Monday 15 July 2013

தண்ணீருக்கு மேல், தண்ணீருக்குக் கீழ்.




.


லட்சுமணன் வீட்டின் முன்னால் பைக்கை நிறுத்த முடியவில்லை.
கரையடி மாடசாமி என்று எழுதிய ஒரு ஆட்டோ.  அதைத் தவிர ஏற்கனவே ஒரு அயர்ன் வண்டி ரொம்ப காலமாக அதே இடத்தில் நிற்கிறது. காற்று இறங்கிப்போன அதன் ஒரு சக்கரத்திற்கும் இன்னொரு சக்கரத்திற்கும் சைக்கிள் சங்கிலி போட்டுக் கட்டியிருந்தது. ஒரு டைகர் பூட்டு வேறு. உபயோகித்து வெகுநாட்கள் ஆகிவிட்டதற்கு அடையாளமாக, பக்கத்து வீட்டு ஜன்னல் வழியாக வீசப்பட்ட வெங்காயத் தொலி சருகுகள் அதில் விழுந்து கிடந்தன. வலது மூலையில் கங்கு போடுவதற்கு வைத்திருந்த கரித்துண்டுகள். மிகவும் நைந்துபோன ஒரு பச்சைக்கட்டம் போட்ட துண்டு ஒன்றின் சுருணைக்குள் இருந்து எட்டிப்பார்க்கும் பல்லித் தலை.
எனக்கு அந்தப் பச்சைக்கட்டம் போட்ட துண்டைத் தலைப்பாகையாகக் கட்டிக் கொண்டு துணிகளை இஸ்திரி போட்டுக்கொண்டிருக்கிறவரின் முகம் ஞாபகம் வந்தது. துணி தேய்க்கும் போது உண்டாகிற ஒரு சூடான நெருடல் வாடையை அந்த இடம் இப்போதும் தன்னிடம் வைத்திருந்தது.
செய்தித்தாளில் சணல்போட்டுக்கட்டி, ஒரு சுண்டு சுண்டி இழுத்து, அத்துக்கொடுத்த உருப்படிகளை கைகளில் வாங்கிக்கொண்டு ஒருதடவை இதே இடத்தில் மங்கை நின்றிருக்கிறாள். வலது பக்கம் நான்கைந்து முடி சிலுப்பிக்கொண்டு இருக்க, ‘வாங்கஎன்று சிரித்தாள். ‘சனிக்கிழமை அஞ்சு மணி ஆகப் போகுது. மணி அத்தானை எங்கே காணோம்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். வந்துட்டீங்க’  என்று இன்னும் கொஞ்சம் சிரித்தாள். இண்ணிக்காவது ரேவதி அக்காவைக் கூட்டிக்கிட்டு வந்தா என்ன? நீங்களும் உங்க ஃப்ரண்டும் பேசிக்கிட்டு இருக்கிற மாதிரி நாங்களும் என்னத்தையாவது பேசிக்கிட்டு இருப்போம் இல்லே?என்று மங்கை சொல்லும் போது அவளுடைய மூக்கையும் மூக்குத்தியையும் பார்த்துக் கொண்டு இருந்தேன்.
நல்ல நீளமும் கூர்மையுமான மூக்கு. ‘லட்சுமணா, ஒரு வைரத் தோடு வாங்கிப் போடுப் பாஎன்று நான் சொன்னால், அவன்  இரண்டு விரல்களைத் தன்  பெண்குழந்தைகளைப் பார்த்து நீட்டி, ‘ அந்தா இருக்கே ரெண்டு வைரமும்என்பான். ‘அவங்க வாங்கிக்கொடுக்கிறதுக்கு நீங்க என்ன அண்ணாவியா? கொழுந்தியாளுக்கு நீங்க வாங்கித் தாரேம்னு சொல்லுங்க. வேணும்னா பாலத்து ஆசாரிகிட்டே போய் இன்னோரு பக்கத்து மூக்கையும் மணி அத்தான் பேரைச் சொல்லி, குத்திக்கிடுதேன்’  என்று வலது பக்க முடியை ஒதுக்கிக்கொண்டு, பெரியப்பாவுக்கு குடிக்கத் தண்ணி கோரிக்கிட்டு வா ஸ்னேகா’  என்று பெரிய மகளைப்பார்த்துச் சொல்வாள்.
ஸ்னேகாவுக்கு அவளுடைய அம்மா போலவே முன்பற்கள் கொஞ்சம் தூக்கல். அதே மூக்கு. வலது பக்க முடியும் அப்படி. சின்னவள் அப்படியில்லை. நிறம் கொஞ்சம் கூடுதல். மூக்கு அவ்வளவு நீளமில்லை. ஆளும் பொதுக்குப் பொதுக்கென்று இருப்பாள். லட்சுமணனே என்னிடம் கேட்டிருக்கிறான். ‘மணி, ஜயந்தி யார் ஜாடை டே? எங்க அம்மை மாதிரி இருக்காண்ணு முரப்ப நாட்டு அத்தை பார்க்கிற நேரம்லாம் சொல்லிக்கிட்டு இருக்கா. அப்படியா? என்பதற்கு நான் உடனடியாக ‘ ஆமா. சிரிக்கும் போது எல்லாம் அப்படித்தான் தெரியுது. காந்திச் சித்தி கண்ணு அப்படியே இவளுக்குத்தான் வாய்ச்சிருக்குஎன்று பொய் சொன்னேன்.
சில சமயங்களில் இப்படிப் பொய்சொல்ல வேண்டியதிருக்கிறது. எனக்கு லட்சுமணனின் அம்மா ஜாடையை விட அவனுடைய தங்கச்சி பெரியநாயகிதான் ஞாபகம் வருகிறது. பெரியநாயகியை வீட்டில் எல்லோரும் பேபி என்று கூப்பிடுவார்கள். லட்சுமணன் எங்கள் தெருவிலேயே இருந்தான். வீடும் மூன்று தட்டு வீடுதான். அவனையும் சேர்த்து ஐந்து பேர் நடமாட்டம் அந்த வீட்டில் இருக்கவே செய்தது. லட்சுமணன்தான் எனக்குப் பழக்கம். நானும் லட்சுமணனைப் பார்க்கமட்டுமே போனேன், வந்தேன். இதை எல்லாம் மீறியதாகவே என்னவெல்லாமோ எனக்கும் பேபிக்கும் இடையில் நடந்தது. எப்படித் தானாக நடந்ததோ அது போலத் தானாக நின்றும் போனது. அது ஒரு ஆச்சரியம்தான். அதற்கப்புறம் இரண்டு வருஷம் கழித்த பிறகே கல்யாணம் ஆகி, பேபி களக்காட்டிற்குப் போனாள்.
களக்காட்டு மலையில் இருந்து நான்கைந்து யானைகள் ஊருக்குள் இறங்கி யிருக்கிறது. உங்களுக்குப் பிடிக்கும் . இன்றைக்கு ந்யூஸ்லே கூடக் காட்டி இருப்பாங்களே என்று ஒருதடவை ஃபோன் செய்திருக்கிறாள். எப்போது அவளிடம் பிடிக்கும் என்று சொன்னேனோ தெரியவில்லை. பி.வி.ஆர் எழுதிய கூந்தலிலே ஒரு மலர்தொடர்கதையை யாரோ பைண்ட் செய்து வைத்திருந்தார்கள் போல. பழைய புஸ்தகக்கடையில் எங்கேயோ வாங்கி திருநகரில் இருந்து அனுப்பியிருந்தாள். ‘ஆட்டோக்காரன் நாப்பது ரூபா கேப்பான். என்னையும் புள்ளையையும் உன் பைக்கில கொண்டுபோய் பஸ் ஸ்டாண்டில விட்டிருதியா, ராசாமணிஎன்பாள். என் பெயரை முழுதாக எப்போதும் சொல்கிறவள் அவள்தான்.
இப்படி இந்தப் பக்கம் ஒரு முடிச்சை அவிழ்க்கும்போது இன்னொரு முடிச்சு அந்தப் பக்கம் தானாக அவிழ்கிறது தெரிகிறது. எல்லாவற்றையும் முடிச்சுப் போட்டுவைக்கத் தோன்றியது போல, எல்லாவற்றையும் அவிழ்க்கவும் நமக்குத் தோன்றிவிடுவதுதான் காரணம். பேபியைப்பற்றி லேசாகச் சொல்லிவிட்ட பிறகு மங்கை என்கிற மங்கையர்க்கரசி பற்றியும் சொல்லிவிடவேண்டும் இல்லையா. சொல்லாமலே கூடுதல் குறைவாகத் தெரிவதை விட, இப்படிச் சொல்லிவிட்டால், நான், லட்சுமணன், பேபி, மங்கை எல்லோரையும் அவரவர் தாயக்கட்டத்தில் நிறுத்திவிட்டு மேற்கொண்டு விளையாடுவது சௌகரியம்.
லட்சுமணன் இருக்கிற தெருவுக்கு வரும்போது எங்கள் அப்பா பூர்வீகமாக நடத்திக்கொண்டுவந்த  ரைஸ் மில் நொடித்துப்போய், வாடகைக்கு வீடு பார்த்து இங்கே வந்தோம். சொந்தவீடு வழுக்கோடை பக்கம், அப்பாவின் ரைஸ் மில்லோடு சேர்ந்து இருந்தது. அந்த வீட்டுப்பக்கம்தான் மங்கை என்கிற மங்கையர்க்கரசியின் வீடும் இருந்தது. மங்கையின் அம்மாவை நாங்கள் செல்லம்மா அத்தை என்று கூப்பிடுவோம்.
ஆனால் செல்லம்மா அத்தைக்கும் எங்கள் அப்பாவுக்கும் ரைஸ் மில்லில் தங்கி, அங்கே இருக்கிற திருக்கு பைப்பில் குளித்துவிட்டு வருகிற அளவுக்குப் போக்குவரத்து இருந்தது. இன்னும் வெளிப்படையாகச் சொன்னால், ரைஸ் மில்லில் இருந்த முள் முருங்கை மரத்தில் ரத்தினம் வளர்த்த முயல்குட்டி சாப்பிட இலை பறிக்கப் போனபோது, நானே  அப்பாவையும் செல்லம்மா அத்தையையும் அப்படிப் பார்த்து இருக்கிறேன்.
அந்த வயதில் முயல்குட்டி, முள் முருங்கை இலை, செல்லம்மா அத்தை, ரைஸ் மில் கூரையில் எப்போதும் உட்கார்ந்திருக்கிற புறாக்கள் எல்லாம் ஒன்றுபோலத்தான் இருந்தது. பார்த்தது பார்த்தபடி. அதற்கு மேல் ஒன்றுமில்லை. அது எல்லாம் நடந்து ரொம்ப நாட்களுக்குப் பின்பு ஒருதடவை செல்லம்மா அத்தை எங்கள் அம்மாவுடன் அடுப்படியில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தாள். விளையாடிக்கொண்டிருக்கிற புழுதிக் காலோடு நான் மண்பானையில் தண்ணீர் குடிக்கப் போகிறேன்.  ‘இங்கே வா, ராசாமணி’  -  செல்லம்மா அத்தை என் கையைப் பிடித்து இழுத்து மடியில் போட்டு முத்தம் கொஞ்சினாள். அம்மா பார்த்துக்கொண்டே இருந்தாள். எத்தனைபேருக்கு எல்லாரையும் எல்லாவற்றையும் அப்படிப் பார்த்துக்கொண்டே இருக்க முடிகிறது?
செல்லம்மா அத்தை சின்னப் பிள்ளையில் இப்படித்தான் கொஞ்சுவாள்என்று என்னவோ அத்தை தினசரி என்னைக் கொஞ்சிகொண்டிருந்தது போல ரேவதியிடம்  சொல்வேன். அத்தை மாதிரி ரேவதி என் கையைப் பிடித்து இழுத்துப் போடுகிற நேரமாக அது இருந்தால் இப்படியெல்லாம் சொல்லலாம்தானே.  ரேவதியிடம் ரைஸ் மில் கதை உட்பட எல்லாம் சொல்லியிருக்கிறேன்.
‘அத்தையாம் லே அத்தை. உங்களுக்கா அத்தை? முறைப்படி பார்த்தால் எனக்கு அல்லவா அவங்க அத்தைஎன்று ஒருவிதமான புளகத்தில் கரகரக்கிர குரலுடன் என்னை இறுக்குவாள். ரேவதிக்கு எப்படி எல்லாவற்றையும் அப்படி அப்படியே எடுத்துக்கொள்ள முடிகிறது என்று தெரியவில்லை.  நானும் அவளும் ஏதோ ஒரு கல்யாண வீட்டுக்குப் போய்விட்டு வெயிலோடு வெயிலாக ஆட்டோவில் வந்துகொண்டு இருக்கிறோம். கல்லத்தி முடுக்குத் தெருவில் இருந்து பெரிய தேர் பக்கமாக செல்லம்மா அத்தை நடந்துபோவதைப் பார்த்துவிட்டாள். ஆட்டோவை நிறுத்தி, ‘ஏறுங்க. வீட்டில கொண்டுவிட்டிருதோம்என்றாள். ‘ஓம் வீடு எங்கே இருக்கு. ஏம் வீடு எங்கே கிடக்கு?என்று அத்தை மறுத்தாள்.  ‘எல்லார் வீடும் ஒண்ணாத்தான் இருக்கு. அப்படியே தூரமா இருந்தால் கூட பக்கத்தில நகட்டி வச்சுக்கிடலாம்’  என்று ரேவதி வலுக்கட்டாயமாக அத்தையை ஆட்டோவில் ஏற்றினாள். ‘ஏறுங்க அத்தை’  என்று நான் சொல்லும் போது அத்தை வெட்கப்பட்டாள். ‘அப்பா சத்தம் அப்படியே இருக்கு’  என்று கீழே குனிந்தபடி சொல்லிக்கொண்டு உள்ளே ஏறினாள். என் தோள்ப்பக்கமாக கையைப் போட்டு ஒரு கிள்ளு கிள்ளிவிட்டு, ரேவதி சிரித்தாள். கண்கலங்கிக்கொண்டு அவள் சிரிக்கிற சிரிப்பு எப்போதுமே களையாக இருக்கும்.
இன்றைக்குக் கூட ரேவதிதான் லட்சுமணனைக் கூட்டிக்கொண்டு வரச் சொன்னாள். என்னை ‘அத்தான்என்று கூப்பிடுவதில்லை. ஆனால் லட்சுமணன் அவளுக்குப் பெரியத்தான். ரேவதியை மங்கை, அக்கா என்கிறாள், மங்கையை இவள் அக்கா என்கிறாள். அது என்ன கணக்கோ?
‘பெரியத்தானைப் போய்க் கூட்டிக்கிட்டு வாங்க. தனியா அந்த வீட்டில உட்கார்ந்துக்கிட்டு மணடையைக் குழப்பிக்கிட்டு இருப்பாங்க. பாவம். இங்கே கூட்டியாந்திருங்க. இந்த நாலஞ்சு நாளாக எங்கே இருந்ததோ, என்ன சாப்பிட்டுதோ, இல்லை  குலைப்பட்டினி கிடந்துதோ தெரியலை’  என்று சொல்கையில் தலைக்கு எண்ணெய் வைத்திருந்தாள். உச்சி வகிட்டில் இருந்து காதோரம் வரை அதிகப்படியாக மினுமினுக்கிற எண்ணெயுடன் ரேவதியின் முகம் ஆழ்ந்த துயரத்தில், கிணற்றுக்குள் மிதக்கிற இலையை குனிந்து உற்றுப் பார்ப்பது போல இருந்தது.
நேற்று ராத்திரி வீட்டுக்குள் நுழைந்து சட்டையைக் கழற்றியபடி ரேவதியிடம், ‘லட்சுமணன் வந்துட்டானாம்என்று சொல்லும் போதும் இப்படித்தான் அவளுடைய முகம், பந்தல் போட்டது மாதிரி இருட்டுக்குள் கிடந்தது.
‘யாரு சொன்னா?என்று என் சட்டையைக் கையில் வாங்கிக்கொண்டு கேட்டாள். பேசியபடியே சட்டையை வாங்கிக் கோட் ஸ்டாண்டில், போடுகிறது என்பது ஒரு சாதாரண காரியம்தான். ஆனால் ரேவதி நேற்றிரவு அதை வாங்கி அப்படிக் கையோடு வைத்துக்கொண்டு நின்ற நேரம் அப்படியில்லை. அவரவர்களின் நிழல்களே எங்களைப் பட்டாசல் தரையில் இருந்து பாளமாக நெம்பி, அந்தரத்தில் நிறுத்தி இருந்தது.
நான் வருகிறவரை ரேவதி படித்துக்கொண்டு இருந்த பத்திரிக்கை தரையில் தன் பக்கங்களைத் திருப்பியபடி காகிதச் சத்தம் உண்டாக்கியது.  அவளுக்கு அந்தச் சத்தத்தைத் தாங்க முடியவில்லை. குனிந்து எடுத்து கம்பிக்கொடியில் கவிழ்த்தித் தொங்கவிட்டாள்.
‘லைப்ரரியன் ஸார்தான் சொன்னாரு. இந்த மாதிரி லட்சுமணன் வந்து புஸ்தகம் எடுத்துக்கிட்டுப் போனான். ஆளு ரொம்ப டல்லா இருக்கான்னு நான் சொல்லிமுடிப்பதற்குள் ரேவதி, ‘ மனசு இத்துப் போயிருக்கும்லா. அப்புறம் உடம்பு எப்படிக் கதியா இருக்கும்?என்றாள்.
‘எல்லாத்துக்கும் எல்லாம் தெரிஞ்சுதான் இருக்கும் போல ரேவதி
‘ஏன், அவரு ஏதாவது கேட்டாரா?
‘அவரு கேட்கவும் இல்லை. நான் சொல்லவும் இல்லை. எனக்குத்தான் எதையாவது கேட்டிருவாரோ? கேட்டால் என்னத்தைச் சொல்லன்னு படபடப்பா இருந்துது
‘பொதுவா, உருத்தான் ஆட்கள் என்றால், இந்த மாதிரி நேரத்தில் எதையும் கேட்கவும் மாட்டாங்க. சொல்லவும் மாட்டாங்க
‘நீ வேணும்னா அவன்கிட்டே பேசுதியா? நான் கூப்பிட்டால் கூட யோசிப்பான். நீ கூப்பிட்டால் தட்டமாட்டான். சரிண்ணு வந்திருவான்
‘எனக்கு முகம் பார்த்துப் பேசணும். முகம்கிறது என்னத்துக்கு இருக்கு? போங்க. போயி கூட்டியாங்க. பெரியத்தான் வரட்டும் பேசணும் பேசவேண்டாம்கிறதை அப்புறம் பார்த்துக்கிடலாம்
‘லட்சுமணன் வந்துட்டான், சரி. ஒரு வகையில நிம்மதி. ரெண்டு பொம்பிளைப் பிள்ளைகளையும் கூட்டிக்கிட்டு அவ எங்கே போனா?  என்ன செய்யுதா? உன்கிட்டேயாவது ஒரு தகவல் சொல்லியிருக்கலாம் இல்லையா?
‘ரெண்டு வருஷமா மங்கையக்கா எல்லா கண்ட்ராவியையும் எங்கிட்டே சொல்லிக்கிட்டு தானே இருந்தா. எவ்வளவு காலத்துக்குத்தான் இப்படி உப்பைக் கரைச்சு கடலில ஊத்திக்கிட்டே இருக்கிறதுண்ணு அவளுக்குத் தோணி இருக்கும்லியா?
‘அதுக்கில்ல ரேவதி. இந்த ரெண்டு வருஷமா, கூடப் பிறந்தவகிட்டே சொல்ல முடியாததைக் கூட, உள் அந்தரங்கம் ஒண்ணு பாக்கியில்லாம உன்கிட்டே சொன்னவளுக்கு, இதைச் சொல்லத் தெரியாமல் போச்சே
இதைக் கேட்டுக்கொண்டு இருந்த ரேவதி சட்டென்று இதுவரையில் இருந்த ஆளாக இல்லாமல் இன்னொரு ஆளின் குரலில் பேச ஆரம்பித்தாள்.  அவளே மங்கை அல்லது மங்கையின் வக்கீல் ஆகிவிட்டது போலவும், எதிரே நிற்கும் லட்சுமணனைப் பார்த்து சுட்டுவிரலை நீட்டிக் கேள்வி கேட்பது போலவும் ஆரம்பித்தாள்.
‘நீ ஆம்பளை. உனக்கு இயலும். இயலலை என்று வாய் விட்டுச் சொல்ல வெக்கமா இருக்கும். வெட்கத்தை விட அது கௌரதை குறைச்சல்னு நினைப்பே. இத்தனை வருஷம் உன் கூடக் குடித்தனம் போட்டு, வெள்ளிக் கட்டியா ரெண்டு பிள்ளையையும் பெத்துப் போட்டிருக்கிறவளுக்குத் தெரியாதா, உனக்கு என்ன ஏலும், எவ்வளவு ஏலும்னு? நீ என்ன செஞ்சிருக்கணும்? யோக்கியம்னா பொத்திக்கிட்டு இருந்திருக்கணும். என் யோக்யதையைப் பத்தி உனக்கு என்ன கேள்வி?
மறுபடியும் கொடியில் கவிழ்த்துவைத்த புத்தகத்தின் பக்கங்கள் வேறுவிதமாகச் சரசரப்பதையே பார்த்தாள். கோட் ஸ்டாண்டில் இருந்து கீழே விழுந்துகிடந்த சட்டையை எடுத்து வேறு ஒரு காம்பில் தொங்கவிட்டாள்.
‘உன்க்கு அல்லவா கேவலமா இருக்கணும். அடுத்த மனுஷிகிட்டே போய், நேற்றுப் பட்டினி, முந்தா நேற்றுப் பட்டினின்னு ஒருத்தி சொல்லிக்கிட்டு இருக்கிறா. உன்கிட்டே வக்கு இல்லை. இதில் நீ யார் வீட்டில சாப்பிட்டே? எத்தனை நாள் சாப்பிட்டேண்ணு அவள்கிட்டே கேட்டால் என்ன அர்த்தம்? தாங்குவியா? தாங்குவியா நீ? ஆமய்யா, பசிச்சுது சாப்பிட்டேன்னு பதில் சொன்னா பஸ்பமாயிரமாட்டே. அதையெல்லாம் சொல்லாமல்தான், சொல்ல வேண்டாம்னுதான் போயிட்டா
ரேவதிக்கு லட்சுமணன் மேல் இவ்வளவு கோபம் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. நான் லட்சுமணன் தங்கை பேபி பற்றி, மங்கையின் அம்மா செல்லம்மா அத்தை பற்றி எல்லாம் எவ்வளவு சொல்லவேண்டுமோ அவ்வளவு சொல்லியிருக்கிறேன். எல்லாவற்றையும் அவள் கேட்டுக்கொண்டு, தண்ணீருக்கு மேல் பூ இவ்வளவு பெரியது என்றால், தண்ணீருக்குக் கீழ் தண்டு இவ்வளவு நீளம் இருக்கும் என்று புரிந்தவள் ஆகவே ஒரு சிரிப்புடன், நீச்சல் அடித்துக்கொண்டு இருப்பாள்.
லாரி ஆபீஸ் புரோக்கராக இருந்த அவளுடைய தாத்தாவிற்குப் பழக்கமான பெண் ஒருத்தி, பழனியம்மா அவள் பெயர், தாத்தா இறந்த பின்பும் கூட, ஆச்சி கடைசிக் காலத்தில் கிடையில் கிடந்து மண்டையைப் போடுகிறவரை ஆச்சிக்கு உதவிபண்ணியது பற்றிச் சொல்வாள். அவளுடைய கூடப் பிறந்த அக்காவின் பையன், ஏற்கனவே கல்யாணம் ஆகிப் பிள்ளைகுட்டி இருக்கிற ஒருத்தியுடன் சென்னைக்குப் போய்விட்டதை, ‘அவன் வந்தால் நம்ம வீட்டுக்குக் கூப்பிடணும். என்கிட்டே அந்தப் பய சித்தி, சித்திண்ணு பிரியமா இருப்பான்என்று சொல்லியிருக்கிறாள்.
லட்சுமணனைப் பற்றிக் கூட ஆரம்பத்தில், ‘ பாவம். மங்கை அக்காவுக்குக் கஷ்டமாத்தான் இருக்கும். என்ன பண்ணுதது? ஒவ்வொருத்தர் உடம்பு வாகு ஒவ்வொரு மாதிரி. எனக்கு இருபதில நரைக்குது, உங்களுக்கு அறுபதில நரைக்குது’  என்று சாதாரணமாகவே சொன்னாள். மங்கையிடமும் பட்டும் படாமலும் எதை எதையோ, ‘உடம்பு கூடக் குறையா இருந்தா என்ன? பெரியத்தான் மனசு யாருக்கு வரும்?என்று எல்லாம் சொல்லி சமாதானப்படுத்திக்கொண்டுதான் இருந்தாள். அது எல்லாம் ஒரு கட்டம் வரைக்குத்தான்.
என்னிடம் கேட்டது போல, பேச்சுவாக்கில், ‘ரெண்டாவது பொண்ணு யார் ஜாடையில் இருக்கா? என்று ரேவதியிடமும் லட்சுமணன் கேட்டிருப்பான் போல. அதை அவளால் தாங்கவே முடியவில்லை. ‘அது என்ன, ஊர் பூரா யார் ஜாடை, யார் ஜாடைன்னு கேட்கிறது? உன் ஜாடை இல்லைன்னு உனக்குத் தோணினதுக்கு அப்புறம் அது யார் ஜாடையா இருந்தால்தான் என்ன?என்று எல்லாம் கோபப்பட்டது அதற்குப் பிறகுதான்.
‘உங்க வேட்டியையும் மங்கையக்கா சேலையையும் முடிச்சுப் போடாதது ஒண்ணுதான் பாக்கி’  இதைச் சொல்லும் போது ரேவதிக்கு அதிகம் வேர்த்திருந்தது. தண்ணீர் டம்ளரை நீட்டியபடி, ‘கொஞ்சம் குடிச்சுட்டு அமைதியா ஃபேனுக்குக் கீழே காத்தாட உட்காரு. லட்சுமணன் ராமன் எல்லாத்தையும் அப்புறம் பார்க்கலாம்என்றேன்
ரேவதி தரையில் உட்கார்ந்தாள். தண்ணீரை முழுவதுமாகக் குடித்தாள். அப்படியே கொஞ்ச நேரம் படுத்துக் கிடந்தவள், ‘ஆனாலும் பெரியத்தான் பாவம்தான்என்று முனங்கிக்கொண்டே எழுந்து உட்கார்ந்தாள்.
‘நாளைக்குக் காலையில போய்க் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்துட்டு, கையோடு கூட்டிக்கிட்டு வந்திருங்க. ஆளில்லாத வீடு. ஒத்தையில இருப்பாங்க. ஒண்ணு கிடக்க ஒண்ணு தோணி சட்டுண்ணு என்னமாவது பண்ணிவிடக் கூடாது’  - ரேவதி என்னைப் பார்த்தாள்.
‘அதெல்லாம் ஒண்ணும் பண்ண மாட்டான்என்று ரேவதியிடம் சொன்னேனே தவிர, இதோ பைக்கை நிறுத்துவதற்கு இடம் தேடிக்கொண்டு இருக்கிற இந்தப் பொழுதுவரை அந்த பயம் இருக்கவே செய்த்து.
இஸ்திரி வண்டி, அதற்குப் பின் ஆட்டோ, அதற்குப் பின்னால் யார் வீட்டில் இருந்தோ அப்புறப்படுத்தப்பட்டு ரோட்டில் விடப்பட்ட ஒரு கனத்த ஆட்டுரல் எல்லாம் இருந்தன. பக்கத்துச் சுவரில் மழைத்தாரைக்கான வடிகால் குழாயின் இடுக்கில் இருந்து ஒரு அரசங் கன்று அசைந்தது. ரொம்ப காலத்திற்குப் பின், அதுவும் இப்படி ஒரு மனநிலையில் அந்த அரசங் கன்றின் இலைகளைப் பார்க்கச் சொல்லமுடியாத நிறைவு உண்டாயிற்று.. அதன் சிறிய இலைகள் கூர்ந்து ஒரு புல்போல முடிந்ததில் எதையோ புரிய முடிந்தது,
‘தள்ளு, தள்ளுஎன்று மாறி மாறி வெவ்வேறு குரல்களின் சத்தம் லட்சுமணன்வீட்டுக்குப் பக்கவாட்டுத் தோட்டத்தின்  அகலமாகத் திறந்துகிடந்த கதவின் வழியே அதிர்ந்தது. மூங்கில் கழியில் இரண்டிரண்டு கால்களாக இறுகக்கட்டிக் கோர்த்துத் தலைகீழாக உடம்பு தொங்குகிற ஒரு செவலை நிறப் பசுவை நான்கு பேர் அவசரம் அவசரமாகத் தூக்கிக்கொண்டு வெளியே போனார்கள். கடைசியாகக் கடித்த வைக்கோல் பற்களுக்கு இடையில் இருந்தது. திறந்த அகலமான நீலக்கண்களும் கொம்புகளுமாக கனத்த தலை  அசைந்து நம்மைத் தாண்டுகையில் ஏதோ ஒரு வலியின் கிளை உள்ளுக்குள் முறிந்தது. உப்பிய வயிறு வாசல் சட்டத்தின் இரண்டுபக்கமும் உரசி சன்னமான மாட்டு ரோம வாடை அடித்தது. வாலின் கீழ் அண்டி தள்ளித் தொங்கிக்கொண்டிருந்தது. காம்புகளின் இளம் சிவப்பில் இன்னும் சீம்பால் சுரப்புக்கான  தயார் சுருங்க ஆரம்பித்துவிட்டது தெரிந்தது. ஒரு பிரசவ விடுதியின் துர்வாடையை அது தெருவில் கரையவிட்டுப் போயிருந்ததை உணர்ந்து என் நாசி நுனி சுருங்கியது. என்னிடம் கைக்குட்டை அப்போது இல்லை.
என்னைப் போலவே மோட்டார் சைக்கிளில் கால் ஊன்றி, அந்தக் காட்சி உண்டாக்கிய கலவரமான அதிர்ச்சியுடன் இரண்டு பேர் அசையாமல் நின்றனர். வாயைச் சேலை நுனியால் பொத்தியும் மூக்கின் கீழ் விரல் மடக்கியும் சுவரோடு சுவராக ஒட்டி அது எடுத்துச் செல்லப்படும் திசையையே பார்த்துக்கொண்டு நின்றவர்கள், ‘கண்ணுக்குட்டியை ஈணிவிட்டதோ இல்லையோ?என்று காற்றிடம் கேட்டுக்கொண்டார்கள்.
இடது கை இல்லாமல், தோள்ப்பக்கம் சட்டை மடிந்து தொங்குகிற ஒருத்தர், பீடியை ஆழமாக இழுத்துக் கீழே வீசிவிட்டு, கண்ணுக்குட்டி போட்ட பிறகுதான் இப்படி ஆகும்என்று அவர்களையும் என்னையும் பார்த்துக்கொண்டு சொன்னார். அவர் போகிறவரை அவருடைய காவி வேட்டியையே பார்த்தபடி நின்றேன்.
இரண்டு குழந்தைகளையும் பற்றிய மோசமான கற்பனைகள் தீவிரமாகப் பெருகிவிட்டிருந்தன. மங்கையை மூங்கில் கழியில் கட்டித் தூக்கிப் போகிற ஒரு அவசரமான சித்திரத்தை உடனுக்குடன் அழித்துக்கொண்டிருந்தேன். வண்டியை நிறுத்திய பின் இந்த ஹெல்மெட்டைப் பாதுகாப்பது எரிச்சலாக இருந்தது. தலைக் கவசம், உயிர்க்கவசம், மயிர்க்கவசம்என்று சொல்லியபடி சாக்கடையில் துப்பினேன்.
நான் லட்சுமணன் வீட்டிற்கு நடையேறும்போது நிச்சயமாக நம்பினேன். மூடியிருப்பது போல சாத்திவைக்கப்பட்டிருக்கும், ஆனால் திறந்திருக்கிற கதவின் பின்னால், பட்டாசலில் அல்லது அடுத்த அறையில் தொங்கிக்கொண்டு இருக்கப்போகிற லட்சுமணனை அனேகமாக நான் பார்த்துவிட்டேன். அவனுடைய கரண்டைக்கால் எலும்பின் மேல்தோல் இவ்வளவு அசிங்கமாகக் காய்த்துப்போய் இருக்கும் என நான் கற்பனையிலும் எதிர்பார்க்கவில்லை.
தரை முழுவதும் கழுவிவிடப் பட்டதாக, சற்று மேடான முற்றத்திலிருந்து தண்ணீர் வழிந்துகொண்டு இருந்தது. செருப்பையும் மீறி பாதத்திற்குள் புகுந்து சிறுசிறு திரிகள் போல தண்ணீர் ஊர்ந்து நெளிந்தது.
லட்சுமணாஎன்று கூப்பிடலாமா என நினைத்தேன். அதற்கு அவசியமின்றி, தோட்டத்துப் பக்கப் பாதையிலிருந்து லட்சுமணன் வந்துகொண்டிருந்தான். கால்களுக்கு இடையில் அடிவயிற்றில் கையைக் கொடுத்து ஏந்திவந்த அவனிடத்தில் அந்த பிறந்த கன்றுக்குட்டி இருந்தது. அவனுடைய வலது சுட்டுவிரலை விருட் விருட்டென்று கன்றுக்குட்டி சப்பியவாறு இருந்த்து.
 ‘ஒரு ஃபீடிங் பாட்டில் வாங்கிக்கிட்டு வாரியா மணி?என்று லட்சுமணன் கேட்டான். நான் கன்றுக்குட்டியின் தொப்புள் கொடியையே பார்த்தபடி ஒன்றும் பேசாமல் இருந்தேன்.
‘பேபி வந்திருக்கா. எல்லாத்தையும் கேள்விப்பட்டிருப்பா போல இருக்குஎன்று தரையைப்பார்த்துக் கொண்டே லட்சுமணன் சொன்னான்.
மலையில் இருந்து இறங்கி, முதுகில் கருப்புமண்ணும் தழையும் கிடக்க, தும்பிக்கை வீசியபடி வயலில் நிற்கும் யானை ஒன்று தூரத்தில் நிற்பது போல இருந்தது
‘பேபி உள்ளேதானே இருக்கா?என்று கேட்டேன்.
எனக்கு அவளை உடனே பார்க்கவேண்டும் போல இருந்தது.
%

உயிர் எழுத்து
ஜூலை - 2013.