Saturday 20 February 2016

அரவிந்தம்.


ஒரு கதவு அடைத்தால் மறு கதவு திறக்குமா?

தெரியாது. நானே என்னுடைய ஒரு கதவை அடைத்து, இன்னொரு கதவைத் திறக்கிறேன். முகப்புத்தகப் பக்கத்தைச் சார்த்திவிட்டு, சமவெளிக் கதவைத் திறக்கிறேன்.  சமவெளியில் எல்லாக் கதவுகளும் திறந்தே இருக்கின்றன. அல்லது சமவெளியில் கதவுகளே இல்லை.

நான் பொதுவாகக் கதவுகளை அடைப்பதில்லை. மனிதரில் சிலரே என் கதவுகளை அவர்கள் வெளியேறும் முகத்தான், அவர்களே அடைத்துப் போகிறார்கள். மனிதர் சிலரின் பொருட்டே நான் எழுந்து போய் என் மூடிய கதவுகளை அகலத்திறக்க வேண்டியது ஆகிறது.

%

என் பதினொன்றாம் வயதிலிருந்து இன்று வரை இடது கண் மேலும் பழுதாகிக் கொண்டே வருகிறது. வலது கண்ணும் பார்வைக்குறைவு உடையது தான். இடது கண்ணுக்குப் பார்வைக்குறைவு அல்ல. பார்வையே இல்லாமல் போகும் அளவுக்குக் குறை. அதனாலேயே நான் கண் பரிசோதனைகளைக் கூடுமானவரை தவிர்ப்பேன், ஒத்திப் போடுவேன். என் இடது கண்ணில் பார்வை இல்லை என்று மருத்துவரீதியில் உறுதிப்படுத்த நேரும் என்ற பயம், ஒரு துயரம் நிரம்பிய தயக்கம்.

தூரத்து வானத்தில் கலைந்து நகரும் பறவைக் கூட்டத்தின் கரும்புள்ளிகள் என இடது கண்ணில் மிதக்க ஆரம்பித்து இருபத்து ஐந்து ஆண்டுகள் இருக்கும். தனித் தனிப் புள்ளிகள் எல்லாம் ஒன்று கூடி, நக வெட்டியால் துண்டிக்கப்பட்ட  கீற்றுகள் போல மேலும் கீழும் வளைந்து அலையாடத்துவங்கி அனேக காலம் ஆயிற்று. என் பார்வையின் திசையின் இடது கோடியில் ஒரு கூரிய பேனா நுனியால் வரையப்பட்ட கரும் பறவை போல அது பறந்துகொண்டே இருக்கிறது எப்போதும். கழுகு ஒன்றை இடது தோளில் வைத்திருக்கிற ஒரு காடோடி போல, என் இடக்கண்ணில் அமர்ந்திருக்கிறது அந்தப் பறவை. என் பார்வை  முதலில் அதை தொந்தரவாக உணர்ந்தது. ஒரு கட்டத்தில் , பயணிகள் விமான விளம்பரத்தில் எப்போதும் ஓடுதளத்தில் தயாராக நிற்கிற விமானம் போல, அதைப் பார்வை ஏற்றுக்கொண்டு, தினசரியின் மற்றச் செய்திகளை வாசிக்கத் துவங்கிவிட்டது.

அண்மைக் காலத்தில், என் கண்களின் கருப்பு நிறம் வெகுவாக வெளிறி, ஒரு ’பூ விழுந்த கண்’ என்ற தோற்றத்தை அடைந்துவிட்டதாகவும், இனிமேலும் கண் மருத்துவத்தை ஒத்திப் போடுவதற்கில்லை என்றும் குடும்பத்தினரால் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டேன்.   வேறு சில இடங்களிலும், இனிமேல் எனக்குப் புதிதாக ஒன்றும் நிகழ்வதற்கில்லை என்ற எல்லை வந்திருந்தது.   நான் எனக்குப் பிடித்த ஒரு கிராமஃபோன் இசைத் தட்டை, முள்முனை இறக்கி அதன் மாய அரக்கு வரியைச் சரியாகத் தொடவிட்டு, அதன் மினுமினுத்த கருஞ் சுழற்சியில் இசை துவங்கக் காத்திருப்பது போல, நான் கண் சோதனைக்குத் தயாரானேன்.

நல்ல விஷயத்தைத் தானே சொல்லப் போகிறேன்.  ‘நகரத்தின் ஒரு பிரபல மருத்துவ மனையில்’ என்பது போன்ற செய்தித் தாட்களின் மூடு மந்திரங்கள் இங்கே அவசியமில்லாமல், ‘அரவிந்த் கண் மருத்துவ மனை’ என்றே இங்கு குறிப்பிடுகிறேன். சில தினங்களுக்கு முன் , என்னுடைய அந்த விழித்திரைப் பரிசோதனைக்குத் தயாராகிவிட்டேன். அதற்கு முந்திய தினத்தில் தான் , அதன் முதல் கட்ட சோதனைகளை முடித்திருந்தேன். மறு நாட் காலை ஏழு மணிக்கு வந்தால், சீக்கிரம் முடித்துவிட்டுப் போய்விடலாம் என்று சொல்லப் பட்டும் இருந்தேன்.

என்னால் தனியாக எங்கும் செல்ல முடியாது. அப்படி ஒரு மன நிலை. ஒரு நல்ல சினிமா, நல்ல உணவு விடுதி, ஒரு நல்ல கண்காட்சி, ஏன் புத்தகத் திருவிழாக்களுக்குக் கூட நான் யார் துணையோடு மட்டுமே போக முடிகிறவன். தனித்த பயணங்களைக் கூடுமானவரை தவிர்ப்பவன். அரவிந்த் மருத்துவ மனைக்கு நான் தனியாகப் போவது என்று முடிவு செய்தேன். என் சமீபத்திய  மகத்தான முடிவுகளில் அது ஒன்று!

இன்னும் நான் இந்தக் கட்டுரையை ஆரம்பிக்கவில்லை அல்லது இப்போது இந்த வரியில் இருந்தே துவங்குகிறேன். எல்லா இடங்களிலும் நமக்கு உதவ யாராவது கிடைப்பார்கள் அல்லது இருப்பார்கள். அங்கே உ.சுப்ரமணியனும், சிதம்பரம் அக்காவும் இருந்தார்கள். உ.சு   என்னுடைய வங்கிச் சகா. பணி ஓய்வுக்குப் பிறகு அங்கே இணைந்திருக்கிறவர். ஓவியர் பொன். வள்ளியின் அக்கா என்பதால் எனக்கும்அக்கா, சிதம்பரம் அக்கா. மருத்துவ மனையில் ஒரு செவிலியர் மேலாளர். சிதம்பரம் அக்கா இருந்த 104ம் எண் அறையை எப்படித் தேடிப் போனேன் என்பதும் , விழித்திரைச் சோதனைக்கு உதவ வேண்டும் என எப்படி வாய்விட்டுக் கேட்டேன் என்பன எல்லாம், என் இயல்புக்கு ஒரு அதிசயம் தான்.

விழி அழுத்தப் பிரிவும், விழித்திரைப் பிரிவும் தான் அந்த நேரத்தில், உட்கார இடமின்றி, காத்திருப்பவர்களால் நிரம்பி இருந்தன. நேற்று மாலையும் அப்படியே இருந்தது. ஏற்கனவே இதை எதிர்பார்த்து, அந்த முழு தினத்தின் புதன் கிழமையை அரவிந்த் கிழமையாக எனக்குள் மாற்றியிருந்தேன். நேற்றே வந்து திரும்பியவன் என்ற அளவிலும், சிதம்பரம் அக்காவின் கருணையாலும் என் சோதனை, சில காத்திருப்பு நாற்காலிகளைத் தாண்டிச் சற்றுக் கூடுதல் முன்னுரிமையில் துவங்கியது. நான் ஒரு நீல நாற்காலியில் உட்கார வைக்கப் பட்டேன். என்னை விடப் பாரமாக, என் மேல் பாறை போல என் தனிமையும் உட்கார்ந்தது.

கண் அழுத்தம் இல்லை. ரத்த அழுத்தம் அதிகம் இல்லை. நோயாளிப் பதற்றம் உண்டாக்கும் சிறிதளவு ரத்த அழுத்தக் கூடுதலை அவர்கள் பெரியதாகப் பொருட்படுத்துவதில்லை. அடுத்துச் சொட்டு மருந்து. ஒரு அரை மணி அல்லது முக்கால் மணி நேரக் காத்திருப்பில் செவிலியரின் வெள்ளை உடை நடமாட்டத்தில், என் பார்வை உலகம் ஒரு வகைப் பனியால் மூடியிருந்தது. லா.ச.ரா வின் கனவு போல, அம்பாரம் அம்பாரமாக வெள்ளைத் துருவல்களின் குவியல் என்னைச் சுற்றிலும் நிரம்பிக் கிடக்க, என் கண்களுக்குள் சொட்டு மருந்தை , கால் பாவும் சத்தம் கூடக் கேட்காமல் ஒரு வெண் அசைவு இட்டுவிட்டுப் போயிற்று.

ஒரு சொட்டு மருந்துக்குப் பிந்திய இமை மூடல் இவ்வளவு பிரளயங்களை எனக்குள் உண்டாக்கும் எனத் தெரியாது. ஒரு எதிர்மறையான கருப்புக் கடல்,
தன் அடி வயிற்றைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து தன் குடலில் உள்ளதை வாய் வழியாகச் சிதறுவது போல, என்னென்னவோ புரளல்கள்.  நடந்ததன், நடக்க இருப்பதன் கசப்பு  அனைத்தையும் திரட்டி ஊற்றிய ஒரு பானத்தைப் பார்வை குடித்துக்கொண்டே இருந்தது உள்ளுக்குள். ஒரு முட்டுச் சந்துக்குத் துரத்தி ஒதுக்கப்பட்ட நிலையில், எல்லாப் புறங்களில் இருந்தும் தாக்கப்படும் ஒரு திரைக்காட்சி, அதன் தேவைக்கு மீறிய நீளத்துடன், ஊமை ஓட்டமாக ஓடிற்று.  வலுக்கட்டாயமாகப் பிடித்துத் தள்ளப்பட்டவன் போல், ஒரு உச்சிக்கும் பள்ளத்தாக்குக்கும் இடையில் நான் ஒரு கதறும் பொட்டலமென இறங்கிக் கொண்டு இருந்தேன்.

இந்த வர்ணனையை மேற்கொண்டு எழுதாமல் நிறுத்தும் படி பக்கத்து வெளி அறையில் இருந்து அந்தக் குரல் வந்தது. மருத்துவ மனையில் இருக்கும் போது, மருத்துவர் குரல் எது என்றும் சிகிச்சைக்கு வந்தவர் குரல் என்றும் அனுமானிப்பது எளிது. அது ஒரு மருத்துவரின் குரல். பிசிறு அற்ற, கனிவான ஒரு மருத்துவர் குரலினை நான் நீண்ட இடைவெளிக்குப் பின் அன்று கேட்டேன். சிறப்பு மருத்துவர்கள் சுருக்கமான வார்த்தைகளில், தாழ்ந்த குரலில் மட்டுமே பேச வேண்டும் என்று பழகி இருப்பார்கள். அவரின் ஓரிரு சொற்களில் இருந்து, நாமாக ஒரு வாக்கியத்தை யூகித்து எழுதிக்கொள்ள வேண்டும். நோயாளியும் மருத்துவரும் எந்த நொடியிலும் ஒரு உரையாடலை நிகழ்த்தும் சாத்தியம் இருப்பதில்லை. தனக்கு என்ன நிகழ்கிறது என அவரும் சொல்லமுடியாமல், அவருக்கும் சொல்லப் படாமல், மிகுந்த கலவரத்துடனே தான் ஒரு நோயர் வெளிவர முடியும்.

இந்த மருத்துவர் அப்படியில்லை. ரொம்ப நாட்களுக்குப் பிறகு வருகிற பெரியப்பாவை வரவேற்க வந்து, ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வீடு வரை பேசிக்கொண்டே வருவது போன்ற விசாரணையும் பதிலுமாகப் போயிற்று. சிகிச்சைக்கு வந்தவர், கடவுளின் சொந்த தேசத்திலிருந்து வந்தவராக இருக்கும். மருத்துவர் அவருடன் அதிகபட்ச மலையாளத்தில் பேசிக்கொண்டு இருந்தார். துவர்த்து முண்டு உடுத்தியும், அவ்வப்போது பின் கொசுவம் வைத்துச் சேலை கட்டியும்  மருத்துவர் பேசுவதை நான் மிகுந்த லயிப்புடன் கண்ணுக்குள் கேட்டுக்கொண்டு இருந்தேன். தானாகவே என் கண்ணுக்குள் இருந்த கடலின் கருப்பு மாறி, நீலக் கடலாகி இருந்தது. இப்படியே இன்னும் சற்று நீடித்திருக்கும் எனில் பாறைகள் மேல் சாய்ந்திருக்கும் கடல்கன்னிகள் கூட எனக்குத் தென்பட்டிருப்பார்கள்.

நான் கண்களைத் திறக்கவில்லை. ஏற்கனவே இரண்டு முறை பால் வெள்ளை நிற  டார்ச்  வெளிச்சக்கற்றையால் ’கண்ணை மூடிக்கோங்க’ என்று சொல்லப் பட்டிருந்தேன். மேலும் கடற்கன்னிகளின் காட்சியை நான் இழந்துவிடுவதும் உசிதமில்லை.  மூடிய இமைகளுக்குள் ஒரு பந்து போலக் கண்கள் உருண்டு, உட் பக்க இமைகளைத் தடவிவிட்டு நகர்வது ஒரு அனுபவம். நெற்றிக்கு நடுவே உள்ள ஒரு மூன்றாவது கண்ணை நீங்கள் அப்போது தேடாமல் இருக்க முடியாது.

பொதுவாகச் செவிலியரே பெயர் சொல்லி அழைப்பார்கள். மிக அருகில் என் பெயரின் உச்சரிப்புக் கேட்டது. கிட்டத் தட்ட அந்த அழைப்பே என் மூடிய இமைகளைத் திறந்தது.  என் முன்னால்  மருத்துவர் நின்றுகொண்டு இருந்தார். ‘ஐயா’ என்று துவங்குவதாகத்தான் அவருடைய ஒவ்வொரு கேள்வியும் இருந்தது. ‘ஐயா பெயர் கல்யாண சுந்தரமா?’, ‘ஐயா முகவரி 19.சிதம்பரம் நகரா?’ இப்படி.  பிசுபிசுப்பும் கண் கூச்சமும் நிரம்பிய கோடுகளால் ஒரு மருத்துவர் உருவத்தை வரைந்தபடி நான் என் பெயரை உறுதி செய்தேன். ‘ஐயா. வாங்க. சோதனை பண்ணிக்கலாம்’ என்று அவரே அவருடைய அறைக்கு அழைத்துப் போனார்.

அடுத்த பத்துப் பதினைந்து நிமிடங்களும் என்னைப் பொறுத்தவரை அற்புதம் நிறைந்தவை. துக்கம் விலகுகிற, பயம் தீர்கிற, விடுதலை அடைகிற ஒரு கணம் என்னவெல்லாம் நிகழுமோ, அவை எல்லாம் எனக்கு நிகழ்ந்தன. என்னை உட்கார அனுமதித்ததை விடப் பேச அனுமதித்தார். என் வாழ்வில் பேசுவதற்குக் கிடைத்த இறுதி வாய்ப்பு இது என்பதாக, நான் பேசினேன். அது நான் கூட, கல்யாணி கூட அல்ல, வேறு யாரோ. அவ்வளவு இளகி, அத்தனை நெகிழ்ந்து, அத்தனை லகுவாக என்னை உணரும்படி செய்ய அவரால் முடிந்தது. இம்மி அளவும் விட்டு விலகாத ஒரு மருத்துவராகவும், ஒவ்வொரு சொல்லிலும் என்னைத் தகப்பனாக ஏற்றுக் கொண்ட ஒரு மகனாகவும் அவர் இருந்தார். என்னுடன் மலையாளத்தில் அவர் பேச வேண்டும் என நான் விரும்பி, நானும் எனக்குள் சேகரித்திருந்த மலையாளச் சொற்களுடனான ஒரு உரையாடலுக்குத் தயாராக இருந்தேன்.

முதல் சுற்றில் இருந்து கடைசிச் சுற்றுவரை ஜெயிக்கும்படியாக அவருடைய தமிழ் இருந்தது. உழவர் சந்தைக்கு வெளியே கட்டுக் கட்டாகப் பனங்கிழங்கு விற்கிறவர் முன் நிற்கும் போது உணர முடியும் ஒரு செம்மண் வாசனை இருக்கும் உரையாடல் அவருடையது, அவர் எந்த மொழியில் பேசினாலும் எனக்குப் புரிந்திருக்கும்.

அடிப்படையான என் சந்தேகங்களை, இடது கண் சார்ந்து வெளியே சொல்ல இயலாமல்,  வளர்ந்துவரும்  சந்தேகத்தின் ஆளுயரப் புற்றுகளை எல்லாம் அவரிடம் என்னால் சொல்ல முடிந்தது, இடது கண்ணில் 1990ல் இருந்து நகரத் துவங்கி இருக்கும் கரும் புள்ளிகள் பற்றியும், இப்போது பறக்கும் கரும் பறவை குறித்தும் நான் கேட்ட கேள்விக்கு, அவருடைய பதிலை, ஒரு நுங்கில் இருந்து துவங்கினார்,

ஆமாம். ஒரு பனை நுங்கின் கண்ணில் துவங்கி, அதன் இளகிய பதத்தை எல்லாம் வர்ணித்து, மிக நிச்சயமாக நான் என் முன்னால் ஒரு நுங்குக் கண்ணை உணரத் துவங்கிவிட்டேன், இப்போது நான் இருப்பது ஒரு நுங்கு விற்கும் பதநீர் வியாபாரி முன், என என்னைத் தயார்செய்த விதம் சில நொடிகளுக்குள் நிகழ்ந்தது. அப்புறம் அவர் விஞ்ஞான பூர்வமாக என் நோய்க்கூறு என்ன என்பதை விளக்கத் துவங்கினார். நான் எட்டாம் ஒன்பதாம் வகுப்பின் சயன்ஸ் பீரியட் ஒன்றில், ஜோயல் சாம் அல்லது ஸ்டீஃபன் தம்பான் சாரின் வகுப்பறையில் இருந்தேன். காற்றில் ஒரு கரும்பலகை உண்டாக்கி, விழித் திரை, லென்ஸ், பிம்பம் எல்லாவற்றையும் வரைந்து காட்டி, அதில் எனக்கு எந்த இடத்தில் என்ன குறை, அதை எப்படிச் சரிசெய்வார்கள், எனக்கு ஏன் இனி அந்தக் குறையைச் சரி செய்ய முடியாது என்பதைச் சொன்னார்.

‘உங்களுடன் இன்னும் சில நிமிடங்கள் எடுத்துக் கொள்ளலாமா?’ என அவரிடம் அனுமதி கேட்டேன். என்னிடம் இருந்த அதுவரையிலான் நோயாளி அங்கியைக் கழற்றிவிட்டு, அன்றைக்கு வீட்டை விட்டுப் புறப்படும் போது அணிந்திருந்திருந்த ஸ்லாக் ஷர்ட்டிற்கு மாறிப்   பேசத் துவங்கினேன். இந்த மருத்துவமனையில் எனக்கு நிகழ்ந்த எல்லாப் பரிசோதனைகளிலும், அவர்களின் மிக உயர்ந்த மருத்துவத் திறமைகளையும் மீறி, அவர்கள் என்னுடன் பேசியதே இல்லை என்று சொன்னேன். கண் மருத்துவம் பார்க்க வந்தவர்களுக்கு, இரண்டு கண்கள் தவிர, ஒரு முகமும் இருப்பதை ஏன் ஒருவரும் கணக்கில் எடுப்பதில்லை என்று கேட்டேன். அவர் இதுபோன்ற என் கேள்விகளின் அடிப்படையையும் உதாசீனம் செய்யாமல், ஒரு சேவை மருத்துவ மனையின் அதிகப்படியான பரிசோதனைகளுக்கு இடையில் அவர்கள் இது போன்ற மனிதாபிமான நிமிடங்களைத் தவற விட்டாலும், எந்தக் குறைவும் இன்றி மருத்துவத் தீர்வுகளை அளிப்பதில் கவனத்தைக் குவித்து விடுவதாகவும் சொன்னார். நீங்கள் எப்படி இவ்வளவு நேரம் செலவளிக்கிறீர்கள் என்று கேட்டேன்.

அவர் சுருக்கமாக ஒரு பதில் சொன்னார். ‘எனக்கு இதில் ஒரு சின்ன ’த்ரில்’ இருக்கிறது. இந்த  ‘த்ரில்’  எனக்குத் தேவைப்படுகிறது. அது என்னை மேலும் செயல்பட,  உற்சாகப் படுத்துகிறது’ என்றார். நான் அவருடைய மலையாளப் பேச்சை நினைவூட்டிப் பாராட்டினேன். அவர் அதற்கான பதிலாக இல்லாமல், மருத்துவக் குறிப்புகளை எழுதிக்கொண்டே, ‘உங்களுக்கு, உங்களுக்கு முன்னால் வந்தவருக்கு எல்லாம் என் தகப்பன் வயது இருக்கும் அல்லவா?’ என்றார். அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை. என்னைப் பார்த்து ஒரு சிரிப்புச் சிரித்தார்.

நான் அவர் பெயரைத் தெரிந்துகொள்ளலாமா என்றேன். ‘கார்த்திக்’ என்றார். அவர் நாற்காலியின் மேல் இருந்த அவர் வலதுகையில் என் கையை வைத்து,
ஒரு தகப்பனைப் போல, ‘நல்லா இருங்க கார்த்திக்’ என்றேன். கும்பிட்டேன். கண் கலங்கி வெளியே வந்தேன். அறை முகப்பில் மருத்துவர் பெயர்ப் பலகையை வாசிக்க முயன்றேன். கலங்கலாக ‘கார்த்திக் ஸ்ரினிவாசன்’ என்ற பெயர் இருந்தது. இதை எழுதும் போதும் மீண்டும் ஒரு முறை உச்சரித்துக் கொள்கிறேன்.

‘கார்த்திக் ஸ்ரினிவாசன்- எனக்கு  மீண்டும் ஒரு முறை இப்படித் தனியாக உச்சரிக்கப் பிடித்திருக்கிறது.

%