Sunday, 21 October 2012

உதிர்தல்/உடைதல்/கசிதல்.






வரும்போது பார்க்கலாம் என
வந்தால்
போகும்போது உதிர்ந்துகிடந்த
பன்னீர்ப்
பூவையெல்லாம்
பெருக்கித் தள்ளியிருந்தார்கள்.
கால்வைக்க முடியாத
மழைச் சகதி
காலையில் இருந்தது போல்
மாலையில் இருக்காது என்று
திரும்பினால்
அப்படியே இருந்தது
அடுத்த நாள் வரையிலும்.
ஏறுக்கு மாறாகவே
இருக்கிற தெருவில்தான்
நடக்கவேண்டியது இருக்கிறது
நானும் என் கைகளால்.

%

நீ வருவதற்காகக்
காத்திருந்த நேரத்தில்தான்
பளிங்கு போல்
அசையாதிருந்த தெப்பக்குளம்
பார்க்க ஆரம்பித்தேன்.
தலைகீழாய் வரைந்துகொண்ட
பிம்பங்களுடன்
தண்ணீர் என் பார்வையை
வாங்கிக் கொண்டது முற்றிலும்.
உன்னை எதிர்பார்ப்பதையே
மறந்துவிட்ட ஒரு கணத்தில்
உன்னுடைய கைக் கல் பட்டு
உடைந்தது
கண்ணாடிக் குளம்.
நீ வந்திருக்க வேண்டாம்
இப்போது.

%

சிறுவனாகப்
பென்சில் சீவும்போது
கசிந்த ரத்தம்
உண்மையாக இருந்தது.
இப்போது ஜாக்கிரதை உணர்வு
வந்துவிட்டது வயதுடன்.
எஞ்சியது என்ன?
காயம் படாத கை விரல்.
நிஜம் கசியாத கவிதை.

%

கல்யாண்ஜி கவிதைகள்
தொகுப்பில் இருந்து.

1 comment:

  1. பன்னீர்ப் பூக்களைப் பெருக்கித்தள்ளும் கரங்களைப் போல, காலம் எச்சரிக்கைகள் அற்ற நம் குழந்தைப் பருவத்தையும் பெருக்கித்தள்ளி விடுகிறது... சலனங்கள் அற்று நீர்ப் பிம்பங்கள் எவ்வளவு நேரம் நிலைக்க முடியும் .. அது போலத் தானோ வாழ்க்கையும்..?
    - கோபால் மனோகர்.

    ReplyDelete