Tuesday 23 October 2012

அ-சாயல்.இரண்டு உள்ளங்கைகளையும் இன்று திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டே இருப்பேன். இந்த முறை, என்னுடைய கைகளை என்னுடைய கைகளாக மட்டுமே பார்க்கும் படி, அதில் படிந்திருக்கிற மஞ்சள் பூச்சு, மிக அதிகப் பின்னல்களும் பெருக்கல்களும் நிரம்பிய என் ரேகைகளுக்குள், மினுங்கிக் கிடக்கிறது.

அதுவும் இதே போல ஒரு மழை நாள்தான்.   எங்கள் அம்மாத் தாத்தாவை எரியூட்டிவிட்டு வீட்டுக்குள் நுழைகிறேன்.  கொள்ளிவைத்த முகத்தோடு ஆச்சியைப்பார்க்க அவள் பக்கம் போகிறேன். அவளும் கட்டிலில் இருக்கிற நிலைதான். ஆச்சி என் கையைப் பிடித்துக் கொள்கிறாள். கொஞ்ச நேரம் ஒன்றும் சொல்லாமல், என் கையில் இல்லாத வளையல்களை எண்ணுவது மாதிரி, என் மணிக்கட்டில் இருந்து முழங்கை வரை மேலும் கீழும் தடவி விடுகிறாள். கண் கலங்குகிறாள். “நல்லபடியா தாத்தாவை அனுப்பிச்சு வச்சுட்டே அய்யா” என்கிறாள். மறுபடியும் என் கையை அவள் கைக்குள் பிடித்துக் கட்டில் விளிம்பில் அப்படியே வைத்துக் கொள்கிறாள்.

எப்போதும் ஆச்சி என்னை ‘அய்யா’ என்று மட்டுமே சொல்வாள். எனக்கு தாத்தா பெயர் இட்டிருப்பதால் கூடுதல் பிரியம் இருந்திருக்கும். காட்டிக் கொள்வதில்லை. அந்தக் கால மனிதர்களுக்குக் கூடுதல் குறைவை எல்லாம் காட்டிக் கொள்ளாத ஒரு இயல்பான பக்குவம் இருந்திருக்கிறது.
என் விரலில் கிடக்கிற மோதிரம் ஆச்சி தாலிப் பவுனில் செய்ததுதான். ‘அவனுக்கு மோதிரம் பண்ணிப் போட்டிரணும் அதில’ என்று உத்தரவு போலச் சொல்லிவிட்டு, நேரே தாத்தா இறந்த முப்பதாவது நாள் ஆச்சி
தாத்தா பின்னாலேயே புறப்பட்டுவிட்டாள்.

புறப்பட்டுப் போனாலும் ஒவ்வொரு கட்டத்திலும் அவள் வராத நாளே இராது. அதிலும் சரஸ்வதி பூஜை அன்றைக்கு வராமலே இருக்கமாட்டாள்.
அவள்தான் ‘அம்மன்’ செய்வாள். எப்போது அந்தப் பொறுப்பை என் கைக்கு மாற்றினாள் என்று நிச்சயமாகச் சொல்லமுடியவில்லை. கணபதியண்ணன் என்னை விடவும் நன்றாக வரைவான் என்றாலும், ‘அம்மன்’ செய்வதை என்னிடம் ஒப்படைத்துவிடவேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது எப்படி எனத் தெரியவில்லை.  அவள் இருக்கிற காலத்திலேயே ‘அம்மன்’ செய்ய ஆரம்பித்துவிட்டேன். ‘அப்படியே சச் ரூபமா இருக்கு’ என்று ஒரு தடவை சொல்வாள். ‘ குதிச்சுருவா போல இல்லா அம்மன் இருக்கா’ என்று இன்னொரு தடவை சொல்வாள். ‘பட்டாசலில் சத்தம் காட்டாம வந்து நிக்கித மாதிரி இருக்கு’ என்பாள்.  ’இரண்டாங் கட்டு நடையில தலைவச்சுப் படுத்தா, அவ மடியில படுத்துக்கிடுத மாதிரியில்லா இருக்கு அய்யா’ என்று இன்னொரு தரம் என்னிடமே சொல்வாள்.

நான் ஒவ்வொரு சரஸ்வதி பூஜைக்கும் ஏடு அடுக்கி அம்மன் செய்துவர ஆரம்பித்து நாற்பது வருடங்களுக்கு மேல் இருக்கும். வேலை கிடைக்காது வீட்டில் இருந்த காலத்தில் இருந்து, பணி ஓய்வு பெற்று ஏழு வருடங்கள் ஆகப் போகிற இந்த எல்லாக் காலத்திலும் நான் செய்கிற அம்மன் முகம் ஒவ்வொருத்தர் ஜாடையில் இருக்கிறதாகச் சொல்வார்கள்.     எனக்குக் கல்யாணம் ஆகுவதற்கு முன் என் பெரிய தங்கச்சி ஜெயா சாயலில் அது இருந்ததாம். கல்யாணம் ஆன பிறகு சங்கரியம்மா சாயலில் இருக்கிறதாம். இப்படி, பிறந்த குழந்தைக்கு ஜாடை சொல்வது போல,   அவரவர்க்குப் பிடித்த, அவரவர் மனதில் இருக்கிறதைச் சொல்லிக் கொள்வார்கள்,  நான் கேட்டுக் கொள்வேன். சிரித்துக் கொள்வேன்.  அப்படி ஒரு முகச் சாயல் அம்மனுக்கு இருக்கிறதென்றால், அது நிஜமாக யார் சாயல் என்பது எனக்கு அல்லவா தெரியும்.

என்னைத் தெரிந்தவர்கள், அல்லது என்னுடைய அந்தக் கவிதையைப் படித்தவர்கள், சரஸ்வதி பூஜை அன்றைக்கு,”இந்தத் தடவை அம்மன் யார்
சாயல்?’ என்று இன்னும் அவ்வப்போது கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
எனக்கென்னவோ கதை ஆயினும் ஓவியமாயினும் சிலையெனினும் அது சாயல்களைத் தாண்டி, ஒரு அ-சாயல் அடையவேண்டும் என்றும் அசாயல் மட்டுமே ஒரு ந்ல்ல கலையின் சாயல் என்றும் படுகிறது. நான் அறிந்தோ அறியாமலோ அதற்கே முயல்கிறேன்.

என்னிடம் இப்போது எந்த நீர் வண்ணமும் இல்லை. நான் இதுவரை பயன் படுத்தி வந்த தூரிகைகள் முடி உதிர்ந்து எங்கோ ஒரு பெட்டியில். பரமன் கடை முகப்புப் போஸ்டர்களுக்காக நான் உபயோகிக்கப் படித்த போஸ்டர் கலர் குப்பிகள் எல்லாம் உறைந்த நிலையில் பரணுக்குப் போய் அதிக காலம் ஆயிற்று. இன்று செய்த அம்மன், அம்மியில் அரைத்த மஞ்சளில் இல்லை. பேரங்காடியில் வாங்கிய ஆயத்தப் பொடியைப் பிசைந்து செய்தது. தூரிகையையும் நீர்வண்ணக் கட்டிகளையும் வாங்கியது தூங்கிக் கொண்டு இருந்த பக்கத்து வீட்டு ராமமூர்த்தியின் பெண் ஷிவானியிடம். . விரல்கள் மட்டும் என்னுடையது.

அம்மன் நன்றாக வந்திருக்கிறது. வெள்ளைப் பூண்டுக் கண்கள் கூட இந்தத் தடவை சரியாகவே அமைந்துவிட்டன. நம்மைப் பார்க்காமல் சற்று மேலே பார்க்கிற மாதிரி இருக்கிறது பார்வை. நம்மைப் பார்க்கவேண்டும் என்று என்ன கட்டாயம். அவசியம் என்றால் நாம் அவளைப் பார்த்துவிட்டுப் போகிறோம். சொல்லப் போனால், நாமே சற்று மேலே பார்க்கவேண்டியவர் இல்லையா?

இன்னும் யாரும்,  ‘அம்மன் இந்தத் தடவை யார் ஜாடை?” என்று யாரும் கேட்கவில்லை. கேட்டால், ‘உங்க ஜாடைதான்’ என்று  சொல்லிவிடலாம் என நினைக்கிறேன். அவரவர்க்கு அவரவர் சாயல்.

அ-சாயல் என்றாலும் அப்படித்தானே அர்த்தம்.

%

இந்த வருடமும்
சரஸ்வதி பூஜைக்கு
அம்மன் முகம் செய்தேன்.
முன்பு
தங்கச்சி சாயலில் முகம் இருக்கும்.
இடையில்
இவள் சாயலில் இருக்கிறது
என்பார்கள்.
இந்த முறை
உறவின் அடையாளங்களிலிருந்து
கழன்ற ஒரு முகத்துடன்
சரஸ்வதி உருவம் சிரித்தது.
அ-சாயலை அடைவதற்கு
ஆகிவிட்டது
இத்தனை காலம்.

%


3 comments:

 1. ஆச்சரியமாக இருக்கிறது..அம்மனை வீட்டிலேயே செய்து பூஜை கும்பிடுவது.! அவ்வளவு அழகாக வந்திருக்கிறது அம்மன்.
  சரியாக சொல்லியிருக்கிறீர்கள் ...சிறந்த கலை வேறு யார் சாயலும் இல்லாமல் தன சொந்த சாயலுடன் தானே திகழும். தனக்கென்று தனி சாயலை அடைய காலம் எடுத்துக்கொள்ளத்தான் செய்கிறது. அப்புறமும், நாம் கண்டடையும் சாயல்
  வேறு எதனுடையதாகவோ இருந்து விடலாம்... நாம் உணராமலே. படைப்பின் ரகசியங்களை புரிந்து கொள்ள ஒரு வாழ்நாள் போதுமா என்ன ! - கோபால் மனோகர்.

  ReplyDelete
 2. வேறொன்றுமில்லை..வாழ்க்கை முழுவதும் எழுதுகோல் தெய்வம் எழுத்தும் தெய்வம் என்று அம்மன் செய்து கொண்டே இருக்கிறீர்களே...அதன் விளைவே இது.

  ReplyDelete
 3. கல்யாணி அங்கிள். எனக்கு 'பறப்பதற்குமுன் கொஞ்சம் புழுக்களாக' கதை அவ்வளவு பிடிக்கும். நான் செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு ஒரு வருடத்திற்குமேல் வீட்டில் இருந்த நாட்களில் படித்த சிறுகதை இது. முருகேசனை என்னுடைய சாயலிலும், நாகமாக்காவை என்னுடைய அக்காவின் சாயலிலும் என் மனதில் வரைந்துகொண்ட அழகான கதை அது. நீங்கள் அடிக்கடி சொல்வது போல் யாருடைய சாயலிலோ யாரையாது பார்த்துக்கொண்டே இருப்பது போல தான், உங்கள் எழுத்தின் வரிகளில் என்னை பார்த்து கொள்கிறேன். கரையில் உருண்டோடும் ஒரு உடைந்த சிப்பி போல, உங்கள் எழுத்தில் நனைந்து கொண்டே இருக்கிறேன்.

  அம்மன் சிலையை செய்த அந்த முருகேசன் இன்று தான் அ-சாயலை காண்கிறான்! :)

  ReplyDelete