நம்மில் பெரும்பாலோர் பேருந்துகளில் பயணம் செய்கிறவர்கள் தானே.
புழுதியற்ற ஊரும் புழுதிகள் படியாத பேருந்து முதுகுக் கண்ணாடியும் இருக்கிறதா என்ன? ஐ வகை நிலத்துக்கும் ஐ வகைப் புழுதியிருக்கும் இல்லையா? இந்த வண்டி எந்த ஊரிலிருந்து வருகிறது என்பதை அந்தப் புழுதியைப் பார்த்தே சொல்லி விடக் கூடிய வயசாளிகள் எல்லாம் முன்பு நம் கிராமப் புறங்களில் இருக்கத்தானே செய்திருப்பார்கள். ‘ சாப்பிட்டு நாலு நாளு இருக்கும் போலயே’ என்று முகத்தைப் பார்த்தவுடன் சொல்லத் தெரிகிறவர்களுக்கு புழுதியின் திசையைச் சொல்வது மிகவும் எளிதான ஒன்றாகத்தான் இருந்திருக்கும்.
நாம் தான் புழுதியையும் பார்ப்பதில்லை. லேசில் முகங்களையும் அப்படியெல்லாம் பார்த்துவிடுவது இல்லையே. சுவரொட்டியைப் பார்க்கக் கூட நேரமில்லாதவர்கள், குவியல் குவியலாக உதிர்ந்து கிடக்கும் பன்னீர்ப் பூக்களைப் பார்க்க மனம் இல்லாதவர்கள், பேருந்து முதுகுப் புழுதியை மட்டுமா பார்த்துவிடப் போகிறார்கள் பார்க்காதவர்க்கு இடையே ஒன்றிரண்டு பார்க்கிறவர்களும் இருப்பார்கள் இல்லையா. அந்தச் சிறுபான்மையினரின் பார்வையையும் ரசனையையும் ஒரு குறிப்பிட்ட பெரும்பான்மையினரிடம் கொண்டுசேர்க்கத் தானே, ஒவ்வொரு கலையின் சிறு அசைவும், தன்னைப் போல முயல்கிறது.
இந்த புழுதி படிந்த பேருந்தை நான் பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு முன்பு மதுரை பிச்சைப் பிள்ளை சாவடியில் நாங்கள் இருந்த காலத்தில் பார்த்தேன். அதனுடைய முதுகுப் புழுதியில் யாரோ கட்டப் போகிற ஒரு வீட்டின் வரை படம் இருந்தது. எந்தச் சுட்டுவிரலோ நடு விரலோ தன் உத்தேச வீட்டை யாருக்கோ வரைந்து காட்டியிருந்தது. முக்கியமாக முகம் தெரியாத எனக்கு.
சுகுமாரன் குங்குமத்தில் பணியாற்றிய நேரம் என நினைக்கிறேன். கவிதை அனுப்பச் சொல்லிக் கேட்டிருந்தார். நான் இந்தக் கவிதையைத்தான் எழுதி அவருக்கு அனுப்பிவைத்தேன்.
%
நீண்ட தூர பஸ்களின்
பின் முதுகுகள் எனக்கு முக்கியம்.
வெப்ப தினங்களில்,
சக்கரங்கள் கீழிருந்து கிளம்பிய
புழுதியின் பெரும்பான்மை
அங்குதான் படிகிறது.
பிரயாணிகளுக்கு தூக்குக் கம்பியில்
பானம் விற்கிற பையன்கள்,
அல்லது அடுத்த பஸ்ஸில் வந்து
இந்த பஸ்ஸின் முகங்களைப்
பார்க்கிற இளைஞர்கள்
சுட்டுவிரலால் இட்ட கையெழுத்துகள்
எழுதும் பெயர்கள்
பின் முதுகில்தான் சாத்தியம்.
இவற்றை விட, பார்த்தேன்
யாரோ கட்டுகிற வீட்டுக்கு
வரைபடம் போல் ஒன்றையும்.
கட்டி முடிந்துவிட்டதா அவருடைய வீடு?
தெரியவில்லை.
தூசியில் குளித்த
இன்னொரு நீண்ட தூர பஸ்
திருப்பத்தில் இருந்து பதிலுடன்
வெளிப்படக் காத்திருக்கிறேன்,
புழுதியின் மேல்
முழு நம்பிக்கை வைத்து.
%
your taste is different! nice
ReplyDeleteஎன்ன ஒரு அற்புதமான கவிதை, பார்வை சார்.
ReplyDeleteஒரு பகல் நேரப் பேருந்தில்
சென்னையில் கிளம்பி இரவு மார்த்தாண்டம் வரைப் பயணிக்கும்
எவரும், அந்தப் பயணத்தில் படிக்கும் பாடம்
நெஞ்சை விட்டு என்றும் அகலாது
அது ஏனோ இதை படிக்கும்போதும் உங்களுடைய 'சில பழைய பாடல்கள்' சிறுகதை ஞாபகத்திற்கு வருகிறது. இளங்காத்து வருடும் அந்த பேருந்து பயணமும், பட்டம்பூச்சியும். மேல்நிலைகல்வி கடலூரில் பெரியம்மா வீட்டில் தங்கி படித்த நாட்களில், வாரஇறுதி வந்தால் பேருந்து பயணத்தில் என்னுடைய சொந்த ஊரான கள்ளக்குறிச்சிக்கு செல்வேன். பாலூர் கிராமம், பண்ருட்டி வழியாக செல்லும் இரண்டு மணி நேர பயணம் தான். திங்கற்கிழமை அதிகாலையிலேயே கிளம்பி கடலூர் பேருந்தில் உட்கார்ந்து வரும்போது நான் கேட்ட 'அடி பூங்குயிலே பூங்குயிலே' போன்ற இளையராஜா பாடல்களும், கீரை கூடையை இறக்கி வைத்து விட்டு இரண்டு ரூபாயை கதைகளை முடிந்து வைத்திருக்கும் சுருக்குப்பய்யில் தேடிக்கொண்டிருக்கும் வயதான பாட்டியும், அற்புதமாக சிரித்துக்கொண்டு அனாயசமாக பூக்கட்டிக்கொண்டிருக்கும் நடுவயது அக்காக்களும், 'யாருப்பா அது ஊதுபத்தி கொளுத்துற நேரத்துல போய் பீடிய அடிச்சுட்டு வர்றது' என்று கண்டக்டர் சொன்ன நொடியில், ஒரு பீடி காற்றின் வசம் கைமாறும் தருணங்களும், என் நினைவின் பொதியில் அடங்கியுள்ளது.
ReplyDeleteஅற்புதமான கவிதை, அங்கிள். :)