Thursday 25 October 2012

கனவுகள் நதி போல.அது சிவசைலம் ஆறு போல இருக்கிறது. அந்த ஆற்றில்தான் அனேகமாக எப்போதும் கரண்டை அளவு தண்ணீர் ஓடும். புன்னைக் காய்கள் உருண்டு வரும். ஆற்று ஓரம் உள்ள தாழம்புதர்களில் இருந்து யாராவது ஒருத்தர் தாழம் பூ பறித்துக் கொண்டு தொடை வரை உயர்த்திய வேட்டியோடு தண்ணீரை வினோதமாகக் கிழித்துக் கிழித்து நடந்துவந்து கொண்டிருப்பார். அவர் பாதங்களுக்குக் கீழ் அமுங்கும் ஆற்றுமணலை அவர் முகத்தில் கிட்டத்தட்ட ஒரு சிரிப்பின் சாயலைத் தொடுகிற, மாறும் பாவனைகளால் நம்மால் உணர முடியும்.

அந்த கரண்டை அளவு தண்ணீரில் பத்மாசனம் இட்டு நான் தியானம் செய்து கொண்டு இருக்கிறேன்.   பரல் பரலான மணலையும் ஸ்படிகப் பளிங்கில் ஓடும் நீரை யாரும் வரைந்து விடலாம்..  ஆற்றங் கரையில், என் இடது தோள் வழியாகப் பக்கவாட்டில் பார்த்தால் தெரிகிற மாதிரி அமர்ந்து இருக்கிற சங்கரியம்மா என்னை ஒரு திசையில் பார்க்கச் சொல்கிறார். ஒரு நெடுங் கோபுரம், பார்க்கும்போது கூட அது வளர்ந்துகொண்டு போகிற மாதிரி, தெரிந்தது.   என் கிட்டப் பார்வைக் குறைவுகளையும் மீறி, மிகத் துல்லிய உயரத்தில் தெரிகிற சிமெண்ட் நிறப் பழமை படிந்த கோபுரம். இப்போது என்னிடம் யாரோ சைகை காட்டுகிறார்கள்..

என் பின் பக்கம் நிறையத் தண்ணீர் ஓடுவதாகவும், நான் அதில் நீந்திச் செல்லலாம் எனவும் அந்தக் குரல் சொல்கிறது. நான் பெருகிப் பிரவகிக்கிற நீரோட்டத்தில் நீந்தத் துவங்குகிறேன். ஒரு  ஆதி நீர் உயிரியின் இயல்பான சுலபமும் , ஒரு கரை உயிரியின் ஆனந்தமும் விகசித்து வெளிப்படும் நீச்சல் அது. தளும்பிப் பரவின நீர்வெளியிலும் அதே ஆனந்த அலையடிப்பு.  நதி என்னையும் நான் நதியையும் புரிந்து, ஏற்றுக் கொண்ட நிலை.  ஒரு பலா இலை போல நான் மிதக்கிறேன்.

எனக்கு முழுமையான பத்மாசனம் இட வராது. எனக்கு நீச்சலும் தெரியாது.
கனவு அனைத்தையும் எனக்குக் கற்றுக் கொடுத்திருந்தது.

நனவிலிருந்து போல, கனவிலிருந்தும் கற்றுக் கொள்ள எனக்குச் சம்மதம்.

%

விரட்டி விரட்டித்
துரத்துகின்றன யானைகள்.
துலாக் கிணற்றில்
நீர் இறைத்து
வேட்டி துவைக்கிறார் தாத்தா.
நாகம் இறங்கி வருகிறது
எங்கள் வீட்டு மச்சுப் படிக்கட்டில்.
அந்த மலைஜாதிப் பெண்
யார் போலவோ இருக்கிறாள்
என்னை மார்பில் புதைக்கையில்.
காகிதப் பூக்கள் போல
உயிரற்றுக் குலுங்குகின்றன
வனம் முழுவதும்.
குகைகளின் உட்புறச் சுவர்களில்
தீப்பந்தச் சுவாலையில்
நடுங்குகின்றன சித்திர வரிசைகள்.
பகவதி கோவில் தரிசன வரிசையில்
பயமும் தவிப்புமாக.

கனவுகள் நதி போல.
நானோ ஒரு ரிஷி போல.

%

2 comments:

  1. இந்த மாதிரி ஒரு சின்ன கட்டுரையும் கவிதையும் ரொம்ப நல்லாருக்கு சார்.

    ReplyDelete
  2. விலகி த்யானத்தில் ஒளிந்து கொள்வதை விட, வாழ்வு நதியில் அமிழ்ந்து நீந்தி மகிழலாம். ஆனாலும் ஒரு சிற்றிலை போல் நீரில் ஒட்டாமல் மிதக்க வேண்டும்..
    எத்தனையோ அடுக்குகள் கொண்ட உங்கள் உயிர் வரிகளில், சரியோ தவறோ, எனக்குக் கிடைத்த பொருள் இது.. வேறு ஒருவருக்கு பிறிதொரு தரிசனம் கிடைக்கலாம் ! ...சும்மாவா சொன்னான் மகா கவி 'எழுத்தும் தெய்வம்' என்று ! நன்றி.

    ReplyDelete