒன்று என்னைத் தொடுகிறது. நான் அதைத் தொட முயல்கிறேன். தழுவிக்கொள்ள முடியாதைத் தொட விரும்பும் தொடல் அது.

அக்காக் குருவிக் குரலிலும் அப்படி ஒரு மாயம் இருக்கிறது. எவ்வி எவ்வி, எக்கி எக்கி உயர்த்தும் அந்தக் குரலில் இருக்கிற ஒரு தாபம்,  ஒரு ஏக்கம் எனக்கு கோபாலுக்கு எல்லாம் வேண்டியது இருக்கிறது. அக்காக் குருவியின் முதல் கூவல் கேட்டவுடன் எங்கள் வேனில் துவங்கிவிடுகிறது. எங்கள் வசந்தம் வந்து விடுகிறது. எங்கள் தெரு வேப்பம் பூக்கள் பூத்துவிடுகின்றன.

இன்று அதிகாலை எங்கள் வீட்டுச் சன்னல் கம்பிகள் வழியாக அந்த வேனில் வந்தது. இந்த வெள்ளிக்கிழமையின் முதல் குரலை  அந்த அக்காக் குருவி தந்தது. சென்ற கோடையின் அதனுடைய கடைசிக் கூவலில் இருந்து அதன் நீட்சியாகத் துவங்கி  இந்தக் கூவலில் அது சிதம்பரம் நகர் தெருவுக்கு ஒரு புதிய கோடையை விநியோகிக்கத்தொடங்கியிருந்தது.

அந்த அக்காக் குருவித் தொன்மக் கதையில் அக்காக்காரியை  வெள்ளத்தோடு அடித்துக்கொண்டு போன ஆறு எனக்குள் ஓடத் துவங்கியிருந்தது. ‘அக்கோவ், அக்கோவ்’ என்ற இந்தச் சத்தம் என்னை ஒரு தங்கச்சியாக ஜோஸ் சார் வீட்டு மாமரக் கிளையில் உட்கார்த்திவைக்கிறது. இன்னொரு வகையில் சுழியும் கசமுமாக நுரைத்தோடும் இந்த வாழ்வில் அடித்துச் செல்லப்படும் அக்காக் குருவியாக என்னைப் பதறச் செய்கிறது.

நான் அடித்துச் செல்லப்படுகிறேன். ’அக்கோவ், அக்கோவ்’ என்கிற குரலைப் பார்த்தால் கோபாலுடையது போலவே இருக்கிறது.

அப்படித்தானே அந்தக் குரல் இருக்கவும் முடியும்.


Tuesday 3 March 2020

ஒரே ஒரு சிறிய மஞ்சள் வண்ணத்துப் பூச்சி.

மணி இப்போது என்ன?
11.06. இதற்கு  உத்தேசமாக ஒரு அரை மணி நேரம் பிந்தி, நேற்று  ‘மேலும்’ சிவசு சார் வீட்டிற்கு வந்திருந்தார்.  ’மேலும்’ சிவசு சார் தான்  முதன் முதலாக வண்ணநிலவனின் ‘பாம்பும் பிடாரனும்’ தொகுப்பை வெளியிட்டவர், சுரேஷ் குமார இந்திரஜித்தின் ‘ அலையும் சிறகுகள்; தொகுப்பை வெளிட்டவர் என்று சொன்னால் நிறையப் பேருக்குத் தெரியும். அல்லது  இப்போதாவது தெரிந்து கொள்ள வேண்டும்.

இது வல்லிக்கண்ணன் நூற்றாண்டு இல்லையா. அதைச் சார்ந்து என்னிடம் வல்லிக்கண்ணன் எழுதிய,ஆனால் இன்னும் தொகுக்கப் படாத கதைகள் அல்லது அதைப்பற்றிய தகவல்கள் கிடைத்தால் நல்லது என்று சார் நினைத்திருக்கிறார். அப்பாவின் அலமாரியில் அடுக்கடுக்காக இருந்த கிராம ஊழியன்’ இதழ்கள், அப்பாவுக்கு அவர் எழுதிய கடிதங்கள்  எல்லாம் ‘தவறிப் போன’ வருத்தத்தைச் சொல்லிக் கொண்டது தவிர, என்னால் உருப்படியாக எதையும் அவருக்குத் தர இயலவில்லை.

வந்த காரியம் இதுதான் என்று பேசி முடித்த பின் , அதற்குப் பிறகு பேச்சு வேறு எங்கெங்கு எல்லாமோ போகும் அல்லவா?  அவர் சமீபத்திய மேலும் மாதந்திரக் கூட்டத்தில்  வெளியிட்டிருக்கும் ‘பித்தனில் வாசித்த பத்து’ தொகுப்பில் இருந்து சிவசு சார் முதலில் புதுமைப்பித்தனின் பேசப்படாத கதைகளுக்குள் போனார். அதே இழையில்  வண்ணநிலவனின்  கவனிக்கப்படாத நல்ல கதைகள் என்று அவர் நினைக்கிற ‘வெளிச்சம்’, ‘ஆதி ஆகமம்’ கதைகளின் மேல் ஒரு வண்ணத்துப் பூச்சியைப் போலப் பறந்துகொண்டு இருந்தார்.

இந்த வண்ணத்துப் பூச்சி உதாரணம் அவருக்குள்ளும் தோன்றியிருக்குமோ என்னவோ , முற்றிலும் வேறு இடத்திற்கு நகர்ந்து அவர் ‘ இந்த  வண்ணாத்திப் பூச்சி எல்லாம் பூ மேலதான் பறக்குமா? புல்லிலே எல்லாம் உக்காந்திருக்குமா?’ என்றார். இதைக் கேட்குப் போது சிவசு சாரின் முகம் ஒரு சிறுமியுடையதாகி இருந்தது. உடனே நானும் இன்னொரு சிறுமியாகும் மாயம் நிகழ்ந்தது.

நான் என்னுடைய வண்ணாத்திப் பூச்சிகளின் உலகத்திற்குள் போயிருந்தேன். ஒரு சிமிட்டலுக்குள் அறுபது வருடங்கள் பின்னால் போய் நான் தண்டவாளங்களின் அருகில் இருந்த எருக்கலஞ்செடி இலைகளின் கீழ் ஒரு கூட்டுப் புழுவாகத் தொங்கிக் கொண்டு இருந்தேன். என் எல்.ஜி பெருங்காய டப்பாவில் லார்வாக்கள்  அசுர வேகத்தில் சாப்பிட்டு, அசுர வேகத்தில் புழுக்கைகள் இட்டுக்கொண்டு இருந்தன. எனக்கு ஒரு வண்ணத்துப் பூச்சியின் கழிவு வாடையையும் முயல் குட்டிகளின் கழிவு வாடையையும் இன்றைக்கும் மிகச் சரியாக உணரவும் சொல்லவும்  முடியும். என் உலகத்தின் ஒரு தகர டப்பாவிலும், ஒரு காரை வீட்டுச் சுவர் ஓரத்திலும் இன்னும் அந்த வாடை வளைந்தும் குதித்தும் போகின்றன.

நான்  சிவசு சாரை அதிசயிக்க வைக்கும் ஒரு ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் மேஜிக் ஷோ நடத்துகிறவன் ஆகியிருந்தேன். நான் மழைக்காலம் முடிந்தவுடன் தரையோரச் செடிகளில் பூக்கும் சின்னஞ் சிறு மஞ்சட் பூக்களைப் பற்றிச் சொல்லும் போது, எங்கள் வீட்டு முன் அறையில் கோடிக்கணக்கில் மஞ்சட் குறும் பூக்கள் பூத்திருந்தன.  சிவசு சார் அவரைச் சுற்றி வளைத்து  விட்ட மஞ்சட் பூக்களுக்குள்,  வாய்க்கால் தண்ணீரை இரண்டு கைகளாலும் அரைவட்டமாக விலக்கிவிட்டு முங்கு போடுவது போல, இருந்தார்.

என்னை அறியாமல் நான் அடுத்து மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகளைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தேன். ‘சார் எல்லாம் சித்துப் போல இருக்கும். பெருசா இருக்காது. மிஞ்சி மிஞ்சிப் போனா பழுத்த முருங்கை இலையை விடக் கொஞ்சம் சைஸ் கூடுதல். கோடு, புள்ளி டிஸைன்  ஒண்ணுங் கிடையாது. கரைச்ச மஞ்சப் பொடியில ரெண்டு சொட்டு விட்டா எப்படி இருக்குமோ , அப்படி இருக்கும்’. வரவர என் பேச்சில் இப்போது அபிநயமும் கூடியிருந்தது. இரண்டு சொட்டுக்களை அந்தரத்தில் விடுவது போலவும், அது அப்படியே பறந்து போவது போலவும் சிவசு சார் முகத்துக்கு நேராக வலது கையால் அலையடித்தேன்.

சிவசு சார்  சொல்ல ஆரம்பித்தார்  , ‘ரெண்டு நாளைக்கு முந்தி எங்க வீட்டு வாசலில் சேரைப் போட்டு உக்காந்திருந்தேன். நீங்க சொல்லுத அதே மஞ்சள் வண்ணாத்திப் பூச்சி,  வேற புள்ளி கோடு எதுவும் கிடையாது.  முன் வாசல்ல வளர்ந்து கிடக்கிற புல்லு நுனியில் தொங்குத தண்ணியக் குடிக்கப் போகிறது போல, அப்படியே ஆடாம அசங்காம உக்காந்திருந்துது. நான் பார்த்துக்கிட்டே இருந்தேன். ரொம்ப நேரம் இருக்கும். எவ்வளவு நேரம்ணு சொல்லக் கூட முடியாது. அதுவும் அப்படியே  ஒட்டவச்சது மாதிரி அங்கியே இருந்தது’ . நான் யோசித்தேன்,  வண்ணத்துப் பூச்சி நாற்காலியிலும் சிவசு சார் புல் மேலும் இருந்தால் எப்படி இருக்கும்

‘நான் தட்டான் புல்லுல, தும்பைச் செடியில உக்காந்து பார்த்திருக்கேன். வண்ணாத்திப் பூச்சி    அப்படி  உக்காந்து இதுவரைக்கும் பார்த்ததில்ல சார்’

சார் காதில் நான் சொன்னது விழவே இல்லை. அவருடைய பெரிய மீசைக்கு ஊடாக ஒரு மதுரமான புன்னகை கீற்றிட இன்னும் அந்த மஞ்சள் வண்ணத்துப் பூச்சியோடே இருந்திருக்க வேண்டும். இதிலிருந்து இரண்டு கண்ணிகள் தாண்டி இன்னொரு கண்ணிக்குப் போனார்.  இன்று அப்படித் தாவிச் செல்வது அவரது சிந்தனை வகையாக இருந்தது.

‘அடுத்த கூட்டத்தில, சுரேஷ் குமாரோட ‘கடலும் வண்ணத்துப் பூச்சிகளும் பத்திப் பேசப் போறோம்’ என்று அவரைத் தவிர இன்னொருவர் பெயரைச் சொன்னார்.

‘அய்யோ. எனக்கும் சுரேஷ் குமார் கதை எல்லாம் பிடிக்கும் சார். அவருக்கு எங் கதை எல்லாம் பிடிக்காது. அதனால் என்ன? நான் அவர் கதையைப் படிச்சிட்டு உடனுக்குடனே அவர்கிட்டே சொல்லீருவேன். கடலும் வண்ணத்துப் பூச்சிகளும் புஸ்தகத்தைக் கூட சுரேஷ்தான் கையெழுத்துப் போட்டு எனக்கு அனுப்பியிருந்தாரு. எனக்குப் பிடிச்சிருந்தது. இன்னும் கொஞ்சம் பெருசா எழுதியிருக்கலாம். அவருக்கு இப்படி எழுதினாத்தான் சரியா இருக்கும்னு தோணியிருக்கும் போல’ என்றேன்.

நோபல் பரிசு உரையில் ஆரம்பித்து ஐந்து குறுநாவல் பகுதிகளாக விரிந்து செல்லும் அதன் வடிவம் பற்றி சிவசு சார் சொல்ல ஆரம்பித்தார். இதற்கு முந்தி நாங்கள் பேசிக்கொண்டு இருந்த மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகள், அவை புல்லில் உட்காருமா என்று சிவசு சார் கேட்டது எல்லாம் என மனதுக்குள் ஓடிக்கொண்டு இருந்தது..

நான்  எனக்குள் நிறைய வைத்திருப்பவற்றுள் இருந்து ஒரே ஒரு துணுக்கை எடுத்து வீசுவது போல, ‘நான் புல்லுல உட்காருத வண்ணாத்திப் பூச்சியும் பார்த்ததில்லை. இதுவரைக்கும் கடற்கரையிலும் ஒரு வண்ணத்துப் பூச்சியையும் பார்த்ததில்ல’ என்று சொன்னேன். ‘பார்த்ததை எழுதுகிறதுல என்ன இருக்கு? பார்க்காததை எழுதுகிறது , அல்லது பார்க்காதையும் பார்த்த மாதிரி எழுதுகிறதும் நல்லாத் தானே இருக்கு’ மேலும் சொன்னேன். எனக்கு எதிரே சிவசு சார் முகத்திற்குப் பதிலாக சுரேஷ் குமார இந்திரஜித் முகம் சிரித்துக்கொண்டு இருந்தது.

இதை எழுதும் போது மீண்டும் மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகளை நினைத்துக் கொள்கிறேன்.’ நூற்றாண்டுத் தனிமை’  கதையில், சவப்பெட்டி செய்வதற்கு அளவு எடுக்கிற அந்தத் தச்சாசாரி ஜன்னல் வழியாக , ஒரு வினோத மழை போல உதிர்கிற மஞ்சள்பூக்களைப் பார்க்கிறார். மறு நாள் காலை தெருவெல்லாம் மஞ்சள் பூ மெத்தை இட்டது போல் கிடக்கிறது. இறுதி ஊர்வலம் போவதற்கு முன் , பனிக்கட்டியை அப்புறப் படுத்துவது போல் பெரிய பெரிய வாரிக் கரண்டிகளால்  அதை அள்ளிப் போட வேண்டியது ஆகிறது.

உண்மையோ , ஒரு கலைஞனுக்கு மகத்துவம் சேர்ப்பதற்கான கற்பனையோ. நூற்றாண்டுத் தனிமையை எழுதிய  மார்க்வெஸின் சாம்பல் புதைக்கப் பட்ட போது அவர் வளர்ந்த கொலம்பிய கிராமத்தின் மரங்களில் நூற்றுக் கணக்கான பெரிய பெரிய மஞ்சள் பட்டாம் பூச்சிகள் மொய்த்துக்கொண்டு இருந்ததாம்.

இந்த 19 சிதம்பரம் நகர் வீட்டில் நாங்கள் வைத்து வளர்த்த ஒரு வேப்ப மரம், ஒரு பெருங்கொன்றை மரம், ஒரு புங்கை மரம், இன்னும் தயக்கமாகவே பூத்துக்கொண்டு இருக்கும் ஒரு மர மல்லிகை மரம் இவ்வளவுதான் உண்டு. இந்த மரங்களின் ஏதோ ஒரு கிளையில், பெரிய பெரிய மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகள் அல்ல, நூற்றுக் கணக்கில் அல்ல, ஒரே ஒரு சின்னஞ் சிறிய, பழுத்த முருங்கையிலையை விடச் சற்றே பெரிதாக இருக்கிற ,மஞ்சள் நிற  வண்ணத்துப் பூச்சி  உட்கார்ந்தால் போதும்.

என்னுடைய நாளுக்கு அது சரியாக இருக்கும்.

%