அப்படியொன்றும் வேறு யாரும் என்னை, ‘சமவெளி’யில் தேடியிருக்க மாட்டார்கள். தெரியும். தங்கராஜ் மூன்று நாட்களுக்கு முன் தொலைபேசும் போது கேட்டான், ‘என்ன அத்தான், சமவெளியில் உங்க சத்தத்தையே காணோம்’ என்று. சாம்ராஜிடம் நான் சமீபத்திய தினங்களில் எதுவுமே பதிவேற்றாத மன நிலை பற்றிச் சொன்ன சமயம், அவருக்கே உரிய குரலின் தூண்டுதலுடன்,’ அப்படியெல்லாம் சமவெளியில நடமாடாமல் நம்மால இருந்துர முடியுமா ஸார்?’ என்றார்.
நேற்று முகநூலில்/நூல்முகத்தில் கோபால் மனோகர், ‘சமவெளியில் கால் பதித்து நாட்கள் ஆகின்றனவே...’ என்று வருத்தப்பட்டிருக்கிறார். தொடர்ந்து, இந்த நேரத்தில் இருந்து இதுவரை என அனுமானிக்க முடியாத மின் தடை. அதே அளவுக்கு அனுமானிக்க முடியாமல் எப்போதும் இருக்கிற மனத் தடை.
மனம் எப்போது தடை சொல்லாமல் இருந்தது. அல்லது விடை சொன்னது?
அதையெல்லாம் கணக்கில் எடுத்து, உண்மையாகப் பார்த்தால், கணக்கில் எடுக்காமல் தானே இத்தனை காலமும் எழுதிவருகிறேன்.
சரி. இன்றில் இருந்தும் ஏதாவது.
%
சுலபமாகத் துவங்க ஒரு கவிதையுடன். ’ உயிர் எழுத்து’ இதழில் இந்த மாதம் வெளியாகியிருக்கிற என்னுடைய மூன்றாவது கவிதை. அதற்கு முந்திய இரு கவிதைகளையும் அவர் ஏற்கனவே சென்ற இதழிலும் வெளியிட்டு, இந்த இதழிலும் மீண்டும் வெளியிட்டிருக்கிறார். அவ்வளவு உடனடியான மீள்வாசிப்பை அவை கோருகின்றன என சுதீர்செந்தில் தீர்மானித்து இருக்கலாம். அல்லது இரண்டு இலைகளுக்கு இடையில் ஒரு பூ பூத்தால் நன்றாகத்தானே இருக்கும் என நினைத்து இருக்கலாம். இந்த ‘இருக்கலாம்’கள் மட்டும் அவ்வப்போது உதவிக்கு வராவிடில், அப்புறம் நமக்குத்தான் எத்தனை சிரமம்.
அப்பாவுக்கு அந்த மூன்றாவது கவிதை ரொம்பப் பிடித்துவிட்டது. இரவுச் சாப்பாட்டு நேரம். ஒரு சிறிய ‘வாழைப் பூ’ விள்க்கை ஏற்றிவைத்து இருக்கிறோம். எண்ணெய்யும் திரியுமாக இந்த சிறு விளக்குகள் எரிகிற
அழகு தனி. அப்பா திடீரென்று ‘ நீ பாரதி நிறைய படிப்பியோ?’ என்று ஆரம்பித்தார். எதை நோக்கி அவர் நகரப் போகிறார் என எனக்குப் பிடிபடவில்லை. நான் அசையாது, ‘முத்துப் போல்’ சுடர்கிற திரி நுனியில், நுனியடிக் கங்கில் இருந்தேன். அப்பா பாரதியின் மண்ணுலகத்து நல்லோசைகள் பற்றிய கவிதையைச் சொல்ல ஆரம்பித்தார். ‘மண்ணுலகத்து நல்லோசைகள்’ என்பதைத் திருப்பிச் சொல்லும்படி மட்டுமே என் குறைந்த வாசிப்பு. அப்பா அதிலிருந்து, சட்டென்று உயிர் எழுத்து கவிதைக்குத் தாவினார். அந்த மூன்றாவது கவிதை அருமையா இருக்கு. ஹைலி பிலாஸிபிக்கல். உள்ளே பார்க்கத் தெரியாம, வெளியே பார்த்து என்ன பண்ணப் போறான்?’ என்கிறார். கிட்டத்தட்ட என்னுடைய அந்த கடைசிப் பக்க மூன்றாம் கவிதையின் வரிகளைச் சொல்கிறார்.
எனக்கு இப்போது அந்தச் சுடரை, அந்த வெளிச்சத்தை மேலும் பிடிக்கிறது. ஒரு சாப்பாட்டுத் தட்டின் முன், சிறிது வெளிச்சத்தில் தன் எண்பத்தேழு வயது வாழ்வின் முழு அழுத்தமான தடங்களுடன் இன்னொரு நெடுஞ் சுடர் போல அவர் முகம் இருந்தது. இந்த ராப் போஜனத்தை, இந்த இருட்டை நான் எப்படி மறக்க முடியும்?
இதைவிட, இன்னொரு சிலிர்ப்பு. ஒரு அரை மணி இடைவெளி. அப்போதும் மின்சாரம் வந்துவிடவில்லை. அப்படியெல்லாம் அது சொன்னது சொன்ன நேரத்தில் வந்துவிடுமா என்ன? அப்பா தூங்கிவிட்டாரா என எட்டிப் பார்க்கிறேன். அப்பா எதையோ வாசித்துக் கொண்டு இருக்கிறார். வலது கையில் டார்ச் லைட்டைப் பொருத்திப் பிடித்துக் கொண்டு, அதன் மங்கலான மஞ்சள் வெளிச்சத்தில், பார்வைக்குறைவின் பாரத்தை முற்றிலும் வாசிப்பின் மேல் கவிழ்த்தியபடி முகமும் பத்திரிக்கைப் பக்கமும் நெருங்க இருக்கிறார். எனக்குக் கோபம்தான். அப்படி என்ன படிக்க வேண்டியது இருக்கிறது, டார்ச் லைட் வெளிச்சத்தில்?’ என்று.
‘பொறவு படிச்சா என்ன?’ - குரல் கொடுத்தபடி பக்கத்தில் போகிறேன்.
அப்பா, உயிர் எழுத்து இதழின் கடைசிப் பக்கத்தை மீண்டும் படித்துக் கொண்டிருந்தார் என் முகத்தைப் பார்க்கவே இல்லை. நான் தான் வந்து பக்கத்தில் நிற்கிறேன் என்று தெரியும். என்னிடம் அவர் எதுவுமே சொல்லவில்லை.
‘நல்லா வந்திருக்கு’ என்று அந்தக் கவிதையிடமே சொல்லிக்கொண்டு இருந்தார்.
அந்த மூன்றாவது கவிதையிடம்.
*
ஒரு முழு முற்பகல் பயணத்திலும்
ஜன்னலுக்கு வெளியே மட்டுமே
பார்த்துக்கொண்டுவந்த முகம்
அவருடையது.
ரயிலின் உட்பக்கம் பார்க்கக் கூடாது
எக்காரணத்தாலும் என்று
நிபந்தனை அச்சிடப்பட்ட பயணச்சீட்டு
அவருக்கு வழங்கப் பட்டிருந்தது.
கொய்யாப் பழ வாசம், குழந்தை அழுகை,
தொடர் இருமல், கடலைமிட்டாய் வியாபாரம்
எதற்கும் திருப்பிக் கொள்ளவில்லை
தன்னுடைய உட்பக்க கவனத்தை.
அசையாத பார்வை வெளியில்.
உள்ளே பார்க்கத் தெரியாதவர்க்கெல்லாம்
வெளியே என்ன தெரிந்துவிடப் போகிறது?
%
வழியிலிருக்கிற கோவிலை கடந்து போகும்போது ஒரு செகண்ட் நின்னு நாடியில விரலால தட்டி ஒரு வணக்கம் சொல்றாமாதிரி தினம் சமவெளிய எட்டிப் பார்த்து ஏமாந்து போறவங்க கொள்ள பேரு இருக்கோம் சார். அபிஷேகம், லட்சார்ச்சனைன்னு என்னைக்காச்சும் பதிவிருந்தா மனசு கொள்ளாம படிச்சிட்டு காலாத்தி உக்காந்து பிரசாதம் மாதிரி திரும்ப கொஞ்சம் கொஞ்சமா படிச்சி போக மனசில்லாம போகறதுக்குன்னு நிறைய பேரு இருக்கோம்.
ReplyDelete@ வானம்பாடிகள்:சரியாகவும் அழகாகவும் சொல்லீருக்கீங்க
ReplyDeleteஆஹா.. தினசரி மனசு ஏமாந்து போகுதேன்னு ரெண்டு நாள் இடைவெளி விட்டுட்டு, மனசு கேக்காம இப்போப் பாத்தா.. ஆஹா.. எப்பிடி சொல்றது என்னோட சந்தோசத்த.. ஐயா தி. க.சி யுடைய அருமையான புகைப்படம் கூடுதல் போனஸ்.. இருட்டில், டார்ச் லைட் வெளிச்சத்தில் மனசுக்குப் பிடிச்ச கவிதயப் படிக்கும் அப்பா மனக் கண்ணுக்கு உள்ளயே ..மிகுந்த நன்றி சார்.
ReplyDeleteஅந்த 'மூன்றாவது கவிதை'.. எனக்கும் ரயில் பயணங்களுக்கும் ரொம்ப்ப்ப சம்பந்தம் (உத்தி'யோகம்' அப்படி !) யோசிச்சுப் பாத்தா நா கூட எழுபது சதம் சன்னலுக்கு வெளியில பாக்குற ஆளு தா. ஆனாக் கூட கொய்யாப் பழம் சாப்பிடாம, கூட வரவங்கள பாக்காம எப்பிடி ரயில் பயணம் ருசிக்கும் ! ஒரு வேள கொலுசு சத்தம் கேட்டிருந்தா தம்பியா புள்ள தானாத் திரும்பி பாத்திருப்பாரோன்னு தோணுது !
(கிண்டல் பண்ணக் கூடாது, .. அவருக்கு என்ன மனசுக்கு நோக்காடோ) - கோபால் மனோகர்.
வானம்பாடிகள் அவர்கள் சொல்வது சத்திய வார்த்தைகள்
ReplyDeleteமாநகர் மதுரை விழா முடிந்து சற்று ஓய்வில் இருக்கிறீர்கள் என்று
ஆறுதல் படுத்திக் கொண்டேன்
10161 பார்வைகளில் (இந்த வலைப் பக்கத்தை)
161 எனதாக இருக்கும்
கவிதை அருமை என்று மூத்த விமர்சகர், பின்னூட்டப் பிதாமகரே சொல்லி விட்டார்
இனி எங்கள் பின்னூட்டங்கள் கோரஸ் சத்தங்கள் தான்
உள்ளூரில் இருக்கும் போது ஆகாயம் அண்ணாந்து பார்ப்பது மின்சாரம் அற்ற திண்ணைப் பொழுதுகளில்தான் பெரும்பாலும்,பிழைப்புக்காய் வந்திருக்கும் அந்நிய தேசத்தில் சொல்லுக்குப் பசித்திருக்கும் புலன்கள் அந்தி சாய்ந்ததும் நிலா பார்க்க தளும்புகின்றன.ஜன்னலுக்கு நேரே நிலா வரும் நாளில் எல்லா வயதுச் சட்டையும் கழன்று நிர்வாணியாகி நிற்கும் தருணம் ...அருவியின் புகைப் பாவாடை மாதிரி சில்லிப்பு சூழ்வதைப் பார்க்க வெளியே இருந்து உள்ளே பார்க்க வேண்டி இருக்கிறதுண்ணே !
ReplyDelete