பலிச் சோறு படைப்பது போலிருக்கிறது
ஆவி பறக்கிற உன் காமம்.
பீறிட்டுக் கொண்டிருக்கிற
வக்கிரம் அனைத்தையும்
உன் வெதுவெதுப்பான மார்பு கரைத்துவிடுகிறது.
காணாமல் போன சீப்பை முன்வைத்து
நிலைக் கண்ணாடி உடைக்கிற என் கோபத்தை
உறிஞ்சிக் கொள்கிறது உன் ஆழ்ந்த முகம்.
மாந்தளிர் அசைக்கும் சிறுசெடிக்கு
நீர் வார்க்கிறது உன் முத்தம்.
விருப்பு வெறுப்புகளின் அமில எச்சிலை
என் வாயோரங்களிலிருந்து துடைத்துக் கொண்டிருக்கிறது
உன் வெளிறிய விரல்கள்.
எஞ்சிய என் கருத்த கசடுகளின்
ரகசிய அம்பு எய்யப்படக்
காத்திருக்கிறக்கிறது உன் உந்திச் சுழி.
குருவையும் கடவுளையும் பிரீதி செய்ததில்
செம்பருத்தி உருண்டு விழுகிறது உன் யோனியில்.
அப்பழுக்கற்றதாக இருக்கிறதாகச்
சொல்கிறார்கள்
வீட்டுக்கு வெளியில் நான்
விடுகின்ற மூச்சு.
%
கல்யாண்ஜி கவிதைத் தொகுப்பிலிருந்து.
ஆவேசமான ஆணும், அமைதியுடன் எதிர்கொள்ளும் பெண்ணும்...வருத்தமாக இருக்கிறது அந்தப் பெண்ணை நினைத்தால். எனக்கென்னவோ அமைதி காத்தே அவள் வென்று விடுவாள் என்றே தோன்றுகிறது. காலம் அந்த வித்தையைத் தானே ரசித்துக் கொண்டிருக்கிறது ! அமைதியாக ஜெயித்துக்கொண்டிருக்கும் அந்தப் பெண்ணுக்கு என் நட்பான கை குலுக்கல்.
ReplyDeleteஅங்கிள். இந்த கவிதையை ஒவ்வொருமுறை படிக்கும்போதும் சம்பந்தாசம்பந்தம் இல்லாமல் எனக்கு 'குற்றமும் தண்டனையும்' சோனியா நினைவுக்கு வருகிறாள். ஒரு வேளை, இந்த கவிதையில் நான் தேடுவது அவளை போன்றதொரு தேவதை முகம் தானோ? முடிவில், அவன் எதற்கோ குலுங்கி குலுங்கி அழுபவனாக ஒரு காட்சி தோன்றும்.
ReplyDelete