Friday 31 January 2014

ஐடியல் பூ













நிறைய மஞ்சள் பூ பூக்கிற, உதிர்க்கிற மரம் இது.
பெயர் தெரியவில்லை. 

நான் படித்த ஷாஃப்டெர் உயர்நிலைப் பள்ளியில்தான்  முதலில், இன்னமும் கூட அதன் தாவர இயல் பெயரோ, வழங்கு பெயரோ தெரியாத, இந்த மரத்தைப் பார்த்தேன். அது 62ம் வருட மார்ச், ஏப்ரில் ஆக இருக்கலாம். ஸ்டடி ஹாலிடேஸ் நாட்கள் அவை. லாலா மணி என்று நாங்கள் பின்னால் அழைத்த கே.எஸ்.மணி (அப்பா பெயர் கேசவ ராம் சிங். இந்தப் பெயரை வைத்திருக்கிற இரண்டாவது மனிதரை நான் இன்னும் சந்திக்கவில்லை.). அவன் தான், வலது சிறகில் பேஸ் கட் பால் கிரவுண்ட்பக்கம் நின்ற முதல் மரமாக பூத்துச் சொரிந்த இதன் கீழ் அமர்ந்து, கொட்டிக் கிடந்த மஞ்சள் பூக்களால் தரையில். ‘GOD IS LOVE’  எழுதிக்கொண்டு இருந்தான். சின்னு முதல் சின்னு வரை கதை இவனுடையதுதான். இப்போது ஒருவேளை மேலே எங்கோ இருந்து கொண்டு, ‘LOVE IS GOD’  என்று எழுதிக்கொண்டு  இருக்கலாம்.

இது பிரிட்டிஷ் வம்சாவளியுடைய மரமாக இருக்கலாம். பின்னால் எத்தனையோ பள்ளிக்கூட, கல்லூரி, அரசு அலுவலக வளாகங்களில் இதன் பூ வாசத்தை உணர்ந்திருக்கிறேன். லேசில் வர்ணிக்க முடியாத தனித்த வாசம். இளவேனில் காலத்தில் பூக்கத் துவங்கும். கோடை மழை பெய்கையில், பெய்கையில் அல்ல, பெய்த பிறகு இந்த மரத்தடியில் அமர்ந்து அந்த வினோத வாசத்தை நுகரவேண்டும். அந்த மரத்தடி இருப்பை முற்றிலும் மனோகரமாக்கி விட வல்லது அது.

ஆறு அல்லது ஏழு வருடங்களுக்கு முன், கோவை நரசிம்ம நாயக்கன் பாளையம் ‘வைகறை நஞ்சப்பன் வீட்டின் முன், அவருடைய ‘ஐடியல் பள்ளிவளாகத்தில் முளைத்துக் கிடந்த நாற்றுகளில் ஒன்றை ஜான்ஸியும் புவனாம்மாவும் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார்கள். இங்கே எங்கள் தலை வாசலில், முன்பு இருந்த அரளிச் செடி மூட்டுக்கும் பி.எஸ்.என். எல் கம்பத்திற்கும் அடுத்து நட்டு வைத்தோம். வளர்ந்தது, வளர்ந்தது,வளர்ந்தது. என்னைப் போல நெடுநெடுவென்ற வளர்த்தி. வீட்டு மனிதர்கள் ஜாடை அவர்கள் வளர்க்கும் தாவரங்களுக்கும் வந்து விடும் போல.

ஒவ்வொரு இளவேனில் காலம் நெருங்கும் போதும் எதிர்பார்ப்பேன். அந்த கே.எஸ்.மணி அதனடியில் உட்கார்ந்து ‘அன்பே கடவுள்எழுதும் காட்சியை நான் நிறைய முறை வரைந்து பார்த்திருக்கிறேன். அது மெய்ப்படவே இல்லை. தட்டுத் தட்டாக, அடர் இலைகளுடன், பூத்தும் உதிர்க்கும் நிற்கிற அந்த முதல் மரத்தின் காட்சி நினைவிலிருந்து வெளிறிக்கொண்டே போனது. எதிர்பார்த்தல் தானாகவே நின்றுவிட்ட்து. நமக்குத் தெரிந்தது தான் ‘பூப் பூத்தல் அதன் இஷ்டம், போய்ப் பார்த்தல் உன் இஷ்டம்என்பது.

கடந்த மூன்று வாரங்கள் ஊரில் இல்லை. வந்த அன்று தொட்டிச் செடிகள் வாடாமல் இருக்கிறதா என்று பார்த்தோம். முன்னால், பக்க வாட்டில் இருக்கிற மரங்களை ஏறிடவில்லை. மரங்களை நாம் நம்பலாம். அவை ஓரளவு வளர்ந்த பின் எந்தப் புகாரும் செய்யாது. அதன் நீரை அது தேடிக் கொள்ளும். அதன் ஒளிச்சேர்க்கையை அது நிகழ்த்திக் கொள்ளும்.

மறுநாள் காலை வாசல் தெளித்துக் கோலம் இடுகிற சங்கரியம்மாவிடம் இருந்து ஒரு குரல். ‘இங்க வந்து பாருங்கஎன்ற அந்தக் குரல் மஞ்சளாக இருந்தது. வெளியே போய்ப் பார்த்தால், உச்சிக் கிளையில் அந்தக் குரல் பறந்து போய் அமர்ந்திருந்தது.. இரண்டு மூன்று கொத்துகளாக பூக்கள். ஒரு ‘ஏரோப்ளேன்பார்க்கிற போது, நிலா பார்க்கிற போது, இப்படி, தான் வளர்த்த மரம் அதன் முதல் வசந்தத்தில் இருக்கிறதை அண்ணாந்து பார்க்கிற போது எல்லாம் நாம் எத்தனை அழகாகிவிடுகிறோம். நாங்கள் அந்தக் கணம் எங்களை விட அழகாக இருந்திருக்க வேண்டும்.

கீழே பூ உதிர்ந்திருக்கிறதா என்று பார்த்தேன். பூத்திருக்கிறதா என்று பார்ப்பது போய், உதிர்ந்திருக்கிறதா என்று பார்க்கிற நிலை எனக்கு. இன்னும் பூ உதிரத் துவங்கவில்லை. உதிர்ந்திருந்தால் பொறுக்கி எடுத்திருப்பேன். கை நிறைய ஏந்தி ‘வைகறைநஞ்சப்பனுக்கு சமர்ப்பித்திருப்பேன். அவர் வீட்டு முன் இருந்து எடுத்துவந்த நாற்று மரமாகிப் பூத்த முதல் பூக்களால் அவருக்கு மலரஞ்சலி செய்திருப்போம்.

‘ஜான்ஸி’, ‘புவனாம்மாஉங்களை நினைத்துக்கொள்கிறோம்.

இந்த மரத்தின் பெயர் இப்போதும் எனக்குத் தெரியாது. ஆனால் இந்தப் பூவின் பெயர்  ‘வைகறை’  நஞ்சப்பன்.

‘ஐடியல்என்று இந்தப் பூவுக்குப் பெயர் இட்டிருக்கிறோம் என்று சொன்னால், நஞ்சப்பனுக்கு இன்னும் சந்தோஷமாக இருக்கும்.

%



Saturday 4 January 2014

பிரேம பாசம்

பிரேம பாசம் – ஒரு பழைய திரைப்படம். – வண்ணதாசன்.

 download (4)

வராந்தா ரொம்ப ஒடுக்கம். ஒரு சைக்கிள் நிறுத்தக்கூட இடம் பற்றாது. அங்கே கிடந்த நாற்காலியில்தான் கணேசன் உட்கார்ந்து இருந்தான்.
அந்த மர நாற்காலியை அவனுக்குப் பிடித்திருந்தது. ஓரமாகக் கட்டியிருந்த கொடியில் தொங்கின துணிகளில் இருந்து புழுங்கல் வாடை வருவது கூடக் கணேசனுக்கு அவனுடைய ரெங்கசமுத்திரம் அத்தை வீட்டில் இருக்கிற உணர்வை உண்டாக்கியது. இவன் இங்கே உட்கார்ந்திருக்கிறான் என்று மகாலிங்கம் அவளிடம் சொல்லியிருக்கவேண்டும். பிரேமா சிரித்துக்கொண்டே வந்து, ‘ என்ன இங்கேயே உட்கார்ந்துட்டீங்க. உள்ளே வந்தால் என்ன?’ என்றபடி கொடியில் கிடந்த அவளுடைய உள்பாவாடை போன்றவைகளை உருவிக்கொண்டு போனாள். அவள் போன பிறகு கொடி அதிர்ந்து அடங்குகிற அசைவில் கீழே விழுந்த துண்டை கணேசன் முகர்ந்து பார்த்துவிட்டுக் கொடியில் போட்டான். சுருக்கு இல்லாமல் அதை விரிக்கும் போது திரும்பத் திரும்ப துண்டின் கீழ்ப்பகுதியில் இருந்த குஞ்சங்கள் அவன் முகத்தில் பட்டுக்கொண்டே இருந்தன.
அவள் உள்ளே வரச் சொன்னாலும் கணேசன் ஒருபோதும் உள்ளே  போவதில்லை. பிரேமாவும் மகாலிங்கமும் உள்ளே பேசிக்கொண்டு இருப்பது கேட்கும். மகாலிங்கம் தன்னுடைய சொந்த வீட்டில் கூட இப்படித் தாராளமாகவும் உரக்கப் பேசிக்கொண்டும் இருக்கமாட்டான். சொல்லப்  போனால் வீட்டுக்குள் நுழையும் போதே கடுகடுவென்று ஆகிவிட்ட முகத்துடன்தான் சாப்பாட்டுப் பையை மேஜையில் வைப்பான். ‘வரும்போது  கடைச் சாமான் வாங்கிட்டு வரச் சொல்லி லிஸ்ட் கொடுத்தேனே. வாங்கிட்டு வரலையா?’ என்று மெதுவாகத்தான் சரஸ்வதி கேட்பாள். அவள் அப்படிக் கேட்பதும், ‘வாங்க அண்ணாச்சி. மதினி பிள்ளைகள் எல்லாரும் நல்லா இருக்காங்களா? ‘ என்று கணேசனைக் கேட்பதும் ஒன்று போலத்தான் இருக்கும். ‘வந்து நுழைகிறதுக்கு உள்ளேயே உன் புராணத்தை ஆரம்பிச்சுட்டியா?’ என்று மகாலிங்கம் தேவையில்லாமல் சத்தம் போடுவான். ஆனால் இங்கே ஆளே மாறிப் போய்விடுகிறான். ‘இந்தப் பாட்டைக் கேட்டியா பிரேமா. நல்லா இருக்குல்லா? என்று அதன் முதல் இரண்டு அடியைப் பாடியபடியே போய் அடுப்படியில் நின்று பேசுவது கேட்கிறது. சமயத்தில் தேங்காய் துருவிக்கொடுத்துக்கொண்டே அவன் பேசுகிறானோ என்பது போலக் கூடக் கணேசனுக்குத் தோன்றும்.
கண் கண்ணாக வராந்தா பக்கவாட்டில் பதித்துக் கட்டியிருந்த சிமெண்ட் ஜாலி வழியாகக் கையை விட்டு கணேசன் நாரத்தை இலையைப்  பறித்துக் கசக்கிக்கொண்டு இருக்கையில், ‘கணேசா, பைக் சாவியைக் கொடு. வெளியே போயிட்டு வந்திருதோம்’ என்று மகாலிங்கம் கேட்கும் போது பிரேமா ஒரு பிக் ஷாப்பர் பையைக் கையில் வைத்தபடி கணேசனைப் பார்த்துச் சிரித்தாள். ‘அம்மா நல்லா தூங்குதா’ என்றாள். ‘ஒன்றும் தொந்தரவு இராது. கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்பதைச் சொல்லவில்லை. அதுதான் அர்த்தம் அதற்கு.
வெளிவாசல் நிலையைப் பிடித்து, ஓரமாகப் போட்டிருந்த செருப்புக்குள் அனிச்சையாகக் காலை நுழைத்தபடியே அவள் மகாலிங்கத்திடம் பேசுகிற  தோற்றத்தைக் கணேசனுக்கு ரொம்பப் பிடித்திருந்தது. பைக் உதைபட்டு ஸ்டார்ட் ஆகும் சத்தத்தைக் கேட்டதும் கணேசனுக்கு உடம்புக்குள் சிலீர் என்று ஆயிற்று. மகாலிங்கமும் பிரேமாவும் பைக்கில் போவதைப் பார்க்கவேண்டும் என்று தோன்றியது. இடது கைவிரல்களுக்குள் மொடுக்கென்று ஒடிந்து கசங்கி உருண்டையாகி இருந்த நாரத்தை இலையை அவன் பார்த்துக்கொண்டே இருந்தான். அதைத் தூரப் போட அவனுக்கு மனசு வரவில்லை.
தெருவடி வீடுதான் இது. கணேசன் இப்படி உட்கார்ந்திருப்பதை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். போன தடவையும் இதே இடம்தான். ஆனால் இந்த நாற்காலி உட்பக்கம்  பார்க்கத் திருப்பிப் போடப்பட்டு இருந்தது. ‘பிரேமாக்கா இல்லையா?’ என்று யாரோ கேட்டார்கள். கணேசன் திரும்பிப் பார்ப்பதற்குள் அந்தப் பாப்பா, முதல் கட்டு நிலைப்பக்கம் இருந்த ஆணியில் ஒரு சாவி வளையத்தைத் தொங்கப் போட்டுவிட்டு, ‘ அக்கா வந்தால், சாவி வச்சிருக்கேன்னு சொல்லீருங்க. தெரியும்’ என்று போய்விட்டது. நிற்கக் கூட இல்லை. வழக்கமாக தபால்காரர் வாசல் கதவு அழிக்கம்பிகளுக்குள் வளைவாகச் செருகிவைத்துவிட்டுப் போவார் போல. இவன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும், அப்படிச் செருகியதை எடுத்து ‘இந்தாங்க சார்’ என்று  ஒரு தடவை கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார். எதற்கு இப்படி மகாலிங்கத்தைத் தேவையே இல்லாமல் தன்னுடைய பைக்கில் உட்கார்த்தி வைத்துக்கொண்டு தானும் இங்கே வந்துகொண்டு இருக்கிறோம் என்று கணேசனுக்கு மனதுக்குள் அரிச்சலாக இருந்தது.
மகாலிங்கம் பிரேமாவுக்காகத்தான் கணேசனிடம் அடிக்கடி கைமாற்று வாங்குகிறான் என்று தெரியும். ஒரு தடவை ஐநூறு அவசரமாகவேண்டும் என்றும், பிரேமா ஆபீசில் வந்து வாங்கிக்கொள்கிறேன் என்று சொல்லியிருப்பதாகவும், ஆயிரம் ரூபாயாகக் கிடைத்தால் கூட நல்லது என்றும் கணேசனிடம் கெஞ்சிக்கொண்டு இருந்தான். சொல்லிவைத்தது போல, மதியம் சாப்பாட்டு வேளையில் வந்து, ‘அவள் வந்து போஸ்ட் ஆபீஸ் பக்கம் வெயிட் பண்ணுதா. வா. மூணு பேரும் வசந்தா கேஃப்ல சாப்பிட்டுக்கிடலாம்’ என்று மகாலிங்கம் கூப்பிட்டபோது கணேசனுக்கு பிரேமாவைப் பார்க்கவேண்டும் என்று தோன்றிவிட்டது.
கணேசன், கணேசனுக்கு அடுத்து  மகாலிங்கம், அவனுக்கு எதிரே  பிரேமா என்று உட்கார்ந்துதான்  சாப்பிட்டார்கள். வேறு எப்படியெல்லாமோ பிரேமா இருப்பாள் என்று  கணேசன் நினைத்திருந்தான். அதற்கு நேர் மாறாக அவள் இருந்தாள். ஒல்லியான உடலில் மிகச் சாதரணமாகத்தான் ஒரு புடவையைக் கட்டியிருந்தாள்.  பார்க்கக் கூடாது என்று நினைத்தாலும் , மகாலிங்கமும் அவளும் சிரித்துச் சிரித்துப் பேசியபடியே சாப்பிட்டபோது கணேசன் அவளையே பார்க்கும்படி ஆயிற்று.
ஒரு அப்பளத்தைக் கடித்தபடியே, ‘உங்களுக்கு வேறு ஏதாவது கொண்டுவரச் சொல்லணுமா சார்?’ என்று நேரடியாக அவள் கேட்டதும் கூச்சமாகிவிட்டது. கட்டின பெண்டாட்டியைப் போல, எச்சில் கையை லேசாகக் குவித்து மடக்கியபடி, அவளைக் கூட்டிக்கொண்டு மகாலிங்கம் கை கழுவப் போவதையே பார்த்துக்கொண்டு இருந்தான்.
சாப்பாட்டுக்குப் பணத்தைத் தான் கொடுக்கிறதாக முதலில்  கணேசனுக்கு யோசனையே இல்லை. பீடா, பழம் எல்லாம் இருக்கும்  ஒரு தட்டில் பரிமாறுகிறவர்  பில்லை மேஜையில் வைத்ததும்  மகாலிங்கம் கையை விலக்கிவிட்டு. ‘நான் கொடுத்துருதேன்’ என்று கணேசன் பர்சை எடுத்தான். மகாலிங்கம் ஒரு பாவனை போல அதைத் தடுத்த சமயம், ’இருக்கட்டும் மகா’ என்று சிரித்தான். மகாலிங்கத்தை இதுவரை ‘மகா’ என்று எல்லாம் அவன் கூப்பிட்டதே இல்லை. பிரேமா அவனை அப்படித்தான் கூப்பிடுவாள் என்று கணேசனுக்குத் தோன்றியது. அடக்கமுடியாத ஒரு பெரும் வேட்கையுடன் கணேசன் பிரேமாவைப் பார்த்த அந்தச் சில நொடிகளில், அவளை அவன் முழுமையாக அறிந்துவிட்டது போலவும், மகாலிங்கம் இத்தனை தூரம் ஆட்படுவதற்கு பிரேமாவிடம் ஏதோ இருப்பதாகவும் அவன் முடிவுக்கு வந்துவிட்டான்.
‘அனுப்பிவிட்டு வந்திருதேன்’ என்று மகாலிங்கம் புறப்பட்டபோது, பிரேமா ‘போய் வருகிறேன்’ என்று சொல்வது போல சிரித்துக்கொண்டே தலையை அசைத்தாள். இது போன்ற சமயங்களில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று அவளுக்குத் தெரிந்திருப்பதும், மூன்றாவது நபர் யாரேனும் பார்க்க நேர்ந்தால் கணேசனுக்கு எந்த ஒரு அவச் சொல்லும் வந்துவிடாமல், பொது இடத்தில் மிகவும் கவனமாக அவள் நடந்துகொள்வதாகவும் கணேசனுக்குத் தோன்றியது.
சாப்பிடும் போது ஏற்கனவே  போட்டிருந்த பீடா தவிர, ஒரு  சிகரெட்டையும் புகைத்துக்கொண்டே எதிரே திரும்பிவருகிற மகாலிங்கத்தைப் பார்த்ததும் கணேசனுக்குச் சொல்லமுடியாத சந்தோஷம் உண்டாயிற்று. ‘மருதகுளம் வண்டி வந்துது. ஏத்தி விட்டுட்டேன்’ என்று மகாலிங்கம் சொல்லும் போது. ஒன்றுமே சொல்லாமல் பிரேமாவை நினைத்துக்கொண்டே, பாராட்டுவது போல அவன் தோளை கணேசன் தட்டிக் கொடுத்தான். மகாலிங்கம் கடைசி இழுப்பை இழுத்து, சிகரெட்டைக் கீழே போட்டுவிட்டு அவனும் பதிலுக்குச் சிரித்தான். அப்படித் தட்டிக்கொடுத்ததன் மூலம் எல்லாவற்றையும் கணேசன் சொல்லிவிட்டது போலவும், இப்படிச் சிரித்ததன் ஊடாக அப்படிச் சொன்னதை எல்லாம் மகாலிங்கம் புரிந்துகொண்டதாகவும் அது இருந்தது.
இப்படிப் பழசு பூராவும் நினைத்துக்கொண்டு எவ்வளவு நேரம் உட்கார்ந்து இருந்தோம் எனக் கணேசனுக்குத் தெரியவில்லை. அவனுடைய பைக் சத்தம் போலவே கேட்டதும் கணேசன் ஆசுவாசம் அடைந்து , எழுந்து வாசலுக்கு வந்தான். அப்போது கூட, வண்டியை நிறுத்தி இறங்குவதற்குள் பிரேமா ஒருச்சாய்ந்து உட்கார்ந்திருக்கிற விதத்தைப் பார்த்துவிட கணேசன் விரும்பினான். அது அவனுடைய வண்டியின் சத்தம் மாதிரி இருந்ததே தவிர, அவனுடையது இல்லை.
‘இவ்வளவு நேரம் ஆக்குவதா? சீக்கிரம் வரவேண்டாமா?’ என்று மகாலிங்கத்தைச் சத்தம் போடவேண்டும் என்றும், பிரேமா முன்னால் தனக்கு அப்படிச் சத்தம் போடத் தோன்றாது என்றும் சங்கடமாகக் கணேசன் நினைத்துக் கொண்டான். ‘ஸார் தான் பாவம். போர் அடிச்சிருக்கும்’  என்பதை எப்படி மன்னிப்புக் கேட்கிற குரலில், சிரித்துக்கொண்டே சாமர்த்தியமாக பிரேமா சொல்வாள் என்பதைக் கூட கணேசனுக்குக் கற்பனை செய்ய முடிந்தது. சற்று அதிகப்படியாக, அவள் நேரடியாகக் கணேசனிடம் வந்து கையைப் பிடித்துக்கொண்டு, ‘ஸாரி, ஸாரி’ என்று சொல்வதாக நினைத்துக்கொள்ளப் பிடித்திருந்தது.
வாசல் கொண்டியைக் கதவோடு அடித்து, ‘வாட்டர் கேன்’ என்று சத்தம் கொடுத்தவர் தோளில் தண்ணீர் ஜாடி குறுக்குவாட்டில் இருந்தது. சிராய்ப்புகள் கோடு கோடாகத் தெரிகிற பிளாஸ்டிக் சுவருக்குள் வளைவும் புடைப்புமாகத் தண்ணீர் அலம்பியது. அது மகாலிங்கம்தான் என்றும், அந்தக் கண்ணாடிக் குடுவைக்குள் பிரேமாவை அடைத்துத் தோளில் வைத்துக்கொண்டு அவன் நிற்கிறான் என்றும் நினைத்தபடி, கணேசன் கதவுகளை அகலமாக இரண்டு சிறகுகளாகத் திறந்தான்.
வழக்கமாக வருகிறவர் போல. ‘எம்ப்டி கேனை எடுத்துக்கிடுதேன்  சார்’ என்று நேரே வீட்டுக்குள் போனார். தோளில் இருக்கும் தண்ணீர் ஜாடிக்குள் இருக்கிற பிரேமாவின் அழைப்புக்குக் கீழ்ப்படிய நேரிட்டது போல, கணேசன் அந்த வீட்டின் இதுவரை போகாத அடுத்தடுத்த அறைகளுக்குப் போனான். வராந்தாவின்  வெளிச்சம் நீர்த்து சற்று இருட்டாக இருக்கும் இரண்டு சிறு அறைகளில் எந்த அறையில் பிரேமாவின் அம்மா உறங்குகிறாள் என்று அவனுக்குத் தெரியவில்லை.
தண்ணீர் கேனை இறக்கிவைத்து, தலைகீழாக்க் கவிழ்த்திய முதல் நிமிடங்களின் களகளப்பு பிரேமாவின் சிரிப்பு போல  இருக்கிறதா என ஒப்பிட்டு, இல்லை. தான் அறிய அவள் உரக்கச் சிரிப்பதே  இல்லை என்றும் கணேசன் முடிவு செய்தான். அவளைப் பற்றி தான் சரியாக இப்படித் தீர்மானித்துவிடுவதில்  ஒரு திருப்தி உண்டானது அவனுக்கு. வாட்டர் கேன் கொண்டுவந்தவர் காலி தண்ணீர் ஜாடியின் அடிப்பாகத்தில் தொம் தொம் என்று தாளம் இட்டபடி, ஒவ்வொரு அறையின் இருட்டிலிருந்து விலகி வாசல் வெளிச்சத்திற்குப் போவதையே பார்த்த கணேசனுக்கு, விலகிக் கொண்டே போகிறவருடைய தோற்றம், ஒரு புள்ளியில் காணாமல் போனது ஒரு கனவு போல இருந்தது.
குனிந்து குழாயைத் திருகி ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு டம்ளர்கள் தண்ணீர் குடிக்கையில் கொஞ்சம் சிந்தியது. வேண்டும் என்றே மிச்சம் இருந்த தண்ணீரைக்  கணேசன் தன் மேல் சிந்திக்கொண்டான். அது சட்டையின் மேல் பொத்தானை ஒட்டிய திறப்பின் வழியாக உடம்பில் வழிந்து குளிர்கையில் ஒரு முனகல் கேட்டது.
கீழ்க் குரலில் இருந்து  அது கொஞ்சம் கொஞ்சமாகக் கூடி, யாரையோ அழைப்பது போல  இருந்தது. கணேசன் உற்றுக்  கேட்டபோது, அது தெலுங்கில் திருப்பதி வெங்கடாசலபதியை மீண்டும் மீண்டும் கூப்பிடுவது  தெரிந்தது. மிகவும் தீனமாகவும் நெருக்கமாகவும் வருகிற அந்தக் குரலின் திசையை கணேசன் அனுமானித்துக்  கொண்டு , வலது பக்க அறையின்  கதவுப் பக்கம் போய் நின்றான்.
மல மூத்திர வாடையா, பினாயில் வாடையா என்று சொல்ல முடியவில்லை. மிகவும் தொந்தரவுடன் அந்த வாடையைச் சகித்துக்கொண்டு கணேசன் அழுத்தமாகக் கதவுகளை உட்பக்கமாகத் தள்ளினான்.
வெளியே பைக் சத்தம் கேட்டது. வாசல் நடையில் காலை ஊன்றி, மகாலிங்கம் நிறுத்திய பைக்கில் இருந்து பிரேமா இறங்குவதை  கணேசன் பார்த்தான். தனக்குச் சம்பந்தமே இல்லாத யாரோ இருவர் வருவது போல நினைத்துக்கொண்டே திறந்த அறைக்குள் நுழைந்தான்.
அவனுக்குத் தெரிந்த அளவு தெலுங்கில், ‘வந்துவிட்டேன், வந்துவிட்டேன்’ என்று சொல்லியபடி கட்டிலைப் பார்க்கக் குனிந்தான்.
முதல் உத்தேசத்திலேயே, இரண்டு மெலிந்த கைகளையும் அவனால் பற்றிவிட முடிந்தது.

•••