Saturday 30 March 2013

மணல் மேடும் காக்காய்ப் பொன்னும்அப்பாவைப் பார்த்துவிட்டு வருகிறோம்.

அப்பாவுக்கு இன்று 89 துவங்குகிறது. நேற்றை விட இன்று உற்சாகமாக இருக்கிறார். வந்து கொண்டே இருக்கிற தொலைபேசி வாழ்த்துகள். நாங்கள் நுழைகிற சமயம் பாரதிமணியின் அழைப்பு வந்திருக்கிறது. ‘ ஏ. அதை எடுப்பாஎன்று சீனி குலசேகரனிடம் சொல்ல, தொலைபேசி சீனியிடம் இருந்து அப்பாவின் கைக்கு மாறுகிறது. பக்கத்தில் வரிக் கோடுகள் இட்ட உடையுடன், எங்களுக்கு நாற்காலிகளை எடுத்துப் போடுகிற சரவணன். சரவணன் கழுத்தில் இருக்கும் ஒற்றை உத்திராட்சமும் கயிறும் எனக்குப் பிடித்திருக்கிறது. வள்ளிநாயகத்தைக் காணோம். முத்துக்குமார் வேலை முடித்து மாலை வரக்கூடும்.

நான் பிறந்த தினங்களைக் கொண்டாடியதில்லை. என் அறுபதாம்  வயது நிறைவைக் கூட, வாசலில் கெட்டிக்கிடக்கிற மழைத் தண்ணீரைத் தாண்டி வீட்டு நடையில் ஏறுவது போலத்தான்  எடுத்துக்கொண்டேன். அப்பா சமீப காலமாக அவருடைய பிறந்த தினங்களைக் கொண்டாடுகிறார். தன்னுடைய தனிமையை அகற்றிக்கொள்ள இந்தக் கொண்டாட்டம் அவர்க்குத் தேவைப் படலாம். இன்று சந்திக்கிற நண்பர்களின், இன்று நடத்துகிற கலகலப்பான உரையாடல்களின் வெளிச்சத்தில் அவருக்கு அடுத்து வரும் தினங்களை வாழ்வதற்கான அவருடைய ஒற்றையடிப்பாதை தெளிவடைகிறதாகவும் இருக்கலாம்.
இன்றும் அப்படித்தான் இருந்தார். இதற்கு முந்திய இரவுடன் முடிந்த 88 வருடங்களின் எந்த பாரமும் அவரிடம் இல்லை. வியர்வையோ, கண்ணீரோ எதன் சுவடும் முற்றிலும் துடைக்கப்பட்டதாக முகம் இருந்தது. முக்கிச் சுமந்த வாழ்வின் சுமை எதையும் அவருடைய குரல் அடையாளம் காட்டவே இல்லை. பேசும் பொழுதின் குரலும், கையசைவுகள் உள்ளிட்ட அவருடைய உடல்மொழியும், உணர்வு பூர்வமான ஆனந்த அலையும் என்னுடைய இந்த 67ன் விளிம்பிலும் கூட எனக்கு வசப்பட்டதே இல்லை.

ஆனந்தமாக இருப்பதை விடுங்கள். நான் சந்தோஷமாக இருக்கிறேனா என்றே தெரியவில்லை. எங்கள் அப்பாவின் முகத்தில் இருக்கிற மலர்ச்சியை என்னுடைய துணைவியோ பிள்ளைகளோ இதுவரை என் முகத்தில் கண்டிருப்பார்கள் என்று சொல்லமுடியவில்லை. என் அந்தரங்கமான நிலைக் கண்ணாடிகள் உட்பட, என்னிடம் இத்தனை குமிழியிடும் ஆனந்தத்தின் இடவல பிம்பங்களை அறிந்திருக்க முடியாது. பெரும் துக்கமொன்று கவிந்துகொண்டே இருக்கிறது போன்ற ஒரு சாம்பல் நிறத் திரைச்சீலைதான் என்னுடைய எல்லா மேடைகளின் பின்புலத்தில் தொங்கவிடப்பட்டிருக்கிறது. என்னுடைய பாத்திரங்களின் நகைச்சுவை உரையாடல்களைக் கூட அவர்கள் துவர்த்த பாக்குகளை மென்றுகொண்டே பேசுகிறார்கள்.

ஓர் எண்பத்தொன்பது வயதுத் தந்தைக்கும் அறுபத்தேழு வயது மகனுக்கும் இடையில் வாழ்வு குறித்தும் வாழ்தல் குறித்தும் எப்படி இருவேறு புரிதல்கள் உண்டாகின்றன? அதே கரும்பலகையில் அதே சாக்பீஸ் துண்டுகளால் வெவ்வேறு சிறு அளவே வித்யாசம் உடைய விரல்கள் எழுதுகையில் எப்படி அதே மொழி தன் வரிவடிவங்களை முற்றிலும் வேறொன்றாக மாற்றிக் கொள்கிறது?  நான் இந்த யோசனைகளுடன்தான் வண்டியை வீடு நோக்கி ஓட்டிவந்திருக்கிறேன். எப்போது நயினார்குள முக்குத் திரும்பினேன், மேம்பாலம் தாண்டினேன், புறவழிச் சாலை வந்தேன், புதிய பேருந்து நிலைய வளைவு திரும்பினேன், பெருமாள்புரத்தில் புகுந்தேன் என்பதையெல்லாம் உணரவே இல்லை. பின்னால் உட்கார்ந்திருக்கிற துணைவியாரின் முந்தானை படபடக்கிறது தெரிந்தது. ஏதோ ஒரு இடத்தைத் தாண்டுகையில், நீண்ட காலத்திற்குப் பின் பார்த்த ஊமத்தம் பூக்களின் அசைவு மட்டும் நீர்த்த கருநீலத்தில் மங்கலாக

வீட்டில் வண்டியை நிறுத்துகையில் எனக்கு, இரண்டு நாட்களுக்கு முந்திய அதிகாலையில் பார்த்த இரண்டு சிறுமிகள் நினைவுக்கு வருகிறார்கள்.
கல்வெட்டாங்குழியைத் தாண்டினால் துவங்குகிற அந்தத் தெருவின் இடதுபுற முதல் வீட்டில் கட்டுமானம் நடக்கிறது.. ஏற்கனவே இருக்கிற வீட்டின் பக்கவாட்டில் புதிய அறைகள் கட்டுகிற உத்தேசம் . வீட்டின் முன் ஒரு பெரும் மலையாக மணலைக் குவித்திருக்கிறார்கள். ஈர மணல். சமீபத்தில் பார்த்த கிட்டங்கி மணல் அல்லாமல், ஆற்றில் இருந்து நேரடியாக அள்ளிய, நேற்றிரவு ஓடிய நீரின் பாடல்களை இன்னும் முணுமுணுக்கிற மணல். ஒரு பத்தடி உயரத்திற்கு, பிரமிடு போலக் கிடக்கிறது.
அந்த மணல்கோபுர உச்சியில் வெறும் ஜட்டி மட்டும் அணிந்த அந்த வீட்டின் ஆறு ஏழு வயதுச் சிறுமி உட்கார்ந்திருக்கிறது. கீழே நிற்கிற தந்தையை, மேலே ஏறிவர, ஆங்கிலத்தில் சொல்கிறது. கைகளை அகலவிரித்து நீட்டி, அவர் வந்ததும் அணைத்துக் கொள்ளக் காத்திருக்கிறது. கீழே இருக்கிற தகப்பன், அவருக்கு மேலே ஏறிவரத் தெரியாதென்றும், ஏறினால் தொப்பென்று விழுந்துவிடுவார் என்றும் மேலே இருக்கிற அவருடைய தைரியசாலி மகளைப் போல அவர் கெட்டிக்காரர் அல்லவென்றும் ஆங்கிலத்தில் சொல்கிறார். பயப்படுவது போலவும் கீழே விழுந்துவிடுவது போலவுமான அவருடைய பாசாங்குகளை, சுற்றுச் சுவருக்கு உள்ளே, கசங்கல் அற்ற புதிய காலைக்கென அணிந்த தளர்வாடையுடன் நிற்கிற பெண் ரசித்தபடியே, மணல் உச்சியில் இருக்கிற மகளிடம், ‘உன் அப்பனுக்கு ஒன்றும் தெரியாது மகளேஎன்று கொஞ்சுகிறாள். இந்தக் காலை வேறு எதற்கானதும் இல்லை. இப்படி மணல் குவியலின் மேல் நிற்கிற மகளையும் அடிவாரத்தில் பொம்மலாட்டம் நிகழ்த்தும் கணவனைப் பார்த்து நிற்பதற்கு மட்டுமே என்பது போல இருக்கிறது அந்த முகம்.

கல்வெட்டாங்குழிக்கு மேல் புறம், ‘சிக்‌ஷாவீட்டுக்குப் பக்கத்தில் இருந்து புதிதாக விழத் துவங்கியிருக்கும் பாதையில் அந்த இன்னொரு பெண்ணும் குழந்தையும் நடந்து வருகிறார்கள். அந்த வரிசையில் ஏதோ ஒரு வீட்டில் அள்ளப்பட்ட குப்பை, தலையில் ஒரு ஆரஞ்சு நிற பிளாஸ்டிக் வாளியிலும், இடுப்பில் இன்னொரு அகலப் பாத்திரத்திலும் இருக்கிறது. இங்கே கொண்டு வந்து கொட்டினால் யாரும் கேட்கமாட்டார்கள். எவ்வளவு தூரம் என்றால் என்ன, வீட்டு வேலை செய்கிறவள் தானே வீட்டுக்குப்பையை அப்புறப் படுத்தவேண்டும்.

கூடவருகிற பெண்குழந்தைக்கு , மணல்மேல் நிற்கிற சிறுமி வயதுதான் இருக்கும். ஒரு வயது குறைவாக்க் கூட இருக்கலாம். ஒரு கை அம்மாவின் சேலையைப் பிடித்திருக்கிறது. இன்னொரு கையில் அம்மா வைத்திருப்பது போலவே, அது சக்திக்குத் தூக்கும் அளவுக்கு ஒரு உடைந்த பிளாஸ்டிக் கோப்பை. அதைத் தூக்கிக் கொண்டே வருகிறது. அம்மா பேசுகிறதும் அதற்கு மகள் பதில் சொல்கிறதும் இத்தனை தூரத்தில் காதில் விழவில்லை. நிறுத்தாத அவர்களின் உரையாடல்கள் அவர்கள் பின்னால் இழுபடும் நிழல்களுடன் கல்வெட்டாங்குழிப் பக்கமாக நகர்கின்றன. முன் பக்கத்தில் இருந்து பாய்கிற வெயிலில், அந்தக் குழந்தை அணிந்திருக்கிற உடை காக்காய்ப் பொன் போல மினுமினுக்கிறது. அது ஒரு நர்சரி பள்ளி ஆண்டு விழாவில், ஒரே ஒரு நாள் ஆடுவதற்காகத் தைக்கப் பட்ட, ஒரு இளவரசி அல்லது தேவதைக்கான உடையாக இருக்கலாம். வெயிலின் வெள்ளிப் பிரதிபலிப்பில் சிறகு முளைத்துக்கொண்டு இருந்தது அந்தக் குழந்தையின்  இரு புறமும். அதனுடைய அம்மா வேலை பார்க்கிற ஏதோ ஒரு வீட்டுப் பாப்பா உடுத்திய உடையாக இருந்தால் என்ன? இரவல் உடையில் இரவல் சிறகுகள் முளைத்த இரவல் தேவதைகள் இரட்சிப்பு அருளாமலா போவார்கள். வெகு காலம் தன் அம்மாவுடன் இப்படி நடப்பது போலவும், இன்னும் வெகு காலத்திற்கு அம்மாவுடன் நடப்பதற்காகவே இந்தப் பாதை புதிதுபுதிதாக விழுந்திருப்பதாகவும் மிகத் தெளிவாக உணர்ந்துவிட்ட முகத்துடன், நிறுத்தாத உரையாடலுடன், அதற்குச் சற்று முந்திய மண்ணில் உட்கார்ந்திருக்கும் பத்துப் பதினைந்து காக்கைகளை விரட்டுவதும் அம்மாவுடன் மறுபடி வந்து சேர்ந்துகொள்வதுமாக அது போய்க்கொண்டிருந்தது.

வண்டியை இழுத்து நிறுத்தி, அதன் பாரம் நகர்ந்து தன் இருப்பு நிலையில் வந்ததும், நான் யாரும் அற்ற அந்தப் பாதையைப் பார்க்கிறேன். எதையும் பார்க்காத வெற்றுப் பார்வை. இரண்டு தினங்களுக்கு முந்திய காட்சிகள் இதுவரையில் குவிந்திருந்த  இடத்தில் இப்போது எதுவும் இல்லை.

ஒரே ஒரு கணம் தோன்றுகிறது. அப்பா அந்த மணல் மேட்டில் நிற்பதாகவும், நான் மினுமினுக்கும் காக்காய்ப் பொன் உடையுடன் நடந்துகொண்டு இருப்பதாகவும்.

%