Sunday 29 October 2017

வரைதலும் வரைதல் நிமித்தமும்.












எழுபதுகளில் வாங்கிய தூரிகைகளின் முடி அனைத்தும் உதிர்ந்துவிட்டன. இருப்பது  அரக்கு நிறப் பிடி குச்சிகள் மட்டுமே.

பரமனின் க்ராஜுவேட் காஃபி பார் முகப்புச் சுவரொட்டிச் சித்திரங்களை நான் வரைந்து கொண்டிருந்த ஒரு செப்டம்பர் இரவில் தான் நிறை சூலியாக இருந்த என் மனைவியின் தந்தையார் இறந்த செய்தியைச் சொன்னார்கள்.

நாங்கள் ஒருபோதும் வாங்கிஅறியாத, ரோஜாப்பூக்களிட்ட மூடியுள்ள பிஸ்கட் டப்பாவில் தான் நாற்பது வருடங்களாக என் தீர்ந்தும் தீராத போஸ்ட்டர் கலர் குப்பிகள் இன்னும் உலர்ந்தும் உயிருடன் இருக்கின்றன. 

ஒவ்வொரு சரஸ்வதி பூஜை தோறும் அந்த டப்பாக் குப்பியில் இருந்துதான் அம்மனின் முகத்துக்குச் செம்பொட்டு இடுகிறேன். கூந்தலும் புருவமும் விழிகளும்  வரைகிறேன்.

கணபதி அண்ணன் காட்டிக் கொடுத்த  இந்தியன் இங்க் கருப்பு உலகம் காணாமல் போய்விட்டது.  வாழ்க்கையைப் போல திட்டமிட்ட திருட்டு இருக்க முடியாது. ப்ளாஸ்ட்டிக் பிடியுள்ள இந்தியன் இங்க் நிப்புகள் ஒன்று கூட இல்லாமல் களவு போய்விட்டன.

சாம்ராஜின் நண்பர் சீனு வாங்கிக் கொடுத்த மிக உயர்ந்த வண்ணப் பசைகள் அடுக்குக் குலையாமல் அப்படியே  உள்ளது  என் மீதான  அவருடைய மரியாதைக்கு நான் செய்த துரோகம் அது.

ஓவியர் வள்ளி ஒரு விஜய தசமி நாளில் வித்யாப்பியாசம் செய்து வைத்த தைல வண்ணமும் கலவை எண்ணெயும் இன்னும் புத்தக வரிசையின் பின்னால் இருக்கின்றன,  கல் நாகங்கள் சீறுவது போல வண்ணமும் எண்ணெயும் கலந்த வாசனை அகலமாகப் பத்தி விரிப்புடன்.

தேவதேவன் எண்பத்தொன்பதில் கொடுத்த சார்க்கோல் துண்டின் துணுக்கை இன்னும் வைத்திருக்கிறேன். அதைக் கொண்டு வரைந்த , தாடிக் கிழவனின் பக்க வாட்டு முகத்தை, ஆயன் கூட,’ப்ரும்மாதம்’ என்றார். எல்லாக் கிழவரும் ‘ப்ரும்மாதம்’ தான். தொல் ஆலமரம் எல்லாம் தெய்வம்.

கே.மாதவனில் இருந்து ட்ராட்ஸ்கி மருது வரை  அனைவரின் உடனும் நான் போய்க்கொண்டு இருக்கிறேன். தேனுகாவும், சி.மோகனும் விவரிக்கும் ஓவியங்களை  ரொட்டி கிடைக்காத பசித்தவனின் ரொட்டியாக தூரத்தில் இருந்து பிட்டுத் தின்கிறேன். 

ஓவியத்தில் அயல், சுதேசி,கீழை, மேலை வகைமை கிடையாது , ஓவியம் மட்டுமே உண்டு என்பதை ஒரு கெட்டுப் போன முட்டையின் மஞ்சள் கருவில் நெளியும் சிவந்த இழை எனக்குச் சொல்லியிருக்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன் வரையத் தோன்றியது. காமம் ஒத்த விம்மும் தவிப்பில், திரும்பத் திரும்ப, கித்தான் அற்ற ஒரு சித்திரம் அழைத்தது. அது ஒரு அழைப்பு. கேட்ட பின், இருப்புக் கொள்ளாத ரகசியக் குரல் அதற்கு.

வீட்டில் இல்லாமல் வெளியூரில் இருப்பதால், பேத்தியின் அலமாரிக் கதவுகளைத் திறந்தேன். பாடங்களுக்கு  வெளியே அவள் வரைகின்ற அக்ரிலிக்  ஓவியங்களை எனக்குப் பிடிக்கும்.

நான் என் மேஜையை, அலமாரியை என்னைப் போலவே கலைந்து கிடக்க வைத்திருப்பவன். திறந்த அலமாரி ஒரு கீ போர்ட்  போல், கேட்கப்படாத இசைமையுடன் , வரிசையில் இருந்தன. சிறிய தேடலைத் தாண்டி அப்புறம் செல்ல என் ஒழுங்கின்மையின் தயக்கம்.. 

அக்ரிலிக் குப்பிகள் கிடைக்கவில்லை. பூ ஜாடி போன்ற உருளைக் கிண்ணத்தில்  ஒரு ஒற்றை வெள்ளை இறகு இருந்தது. சென்ற அல்லது முந்திய கோடை விடுமுறையில்  ஊருக்கு வந்த சமயம் நான் அவளுக்குக் கொடுத்தது.

அதையும் நான் தொடவே இல்லை. கதவை மூடிவிட்டு வந்து,  இதோ இதைத் தட்டச்சு செய்கிற முயற்சி.  நீண்ட வருடங்களின் தொகுப்பான காலத்தின் மூச்சை சிறிய இழைகளாய் விடுவதில் திணறுகிறது.

தட்டச்சு செய்வதை நிறுத்திவிட்டு இரண்டு முன் கைகளையும் மடிக்கணினி மேல் படரவிடுகிறேன்.  குளிர்ப் பிரதேசத்துப் பாம்புத்தோல் சுருக்கங்களுடன் என் முன் அவை  நீண்டிருக்கின்றன.

உற்றுப் பார்க்கையில் தெரிய முடிகிற நுட்பமான நடுக்கத்தில், என்னுடைய வலது கை விரல்கள்   எதையோ வரைந்துகொண்டு இருப்பதாகவே  எனக்கு நிச்சயப்படுகிறது.

என்ன அப்படி வரைகிறதென்று நீங்கள் தான் பார்த்துச் சொல்ல வேண்டும்.

Saturday 28 October 2017

வானத்தில் முட்டையிடல்.





அந்தப் பறவையியலாளனை நான் சந்தேகிக்கிறேன்.
அவனை நான் தோற்கடிக்க விரும்பினேன்.
அவன் உச்சரிக்கவே முடியாத ஒரு பெயரை அதற்கு இட்டேன்.
உலகத்தில் இருந்திருக்கச் சாத்தியமற்ற  ஒரு பறவையைக்
கற்பனையில் அடைகாத்தேன்.
முப்பாட்டியின் அண்டபேரண்டப் பட்சிக்கு அதீத ஒப்பனைகள்
செய்தேன்.
அ-பறவைக் குணங்களை அதற்கு வரித்தேன்.
கோபமுற்றால் அலகுகளுக்கிடையிருந்து  தீக் கக்கும் என்றும்
சதுப்புக்குள் சிக்கிய யானைக் குட்டியைக்
கால்நகங்களால் தூக்கிக் காப்பாற்றும் என்றும்
கருணையின் வலுவான வளைந்த நகங்களின் செயல் அதுவெனவும்
அதன் தூவிகளில் செய்யமுடியும் தாள வாத்திய ஒலி
மலைஜாதி  நடனம் ஒத்தது என்றும்
எங்கள் வம்சாவழி மூதாதையர் ஒருவர் தோளில் அமர்ந்த
நேரத்திலிருந்து தினைமாவின் ஐஸ்வர்யம் பெருகியது என்றும்
தாவரச் சாற்றில் வரையப்பட்ட வலசை பறக்கும் ஒரு ஓவியம்
என் சரியான இடைவெளிக் கனவுகளில் தொங்குகிறதாகவும்
தோல்வியில் பறவையியலாளன் சிரசு மண்ணில் குனிந்து
பதிகிற வகையில்
‘அறிவீர்களா ஐயா அதை?’  என்று போலிப் பணிவுடன் கேட்டேன்.
எந்தத் தயக்கமும் அற்ற தேர்ந்த புன்னகையுடன்
தூரதரிசனியைக் கண்மட்டத்தில் வைத்தபடி, சுருங்கிய
இடது கண்ணுடன்
‘அலையாத்திக் காடுகளுக்கு மேல் அவை  நடு  வானத்தில்
முட்டையிடுவதை
இரண்டு முறைகள் பார்த்திருக்கிறேன்’ என்றார்.
அப்படியொரு காட்சி மிகப் பிடித்திருந்தது எனக்கு.
%

# பறவை, பறவையியலாளன்

நாளைக்குச் செல்வது




நாங்கள் இருந்த வெட்ட வெளியில்
முதலில் ஒரு கதவைத்தான் பொருத்தினார்கள்.
அப்புறம் எங்களுக்கு மேல் பறந்த பறவைகளை மறைத்துக்
கூரை வேய்ந்தார்கள்.
சுற்றிலும் நான்கு சுவர்கள் வளர்க்க அவர்களிடம்
சற்றுச் சிரமம் தெரிந்தது.
எங்கள் அருகில் இருந்த பூனைக்குட்டியை
வெளியேற்றியபோது அது குரலிட்டது.
எதுவும் விடுபட்டிருக்கிறதா என்று துளாவிப் பார்த்தவர்கள்
சில புத்தகங்களையும் சிறு புல்லாங்குழல் ஒன்றையும்
எங்கள் வசமிருந்து எடுத்துக் கொண்டனர்.
‘புதிதாக ஒரு வாசனை வருகிறது’ என்று  அடைபட்ட காற்றை
இழுத்து நுகர்ந்தனர்.
‘நீங்கள் பத்திரமாக இருப்பதற்காகவே
இவ்வளவு மெனக்கெடுகிறோம் தெரியுமா?’ என்று அகன்றார்கள்.
கதவை வெளிப்புறமாகப் பூட்டுகிற உலோகச் சத்தம்
எங்கள் தலையில் பாறை போல் உருண்டது.

%

2.

பழகிய காலணிகளை
இருட்டுக்குள் கால் நுழைத்து
அணிந்துகொள்வது போல இருந்தது
கழற்றிப் போடப்பட்டிருக்கும்  இருட்டில்
இன்றைய இரவின் ஊடாக
நாளைக்குச் செல்வது.

%

Friday 27 October 2017

ஒரு புதிர்வழியும் 27வது குரங்கும்.







நேற்றைக்கே எழுதியிருக்க வேண்டும்
நேற்றைக்கு எழுதியிருந்தால்  இதை விட நன்றாக இருந்திருக்கும். நேற்று என்பதே இன்றை விட உயிருள்ளது தான். நேற்றுக் காலை ஒரு முறையும்  இரவு மீண்டும் ஒரு முறையும் வாசித்தேன். வாசித்த மன நிலையில் க.மோகனரங்கன் மற்றும் சக்தி ஜோதிக்கும் அதன் இணைப்புத் தந்ததற்காக நன்றி சொன்னேன். அதை மொழிபெயர்த்திருக்கும் தமிழ்மகன் முகநூலில் தென்பட்டதும் உள்ப் பெட்டியில் அவருக்கு எழுதிப் பகிர்ந்து கொண்டேன். இன்னும் தொட்டுக் கையைப் பிடிக்காதது ‘உன்னதம்’ கௌதமசித்தார்த்தனை மட்டுமே.

உன்னதம்  இணைய இதழில் - UNNATHAM.NET -  25.அக்டோபர்.2017 பதிவாக வெளிவந்திருக்கிற கதை  26  குரங்குகள், அதனுடன் ஒரு புதிர் வழி.  கிஜ் ஜான்ஸன் எழுதியது. நம்முடைய தமிழ் மகன் மொழியாக்கம். அப்படி ஒரு ஈர்ப்புள்ளதாக மொழிபெயர்த்திருக்கிறார்.

(http://unnatham.net/26-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA/ )

நான் பொதுவாக நேர்கோட்டு வாசிப்புக்குப் பழகினவன். 26 குரங்குகள் , அதுவும் புதிர்வழி சார்ந்தது எப்படி நேர்கோட்டில் இருக்க முடியும்  என்ற தயக்கம் . எல்லாம் வளைகோடுகளே. அனைத்தும் புதிர்வழிகளே என்றாலும் நாம் வளைவழித்தும் புதிரற்றதுமாக  இருக்க எதிர்பார்க்கிறோம். நேர்கோடு என்பது ஒரு சமாதானம். புதிரின்மை என்பது ஒரு ஆசுவாசம்.

இந்தக் கதையில் வரும் 26 குரங்களும் எய்மி என்கிற பெண்  (43) நடத்துகிற          சாகசக் காட்சியில் அவர்  மேடையில் மேலிருந்து கீழிறக்கும் ஒரு குளியல் தொட்டியில் ஒரு ஏணி வழியில் ஏறி உட்கார்கின்றன. அப்புறம் ஏதோ ஒரு புதிர்வழியில் காணாமல் போகின்றன, குளியல் தொட்டி காலியாக இருப்பதைப் பார்வையாளர் உறுதி செய்யலாம். ஒரு சாகசக் காட்சி வேறு எப்படி முடியும்? அந்த 26 குரங்குகளும் அதன் புதிர்வழியிலிருந்து  தொட்டிக்குத் திரும்பி இறங்கி வரிசைப்படுகின்றன மேடையில்.

இவை எங்கோ போகின்றன, எங்கிருந்தோ திரும்புகின்றன, ஆனால் எய்மிக்கு அவை எங்கே போகின்றன, வருகின்றன என்று தெரியாது. புதிர்களின் ஒரு சிறு இளகிய முடிச்சைக் கூட அவளோ, அவள் காதலன் கியோஃப் (28) அல்லது அந்த முதிர்ந்த குரங்கு ஸெப்போ (அது மார்பில் அறைந்தபடி எழுப்பும் கூக்குரல் சாகச அரங்கை நிரப்பும்)    அவிழ்க்க முயல்வதில்லை.

எய்மியுடன் கியோஃபும் சேர்ந்து 127 காட்சிகள் நடத்துகிறார்கள். எய்மியை விட கியோஃப் இந்த பிரபஞ்சத்தை நம்புகிறவனாக இருக்கிறான். ஸெப் இறந்து போகிறது. ஒரு ஒருங்கிணைப்பாளன் போல, நாற்காலியில் சாய்ந்து இந்த நிகழ்ச்சியை நடத்துவது போல் இருந்த ஸெப் அதனுடைய மரணத்திற்கு முந்திய கடைசி இரவில் எய்மிக்கும் கியோஃபிற்கும் இடையில் படுத்துக் கொள்கிறது. காலையில் அதன் கூண்டுக்குள் அதற்குப் பிடித்தமான பொம்மையை அணைத்துக் கொண்டு, அதற்குப் பிறகு எழுந்திருக்காமலே, உறங்கி விடுகிறது.

போங்கோ அடுத்த நிகழ்ச்சிகளில் கடைசிக்குரங்காக மேலேறிப் போகிறது. குரங்குகள் இப்போதும் காணாமல் போய்,  காண வருகின்றன, எய்மி அழுகிறாள். ‘நிகழ்ச்சி நடந்ததுஸெப்பினால் இல்லை’ என்கிறாள். ‘தெரியும்’ என்கிறான் கியோஃப்.

குளியல் தொட்டி சாகசம் என்று ஒன்றுமே இல்லை.குரங்குகள்  ஏணியில் ஏறித் தொட்டிக்குள் குதிக்கின்றன. காணாமல் போகின்றன.. உலகமே    இப்படிச் சில பிரமிப்புகளால் நிறைந்தது தான். அதற்குப் பொருள் எதுவும் இல்லை. அது புதிர் எனில் குரங்குகள் மட்டுமே அறிந்த குரங்குகளின் புதிர்.எய்மியும் கியோஃபும் சாகச நிகழ்ச்சிக்கு இடையே வந்து போகிறவர்கள் மட்டுமே.

எய்மி முன்பொருவரிடம் அந்த நிகழ்ச்சியை ஒரு டாலருக்கு வாங்கியது போல, அவளிடம் அதே  ஒரு டாலருக்கு அந்த நிகழ்ச்சியை வேறொருவர் வாங்கிக் கொள்கிறார்

இன்னொரு இடத்தில் சொல்லப்படுவது போல, இந்தக் கதை கூட ‘காலைச் சிற்றுண்டி போல எளிமையானது’ போலத்தான் இருக்கும். ஆனால் அப்படி அல்ல அது. அதன் விமர்சனக் குறிப்பில் இருப்பது போல, “வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையில் ஏற்படும் இடையறாத கேள்வியை மனிதமனம் எப்படித் தர்க்க ரீதியாகக் கேட்டுக்கொண்டே இருக்கிறது என்பது தான் இக்கதையின் மையம்’

எப்போதும் போல, ஒவ்வொரு கதையை வாசித்தபின் அதன் பாத்திரங்களுடன் என்னைப் பொருத்தி, என் சாயல்களை அவர்களுடன் ஒப்பீட்டுகிற நிலையில், நான் எய்மியை விட அதிகம் கியோஃப் சாயலில் இருக்கிறேன். கியோஃபை விடவும் அந்த ஸெப் சாயலுக்கு மிகவும் பொருந்திப் போகிறேன்.

சின்னமோன் வாசனை முகிழ்க்கும் என் தேநீரை அருந்துகையில் 26 குரங்குகளின் வாசனையை என்னால் ஒரு போதும் தவிர்க்கவே இயலாது,

நான்  இக்கணம் தமிழ் மகனை நினைத்துக் கொள்கிறேன். கருப்புக கண்ணாடியணிந்து, கீழுதடு காணாமல் போக அகலமாகச் சிரித்துக் கொண்டிருக்கும்பழுப்பு முடிக்காரி கிஜ் ஜான்ஸனை நினைத்துக் கொள்கிறேன்.

ஒரு புதிர்வழி திறக்கும் குளியல் தொட்டியில் 27வது குரங்காக ஏறிக்கொண்டு இருக்கிறேன்.

%

Thursday 12 October 2017

எங்கேயோ












எல்லாப் பெட்டிக் கடைகளிலும் வாழைப் பழத்தார் தொங்கிக்கொண்டு இருக்கும்.  எங்கள் பக்கத்தில் அதிகம் தொங்குகிற தார் ‘மொந்தாம் பழம்’ என்று சொல்லப்படும் மொந்தன் பழம் அல்லது நாட்டுப் பழம். மோரிஸ் என்கிற பச்சை நாடான், கோழிக்கோடு என்கிற ரஸ்தாளி, செவ்வாழை எல்லாம் பிற்பாடு வந்தவை.
கொஞ்சம் கனிந்த தாராக இருக்கிறதே என்று அந்தக் கடைக்குப் போய் இருந்தேன். வழக்கமாக வாங்குகிற கடை இல்லை. புதியது. தாரிலிருந்து நாமாகப் பிய்த்து எடுத்துக் கொள்வதில் நமக்கும் அந்த வாழைத்தாருக்கும் ஒரு ‘உருத்து’ வந்துவிடும். அந்த வளைந்த அடிக்காம்பின் குளிர்ந்த பருமன் உங்களிடம் அப்படியே இருக்கும்.
கடையில் இருந்தவருக்கு ‘என்னை எங்கேயோ பார்த்திருப்பது போல’ இருந்திருக்கிறது. கொஞ்சம் கரிசனத்தோடு பார்த்தால். எல்லா முகங்களுமே அப்படி ஏற்கனவே பார்த்ததாகவே தோன்றும்.
‘ எங்கே இருக்கியோ?’ என்று கேட்டார். ‘அந்தக் கல்வெட்டாங்குழிப் பக்கம் தெற்கே பார்த்த மூணு வீடுகளில் ஒன்று’ என்றேன்.
‘இந்த சர்ச்சிற்குத்தான் வருவீர்களா?’ என்றார். பதில் சொன்னேன். ‘இதுக்கு முந்திப் பாளையாங்கோட்டையிலே இருந்தேளோ?’ என்பதற்கு, ‘இல்லை . எனக்கு டவுண். மேல ரதவீதி சுடலமாடன் கோவில் தெரு. சந்திப் பிள்ளையார் முக்குப் பக்கம்’ என்று விவரம் சொன்னேன்.
அவருக்கு விடை கண்டு பிடித்துவிட்ட சந்தோஷம் வந்துவிட்ட முகம். இதுவரை தோலுக்கு அடியில் இருந்த சிரிப்பு மேலே வந்து, ஒட்டின கன்னத்தில் படர்ந்துவிட்டது. கண்களின் ஓரத்தில் சதை திரண்டு இடுங்கிப் பார்வையில் ஈரப்பூச்சு மினுங்கியது. ‘ சரிதான். நான் டி.பி.ட்டியிலே கண்டக்டரா ஓடிக்கிட்டு இருந்தேன்’. என்று சிரித்தார். சற்று உட்புறமாகச் சரிந்திருந்த புகையடித்த பற்கள். தனபேரின்பம் என்று எனக்குள் இருந்த பெயரை அவர் டி.ப்பி.ட்டி என்று உச்சரித்த விதத்தில் அவர் எனக்கும் தெரிந்தவர் ஆகிவிட்டார். அவரை நான் பார்த்ததே இல்லை. அவரும் என்னைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை.
‘இங்கே குடி வந்து எத்தனை வருஷம் இருக்கும்?’ என்றார். இதற்குள் பழங்களுக்குரிய தொகையைக் கொடுத்திருந்தேன். ‘இருவது ரூவா தான் போட்டிருக்கேன்’ என்ற சலுகையுடன், இந்தக் கேள்வி அவரிடம்.
‘பத்துப் பதினஞ்சு வருஷம் இருக்கும்’ என்று என் பைக் பக்கம் வர, அவரும் சற்று நகர்ந்து வெளியே வருகிறார். உள்ளே நிழலில் இருந்து வியாபாரப் பேச்சுக்கொடுத்த போது இருந்ததை விட, வெயிலில் ஒல்லியாகவும் தளர்ந்தவராகவும் தெரிகிறார். அதிகம் குடித்து ஓய்ந்த ஒருவராக இருக்கலாம்.
‘கல் வெட்டாங் குழிப்பக்கம் வீடுண்ணு தானே சொன்னிய?’ முகம் இளகி இரண்டு புருவங்களுக்கு மத்தியில் மட்டும் கொம்பு மாதிரி இரண்டு பள்ளம்.
‘ஆமா’ நான் அந்தப் பள்ளங்களில் இருந்து அவரை வெளியேற்றிக்கொண்டு இருந்தேன். என் பைக் சீட்டை அவர் துடைப்பது போலத் தடவிக்கொண்டு இருந்தார்.
‘இப்போ அங்கே பூச்சி நடமாட்டம் இருக்கா?’ என்றார்.அவர் சொல்லியது நெளிந்து என்னைத் தாண்டிச் செல்வதற்குள், அவரே, ’முன்னால எல்லாம் அந்தப் பக்கம் அது ஜாஸ்தி’ என்றார்.
அவர் ஏதோ ஒரு புதிய திசையை எனக்கும் அவருக்கும் இடையில் உண்டாக்கியிருந்தார். அதில் ’பூச்சிகள்’ சதா ஊர்ந்து நெளிந்துபோனபடி இருந்தன. என் பாதையின் குறுக்கே எந்த அவசரமும் இன்றிப் போகிற ஒரு வால் சுழிப்பின் பளபளப்புத் தென்பட்டது.
‘முன்ன மாதிரி இல்லை.இப்ப ஒண்ணும் கண்ணுல தட்டுப்படக் காணும். கீரிப் பிள்ளை நடமாட்டம் எப்பமாவது இருக்கு’ – இப்படிச் சொல்லும் போது எனக்கும் வேறு வேறு நினைவுகள் வராமல் இல்லை. ஒரு வெள்ளிக்கிழமை வாசலுக்குள் ஏறி வந்த ஒன்று எந்தப் புடைக்குள் போய் ஒளிந்தது என்று இன்றுவரை தெரியாது. பைக் முன் சக்கரத்துக்குள் ஒன்று நசுங்காமல் தப்பித்திருக்கிறது. பக்கத்து வீடு கட்டுமானம் நடக்கும் போது மணல் அம்பாரத்தில் படுத்திருந்த கருப்பு நாய் விடாமல் ‘குலைத்து’ விரைப்பாக எச்சரிக்கை செய்ய, மழைத்தண்ணீர் போலத் தன்போக்கில் ஒன்று அதன் வலசையில் போய்க்கொண்டு இருந்தது.
அவர் இன்னும் அதே திசையில் தான் பார்த்துக்கொண்டு இருந்தார். கை தன் தடவலை நிறுத்தி பைக் சீட்டின் மத்தியில் அப்படியே படர்ந்திருந்தது.
‘சொல்லி வச்சது மாதிரி, டாண்ணு விடியக்காலம் வடக்கே இருந்து தெக்கே போகும். அதே மாதிரி சாயுங்காலம் டாண்ணு தெக்கே இருந்து வடக்கே திலும்பி வரும். மாயம் மாதிரி இருக்கும். ஒண்ணும் செய்ய ஓடாது. கன்னத்துல போட்டுக்கிட்டுக் கும்பிடுகிறதோடு சரி’ – அவர் குறுக்குக் கை போட்டு இரண்டு கன்னங்களிலும் போட்டுக் கொண்டார்.
‘பால் காய்ச்சி வந்த புதுசில நாங்களும் பார்த்திருக்கோம்’  நான் அவரிடம் சொன்ன போது, அவர் என் கைகளைப் பிடித்துக்கொண்டார். ‘ நல்லா இம்புட்டு நீளம், இரு பாகம் சைஸுக்கு இருக்கும்’ அவர் இரண்டு கைகளையும் அகலமாக விரித்திருந்தார்.
‘ஆமா. பார்த்திருக்கேன்’ என்றேன்.
‘அப்படியா. சார்வாளும் பாத்திருக்கேளா?’
கண்ணெதிரே அது மீண்டும் தெரிவது போல, நான் தலையை மட்டும் அசைத்தேன்.
அவர் வேறு ஒன்றும் சொல்லவில்லை. ‘இப்போ சரியாப் போச்சா?’ என்றார். 
‘எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே,இருக்கேண்ணு அதான் முதல்லே இருந்தே தோணிக்கிட்டு இருந்தது’ என்று பைக்கின் மேல் வைத்திருந்த கையை எடுத்து விலகிக் கொண்டார்.
%