Friday 17 May 2013

நிரப்புதல்

சுந்தரி வீடு வந்துட்டுதும்மாவண்டியை எங்கள் வீட்டு முன்பு நிறுத்தும் போதே சுப்பு குரல் கேட்ட்து.
இத்தனைக்கும் அது பெரிய வண்டிதான். இறங்குவதற்குத் தோதுவாகத்தான் சுப்பு வண்டியை நிறுத்தியிருக்கிறாள். ஸ்டியரிங் பக்கத்துக் கதவைச் சாத்திவிட்டுச் சுற்றிவருவதற்குள் பின் பக்க இடது கதவைத் திறந்தாயிற்று. மெதுவா இறங்குங்கோஎன்று ஹரி நின்றாலும் போதவில்லை. ‘அவளை எங்கே?என்று சத்தம் வருகிறது. ‘குஞ்சு, அம்மா கூப்பிடறாஎன்பதற்குள் ‘வந்துட்டேம்மாஎன்று சுப்பு குரல் கொடுக்கிறாள்.
எங்களுக்கு ஆஃபீசில்தான் சுப்பு. சுப்புலட்சுமி. கே. ஆர்.,  கல்லிடைக்குரிச்சி ராமமூர்த்தி சுப்புலட்சுமி. வீட்டில் எல்லோர்க்கும் குஞ்சுதான். எல்லோர்க்கும் என்ன, இதோ காரில் இருந்து இறங்குகிற தயாரிப்பில் இருக்கிற சுப்புவின் அம்மாவுக்கும், எப்போதும் போல ஒரு பழைய முழுக்கைச் சட்டையைப் போட்டுக்கொண்டு சவரம் செய்யாத முகத்துடன், பிடித்துத் தள்ளினால் ஒடிந்துவிடுவது போல இருக்கிற ஹரி இரண்டு பேருக்கும் குஞ்சுதான்.  
இந்த இரண்டு பேர் தவிர மூன்றாவதாக ஒருத்தியாக சுப்புவுடைய தங்கை ரமணி இருந்தாள். பி.காம் பரீட்சையில் தேறி எம்.காம் சேர விண்ணப்பம் எல்லாம் வாங்கி வைத்திருந்தாள். ஹரி மாமா மாதிரியோ குஞ்சு அக்கா மாதிரியோ அவள் பாங்க் வேலைக்குப் போக மாட்டாளாம்.  காலேஜ் லெக்சரர் வேலைக்குத்தான் போவாளாம்.  இப்படி எல்லாம் சொன்னவள் ஏன் அப்படிச் செய்தாள் என்று தெரியவில்லை.
ரொம்ப நாள் புத்திசுவாதீனம் இல்லாமல் இருந்து ரமணிக்கு நான்கு வயதாக இருக்கும் போதே உத்தரக் கட்டையில் தொங்கிவிட்ட அவளுடைய அப்பா வழியையே அவள் எடுத்துக்கொண்டாள். முந்தின நாள்தான் கை கொள்ளாமல் மருதாணி வைத்திருக்கிறாள். ஆற்றுத் தண்ணீர் பிடித்துவைத்த செப்புப் பானை மூடியில் ‘தெறிக்கிற மாதிரிவிளைந்த ஏழெட்டு நெல்லிக்காய்கள். கிருஷ்ணன் கோவில் வரை நடந்தே போய்விட்டு வந்திருக்கிறாள். ‘மாமா திருந்தறதாவே இல்லையாம்மா?என்று ஹரியை சாராயக் கடைப்பக்கம் பார்த்ததற்கு வருத்தப்பட்டிருக்கிறாள். ஒரு துண்டு நார்த்தங்காய் ஊறுகாய் அதிகம் என்று தனியாக ஒரு சின்னத் தட்டில் அதை எடுத்துவைத்திருக்கிறாள். மாக்கல் சட்டியில் பருக்கையும் மோரும் இன்றிக் கழுவிக் கவிழ்த்தியாயிற்று. அடுக்களைக் கதவைச் சாத்தும் போது ‘அரிசி டின்னுக்குள்ளே சுண்டெலி விழுந்து கல்கல்னு அரிசியைச் சிதற அடிச்சுக் குதிக்கிறது. கார்த்தால வரைக்கும் சதிர்க் கச்சேரி நடக்கட்டும்என்று சொன்னவள், அம்மாவிடம் ‘தூக்கம் வரலையாம்மா?என்று கேட்டிருக்கிறாள். ‘இன்னிக்கு என்ன கிழமை?என்று கேட்ட அம்மாவிடம் . சித்தே கண்ணை அசந்தேள்னா முழிச்சுப் பார்க்கிறச்சே புதன் கிழமை. புத வார்என்று சிரித்திருக்கிறாள். ஆனால் மறுநாள் காலை பார்த்தால், முக்காலி உருண்டுகிடக்கிறது.  சிலம்பு மாதிரி மருதாணி அப்பின கால் தரைக்கு நாலடி உயரத்தில் முறுக்கிக்கொண்டு திரும்புகிறது.
பாங்கிற்குத்தான் ஃபோன் வந்தது. இன்னும் எல்லா கவுண்ட்டர்கள் முன்னாலும் ஆட்கள் வரக்கூட இல்லை. நானும் சுப்புவும் காசாளர்கள். இரண்டு பேரும்தான் எதிரே வீஃபோரஸ் கடைக்குப் போயிருந்தோம். அவர்களுமே அப்போதுதான் திறந்திருந்தார்கள். சாயந்திரம் வருவதாகவும் பேரீச்சம் பழங்கள், பிஸ்கட் வகைகள், வறுத்த முந்திரி தவிர காலி வட்ட பிஸ்கட் டப்பாக்கள் இருந்தால் இரண்டோ மூன்றோ வேண்டும் என்று சொல்லிவிட்டு வந்தோம்.
பிஸ்கட்களும் பேரீச்சையும் அம்மாவுக்கு. ஹரி இஷ்டமா முந்திரி சாப்பிடும். செங்கோட்டைக்குப் போனா கொல்லாம் பழம் வாங்கிட்டு வந்து, ஒவ்வொரு கொட்டையா சுருசுருண்ணு எண்ணெய் வடியச் சுட்டு எல்லாருக்கும் கொடுத்துக்கிட்டு இருக்கும். வட்ட பிஸ்கட் டப்பா எல்லாம் ரமணிக்கு வளையல் போட. அது ஒரு வளையல் கிறுக்கு. யாராவது ஒரு வளையல் செட்டியைத்தான் கட்டிவைக்கணும் அதுக்கு’ -  சுப்பு யார் யாருக்கு எது என்று சொல்லிக்கொண்டே வரும்போது மாரியப்பன் சிரித்தான். பஸ் ஸ்டாப்பிற்குக் கீழ்பக்கம் மருத மரத்து நிழலில் கூடை கூடையாக மாம்பழங்கள்.
பொதுவாக நான்தான் நிறைய மாம்பழம் வாங்குவேன். ‘மல்கோவா நல்லாருக்கு. எல்லாம் தெக்குமேடு, புளியரை தோப்புக் குத்தகையில் எடுத்தது  என்று அவன் சொன்னதும் என்னைப் பார்த்துத் தான். சுப்புவுக்கு என்ன தோன்றிற்றோ, தினசரி அவனிடம் பேசுகிறது போல, ‘மாரியப்பா, சுந்தரி அம்மாவுக்குத் தர்ரா மாதிரி எனக்கும் நல்லதா ஒரு அரை டஜன் எடுத்து வை. சாயுங்காலம் போறச்சே வாங்கிக்கறேன். சரியா?என்றாள். எதைச் சொன்னாலும், ‘சரியா? என்பது சுப்புலட்சுமியின் பழக்கம்.
எனக்குக் கூட ஞாபகம் இல்லை. அந்தத் தந்திக் கம்பத்தைக் கடந்து போகும் போது சுப்புதான் சொன்னாள், ‘இந்தப் போஸ்ட்ல தானே அந்தப் பையனைக் கட்டிவச்சு போறவா வாறவா எல்லோரும்  ஆளாளுக்கு உதைச்சா? அந்தப் பொட்டிக்கடைப் பாட்டையாவுக்கு என்ன வந்தது? ரொம்ப சிரத்தையா ஒரு வாழைத்தார் காம்பைத் தூக்கியாந்து மொத்துறார். கடைவாய்ப் பல்லு தெறிச்சு அங்கேர்ந்து ரத்தம் வழியறது. பார்க்கவே கண்ட்றாவியா இருக்கு. என்ன பசியோ. சாபமோ, நீட்டத் தெரியாம கையை நீட்டியிருக்கான். தப்புதான். அதுக்கு இப்படியா? குன்னி முத்து மாதிரி ரத்தம் ஒரு சொட்டு இப்போ விழட்டுமா அப்புறம் விழட்டுமாண்ணு உதட்டில தொங்கித்து. ‘ – எல்லாம் ஏதோ இன்றைக்கு நடக்கிறது போல சுப்பு ரோட்டின் குறுக்கே திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே வந்தாள்.  நைட் டூட்டி முடிந்து போகிற வாட்ச் மேன் சூடன் பொருத்தி கருப்பசாமியைக் கும்பிட்டு எங்களையும் கும்பிடுகிறார். கதலிப் பழத்தில் குத்திவைத்த சர்வோதயா பத்தி கருப்பசாமியை விட்டு விலகி எங்களைப் பார்த்து நாடாவாக நெளிகிறது.
‘டூட்டி முடிஞ்சுதா வடிவேலு? சுப்பு சிரிக்கிறாள்.
‘இன்றைக்கு என்ன, எல்லாத்தையும் பேரைச் சொல்லி அட்டெண்டென்ஸ் எடுக்கிறதா உத்தேசமா? நான் கேட்கிறேன்.
‘இன்னிக்கு என்னமோ எல்லோரையும் பேரைச் சொல்லிக் கூப்பிட்டுப் பேசணும்னு தோண்றது சுந்தரி”  என்று என் தோளில் கை வைத்தாள். இப்படித் தோளிலே கை வைப்பது சுப்புவின் இன்னொரு பழக்கம். அதிகம் சிரிக்கும்படி யாராவது பேசினால் பக்கத்தில் நிற்கிறவர் தோளில் முகத்தை வைத்துக் குனிந்து கொள்வாள். ஏதாவது ஒரு பெயர், தொலைபேசி எண் ஞாபகம் வரவில்லை என்றால் கூட அப்படித்தான்.  சுப்பு அதே மாதிரி என் தோளில் முகம் வைத்து அழக்கூடிய தூரத்தில் நாங்கள் இருந்திருக்கிறோம் என்று அப்போது தெரியாது.
ஹெட் கேஷியர் மேஜையில்தான் தொலைபேசி உண்டு. அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்தரில் கையெழுத்துப் போடவந்த செல்லப் பெருமாள்தான், சுப்புலட்சுமி மேடம், ஃபோன்’  என்று சத்தம் கொடுத்துவிட்டு அவருடைய நாற்காலிக்குப் போனார்.
ஒரு நாற்பது ஐம்பது வருடத்திற்கு முந்திய அகலமான மேஜையில், ஒரு இன் அவுட் ட்ரே, ஒரு வருகைப் பதிவேடு, ஒரு டெல் டேல் ரிஜிஸ்தர் தவிர படுக்கை வசத்தில் இருக்கும் ஒரு கருத்த தொலைபேசி ரிசீவர். அதன் மறு முனையில் இருந்து என்னென்னவெல்லாம் பரவும்?
‘குஞ்சுவா?என்று கேட்டவுடன் ஹரி நேரடியாகவே விஷயத்தைச் சொல்லிவிட்டிருப்பார் போல. ‘ எப்போ? எப்போ?என்று மட்டும் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டு சுப்பு பெரும் குரலில் அழ ஆரம்பித்திருந்தாள். யாரோ நாற்காலியை இழுத்துப் போட்டு அவளை உட்காரச் சொன்னார்கள். தண்ணீர் டம்ளரைக் கொண்டுவந்து குடிக்கச் சொன்னார்கள். என்னுடைய கையை மட்டும் மிக அழுத்தமாக சுப்பு பிடித்துக்கொண்டாள். வாடிக்கையாளர்கள் சிலர் வாசலில் நின்று எட்டிபார்த்துக்கொண்டு இருந்தார்கள். பக்கத்துத் தியேட்டரில் இருந்து பணம் செலுத்த வருகிறவர் வழக்கமாக சுப்புலட்சுமி கவுண்ட்டரில்தான் நிற்பார். நெற்றியில் மிகப் பெரிய வட்டமாக அவர் வைக்கிற குங்குமம் கவலையில் சுருங்கி உதிர்ந்து அவர் மூக்குத் தண்டில் கிடந்தது.
முத்தரசுதான் சுப்புவிடம் நம்பரை வாங்கி ஹரியிடம் பேசினார்.  விபரம் கேட்டார். உடனே பொது மருத்துவ மனை, காவல் துறை என்று யார் யாரிடமோ பேசினார்.  ஒரு வாடகைக் கார் ஏற்பாடு செய்தார். ‘சுந்தரி மேடம் நீங்க இவங்க கூடப் போகலாம் இல்லையா?என்று கேட்டார். சுப்புலட்சுமி வாடகைக்கு இருந்த உறவினர் வீட்டு வழியாக, என் வீட்டுக்குக்குப் போய் தகவல் சொல்லிவிட்டு, பத்திரமாகப் போக வேண்டும் என்று டாக்ஸி டிரைவரிடம் வழி சொன்னார். காஃபி வாங்கிவரச் சொல்லி எங்கள் இருவரையும் குடிக்கக் கேட்டுக்கொண்டார். நாங்கள் குடிக்கவில்லை. முடிந்தால் ஃபோன் செய்யுங்கள் சுந்தரிஎன்றார். டாக்ஸி டிரைவரைப் பார்த்து, போய்ச் சேர்ந்ததும் பேங்குக்குப் பேசுறீங்களா? நம்பர் இருக்கா, வேணுமா?என்று கேட்டுக் கொண்டார்.  அதுவும் போதாதது போல, ‘ஹரி ஸார் கிட்டே பேசிக்கிறேன். புறப்படுங்கஎன்று முத்தரசு சொன்னார்.
‘ஹரி ஸாராம் இல்லே, ஹரி ஸார்என்று கதவைப் பெருஞ் சத்தத்துடன் அடைத்தபோது டிரைவர் திரும்பிப் பார்த்தார்.  ‘புழுத்த நாயி. புழுத்த நாயி. இன்னும் எத்தனை பேரு உனக்கு வேணும்? என்று உரக்க முனங்கினாள்.  முன் சீட்டை மாறி மாறி ஓங்கி அடித்தாள். டிரைவர் ஒரு கம்பியில் கோர்க்கப்பட்ட்து போல விரைப்பாக அமர்ந்து ஓட்டத் துவங்கினார். அதிக வேகம் அடைந்திருந்தது வாகனம்.
‘நாயி. நாயிஎன்று முன் சீட் விளிம்பில் நெற்றியை வைத்துக் குனிந்தபடியே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே வந்தாள். நான் அவள் தலையை நீவி விட்டேன். முதுகைத் தட்டிக் கொடுத்தேன். அவளுடைய வலது பக்கத் தோள்பட்டையில் சற்றுக் கையை வைத்திருந்தேன். ‘சுப்பு, சுப்புஎன்று சொன்னபடி தட்டிக்கொடுத்துக் கொண்டிருந்தேன். அவள் சொல்வது எனக்கு ஏதோ புரிந்த மாதிரியும்  புரியாத மாதிரியும் இருந்தது.  அந்த புரிந்த, புரியாத நிலையில் சுப்புவை நெருக்கமாகத் தொடுவதில் நானே வேறொரு பரபரப்பான உணர்வை அடைந்துகொண்டு இருந்தேன்.. தேவையற்று அவள் முதுகில் கை வைத்திருப்பது போலவும் இவ்வளவு நீண்ட நேரம் சுப்புவின் தொடையில் நீவி ஆறுதல் சொல்ல அவசியம் இல்லை என்பதாகவும் தோன்றியது. ‘நாயி, நாயிஎன்று சுப்பு குனிந்துகொண்டே அருவெறுக்கிற போது, அவளைச் சுற்றி நிற்கிற நாய்களில் ஒன்றாக நானே ஆகிவிட்ட்து போல இருந்த்து. அப்புறம் வீடு வருகிற வரை, சுப்புவின் இடது கையை மட்டும் என் கையில் வைத்திருந்ததோடு சரி.
அலுவலகத்தில் இருந்து வேறு யாரும் வரவில்லை. இந்த மாதிரியான சாவுக்கு எதற்கு உடனடியாக என்று தள்ளிப் போட்டிருந்தார்கள்.  முத்தரசு மட்டும் பைக்கில் அங்கிருந்து இவ்வளவு தூரம் வந்திருந்தார்.  அம்மாவைப் பார்க்கலாமா என்று கேட்டார்.  பக்கத்தில் இருந்தவர்கள் அவரைப் பார்த்தபடி எழுந்திருந்து போனார்கள். சுப்பு அம்மாவை எழுப்பி உட்கார வைத்தாள். அம்மாவுக்கு சுப்புவின் அப்பா போனது பாரம். தம்பி ஹரியுடன் இரண்டு பெண் குழந்தைகளையும் இதே வீட்டில் இருந்து ஆளாக்கியது பாரம். அதையெல்லாம் விட அவளுடைய உடம்பே அவளுக்கு ஆகப் பெரிய பாரம். கன்னம் தொங்கும். கழுத்துச் சதை அப்படி. மேல் புஜம், முன் கை இப்படி கால் சுண்டுவிரல் வரைக்கும் சொல்லிக்கொண்டே போகலாம்.
அம்மா எழுந்திருந்து உட்கார்கையில் மர பெஞ்ச் மூச்சுவிட்டது. பாதம் வரை சேலையை இழுத்துவிட்டுக் கொண்டு சுப்பு முத்தரசுவை அம்மாவிடம் சொல்லிவைத்தாள். ‘ அம்மா. இவா எங்க ஆஃபீஸில ஒர்க் பண்றா. எல்லாத்துக்கும் உதவி. அதிலும் இன்னிக்கு எனக்குப் பெரும் ஒத்தாசை. ஊரு வாயை அடைக்க முடியறதோ இல்லையோ? போலீஸ்காரா வாயி, அறுத்துத் தெச்சி ஓலப் பாயில் சுருட்டிக் கொடுப்பாளே அவா வாயி எல்லாத்தியும், திறக்கறதுக்கு முன்னமே போறுமா போறுமாண்ணு அடைச்சி வச்சது இவா தான் சுப்பு அழ ஆரம்பித்தாள். சுப்புவின் அம்மா அழவில்லை. எத்தனை காலம்தான் எது எதற்கெல்லாம்தான் ஒரு மனுஷி அழுவாள்? ஆயுசு பூராவும் அழ யாரால் முடியும்? முத்தரசுவைப் பார்த்துக் கூப்பின கையை அப்படியே தன்னுடைய முகத்தை மூடுகிற மாதிரி வைத்துக் கொண்டு அப்படியே இருந்தார்.
யாருமே கொஞ்ச நேரம் பேச வில்லை. கொஞ்சநேரம் கூட இல்லை. சற்று அதிக நேரம் தான். துளைபோடுகிற மாதிரியான அந்த மௌனம் என்னவோ செய்தது.
ஹரி ஸார் எங்கே?என்று முத்தரசு கேட்டார். சுப்புலட்சுமி ஒன்றும் சொல்லவில்லை. மூக்கு விடைக்க ஆரம்பித்திருந்தது. நான் ஸ்டோர் ரூம் பக்கம் கையைக் காட்டினேன்.
‘இருட்டிக் கிடக்கு. லைட் ஒண்ணும் காணோம் – முத்தரசு எழுந்தார். அவர் சட்டையெல்லாம் வியர்த்திருந்தது. வலது கையை ஜன்னல் விளிம்பில் ஊன்றியிருந்தார் இவ்வளவு நேரம். முழங்கைப் பக்கத்து ஈரத்தில் ஏதோ தாள் கிழிசல் ஒட்டியிருந்த்து.
‘படுத்திருப்பார்னு நினைக்கிறேன்’  என்றேன்.
‘குடிச்சுட்டு விழுந்து கிடக்கிறா ன்னு நேரா சொல்லு சுந்தரி சுப்பு கண்களை அகட்டினாள். சுப்புவின் அம்மா லேசாக சுப்புவை நிமிர்ந்து பார்த்துவிட்டு மறுபடி குனிந்தாள். இதுவரை வராத கண்ணீர் இப்போது இறங்கிக்கொண்டு இருந்தது.
முத்தரசு ஸ்விட்சை வலது பக்கம் தேடினார். அவரவர் வீட்டில் புழங்கின ஞாபகத்தில் தானே இருட்டில் கை போகும்.
‘லெஃப்டிலே இருக்கும் ஸார் சுப்பு சத்தம் கொடுத்தாள். முடிப்பதற்குள் அடுத்த அறை கருப்பு இருட்டிலிருந்து மஞ்சள் இருட்டுக்கு மாறியது. ஹரி எழுந்திருந்து உட்கார்ந்தார். மேல் சட்டையில்லை. துண்டை இழுத்துப் போர்த்திக் கொண்டார். குடித்திருந்தது உண்மைதான். ஆனால் நிதானம். நீண்ட காலம் குடிக்கிறவர்களுக்கு வருகிற நிதானம் மட்டும் இல்லை. ரமணியின் இந்தக் காரியம் சார்ந்த துயரம் உண்டாக்கிய நிதானம்.
முத்தரசு அவர் பக்கத்தில் போய் உட்கார்ந்து லேசாக ஹரியின் தோளில் கை வைத்தார். ஹரி குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தார்.
‘குஞ்சு நினைக்கிறா மாதிரி அப்படியொண்ணும் நான் கேடுகெட்டவன் இல்லை’  என்று சொல்லிவிட்டு நிறுத்தினார். அந்த மஞ்சள் வெளிச்சம் மட்டும் ஒரு ஆறு போல் சகலதிசைகளிலும் ஓடிக்கொண்டு இருந்தது. படித்துறையில் உட்கார்ந்து பார்த்தபடி இருப்பது போல முத்தரசுவும் ஹரியும் தரையையே பார்த்துக்கொண்டு இருந்தார்கள். செக்கடியில் இருக்கிற  ஒரு எண்ணெய் மக்கு வாடை எங்கிருந்தோ வந்துகொண்டிருந்தது.
‘இப்போ அம்பது ஆகிறது எனக்கு. அப்போ நாப்பது இருக்கும். தூக்கத்தில புரண்டு படுக்கும் போது நம்மை அறியாம கைகால் பட்டு தலைமாட்டில் இருக்கற செம்பு ஜலம் கொட்டிப் போறா மாதிரி ஏதோ ஆயிப் போச்சு. குஞ்சு அதை நினைக்கலாம். நினைக்கக் கூடாதுன்னு சொல்லலை. ஆனா அதையே நினைச்சுக்கிட்டு எல்லாத்தையும் பார்த்தா எப்படி? ‘
முத்தரசு கேட்டுக்கொண்டே இருந்தார். குண்டு பல்புக்கும் முறுக்கு வயருக்கும் இடையே தொங்கிய நூலாம்படையின் நிழல் எதிர்ச் சுவரில் அரூபச் சித்திரங்களை வரைந்து வரைந்து விலகியது.
‘காக்கா கொட்டினதா ஒரு ஆற்றைச் சொல்றா. அது வேணும்னு கொட்டித்தா, வேண்டாம்னு கொட்டித்தா தெரியலை. ஆனா இன்னிய தேதிக்கு அதில இறங்கி நிண்ணா கரண்டைக்குக் கூட ஜலம் இல்லை. ஜலத்தை விடுங்கோ. குனிஞ்சு அள்ளிடலாம்னு பார்த்தா ஒரு குத்து மணல் இல்லை. இதைக் கொட்டின கணக்கில் சேர்க்கிறதா, அள்ளின கணக்கில் சேர்க்கிறதா?
இங்கே ஹரி பேசுகிற சத்தத்தைக்கேட்டு சுப்புலட்சுமி கோபத்தோடு எழுந்தது போல இருந்தது. மடியில் இருந்ததோ என்னவோ, அமிர்தாஞ்சன் டப்பி விழுந்து உருண்டு மூடி திறந்து விரீர் என்று அறை முழுவதுக்கும் தைலம் பூசியது. நான் சுப்பு பின்னாலேயே போனேன்.
‘நான் ஒண்ணு உங்ககிட்டே கேட்கலாமா ?என்றார் முத்தரசு. ஹரி அவர் முகத்தையே பார்த்தார். நாங்கள் வாசல் நடைக்கு இந்தப் புறமே நின்றோம்.
‘சுப்புலட்சுமியை நான் கட்டிக்கிடலாம்னு நினைக்கிறேன். உங்களுக்கு ஆட்சேபணை உண்டா? சொல்லுங்க. அடுத்த வாரமோ அடுத்த மாசமோ கேட்கணும்னு இருந்ததை இப்பவே கேட்டுரலாம்னு தோணிட்டுது. அதுக்கு, கொஞ்ச நேரத்துக்கு முந்தி நீங்க பேசினது அல்லது அந்த நூலாம்படை நிழல், இந்த குண்டு பல்ப் வெளிச்சம், உங்களோட லிக்கர் வாடை, என்னுடைய வேர்வை வாடை எது வேணும்னாலும் காரணமா இருந்துட்டுப் போகட்டும்
முத்தரசு ஹரியின் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தார்.  தன்னுடைய அமைதிக்குள் அமிழ்ந்தபடி ஹரி. ஒரு சிறு நொடியில் அவர் பெரும் தூரத்தைத் தாண்ட வேண்டியிருந்தது.
‘சுந்தரிஎன்று சுப்பு என்னை இழுத்தாள். வழக்கமாக அவள் செய்கிறது போல என் தோளின் மீது முகத்தை வைத்துக் குனிந்துகொண்டே நின்றாள். எத்தனையோ காலத்திற்கு முந்திய இந்த நிலைவாசலும் எத்தனையோ காலமாக வந்துவந்து நீங்கும் இருட்டுமாக இருக்கிற இந்த இடத்தில் சுப்புவை எனக்கு அணைத்துக்கொள்ள வேண்டும் போல இருந்தது. ‘சுந்தரிஎன்று சுப்பு மீண்டும் சொல்லி விசும்பும் சமயம் நான் இன்று காரில் புறப்படும்போது இருந்த அதே பரபரப்பில் இருந்தேன். சுப்பு ஒரு ஈரமான வாடையுடன் இருந்தாள்.
இத்தனை வருஷங்களுக்குப் பிறகும் தாண்டவே முடியாத, உலரவே உலராத ஈர வாடை.
‘பார்த்து வாங்கோ. ஈரமாக் கிடக்கறதுஎன்று ஹரி சொன்னார்.
‘இந்தப் பக்கம் தண்ணீர்க் கஷ்டம்னு சொல்றா. சுந்தரி ஆத்துல அரளிச்செடி வரைக்கும் குளிப்பாட்டி ஆகிறதேஎன்று சுப்பு, அம்மாவின் இடது புஜத்தைப் பிடித்தாள்.
‘குஞ்சு, முதல்லே பாத் ரூம் போகணம் குழந்தே’  -  சுப்புவின் அம்மா வெளிப்படையாகவே சொன்னார். ஒரு வயதில் எல்லாம் வெளிப்படையாகி விடுகிறது.
‘ஒன்பது வருஷத்துக்கு மின்னாடி முதல் முதல் சுந்தரி வீட்டுக்கு வரச்சேயும். ‘பாத் ரூம் எங்கே இருக்குன்னுதான் சுந்தரியோட ஆத்துக்காரர் கிட்டே கேட்டே
‘ இப்போ எங்கே அவரை?என்று கேட்ட சுப்பு அம்மா அதற்குப்  பதிலை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் சுப்பு சொன்னாள் சிரித்துக்கொண்டே, ‘நாம அரசுவையும் பசங்களையும் அழைச்சுண்டு வராததுலே கோவமாம். அவரையும் பொண்ணையும் கண் காணாம ஒளிச்சு வச்சிருக்கா சுந்தரி’. இதைக் கேட்டோ அல்லது வேறு எதற்கோ சுப்பு அம்மா சிரித்தார். கொஞ்சம் குனிந்து வாசலில் இருக்கிற  சிறு கல்திண்ணையைத் தடவினார். மேல் கைச் சதை கொளகொளவென்று அசைந்தது.
‘வழவழண்ணு இருக்கறதே. இங்கே சித்தே உட்கார்ந்துக்கட்டுமா? ரெண்டு பேர் மட்டும் உட்காரதுக்குன்னு அளவா பண்ணியிருப்பா போல. எனக்கு ஒருத்திக்கே பத்தலை’  என்று உட்கார்ந்தார்.
‘ரெண்டு பேர் இட்த்தை ரெண்டு பேர் நிரப்புகிறதுல என்ன இருக்கு. ஒரே ஒருத்தர், இப்படி ரெண்டு பேர் இடத்தை அஞ்சு பேர் இடத்தை பத்து பேர் இடத்தை நிரப்புகிறதுதானே விஷேசம்.’ -  நான் சுப்புவின் கையைப் பிடித்துகொண்டே  சொன்னேன்.
‘அப்படியா சொல்றாய்?என்று சுப்புவின அம்மா கேட்டார்.யாரை யாரால நிரப்ப முடியறது’  என்று சுப்புவைப் பார்த்தார். சுப்பு ஒன்றும் சொல்லவில்லை. ஒரு பதில் வேண்டியிருந்தது போல சுப்புவின் அம்மாவுக்கு. ‘நீ என்னடா சொல்றே ஹரிஎன்று கேட்டுவிட்டுப் பதில் வராததும்,  அவனே எங்கே காணோம் குஞ்சு?என்றார்.
‘வீடுகட்டியிருக்கோம்ணு கூப்பிட வந்துட்டு இப்படி வாசக் கல்லுலேயே நாம உக்காந்துண்டுட்டா எப்படி? இன்விடேஷன் எடுக்கப் போயிருக்கான். காரில தானே இருக்கறது எல்லாம்’ -  சுப்பு அம்மாவிடம் சொல்லிக்கொண்டே என்னைப் பார்த்து ஹரி சிகரெட் பிடித்துவிட்டு வருவார் என்று அவளே பாவனையாகப் புகை இழுத்துச் சைகை காட்டிச் சிரித்தாள்.
எனக்கு சுப்பு எப்போது வீட்டுக்குள் வருவாள் என்று இருந்தது. இப்படிச் சிரித்தபடியே வந்து என்னுடைய தோளில் முகத்தை வைத்துக்கொண்டால் சரிதான்.

%
உயிர் எழுத்து
மே - 2013.             எதுவும் மாறிவிடவில்லை


அந்த அறையிலிருந்து சம்போக வாடை அடிக்கிறது.
வார இறுதியில் வருகிற என்னுடைய தாதியின் கணவனை, இந்த இரண்டாவது படுக்கை அறையைப் பயன்படுத்திக் கொள்ள நானே அனுமதித்திருந்தேன். அந்த இளைஞன் ஜெயராஜை எனக்குப் பிடித்திருந்தது. அவன் கண்கள் பொய் சொல்லாதவையாக இருந்தன. ‘எனக்குத்தடையில்லை. நீங்கள் அந்த அறையை உபயோகித்துக் கொள்ளலாம்’  என்று சொன்னபோது அவை மிகவும் உண்மையுடன் ஒளிர்ந்தன.
அவன் இருந்த பொழுதுகளிலும் அவன் இல்லாத வார நாட்களிலும் நான் பெயர் சொல்லியே, ‘ நிர்மலா ‘ என்று கூப்பிட்டேன். நிர்மலாவை நிம்மி என்று கூப்பிட எனக்கு விருப்பம் இல்லை. எந்தப் பிரியத்தின் பொருட்டும் காதலை முன்வைத்தும் நான் என் மனைவியை ‘ சிவகாமி ‘ என்றே அழைத்தேன். ஆறு கீமோ, பன்னிரண்டு கதிரியக்க மருத்துவத்திற்கும் தாண்டி, அவளுடைய மிகப் பிந்திய மஞ்சட்காமாலை தினங்களில் கூட எந்தச் செல்லப் பெயரிட்டும் அழைக்கவில்லை. அவள் தன்னுடைய அறுபத்தாறு வயதின் இறுதி தினத்தைக் கிழித்துப் பறக்கவிடும் வரை, தான் வேறேனும் அப்படியொரு செல்லப் பெயரால் அழைக்கப்பட விரும்பினாளா என்று தெரியாது.
மனிதர்கள் கடைசிவரை இன்னொரு மனிதரிடம் முற்றிலும் தன்னை வாசித்துக் காட்டிவிடுவது இல்லை. ஒளித்துவைத்தவை என்று அல்ல, வாசிக்க அவசியமற்றவை என்று தீர்மானிக்கப்பட்ட பக்கங்கள் உள்ள ஒரே ஒரு பிரதிப் புத்தகம் அது.  குறிப்புகளுக்காக சில சமயங்களில் விடப்பட்டிருக்கும் வெள்ளைக் காகிதங்களில்தான் சில வரிகள் பூரணமாக மரணத்திற்குப் பின்பு வாசிக்கப்படவேண்டிய உயிலாக, ஒரு ரசாயன லிபியில், வேறென்ன கண்ணீரால், எழுதப்பட்டிருக்கின்றன.
சிவகாமி தன் இறுதி இரவில் மிக மஞ்சளாக இருந்தாள்.  நாட்களை எண்ணிக்கொண்டு நாங்கள் மருத்துவ மனை வாடையில் இருந்து விடுபட்டு வீட்டிற்கு வந்திருந்தோம். அதில் எங்கள் மகனுக்கு மிகுந்த கோபம். அவன் அவனுடைய தாயாரைக் கடைசி நொடிவரை காப்பாற்றிவிட விரும்பினான். நான் மிகச் சுருக்கமாக, ‘மருத்துவம் முந்திய நொடிவரையே காப்பாற்றும்என்று சொன்னேன். அதி வெறுப்புடன் என்னைப் பார்த்து, சிவகாமியின் கையை கட்டிலின் பச்சை விரிப்பில் வைத்துவிட்டு வெளியே போனான்.  அவனுக்குக் கேட்கட்டும் என்றே, ‘ அவள் மட்டுமல்ல. எல்லோருமே அவரவர் வீட்டில்தான் அந்தக் கடைசிக் கதவைத் திறந்துவைக்க நினைக்கிறோம் ‘ என்றேன்.
மருத்துவர் குழு அதைப் புரிந்துகொண்ட விதம் அருமையானது. எனக்குச் சற்று இளையவராகத்தான் இருப்பார் அந்தப் பெண் மருத்துவர். நடுவகிடு எடுத்து நரைத்திருந்த கூந்தலில் இடவலமாக மருத்துவக் காருண்யம் வழிந்துகொண்டிருந்தது.  சிவகாமியின் பக்கத்தில் அமர்ந்திருந்த என்னுடைய வலது கையை, இடது கை சிவகாமியின் மேல் இருந்தது, எடுத்து முத்தமிட்டுத் தோளைத் தட்டிக்கொடுத்தார். ‘எங்களின் அக்கறைக்குரிய நோயாளியின் அக்கறை மிகுந்த கணவர் நீங்கள் ‘ என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.  எத்தனை மரணங்களின் சாட்சியாக இருந்தாலும், ஒரு மருத்துவர் மீண்டும் ஒரு மரணத்திற்குச் சாட்சியமளிக்க விரும்புவது இல்லை போலும்.  திரும்பிவந்து சிவகாமியின் சிகை வருடி, மருத்துவக் கோப்பில் சிறுகுறிப்பு எழுதிவிட்டு என்னைப்பார்த்துப் புன்னகைத்தார். சிறிய கீற்றுப் போன்ற அவருடைய உதடுகள் எங்களை வழியனுப்பிய விதம் அது.
வீட்டில் திரைச்சீலைகள் வேறு விதமாக அசைகின்றன. ஒரு நோயாளியின் கட்டிலை நோக்கி எப்படிச் சாய்ந்து விழவேண்டும் என்று வீட்டின் வெளிப்பக்க வெயில் அறிந்திருக்கிறது.  பின் வீட்டு மா மரம் இந்த வீட்டுச் சுற்றுச் சுவரின் மேல் தணிந்து கிடக்கும் கிளையில் உள்ள இலைகள் செப்புப் போலத் தொங்கும் நாக்குகளை அசைக்காமல் மரணத்தை நக்கக் காத்திருக்கின்றன. சிவகாமி மிக மஞ்சளாக இருந்தாள். வளர்ந்தும் வளராமலும் இருந்த தலைமுடியின் கீழ் அவளுடைய முகம் வேறு யாருடையதோ போல இருந்தது.  தோல் கருத்து உரிந்த உதடுகள்.  காற்றோசையுடன் தொண்டையிலிருந்து கிளம்பும் சப்தம் உலர்ந்த உதடுகளைத் தாண்டமுடியாமல் நாக்கின் கீழ் உள்ப்பக்கம் உதிர்ந்தது. அப்போது எனக்கு உண்டான உணர்வைக் குறித்து எனக்கு எந்த வெட்கமும் இல்லை.  யாரிடம் சொல்வதிலும் தயக்கம் இல்லை.
‘ ஜெயராஜ். நிர்மலா எங்கே? ‘  என்று கேட்டேன்.
‘ குளித்துக்கொண்டு இருக்கிறாள், வந்துவிடுவாள் ‘ என்று குனிந்துகொண்டே சொன்னான். வெட்கம் இருந்தது.  ‘ நீயும் குளிக்கவேண்டியவன் தானே ‘ என்று சொன்னபோது என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டு மறுபடியும் முன்னால் கிடந்த ஆங்கிலத் தினசரியின் ஞாயிற்றுக் கிழமை இணைப்பைப் பிரித்தான்.
‘ நிர்மலா குளிக்கிறாள் என்ற ஞாபகத்துடன், எனக்குத் தெரியும், உன்னால் முழுதாக இரண்டு வரிகள் கூட வாசிக்க முடியாது ‘ என்று நான் சிகரெட்டைப் பற்றவைத்தேன்.
‘ நீங்கள் புகைப்பதை மட்டுப்படுத்த வேண்டும் ‘ என்று சற்றுப் பதற்றத்துடன் ஜெயராஜ் சொன்னான். ‘ நிர்மலா உங்களைக் கண்காணிக்கச் சொல்லிவிட்டே போனாள்’  -  அவன் சொன்னபோது நான் என் முதல் கொத்துப் புகையை வெளியேற்றினேன். தங்க மினுமினுப்புடன் ஒன்றே ஒன்று மட்டும் உருவப்பட்டுச் செறிவாக இருந்த, புகையிலைத் துணுக்கு சிந்தாத, சிகரெட்களின் அடுக்கு எனக்குப் பிடித்திருந்தது. டப்பாவின் பிளந்த வாயை மூடி வலப்புறம் வைத்தேன்.
‘ நேற்றிரவு நீ என்னுடன் குடிக்கும் போது உன்னை நான் மட்டுப்படுத்தினேனா? இல்லையே ஜெயராஜ். ‘
‘ இல்லை. நிம்மி நீங்கள் புகைப்பது குறித்து சொல்லிவிட்டுப் போனாள் ‘
‘ ஒரு தாதி தாதியாக இருக்கட்டும். ஜெயராஜ் ஜெயராஜாக இருக்கட்டுமே நான் இப்படிச் சொன்னது ஜெயராஜிற்கு சௌகரியத்தை விட அசௌகரியத்தையே உண்டாக்கியிருந்தது. நான் சொல்லப் போகும் விஷயத்திற்கு அவனை மேலும் கொஞ்சம் தளர்த்த விரும்பினேன்.  நேற்று இரவு ஜெயராஜை வாசிக்கச் சொன்ன விஸ்லவா சிம்போர்ஸ்கா கவிதைகள் நினைவுக்கு வந்தன.
‘ வாதைகள், இறந்தவனுடன் திட்டமிடுவது , இரண்டு கவிதைகளையும் நீ நன்றாகவே வாசித்தாய். அந்த நல்ல வாசிப்பை அடைய உனக்கு மூன்று மிடறுகள் தேவைப்பட்டன. நிர்மலாவின் குறைந்த படிப்புக்கு அவளுடைய ஆங்கில உச்சரிப்புக் கூடுதலானவை. உன்னுடையது ரசனையும் பாவமும் நிரம்பியது. ஒரு வரி வாசித்தால் போதும். எழுதிய சிம்போர்ஸ்காவைக் கேட்க வைத்துவிட்டால் சரி ‘
ஜெயராஜ் சட்டென்று மனனத்தில் சொல்ல ஆரம்பித்தான்.
எதுவும் மாறிவிடவில்லை.
நதியோட்டம் தவிர,
காடுகள், கரைகள், பாலைகள், பனிவரைகள் தவிர.
ஒரு சின்ன ஆத்மா அலைகிறது நிலவெளிகளில்
மறைகிறது, திரும்பவருகிறது,
பக்கம் நெருங்குகிறது, தூர விலகுகிறது,
நழுவி நழுவி அதற்கே அது வேறொன்றாக.. ‘
அவன் சொல்லிக்கொண்டே போனான்.
‘ இப்போது நீதான் வேறொருவனாக ஆகிவிட்டாய் ஜெயராஜ் ‘
‘ சில நேரங்களில் அதே ஒருவனாக இருக்க முடிவதில்லை ஸார் ‘ என்றவன் ‘ எதற்கு நீங்கள் நிர்மலாவைத் தேடினீர்கள்? ‘ என்றான் என்னிடம்.
‘ நீ வேறொருவன் ஆகிவிட்ட பொழுது, நான் வேறொருவனாக ஆகியிருந்த கதையைச் சொல்லத்தான். அவள் இல்லாத போது உன்னிடமே சொல்ல விரும்பினேன். நிர்மலா மேலும் குளிக்கட்டும்.  மேல் நிலைத் தொட்டியில் என்றென்றைக்கும் தண்ணீர் வற்றாதிருப்பதாக ‘ – இதைச் சொல்லும் போது வழக்கமான அளவு சிகரெட்டைப் புகைத்து முடித்திருந்தேன். ஜெயராஜ் என் கண்களை விலகாமல் பார்க்கிற நிலையில் இருந்தான்.
நான் துவங்கினேன்.
‘ நிறைய இடைவெளி ஆகிவிட்டது. நிர்மலா எங்கே என்று உன்னிடம் கேட்ட நிமிடத்தில் இதைச் சொல்லத் துவங்கியிருந்தால், என்னுடைய மனைவி மரணத்திற்குக் காத்திருந்த கட்டிலின் மேல் விழுந்த வெயிலைப் பற்றிய ஞாபகத்தின் வாக்கியம் முடிவதற்குள் இதை உன்னிடம் ஆரம்பித்திருக்க முடியும். குறைந்த பட்சம் அதனுடைய அடுத்த வாக்கியமாகவாவது ‘
முகங்களைப் பார்க்கத் துவங்கி, அவற்றிலிருந்து விலகி, அவற்றைத் தொலைத்து அப்பால் போய்விடுவதுதான் ஞாபகங்களைச் சொல்வதற்கான திறந்த மைதானங்களை நமக்குத் தரமுடியும். நான் எழுந்து நகர்ந்து, புதைந்துபோகிறது மாதிரிக் கிடந்த கருப்பு சோபாவின் பின்னால் நின்று சொல்லத் துவங்கினேன்.
‘ எனக்கும் சிவகாமிக்கும் உடலுறவு அற்றுப் போய் வெகு காலம் ஆயிற்று. அது ஒரு பதினைந்து வருடங்கள் இருக்கும்.  அப்போது அவள் அவளுடைய நிச்சயமற்ற மாத விலக்குகளிலும் உதிரப்பெருக்கிலும் இருந்தாள். என்னைச் சந்தேகிக்கவே சந்தேகிக்காதவள் ஆகவும். சந்தேகிப்பதைத் தவிர வேறொன்றும் செய்யாதவள் ஆகவும் அவள் இருந்த இடைவெளியில்தான் என்னுடைய அந்த ஒரே ஒரு விலகல் நிகழ்ந்தது. ஆறு பாறைக்கு விலகி ஆற்றோடு சேரும் நேரத்திற்குள் உண்டாகும் அத்தனை சுழிப்பும் நுரைப்பும் இன்னொரு பெண் குறுக்கிடும் அந்த விலகலுக்கு இருந்தது உண்மைதான். சிவகாமி அதிகபட்சமாக என்னைத் தண்டித்தாள். தண்டனையைக் குறைக்கவே இல்லை. அதன் பின் ஒரு முத்தத்திற்குக் கூட அவள் என்னை அனுமதித்தது கிடையாது. ‘ – நான் ஜெயராஜையோ, சோபாவையோ, புத்தக அலமாரிகளையோ, தொலைக்காட்சி பெட்டியையோ, ஒரு சிறுவனைப் போல இடக் கால் மடக்கி வலக் கால் முட்டியில் முகம் சாய்த்துப் பார்க்கும் புத்தர் சிலையையோ எதையுமே பார்க்கவில்லை.
பத்துப் பன்னிரண்டு அடி உயரத்திற்குக் கண்ணாடிச் சட்டமிட்டுத் துடைக்கப்பட்டுத் தெளிவாக இருந்த ஜன்னல் பக்கம் வந்திருந்தேன். இப்போது அனேகமாகக் காணாமல் போய்விட்ட, கல்வாழைகள் பூத்திருக்கிற முன் வாசலையே பார்த்தேன்.  வெயிலின் தள்ளாட்டத்தோடு ஒரு மஞ்சள் வண்ணத்துப் பூச்சி அவசரம் அவசரமாகத் தரையில் விழும் நிழலை பொறுக்கி எடுத்து அப்புறப்படுத்திப் பறந்துகொண்டு இருந்தது. குறைவற்ற வெயிலில் களகளவென்று தண்ணீர் ஓடுகிற ஒரு ஓடையாக என் சொற்கள் குளிர்ந்திருந்தன.
‘ ஜெயராஜ். எனக்கு எழுபத்தி இரண்டும் கூடுதலும். அவளுக்கு அறுபத்தாறு. கட்டிலில் ஒரே ஒரு புதிய வைக்கோல் துரும்பு போலக் கிடந்தாள்.  அடைக்கலாங் குருவிகள்  கூடுகட்டக் கவ்விக்கொண்டு போகும்போது தவறி விழுமே அந்தத் துரும்பு.  முற்றிய மஞ்சள் காமாலையில் விடைபெற்றுக் கொண்டிருந்த அவளையே பார்த்துக்கொண்டு இருந்தேன்.  நீ நம்ப மாட்டாய் ஜெயராஜ். யாருமே கூட.  இந்த பதினைந்து பதினாறு வருடங்களின் தண்டனையை நான் அக்கணம் முடித்துக்கொள்ள விரும்பினேன்.  சிவகாமியை முழுவதுமாக மறுபடி பார்க்கவேண்டும் போல இருந்தது.  அவளுடைய மஞ்சளில் குளித்து நானும் மஞ்சளாகிவிட வேண்டும்.  அப்படி நினைக்கும் போது என்னிடம் பல வருடங்கள் குறைந்துவிட்டிருந்தன.  பழைய சினிமாக்களில் படிப்படியாக கால், இடுப்பு, மார்பு, முகம் என்று கல் சிலைக்கு மனுஷ உரு வருவதைக் காட்டுவார்களே அது மாதிரி ஆகியிருந்தேன். என் அடிவயிற்றுக்குக் கீழ் நிகழ்ந்ததை என்னாலேயே ஒரு ஆச்சரியமாக மட்டுமே உணரமுடிந்தது. கிளர்ச்சி என்று அதைச் சொல்ல மாட்டேன். அது ஒரு நிலை. அது ஒரு உயரம்.  என்னுடைய உயரத்தில் என்னை நிறுத்திவிட்டு அவள் மஞ்சளாகப் படுத்திருந்தாள். ‘
நான் உட்பக்கம் திரும்பி, ‘ஜெயராஜ். நான் புகைக்கவேண்டும் ‘ என்றேன். ஜெயராஜ் இம்முறை ஒன்றும் சொல்லவில்லை.  சிகரெட் பெட்டியையும் தீப்பெட்டியையும் என்னிடம் கொடுத்துவிட்டு, ‘போ. போய் உன் இடத்தில் உட்கார்’  என்று நான் சொன்னது போல மறுபடி அதே இடத்தில் அதே போல உட்கார்ந்தான்.  ஏற்கனவே வரையப்பட்டிருந்த சித்திரத்தின் ஒரே மாறுதலாக, மாடிப் படிக்கட்டுகளில் இருந்து இறங்கி, சாப்பாட்டு மேஜையின் கீழ் வரை போய், பூனை படுத்துக்கொண்டு தன்னை நாக்கால் சுத்தப்படுத்தத் துவங்கியிருந்தது.
‘ அடுத்த கணமே அந்த உயரம் போதுமென்று தோன்றிவிட்டது. நான் என்னைத் தளர்த்திக் கொண்டேன். ‘நீ தராததை நான் எடுத்துக் கொள்வதற்கில்லை சிவகாமிஎன்று அவளையே பார்த்துக்கொண்டு நின்றேன். அவளை அப்போதுதான் பார்ப்பது போல என்னால் பார்க்க முடிந்தது. அவள் மஞ்சள் வெயில் போல இருந்தாள்.
நான் திரும்பிய போது ஜெயராஜ் பக்கத்தில் நிர்மலாவும் இருந்தாள். அவள் கலங்கிய கண்களுடன் நின்றாள். குளித்து முடித்திருந்த  அவளை, இந்தக் கண்கலங்கல் ஒரு பீங்கான் பொம்மை போலத் துல்லியமாக்கி இருந்தது.
‘ இதையெல்லாம் இப்போது எதற்கு ஸார் சொல்கிறீர்கள்? ‘ நிர்மலா தன் கையில் வைத்திருந்த தேநீர்க் கோப்பையை வாங்கிக்கொண்டு ஜெயராஜ் என்னிடம் வந்துகொண்டு இருந்தான்.
‘ எதையும் எப்போதும் சொல்வதற்குரிய வயதையும் தனிமையையும் சிவகாமி இறந்த தினத்திலிருந்தே நான் அடைந்துவிட்டேன் என்பது அந்தத் தேனீர்க் கோப்பைக்கே தெரியும். உனக்கும் நிர்மலாவுக்கும் தெரியாவிட்டால் எப்படி? ‘ -  நான் நிர்மலாவைப் பார்த்தபடி சொன்னேன்.
‘ நீங்கள் நேற்றிரவு சரியாக உறங்கவில்லை என்று நினைக்கிறேன். உங்களுக்கு ஓய்வு தேவைப்படுகிறது ஸார் ‘ நிர்மலா தொண்ணூறு சதவிகித மரியாதையுடன் பத்து சதவிகிதப் புன்னகை கலந்து சொன்னாள். உடனடியாக என்னை உட்கொள்ளச் செய்யவேண்டிய அவசர மாத்திரைகளை அவள் மனதில் வரிசைப்படுத்தியிருக்க வேண்டும்.
‘ உண்மைதான். நேற்று இரவு உறங்கவில்லை. ஆனால் சற்று முன்பு உறங்கிவிட்டிருந்தேன். ஒரு கனவு காணும் அளவுக்கான உறக்கம். கனவிலும் சிவகாமி அல்லது சிவகாமி போன்ற ஒருத்தியே வந்தாள். நிறை அம்மணமாக. மேலிருந்து கீழ் வரை மஞ்சள் பூசியிருந்தாள்.  அப்போது அரைத்து அப்போதே பூசிக்கொண்டது போல, திப்பி திப்பியாக மஞ்சள். பூசின விரல் அடையாளம் நெஞ்சில் தெரிகிறது. வயிற்றில் தெரிகிறது. அதற்கும் கீழேயும். நான் இதே போல ஒரு கண்ணாடி ஜன்னலுக்குள் நிற்கிறேன். பெய்கிற மழையில் அவள் தூரத்தில். தூரத்திலா பக்கத்திலா என்பது உறுதியில்லை. அவளையும் தாண்டி நீலமாக மலைகள். இறுதிவரை மலைகள். வெள்ளி ரிப்பன் போல அருவி வழிவது கூட. ஒரு நேர் கோட்டில் வைத்தது போல எல்லாவற்றையும் பார்க்கிறேன். ஆனால் தீர்மானமாக, அவள் என்னைப் பார்க்கவே இல்லை. பார்த்திருக்கலாம். கனவிலாவது பார்த்திருக்கலாம். ‘
சற்று அமைதியாக நின்றேன். அந்த இடத்தில் என்னை ஆணியிட்டு அந்தக் கனவுடன் சேர்த்து முறுக்கியது போல இருந்தது. ‘ எதுவும் மாறிவிடவில்லை. இல்லையா ஜெயராஜ்? ‘ என்று சிரித்தேன்.
ஜெயராஜிடமிருந்து தேநீர்க் கோப்பையை வாங்குவதற்குக் கையை நீட்டினேன். கோப்பைக்கும் என்னுடைய விரல்களுக்குமான இடைவெளி முற்றிலும் குறைவதற்குள்
சரியாகத்தான் சொன்னாய் நிர்மலா. எனக்கு ஓய்வு தேவைப்படுகிறது ‘ என்று சொல்லிக்கொண்டு இருக்கையில், இடது புறமாக என்னை யாரோ வலுவாகத் தள்ளுவது போல இருந்தது.

%

மலைகள்.காம்
இணைய இதழ் - 25.

Tuesday 7 May 2013

கனியான பின்னும் நுனியில் பூ.
இந்தக் கடையில் வாங்கிவிடுவோமா?நான் தினகரியைக் கேட்கும்போது அவள் குனிந்து குனிந்து வாகைப் பூக்களைப் பொறுக்கி உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு இருந்தாள். திரிச்சூர் பூரத் திருவிழாவில் யானை மேல் இருந்து இரண்டு பக்கமும் வீசுகிற கவரி மாதிரி, ஒவ்வொரு பூவும் சிவப்புக் குஞ்சமும் காம்புமாக இருந்தது. அவ்வளவு பெரிய .வாகைமரத்தின் கீழ் நான் நிறுத்திய வண்டியின் மேல் சற்றுச் சாய்ந்தாற்போல நின்றுகொண்டு, ‘சரி ப்பாஎன்றாள். அவள் இந்தப் பழக்கடையைப் பார்த்த மாதிரியே தெரியவில்லை.
ரயில் வருவதற்காக அடைத்துப் போட்டிருந்தார்கள். பத்து முப்பது வண்டிகள், கார்கள், ஆட்டோக்கள் என்று ஒன்றுக்குள் ஒன்று கோர்த்துக்கொண்டு நிற்கிற இந்த ரோட்டில் இப்படிக் காத்துக்கிடப்பது பிடித்திருந்தது. ஒரு பல்ஸர் வாகனத்தின் பின் சக்கரத்துக்குக் காற்றுப் பிடித்துக்கொண்டே, கம்பங்கூழ் தர்பூசணிக்கீற்று விற்கிற தாடிக்காரருடன்  சிரித்துக்கொண்டு இருப்பவரை இந்த உச்சி வெயில் ஒன்றும் செய்யவில்லை. சித்த வைத்தியசாலை அருகில் இருப்பது போல வாடையடிக்கிற இந்த இடத்தில் பூவரச மரம் தவிர வேறு எதையும் காணோம்,
ஆட்டோக்கள் பழுதுபார்க்கிற ஒர்க்‌ஷாப்பில் இருந்து, ‘காதலின் தீபம் ஒன்று, ஏற்றினாளே இன்றுஎன்ற பாட்டு வந்துகொண்டு இருந்தது. தினகரி வாகைப் பூவைக் காம்பைப் பிடித்துத் திருகியபடி, ‘அப்பா, உங்க ஆளு பாட்டு வரிசையா போடுதான்என்றாள். அதற்கு முன்புதான் ‘வந்ததே... ஓ,ஓ குங்குமம். கண்களே .. ஓ,ஓ சங்கமம்முடிந்திருந்தது. ‘அனேகமா அடுத்தது ‘ராசாவே ஒன்ன நம்பிதான்என்று சொல்லியபடி என் பக்கம் வரும்போது திருச்செந்தூர் பாஸஞ்சரின் சத்தம்.
வந்துகொண்டே இருந்தவள் அதே இடத்தில் நின்று, ‘நல்லா இருக்கு ப்பா ரயில் கூப்பிடுகிறதுஎன்றாள். அது எப்படி இந்த ரயில் சத்தம் மட்டும் எல்லோருக்கும் பிடிக்கிறது? தினகரி ‘நல்லாருக்கு ப்பாஎன்று என்னிடம் சொல்வது போல, நானும் ‘நல்லா இருக்குல்லா ம்மா?என்று என்னுடைய அம்மாவிடம் கேட்டிருக்கிறேன். அப்படிக் கேட்ட நேரத்தில் அம்மா வைத்திருந்த சிவசைலம் தாழம்பூ கூட ஞாபகம் வருகிறது. ரயில் சத்தம் இத்தனை வருடம் கழித்து ஞாபகம் வரும்போது தாழம் பூ வாசம் வரக்கூடாதா என்ன?
சொல்லப் போனால் அது தாழம் பூ வாசனை இல்லை. பக்கத்தில் இருக்கிற இந்தப் பழக்கடையின் வாசனை. பழக்கடை என்று சொல்லக் கூடாது. பழமுதிர் சோலை. எங்கே பார்த்தாலும் பத்து அடிக்கு ஒன்று. அதற்கென்று ஒரு நீல நிற வெளிச்சம். எல்லாத் தோப்பிலும் எல்லாக் காலத்திலும் எல்லாப் பழங்களும் உதிரும் போல. காம்பில் இருந்து கழன்று நேராக இந்தக் கடையின் கூடையில் விழுந்தது போல அத்தனை மினுமினுப்பான சதைப் பற்று.
தினகரி வீட்டை விட்டுப் புறப்படும்போதே, ‘ஆப்பிள் வேண்டாம் ப்பாஎன்று தீர்மானமாகச் சொல்லிவிட்டாள். ‘ஏட்டீ. ஃப்ரண்டு பிள்ளை உண்டாகியிருக்காண்ணு பார்க்கப் போறே. மாதுளம் பழம் நல்லதா நாலு பார்த்து வாங்கிக்கிட்டு போ. சாக்லேட்டு ரொட்டிண்ணு எதையாவது கண்டதையும் கழியதையும்  வாங்கிட்டுப் போயிராதே. உங்க அய்யாவும் நீ சொன்ன சொல்லைத் தட்ட மாட்டா. சரிண்ணு சொல்லியிருவா..என்று சொல்கிற அம்மாவையும் மறுக்கவில்லை. ‘சரி ம்மாஎன்று சொல்லிக்கொண்டாள். லேசான சிரிப்பு வேறு என்னைப் பார்த்து. அது எப்படி என்று தெரியவில்லை! இந்தப் பெண் பிள்ளைகளுக்கு மட்டும் தட்டும் வாடாமல் முள்ளும் கோணாமல் சரியாகத் தராசைப் பிடிக்கத் தெரிந்துவிடுகிறது.
எனக்கும் மாதுளம் பழம் வாங்கத்தான் பிடித்திருந்தது. இப்போது எல்லாம் மாதுளம் பழத்துக்குச் சுளை இருப்பது போல் எட்டாக வகிர்ந்து, பூப் போல இதழ் இதழாக விரித்து நான்கு பழங்களை முன்னால் பார்வையாக வைத்துவிடுகிறார்கள். இந்த மாதுளம் பழ விதை, வெள்ளரிப் பிஞ்சு விதையை எல்லாம் இப்படி வரிசையாக அடுக்கவேண்டும் என்று யார் சொல்லிக் கொடுத்தார்கள். எனக்குத் தோன்றுவது போல தினகரிக்கும் தோன்றுமா? ‘யாரு ப்பா சொல்லிக்கொடுத்தாங்க?என்று அவள் என்னிடம் கேட்கவேண்டும் போல இருந்தது. என் கையில் பழக்கடைக்காரர் பிளந்துவைத்த மாதுளையை ஏந்தியிருந்தேன். ஏதோ ஒரு கேரளத்துக் கோவிலில் ஆயிரம் பெரும் திரி ஏற்றுவதற்கு விளக்கின் ஒவ்வொரு திரி முகமாகத் திருப்பிக்கொண்டு இருந்தது போல, அதைத் திருப்பினேன். ‘நல்லா இருக்கு இல்லேஎன்று பக்கத்தில் தினகரி நிற்கிற ஞாபகத்தில் கேட்டேன். அவள் இல்லை.
‘நல்லா இருக்கு சார்பக்கத்தில் நிற்கிறவர் சிரித்தார். நரை முடிக்குத் தேய்க்கிற தைலமோ என்னவோ, அபிஷேகத் திருநீறு வாசனை மாதிரி அடித்தது. தாடி வளர்ந்திருந்தது. அடர்த்தியுடன் அது கன்னத்தில் இரண்டு வரிகளாக மடிந்து ஒதுங்க, அவர் சிரிப்பது நன்றாக இருந்தது. பக்கவாட்டில் இருந்து பார்க்கும் சமயம் இவ்வளவு அழகாகத் தெரியும் மூக்கைச் சமீபத்தில் பார்த்ததில்லை. கல்லூரியில் தாவரவியல் சொல்லிக்கொடுத்த தாம்ஸன் சார் முகம் ஞாபகம் வருகிறது. தேர்வு எழுதுகிற அறையின் குறுக்கே பறந்து கத்திக்கொண்டு வலப்புற ஜன்னல் வழியாக வெளியேறிய ஒரு பயந்த மீன்கொத்தியின் சத்தம் கூடக் கேட்கிறது. ஒன்றில் இருந்து ஒன்றுக்குத் தாவுகிற இந்தப் பழக்கமே என் கையில் கீற்றுக் கீற்றாகப் பிளந்து சிவந்துகிடப்பதாகத் தோன்றியது.
நான் தினகரி எங்கிருக்கிறாள் என்று பார்த்துக்கொண்டிருந்தேன். தினகரி பழக்கடைகளில் ஒரு தானியம் கொத்துகிற சிறு பறவை ஆகிவிடுவாள். ஒரு கருப்புத் திராட்சையைப் பிய்த்து வாயில் இடுவாள். அடுத்து பச்சையை. ஒரு நாவல் பழத்தை. ஒரு சிவந்த ப்ளம் பழத்தைக் கூட. கடைக்காரர்களுக்கும் அவளைப் பார்த்தால் ஒரு பறவையாகத்தான் தோன்றிவிடுமோ என்னவோ? ஒன்றும் சொல்வதில்லை. அப்படியே சொன்னாலும், ‘நல்லா இருக்கா பாப்பா?என்றுதான் கேட்கிறார்கள். அல்லது அப்படிக் கேட்பது போலச் சிரிக்கிறார்கள்.
தினகரி கையில் ஒரு ஸ்ட்ராபெர்ரி பழப் பாக்கெட்டைக் கையில் வைத்துக்கொண்டு அங்கிருந்து காட்டுகிறாள். இறக்குமதியானது என்றுகூடக் கடைக்காரர் சொல்லவில்லை.  அப்படிச் சொன்னால் மதிப்புக் குறைவு. ‘இம்போர்ட்டட்  சார்என்கிறார். நான் தினகரியை இங்கே வரச் சொல்கிறேன்.
‘இதை எடுங்க சார். நல்லா இருக்கும்பக்கத்தில் நின்ற தாடிக்காரர்   மாதுளை இருக்கும் கூடையில் இருந்து ஒவ்வொன்றாக பார்த்துப் பொறுக்கிக் கொடுக்கிறார். உள்ளங்கை ஈரத்தால் அதன் தோலைத் தடவிய படி ‘அணில் நகம் பட்டிருக்குஎன்கிறார்.. தேங்காயைச் சுண்டிப்பார்த்துத் தருவது போல ஒன்றைச் சுண்டிக்கூடப் பார்த்தார். ஒன்றை சரியில்லை எனத் தனியாக வைத்தார். அது சரிந்து கூடைக்குள் உருண்டபோது, ‘அடஎன்று சிரித்தார். அந்தச் சிரிப்பு வித்தியாசமாக இருந்தது. என்னிடம் அவர் நீட்டிய மாதுளைகளை வாங்கிக் கொண்டேன்.
அவருடைய கையில் இருந்த பையில் கொய்யாப் பழங்கள் இருந்தன. கிருஷ்ணன் கோவில் பழங்கள் போல. மிகச் சீராகப் பொறுக்கியெடுத்த பழங்களின் தேர்வுதான். ஒன்றைச் சரியாகத் தேர்கிறவர் இன்னொன்றையும் அப்படியே செய்வார் என்று நம்பலாம். அது எப்படி கொய்யாப் பழமும் மாதுளம் பழமும் ஒன்று ஆகுமா என்று திருப்பியும் கேட்கலாம். அவரை ஒட்டி, அவருடைய வேட்டியைப் பிடித்தபடி ஒரு பெண்குழந்தை இருந்தது. கையில் இருந்த குடையின் நிழல் அதனுடைய தோள்வரை விழ, அது அப்பாவையும் என்னையும் பார்த்தது.
அகலமான கண்கள். அகலமான கண்களில் மட்டும் எப்போதும் சமபங்கு கண்ணீரும் சமபங்கு சிரிப்பும் நிரம்பியிருப்பது போலவே இருக்கிறது. எந்தப் பிரயாசையும் இன்றி, ஒரு பேரழகு வந்துவிடுகிறது அந்தக் கண்களால் பார்க்கிற யாருக்கும். அது தன் அகண்ட கண்களால் அப்பாவைப் பார்த்தது. என்னைப் பார்த்தது. சிறு வெட்கம் வந்து கீழே குனிந்து சிரித்தது. குடையின் பிளாஸ்டிக் கைப்பிடிக்குள் ஒளிந்திருக்கும் நீல நிற, ஆரஞ்சு நிறக் குமிழிகளை வெளியே உதறிச் சிந்துவது போல் குடையை லேசாகச் சுழற்றியது. மறுபடியும் அப்பாவைப் பார்த்தது.
தினகரி இவ்வளவு நேரமும் எங்கள் மூன்று பேரையும்தான் பார்த்துக்கொண்டு இருந்தாள் போல. என்னுடைய முதுகை லேசாகச் சுரண்டினாள். அது போதாது என என் தோள்ப்பட்டையை வலுவாக உலுக்கினாள்.
‘என்ன, ஸ்ட்ராபெர்ரி வாங்கணுமா?நான் தினகரியைக் கேட்டேன். என் கையில் அவர் பொறுக்கி எடுத்துக் கொடுத்த மாதுளைகள் இருந்தன. மாதுளைக்கு மட்டும் கனியான பின்னும் நுனியில் பூ.
தினகரி என்னை நகர்த்திக்கொண்டு போனாள். அவளுடைய குரல் மிகவும் தணிந்திருந்தது. என்னுடைய பைக் சாவியை பைக்கிலேயே வைத்துவிட்டது போலவும், அது அங்கே இருக்கிறதா தினகரி என்று கேட்பது போலவும் நான் இன்னும் சற்று அவரை விட்டு நகர்கிறேன்.
‘அந்த ஆளு யாரு தெரியுமா ப்பா?என்று கேட்டாள்.
‘எந்த ஆளும்மா?என்று பழக்கடையைப் பார்த்தேன். பழக்கடைக்குள் மூன்று பேர் இருந்தார்கள். மூன்று பேரும் ஒரு பொட்டுக் கூடக் கசங்காத வெள்ளைச் சட்டைதான் போட்டிருந்தார்கள். இப்போது ரொம்பப் பேர் போடுகிற மாதிரி ‘மந்திரி வெள்ளை’.  மந்திரிகள் பழமுதிர் சோலை வைக்கக் கூடாது என நிபந்தனைகள் உண்டா என்ன?
தினகரி எரிச்சல் படவே இல்லை. வாகைப் பூவைக் குனிந்து எடுத்த அதே நிதானத்துடன் இருந்தாள். ஒரு காட்டுப் பழத்தை முகர்ந்து பார்க்கும் அதே சமனுள்ள துறவுடன் என்னைப் பார்த்தாள். ‘உங்களிடம் மாதுளம் பழங்கள் பொறுக்கிக் கொடுத்தானே அந்த ஆள்என்றாள். நான் எப்படி உடனடியாக அவரைப் பார்க்காமல் இருக்கமுடியும்? ‘அய்யோ. உடனே அங்கே பார்க்காதீங்க அப்பாஎன்று கடித்த பற்களுக்குள் முனங்கினாள்.
எனக்குப் புரியவில்லை. அவரைப் பார்க்காவிட்டால் நான் எங்கே பார்க்கவேண்டும் என்றும் தெரியவில்லை. தரையில் யாரோ சப்போட்டா விதையைத் துப்பியிருந்தார்கள். கருப்புக் கருப்பாக, பளபளவென்று கிடந்தன.
‘அந்த ஆளுதாம் பா. எங்க காலேஜ் போகிற டவுண் பஸ்ஸில, ஒரு ஃபர்ஸ்ட் இயர் படிக்கிற பொண்ணு கழுத்தில கிடந்த சங்கிலியைக் கட் பண்ணப் பார்த்துட்டுப் பிடிபட்டவன். அந்த மூக்கு நல்லா ஞாபகம் இருக்கு. எல்லாரும் உதைச்ச உதையில அன்னைக்கு அவன் மூக்குல இருந்து ரத்தம் வடிஞ்சுக்கிட்டே இருந்துது. சட்டையை வச்சு ஒத்தி ஒத்தி எடுத்துக்கிட்டே இருந்தான்’ -  தினகரி சொல்லிக்கொண்டே போனாள். நான் தினகரி சொல்வதைக் கேட்டுக்கொண்டும் அந்த ஆளைப் பார்த்துக்கொண்டும் இருந்தேன்.
‘இருக்கட்டும் மாஎன்றேன்.
கொஞ்சம் கூட அந்த ரத்தம் ஒழுகுகிற முகம் எனக்குள் பதியவே இல்லை. முற்றிலும் எனக்குப் பக்கத்தில் நின்று மாதுளைகளை அவராகவே தேர்ந்தெடுத்துக் கொடுத்த ஒருவராகவே இருந்தார்.
‘இருக்கட்டும் மாஎன்று மறுபடி தினகரியிடம் சொல்லிக்கொண்டே அவரும் அந்தச் சின்னப் பெண்ணும் நிற்கிற இடம் பக்கம் நகர்ந்தேன். எனக்கு என்னவோ அவருடைய முகத்தை மறுபடி நெருக்கத்தில் பார்க்கவேண்டும் போல இருந்தது. பக்கவாட்டில் அந்த மூக்கு நன்றாகத்தானே இருந்தது. அவரால் நல்ல கொய்யாப் பழங்களைப் பொறுக்க முடிகிறது தானே. இவ்வளவு அகன்ற கண்களுடைய சிறுமி கூட அவருடைய பெண்தானே. நான் யோசித்துக்கொண்டே போகையில் என் கையில் வைத்திருந்த மாதுளைகளில் ஒன்று சற்றுப் பிசகி கீழே உருண்டு விழுந்தது. ஒவ்வொரு பழமும் ஒவ்வொரு விதமாக உருளும் போல. அது தன் போக்கில் உருண்டு நிற்கிறவரை பார்த்துக்கொண்டே நின்றேன்.
குடையைக் கழுத்தோடு இடுக்கிக் கொண்டு அந்தச் சிறு பெண், உருண்டுபோயிருந்த பழத்தை எடுத்து நீட்டியது. சிரித்தது. இன்னொரு மாதுளை போல இருக்கிற அந்த முகத்தின் கனிவு எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அந்தப் பெண்குழந்தை என்னைப் பார்த்துச் சிரித்தது போல, நான் அதனுடைய  அப்பாவைப் பார்த்துச் சிரித்தேன். என்னுடைய சிரிப்பை ஒரு பரிசு பெறுவது போல அவர் வாங்கிக் கொண்டார். தன்னுடைய இடது கையால் மகளின் தலையைத் தன்னுடைய உடம்போடு சேர்த்து இழுத்தார். தன் குழந்தையின் முகத்தை அதே இடது கையால் அதனுடைய இரண்டு கன்னமும் இழுபட வருடினார். அப்படி இழுபடும் போது அவருடைய மகளின் உதடுகள் ஒரு குருவிக் குஞ்சினுடையதைப் போல குவிந்து பிளந்தன.
இன்னும் ஒருமுறை ஒரு பழம் உருள வேண்டும். அதை அது எடுத்துக் கொடுக்க வேண்டும். என்னைப் பார்த்துச் சிரிக்க வேண்டும். அதனுடைய அப்பா இடது கையால் அணைத்துக் கொள்ள, வாய் இப்படி, குருவிக் குஞ்சைப் போலப் பிளக்க வேண்டும். நான் அந்தக் கணத்தை மீண்டும் மீண்டும் விரும்பினேன். ஒரு தகப்பனின் கை இதைவிட நெருக்கமாகத் தன்னுடைய சின்னஞ்சிறு மகளின் கன்னத்தை வருடமுடியாது என்று தோன்றியது,
நான் அவரைப் பார்த்துச் சொன்னேன்.
‘இதே மாதிரி இன்னும் ரெண்டு மூணு பழம் உங்க கையால செலக்ட் பண்ணிக் கொடுங்க’  என்று சிரித்தேன். பக்கத்தில் குடையோடு நிற்கிற அவருடைய பெண்ணை அவரைப் போலவே இழுத்து என்னோடு சேர்த்துக் கொண்டேன்.
தினகரி ஒன்றுமே சொல்லாமல் என் பக்கத்தில் வந்து நின்றாள். அவளுடைய கைகளை சமீபத்தில் என் கைகளில்  வைத்துக கொண்டது இல்லை. எடுத்துவைத்துக் கொண்டேன். லேசாகத் தட்டிக்கொடுத்துக் கொண்டே சொன்னேன், ‘அவரு கொய்யாப் பழம் வாங்க வந்திருக்காரு. நாம மாதுளை வாங்க வந்திருக்கோம். அவ்வளவு தான் மா’.
தினகரியின் கைவிரல்கள் என் கைகளுக்குள் லேசாக அதிர்ந்தது. கொஞ்ச நேரம் அப்படியே இருந்துவிட்டு இறுக்கிப் பிடித்தது. அவள், அவ்வளவு தான் ப்பா’  என்று சொல்லியபடி என்மீது பூப்போலச் சாய்ந்துகொண்டாள்.
குடையை முதுகுக்குப் பின்னால் நன்றாகச் சாய்த்து, எங்கள் இருவரையும் பார்க்கிற அந்தக் குழந்தையின் முகத்தில் திரும்பத் திரும்ப ஒரு முடிக் கற்றை பறந்துவிழுந்து கொண்டிருந்தது
தினகரி என்னை விட்டு விலகி அந்தக் குழந்தையிடம் போனாள். முகத்தில் விழுகிற முடியை ஒதுக்கிவிட்டாள். பக்கத்தில் நிற்கிற அதனுடைய அப்பாவைப் பார்த்துக்கொண்டே               
‘கண்ணு ரெண்டும் நல்லா இருக்குஎன்றாள்.
%


ஆனந்த விகடன்
17-4-2013.

Friday 3 May 2013

பூரணம்

அதென்னவோ கருப்பு பாலித்தீன் பையில்தான் மீனைப் போட்டுக் கொடுக்கிறார்கள்.
மீன் எடுத்துவரும் சரசு அத்தை நைட்டி கரண்டைக்கு மேல்தான் இருக்கிறது. இந்த வயதிலும் அத்தை கொலுசு போடத்தான் செய்கிறாள். அதுவும் மூன்று சலங்கை வைத்த கொலுசு. மீன் வாங்கிக் கொண்டு போகிறபோதே சத்தம் கேட்கிறதா என்றால், அப்படியெல்லாம் இல்லை. வாங்கின புதிதில் கேட்டிருக்கும். நசுங்கிப் போன ஒரு சதங்கையுடன் மூன்று முத்தோடு ஒரு கண்ணி ஏதோ ஒரு ரயில் பிரயாணத்தில் காலடியில் கிடந்து எடுத்த போது எனக்கு சரசு அத்தை கொலுசுதான் ஞாபகம் வந்தது. இதை நான் பூரணலிங்கம் மாமாவிடமே சொல்லியிருக்கிறேன்.
பூரணலிங்கம் மாமா விழுந்து விழுந்து சிரித்தார். “ ஊரு உலகத்தில எங்கன எவள் கால் கொலுசு அந்து கிடந்தாலும் உனக்கு சரசு அத்தை ஞாபகம்தான் வருது மாப்பிளை “ என்று அசோகா பாக்கும் வெற்றிலையும் கலந்த வாசத்தோடு சொன்னார்.  மாமா அன்றைக்கு குடிக்க எல்லாம் இல்லை. அதையும் சொல்ல வேண்டும். நானும் அப்படித்தான்.
சரசு அத்தை நெஞ்சுக்கு மேல் பெயருக்கு ஒரு குற்றாலம் துண்டைப் போட்டிருந்தாள். அவர்கள் வீட்டுப் பூனை,எனக்கும் சேர்த்து மீன் வாங்கி இருக்கிறாய் அல்லவா?என்று அத்தையிடம் கருத்த குரலில் கேட்டுக் கொஞ்சிக் கொண்டே கூடப் போனது. மற்ற நேரங்களில் எல்லாம் தொடையில் கிள்ளுப் பட்ட பச்சைப் பிள்ளை மாதிரி பாக்கு மரத்து மூட்டில் இருந்து கத்துகிற அது, ரொம்பவும் அடக்கமான குரலில், நகத்தை எல்லாம் பாதத்துக்குள் இழுத்து வைத்துக்கொண்டு, தெருவிலிருந்து வீட்டு நடைவரை தன்னுடைய சத்தத்தைச் சிந்திக்கொண்டே போனது.
அப்படி சரசு அத்தை துண்டை மேலே போட்டிருப்பதும், அதோடு இப்படி வெளியில் நடமாடுவதும் எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை என்று பூரணலிங்கம் மாமாவிடம் சொல்லியிருக்கிறேன். “ ஆனித் திருவிழா என்றால் கொடியேத்து இருக்கும் ‘லாஎன்று மாமா லேசாகச் சிரித்துவிட்டு ‘செண்ட்ரல் டாக்கீஸில என்ன படம் மாப்ளே ஓடுது?என்று வேறு பேச்சுக்குப் போய்விடுவார்.
“உனக்கும் பூரணத்துக்கும் எப்படி டே ஒத்துப் போகுது?என்று நிறையப் பேர் என்னிடம் கேட்டுவிட்டார்கள். அதுதான் ஒத்துப் போகிறது என்று தெரிகிறதே, அப்புறம் என்ன, எப்படி என்று என்ன கேள்வி? நான் எந்த பதிலும் சொல்லாமல் சிரித்துக் கொள்வேன்.  சிரிப்புதான் பதில். “என்னடே ஒண்ணும் சொல்ல மாட்டேங்க. சிரிச்சா எப்படி டே?என்று கேட்பார்கள்.  அப்படிக் கேட்பது அனேகமாக சொர்ணா காப்பிப் பொடிக்கடை பூமி அண்ணாத்தை. எல்லோரும் பூமி பூமி என்று சொல்கிறார்களே தவிர, அதுதான் அவருடைய பெயரா என எனக்குத் தெரியாது. இதைக் கேள்விப்பட்ட பூரணம் மாமா என்னிடம் சொன்னார், ‘ நீ சொல்ல வேண்டியது தானே மாப்பிள்ளை.  ‘உமக்கும் தொட்டிப்பாலத் தெருக்காரிக்கும் ஒத்துப் போகுதுல்லா. அதே மாதிரித்தான்என்று. ‘அது யாரு மாமா?என்றால் ‘அது உனக்கு என்னத்துக்கு. நீ பூமிகிட்டே இதைச் சொல்லு. உனக்கு யோசனையா இருந்துதுண்ணா லிங்கம் இப்படிச் சொல்லுதான்னு எம் பேரைச் சொல்லியே சொல்லேன்என்பார்.
பூரணலிங்கம் என்பதைப் பெரும்பாலும் எல்லோரும் பூரணம் என்றுதான் சொல்வோம். மாமா தன்னைப் பற்றிச் சொல்லும் போது ‘லிங்கம்என்று சொல்லிக் கொள்வார். ‘ எங்க அம்மை அப்படித்தான் கூப்பிடுவாஎன்று சொல்வார். அப்படிச் சொல்லும் போது வேறு மாதிரி ஆகிவிடுவார். மாமாவுக்கு அவருடைய அப்பாவைப் பிடிக்கவே பிடிக்காது. ‘சண்டாளன் படுத்தின பாட்டில், எங்க அம்மை வெளித் தெப்பக் குளத்தில மிதந்துட்டா. அவளுக்குப் பிடிச்ச பச்சைக் கலர் சேலையில, வயித்தில் குளவிக்கல்லைக் கட்டிக்கிட்டுக் குதிச்சிட்டா. எனக்குப் பதிமூணு வயசு. என் தங்கச்சி சீரங்கத்துக்கு ஒம்போது வயசு. ரெண்டு பேருக்கும் இடையில நாலு வயசு வித்தியாசம்
இதைச் சொன்னது எங்கே வைத்து தெரியுமா? செய்துங்க நல்லூரில் ஒரு சாராயக் கடையில். அந்தக் கடையில் வேலை பார்த்த யாரோ, மாமாவுக்குப் பழக்கம் போல. லிங்கம். வேறு ஏதாவது மேற்கொண்டுவேணுமா?என்று தற்செயலாக, மாமா பெயரின் பின் பாதியைச் சொல்லிவிட்டார். இந்த மாதிரி நேரங்களில்தான் தலையில்லாமல் வாலும், வால் இல்லாமல் தலையும் எல்லாம் பிடித்துப் போகுமே. பூரணம் மாமா சட்டென்று எழுந்து அவருடைய கையைப் பிடித்துக்கொண்டு, ‘ எங்க அம்மைக்குப் பிறகு நீதான் என்னை லிங்கம்னு கூப்பிட்டிருக்கிற ஒரே மனுஷன்என்று முத்தம் கொடுத்தார். முதலில் அப்படித்தானே ஆரம்பிக்கும். அப்புறம் ‘லிங்கம், லிங்கம்,லிங்கம் ‘ என்று மணி அடிக்கிறது போலத் திரும்பத் திருமபச் சொன்னார். மறுபடியும் முத்தம் கொடுக்கும் போது அழ ஆரம்பித்துவிட்டார்.
இப்படி அம்மாவை நினைத்து அழுகிற பூரணலிங்கம் மாமா அப்பாவை நினைத்து ஒரு தடவை கூட அழுது நான் பார்த்ததில்லை.  மாமாவின் அப்பா கருப்பட்டிக் கடை வைத்திருந்ததாகத்தான் ஞாபகம். ஓலைச் சிப்பங்களில் கருப்பட்டி வந்து கைவண்டியில் மாமா வீட்டில் இறங்குவதை நான் பார்த்திருக்கிறேன்.  சில சமயம், ஒரு பெரிய மர பெஞ்சை வெயிலில் இழுத்துப் போட்டு, கசிந்து போன கருப்பட்டி வட்டுக்களைக் காய வைத்திருப்பார்கள். உலகத்திலேயே மிக அழகான கருப்பு நிறமுடைய மினுமினுப்பான கட்டெறும்புகளை நான் பூரணம் மாமா வீட்டில்தான் பார்த்திருக்கிறேன்.
ஒரு தடவை சப்பாத்தி ஹோட்டலில் நானும் பூரணம் மாமாவும் குளோப் ஜாமூன் சாப்பிடுகிறோம். இரண்டு கண்ணாடிக் கிண்ணங்களில் கெட்டியான கரண்டியைப் போட்டு முன்னால் வைத்ததை ரொம்ப நேரம் பூரணம் மாமா பார்த்துக் கொண்டே இருந்தார். கண் எல்லாம் கலங்கியது அவருக்கு. ;நானும் என் தங்கச்சியும் சமீப காலம் வரைக்கும் இதெல்லாம் சாப்பிட்டதே இல்லை. கருப்பட்டித் துண்டுதான் எங்களுக்கு ஸ்வீட்என்று சொல்லிவிட்டு அப்படியே இருந்தார். ‘நீயே சாப்பிடு மாப்பிளைஎன்று என் பக்கம் கிண்ணத்தை நகர்த்திவிட்டார். அவர் சொன்னார் என்பதற்காக சாப்பிட்டுவிட முடியுமா? நான் சாப்பிடவில்லை. அறுகோணம் போல வெளிப்பக்கத்தில் நீல  நிறப் புடைப்புகள் உள்ள அந்த கண்ணாடிக் கிண்ணத்தில், ஜீராவில் அமுங்கிக் கிடந்த அந்த உருண்டைகள் உண்டாக்கிய துக்கம் மிக்க் கூடுதலானது.
“கடைசியில் உத்தரக் கட்டையில் நாண்டுக்கிட்டு நிண்ணதுதான் மிச்சம்என்று ஒரு நாள் அப்பாவைப் பற்றிச் சொல்லும் போது ஒரு கணக்கப் பிள்ளை மேஜை போல் இருந்த மரச்சாய்வு மேல் உட்கார்ந்துகொண்டு பூரணலிங்கம் மாமா ஒரு சாவி வளையத்தைத் தன் இரண்டு விரல்களுக்கு இடையே ஒரு செத்த எலியைத் தூக்குவது போலப் பிடித்து ஆட்டினார். பத்துக்கு மேற்பட்ட சாவிகளும் முள் வாங்கியும் ஒரு வெள்ளிக் காது குரும்பியும் சலசலத்தன.  “ ஒரு மயித்துக்கும் பிரயோஜனம் இல்லை “ என்று அந்தச் சாவிக் கொத்தை வீசினார். அது ஒழுக்கறைப் பெட்டி, முன்பு இருந்த மூலையில் சருகிக்கொண்டு போனது. நான்கு கால்கள் இருந்த இடம் மட்டும் வெள்ளைக் கட்டங்களாக அதிர்ந்தன. எப்போதோ சிக்கெடுத்து விரலில் சுருட்டி எறிந்த தலைமுடி பயந்து தன் இடத்தை மாற்றிக்கொண்ட்து.
“ சீரங்கத்துக்கு எப்படிக் கல்யாணம் முடிஞ்சிருக்கும்னு நினைக்கே? “ பூரணம் மாமா ஒருநாள் என்னை ரயில் வே ஸ்டேஷன் பெஞ்சில் வைத்துக் கேட்டார். “அந்த ஆள் சாகும் போது எனக்கு பத்தொம்பது வயசு. சீரங்கத்துக்கு பதினாலு பதினஞ்சு இருக்கும். கல்லணை ஸ்கூலில் பத்து படிக்கா. பள்ளிக்கூடம் திறந்து முழுசா ரெண்டு மாசம் கூட இருக்காது. எத்தனை யூனிபாரம் தாவணி. எத்தனை உடுமாத்துத் தாவணின்னு எல்லாம் கிடையாது. இதுதான் அது. அதுதான் இது. ரெண்டும் ஒண்ணுதான். அப்படித்தான் இருந்துது நிலமை.பூரணம் மாமா எதிரே கிடக்கிற தண்டவாளங்களையே பார்த்துக்கொண்டு இருந்தார். சற்று முன்பு போயிருந்த ரயிலில் இருந்து வீசிய ஒரு சாப்பாட்டுப் பொட்டலத்தின் இலையை அலகால் பக்கவாட்டில் இழுப்பதும் பறப்பதுமாக இருந்தது ஒரு காகம். ஒரு வினோத பாதிப் பழுப்பும் பாதிப் பச்சையுமாக இழுபட்ட இலையிலிருந்து தயிர்சாதம் வழுகியும் அப்பியும் சரிந்தது.
“கடைசீல யாரு வந்து கைதூக்கி விட்டாங்க தெரியுமா? அந்த ஆளு வகையில ஒரு தாயோளி கூட எட்டிப் பார்க்கலை. எங்க அம்மையைப் பெத்த தாத்தாவுக்கு இன்னோரு குடும்பம் இருந்திருக்கும் போல. ‘செங்குளத்துப் பெரியம்மை தான் எனக்குப் பேறுகாலம் பார்த்து விட்டாஎன்று எங்க அம்மை சொல்லுவா. அவள் தான் எல்லாத்தையும் கேள்விப்பட்டு துக்கம் கேக்க வந்தா. வீட்டை ஒதுங்க வச்சா. பலசரக்கு வாங்கிப் போட்டா. பண்ட பாத்திரம் என்ன ஏதுண்ணு பார்த்துப் பார்த்து பரிமாற ஆரம்பிச்சா. அவ போறேண்ணும் சொல்லலை. நானும் சீரங்கமும் இருங்கன்னும் சொல்லலை. ஆனா, என்ன நினைச்சாளோ மகராசி, எங்க கூடவே தங்கீட்டா
பூர்ணலிங்கம் மாமா எதிரே அந்த மனுஷி நிற்பது போலக் கும்பிட்டார். “நீ பார்த்திருக்கியா செங்குளத்து அத்தையை?என்று கேட்டுவிட்டு, “பார்த்து இருக்க மாட்டே. ஆனால் பார்க்க வேண்டிய மனுஷி.. உலகத்தில எத்தனையோ அரைவாயும் கொறுவாயுமா பார்க்கிறோம்.  இடையில் இடையில் இப்படி முழுசா ஒண்ணையும் பார்க்கணும் மாப்பிளை. அப்ப தான் நிரக்கும். துருப்பிடிச்சது, கரிப்பிடிச்சது எல்லாத்தையும் ரெண்டு கையிலேயும் புழங்கின பாவத்தைக் கழுவுததுக்கு இப்படித் தட்டோட்டியிலே இருந்து விழுகுத மழைத்தண்ணி மாதிரி யாராவது வந்துரத் தானே செய்தாங்க “
பூர்ணலிங்கம் மாமா தன் உள்ளங்கைகளை காற்றில் நீட்டிக் கொண்டு இருக்கிறார்.  கைகள் திறந்து மேல் நோக்கியபடி எதையோ வாங்கத் தயாராக இருக்கின்றன. இதற்கு முன்பும் ஒருதடவை, உள்ளங்கைகளை மலர்த்தி நீட்டுகிற மாமாவைப் பார்த்திருக்கிறேன். இரண்டு பேரும் கொஞ்சம் அதிகமாகவே சாப்பிட்டிருந்தோம்.  எப்படி அவ்வளவு தூரம் நடந்து அந்த வெளித் தெப்பக் குளத்திற்குப் போனோம் என்று தெரியவில்லை.
தெப்பக்குளத்தின் மேல் பக்கத்துப் படித்துறையும் தென் பக்கத்துப் படித்துறையும்தான் பொதுவாகப் புழக்கம் உடையது. வடபக்கத்தில் சுவர் வைத்து மறித்து, ஒரு பெரிய எவர்சில்வர் பட்டறை வந்து ரொம்ப காலம் ஆகிவிட்ட்து.  மாமா என்னைக் கூட்டிப்போனது கீழ்ப்பக்கத்துக்கு. படித்துறையில் மலம் பொருக்காடிக் கிடந்தது. எப்போது எந்தப் பெண்பிள்ளை இடுப்பில் இருந்து அவிழ்த்துப் போட்ட்தோ, ஒரு சிவப்புப் பழஞ்சேலைத் துண்டு கோவணம் போலக் கிடந்தது. நனைந்த துணி வெயிலில் காய்ந்து சாயம் போய் முறுக்கேறிக் கிடக்கையில் பார்க்க என்னவோ போலத்தானே இருக்கும்.
“ மாமா, இங்கே எதுக்கு உட்காரச் சொல்லுதீங்க? வேற பக்கம் போகலாம்என்கிறேன். மாமா, ‘இருடா கூதியான். இருண்ணு சொல்லுதேன்‘லஎன்கிறார். எதிரே தெப்பக்குளம் முழுவதும் நிரம்பிக் கிடக்கிற குவளையில் எல்லாம் ஒன்று போலப் பூத்துக் கருநீலமாக்க் கிடந்தது. நேற்றையப் பூவோடு நாளையப் பூ எல்லாம் சேர்ந்து இன்றைக்கு இரவு பூத்துக் கிடப்பது போல நினைத்துக் கொண்டேன். அந்தக் கருநீலப் பூக்களை ஒரு தடவை முகர்ந்து  மூச்சு இழுத்துவிட்டு ஒரே மடக்கில் மீண்டும் குடிக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றும் போது, மாமா ஒவ்வொரு படியாக இறங்கி கடைசிப் படியில் உட்கார்ந்து காலைத் தண்ணீருக்குள் தொங்கப் போட்டபடி, குவளையை எல்லாம் விலக்கினார்.
உனக்குத் தெரியாது மாப்பிளே. ஹைஸ்கூலில் வாங்கின எல்லா கப்பையும் இதுக்குள்ளேதான் தூக்கி எறிஞ்சுருக்கேன். சின்னது, பெருசு, சப் ஜூனியர், ஜூனியர், சீனியர்னு கப் கப்பா ஒருநாள் ராத்திரி ஒவ்வொண்ணாத் தூக்கி இதுக்குள்ளே போட்டேன். ஏன் தெரியுமா?  ஏன் தெரியுமா டா? எங்கே டா கூதியான் பார்க்கே? இங்கே என் முகத்தைப் பாருடா. . எங்க அம்மை பச்சைச் சேலையோட இங்கதான் மிதந்துக்கிட்டு இருந்தா.  வாக்கரிசிக்கு இல்லாம நானும் சீரங்கமும் நிக்கோம். அந்த கப்பு எல்லாத்தையும் வச்சு என்ன பண்ண? நாக்கு வழிக்கவா? “
பூரணலிங்கம் மாமா தெப்பக் குளம் மத்தியில் நீராழி மணடபத்தில் எரியும் நீலவிளக்கையே பார்த்துகொண்டு இருந்தாரா, பெரிய கோவில் கோபுரத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தாரா தெரியவில்லை. அவர் எதையோ பார்த்தார் அல்லது எதையுமே பார்க்கவில்லை.
நான் ஆறு படிக்கையில் மாமா டென்த் படித்திருப்பார். மாமாவுக்கு அந்தச் சின்ன வயதிலேயே அவ்வளவு முடியும் நரைத்திருக்கும். வைக்கோல் மாதிரி ஒரு பழுப்பு நிறத்தில் இருக்கிற முடியை வலது பக்கத்தில் வகிடு எடுத்து இடது பக்கமாகச் சீவி இருப்பார். நானூறு மீட்டர் ரேஸ்,  ரிலே ரேஸில் எல்லாம் பூரணம் மாமா ஓடிவருவதைப் பார்க்க அவ்வளவு நன்றாக இருக்கும். கடைசி பத்து இருபது அடி தூரத்தில் அவர் மிதக்கிற மாதிரி வருவார். இறக்கையடிப்பதை நிறுத்திவிட்டுப் பறக்கிற ஒரு பறவை மாதிரி இருப்பார். ட்ரில் சார் கூட சொல்வார், ‘ லாஸ்ட் லாப்புல பூரணம் ஷட்டில் காக் மாதிரி வெயிட்டே இல்லாதது மாதிரி ஆகீருவான்”. பள்ளி மாகசைன் பூராவும் மாமா கப்போடு நிற்கிற படம்தான். ஸ்போர்ட்ஸ் டேயில் பரிசு கொடுக்கவந்த டாக்டர் கிருஷ்ணன், ‘ நீ இங்கேயே நில்லு. எதுக்கு இறங்கி இறங்கி ஏறுதேஎன்று சிரித்து மாமாவைத் தட்டிக் கொடுத்தது உண்டு. அந்தக் கப்களை எல்லாம் எப்படி மாமாவால் தெப்பக் குளத்தில் போட முடிந்த்து?
இதை மாத்திரம் இல்லை. மாமா இன்னும் என்ன என்ன எல்லாத்தையுமோ என்னிடம் சொல்லி இருக்கிறார். ஸ்பின்னிங் மில்லில் வேலை கேட்பதற்காக பெரிய முதலியார் வீட்டுக்குப் போயிருக்கும் போது அந்த வீட்டில் அடித்த சாம்பிராணிப் புகையையும் பற்றிச் சொல்லி இருக்கிறார். அந்த முதலியாரும் அவருடைய வைப்பாட்டியும் ( மாமா அந்தப் பெண்ணைப் பற்றி ரொம்ப அசிங்கமாக வர்ணிப்பார் இப்போது) குரும்பூர்ப் பக்கம் காரை நிறுத்திவிட்டு இளநீர் குடித்துக்கொண்டு நின்றதையும் சொல்வார். “இந்த சந்திரபாபு பாட்டு எல்லாம் எங்கியாவது மொத்தமா கிடைக்குமா மாப்பிளை. பிறக்கும் போதும் அழுகின்றான் பாட்டைக் கேட்டா செத்துரலாம்என்பார். ‘புத்தியுள்ள மனிதன் எல்லாம் வெற்றி காண்பதில்லைபாட்டில அவன் நடக்கிறதையும் துள்ளுகிறதையும் பார்க்கணும். அவன் முன்னால் இந்த தொட்டிப்பய எல்லாம் ஒண்ணுமே இல்லஎன்று குனிந்து ஒரு கப்பிக் கல்லை எடுத்து எதிரே இருக்கிற வால் போஸ்டர் மேல் எறிவார்.
சரசு அத்தையைப் பற்றியும் எவ்வளவோ சொல்லியிருக்கிறார்.  மாமா என்னிடம் சொல்லி இருக்கிறதை எல்லாம் அப்படியே வெளியில் திருப்பிச் சொல்ல முடியாது. “ என்ன மாமா, இதையெல்லாம் போய் என் கிட்டே சொல்லிக்கிட்டு?என்று சொல்வேன். ‘நிலைக் கண்ணாடி மாதிரி மாப்பிளே நீ. புது டிரஸ் போட்டுட்டும் பார்க்கலாம். அவுத்துப் போட்டுட்டும் பார்க்கலாம். உனக்குக் காட்டுததுக்கா பார்க்கிறேன்? எனக்குப் பார்க்கணும்னு தோணுது. பார்க்கிறேன். எனக்கு வலதுன்னா கண்ணாடியில இடது. அதுக்கு வலதுன்னா எனக்கு இடது. நிலைக்கண்ணாடி யாரு கிட்டே போய்ச் சொல்லப் போகுது?இதைச் சொல்லிவிட்டுப் பூரணம் மாமா சிரித்தார். ‘சில சமயம் நிலைக் கண்ணாடி சில்லுச் சில்லா உடைஞ்சு போகும். ஏன் தெரியுமா? இப்படி வெளியிலேயும் சொல்ல முடியாம, அதுக்கு உள்ளுக்குள்ளேயும் வச்சுக்கிட முடியாமத் தான்
நான் அதுவரைக்கும் பாராத ஒரு நிலைக் கண்ணாடியின் உடைந்த சில்லுகளை எனக்கும் பூரணம் மாமாவுக்கும் மத்தியில் சிதறிக் கிடப்பது மாதிரிப் பார்த்தேன். ‘அப்படி உடைஞ்சால் கூட எல்லாச் சில்லுலேயும் நானும் அத்தையும் தாண்டா இருப்போம். ஒண்ணை எடுத்தா அத்தை பூ வச்சுக்கிட்டு நிப்பா. இன்னோண்ணுல அத்தை என்னை கிஸ் அடிச்சுக்கிட்டு இருப்பா. போடா. அவ வேற மனுஷிடா. அவளைக் கொண்டாந்து என் கிட்டே சேர்த்த செங்குளம் அத்தையைக் கும்பிடணும். கோவில் கட்டினால் கூடத் தேவலை’.
மாமா ஒரு கட்டத்தில் எதை எடுத்தாலும் செங்குளம் அத்தையில் கொண்டுபோய்த்தான் முடிப்பார். சரசு அத்தையைப் பற்றிச் சொன்னதும் அப்படித்தான்.
‘இண்ணைக்கும் நாளைக்கும் லீவுதானே மாப்பிளை. புறப்படுஎன்றார் மாமா. ‘புறப்படு. புறப்படு ‘ன்னா எங்கேண்ணு சொல்லுங்க’ - ‘அட. புறப்படுரா மயிரான் என்று முதுகில் ஒரு அடி அடித்துவிட்டு, ‘சேஞ்சுக்கு ஒரு கைலியும் ட்ரஸ்ஸும் எடுத்துக்கோ. நீ தான் தபால்காரன் மாதிரி எப்பவும் தோள்ப்பட்டையிலேயே ஒண்ணை மாட்டிக்கிட்டு அலையுவியே, அதுல வச்சுக்கோ. வா.என்று சொல்லிவிட்டு சைக்கிளில் வாசலில் நிற்பார். எப்போதும் அப்படி அப்படியே போட்டுவிட்டுப் புறப்படும்படியாகத்தான் இருக்கும் மாமாவின் எல்லாக் காரியமும்.
நேராகப் போவதற்கு எத்தனையோ வழி இருக்கிறது.  ஜங்ஷனில் போய்க் கூட ஏறியிருக்கலாம். “ நேரா நேராய்ப் போயி என்னத்தைக் கண்டோம் மாப்பிளேஎன்று செண்பகம் பிள்ளைத் தெரு வழியாக, மந்திர மூர்த்தி ஸ்கூல் திரும்பி டவுண் ஸ்டேஷனுக்குக் கூட்டிக்கொண்டு போனார். வழி எங்கும் அறுப்புக் களமும் சூடு அடிப்புமாக இருந்த்து. “ மாப்பிளே, நினைச்சா கடலுக்குள்ளே கூட இறங்கி எண்ணைக்கும் நடந்திரலாம். இப்படி அறுப்படியிலே பச்சை வைக்கோலை மிதிச்சுக்கிட்டு நடக்கக் கொடுத்துவச்சு இருக்கணும். பிணையல் அடிக்கிற அந்த மாட்டுக் கண்ணைப் பாரு மாப்பிளே. நம்ம பாட்டன், முப்பாட்டன் பார்க்கிற மாதிரி இருக்குஎன்று சொல்லிக் கொண்டே புனலூருக்கு டிக்கெட் எடுத்தார். ஆனால் ‘இறங்கிக்கிடுவோம் மாப்பிளேஎன்று செங்கோட்டையிலேயே இறங்கிவிட்டார்.
செங்கோட்டையில் கள்ளு கிடைக்கும் இடம் அவருக்குத் தெரிந்திருந்தது. தென்னந் தோப்புகளுக்கு இடையே நடந்து  மாஞ்சருகுகளை மிதித்து மறுபடி ஒரு தென்னந்தோப்பில் இருக்கிற ஒரு குடிசையை அடைவதே நன்றாக இருந்தது. மாமா நார்க்கட்டிலில் உட்காரவில்லை. தென்ன்ங் கீற்று ஒன்றை இழுத்துப் போட்டு அதன் மேல் உட்கார்ந்தார். யோகாசனம் மாதிரி சம்மணம் போட்டு விரைப்பாக நிமிர்ந்து உட்கார்ந்தார். முதுகுத் தண்டு கோணாமல்தான் கள்ளுக் குடிக்க வேண்டும் என்று ஏற்பட்டது போல  இடதுபக்கத் தொடைக்கு மேல் நீண்டிருக்கிற பாதத்தைப் பிடித்துக் கொண்டார். கள் குடிப்பதும் பேசுவதுமாக இருந்தார். பக்கத்தில் பாடிக்கொண்டிருந்த ஒரு ட்ரான்சிஸ்டரை நிறுத்தச் சொன்னார். அதுவும் போதவில்லை.
“நீ பாட்டுக் கேள் அச்சா. நாங்கள் அந்தப் பக்கம் போய்விடுகிறோம்என்று அரை மலையாளத்தில் சொல்லிவிட்டு எழுந்தார்.  நான் அவருடைய மலையாளத்திற்குச் சிரித்தேன்.  “ என்ன சிரிப்பு? “ என்று வழக்கமானதை விட அதிகக் காட்டமான ஒரு கெட்ட வார்த்தையைச் சொன்னார்.  “ நான் பேசுதேன். அச்சன் கேட்கிறான். இடையில் நீ என்ன? “ என்று மறுபடி அதையே சொல்லி முடித்தார்.
இப்படிச் சொல்வதற்குள் அந்த ஆற்றுக்கால் வந்திருந்த்து. எட்டடி அகலம் கூட இருக்காது. தெளிந்த தண்ணீர் ஓட்டம். எதிர்ப்பக்கம் பூராவும் தாழம் புதர். முறை வைத்தது மாதிரி, ஒன்று மாற்றி ஒரு தென்னை தண்ணீரைப் பார்க்க வளைந்திருந்தது.  பூரணம் மாமா ஒரு சாய்ந்த தென்னையில் வசமாக உட்கார்ந்து கொண்டுதான் சரசு அத்தையை எப்படிக் கல்யாணம் ஆயிற்று என்று சொன்னார்.
“ சீரங்கத்துக்கு இருபத்திரண்டு முடிஞ்சு இருபத்தி மூணு வந்திட்டுது. திசையே பிடிபடலை. எப்படி அதைக் கரையேத்தப் போகிறோம்னு நினைச்சால் தூக்கம் வராது. அத்தை, நான், தங்கச்சி மூணு பேருமே புரண்டுக்கிட்டேதான் கிடப்போம். அன்றைக்குப் புதன் கிழமைண்ணு நினைக்கேன். அது கூட செங்குளத்து அத்தை பேசின பேச்சை வச்சு சொல்லுதேன். அவதான் சொன்னா. ‘இன்னைக்கு புதன், நாளைக்கு வியாழன்னு காலமும் பொழுதும் சிட்டாப் பறந்துரும்.  நாம் இப்படி ஆளாளுக்கு ராத்திரி முழிக்கிறதுக்குப் பதிலா பகலில முழிச்சா நல்லது. எனக்கு ஒரு ரோசனை தட்டுப்படுது. என் புத்திக்குத் தெரிஞ்சு நான் தப்பா ரோசிச்சதே இல்ல “ என்று சொல்ல ஆரம்பித்தாள்.
செங்குளம் அத்தைக்குக் கூடப் பிறந்த தம்பி ஒருத்தன் இருக்கிறானாம். வாடாவழியாக அலைகிறவனாம். சரியான லௌடிப்பட்டம் கட்டி இருக்கிறானாம். ரௌடிதான் லௌடி. அவனுக்கு ஒரு தங்கமான பையன். மேல் படிப்பு எல்லாம் படித்து எட்டாம் கிளாஸ் ஒன்பதாம் கிளாஸ் வாத்தியாராக நல்லூர் வேதப் பள்ளிக்கூடத்தில். வேலை பார்க்கிறான். அப்பன் எடுத்திருக்கிற பெயர் பிள்ளைக்குப் பெண் கிடைப்பதில் தடையாக இருக்கிறது. சீரங்கத்தைத் தருகிறேன் என்று மாமா சொன்னால், அடுத்த நிமிஷமே தாலி கட்ட ஏற்பாடு பண்ண அவள் தயார். அது அவள் பொறுப்பு. ஆனால் ஒரே ஒரு கண்டிஷன்...
செங்குளம் அத்தை சொல்வது போல பூரணம் மாமா சொல்லிக்கொண்டே வந்து இந்த இடத்தில் நிறுத்தினார்.  கொஞ்ச நேரம் தண்ணீரையே பார்த்துக் கொண்டு இருந்தார். நெஞ்சு முட்ட மூச்சை இழுத்தார். “ தாழம் பூ வாடையா. நல்ல பாம்பு வாடையா, மாப்பிளே? “ என்று என்னிடம் கேட்டார். எனக்கு ஒன்றும் தெரியவில்லை. அவருடைய நெஞ்சில் நிரம்பினது அவருக்கு. ‘என்ன கண்டிஷன்?என்று மாமாவிடம் கேட்கவில்லை. மாமா ஒரு இடைவெளியைத் தாண்டி, தன் பேச்சில் தன்னையே மீண்டும் கோர்த்துக் கொள்கிற விதம் எனக்குப் பிடிக்கும்.
இந்தப் பேச்சை ஆரம்பித்த பின், கள்ளை ஒரு வாய் கூட அவர் குடிக்கவில்லை. தென்னையை விட்டு இறங்கி, வேட்டியை அவிழ்த்து மறுபடி கட்டிக்கொண்டார். பாதம் தெரியாதது போல தழைய இழுத்துவிட்டுக் கொண்டார்.  அதற்காகக் குனியும் போது கீழே கிடந்த ஒரு புன்னைக் கொட்டையை எடுத்துக் கையில் உருட்டினார். அந்தச் சின்னத் திரட்சியில் இருந்து அவருடைய ரகசியங்கள் கசிந்து வருவது போல, அந்த இடத்திலேயே  உட்கார்ந்து மறுபடி பேச ஆரம்பித்தார்.
“ என் தம்பிக்கு ஒரு மகன் மட்டுமில்லை. அவனுக்கு மூத்தவ ஒருத்தி இருக்கா. சரஸ்வதிண்ணு பேரு. என் தம்பியோட மூத்தவடியா பேரு அது. சரசுண்ணு கூப்பிடுவோம். சரஸ்வதின்னா சரஸ்வதிதான். அதெல்லாம் கரெக்டாத்தான் இருந்தது. ஆளு கரெக்டா இருந்தா கோளு கரெக்டா இருக்கணும்னு கட்டாயமா? எப்படிப் பழக்கமோ, என்ன சங்கதியோ? எவன் கூடவோ ராத்திரியோட ராத்திரியா புறப்பட்டுப் போயிட்டா. எங்கே போனாளோ, எங்கே இருந்தாளோ, ஒரு மூணு வருஷங் கழிச்சு, ஒரு சித்திரை விசுவுக்கு முதல் நாள் ராத்திரி மொட்டுப் போல அப்படியே வந்து நிக்கா. அலுங்கலை. குலுங்கலை. நேற்று உதயத்தில போயிட்டு மத்தியானச் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்திட்ட மாதிரி அதே முகம். அதே சிரிப்பு. ஒரு வாடல், ஒரு வருத்தம் இல்லை. என் தம்பி ஏற்கனவே ஆட்ட பாட்டம் எல்லாம் ஆஞ்சு ஓஞ்சு கிடந்தவன் என்னவோ சரசு கிட்டே கேட்டிருக்கான். பெத்த அப்பன்னு இருந்தா அது கூடக் கேட்க மாட்டானா? சரசு திலுப்பி ஏதோ பதிலுக்கு அவனைக் கேட்டிருக்கா. அந்தானைக்கு அவன் பதிலே பேசாம எந்திருச்சுப் போயிட்டான். அன்னைக்கு ராத்திரியே மருந்தக் குடிச்சுட்டு மலந்துட்டான்.
எனக்கு பூரணம் மாமா செங்குளத்து அத்தை குரலில் சொல்லச் சொல்ல, செத்துப் போன அத்தையின் தம்பி மீது இரக்கமாக இருந்தது.
“ ஒரே கண்டிஷன். பழசு எல்லாம் உன்கிட்டே ஒளிக்கலை. மறைக்கலை. உடுத்தின துணி வரைக்கும் உதறிக் காட்டியாச்சு. சரசுக்கும் அப்பன் இல்லை. உங்க ரெண்டு பேரு கதையும் அப்படித்தான். ரெண்டு பக்கத்தையும் திராசுல வச்சா முள்ளு இங்கேயும் வாடாது. அங்கேயும் வாடாது. எச்சி நாக்குத் தான். ஆனா ரெண்டு பேருக்கும் பொதுவாச் சொல்லுதேன். சரசுவை நீ கட்டிக் கிடுதேன்னு ஒரு வார்த்தை சொல்லு. சீரங்கத்துக்கு என் தம்பி மகனை ம்கிறதுக்கு முன்னாலமுடிச்சு வைச்சுருதேன். ஒருத்தருக்கொருத்தர் ஏந்தலா இருக்கும். ரெண்டு குடும்பத்துக்கும் பொதுவா நானும்  ஏதோ நல்லது பன்ணிட்டேன்னு  எனக்கும் இருக்கும். இதில் அடிபிடி கட்டாயம் ஒண்ணுமில்லை. “
பூரணலிங்கம் மாமா பொம்மலாட்டம் நடத்துகிறது போல இரண்டு பேராகவும் என் முன்னால் மாறி மாறித் தோன்றிக்கொண்டிருந்தார். செங்குளத்து அத்தை முகத்தை எப்போது மாட்டுகிறார் எப்போது கழற்றுகிறார் என்றே தெரியவில்லை.
செங்குளம் அத்தை இப்படிச் சொன்னதும் நான் கொஞ்சம் கூட யோசிக்கவில்லை. யோசிக்கிறதுக்கு எல்லாம் கட்டுபடியாகாது நமக்குண்ணு எப்பமோ தெரிஞ்சு போச்சு. ‘ஏற்பாடு பண்ணுங்க அத்தைஎன்று மட்டும் சொன்னேன். முதலில் என் கல்யாணம்தான் நடந்தது. இலஞ்சிக் கோவிலில் வைத்துத் தாலி கட்டிக் கூட்டியாந்தோம். நான் சரசுக்கு முதன் முதலில் கொடுத்த்து அந்தக் கோவில் பிரகாரத்தில உதிந்துகிடந்த ஒரு நாகலிங்கப் பூவைத்தான். இப்பவும் நாகலிங்கப் பூவை எங்கன பார்த்தாலும் அவளுக்கு ஒண்ணைப் பொறக்கிக்கிட்டுதான் வாரேன்”  
உண்மைதான். போன மாதமோ முந்தின மாதமோ பூரணலிங்கம் மாமாவுக்கு சோதனை பண்ண கண் ஆஸ்பத்திரிக்குப் போயிருந்தோம். முடிஞ்சு வெளியே வந்து பார்த்தால் மாமாவைக் காணோம். கொஞ்ச நேரம் கழிச்சு மாமா நாலைந்து நாகலிங்கப் பூக்களோடு சிரித்துக் கொண்டே வந்துகொண்டு இருந்தார். நான் கேட்காமலேயே, “சைடுலே ஏழெட்டு மரம் நிக்கிண்ணு முன்னாலயே தெரியும். உங்க அத்தை இப்போ தலையில வைக்கிறதை எல்லாம் விட்டுட்டா. சாமி பட்த்துக்கு வச்சிருதாஎன்று சொல்லியிருக்கிறார்.
அதே போல, இன்னொரு சமயம் மாமா சிரித்துகொண்டே, ரொம்ப நிறைவாகச் சொன்னார். அன்றைக்கும் இதே போல சரசு அத்தை மீன் வாங்கிக் கொண்டுதான் வந்துகொண்டு இருந்தாள். தனக்குப் பின்னால் ஒரு சாம்பல் பூனை காலை மீசையால் உரசிக்கொண்டு வருவதில் அவளுக்கு மிகுந்த விருப்பம் இருந்தது. எங்கள் வீட்டில் காய்த்த பப்பாளிப் பழங்களை வாங்கிக் கையில் வைத்துக்கொண்டே, “இந்தப் பூனைக்குட்டிக்கு உங்க அத்தை என்ன பெயரு வச்சிருக்கா? தெரியுமா?என்று கேட்டார்.
ஒருவேளை என் பெயராக இருக்குமோ?  ஆனால் என் பெயரா என்று கேட்கவில்லை. ‘தெரியலையேஎன்று சிரித்தேன்.
“ என் பெயருதான் மாப்பிளே. அதுவும் எங்க அம்மை என்னைக் கூப்பிட்ட பேரு. லிங்கம்.எதுக்கெடுதாலும் லிங்கம்தான். பாலுண்ணா லிங்கம். மீனுண்ணா லிங்கம். இப்போ பூனை, மனுஷன், வஞ்சிர மீனு, நாகலிங்கப் பூவு எல்லாம் ஒண்ணாப் போயிட்டுது அத்தைக்கு. அன்னிக்கு சீரங்கமும் மாப்பிளையும் வாராங்க. இவ பூனைக்குட்டியை என் பேரு சொல்லிக் கொஞ்சிக்கிட்டு இருக்கா. யாரைக் கொஞ்சினா என்ன? எதைக் கொஞ்சினா என்ன? எல்லாத்தையும் கொஞ்சுததுக்கு ஒரு மனசு வேணும்லா? “  மாமா லேசாகக் கண் கலங்கிக்கொண்டு என் கையைப் பிடித்தார்.
எனக்கு பூரணலிங்கம் மாமாவைப் பார்க்கவேண்டும் போல இருந்த்து . இதோ இப்படியே எழுந்து சரசு அத்தை பின்னால் போய்விட்டால் என்ன?
சரசு அத்தை தெருவில் நின்றுகொண்டு யாருடனோ பேசுகிறாள். மீன் விலையைக் கேட்டிருப்பார்கள் அல்லது என்னென்ன மீன் இருக்கிறது என்று கேட்டிருப்பார்கள். மேல் துண்டை இழுத்துவிட்டுக் கொண்டே, மீன்காரர் இருக்கிற திசைப் பக்கம் கையைக் காட்டி சரசு அத்தை பதில் சொல்கிறாள். மீன் கனத்துடன் கருப்பு பாலித்தீன் பை ஒரு குலை போல கையில் அசைகிறது.
காற்றில் இழுபடும் மீன் வாசத்தில் தவித்து, கருப்புப் பூனை சிணுங்கிக் கொண்டே அத்தையின் காலில் மூச்சு விட்டிருக்கும் போல. ‘சூஎன்று அத்தை கூச்சத்தோடு விரட்டுகிறாள்.
கருப்புப் பூனை கொஞ்சம் விலகிப் பின் வாங்கி மறுபடி அத்தை கூடவே போகிறது. இந்தப் பூனையின் பெயர் என்ன என்று பூரணம் மாமாவிடம் கேட்க வேண்டும்.
அனேகமாக என் பெயராகத்தான் இருக்கும்.

%

உயிர் எழுத்து
ஏப்ரல் - 2013. vv