Friday 23 February 2018

இறப்பில் இருந்து...நான் பூமா ஈஸ்வரமூர்த்தியைப் பார்த்துவிட்டு வந்து வாசல் கதவைச் சாத்தும் போது அந்தக் கருப்பு நாய்க் குட்டியைப் பார்த்தேன். அது உயிரோடு இருக்கும் என நான் நினைக்கவே இல்லை. ஒரு வாரத்திற்கு முன்பே அது என் அளவில் இறந்துபோயிருந்தது.

இப்போதும் அது சாவிலிருந்து தன்னை உருவிக்கொண்டு வந்ததாகவே, மிகுந்த நோய்மையுடன், ஒரு சரிந்த நடையுடன், வெயிலிடமிருந்து தன்னைப் பிய்த்து எடுப்பதும் அப்பிக்கொள்வதுமாகப் போய்க்கொண்டு இருந்தது. ஒரு குரைப்பு இல்லை. முனங்கல் இல்லை.  உணவே    தேவையற்ற, உணவே  தென்பட விரும்பாத ஒரு திசையை அது கண்டு பிடித்திருந்தது. அம்பாரம் அம்பாரமாகக் குவிக்கப்பட்டிருந்த பேபி ஜல்லியிடம் அது சாவின்  ஒய்யார மினுமினுப்பைக்   கண்டிருக்கக் கூடும்.

பூமா ஈஸ்வரமூர்த்தியின் அந்த நிலைத்தகவலை முகப்புத்தகத்தில் உங்களில் சிலரும் பார்த்திருக்கலாம்.  ‘நேற்று இரவு பதினொன்று மணியிலிருந்து நான் ஒரு  தாயில்லாப் பிள்ளை” , ஈஸ்வர மூர்த்திக்கு அறுபத்தாறும் இருக்கலாம். அறுபத்தேழும் இருக்கலாம். எனின் என்ன? தாயை இழந்தால் எந்த வயதினும் அவன் தாயில்லாப் பிள்ளை. தாயில்லை என்று உணர்ந்த ஒருவனின் முகத்திலும் அகத்திலும் உண்டாகும் ‘தாயில்லாப் பிள்ளை’க் களை”  தாங்க இயலாதது. பூமா ஈஸ்வரமூர்த்தி எத்தனை கவிதைகள் எழுதியிருப்பினும் கதைகள், கட்டுரைகள் எழுதியிருப்பினும் , மூர்த்தி என நிற்கிறவனின் கண்கள் ஒரு தாயில்லாப் பிள்ளையுடையதாகவே, உருள வரும் கண்ணீரை உருளவிடாமல் விழுங்க முயன்றுகொண்டே இருந்தன.

கண்ணீரால் கழுவப்பட்ட அப்பழுக்கற்ற கண்களை நேர்கொண்டு பார்க்க நாம் நினைப்போம். ரெப்பை மயிர் நுனிகளில் பாசி கோர்த்தபடி சிவந்துருளும் விரிந்து சுடரும் மூர்த்தியின் கண்களை என்னால் சந்திக்கவே இயலவில்லை.
மூர்த்தியின் அம்மா, பெரியம்மா, சித்தி எல்லோரையும் மூர்த்தியை அறியும் முன்பே அறிவேன். எங்கள்  சுடலைமாடன்  கோவில் தெரு பால்யத்தின் வெளிகளில், எங்கள் வளவு வீடு ஒன்றில், எங்கள் புறவாசல் வீடு ஒன்றில், பேட்டை ரோடு வீடுகளில் எல்லாம் அவர்கள் சாலாச்சி என்றும் பாலம்மா என்றும் வெவ்வேறு சித்திகளாகவும் மனுஷிகளாகவும் நடமாடியிருந்தார்கள்.
எண்பத்தாறு அல்லது எண்பத்தேழு வயது வாழ்ந்த நிறைவுடன் மயில்கழுத்து நிறச் சேலையுடன் குளிர்ப்பெட்டியுள் உறைந்திருக்கும் மூர்த்தியின் அம்மா  முகத்தில்  இருந்து அடுக்கடுக்காக வேறு வேறு சித்திகள்  சாயல் கொண்டு ஒரு விளக்கிலிருந்து மறு விளக்கு ஏற்றிக்கொண்டே போகிறார்கள். நீத்தார் ஒருவரின் முகத்தில் இதுவரை நிறைந்தோர் எல்லோரும் தெரிவோர் என்பதே மெய். யாரை நினைக்கினும் அவர் ஆகும் நிலை கொள்ளும்  அது.

நான் இந்த நாய்க்குட்டியை  மரண வீட்டின் கண்களோடுதான் பார்க்க முடிந்தது. ஏற்கனவே கருத்திருக்கும் அதன் உடலில் இருந்து கால்களின் வழிந்தோடி விழும் ஒரு கருப்பு ஒற்றையடியை  முகர்ந்துகொண்டே,அப்படி முகரும் நாசி நுனையைத் தரையிலிருந்து அகற்ற முடியாமல் உதறித் தவிப்பதாகவே பட்டது. அது இறந்து போயிருக்கும் எனும் யூகத்தில் எனக்குள் எழுதியிருந்த இறப்புச் சான்றிதழை நான் கிழிக்க விரும்பாது,  அதனுடைய இழுபடும் நிழலை ஒரு குறிப்பிட்ட புள்ளிக்கு அப்புறம் தாண்டச் சம்மதிக்காதவனாக இருந்தேன்.

இன்றைய தினசரியில் காஞ்சிபுரத்துப் பக்க கருணை இல்லம் ஒன்றின் சுவர்களில் பெட்டிகள் போன்ற அமைப்பில் அந்த இல்லத்தில் இறந்தோரின் சடலங்கள் இடப்பட்டுப் பூசப்படுகின்றன  என்ற செய்தியிருந்தது.  ஹாலோ ப்ளாக்ஸ் என்ற கட்டுமான முறையில் வாய் பிளந்து நிற்கும் அந்தச் சுவர்க் கல்லறைகளின் வினோதம்  ஒரு நவீன நடுக்கத்தை உண்டாக்குகிறது. மரணத்தை உயிருள்ளவர்களால் கையாள ஒரு போதும் முடியாது. ஆனால் சடலங்களைக் கையாள அவர்கள் தீர்மானிக்கும் உத்திகளின் சிக்கல்கள்  ஒரு பிறழ்வுநிலையை ஒத்துக்கொள்ளத் துவங்கிவிட்டன.

அதே தினசரியின் இன்னொரு இணைப்பில் தான் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி என்ற மலையாள இளம் இயக்குநரின் நேர்காணல் வெளியாகியுள்ளது. அதன் கடைசிக் கேள்வியும் அதற்கான பதிலும் இப்படி அமைகின்றன.

வெளியாகவிருக்கும் ஈ.ம.யோ., ‘மத யானைக் கூட்டம்’ மாதிரியான இறப்புச்  சடங்கைச் சித்தரிக்கும் படமா?

ஆமாம். ஆனால், இதில் ஒரு மீனவர் குடும்பத்தில் நடக்கும் இறப்புச் சடங்கைப் பதிவு செய்திருக்கிறேன். பொதுவாக, நாம் எல்லோருமே இறப்பை அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களாக இல்லை. நாம் ஏன் இறப்பில் இருந்து மறைந்து நிற்கவேண்டும் என்ற கேள்வியையும் இதில் புகுத்திப் பார்த்திருக்கிறேன்.

எனக்கு லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் பதிலில் உள்ள ‘நாம் ஏன் இறப்பில் இருந்து மறைந்து நிற்கவேண்டும்?’ என்ற கேள்வியை விட்டு  இங்கங்கு நகரமுடியவில்லை. அவருடைய மலையாளப் பதிவின் மொழிமாற்றத்தில் உண்டான இந்த வாக்கியம், அவர் மலையாளத்தில் சொல்லியிருக்கக் கூடியதையும் விட மேலும் ஒன்றை எனக்குச் சொல்வதாகப் படுகிறது,

நான் இந்த மடிக்கணினி விசைப்பலகின் ஊடாக, மானசீக சன்னலின் வழி அந்தக் கருப்பு நாய்க்குட்டியைப் பார்த்துக் கொள்கிறேன். அது கூட இந்த ஒரு வாரமாக, இக் கணம் வரை இறப்பில் இருந்து மறைந்து நின்றுகொண்டு இருப்பதாகவே படுகிறது.

இதை எழுதிக்கொண்டு இருப்பது, ஒரு வெயில் விழாத அறை எனினும், ஒரு கருப்பு நிழலை நான் முகர்ந்துகொண்டே தான் நகர்ந்துகொண்டு இருக்கிறேன்,
இறப்பில் இருந்து மறைந்து நிற்றல் என பெல்லிசேரி சொல்வதாகவும் அது இருக்கக் கூடும்.