Friday 28 September 2012

முதல் சொட்டுஒரு பறவையை வர்ணிப்பது சுலபமில்லை. அதிலும் அந்தப் பறவை ஒரு காக்கையாக இருந்தால் இன்னும் கடினம். இன்று எங்கள் வீட்டுக்கு வந்தது ஒரு காக்கை கூட அல்ல, காக்கைக் குஞ்சு. முதல் முறையாக ஒரு காக்கைக் குஞ்சைப் பார்க்க நேர்கிற ஒருத்தன் அப்படியொன்றும் பெரிதாக அதை வார்த்தைகளில் வரைந்து விட முடியாது. என் மிகக் குறைந்த எல்லைகளுடைய கவனத்தில், ஒரு சாம்பல் காக்கையை அசல் சாம்பல் கழுத்துடன் வரைந்தவர் ஆர்.கே.லக்‌ஷ்மணன் தான்.

ஒரு கேலிச்சித்திரக்காரனுக்கு மட்டுமே அவன் கேலிசெய்கிற உயிரின் ஆன்மா தெரியும். மிகுந்த வருத்தத்துடனுடனும் அக்கறையுடனுமே அவன் கேலி செய்கிறான். லக்‌ஷ்மண் காக்கையின்ஆத்மாவை உணர்ந்தே அந்தக் காக்கைகளை வரைந்திருப்பார். கேலி எதுவும் கிடையாது. அப்படியே அவர் கேலி  செய்திருந்தாலும், அதைக் காக்கைகள் சந்தோஷமாகவே ஒத்துக்கொண்டிருக்கும். காக்கைகளும் அரசியல் செய்யாது. லக்‌ஷ்மணன் விரல்களுக்கும் அந்த உத்தேசம் இருந்திருக்க வாய்ப்பிலலை.

நாங்கள் இரண்டு பேரும் ஏதோ சில்லறைக் காரியங்களுக்காக வெளியே
போய்விட்டு வருகிறோம். இது தெற்குப் பார்த்த வீடு, மேற்கே பார்த்த நடை ஏறினால் ஒரு சிறு கல் திண்டு. இரண்டு பேர் உட்காரலாம். உங்களை  உட்காரச் சொல்லும்படி அதில் ஏதோ இருக்கிறது. இப்போது சற்று மெலிந்து சோகையாகப் போய்விட்ட நந்தியாவட்டையின் இலைகளின் நிழல் அந்தக் கல்லை தூசு இல்லாமல் சதா துடைத்துக்கொண்டே
இருக்க, வெயில் அதனுடைய அன்றைய தினத்தின் சாகசத்தை அதன் மீது எழுதுகையில், எட்டிப் பார்த்து வாசிக்கும்  நம் அடிப்படை ருசிக்காகவேனும் உங்களுக்கு உட்காரத் தோன்றும். வீட்டின் கதவே அற்ற கதவை அது திறந்துவைத்துவிடுதாகவே சொல்லலாம்.

அந்தக் காக்கைக் குஞ்சு  பம்மிப்போய் கல் திண்டுக்கும் முன் கதவுக்கும் மத்தியில் சுவரோடு சுவராக ஒண்டி உட்கார்ந்திருந்தது. நான் கூட அதைப் பார்க்கவில்லை. நான் உற்றுப் பார்க்கிற லட்சணம்தான் தெரியுமே. “இது யாரு, வந்திருக்கா”   என்று சங்கரியம்மாவிடம் இருந்து ஒரு சத்தம் வருகிறது. நமக்கு முன்னால் நம் வீட்டில் யாராவது விருந்தாள் வந்து உட்கார்ந்திருந்தால் ஒரு சந்தோஷம் நம் குரலில் கசியும்.  அந்த வகை அது. கிட்டத்தட்ட ஒரு கொஞ்சல், கையைத் தூக்கிப் போடுகிற் குழந்தையை வாங்குவதற்குக் கை இரண்டையும் விரித்துக் கொண்டே குனியும் போது நம்முடைய முகத்திலேயே ஒரு குழந்தைமை வந்திருக்குமே அது எல்லாம் சேர்ந்த ஒன்று சங்கரியம்மாவிடம்.

ஒரு கன்றுக்குட்டியிடம், ஒரு குட்டிப் பூனையிடம், தேங்காய் நாரோடு கீழே விழுந்திருக்கிற அணில் குஞ்சிடம் எல்லாம் எனக்கும் பிரியம் உண்டுதான்.  ஆனால் இப்படிப் ,பெத்த பிள்ளைக்குப்’ பால் கொடுக்கப் போகிற மாதிரி உடனடியாக நான் சாலப் பரிந்துநிற்கிறேனா என்று தெரியவில்லை. எனக்கு அந்தக் காக்கைக்குஞ்சை விட, முதலில் அதைப் பார்த்தவுடன் வேறு மனுஷியாகிவிட்ட சங்கரியம்மாவைப் பிடித்திருந்தது.
உயிர்களிடத்தில் அன்பு வேணும் என்ற வரியை வாசித்திருக்காமலே
அப்படி இருக்கமுடிகிறது இவர்களுக்கு.

நான் கால்மடக்கி அப்படியே உட்கார்ந்தேன்.  அப்படி உட்கார்கிற நேரத்திலேயே என் பாஷை மாறிவிட்டிருந்தது. ”யாரு வந்திருக்கா?” என்ற கேள்வியையே நான் வேறு விதமாகக் கேட்டபடி என் உரையாடலைத் துவங்கினேன், ‘’ இங்க வந்து உட்கார்ந்துகிட்டு என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க/”. அது பதிலா சொல்லப் போகிறது. இன்னும் அதிகமாக  சுவரோடு ஒதுங்கியது.  அது தவறிவிழுந்த கூடு இருக்கும் புங்கைமரக் கிளைக்கு ஒரு சுரங்கப்பாதை அந்தச் சுவரில் இருந்து துவங்குவது போல தன்னுடைய அலகால் மர்மச் சாவிகளிட்டுத் திறந்துவிடும் முயற்சியில் இருந்தது.

“உங்க அம்மைய எங்கே/ இப்படி உன்னை இங்க விட்டுட்டு அவ எங்க ஊர் சுத்தப் போயிருக்கா/” என்று நான் மேற்கொண்டு பேசினேன். ஒரே ஒரு பாத்திரத்திற்கு எழுதப்பட்ட நாடக வசனங்களை மாறிமாறி நாங்கள் இரண்டு பேரும்  பேசிக் கொள்கிறோமோ என்று அந்தக் காக்கைக் குஞ்சிற்கே பட்டிருக்கும், “வரட்டும் பார்த்துக்கிடுதேன்” என சங்கரியம்மா
தொடர்ந்த போது.

நன்றாக வளர்ந்த குஞ்சுதான். பறக்கச் சொல்லிக் கொடுக்கும் போது சற்று அவசரமாக முதல் கியருக்குப் பதிலாக முன்றாவது கியரைப் போட்டிருக்க வேண்டும். விபத்து பெரிதாக ஒன்றுமில்லை. அடிகிடி கிடையாது. விழுந்த வேகத்தில் உண்டான அதிர்ச்சி இருந்தது பார்வையில்.     என்னுடைய நெருக்கம் கூடினதும் படபடவென்று சிறகை அடித்தது. ஒரு பக்கச் சிறகு
சுவரிலும் இன்னொரு பக்கச் சிறகு தரையிலும் சரசரத்தன. அந்தச் சத்தம் ஒரு பறவையின் சிறகுகளுக்குச் சம்பந்தம் இல்லாததாக இருந்தது. காற்றுடனும் வெளியுடனுமே அடிக்கப்பட்ட சிறகுகளுக்குள் காலம் காலமாகச் சேகரிக்கப்பட்ட நெடிய மௌனம் தரையில் என் முன் உடைந்து சிதறுவதை உணர முடிந்தது.  ஒரு மரணம், மீசை தடவும் ஒரு கருப்புப் பூனையின் வடிவில் இன்னும் சற்று நேரத்தில் எட்டிப் பார்க்கும்
எனில் என்ன செய்வது/ அதிகாலைகளில் சிதறிக் கிடக்கிற ஏழுசகோதரிக் குருவிச் சிறகுகளை வேறொரு நிறத்தில் பார்க்க நேரும் நாளைக் காலை வெளிச்சத்தை எப்படித் தவிர்ப்பது.

எதையும் தவிர்க்கும் உத்தேசம் இல்லாமல், அனைத்தும் நிகழத் தயாராக தன் நிரலை அந்தக் குஞ்சு வைத்திருந்தது. ஒரு முறை கூட இதுவரை பார்த்திராத வானத்தைப் பற்றிய எந்த இழப்புணர்வும் இன்றி அது மிகுந்த அமைதியுடன் இருந்தது.  பதற்றம் எல்லாம் எங்களுக்கு மட்டுமே.  இதுவரை இருந்த மரம், கிளை, இலை, வெயில், வாயில் ஊட்டப்பட்ட உணவு எதன் ஞாபகத்தையும் முற்றிலும் துறந்துவிட்ட பரிபக்குவம் அதன் கண்களின் வட்டத்தில் மினுங்கியது. ஒரு கருப்பு புத்தர் அது என்று சொன்னால் தப்பில்லை.

‘’அதைத் தூக்கி மரத்தில விட்டுற முடியுமாண்ணு பாப்பமே’’  - இப்படிச் சொன்னால், நீங்கள் கொஞ்சம் பாருங்களேன் என்றுதானே அர்த்தம்.  பறவைகளை வசக்குவது எப்படி? என்று இதுவரை நான் எந்தப் புத்தகமும் வாசித்தவன் இல்லை.  வழக்கமாக இருவாட்சிப் பூ பறிப்பதற்கு ஒரு சிறு துறட்டி உண்டு. அதை எடுத்துக்கொண்டு வந்தேன்.  நல்ல திடகாத்திரமான கூரிய அலகு, மற்றும் முழு வளர்ச்சியடைந்த, அதிகபட்ச  எண்  காலணிகள் தேவைப்படும் அளவுக்கு வளர்ந்த நகங்கள் இருந்ததால், ஒரு குச்சியின் உதவியே போதுமானதாக இருக்கும் என நம்பி, அதை கிளைப்பெயர்ச்சி செய்ய உட்கார்ந்தேன்.

வீட்டுக்கணக்குப் போடாமல் வந்து ஜான்ஸன் ஸார்வா பிரம்புக்குக்குக் கையைப் பயந்து பயந்து தணிவாக நீட்டுகிற ஐயன்னா முத்தையாவாக ஆகியிருந்தது அந்தக் குஞ்சு. நான் அந்தக் குச்சியை நீட்ட நீட்ட அது பயந்து நகர்கிறது.  நந்தியாவட்டை மூட்டுப் பக்கம் விழுந்து சுவர் ஓரமாகவே தத்தித் தத்திப் போகிறது. ஒரு கச்சிதமான காக்கைத் தத்தல் அதற்கு வந்துவிட்டிருப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். நெருக்கடிகளின் மத்தியிலான உடல்மொழி நம்மையறியாமல் நம்மை நிரூபிக்க அல்லது அடையாளம் காட்டிவிடத்தானே செய்கின்றன.  சரி. கிட்டத்தட்ட அது புங்கை மரம் பக்கம் போய் விட்டது ஒரு ஊடு சுவர். கொஞ்சம் முயற்சி செய்து எவ்விப் பறந்தால் அதன் கிளையை அது அடைந்துவிடவும் கூடும். அதனுடைய நகங்கள் பறண்டின கிளையின் பச்சை வாசம், அல்லது அதன்
பெற்றோரின் எச்சத்தின் வாடை அல்லது கூட்டில் ஊட்டப்பட்டபோது பிளந்த வாயிலிருந்து சிந்திய ஒரு உணவின் பூர்வ ருசி ஏதேனும் அந்தச் சிறகுகளுக்கு முதல் பறத்தலை அருளலாம் என்று நான் நம்பினேன். என் பயம் பூனைசார்ந்தது மட்டுமே.

காக்கைக் குஞ்சைத் தவிரவும் வீட்டில் அன்றாட அட்டவணைகள் இருக்கும் தானே.  சாப்பாட்டுக் கடையை முடித்துவிட்டால் அப்புறம் இருக்கவே இருக்கிறது செல்லக் குரல்களுக்கான தேடல்கள், சுகன்யா, ப்ரகதி, கௌதம், யாழினி பாடல்கள். அடுப்படியில் இருந்து ஒரு குரல் வருகிறது. இதுவும் செல்லக் குரல்தான். சங்கரியம்மாவுடையது. “இங்க பாருங்களேன். இது எங்க வந்து உக்காந்திருக்குண்ணு”.

காக்கைக் குஞ்சு குளிர்சாதனப் பெட்டி இருக்கும் இடத்தில், ஒரு பச்சை ப்ளாஸ்டிக் கூடையில் இருந்த பெல்லாரி வெங்காயக் குவியலின் மேல் அமர்ந்திருந்தது. அடுக்களை சன்னல் வழியாக எப்படிப் பறந்து எப்படி உள்ளே வந்தது எனத் தெரியவில்லை. தவறான கைகாட்டிகளை அது நம்பியிருக்கவேண்டும். நேர் எதிர்த்திசையில் முயன்றிருந்தால் அதனுடைய கூட்டையே அடைந்திருக்கலாம் இதற்குள்.

‘அரிசி உப்புமா சாப்பிடுமா”  இல்லை, அந்த தவிட்டு பிஸ்கட்டைப் புட்டுப் போடுவமா/”  சங்கரியம்மா கவலை சங்கரியம்மாவுக்கு. சுபாஷ் அண்ணன்தான் சொல்வார், ‘ ஏ, பரம வைரிக்குத்தான் டே எங்க வீட்டில அரிசி உப்புமா கிண்டி, சாப்பிடச் சொல்லுவோம். நீ என்னைச் சாப்பிடச் சொல்லுத, பாவி” என்று.  எனக்கும் அந்தக் காக்கைக் குஞ்சுக்கும் எந்தப் பகையும் இல்லை என்பதால் உப்புமாவுக்குப் பதிலாக பிஸ்கட்டைத் துண்டு துண்டாகப் போட்டேன்.  மிகுந்த சுதேசி உணர்வு மேலிட்டு அது அதைப் பகிஷ்கரித்துவிட்டது. “ஒரு கிண்ணியில தண்ணியையாவது ஊத்தி முன்னால வைங்க. எப்ப குடிச்சுதோ. அடிக்கித வெயிலுக்கு நமக்கே என்னமோ மாதிரி வருது. அதுக்கு தண்ணி தவிக்குன்னு வாய்விட்டுச் சொல்லவா தெரியும்”. அவள் முகத்தைப் பார்த்த படி நான் சிறு கிண்ணம் ஒன்றில் தண்ணீரை ஊற்றி அதன் முன் வைக்கிறேன்.   வைத்த மறு நொடியில் அது அலகை முக்கிவிட்டு, முகத்தை உயர்த்தி அந்தச் சொட்டை உள்ளே இறக்குகிறது. நான் என் வாழ்வில் மிகச் சமீபத்தில் பார்த்த, உணர்ந்த ஒரு அற்புதமான காட்சியும் தருணமுமாக அது என்றுமே இருக்கும். ஒரு தனிமையும் பதற்றமும் அன்னியமுமான நீண்ட பொழுதின் பின் ஒரு பறவை, அலகு நனைத்து தன் முதல் சொட்டு நீரை அருந்த, தன் கழுத்தை உயர்த்திய அந்தப் பொழுது எவ்வளவு மகத்தானது

என்னால் இன்று, அல்லது இனிவரும் நாள் ஒன்றில் நிச்சயம் ஒரு சாம்பல் காக்கையை வரைய முடியும். அந்தக் காக்கை, இதோ இந்தக் காக்கைக் குஞ்சைப் போல, தன்னுடைய கழுத்தை உயர்த்தி அதன் முதல் சொட்டு நீரை அருந்துவது போலத்தான் இருக்கும்

%
3 comments:

 1. இழையோடும் நகைச்சுவையையும் தாண்டி கண்கள் கசிந்து வழிகிறது. காக்கைக் குஞ்சின் தவிப்பா அதை கரை சேர்க்க உங்களின் தவிப்பா ஏதோ ஒன்று இதை நடத்துகிறது.

  ReplyDelete
 2. நான் சிறு கிண்ணம் ஒன்றில் தண்ணீரை ஊற்றி அதன் முன் வைக்கிறேன். வைத்த மறு நொடியில் அது அலகை முக்கிவிட்டு, முகத்தை உயர்த்தி அந்தச் சொட்டை உள்ளே இறக்குகிறது. நான் என் வாழ்வில் மிகச் சமீபத்தில் பார்த்த, உணர்ந்த ஒரு அற்புதமான காட்சியும் தருணமுமாக அது என்றுமே இருக்கும். ஒரு தனிமையும் பதற்றமும் அன்னியமுமான நீண்ட பொழுதின் பின் ஒரு பறவை, அலகு நனைத்து தன் முதல் சொட்டு நீரை அருந்த, தன் கழுத்தை உயர்த்திய அந்தப் பொழுது எவ்வளவு மகத்தானது

  ReplyDelete
 3. If I can stop one heart from breaking,
  I shall not live in vain;
  If I can ease one life the aching,
  Or cool one pain,
  Or help one fainting robin
  Unto his nest again,
  I shall not live in vain.
  Emily Dickinson

  இந்த கவிதையின் நிழற் பட காட்சியாக இருக்கிறது உங்கள் அனுபவம் ...

  ReplyDelete