Tuesday 30 October 2012

இப்போதும்...


சமீபத்தில் பதிவு செய்யப்பட்ட மதுரை நிலையபொதிகைத் தொலைக்காட்சி
நேர்காணல் ஒன்றில்,சற்று வித்தியாசமான ஒரு கேள்வி இருந்தது. கமலவேலன் அந்தக் கேள்விக்கான தூண்டுதலை எங்கிருந்து பெற்றார் எனத் தெரியவில்லை.
என்னுடைய,‘ கூறல் ’ சிறுகதை அதிகம் கவனிக்கப்படாத என்னுடைய நல்ல் கதைகளில் ஒன்று என எஸ்.ராமகிருஷ்ணன் சொல்லி இருப்பதாகவும், அவரே இதை ஆங்கிலத்தில்  மொழிபெயர்த்திருப்பதாகவும் சொன்னார். (அந்த ஆங்கில மொழியாக்கம் குறித்து எனக்குத் தகவல் இல்லை. அது கமலவேலன் என் மீது அல்லது அந்தக் கதையின் மீது கொண்டிருக்கும் விருப்பத்தின் நீட்சியாக இருக்கலாம்). “இப்படி உங்களின் வேறு எந்தெந்தக் கதைகள், எழுதிய உங்களுக்குப் பிடித்து வாசகர்களால்  கவனிக்கப்படவில்லை என நீங்கள் நினைக்கிறீர்கள்?” என்பதுதான் அவர் கேள்வி. இந்த நீண்ட படைப்பியக்கத்தில், அந்தக் கேள்விக்குப் பதிலாகச் சொல்ல, கணிசமான கதைகள் அடங்கிய  ஒரு பட்டியல் என்னிடம் மட்டும் அல்ல, என்னுடைய  சக படைப்பாளிகளிடமும் நிறைய இருக்கும்.என்றே நினைக்கிறேன்.

தனிப்பட்ட கதைகளை விடுங்கள். என்னுடைய சில தொகுப்புக்களே கூட, அந்தக் கேள்விக்கு உள்ளாகியிருக்கின்றன.அதுவும் என்னிடமே. ’பெய்தலும் ஓய்தலும்’ என்ற சிறுகதைத் தொகுப்பும், ’உறக்கமற்ற மழைத் துளி”, “இன்னொரு கேலிச் சித்திரம்” ஆகிய கவிதைத் தொகுப்புக்களும்  யாரிடம் போய்ச் சேர்ந்தன என்றே எனக்குத் தெரியவில்லை.  அதற்குப் பிந்திய கதை, கவிதைத் தொகுப்புக்கள் விற்பனையாகிவிட்டதாக அறிகிற நிலையில், நான் நிஜமாகவே, வெகு தொலைவில் ஒரு புள்ளியைப் போலத் தெரியும் வாசகன் ஒருவன், நெருங்கி உருப் பெருகி, என்னிடம் அவற்றில் உள்ள ஏதேனும் ஒரு வரியைப் பகிர்ந்துகொள்ள மாட்டானா என இறுக்கமாகவும் துக்கத்துடனும் எதிர்பார்க்கத் துவங்கியிருக்கிறேன்.  “

மணல் உள்ள ஆறு” தொகுப்புக்கு அடுத்ததொரு ஒரு கவிதைத் தொகுப்பிற்குத் தயாராகிற என் மன நிலையை,’இன்னொரு கேலிச் சித்திரம்’ தொகுதி இன்னும் விற்றுத் தீரவில்லை, அதுவும் எவ்வளவு, வெறும் முன்னூறு பிரதிகள், என்று அறிவது, எப்படிக் குலைக்காமல் போகும்?  சந்தியா பதிப்பகம்  என்னிடம் காட்டும் தொடர்ந்த பரிவை, என் படைப்புக்கள் மேல் அவர்கள் வைத்திருக்கும் தீராத மரியாதையை. நான் சுரண்டுகிறேனோ என்ற கவலை எனக்கு உண்டு.

என்னுடைய அடுத்த கவிதைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதுவதற்கு முன், அந்தத் தொகுப்புக்கு ஒரு தலைப்பைத் தீர்மானிக்கு முன் இந்தக் கேள்விகளை எல்லாம் என்னிடமே நான் கேட்டுக் கொள்ளவேண்டியதிருக்கிறது. வேறு யாரிடமும் கேட்கமுடியாது என்பதும், கேட்பதற்கில்லை என்பதும் தானே உண்மையும்.

%

‘இன்னொரு கேலிச் சித்திரம்’ தொகுப்பில் இருந்து ஒரு கவிதை.

மின்வெட்டுச் சுமத்திய அடர் இருள்.
நான்
முதல் நொடி புத்தனைப்பற்றி யோசிக்கிற
கடைசி நொடி சித்தார்த்தனாக
அமர்ந்திருக்கிறேன்.
நிரந்தர அமைதிக்கும் 
அ-சத்தத்திற்கும் நடுவில்
தூரத்துப் போதி மரம்
தன் மாய அசைவின்மையுடன்.
*
ஒரு சதுரங்கக் காயைப் போல
தன்னை நகர்த்துகிற
உன்னுடைய திறமையைப்
பாராட்டுகிறான் புத்தன்.
அறுபத்து நான்கு
கருப்பு வெள்ளைக் கட்டங்களில்
அவனைச் சிப்பாய் ஆக்கிப்
பகடை ஆடுகிறாய் நீ.
*
புத்தரைப் போல்
நின்றுபார்த்தேன்.
கூடவில்லை.
புத்தரைப் போல்
அமர்ந்து பார்த்தேன்.
இயலவில்லை.
சுலபம்தான் என்று
புத்தரைப் போலச்
சிரிக்க முயன்றேன்.
புத்தர்தான் நிரித்துக்கொண்டிருந்தார்
என்னைப் பார்த்து இப்போதும்.

%

Monday 29 October 2012

கைகள்.


‘உன்னுடைய கைகள்தானே
வேறு யாருடைய கைகளோ போல்
பார்க்கிறாயே’ - என்றான்.
என்னுடைய கைகளைத்தான்
வேறு யாருடைய கைகளையோ போல்
பார்க்கிறேன்.
என்னுடைய கைகளை
என்னுடையதாகப் பார்ப்பதில்
என்ன இருக்கிறது?

%

விரலகளைப்  பிரிக்கும்போதே
கைக்குள் இருந்தது
இலைகளை அசைப்பதற்கு முந்திய  காற்று.
மணலை அள்ளினேன்.
கையில் காற்சுவடுகளுடன்
கரை இருந்தது.
நீரை அள்ளினேன்.
கையில் முடிவற்ற நதி இருந்தது.
அகண்டு கிடந்த
ஆகாயத்தை அள்ளிவிட்டு,
உள்ளேதான் இருக்கும்  என்று
திறக்காமல் வைத்திருக்கிறேன்
கையை.

%

உள்ளங் கைக்குள் ஏந்தக்கூடிய
முட்டை  அளவுக்கு அழகானது உண்மை.
நான் கை நழுவ விட்டிருக்கிறேன்.
அதைப் பொறுக்கி எடுத்ததும்
நான் தான் எனினும்
மஞ்சட் கருவும் வெள்ளைக் கருவும்
சிந்திச் சிதறி
உண்மையின் அருவெறுத்த முடை நாற்றம்.
தோடுகள் மட்டும் இன்னும் அழகாக்.
நீங்கள் உங்கள் முட்டைகளைச்
சிதறவிடுவதில்லை.
உயிரும் சிறகும் நிரம்பிய
ஒரு பறவையைப் பறக்க விட்டிருக்கிறீர்கள்
அதிலிருந்து.
ஏற்கனவே வானம் அழகானது.
மேலும் அழகாகியிருக்கிறது
அந்தப் பறவையால்.

%

கல்யாண்ஜி கவிதைத் தொகுப்பில் இருந்து.
Saturday 27 October 2012

வெளி மூச்சு.


பலிச் சோறு படைப்பது போலிருக்கிறது
ஆவி பறக்கிற உன் காமம்.
பீறிட்டுக் கொண்டிருக்கிற
வக்கிரம் அனைத்தையும்
உன் வெதுவெதுப்பான மார்பு  கரைத்துவிடுகிறது.
காணாமல் போன சீப்பை முன்வைத்து
நிலைக் கண்ணாடி உடைக்கிற என் கோபத்தை
உறிஞ்சிக் கொள்கிறது உன் ஆழ்ந்த முகம்.
மாந்தளிர் அசைக்கும் சிறுசெடிக்கு
நீர் வார்க்கிறது உன் முத்தம்.
விருப்பு வெறுப்புகளின் அமில எச்சிலை
என் வாயோரங்களிலிருந்து துடைத்துக் கொண்டிருக்கிறது
உன் வெளிறிய விரல்கள்.
எஞ்சிய என் கருத்த கசடுகளின்
ரகசிய அம்பு எய்யப்படக்
காத்திருக்கிறக்கிறது உன் உந்திச் சுழி.
குருவையும் கடவுளையும் பிரீதி செய்ததில்
செம்பருத்தி உருண்டு விழுகிறது உன் யோனியில்.

அப்பழுக்கற்றதாக இருக்கிறதாகச்
சொல்கிறார்கள்
வீட்டுக்கு வெளியில் நான்
விடுகின்ற மூச்சு.

%

கல்யாண்ஜி கவிதைத் தொகுப்பிலிருந்து.

Friday 26 October 2012

யாராவது ஒருவர்யாராவது ஒருவர்
குடித்துவிட்டு விழுந்துகிடக்கிறார்கள்.
யாராவது
திறக்காத கடைவாசலில் தூங்குகிறார்கள்.
செருப்புத் தைக்கக் கொடுத்துவிட்டுக்
காத்து நிற்கிறார்கள்.
வெற்றிலைச் சாற்றைப்
 பாதையில் துப்புகிறார்கள்.
யாராவது ஒருவர்
தலைக்கு வைத்த் பூவைத்
தவற விடுகிறார்கள்.
அழுது கலங்குகிற பெண்ணிடம்
ஒதுங்கி நின்று பேசுகிறார்கள்.
சாதுவாக வருகிற கருப்புப் பசுவுக்குத்
தேவைக்கதிகமாகப் பயப்படுகிறார்கள்.
யாராவது ஒருவர்
தொலைபேசியில் சத்தமாகப் பேசுகிறார்கள்.
தேய்த்து அடுக்கிய சலவை உடைகளைச்
சூடாக ஏந்திப் போகிறார்கள்.
என்னைப் போல
யாராவது ஒருவர் -
பள்ளிக்கூடம்   போய்க்கொண்டிருக்கிற
சிறுவர் இருவரில்
சின்னப் பையனின் தலையை வருடுகிறார்கள்.

%

கல்யாண்ஜி கவிதைகள் தொகுப்பிலிருந்து.

Thursday 25 October 2012

கனவுகள் நதி போல.அது சிவசைலம் ஆறு போல இருக்கிறது. அந்த ஆற்றில்தான் அனேகமாக எப்போதும் கரண்டை அளவு தண்ணீர் ஓடும். புன்னைக் காய்கள் உருண்டு வரும். ஆற்று ஓரம் உள்ள தாழம்புதர்களில் இருந்து யாராவது ஒருத்தர் தாழம் பூ பறித்துக் கொண்டு தொடை வரை உயர்த்திய வேட்டியோடு தண்ணீரை வினோதமாகக் கிழித்துக் கிழித்து நடந்துவந்து கொண்டிருப்பார். அவர் பாதங்களுக்குக் கீழ் அமுங்கும் ஆற்றுமணலை அவர் முகத்தில் கிட்டத்தட்ட ஒரு சிரிப்பின் சாயலைத் தொடுகிற, மாறும் பாவனைகளால் நம்மால் உணர முடியும்.

அந்த கரண்டை அளவு தண்ணீரில் பத்மாசனம் இட்டு நான் தியானம் செய்து கொண்டு இருக்கிறேன்.   பரல் பரலான மணலையும் ஸ்படிகப் பளிங்கில் ஓடும் நீரை யாரும் வரைந்து விடலாம்..  ஆற்றங் கரையில், என் இடது தோள் வழியாகப் பக்கவாட்டில் பார்த்தால் தெரிகிற மாதிரி அமர்ந்து இருக்கிற சங்கரியம்மா என்னை ஒரு திசையில் பார்க்கச் சொல்கிறார். ஒரு நெடுங் கோபுரம், பார்க்கும்போது கூட அது வளர்ந்துகொண்டு போகிற மாதிரி, தெரிந்தது.   என் கிட்டப் பார்வைக் குறைவுகளையும் மீறி, மிகத் துல்லிய உயரத்தில் தெரிகிற சிமெண்ட் நிறப் பழமை படிந்த கோபுரம். இப்போது என்னிடம் யாரோ சைகை காட்டுகிறார்கள்..

என் பின் பக்கம் நிறையத் தண்ணீர் ஓடுவதாகவும், நான் அதில் நீந்திச் செல்லலாம் எனவும் அந்தக் குரல் சொல்கிறது. நான் பெருகிப் பிரவகிக்கிற நீரோட்டத்தில் நீந்தத் துவங்குகிறேன். ஒரு  ஆதி நீர் உயிரியின் இயல்பான சுலபமும் , ஒரு கரை உயிரியின் ஆனந்தமும் விகசித்து வெளிப்படும் நீச்சல் அது. தளும்பிப் பரவின நீர்வெளியிலும் அதே ஆனந்த அலையடிப்பு.  நதி என்னையும் நான் நதியையும் புரிந்து, ஏற்றுக் கொண்ட நிலை.  ஒரு பலா இலை போல நான் மிதக்கிறேன்.

எனக்கு முழுமையான பத்மாசனம் இட வராது. எனக்கு நீச்சலும் தெரியாது.
கனவு அனைத்தையும் எனக்குக் கற்றுக் கொடுத்திருந்தது.

நனவிலிருந்து போல, கனவிலிருந்தும் கற்றுக் கொள்ள எனக்குச் சம்மதம்.

%

விரட்டி விரட்டித்
துரத்துகின்றன யானைகள்.
துலாக் கிணற்றில்
நீர் இறைத்து
வேட்டி துவைக்கிறார் தாத்தா.
நாகம் இறங்கி வருகிறது
எங்கள் வீட்டு மச்சுப் படிக்கட்டில்.
அந்த மலைஜாதிப் பெண்
யார் போலவோ இருக்கிறாள்
என்னை மார்பில் புதைக்கையில்.
காகிதப் பூக்கள் போல
உயிரற்றுக் குலுங்குகின்றன
வனம் முழுவதும்.
குகைகளின் உட்புறச் சுவர்களில்
தீப்பந்தச் சுவாலையில்
நடுங்குகின்றன சித்திர வரிசைகள்.
பகவதி கோவில் தரிசன வரிசையில்
பயமும் தவிப்புமாக.

கனவுகள் நதி போல.
நானோ ஒரு ரிஷி போல.

%

Wednesday 24 October 2012

கட்டுபடியானவை.
அழித்துவைத்த சிலேட் போல இருந்தது இன்றைய பிற்பகல்.  முற்றிலும் நடமாட்டம் அற்ற, ஒரு அமைதியான ஐந்து மணி,  மழை வரும் போல இருந்த, மழை வராத சாம்பல் வெளிச்சத்துடன் ஒரு கிழட்டுப் பூனை போல என் பக்கவாட்டில் நகர்ந்து போய்க்கொண்டிருந்தது.  தவறான ரயிலில் ஏறி உட்கார்ந்துவிட்ட பயணியாக, ஒரு அக்காக் குருவிக் கூவல் அவசரமாக தன் பொதிகளுடன் இறங்கிவிட முயற்சித்தது.  வேதக் கோவிலில் இருந்து ஒலிபரப்பான, யூகித்து முதல் வரியைச் சொல்லிவிட முடியாத ஒரு கூட்டுகீதத்தின் மேல், உடைமரத்தின் மூட்டிலிருந்து குறுவாள் எனத் தன்னை உருவி வெளியேறிய கருங்குருவி பறந்தது.

இந்த விஜயதசமி தினத்தில் நான் எதையும் கற்றுக் கொள்ளவில்லை.  நான் எதையும் கற்றுக் கொடுக்கவுமில்லை. மிகக் குறுகிய நேரம், வீசிய அம்மன் முகம் மஞ்சளாகத் தண்ணீரில் அமிழ்ந்து தாமிரபரணியில் கலப்பதை, சுலோச்சனா முதலியார் பாலத்தில் இருந்து பார்த்தது மட்டுமே இன்றைய படிப்பு.   சுழித்தோடும் புது வெள்ளத்தில் நான் சேர்த்த நேற்றைய தினத்தின் நிர்மால்யச் செம்பருத்திப் பூக்கள் மிதந்தோடி மறைந்த விதத்தின்
சுரீர் கொஞ்சமும் குறையாமல் அப்படியே இருந்தது.   மனம் இப்படிக் கூர்மையடையும் பொழுதில் ஒரு துக்கம் கவிந்து விடுகிறது.  அல்லது ஒரு துக்கமான உணர்வு  நம்மைச் சாணை பிடித்துவிடுகிறது.   அடிவயிற்றில் பாய்ச்சிக் கொள்ளச் சொல்லும், முன் தீர்மானமே அற்ற ஒரு தீர்மானமான வாளை ஏந்திய அந்தக் கூர்மையான துக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக,  புத்தகங்களைத் தேடினேன்.  ’ஏடு பிரித்து’  வைத்திருந்த புத்தகங்களில் ஒன்றாக, அந்த “கல்யாண்ஜி கவிதைகள்”  தொகுப்பு இருந்தது.

என்னுடைய தொகுப்புக்களை நான் மீண்டும் பக்க வரிசையில், அல்லது தொடர்ச்சியாக வாசிப்பதே இல்லை.  இன்றும் அப்படித்தான்.  அந்தப் பழைய  தொகுப்பின் முகப்பில் இருந்த என்னுடைய கருப்பு வெள்ளைப் படங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாகப் பார்க்கத்துவங்கினேன். வைட் ஆங்கிள் ரவிசங்கரன் எடுத்த அருமையான படங்கள். கடற்கரைச் சாலை பலகலைக் கழகக் கட்டிடத்தின் முன் தாழ்வாரத்தில், வெயில் கிட்டத்தட்ட மங்கிவிட்ட ஒரு தொண்ணூற்றி ஐந்தாம் வருட மாலையில் ‘சுபமங்களா’ நேர்காணல் ஒன்றின் இணைப்பாக எடுக்கப்பட்டவை.  அந்தச் சமயத்திற்கு சற்று முன் கடற்கரைச் சாலையில் ஞாநியைக் கூட சந்தித்துப் பேசிய நினைவு,  ஒரு கோடு போட்ட வெள்ளைச் சட்டை அது.  சட்டைப் பை பக்கம் சொட்டாக மைக் கறை இருக்கும்.  காலணிகளின் பளபளப்பில் எல்லாம் அக்கறை காட்டுகிறவன் இல்லை நான். இப்போது பார்க்கும் போது, அந்தப் படத்தில் அணிந்துள்ள காலணிகளின் பளபளப்பு நம்பமுடியாததாக இருக்கிறது. நம்ப முடியாத தன்மையிலிருந்து நம்பமுடிகிற தன்மைக்கு என்னை நகர்த்திக் கொள்ள விரும்பியே, என் கவிதைகளை நான் வாசிக்கத் துவங்கியிருக்க வேண்டும்.

அங்கங்கே வாசித்த என்னுடைய கவிதைகளின் பாசாங்கற்ற எளிமையும், ஒரு கல்யாணித்தன உயிர்ப்பும் எனக்குப் பிடித்திருந்தன.  நான் இன்னும் அவற்றை இழந்துவிடவில்லை என்றே நம்புகிறேன். 

இதோ இந்த கீழ்வரும் கவிதையை , இப்போது எழுதினேன் என்றாலும், இப்படியேதான் எழுதியிருப்பேன் என்றே நினைக்கிறேன், அல்லது அப்படி விரும்புகிறேன்.

%

தாத்தா தான் எங்களுக்கு
நிறையக் காட்டினார்.
பாபநாசத்து ஆற்று மீன்கள் முதல்
நெல்லையப்பர் கோவில் யானை வரை.

பொருட்காட்சியும்
தசராச் சப்பரமும்
ஆனித் திருவிழாத் தேரும்
ஆச்சி காட்டியவை.

பாம்பன் பாலம், பப்பநாத சாமி
கன்யாகுமரிக் கடல்
எல்லாம் காட்டியது ஆச்சி.

எதுவும் காட்டாமல்
அப்பா எங்களை
அடைத்துப் போட்டது
புத்தகங்களுக்குள்.

இவள் வந்து காட்டியது
இருக்கவே இருக்கிறது.

மூத்த பெண்ணுக்கு
மலைகளைக் காட்டினோம்.
இவன் பார்க்க இப்போது
திராட்சைத் தோட்டம்.

கட்டுபடியாவதைக்
காட்டும் வாழ்க்கை.
விட்டு விடுதலையாவது
அவரவர் வேட்கை.

%

Tuesday 23 October 2012

அ-சாயல்.இரண்டு உள்ளங்கைகளையும் இன்று திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டே இருப்பேன். இந்த முறை, என்னுடைய கைகளை என்னுடைய கைகளாக மட்டுமே பார்க்கும் படி, அதில் படிந்திருக்கிற மஞ்சள் பூச்சு, மிக அதிகப் பின்னல்களும் பெருக்கல்களும் நிரம்பிய என் ரேகைகளுக்குள், மினுங்கிக் கிடக்கிறது.

அதுவும் இதே போல ஒரு மழை நாள்தான்.   எங்கள் அம்மாத் தாத்தாவை எரியூட்டிவிட்டு வீட்டுக்குள் நுழைகிறேன்.  கொள்ளிவைத்த முகத்தோடு ஆச்சியைப்பார்க்க அவள் பக்கம் போகிறேன். அவளும் கட்டிலில் இருக்கிற நிலைதான். ஆச்சி என் கையைப் பிடித்துக் கொள்கிறாள். கொஞ்ச நேரம் ஒன்றும் சொல்லாமல், என் கையில் இல்லாத வளையல்களை எண்ணுவது மாதிரி, என் மணிக்கட்டில் இருந்து முழங்கை வரை மேலும் கீழும் தடவி விடுகிறாள். கண் கலங்குகிறாள். “நல்லபடியா தாத்தாவை அனுப்பிச்சு வச்சுட்டே அய்யா” என்கிறாள். மறுபடியும் என் கையை அவள் கைக்குள் பிடித்துக் கட்டில் விளிம்பில் அப்படியே வைத்துக் கொள்கிறாள்.

எப்போதும் ஆச்சி என்னை ‘அய்யா’ என்று மட்டுமே சொல்வாள். எனக்கு தாத்தா பெயர் இட்டிருப்பதால் கூடுதல் பிரியம் இருந்திருக்கும். காட்டிக் கொள்வதில்லை. அந்தக் கால மனிதர்களுக்குக் கூடுதல் குறைவை எல்லாம் காட்டிக் கொள்ளாத ஒரு இயல்பான பக்குவம் இருந்திருக்கிறது.
என் விரலில் கிடக்கிற மோதிரம் ஆச்சி தாலிப் பவுனில் செய்ததுதான். ‘அவனுக்கு மோதிரம் பண்ணிப் போட்டிரணும் அதில’ என்று உத்தரவு போலச் சொல்லிவிட்டு, நேரே தாத்தா இறந்த முப்பதாவது நாள் ஆச்சி
தாத்தா பின்னாலேயே புறப்பட்டுவிட்டாள்.

புறப்பட்டுப் போனாலும் ஒவ்வொரு கட்டத்திலும் அவள் வராத நாளே இராது. அதிலும் சரஸ்வதி பூஜை அன்றைக்கு வராமலே இருக்கமாட்டாள்.
அவள்தான் ‘அம்மன்’ செய்வாள். எப்போது அந்தப் பொறுப்பை என் கைக்கு மாற்றினாள் என்று நிச்சயமாகச் சொல்லமுடியவில்லை. கணபதியண்ணன் என்னை விடவும் நன்றாக வரைவான் என்றாலும், ‘அம்மன்’ செய்வதை என்னிடம் ஒப்படைத்துவிடவேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது எப்படி எனத் தெரியவில்லை.  அவள் இருக்கிற காலத்திலேயே ‘அம்மன்’ செய்ய ஆரம்பித்துவிட்டேன். ‘அப்படியே சச் ரூபமா இருக்கு’ என்று ஒரு தடவை சொல்வாள். ‘ குதிச்சுருவா போல இல்லா அம்மன் இருக்கா’ என்று இன்னொரு தடவை சொல்வாள். ‘பட்டாசலில் சத்தம் காட்டாம வந்து நிக்கித மாதிரி இருக்கு’ என்பாள்.  ’இரண்டாங் கட்டு நடையில தலைவச்சுப் படுத்தா, அவ மடியில படுத்துக்கிடுத மாதிரியில்லா இருக்கு அய்யா’ என்று இன்னொரு தரம் என்னிடமே சொல்வாள்.

நான் ஒவ்வொரு சரஸ்வதி பூஜைக்கும் ஏடு அடுக்கி அம்மன் செய்துவர ஆரம்பித்து நாற்பது வருடங்களுக்கு மேல் இருக்கும். வேலை கிடைக்காது வீட்டில் இருந்த காலத்தில் இருந்து, பணி ஓய்வு பெற்று ஏழு வருடங்கள் ஆகப் போகிற இந்த எல்லாக் காலத்திலும் நான் செய்கிற அம்மன் முகம் ஒவ்வொருத்தர் ஜாடையில் இருக்கிறதாகச் சொல்வார்கள்.     எனக்குக் கல்யாணம் ஆகுவதற்கு முன் என் பெரிய தங்கச்சி ஜெயா சாயலில் அது இருந்ததாம். கல்யாணம் ஆன பிறகு சங்கரியம்மா சாயலில் இருக்கிறதாம். இப்படி, பிறந்த குழந்தைக்கு ஜாடை சொல்வது போல,   அவரவர்க்குப் பிடித்த, அவரவர் மனதில் இருக்கிறதைச் சொல்லிக் கொள்வார்கள்,  நான் கேட்டுக் கொள்வேன். சிரித்துக் கொள்வேன்.  அப்படி ஒரு முகச் சாயல் அம்மனுக்கு இருக்கிறதென்றால், அது நிஜமாக யார் சாயல் என்பது எனக்கு அல்லவா தெரியும்.

என்னைத் தெரிந்தவர்கள், அல்லது என்னுடைய அந்தக் கவிதையைப் படித்தவர்கள், சரஸ்வதி பூஜை அன்றைக்கு,”இந்தத் தடவை அம்மன் யார்
சாயல்?’ என்று இன்னும் அவ்வப்போது கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
எனக்கென்னவோ கதை ஆயினும் ஓவியமாயினும் சிலையெனினும் அது சாயல்களைத் தாண்டி, ஒரு அ-சாயல் அடையவேண்டும் என்றும் அசாயல் மட்டுமே ஒரு ந்ல்ல கலையின் சாயல் என்றும் படுகிறது. நான் அறிந்தோ அறியாமலோ அதற்கே முயல்கிறேன்.

என்னிடம் இப்போது எந்த நீர் வண்ணமும் இல்லை. நான் இதுவரை பயன் படுத்தி வந்த தூரிகைகள் முடி உதிர்ந்து எங்கோ ஒரு பெட்டியில். பரமன் கடை முகப்புப் போஸ்டர்களுக்காக நான் உபயோகிக்கப் படித்த போஸ்டர் கலர் குப்பிகள் எல்லாம் உறைந்த நிலையில் பரணுக்குப் போய் அதிக காலம் ஆயிற்று. இன்று செய்த அம்மன், அம்மியில் அரைத்த மஞ்சளில் இல்லை. பேரங்காடியில் வாங்கிய ஆயத்தப் பொடியைப் பிசைந்து செய்தது. தூரிகையையும் நீர்வண்ணக் கட்டிகளையும் வாங்கியது தூங்கிக் கொண்டு இருந்த பக்கத்து வீட்டு ராமமூர்த்தியின் பெண் ஷிவானியிடம். . விரல்கள் மட்டும் என்னுடையது.

அம்மன் நன்றாக வந்திருக்கிறது. வெள்ளைப் பூண்டுக் கண்கள் கூட இந்தத் தடவை சரியாகவே அமைந்துவிட்டன. நம்மைப் பார்க்காமல் சற்று மேலே பார்க்கிற மாதிரி இருக்கிறது பார்வை. நம்மைப் பார்க்கவேண்டும் என்று என்ன கட்டாயம். அவசியம் என்றால் நாம் அவளைப் பார்த்துவிட்டுப் போகிறோம். சொல்லப் போனால், நாமே சற்று மேலே பார்க்கவேண்டியவர் இல்லையா?

இன்னும் யாரும்,  ‘அம்மன் இந்தத் தடவை யார் ஜாடை?” என்று யாரும் கேட்கவில்லை. கேட்டால், ‘உங்க ஜாடைதான்’ என்று  சொல்லிவிடலாம் என நினைக்கிறேன். அவரவர்க்கு அவரவர் சாயல்.

அ-சாயல் என்றாலும் அப்படித்தானே அர்த்தம்.

%

இந்த வருடமும்
சரஸ்வதி பூஜைக்கு
அம்மன் முகம் செய்தேன்.
முன்பு
தங்கச்சி சாயலில் முகம் இருக்கும்.
இடையில்
இவள் சாயலில் இருக்கிறது
என்பார்கள்.
இந்த முறை
உறவின் அடையாளங்களிலிருந்து
கழன்ற ஒரு முகத்துடன்
சரஸ்வதி உருவம் சிரித்தது.
அ-சாயலை அடைவதற்கு
ஆகிவிட்டது
இத்தனை காலம்.

%


Sunday 21 October 2012

புழுதியின் மேல்.நம்மில் பெரும்பாலோர் பேருந்துகளில் பயணம் செய்கிறவர்கள் தானே.
புழுதியற்ற ஊரும் புழுதிகள் படியாத பேருந்து முதுகுக் கண்ணாடியும் இருக்கிறதா என்ன? ஐ வகை நிலத்துக்கும் ஐ வகைப் புழுதியிருக்கும் இல்லையா?  இந்த வண்டி எந்த ஊரிலிருந்து வருகிறது என்பதை அந்தப் புழுதியைப் பார்த்தே சொல்லி விடக் கூடிய வயசாளிகள் எல்லாம் முன்பு நம் கிராமப் புறங்களில் இருக்கத்தானே செய்திருப்பார்கள். ‘ சாப்பிட்டு நாலு நாளு இருக்கும் போலயே’ என்று முகத்தைப் பார்த்தவுடன் சொல்லத் தெரிகிறவர்களுக்கு புழுதியின் திசையைச் சொல்வது மிகவும் எளிதான ஒன்றாகத்தான் இருந்திருக்கும்.

நாம் தான் புழுதியையும் பார்ப்பதில்லை.  லேசில்   முகங்களையும் அப்படியெல்லாம் பார்த்துவிடுவது இல்லையே. சுவரொட்டியைப் பார்க்கக் கூட நேரமில்லாதவர்கள், குவியல் குவியலாக உதிர்ந்து கிடக்கும் பன்னீர்ப் பூக்களைப் பார்க்க மனம் இல்லாதவர்கள், பேருந்து முதுகுப் புழுதியை மட்டுமா பார்த்துவிடப் போகிறார்கள் பார்க்காதவர்க்கு இடையே ஒன்றிரண்டு பார்க்கிறவர்களும் இருப்பார்கள் இல்லையா.  அந்தச் சிறுபான்மையினரின் பார்வையையும் ரசனையையும்  ஒரு குறிப்பிட்ட பெரும்பான்மையினரிடம் கொண்டுசேர்க்கத் தானே,  ஒவ்வொரு கலையின் சிறு அசைவும், தன்னைப் போல முயல்கிறது.

இந்த புழுதி படிந்த பேருந்தை நான் பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு முன்பு மதுரை பிச்சைப் பிள்ளை சாவடியில் நாங்கள் இருந்த காலத்தில் பார்த்தேன். அதனுடைய முதுகுப் புழுதியில் யாரோ கட்டப் போகிற ஒரு வீட்டின் வரை படம் இருந்தது. எந்தச் சுட்டுவிரலோ நடு விரலோ தன் உத்தேச வீட்டை யாருக்கோ வரைந்து காட்டியிருந்தது. முக்கியமாக முகம் தெரியாத எனக்கு.

சுகுமாரன் குங்குமத்தில் பணியாற்றிய நேரம் என நினைக்கிறேன். கவிதை அனுப்பச் சொல்லிக் கேட்டிருந்தார்.  நான் இந்தக் கவிதையைத்தான் எழுதி  அவருக்கு அனுப்பிவைத்தேன்.

%

நீண்ட தூர பஸ்களின்
பின் முதுகுகள் எனக்கு முக்கியம்.
வெப்ப தினங்களில்,
சக்கரங்கள் கீழிருந்து கிளம்பிய
புழுதியின் பெரும்பான்மை
அங்குதான் படிகிறது.
பிரயாணிகளுக்கு தூக்குக் கம்பியில்
பானம் விற்கிற பையன்கள்,
அல்லது அடுத்த பஸ்ஸில் வந்து
இந்த பஸ்ஸின் முகங்களைப்
பார்க்கிற இளைஞர்கள்
சுட்டுவிரலால் இட்ட கையெழுத்துகள்
எழுதும் பெயர்கள்
பின் முதுகில்தான் சாத்தியம்.
இவற்றை விட,  பார்த்தேன்
யாரோ கட்டுகிற வீட்டுக்கு
வரைபடம் போல் ஒன்றையும்.
கட்டி முடிந்துவிட்டதா அவருடைய வீடு?
தெரியவில்லை.
தூசியில் குளித்த
இன்னொரு நீண்ட தூர பஸ்
திருப்பத்தில் இருந்து பதிலுடன்
வெளிப்படக் காத்திருக்கிறேன்,
புழுதியின் மேல்
முழு நம்பிக்கை வைத்து.

%

உதிர்தல்/உடைதல்/கசிதல்.


வரும்போது பார்க்கலாம் என
வந்தால்
போகும்போது உதிர்ந்துகிடந்த
பன்னீர்ப்
பூவையெல்லாம்
பெருக்கித் தள்ளியிருந்தார்கள்.
கால்வைக்க முடியாத
மழைச் சகதி
காலையில் இருந்தது போல்
மாலையில் இருக்காது என்று
திரும்பினால்
அப்படியே இருந்தது
அடுத்த நாள் வரையிலும்.
ஏறுக்கு மாறாகவே
இருக்கிற தெருவில்தான்
நடக்கவேண்டியது இருக்கிறது
நானும் என் கைகளால்.

%

நீ வருவதற்காகக்
காத்திருந்த நேரத்தில்தான்
பளிங்கு போல்
அசையாதிருந்த தெப்பக்குளம்
பார்க்க ஆரம்பித்தேன்.
தலைகீழாய் வரைந்துகொண்ட
பிம்பங்களுடன்
தண்ணீர் என் பார்வையை
வாங்கிக் கொண்டது முற்றிலும்.
உன்னை எதிர்பார்ப்பதையே
மறந்துவிட்ட ஒரு கணத்தில்
உன்னுடைய கைக் கல் பட்டு
உடைந்தது
கண்ணாடிக் குளம்.
நீ வந்திருக்க வேண்டாம்
இப்போது.

%

சிறுவனாகப்
பென்சில் சீவும்போது
கசிந்த ரத்தம்
உண்மையாக இருந்தது.
இப்போது ஜாக்கிரதை உணர்வு
வந்துவிட்டது வயதுடன்.
எஞ்சியது என்ன?
காயம் படாத கை விரல்.
நிஜம் கசியாத கவிதை.

%

கல்யாண்ஜி கவிதைகள்
தொகுப்பில் இருந்து.

Thursday 18 October 2012

மழைக்காலம் துவங்கிவிட்டது


இது தென்மேற்கா, வடகிழக்கா என்பது எல்லாம் சீனு ராமசாமிக்குத் தெரிந்திருக்கும், ரமணனுக்குத் தெரிந்திருக்கும். எனக்குத் தெரிந்தது இது மழைக்காலம் என்பது மட்டுமே. அவ்வளவு தெரிந்தால் போதும் என்றுதான் தோன்றுகிறது.

ஒரு வாரமிருக்கும் இங்கு மழைக்காலம் துவங்கி.
முந்திய இரவு மழைபெய்திருக்க, மறு நாட் காலை. வெளிச்சம் ஈரமாக இருக்கிறது. அல்லது ஈரமே வெளிச்சமாக இருக்கிறது. இயற்கையான ஈரம் ஒரு அழைப்பைத் தன்னிடம் வைத்திருக்கிறது. எதற்கோ அது அழைக்க, நாம் வேறு  எதற்கோ ஆட்படுகிறோம்.

தெருவில் இறங்கினால் பார்க்கிற இடமெல்லாம் காக்கைகளாக இருக்கிறது. அதிகாலைக் காக்கைகள் என்று இப்போது ஒரு கவிதை எழுதத் தோன்றுகிற அளவுக்கு, அன்றைக்கு அவ்வளவு எண்ணிக்கையில் அதிகமான காக்கைகள். சமீபத்தில் அவ்வளவு கூட்டமாகப் பார்த்ததில்லை. எந்தப் பறவைகள் கூடியிருப்பினும், ஒரு பறவையாக அதனிடமிருக்கும் பறவையழகை, மொத்தமாக இருக்கும் போது இன்னும் மேலதிகமாகக் கூடுதலாக்கிவிடுகிறது.

ஒரு கணம் அழகாகத் தெரிந்த காட்சி,  அவை எல்லாம் அவசரம் அவசரமாக ஈசல்களை வேட்டையாடுகின்றன என்றுணர்ந்த மறு நொடியில் அழகிழந்து விடுகின்றது. வேட்டையில் என்ன அழகுண்டு. ஒரு வலிய உயிர், இன்னொரு எளிய உயிரின் மீது  நடத்துகிற உயிர்வாழ் தாக்குதல் அது.   தன் அலகில் கவ்வின ஈசலின் - ஒரு பறவையின் அலகுடைய கொள் அளவுக்கு வெளியே துடிக்கிற அந்தப் பழுப்பு இறகுகளை என்னைத் தவிர யாரும் பார்க்க வேண்டாம் -  எண்ணிக்கை போதாமல், இந்தக் காலையின் எல்லா ஈசல்களையும் வேட்டை ஆடிவிடுகிற பெரும் தவிப்புடன், அதன் கருஞ் சாம்பல் சிறகுகள் முழுவதிலும் பூசப்பட்டுவிட்ட வேட்டையின் நிம்மதியின்மையுடைய, அந்த நகர்வு காக்கையுடையது அல்ல, ஒரு வனத்தின் விதியினுடையது.  ஒரு தரையில் எழுதப்பட்ட கருப்புவெள்ளைச் சதுரங்கத்தில் தன்னுடைய இடங்களை நகர்ந்தும் நகர்த்தியும்  மாற்றிக்கொண்டிருக்கும்   அந்த மாபெரும் சூதாட்டத்திலிருந்து விலகி நடக்கிறேன்.

தரையில் இருந்து இரண்டு மூன்று சாண் உயரத்தில், நடை  போகிற வழியெங்கும் ஈசல் பறத்தல்.   இப்போது நான் எழுதவேண்டிய கவிதையின் தலைப்பு ‘ஒரு நாள் சிறகுகள்’.

%

இவர்களுக்கு எல்லாம் ஒன்றுதான். ஒரு சாலை விபத்தையும் இவர்கள் இப்படித்தான் பார்த்தும் பாராமல் போவார்கள். எந்த இடத்தில் நிற்க வேண்டுமோ, அந்த இடத்தை அவசரமாகக் கடப்பார்கள்.

அந்தப் பெரு மரம் இந்த மழையில் வீழ்ந்து கிடந்தபோதும் அப்படித்தான் போனார்கள். சொல்லப் போனால் ஒரு மரம் வீழ்வதுதான் மெய்யாகவே ஒரு சாலை விபத்து. இந்தப் புற நகர்க் குடியிருப்பு தோன்றி ஒரு ஐம்பது வருடங்களாவது இருக்கக் கூடும். இந்த மரத்திற்கும் அதே வயதிருக்கும்.
இந்த ஏழு வருடங்கள் நான் பார்க்க, பெரும் குடை விரித்து, நிழல் பரப்பி, பூத்துச் சொரிந்த குல்மோஹர் மரம். தன் கரும்பச்சை இலை அடர்த்தியுடன். தீக் கங்கு போன்ற கோடைமலர்களுடன் அந்தத் திருப்பத்தை வசீகரமாக ஆக்கிக்கொண்டு நிற்கும்.  தன் வசீகரம் தெரியாமல், வசீகரமாக இருப்பது தானே தாவரங்கள்.  அது அடியோடு விழுந்து கிடந்தது.   நான் மிகுந்த கவனத்தோடு ‘வேரோடு’ என்று எழுதாமல், ‘அடியோடு’ என்று குறிப்பிடக் காரணம் உண்டு. அத்தனை பெரிய மரத்திற்கு ஒரு பனங்கிழங்குக்கு இருக்கும் அளவுக்கே வேர் இருந்தது. ஆணி வேரோ சல்லி வேர்களோ அற்று, ரயில் பயணங்களில் படுக்கை இருக்கைகளுக்கு வெளியே நீட்டிக் கொண்டு தெரிகிற சில பாதங்கள் போல, அது அதன் எளிய வேருடன் புரண்டு கிடந்தது. ஒரு இத்தனை பெரிய வேம்பு சாய்ந்திருந்தால், பக்கச் சுவருக்கு அது பெரும் விரிசலை உண்டாக்கியொருக்கும். பத்தடி சுற்று அளவுக்கு நிலத்தைப் புரட்டி, மண்ணுக்குள் சேமித்துக் கொண்டிருந்த தன் ஐம்பது வருடங்களின் ஒளிச்சேர்க்கையை வெளியே கொட்டியிருக்கும். குல்மோஹர், பெரும் அமைதியுடன்  மரணத்தைத் தழுவியது போல எந்த வாதையும் எழுதப்படாத, மழை ஈரம் இன்னும் மிச்சமிருக்கிற அடர்ந்த இலைகளுடன் கிடந்தது.

இவர்கள் போய்க் கொண்டிருந்தார்கள்.  நானும் போனேன் தான். சற்று நின்று போனேன். அப்படி நிற்கையில், அந்த இடத்தைத் தேர்ந்து, அந்த குல்மோஹர் நாற்றைத் தேர்ந்து அங்கே நட்ட, நானறியாத ஒரு ஆதிக் கிழவனை நினைத்துக் கொண்டேன். அவனுடைய சாயல்கள் என்னைப் போல இருக்கும் என்றும் தோன்றியது. நான் உருவகித்திருக்கிற அந்தக் கிழவனின் தலைப்பாகையில், நரைத்த கத்தரித்து ஒழுங்குசெய்யப்படாத மீசையில் நான் இன்னும் உயிர்ப்போடு இருந்திருப்பேன்.

%

மிகப் பெரிய பங்களாவெல்லாம் இல்லை இந்த வீடு. ஒரு நடுத்தர மாதச் சம்பளக்காரன் வங்கிக் கடனின் மாதாந்திரத் தவணைச் சுமைகளையும் சிமெண்டுடன் சேர்த்துக் குழைத்துக் கட்டியதுதான். எங்கள் மகனுடையது. அதிக பட்ச இடத்தைக் கட்டுமானத்திற்கு ஒப்புக்கொடுத்து, ஒரு எட்டுக்கு எட்டடி மண்ணை ஒருபக்கமும், அம்மாச்சி மூக்கமுதலியாரிடம் வாங்கிக் கட்டிக் கொள்கிற நூல் சேலைக் கரை போல ஒடுக்கமாக, வெளிப்பக்கச் சுற்றுச் சுவர்ப் பக்கம் ஒரு  இருபதடி மண் நாடாவும் மட்டுமே   இந்தச் செடிகளுக்கு.   மஞ்சள் கொன்றை, நந்தியாவட்டை, வெள்ளை லில்லி  எல்லாம் அந்த முன்பக்கச் சுவரை ஒட்டிதான்.

இன்று அந்த மஞ்சள் கொன்றையை ஒரு தேன்சிட்டு கொண்டாடிக் கொண்டு இருந்தது.  ஒரு பறவை அமரும் போது, ஒரு செடியின் கிளை அந்தப் பறவையின் பாரத்திற்குப் பொருத்தமாக அமிழ்வதன் அழகு அந்தக் கொண்டாட்டத்தின் அழகைச் சொல்கிறது. ஆர்க்கிமிடிஸின் இடப்பெயர்ச்சி விதி போல, நம்மில் யாரேனும் ஒரு பறவை அமர்வுக்கான பௌதிக விதியை எழுதலாம். ஆனால், விதிகளுக்கு மெனக்கெடுகிற நேரத்தில் தேன் சிட்டு பறந்து போயிருக்கும்.

எனக்கென்னவோ பறவைகளைப் பறக்கவிட்டுவிடக் கூடாது, மஞ்சள் கொன்றைப் பூவில் இருந்து,  விதிகளை வேண்டுமானால் பறக்கவிட்டு விடலாம் என்றுதான் தோன்றுகிறது.

Monday 15 October 2012

புழுவாய்ப் பிறக்கினும்...


முந்திய சாயுங்காலத்தில் பெய்த மழை, அதன் காரியங்களை ஒரு இரவுக்குள் முற்றிலும் செய்துமுடித்துவிடும் போல.
பகலாக இருந்தாலும் இரவாக இருந்தாலும் அது அலுவலகம் எனினும் வீடு எனினும் மழை பார்த்தல் என்பது எனக்கு விருப்பமான ஒன்றாகவே இருக்கிறது.  அதை விரும்புவதற்கு முன்பே அதைச் செய்ய ஆரம்பித்து விடுகிறேன். சுடலைமாடன் கோவில்தெரு வீட்டின் தெரு நடையில் இருந்து எத்தனை மழை பார்த்திருப்பேன்?   எத்தனை என்று சொல்ல வேண்டுமா, எவ்வளவு மழை எனச் சொல்ல வேண்டுமா? இலக்கணங்களை மறக்க அடிக்கிற, மறப்பதில் விருப்பமில்லையெனில், இலக்கணங்களை மீறுகிற ஒன்றாகவே மழை இருக்கிறது.


வ.உ.சி. கல்லூரி வகுப்பறையில் இருந்து பார்த்த மழை நிறைய. தூத்துக்குடி கடல் சார்ந்த ஊர் என்பதால் அதன் மழையும் கடல் சார்ந்த தாழ்வழுத்தங்கள் உண்டாக்கும் பெருமழையாக இருக்கும்.   விடுதியில் இருந்து வகுப்பறைகளுக்கு. வகுப்பறையில் இருந்து இன்னோர் வகுப்புக்கு என நகரும் சமயங்களில் எல்லாம் நான் வணிகவியலை விட அதிகம் கற்றுக் கொண்டது மழையியல்தான்.  நான் கட்டிடங்கள் துவங்கும் விளிம்பில் இருந்து கல்லூரியின் முகப்பு வாசல் வரை விரிந்து கிடக்கும் செம்மண் பூமியில் விழுந்து விழுந்து தெறிக்கும் மழைக் கொப்புளங்களை, அதற்கு இன்னும் எனக்கு ஒரு உவமை சொல்லத் தெரியவில்லை, மட்டும் பார்த்துக் கொண்டே இருப்பேன். தரையில் மோதி, விசிறி, உடைந்து, ஏற்கனவே பெருகும் மழை நீருடன் தன்னை இணைத்துக் கொள்ளும் அந்தக் காட்சி இன்னும் என்னை உருவாய் அருவாய், உளதாய் இலதாய் ஆக்கிக் கொண்டிருக்கும் ஒன்று.

நான் சின்ன வயதில் இருந்தே மண்புழுக்களின் சினேகிதன். எங்கள் பூட்டன் வீடு கட்ட வாங்கிப் போட்டிருந்த மரத்தடியின் தூர் ஒன்று தோட்டத்தில் கிடக்கும். அதைப் புரட்ட எல்லாம் அந்த வயதில் வலுவிருக்காது. லேசாக அசைப்பேன். அந்த அசைவே போதுமானது.  உள்ளிருந்து மண்புழுக்கள் ஊர்ந்து வர ஆரம்பிக்கும். நான் அவற்றைச் சேகரிக்கத் துவங்குவேன். ஒரு தேங்காய்ச் சிரட்டையில் விடப்படும் மண்புழுக்கள்,  அந்தச் சிரட்டையின் உட்சுவர்களுக்குள் மடிந்து நகரும் உயிர்ப்பு,  இது தன் மண்ணில்லை, வேற்றிடம் என முற்றிலும் உணர்ந்த உணர்வுடன், சற்றே அதிகமான  பரபரப்புடன் தன்னை அதிலிருந்து விலக்கிக்கொள்ள எடுத்துக் கொள்ளும் எச்சரிக்கையான நகரல் எல்லாம் இப்போதும் இந்த மடிக்கணினிச் செவ்வகத் திரை வரை அப்படியே இருக்கிறது. 

நினைவின் ஓயாத தூரிகை தன் வரைதலை நிறுத்துவதே கிடையாது. நான் அந்த மண் புழுக்களை என் புறங்கைகளில் விட்டுக் கொள்ள, அவை அதனதன் திசைகளைத் தீர்மானித்து நகரும்.   விரல் இடுக்குகளில்  நுழைந்து உள்ளங்கைக்குள் ஒன்று வளை தோண்டும். கழுத்தில் பெருவளையங்கள் இட்டிருக்கிற பழங்குடிகள் போல, அது தன் வளையங்கள் நகர்த்தி, சில பொழுதுகளில் பிறுபிறுவென மணலையே எச்சமாகக் கழித்துச் சென்று கொண்டே இருக்கும். எப்படியும் அதன் ஆதி ஈரமண்ணை நிச்சயம் அது அடைந்துவிடும் என்ற தீராத நம்பிக்கை அதன் நகர்வில் இருக்கும்.  நான் அந்த மண் புழுக்களைத் தேடுகிறேன்.

இந்த வீட்டிற்குக் குடிவந்து ஆறேழு வருஷங்கள் இருக்கும். அப்போது தார் ரோடு போடப்பட்டிருக்கவில்லை. எதிரே கூட ஏகப்பட்ட செடிகள் காடாக வளர்ந்துகிடக்கும். இரண்டு மூன்று உடைமரங்கள். நிறைய வேலிக்கருவை. சப்பாத்திக் கள்ளி. எருக்கலம் மூடுகள். உடைமரத்தின் மேல் படர்ந்த கோவைப் பழம் கொத்த கிளிக் கூட்டம் தாழப் பறந்து போகிற அற்புதமான
காட்சி இப்போது தொலைந்துபோய் விட்டது. கல்வெட்டாங் குழியில் மீன் பிடிக்க வருகிற மிலிட்டரி லைன் பையன்கள் சப்பாத்திக் கள்ளிப் பழம் பறித்துச் சாப்பிட்டு சிவப்பாகச் சிரிப்பார்கள்.  மணிக்கணக்குத் தவறாமல் இரண்டு பாகம் நீளத்திற்கு காலை எட்டு எட்டே காலுக்கு அந்தப் பாம்பு எந்த இருசக்கரங்களுக்கு உள்ளேயும் நசுங்காமல் அது பாட்டுக்குப் போகும்.

எங்கள் வீட்டுக் கருவேப்பிலைச் செடி மூட்டுக்குள் இருந்து கீரிப் பிள்ளை ஓடி, எதிர்ப்பக்கம் அது தேர்ந்தெடுத்திருக்கும் அதன் வாழிடத்துக்குள்  நிலா வெளிச்சம் பூசிச் செருகிக் கொள்ளும்.  பார்த்திருக்கிறேன்.   கறை நல்லது எனச் செம்மண்ணில் அணில் புரண்டுவந்தது போன்ற , இதுவரை பார்க்காத ஒரு புது நிறத்து முயலைத் துரத்திக் கொண்டு எங்கள் பக்கத்துத் தெரு நாய்கள் அனைத்தும், அதனதன் கருப்பு, வெள்ளை, பழுப்பு நிறங்களைக் காலடிகளில் உதறிவிட்டுப் பாய்ந்தது இப்போது நடந்தது போல, தோற்றதன் குரைப்போடும் வன்மம் நிறைந்த உறுமலோடும் தெரிகிறது.  காதுகளும் கழுத்தும் நிமிர்த்தி, தோல்வியின் மாயக்கோட்டைத் தாண்ட விரும்பாதது போல்,தூரத்தில்  இன்னும் பின் கால் வீசி ஓடிக்கொண்டிருக்கும் முயலின் திசை நோக்கி நின்று, அந்த வெவ்வேறு நாய்கள் மொத்தமாகத் திரண்டு  ஒரே நாயாக உருமாறிய நேரம்,  எனக்குக் கானகத்தின் குரல் கேட்டது என்றே  சொல்ல வேண்டும்.

அப்படி அவை நின்ற இடத்தில் இருந்துதான் தெரு கிழக்கில் இருந்து மேற்குப் பக்கமாகத் தாழ்ந்து இறங்குகிறது.  இயற்கை தன் திசைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. மழையின் சூட்சுமம் அபாரமானது. அது ஒரு நொடி கூடத் தன்னைத் தரையில் தேங்க விடுவதில்லை. மண்ணில் துளி அம்பு தைத்து, குமிழியிட்டுப் பூச் சிதறினவுடன் அது நகரத் துவங்கி விடுகிறது. நீர் ஒரு சர்ப்பத்தின் நெளிந்து சீறும் பாய்ச்சல் உடையது. புடை தேடும் ஒரு திசைதவறிய பாம்பின் மூர்க்கத்துடன் மழைத் தண்ணீர் தரை முகர்ந்து தலை திருப்பி விரைவதைப் பார்க்கையில் நமக்குப் பிடாரன் ஆகிவிடவே தோன்றும். கருங் கம்பளியும் மகுடியும் வட்டப் பிரம்புக் கூடையும் சிரியா நங்கை வேரும் நம்மிடம் வந்து சேர்ந்திருக்கும். கொத்த வருவது போல, உங்கள் பாதத்தின் கீழ் வரை மழைத் தண்ணீரின் நாக்கு நக்கிவிட்டு அப்பால் போகும்.

சருகெலாம் அகன்று, செம்மண்ணின் சீனிக் கல் எல்லாம் உருண்டு, வண்டலும் கருப்புமண்ணுமாக நிலம் தெளியும் நேரம் சரியாக மண் புழுக்களுக்குத்  தெரியும் போல. அதனதன் துளையில் இருந்து அவை வெளிவரத் துவங்கும் அன்றும் அப்படித்தான் துவங்கியது.  எங்கள் தெரு மண்புழு முளைத்துக் கிடந்தது. அல்லது பூத்துக் கிடந்தது. ஒரு மார்கழிச்  செம்பருத்திப் பூவின் சூல் முடி போல அவை வளைந்து வருகையில், அடுத்த பாட்டம் மழைத் தண்ணீர் அணை உடைந்தது போல் கீழிறங்கி  ஓடிவந்து கொண்டிருந்தது. 

ஒரு மண் புழுவைக்கூடத் தண்ணீர் அடித்துச் செல்லமுடியவில்லை.  எல்லாப் புழுக்களும் தண்ணீரை எதிர்த்து நகரத் துவங்கின.  எந்தெந்தத் துளைகளில் இருந்து வெளிவந்தனவோ அவற்றுள் சற்றுப் பின்வாங்கி, தங்களை ஆழமாக அதனுள் நட்டுக் கொண்டன. தண்ணீருக்கு எதிரான பாடம் ஒன்றை அவை ஏற்கனவே கற்றிருந்தன. ஒரு பாரம்பரிய மீனவன் அலைகளின் சாதுரியங்களுக்குக் கட்டுப்படாது சிரிப்பது போல, தன் மேல் நகர்ந்துசெல்லும் தண்ணீரைப் போக அனுமதித்து அவை நின்ற கோலம், ஆம், கோலம்தான் அது, என்னைப் போன்ற பார்வையாளனுக்கு பெரும் சிலிர்ப்பு உண்டாக்குவது.  எப்போதுமே மண்புழுக்களின் நடத்தை இப்படித் தான் இருக்குமா என்பதை நுண்ணுயிரியல் அறிந்தவர்கள் சொல்லக் கூடும்.

எனக்கு அந்த அறிவு எல்லாம் வேண்டாம்.  பள்ளத்துள் வேகமாக இறங்கி ஓடும் மழைத்தண்ணீருக்கு அசைந்து கொடுக்காமல், தன் வளைகளுக்கு வெளியே சிவப்பு முளைகள் போல் எட்டிப்பார்த்துக் கொண்டு இருந்த அந்த மண் புழுக்கள் வேண்டும். இதைத் தட்டச்சு செய்து கொண்டிருக்கும் இப் பொழுதில் எழுத்தெழுத்தாக நகர்ந்துகொண்டிருக்கும், மேலுக்கு மேல்  அடுக்கடுக்கடுக்காகப் படிந்துவரும் அத்தனை வரிகளும் நெளிந்து  என் விரல்களின் வழி ஏறி என் இரு புறங்கைகளிலும், எங்கள் அம்மாச்சியின் கனிந்து  தோல் நகன்ற  புறங்கைகளில் ஓடும் பச்சை நரம்புகள் போல, ஊர்ந்துகிடக்கும் எனில் எப்படி இருக்கும்.

அவை ஒன்றின் மேல் ஒன்றாகக் கொடிகளாகப் பின்னி. வழுவழுப்பான பிரியத்துடன். என் முன்கை ரோமங்களின் ஊடாக, நிலத்தின் நீர்மையுடன், ஆழ் மண்ணின் ஆதி வெதுவெதுப்புடன், திசையற்று அல்லது எல்லாத் திசைகளிலும் நகர்வது எத்தனை அருமையானது.  அவ்வப்போது, அவற்றில் ஒன்றிரண்டு சற்றே தலை தூக்கி, ஒளிமையம் நாடும்.    நான் என்னைப் பார்ப்பதற்கான முயற்சியாக அதை எடுத்துக் கொள்வேன். அதன் தூக்கிய
முகத்தை நோக்கிக் குனிவேன்.   எப்போதோ எந்தக் காலத்திலோ நான் எழுதிய அந்த இரண்டு வரிகளை அதனிடம் சொல்வேன்.

’’அடிக்கடி பார்க்க முடிகிறது யானையைக் கூட
  மாதக் கணக்காயிற்று மண் புழுவைப் பார்த்து”.

%Saturday 13 October 2012

உள்ளே பார்க்கத் தெரிந்தவர்.


அப்படியொன்றும் வேறு யாரும் என்னை, ‘சமவெளி’யில் தேடியிருக்க மாட்டார்கள். தெரியும். தங்கராஜ் மூன்று நாட்களுக்கு முன் தொலைபேசும் போது கேட்டான், ‘என்ன அத்தான், சமவெளியில் உங்க சத்தத்தையே காணோம்’ என்று.  சாம்ராஜிடம் நான் சமீபத்திய தினங்களில் எதுவுமே பதிவேற்றாத மன நிலை பற்றிச் சொன்ன சமயம், அவருக்கே உரிய குரலின் தூண்டுதலுடன்,’ அப்படியெல்லாம் சமவெளியில நடமாடாமல் நம்மால இருந்துர முடியுமா ஸார்?’ என்றார்.

நேற்று முகநூலில்/நூல்முகத்தில் கோபால் மனோகர், ‘சமவெளியில் கால் பதித்து நாட்கள் ஆகின்றனவே...’ என்று வருத்தப்பட்டிருக்கிறார்.  தொடர்ந்து, இந்த நேரத்தில் இருந்து இதுவரை என அனுமானிக்க முடியாத மின் தடை. அதே அளவுக்கு அனுமானிக்க முடியாமல் எப்போதும் இருக்கிற மனத் தடை.

மனம் எப்போது தடை சொல்லாமல் இருந்தது. அல்லது விடை சொன்னது?
அதையெல்லாம் கணக்கில் எடுத்து,  உண்மையாகப் பார்த்தால், கணக்கில் எடுக்காமல் தானே இத்தனை காலமும் எழுதிவருகிறேன்.

சரி. இன்றில் இருந்தும் ஏதாவது.

%

சுலபமாகத் துவங்க ஒரு கவிதையுடன்.  ’ உயிர் எழுத்து’  இதழில் இந்த மாதம் வெளியாகியிருக்கிற என்னுடைய மூன்றாவது கவிதை. அதற்கு முந்திய இரு கவிதைகளையும் அவர் ஏற்கனவே சென்ற இதழிலும் வெளியிட்டு, இந்த இதழிலும் மீண்டும் வெளியிட்டிருக்கிறார். அவ்வளவு உடனடியான மீள்வாசிப்பை அவை கோருகின்றன என சுதீர்செந்தில் தீர்மானித்து இருக்கலாம். அல்லது இரண்டு இலைகளுக்கு இடையில் ஒரு பூ பூத்தால் நன்றாகத்தானே இருக்கும் என நினைத்து இருக்கலாம். இந்த ‘இருக்கலாம்’கள் மட்டும்   அவ்வப்போது உதவிக்கு வராவிடில், அப்புறம் நமக்குத்தான் எத்தனை சிரமம்.

அப்பாவுக்கு அந்த மூன்றாவது கவிதை ரொம்பப் பிடித்துவிட்டது. இரவுச் சாப்பாட்டு நேரம். ஒரு சிறிய ‘வாழைப் பூ’ விள்க்கை ஏற்றிவைத்து இருக்கிறோம்.  எண்ணெய்யும் திரியுமாக இந்த சிறு விளக்குகள் எரிகிற
அழகு தனி. அப்பா திடீரென்று ‘ நீ பாரதி நிறைய படிப்பியோ?’ என்று ஆரம்பித்தார். எதை நோக்கி அவர்  நகரப் போகிறார் என எனக்குப் பிடிபடவில்லை. நான் அசையாது, ‘முத்துப் போல்’ சுடர்கிற திரி நுனியில், நுனியடிக் கங்கில் இருந்தேன். அப்பா பாரதியின் மண்ணுலகத்து நல்லோசைகள் பற்றிய கவிதையைச் சொல்ல ஆரம்பித்தார். ‘மண்ணுலகத்து நல்லோசைகள்’ என்பதைத் திருப்பிச் சொல்லும்படி மட்டுமே என் குறைந்த வாசிப்பு. அப்பா அதிலிருந்து, சட்டென்று உயிர் எழுத்து கவிதைக்குத் தாவினார். அந்த மூன்றாவது கவிதை அருமையா இருக்கு. ஹைலி பிலாஸிபிக்கல். உள்ளே பார்க்கத் தெரியாம, வெளியே பார்த்து என்ன பண்ணப் போறான்?’ என்கிறார். கிட்டத்தட்ட என்னுடைய அந்த கடைசிப் பக்க மூன்றாம் கவிதையின் வரிகளைச்  சொல்கிறார்.

எனக்கு இப்போது அந்தச் சுடரை, அந்த வெளிச்சத்தை மேலும் பிடிக்கிறது. ஒரு சாப்பாட்டுத் தட்டின் முன், சிறிது வெளிச்சத்தில் தன் எண்பத்தேழு வயது வாழ்வின் முழு அழுத்தமான தடங்களுடன் இன்னொரு நெடுஞ் சுடர் போல அவர் முகம் இருந்தது.  இந்த ராப் போஜனத்தை, இந்த இருட்டை நான் எப்படி மறக்க முடியும்?

இதைவிட, இன்னொரு சிலிர்ப்பு. ஒரு அரை மணி இடைவெளி. அப்போதும் மின்சாரம் வந்துவிடவில்லை. அப்படியெல்லாம் அது சொன்னது சொன்ன நேரத்தில் வந்துவிடுமா என்ன?  அப்பா தூங்கிவிட்டாரா என எட்டிப் பார்க்கிறேன். அப்பா எதையோ வாசித்துக் கொண்டு இருக்கிறார். வலது கையில் டார்ச் லைட்டைப் பொருத்திப் பிடித்துக் கொண்டு, அதன் மங்கலான மஞ்சள் வெளிச்சத்தில், பார்வைக்குறைவின் பாரத்தை முற்றிலும் வாசிப்பின் மேல் கவிழ்த்தியபடி முகமும் பத்திரிக்கைப் பக்கமும் நெருங்க இருக்கிறார். எனக்குக் கோபம்தான். அப்படி என்ன படிக்க வேண்டியது இருக்கிறது, டார்ச் லைட் வெளிச்சத்தில்?’ என்று.
‘பொறவு படிச்சா என்ன?’ - குரல் கொடுத்தபடி  பக்கத்தில் போகிறேன்.

அப்பா, உயிர் எழுத்து இதழின் கடைசிப் பக்கத்தை மீண்டும் படித்துக் கொண்டிருந்தார் என் முகத்தைப் பார்க்கவே இல்லை. நான் தான் வந்து பக்கத்தில் நிற்கிறேன் என்று தெரியும். என்னிடம் அவர் எதுவுமே சொல்லவில்லை.

‘நல்லா வந்திருக்கு’ என்று அந்தக் கவிதையிடமே சொல்லிக்கொண்டு இருந்தார்.

அந்த மூன்றாவது கவிதையிடம்.

*

ஒரு முழு முற்பகல் பயணத்திலும்
ஜன்னலுக்கு வெளியே மட்டுமே
பார்த்துக்கொண்டுவந்த முகம்
அவருடையது.
ரயிலின் உட்பக்கம் பார்க்கக் கூடாது
எக்காரணத்தாலும் என்று
நிபந்தனை அச்சிடப்பட்ட பயணச்சீட்டு
அவருக்கு வழங்கப் பட்டிருந்தது.
கொய்யாப் பழ வாசம், குழந்தை அழுகை,
தொடர் இருமல், கடலைமிட்டாய் வியாபாரம்
எதற்கும் திருப்பிக் கொள்ளவில்லை
தன்னுடைய உட்பக்க கவனத்தை.
அசையாத பார்வை வெளியில்.
உள்ளே பார்க்கத் தெரியாதவர்க்கெல்லாம்
வெளியே என்ன தெரிந்துவிடப் போகிறது?

%

Wednesday 3 October 2012

இரண்டு கண்ணிகளின் இடையில்அப்படியொன்றும் ஒரு நிம்மதியான நாளின் முடிவல்ல. நேற்றும் இன்றுமாகத்  தொடர்ந்து வாசித்த, சு. வேணுகோபாலின் ’திசையெலாம் நெருஞ்சி’, ராஜகோபால் மொழிபெயர்த்த,  மச்சடோ டி ஆசிஸ் உடைய ‘மனநல மருத்துவர்’, மற்றும் ‘லிவிங் ஸ்மைல்’ விதயாவின் ‘நான் வித்யா’ மூன்றின் பாத்திரங்களும், வாழ்வும் நிலைகுலைத்த மனநிலயோடு, அந்தந்த தினங்களின் அன்றாடநிரல்களோடு  பொருந்தமுடியாமல் பொருந்தி முடித்து. விடுவித்துக் கொள்ளவும் விடுபடவும் முடியாதவனாக,  ஒரு மாறுதலுக்கு ரொம்ப நாட்களாகப் பதில் எழுதாத ஒரு கடிதத்தின் மீள் வாசிப்பில் இருந்தபோது, மின்சாரம் போனது.
எனக்கு அந்த இருட்டுப் பிடித்திருந்தது.  ஜன்னலுக்கு வெளியே இருந்து இருட்டு, லேசான காற்றைப் போல உள்ளே வருவதை உணர முடிந்தது. இருட்டு வியர்வைபோல என் மேலெங்கும் அப்பி அப்படியே வழிந்தது. என்னுடன் இரண்டு வார்த்தைகள் மட்டும் பேசிவிட்டு எனக்குப் பின்னால் குவிந்திருக்கும் இருட்டுடன் பேச அமர்வது, சுவர்கள் சினேகிதமாக நெளிந்து தன் கால்களைத் தளர்த்திக் கொள்வதில் தெரிந்தது. நான் மிக அழகிய ஒரு நட்சத்திரத்தைக் கற்பனை செய்துகொண்டேன்.  ஒரு கூரிய
நீல மினுமினுப்புடன் அது என்னை நெருங்கிக் கொண்டிருந்தது. அது என்னை அடையுமுன் என் வலது பக்கத்தில் ஒரு பேராற்றை நான் திறந்துவைத்தேன். இருட்டில் அது சலசலத்து ஓடுவது கேட்டது. பாறை இருக்கும் இடங்களில் அதன் உரையாடல் தணிவாக இருந்தது. .  நான் அடுத்து வனப்பூக்களின் வாசனையை இந்த இருட்டுக்குள் தருவிக்க விரும்பினேன்.  பார்த்தறியா பெருமலரொன்றின் இதழ் அவிழக் காத்திருந்த பொழுதில் மின்சாரம் வந்துவிட்டது.
வெளிச்சம் பளீரென்ற அசிங்கமாக இருந்தது. இருட்டின் அழகுக்கு அது எந்த வகையிலும் ஈடில்லை.

%

அந்த மருத்துவ மனைக்கு நான் சென்றதில்லை. சற்றுப் புதியது. நன்றாக வடிவமைக்கப் பட்டிருந்தது.  துல்லியமான பராமரிப்பும் கூட,
தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த என் உறவினர் ஒருவரைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டுப் புறப்படுகிறேன். எத்தனை படித்திருந்தாலும் மருத்துவ மனைகளில் வழி தப்பாமல் இருக்குமா.  கீழ்த் தளத்திற்குப் போகும் வழி
எது எனச் சரியாகவே காட்டினார்கள். நான் மேல் தளத்திற்குப் போய், கீழே
இறங்குகிறேன்.  அறுவைச் சிகிச்சை முடிந்து நோயாளி வெளியே வரும் மின் தூக்கி-இறக்கி பக்கம் என்னுடைய இறங்கு பாதை. இருதய சிகிச்சை போல. செவிலியர், நோயாளி எல்லோரும் மின்வழியில் இறங்க, அந்த நோயாளியின் மனைவியும் குடும்பத்தினரும் முன்னால் செல்ல நான் சற்று இடைவெளி விட்டுப் பின் தொடர்கிறேன். அதே வழியில் தான் நான்
கீழிறங்க வேண்டும். வெயில் விழுகிற ஒரு திறந்த வெளி. ஒரு தடாகம். அதில் தாமரை உள்ளிட்ட நீர்த்தாவரங்கள். சிவந்த காரட் நிறத்தில் நீந்தும் ஒன்றிரண்டு மீன்கள்.
நோயாளியின் மனைவி என எழுதப்பட்டிருக்கும் நிச்சயமான முகமுள்ள அந்தப் பெண் சற்று நேரம் அந்தத் தடாகம் முன் நிற்கிறது. நீந்தும் அந்தச் சிவந்த மீன்களையே பார்க்கிறது. சட்டென்று முகம் முழுவதும் மலர்ந்து, உறவினர் பக்கம் திரும்பி, ‘ காலையில பார்க்கும் போது எத்தனை மீன் மொச்சுக்கிட்டு இருந்தது. இப்போ எல்லாம் வெயிலுக்குப் போய் செடிக்குள்ள ஒளிஞ்சுக்கிட்டு கிடக்கு” என்று சொல்லிவிட்டு, வளைவுக் கம்பியில் கையூன்றி ஒன்றிரண்டாக நீந்தும் அந்தச் சிவப்பு அசைவுகளை
மட்டுமே பார்க்க வந்திருக்கும் ஒரு சிறுமி போல பரிபூரண அமைதியுடன் நின்றது.

%

சைக்கிளில் பெண்களைப் பார்ப்பது இது போன்ற அதிகாலைகளில் மிக
அபூர்வம். இன்னொரு பகுதியில் இதே போல நடுத்தர வயதெல்லாம் கூடத் தாண்டிய ஒரு பெண் கீரை விற்றுக் கொண்டு போவார். இந்தச் சாலையில் இதுவரை யாரையும் பார்த்ததே இல்லை. இவருக்கும் பள்ளிக்கூடத்தில் படிக்கிற பிள்ளைகள் இருக்க வேண்டும் அவர்களுக்கு வழங்கப்படும் இளம்பச்சை நிற சைக்கிள்தான் அது. தூரத்தில் வரும்போதே அந்த சின்ன சைக்கிளில் திடகாத்திரமாக அந்தப் பெண் வருவது துண்டாகத் தெரிகிறது. ஒருவகையில் சைக்கிளின் கீழ் பாகங்களே தெரியாமல், அந்தப் பெண் தரைக்கு மூன்று நான்கு அடி உயரத்தில் காற்றில் ஒரு கசங்கிய குப்பைத் தாள் போலப் பறந்து வருகிறார். சோர்வு, அலுப்பு, துக்கம் எல்லாம் சேர்ந்து சைக்கிளில் வருகிற பெண்ணை வேகமாக மிதிக்கவிடாமல் தளர்த்தி
வைத்திருக்கிறதாகவே இங்கிருந்து பார்க்கும் போது தோன்றியது.
தேநீர் அருந்தியபடி நிற்கும், துப்புரவுத் தொழிலாளிப் பெண்ணுடன் ஏதோ தகவல் பறிமாறிக் கொண்டே, சைக்கிளையும் நிறுத்தாமல் அந்தப் பெண் வருவது இந்தக் காலையின் இளம் வெளிச்சத்தில் இந்த மொத்த இடத்தை
வேறு விதமாக வரைந்தது. இளநீர்ச் செதில்கள் கிடக்கிற வாகைமரத்தைத்
தாண்டி அந்தப் பெண் மிக அருகில் வந்துவிட்டது.
என்னையோ, இந்த உலத்தில் வேறு யாரையோ, அல்லது இந்த அற்பமான உலகத்தையோ அது பார்க்கவே இல்லை. அதிகம் உரக்க ஒலிக்காமல் ஒரு பாடலைப் பாடியபடி அது போய்க்கொண்டே இருந்தது.

%

முந்திய கண்ணியிலும் அடுத்த கண்ணியிலும் துக்கம்  கனமாக கோர்க்கப் பட்டிருக்கும் போதும் மனிதமனம் வினோத வழிகளில் இயங்குகிறது. அது வலது பக்கம் நதிகளைத் திறந்துவிடுகிறது. வெயில் நேரத்து காரட் நிற
மீன்கள் குறித்து அக்கறைப்படுகிறது அல்லது இப்படி ஒரு அதிகாலையில் பாடிக்கொண்டே சைக்கிள் ஓட்டிச் செல்கிறது.

Monday 1 October 2012

ஹே ராம்.

திரண்டெழும் சூரியன் கிழக்கில்.
தேயும் நிலவு மேற்கில்.
எப்போதும் போல் ஞானப் பாலுடன்
நீல வானம்.

%

சாணத்திலும் புழுத் தேடும் நாகணவாய்.
சரிந்து விழும் வெயிலில்
மினுங்கும் ஒரு பூவரசம் பூ.

%

எந்தக் குற்றமும் செய்யவில்லை.
நிழல் இழுத்துப் போகிறது என்னை.

%

அழகாக இருக்கிறோம் என்று
அவளுக்கே தெரியும்.
அழகே இல்லாதது போல
வருகிறாள் எதிரில்.

%

நிச்சயமாகச் சொல்லமுடியும்.
இன்று
நிறையப் பூக்கள் மலர்ந்திருக்கின்றன
எங்கோ.

%

பூக்காமலா போகும் இந்த
சாலையோரப் புழுதிச் செடி
ஒரு நாள்?

%


தினசரி
அவர்கள் விளையாடுகிறார்கள்.
தினசரி
நான் பார்க்கிறேன்.
புரிந்துகொள்ளமுடிகிறது
தினசரிகளின் விளையாட்டை.

%

வேண்டுமென்றே...போன வருடமே மண்டலப் போக்குவரத்து அலுவலகம் வழங்கியிருந்த வாகன ஓட்டுநர் உரிமத்தைப் பார்த்து அவர் சிரித்துக் கொண்டிருந்தார்.
‘முன்னால வண்டி எடுக்கத் தெரிஞ்சா, பின்னால எப்படி எடுக்கத் தெரியாமல் போகும்? அது என்ன மனுஷனா, முன்னால போவேன், ஆனால்
பின்னால போக மாட்டேன்னு முரண்டு பிடிக்கிறதுக்கு?’ என்று சொல்லி விட்டு  பக்கவாட்டில் இருந்து என் முகத்தைப் பார்த்தார். ‘மெஷின் சொன்னபடி கேக்கும். நாமதான் மக்கர் பண்ணுவோம் அப்பப்போ’ என்று சொல்லிவிட்டு, மறுபடியும் உரிம அட்டையில் இருக்கும் என் படத்தைப் பார்த்து,’அய்யப்பன் கோவிலுக்கு மாலை போட்டிருந்தீங்களோ?’  என்றார்.

அந்தப் படத்தில் நரைத்த தாடியுடன் இருந்தேன். தாடி வளர்க்கிற கிறுக்கு நிலக்கோட்டை காலத்தில் இருந்தே உண்டு. அப்போது மிளகு. இப்போது உப்பு நிறம். வளர்த்துப் பத்துப் பதினைந்து நாளில் ஒரு சீக்காளிக் களை வரும். ‘என்ன உடம்புக்குச் சரியில்லையா?’ என நம்மைப் பார்க்கிறவர்கள்
கேட்பார்கள்.    எடுத்துவிடலாமா என்று தோன்றும். அந்த இடத்தை சற்று உறுதியாகத் தாண்டிவிடவேண்டும். நான்காவது வாரத்தில், ‘ஜோரா இருக்கு’ என்று இரண்டு பேர் சொல்வார்கள்.  அவர்களை அப்படியே நம்பிவிடத்   தேவையில்லை.

அடுத்த ஆபத்து வீட்டில் இருந்துதானே வரும். நாம் கண்ணாடியில் இடம் வலம் எல்லாம் திரும்பி, அடுத்த சீனில் இள்வரசனுக்கு மகுடம் சூட்டப் போகிற மகராஜா வேஷம் கட்டி இருப்பது போல ரசித்துக் கொண்டு இருக்கையில், ‘ அந்த சனியனை முதல்ல எடுங்க. என்னமோ மாதிரி இருக்கு’ என்ற சத்தம் பின்னால் இருந்து கேட்கும். பின்னால் இருந்து கேட்கிற குரலை சகல திசைகளிலும் இருந்து கேட்கும் குரலாக வளர விடாது இருப்பது பொதுவாகவே நல்லது இல்லையா.   யாராவது ரொம்ப உருத்தாகக் கேட்பார்கள், ‘என்ன எடுத்திட்டீங்க?’ என்று. ‘வைக்கணும்னு  தோணிச்சு, வச்சோம். எடுக்கணும்னு தோணுச்சு, எடுத்தாச்சு’ என்று சொல்லிக் கொள்ள வேண்டியதுதான்.

’நான் அய்யப்பன் கோயிலுக்குப் போனதே இல்லை. சின்னக் கோபால்தான்
அடிக்கடி போவான்’ -  எனக்கு கோபால் ஞாபகம் வந்துவிட்டது. யாராவது இப்படித்  திடீர் என்று ஞாபகம் வரும்போது, எதிராளிக்கு அவர்களைத் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் அந்தப் பெயரைச் சொல்லுகிறதில் ஒரு சந்தோஷம் இருக்கிறது.

‘இப்போ என்ன, வாங்க. நான் கூட்டிக்கிட்டுப் போறேன்’

‘இதுவரைக்கும் அப்படித் தோணலை’

‘தோணனும். தோணினாத்தான் மலைக்கு வரணும். வேன் அமர்த்தி இருக்கு. ரெண்டு சீட் காலி .நீங்க ஏறுங்கன்னா ஏறியிர முடியுமா. உங்களுக்கா அது தோணனும். அவன் கூப்பிடணும்’ என்று சபரிமலைக்குப் போவது பற்றிச் சொல்லிக் கொண்டே வந்தவர், மறுபடியும் ஓட்டுநர் உரிமத்தைப் பார்த்து சிரித்தார். சற்று கேலி குறைவான, மரியாதை குறைந்துவிடாத சிரிப்பு. ஒருவகையில் அவருக்கு நான் மாமா.   மாமா கூட இல்லை. மாமனார். அதை விட்டுக்கொடுக்க அவருக்கு மனமில்லை.

‘ இதையே எடுத்துக்கிடுங்களேன். லைசன்ஸ் எடுத்து ஒரு வருஷம் ஆகப் போகுது. இன்னும் ரிவர்ஸ் வரலைன்னு வண்டியையே எடுக்காம ட்ரைவர் போட்டு இதுவரைக்கும் மேக்கப் பண்ணிக்கிட்டு இருக்கீங்க.  ஏன்?’ - இதை நம் முகத்தைப் பார்த்துக் கேட்டாரே தவிர, இதற்குரிய பதில் அவரிடமே இருந்தது. ‘வண்டியை எடுக்கணும் , ஓட்டணும், இங்க வரணும், அங்க
போகணும்னு உங்களுக்கே ஒரு ‘இது’ வரணும். ‘ இப்படிச் சொன்னது போதவில்லை என்று தோன்றியது போல. ‘உங்களுக்கே ஒரு ஆசை வரணும்.’ என்று மேலும் சொன்னார்.

‘ கைலாசமும் இப்படித்தான் சொன்னான்.  ‘சித்தப்பா உங்களுக்கு ட்ரைவ் பண்ணனும்கிற passion இல்ல. இருந்தால் இதுக்குள்ளே டவுண் வரைக்கும் நீங்களே எடுத்துக்கிட்டுப் போயிருப்பீங்க’  - நான் சொன்னது அவருக்கு உடனடியாகப் பிடித்திருந்தது.

‘கரெக்டா சொல்லியிருக்கான்.  ஃபேஷன் வரணும்.’

அது பேஷன்,  ஃபேஷன் இல்லை என்று திருத்தினால் நன்றாகவா இருக்கும். நான் கேட்டுக் கொண்டே இருந்தேன். எனக்குத் தெரியும், அவர் அந்தச் சொல்லில் இருந்து விலகி, தன்னுடைய சொல்லுக்கு அவராகவே வந்து விடுவார் என்று.   எல்லோரும் அவரவர் மனம் சொல்கிறபடிதான் பேசுவது கேட்பது எல்லாம்.  ஒரு பெரும் அம்பாரத்தில் இருந்து தனக்கு வேண்டிய தானியத்தையே ஒரு குருவி கொத்தியெடுத்துக் கொள்கிறது.

‘அந்த ஆசை யிருந்தா, நீங்களே இதுக்குள்ள எந்த முடுக்குக்குள்ளேயும் ஓட்ட ஆரம்பிச்சு இருப்பீங்க. யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டாம். இந்த ட்ரைனிங் ஸ்கூல்ல என்ன சொல்லிக்கொடுத்திருக்கான். துட்டக் கொடுத்து லைசன்ஸ் வாங்கிக் கொடுத்திருப்பான். இம்மியளவு கூட அவன் எதுவும் சொல்லியே கொடுக்கலை. நீங்களா கத்துக்கிட்டதுதான் எல்லாம்.  மனுஷன் ஆனா ஆவன்னா சொல்லிக் கொடுக்காட்டா,   உங்க கிட்டேயும் என் கிட்டேயும் பேச மாட்டானா?   பேசிக்கிட்டுதானே இருக்கான்.   உழவர் சந்தைக்குப் போனா, பத்துப் பேர் சுத்தி நிண்ணுக்கிட்டு கால் கிலோ, அரைக் கிலோண்ணு கத்திரிக்காய் வாங்கினா, கரெக்டா மிச்சம் கொடுக்கத் தெரியாமலா அவ உக்கார்ந்திருக்கா’ - இப்படிச் சொல்லும் போது, கத்தரிக்காய் விற்கிற அந்த அவளையும் உழவர்சந்தையையும் அவர் ஒரு கணம் காட்டிவிட்டுத் திரும்பி, என்னிடம் வந்தார்.

‘அதெல்லாம் சரியா வந்திரும் மாமா.  வராம எங்க போகப் போது? தினசரி எந்திரிங்க. பல் தேச்சுக்கிட்டே வண்டியைச் சுத்தி வந்து பாருங்க. ஏதாவது எங்கேயாது பொழிஞ்சிருக்கா? கீச்சி இருக்காண்ணு பாருங்க. லேசா வண்டிய உள்ளங் கையால தடவிக் கொடுங்க. தடவிக் கொடுக்கதுக்கு அது என்ன
குதிரைக் குட்டியா மாப்பிளைண்ணு தோணும். ஏன்? குதிரக் குட்டியாதான் இருக்கணுமா? சும்மா தடவிக் கொடுங்க.  இது நமக்குள்ளதுண்ணு உங்களுக்குத் தோணும். வண்டிக்கும் இவன் நமக்கு வேண்டப்பட்டவன்னு
தோணும். அது எப்படிண்ணு எல்லாம் கேக்கப்படாது. உலகத்தில தன்னை
அறியாம இப்படி நிறைய நடக்கு. தன்னை அறியாம நடக்கிறதை வச்சு தான் சாய்ஞ்சு போகாம எல்லாம் ஒழுங்கா சுத்திக்கிட்டு இருக்கு. ‘ - இப்படி சொல்லச் சொல்ல அவர் முகம் வேறு யாரோ மாதிரி ஆகிவருவது தெரிந்தது.

‘ சொட்டுண்ணு காக்கா எச்சம் போட்டிருக்கும். வெக்கப் படாம விரல்ல எச்சியைத் தொட்டு அழிங்க.  அது இன்னும் கொஞ்சம் பெரிசாகி இருக்கும். அஞ்சு விரலையும் பரப்பி, உள்ளங்கையால துடச்சு விடுங்க. இதில என்ன அசிங்கம் இருக்கு. நம்ம புள்ளைகள் ஆய் போனா நாம கால்கழுவி விட யோசிக்கவா செய்தோம்.  எதுக்கு சொல்லுதம்னா, எல்லாத்திலயும் ஒரு ஒட்டுதல் இருக்கணும். இருந்தா அதனோட காரியமே வேறே’ -   அவர்
வாகனம் குறித்து மட்டும் பேசுவது போல இல்லை. ஒன்றைச் சரியாகப்
பேசினால், அது எல்லாவற்றுக்குமே சரியாகத்தான் இருக்கும் போல.

ஓட்டுநர் உரிமத்தை என்னிடம் நீட்டினார். ‘அதெல்லாம் இருக்கட்டும். மாமா காலையில எப்ப ஃப்ரீயா இருப்பீங்க?  உங்க வாக்கிங் எல்லாம் முடிஞ்சு ஏழு ஏழரைக்கு வரட்டுமா?  வந்தா சரியா இருக்குமா?  உங்க சௌகரியத்தச் சொல்லுங்க. அது படி  நான் டாண்ணு வந்திருதேன். வண்டியை எடுத்துக்கிட்டு என் கூட நாலு நாள் வாங்க. இப்பிடீ எங்க தோணுதோ அங்க போவோம்.  முன்னால் பின்னால எல்லாம் ஓட்டுங்க.
அஞ்சாவது நாள் காலையில மெட்ராஸில இருந்து வீட்டுக்கு ரிவர்ஸ்லயே வந்திருவீங்க. முன்னால ஒருத்தன் பொறத்தால கூடியே நடந்துக்கிட்டு இருந்தானே, அப்படி’ -  இதைச் சொல்லும் போது அவருக்கு சிரிப்பு வந்து விட்டது.  அதையே இன்னும் கொஞ்சம் சொல்லப் பிரியப்பட்டவராக,
‘எந்த பேப்பரைத் திலுப்பினாலும் அப்ப அவம் படமால்லா இருந்துது’ என்று சொல்லி அதற்கும் சிரித்தார்.

நான் இன்னொரு படத்தை செய்தித் தாட்களில் கற்பனையாக அச்சடித்துக் கொண்டு இருந்தேன். அதில் நான் பின்பக்கமாகவே வாகனத்தை ரிவர்ஸில் ஓட்டியபடி தொலைக் காட்சி நிருபர் ஒருவருக்குப் பேட்டி அளிக்கிறேன்.

‘இப்படி ஒரு சாதனை செய்யவேண்டும் என்று உங்களுக்கு எப்படித் தோன்றியது’ - நிருபர் கேள்வி கேட்கும் போது அவர் முகத்தில் இருந்த மைக்கை, பதிலுக்காக என் முகத்திற்கு நெருக்கமாக நீட்டுகிறார்.

‘ரொம்ப காலமாக எனக்கு அப்படி ஒரு passion'  - என்றுதான்  சொல்ல நினைக்கிறேன். ‘ரொம்ப காலமாக எனக்கு அப்படி ஒரு ஃபேஷன்’ என்று வேண்டுமென்றே சொல்கிறேன்.

ரொமபவும் வேண்டியவர்கள் ஞாபகம் வந்தால்தானே இப்படியெல்லாம் வேண்டும் என்றே சிலவற்றைச் சொல்ல முடியும்.

*