Monday 31 December 2012

நல்வாழ்த்துகள்.எல்லோர்க்கும்  புத்தாண்டு  நல் வாழ்த்துகள்.
இனிய 2013.
நல்லா இருங்க.
%
கல்யாணி.சி.

Sunday 30 December 2012

கூடுவிட்டு...


“கூறல்கதையை 1971ல் எழுதியிருக்கிறேன். நாற்பத்து இரண்டு வருடங்களுக்கு முன் ஜோதிவினாயகம் சிறிது காலம் நடத்திய ‘உள்களும் வெளிகளும் சிற்றிதழில் வெளிவந்தது.
போனவாரம் அந்தக் கதையை மீண்டும் நடப்பில் எழுதுகிற நிலைமை. ‘கூறல்கதையில் தாத்தா இருந்த இடத்தில் எங்கள் அப்பா. கிருஷ்ணன் இருந்த இடத்தில் நான். கிருஷ்ணனுக்கு  கதையில் மட்டுமல்ல நிஜத்திலும் அதே பெயர்தான். நான் அறிந்த முதல்முதல் சவரத் தொழிலாளி. அவருக்குத் தெரிந்த வாழ்வும், அவர் பேசிய நுண் அரசியலும் இன்றுவரைக்கும் எனக்குப்  பிடிபடாதவை. அந்தக் கதையின் இன்னொரு முக்கிய பாத்திரமான வெயிலை, மார்கழிப் பனி இடம் பெயர்த்திருந்தது. வெயிலின் இடத்தில் பனி இருந்ததே தவிர, வெயிலின் காரியத்தை ஒருபோதும் பனியால் செய்யமுடியாது.
அப்பாவுக்கு சவரம் செய்துவிடுவது இது முதல் முறையல்ல.அவருடைய மிக மோசமான இருதயவலிக்குப் பிந்திய தீவிர சிகிச்சையில், கோடம்பாக்கம் (பவர்ஹவுஸ் ஸ்டாப் என்பது 92ம் வருடத்திய அடையாளம். இப்போது ஏதாவது மால் அல்லது பெருவணிக வளாகங்கள் அந்த அடையாளத்தைப் பிடுங்கியிருக்கும்.) ‘பெஸ்ட் ஹாஸ்பிடலில் இருந்த சமயமே, அவருடைய இந்த, மற்றும் குளியலறை, கழிவறைப் பொறுப்புகளை ஏற்றிருக்கிறேன். அப்போது அப்பாவுக்கும் சற்று வயது குறைவு. இவ்வளவு முதுமையில்லை. பொய்ப் பற்கள் கிடையாது. கன்ன எலும்போடு தோல் ஒட்டிக்கொள்ளாது. கேட்புத் திறன் பழுதில்லை. எழுபதை நெருங்கும் வயதுக்கும் தொண்ணூறை நெருங்கும் வயதுக்கும் வெவ்வேறு வாடைகளை திரேகம் வைத்திருக்கிறது.
எனக்கும் அப்போது நரைத்திருக்கவில்லை. பிந்திய நாற்பதுகளில் ஒருவன் அடைகிற தற்காலிக நிறைவும் நிதானமும் என்னிடம் இருந்தன.  நான் வெற்றிகரமான என்பதைவிட மனோகரமான என்னுடைய பருவத்தில் இருந்தேன். அந்த தினங்களில் நான் அப்பாவுக்குச் செய்த சவரம் மிக நேர்த்தியான ஒன்றாக இருந்த்து. ‘கூறல்கதையில் வரும் கிருஷ்ணனின் தொழில் சுத்தத்திற்கு என்னுடையது ஒன்றும் அப்போது குறைந்ததல்ல. இப்போது அப்படி எந்தச் சவாலையும் விட என் விரல்கள் தயாராக இல்லை. இன்றைய அன்றாடமும் அப்படி எந்த உத்தரவாதங்களையும் தந்து விடாது.  ஆனால் மனம் முன்னை விடக் கனிந்திருக்கிறது. அப்பாவுக்கு மட்டுமல்ல, வேறு எந்த மூன்றாவது முதியவருக்கும், அல்லது ஒரு சிகிச்சைப் படுக்கையில் இருக்கிறவருக்கும் அதே ஒருமையுடன் இந்த உதவிகளைச் செய்யத் தயாராக இருக்கிறது.
அப்பாவுக்கு நோய் ஒன்றும் இல்லை. இந்தப் பத்தாம் தேதி இரவு, தூக்கத்திற்கு இடையில் எழுந்திருந்திருக்கிறார். எண்பத்தெட்டு வயதில் இரண்டு தடவைகளாவது அப்படியான அவசியம் இருக்குமே.  வழக்கம் போல எழுந்து, வழக்கமான இடத்திற்குத்தான் போயிருக்கிறார். முதுமை பகலிலும் இரவிலும் அதற்குத் தோதுவான இடத்தை அதுவாகவே தேர்ந்து கொடுத்துவிடுகிறது. மீறமுடிவதில்லை.  தலை சுற்றியிருக்கிறது. பிடித்திருந்த டார்ச் லைட்டோடு விழுந்துவிட்டார். கையை ஊன்றியதில், வலது மேற்கை எலும்பு, தோள்ப்  பட்டை மூட்டோடு சேரும் இடத்தில் உடைந்துவிட்ட்து. நுட்பமான இடம். முறிவும் கூடுதல். அசையாமல் இருக்க, கட்டுப் போட்டிருக்கிறார்கள். இப்போது மாவுக்கட்டு எல்லாம் கிடையாது. ஒரு ஆயத்தத் தொட்டில். மணிக் கட்டை, மேற்கையை, கீழ் நெஞ்சைச் சுற்றி அசையாமல் பிடித்துக்கொண்டு, வெல்க்ரோ முணுமுணுக்கிறது. எல்லாம் இடது கையால்தான். சாப்பாடு ஒரு கரண்டியின் உதவியுடன்.
அப்பா தினசரி முகம் திருத்துகிறவர். அவரை சவரம் செய்யாத இரண்டாவது நாள் முகத்துடன் பார்த்த்து இல்லை. அம்மா இறந்த சூழ்நிலையில் கூட. இப்போது பத்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட்து. முடிவெட்டிக்கொள்கிற தவணையும் தாண்டி அதிகவாரங்கள் இருக்கும். பிடரியில் முடி அப்படி மடங்கிக் கிடப்பது எனக்குப் பிடித்திருந்த்து. ஒரு, நெடுந்தூரம் பயணித்த, ஓவியனின் களையை அப்பாவுக்கு அது தந்திருந்தது. அந்த பத்து நாள் தாடி அப்படியில்லை. நோயாளித் தோற்றத்தைக் கொடுத்து அப்பாவை வேறு மாதிரியாக வரைந்துவருவதை ஒப்புக்கொள்ள முடியவில்லை. நாங்கள் நடமாடாத சமயங்களில் பெரிய நிலைக்கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டு அப்பா தனியாக நிற்கிற வேளைகளை அனேகமாக நாங்கள் எல்லோரும் பார்த்துவிட்டோம்.  கழுத்தை இடவலமாக அசைத்து , தன்னுடைய அதுவரையிலான தாடியைத் துல்லியமாகக் கணக்கெடுத்தபடி இருப்பதைப் பார்த்ததும் அவருக்கு முடியை வெட்டி, சவரம் செய்துவிடுவது எனத் தீர்மானித்தேன். தீர்மானத்தின் முக்கியமான ஷரத்து அதை நானே செய்து விடுவது என்பது.
மறுநாள் அப்பாவிடம் சொன்னேன். அப்பா மறுக்கவில்லை. ‘எதுக்குப் பா?என்று ஒரு பேச்சுக்குக் கூடச் சொல்லவில்லை. ஒரு முடிதிருத்தகத்தில் அமர்வது போல, உடனடியாக்க் கண்ணாடி முன் அமர்ந்துகொண்டார். அவருடைய சவர உபகரணங்கள் இருக்கும், வெள்ளை மூடியிட்ட சிவப்பு டப்பாவை எடுக்கச் சொன்னார். அந்த டப்பாவுக்கு ஒரு வாசம் உண்டு. காத்ரெஜ் சோப்பு வட்டத்தின் வாடை அது. இந்த வாசத்தை, பிறவியில் இருந்தே, அப்பா இருக்கிற எல்லா இடங்களிலும் உணர்ந்திருக்கிறேன். சோப்பைக் குழைக்கிற அந்த பிரஷ் என்னுடன் ஒரு பால்யகால சகி அளவுக்கு சினேகிதம் உடையது.  பூத்த தென்னம்பாளைக் குலையைப் பார்க்கிறபோது கூட ஒரு தடவை அதன் ஞாபகம் வந்திருக்கிறது. அந்த அளவுக்கு அது ஒரு ஆழ்ந்த ஞாபகம்.
அந்த டப்பாவைத் திறந்து வரிசையாக எல்லாவற்றையும் எடுத்துவைத்த நொடியிலிருந்து நான், ‘கிருஷ்ணன்ஆகிவிட்டேன். கிருஷ்ணன் அணியும் வி கழுத்து மல்சட்டையை நான் எப்போது அணிந்துகொண்டேன் என்பது எனக்கே தெரியவில்லை. நான் மட்டும் பார்க்கும் படி என் பெருவிரலிலும் மேல் கைப் பக்கமும் பச்சைகுத்தியிருந்தது. பாரம்பரியமாக என்னுடைய விரல்களுக்கு இடையில் அருவமாக இருந்துவரும் சவரக்கத்திக்கு, அந்த நொடியில் உருவ விமோசனம் கிடைத்துவிட்டிருந்தது. அப்பா உட்கார்ந்திருந்த நாற்காலி அரக்குக் கலரில் இப்போது தயாரிக்கப்படுகிற பிளாஸ்டிக் நாற்காலி. இணைப்புச் சக்கைகள் விலகின ஒரு மர நாற்காலி போல அது இறந்த காலத்தின் பாஷையில் முனகுவது கேட்ட்து. அப்பா நாற்காலி முதுகோடு தலையைச் சாய்த்துக் கொண்டார்,
முதலில் முடிவெட்டிவிடுவதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். முடி வெட்டிக் கொள்வதைவிட, முடி வெட்டிவிடுவது எனக்குப் பிடிக்கும். அம்பா சமுத்திரம் நாட்களில், ராஜுவுக்கு நானே வெட்டிவிட்டிருக்கிறேன். யாருக்கும் அது என்னால், வீட்டுக் கத்திரியால் செய்யப்பட்ட்து எனத் தெரியாத அளவில் இருக்கும். சமீபத்திய சுபாஷ் வரை, நேர்த்தியாக முடிதிருத்திவிடுகிற எல்லோருமே என்னால் கைகுலுக்கப்பட்டவர்கள். ஒரு வாடிக்கையாளனை விட அதிக நெருக்கமுடையது அந்த உறவு. அவர்கள் அறியாமலேயே அவர்களிடமிருந்து ஒரு சீப்பையும் கத்திரியையும் சரியாக உபயோகிப்பதற்கு நான் கற்றிருக்கிறேன்.
அப்பாவுக்கு முடிதிருத்துகையில், நான் என்னை கிருஷ்ணனாக அல்ல, சுபாஷாக நினைத்துக் கொண்டேன். ஒரு ரோமக் கற்றையில் கத்திரியின் இரண்டு விளிம்புகளும் பதிந்து நறுக்கும் போது உண்டாகும் நுட்பமான சத்தத்தை நான் எளிதாக, என் முதல் சில கத்தரிப்பிலேயே அடைந்து இருந்தேன். பக்கவாட்டில், உச்சியில், பின்கழுத்தில் என்று எல்லா இடங்களிலும் பிசிறே இல்லாமல் முடி திருத்திவிட எனக்கு முடிந்தது. முடித்த பின், அப்பாவிடம், ‘நல்லா இருக்குப் பாஎன்றேன். ‘முடிவெட்டுதது படம் போடுத்து மாதிரித்தானே. உனக்குத்தான் நல்லா படம்போடத் தெரியுமேஎன்றார். அப்பா அதை இவ்வளவு அழகாகச் சொன்னது எனக்குப் பிடித்திருந்த்து. நான் சவரத்திற்குத் தயாரானேன்.
வெதுவெதுப்பான  வென்னீரால் அப்பாவின் முகத்தை நனைக்கையில் அவர் கண்கள் மூடியிருந்தன. ஒரு குழந்தை போல இருந்தார். சோப்பைக் கரைத்து முகத்தில் நுரையை அப்பிக் கலைத்துவிடும்போது அப்பாவுக்கு ஒரு சுகமான கிறக்கம் வந்திருந்த்து. நான் புதிய பிளேடை ரேஸரில் பொருத்துகையில், லேசாக அரைக்கண் திறந்து, ‘எதிர் போடவேண்டாம்என்றார்.  அதாவது கீழிருந்து மேல் பக்கம் இழுக்கக் கூடாதாம். வெட்டுக் காயம் படாமல் இங்கே, ‘நேர்போடவே  கை நடுங்குகிறது. இதில் எதிர் எங்கே போட? ‘சரிஎன்றேன். ‘சரி அப்பாஎன்று சொல்லவில்லை.
அவர் அப்பா இல்லை. நான் கல்யாணி இல்லை. அவர் சவரம் செய்து கொள்கிறவர். நான் செய்கிறவன்.  அந்த இடத்தை நாங்கள் இருவருமே அடைந்திருந்தோம். முகத்தைத் திருப்பவேண்டிய இடங்களில் திருப்பி. முகவாயை உயர்த்த வேண்டிய சமயங்களில் உயர்த்தி, உதட்டை மடிக்க வேண்டிய நேரம் வாகாக மடித்துக் கொடுத்தார். நோயாளியின் ஒத்துழைப்பை ஆங்கிலத்தில் பாராட்டி, தோளில் தட்டிக்கொடுக்கிற ஒரு அறுவை மருத்துவர் மனநிலையை நான் எய்தி இருந்தேன். இரண்டாவது முறை சோப்பைக் குழைத்துப் பூசுகையில், அப்பா அதே சாய்ந்த தலையுடன், கிறக்கத்துடன், மூடின கண்களைத் திறக்காமல், ‘விரலை வச்சுத் தடவிப் பார்த்துக்கோ. தெரியும்என்றார்.  அப்படியே செய்தேன்.
கன்னம் ஒட்டிய, தோல் தளர்ந்துவிட்ட இன்னொருவரின் முகத்தில் எந்த வெட்டுக் காயமும் இல்லாமல், அதிகபட்ச சதவிகித நேர்த்தியுடன் சவரத்தை முடித்த்தே எனக்குப் போதுமானதாக இருந்த்து. அப்பா இப்படி அப்படி முகத்தைத் திருப்பிப் பார்த்தார். அண்ணாந்து, வழக்கமாக அவருடைய தாடையில் கத்திக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பிரதேசங்களைத் தடவிப் பார்த்தார். அப்படியொன்றும் அவருக்குத் திருப்தியில்லை என்று தெரிந்தது. நான் ஒவ்வொன்றாகக் கழுவித் துடைத்து, அதனதன் இடத்தில் வைத்து சவர டப்பாவை மூடினேன். அதையெல்லாம் அள்ளிப் போட்டிரு’ என்று அப்பா முக அசைவால் தரைப் பக்கம் காட்டினார். நாற்காலியைச் சுற்றிச் சிதறிக்கிடந்த நரைமுடியை எல்லாம் குனிந்து ஒன்றுசேர்த்துச் சேகரித்தேன். எழுந்துபோய் தூரப்போட்டுவிட்டு வந்தேன்.
கிருஷ்ணனாக இருந்து கல்யாணியாக மீளும் நேரம் சமீபித்துக் கொண்டிருந்த்தை உணர முடிந்தது. கூடு விட்டுக் கூடு பாய்வதில், ஆதிக் கூட்டுக்குத் திரும்புகிற நேரம் பதற்றம் நிரம்பியது. பாய்ந்திருக்கிற கூட்டில் இருந்து மீளமுடியாமல் போகும் அபாயம் நம்மைத் துரத்தத் தொடங்கி விடுகிறது.
அப்பா இருந்த நாற்காலியில் இருந்து இரண்டு அடி தள்ளி நின்று பார்க்கிறேன். கச்சிதமாக ஒழுங்கு செய்யப்பட்ட தலைமுடியுடன், மழமழப்பாகத் திருத்தப்பட்ட முகத்துடன் அப்பா இருந்தார். அன்றைக்குச் சாயந்திரம் நடக்கவிருக்கும் த.மு.எ.க.ச புத்தக வெளியீடு ஒன்றிற்குத் தலைமையேற்கத் தயாராகிவிட்ட உற்சாகமான களை வந்துவிட்டிருந்தது. செய்வன் திருந்தச் செய்துவிட்ட சந்தோஷம் எனக்கு. கொஞ்சம் கூடுதலாக முயன்றிருந்தால், இதைவிடச் சிறப்பாகச் செய்திருக்கலாம் என்று தோன்றியது.  எதையாவது சொல்ல வேண்டும் போல இருந்தது. அப்பாவைப் பார்த்து, “ ஜோரா இருக்கு ப்பாஎன்றேன். அப்பா பதில் ஒன்றும் சொல்லவில்லை.
திரும்பாத பார்வை இன்னும் எதிரே இருக்கும் கண்ணாடியிலேயே இருந்த்து. இவ்வளவு சிரத்தையாக, ஒரு மணி நேரம் செலவழித்து, நான் செய்திருக்கும் இந்தக் காரியத்தின்  நிறைவில், அப்பா சொல்லப் போகும் வார்த்தைகளுக்குக் காத்திருந்தேன். வலது காதின் கீழ் துடைக்கப்படாமல் விடப்பட்ட சோப்பு நுரையை மேல் துண்டால் துடைத்துக் கொண்டே சொன்னார்,
‘அப்படியே விட்டுட்டு, நல்லா வளர்ந்த பிறகு வள்ளிநாயகத்துக் கிட்டே சொல்லி தாடியோடு ஒரு ஃபோட்டொ எடுத்துக்கிடலாம்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்
அப்பா சொல்லி முடிப்பதற்குள், ‘கூறல்கதையின் பக்கங்களில் இருந்து ஒரு பறவையின் எச்சம் போல் அந்த இடத்தில் நான் சொத்தென்று விழுகிறது போல இருந்த்து.
எல்லோரும் தாத்தாவும் கிருஷ்ணனுமாக ஆகிவிடமுடியாது. முக்கியமாக, அப்பாவும் நானும்.

%


Thursday 27 December 2012

எதன் கொலோ?
பசித்தவன் மட்டுமா பழங்கணக்குப் பார்க்கிறான்? என்னைப் போல, எழுதுகிறவன் பார்க்கிறவை அனைத்தும் பழங்கணக்குதானே. மீள் பார்த்தல் அற்ற எழுத்து சாத்தியமா? அறுபதுக்களின் கலைமகள் தீபாவளி மலர்களில்
ஃபோட்டொ என். ராமகிருஷ்ணா என்று கீழே பெயருள்ள நிறையப் புகைப்படங்கள் வரும். அனேகமாக புகைப்படக்காரரின் குடும்பத்துப் பெண்களும் குழந்தைகளும் இருப்பார்கள். அது அல்ல விஷயம். அவர் எடுத்த
தூரத்துக் காட்சிகளில், அனேகமாகக் கட்டிடங்களின் படங்களின் மேலோர
இடது அல்லது வலது விளிம்பில் ஒரு மரக்கிளையோ இலையோ தெரிந்து, அந்தப் படங்களின் அழகை உயர்த்திவிடும். அந்த எட்டிப்பார்க்கும் கிளையோ இலையோ மாதிரி, கொஞ்சமாவது பழைய ஞாபகங்கள் எட்டிப்பார்க்கிற புனைவுகள் மேலும் ஒரு அடர்த்தியை அடைந்துவிடுகின்றன.

நான் சமீபத்தில் உபயோகித்த ஒரு கோடுபோட்ட நோட்டை, அதன் அத்தனை பக்கங்களும் எழுதித் தீர்ந்துவிட்ட நிலையில், திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் அட்டை வடிவமைப்பே நன்றாக இருக்கிறது. இளம் பச்சை நிறம்.  கீழே வரவர பச்சை அடர்கிறது. நடுவில் மேல் நோக்கிய முகம், மேல் நோக்கி விரித்த கைகளுடன் ஒரு பெண்ணென யூகிக்கவைக்கும் கோட்டுருவம். அவரே விருட்சமாகித் தளைத்தது போல,கிளைவிட்டு இலை விட்டது போல, கோட்டுருவக் கிளைகளும் ஒளிச்சேர்க்கை நடத்தி உயரும்
இலைகளும்.

உள்ளே என்னென்னவெல்லாமோ. நிறையக் கவிதைகள், பிரசுரமானவையும், பிரசுரத்திற்கு லாயக்கற்றவை என நான் தீர்மானித்தவையும்.  சமீபத்தில் ராஜுமுருகனுக்கு  நெருக்கடி மிகுந்த ஒரு மனநிலையில் எழுதியனுப்பிய முன்னுரை, இதையெல்லாம் விட முக்கியமாக, சென்ற விடுமுறையில் வந்திருந்த என் பேரனுக்கு வரைந்து காட்டியிருந்த , அவன் விரும்பிக் கேட்ட,
ஆந்தை, தவளை, மாடு,கன்றுக்குட்டி மற்றும் ‘காக்காய்’ படங்கள். ஒரு ரோபோ, ஒரு கார். அவையும் அவனுடைய விருப்பமாகத்தான் இருக்கும்.
போதாதா இவை? திரும்பிபார்க்க ஒரு நோட்டுப் புத்தகத்தில் இவ்வளவு இருந்தால், அதன் வரிகளுக்குள் வராததாக எவ்வளவு இருக்கும்? வரிகளின் இடையில் எவ்வளவு ஒளிந்தும் ஒளித்துவைக்கப் பட்டும் இருக்கும்?

இந்த மூன்று கவிதைகளையும், அதன் கவிதைத் தன்மைக்காக அல்ல, வாசகனுக்கு அல்லாமல், எழுதிய எனக்கே மீட்டுத் தரும்  அந்த வரிகள் கிழித்துப் பறக்கவிட்டிருக்கும் என் தேதிகளுக்காக, பத்திரப்படுத்துகிறேன்.

%

விபத்துக்கு உள்ளாக்குவேன்
என பயமிருக்கும் எவரும்
இந்த வாகனத்தில் இருந்து
இறங்கிக் கொள்ளலாம்.
இப்போதுதான் அரசு உரிமம் பெற்றிருக்கிறேன்
எனினும்
இந்த வாகனத்தை நான் செலுத்திக் கொண்டிருப்பது
பிறவியில் இருந்து.
இறங்கும் முன்
இதுவரை அமர்ந்து நீங்கள் கொறித்த
அவதூறுப் பட்டாணிகளை
நீங்கள் வாசித்த நாற்றமெடுக்கும்
புலனாய்வுப் பத்திரிக்கைகளை,
உங்கள் கூந்தலில் சூடி உதிர்ந்த
பூக்களைக் கூட இங்கே
விட்டுவிட்டுச் செல்ல வேண்டாம்.
உங்களின் இதுவரையிலான சுவாசத்தை
நான் இன்னும் சிறிது தூரத்தில்
ஒப்படைத்துவிடுவேன்
என் பயணத்தின் நெடுஞ்சாலைக் காற்றிடம்.

%

நேற்று முன்தினம்
நீண்ட ஓர் இரவுப் பயணத்தில்
பழுதான பேருந்தில் இருந்து இறங்கி
ஒரே ஒரு நட்சத்திரம் பார்ப்பதற்காக
வாழ்ந்தது போல இருந்தது.
நேற்று எனிலோ
அடர்வனம் புகுந்து, நெடுவழி தொலைந்து
ஆளற்ற அருவியின்
நீர்ச்சிற்பம் பார்த்து
நிற்பதற்கென.
விடிவதற்கு முன்பே, இன்றெழுந்து
பசி கிள்ளும் வயிற்றுடன்
தச்சுவேலைக்குச் செல்லும்
இவர்களைப் பார்த்து நிற்பது
எதன் கொலோ?

%

இந்த கோடைகால முற்பகலில்
உங்களுக்கு விதிக்கப்பட்ட ச்ப்தங்களுக்கு
மத்தியில் நீங்கள் இருப்பீர்கள்.
முற்றிலும் நரைத்துவிட்ட
என் கன்னங்களில் படியும்
வெயிலை நசுக்குகின்றன,
ஒரு மரத் தச்சனின் இழைப்பு.
ஒரு புதர்ப்பறவையின் அதிரும் குரல்,
ஒரு தாமதச் சேவல் மற்றும்
கினிக்கோழியின் ஒன்றின்மேலொன்றாக
அடுக்கப்பட்டுச் சரியும்
கொலைபடு குரல்.
\இதையெல்லாம்விடத் துயரமான ஒன்று.
யார் வீட்டுப் பின் முற்றத்திலோ
தொடர்ந்து அலையடித்துத் தெறிக்கும்
துணிதுவைப்பின் ஈரச்சத்தம்.
பப்பாளி மரத்தில் அமர்ந்த
முதல் காக்கையில் துவங்கி,\
கூரியர் வினியோகிப்பவர் சைக்கிள் டயர்
பிருபிருத்து மணல் உதிர்க்கும் 
இன்னொடிவரை
கல் தேய, கை தேய
துவைக்கும் சேற்றுப் புண்நிரம்பிய\
அந்த விரல்கள் நெறிக்கட்டும்
வேப்பம் பூக்களில் இளைப்பாறும்
இந்த வியாழக்கிழமை சூரியனின் கழுத்தை,
என்னைச் சாட்சி வைத்து.

%

ஒரு விடை பெறல்.பனி பெய்திருக்கிறது.
காற்றழுத்தத்திற்குக் கீழ்ப் படிந்து இந்த 7.44ல் கூட இன்னும் இன்றைய வெயில் வரவில்லை. மைனாக்கள் பேசுகின்றன. பூவரசம் பூ பூத்திருக்கிறது. மைதானப் புல்லை மேயும் கலப்பினப் பசுக்களில் ஒன்றின் பின்னால், கன்றுக்குட்டிக் களை மாறாத ஒரு இளங்காளை தன் முன்காலகளைத் தூக்கிப்போடுகிறது. நாரைகளுக்கு அது மிகவும் பழகிய காட்சி போல. ஒற்றை மூக்குத்தியுடன் முக்காடிட்டுப் போகிற பெண், இன்னும் கட்டுமானத்தின் கடைசி நிலையில் இருக்கிற தேவாலயத்தின் திசை நோக்கிச் சிலுவைக் குறியிட்டுத் தன்வழி திரும்புகிறார். எதிரே கணவருடன் நடந்து வரும், தூக்கம் மிச்சமிருக்கிற முகத்துப் பெண் தன்னைச் சீர்திருத்தி, சேலைத்தலைப்பை இழுத்துவிட்டு, அப்படி இழுத்துவிட்ட நொடியின் புதுப்பித்தலுடன் என்னை லட்சியப்படுத்தி அலட்சியப்படுத்த முயல்கிறார். தூரத்து இணைகோட்டுத் தெருவில், அலகில் முள்தைத்த வினோதப் பறவையின் குரலில், இடியாப்பம் விற்கிறவர் கூவிக்கொண்டு செல்லும் சைக்கிள் நகர்கிறது.

எல்லாம் சரிதான்.
ஆனால் இத்தனைக்கு மத்தியிலும், இத்தனையுடனும் இன்னொரு நிழல் இழுபடுகிறது. திரும்பத் திரும்ப ஜோ பால் சார் நினைவுக்கு வருகிறார். ஜோ பால் சாருடன் எனக்கு அதிகப் பழக்கமில்லை. இதுவரை ஐந்து ஆறுமுறைகள் பேசியிருந்தால் அதிகம். ஜோ பால் அதிகம் பேசமாட்டார். அதிகம் சிரிப்பார். அதிகம் செய்வார். அதிகம் செயல்படுகிறவர்கள் முகத்தில் இப்படியொரு களங்கமே அற்ற துல்லியமான சிரிப்புத் திரண்டுவிடும் போல.

ஜோ பால் சாரை எனக்கு தங்கராஜ்தான் அறிமுகம் செய்துவைத்தான். ஜோ பால் அதிகாரியாகப் பணியாற்றிய - ஒரு அருமையான மனிதரை இப்ப்டி, “பணியாற்றிய” என்ற இறந்தகால வினைச்சொல்லுடன் சம்பந்தப்ப்டுத்துவது என்பது எத்தனை துயரம் நிரம்பிய கொடுமை - வங்கியில் ஏற்கனவே இருந்த வரவுசெலவு  நடைமுறைகளில் உடனடியாகச் சில மாற்றங்கள் தேவைப் பட்டன. நான் அடிப்படையில் இன்னொரு வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவன்தான் எனினும் , ஒரு வாடிக்கையாளன் வாடிக்கையாளனாக மட்டும் தானே நடத்தப் படுவான். நானும் அப்படித்தான்  நடத்தப்பட விரும்புவேன். என் முறை வரும்வரை வரிசையில் நிற்பது எனக்கு எப்போதும் சந்தோஷமானதே.  ஆனால், எனக்குத் தேவைப்பட்ட , அந்த  குறிப்பிட்ட வேலையில், வங்கிச் சேவைத் தடுப்புக்கு உட்புறம் அமர்ந்திருக்கிறவரின் புரிதலும் உதவியும் என்னைப் போன்ற தயக்கம் நிறைந்த, தொட்டால் சிணுங்கும் வாடிக்கையாளனுக்குத் தேவைப்பட்டது.

எடுத்த எடுப்பிலேயே, ஜோ பாலிடம் அந்தப் புரிதல் இருந்தது. மிக மிருதுவான அவருடைய பார்வையும் சொற்களும்,  அவர் என்னை உட்காரச் சொன்ன நாற்காலியையும் விட  வசதியாக இருந்தன. ஒரு கிறிஸ்தவக கருணையும் நட்பும் உடைய  கைகுலுக்கல் அவருடையது. தங்கராஜின் தொலைபேசி அறிமுகம் இல்லாவிட்டாலும் கூட, அவருடைய கண்களிலும் கைகளிலும் இந்த மிருது இருந்திருக்கத்தான் செய்யும். என்னை மட்டுமல்ல, தன்னருகில் வருகிற யாரையுமே ஜோ பால் சார் அப்படித்தான் பார்த்திருப்பார், மேஜை மேல் கணினி முகப்புக்கு முன், சற்று இறங்கி மூக்கில் நழுவியிருக்கும் கண்ணாடியுள் தன் பருத்த கண்களுடன் ஏறிட்டுப் பார்த்த அவருடைய முதல் பார்வை என்னிடம் பத்திரமாக இருக்கிறது.

நேற்று, தொலைபேசிக் கட்டணம் செலுத்த அதே வங்கிக் கிளைக்குப் போயிருந்தேன்.கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பிந்திய வேலை நாள்.  கூட்டம் அதிகமிருக்கும் என்று நினைத்தேன். இல்லை. என் வரவுசெலவு வரிசையில் நின்றபோது எல்லாம் நான் ஜோ பால் சாரின் நடமாட்டத்தைத் தேடினேன். அவரிடம் கைகுலுக்கிவிட்டு கிறிஸ்துமஸ் விசாரிப்பைச் செய்துகொள்ள நினைத்தேன். கண்களில் அவர் படவே இல்லை.

இனிமேல் காணவேமுடியாது  போவார் என்று நேற்றிரவு அதே தங்கராஜ்தான் சொன்னான்.  நேற்று நான் போயிருந்த சமயம் ஜோ பால் வங்கியில்தான் இருந்திருக்கிறார். நான் முதன் முதலில் அவரைச் சந்தித்த , அதே இடதுபக்க அறையில்தான் , அதே நாற்காலியில்தான் அவருக்கு  தீவிர மாரடைப்பு
வந்திருக்கிறது. அதே மேஜையில்தான் அவர் சரிந்திருக்க வேண்டும். இந்த முட்டாள் கணினிக்கு என்ன தெரியும்? தன் எதிரே ஒருவர் முற்றிலும் விடைபெற்றுக்கொண்டு இருந்ததைச் சற்றும் அறியாமல், அதனுடைய மென்பொருள் ஆணைகளுக்குக் கீழ்ப்படிந்த கணக்கு இலக்கங்களுடன் தொடர்ந்து இயங்கும் ஒரு இயந்திரச் சாட்சியாக மட்டும்  இருந்திருக்கும்

நான் ஜோ பாலுடன் கடைசியாகப் பேசியபோது, அவர் தலையை மட்டுமே
அசைத்தார்.  அந்த வங்கியில் , நான் சென்ற அந்த முந்திய தினத்தில் தணிக்கை நடந்துகொண்டு இருப்பதை என்னால் உணரமுடிந்தது.  தணிக்கை நடக்கும் வங்கியின் சுவர்கள் கூட ஒரு பதற்றத்தில் இருக்கும். ஊழியர், அதிகாரிகள் எல்லோரும் வேறொரு முகத்தை அணிந்திருப்பார்கள், வழக்கமான உயிர்ப்பும் கலகலப்பும் அற்ற, அவசர நிலைப் பிரகடன விரைப்பு அவர்களுக்கு வந்திருக்கும்.  அன்றைக்கு அப்படித்தான் இருந்தது .

நான் ஜோ பால் சாரிடம், “ஆடிட் நடக்கிறதா?” என்று தணிவான குரலில் கேட்டேன். ஜோ பால் சார் வாய் திறந்து பதில் சொல்லவில்லை. குனிந்து கொண்டிருந்த முகத்துடன், மூக்கிலே இறங்கியிருந்த கண்ணாடிக்கு மேல்
என்னைப் பார்த்தார். தலையை மட்டும் அசைத்தார்.

அது தலையசைப்பு என்றுதான் நினைத்தேன். விடைபெறல் என்று தெரியாமல் போயிற்று.

%

Tuesday 25 December 2012

மீனுரை
சந்தியா பதிப்பகம் வெளியிடயிருக்கும் என் கவிதைத் தொகுப்புக்கான என்னுடைய முன்னுரை.

மீனைப் போல இருக்கிற மீன்.
               கல்யாண்ஜிமெய்ப்புத் திருத்த அனுப்பியிருக்கிறார்கள்.
திருத்த வேண்டுமா என்றிருக்கிறது. எல்லாப் பிழைகளையும் நான் திருத்திவிடமுடியுமா? நான் செய்த பிழைகளை நானே திருத்தும் போது, ஏதோ ஒரு கட்டத்தில், ஒரு இருபது அல்லது இருபத்தி இரண்டாம் பக்கத்தில், என் பிழைகளை நானே ரசிக்கவும் ஆரம்பித்து விடுகிறேனே என்ன செய்ய?
7ம் பக்க்ததில் முதல் கவிதையின் அச்சடிப்பு இருக்கிறது. 6ம் பக்கம் காலியாக இருக்கிறது ,  ஒரு எழுத்து. ஒரு புள்ளி கூட அற்ற வெள்ளையாக. அதற்கு முந்திய 1 முதல் 5 பக்கங்களை, இதை எழுதுகிற இந்த நொடிப் பிளவில், யூகிக்கமட்டுமே வேண்டியதிருக்கிறது. மற்றவர்களையும் உள்ளடக்கி, பொதுவாக எல்லாக் கவிதைகளையும் பற்றிச் சொல்ல எனக்கு வக்கு இல்லை.
என்னுடைய இந்தத் தொகுப்பின் கவிதைகளுக்கு முன்னாலும் இப்படி யூகிக்கவேண்டிய, காலியான பகுதிகள் இருக்கின்றனவோ என்று தோன்றுகிறது.  முன்னாலோ பின்னாலோ அப்படி இருந்தால்தான் என்ன என்றும், அப்படி இருப்பதுதானெ இயல்பு என்றும் கூடக் கேட்கவும் சொல்லவும் செய்யலாம். நானோ, என் வாழ்வோ எந்தப் பிழைகளும் இன்றி, எந்தக் காலியிடங்களும் இன்றி, எந்த யூகங்களும் அவசியப்படாமல் அப்படியே மெய் மிகுத்து, துலாம்பரமாக் நிரம்பி வழிகிறோமா என்ன? ஒரு மேல்நிலைத் தொட்டி போல நிரம்பிக் கொண்டு, தேவைப்படுகிற நேரங்களில், தேவைப்படுகிற குழாய்களைத் திறந்துவிட்டுக் கொள்வது போல என்னுடைய கவிதைகள் இருக்குமெனில், அது மாநகராட்சிக் குடிநீர் வாரியம் பெருமைப்பட்டுக் கொள்ளவேண்டிய விஷயமே தவிர, ப்ளீச்சிங் பவுடர் வாடையடிக்கிற அந்த சுத்தீகரிக்கப்பட்ட கவிதைகளை வைத்து நான் என்ன செய்ய?

போன டிசம்பரில் இருந்து, அனேகமாக இந்த 2012 ஆகஸ்ட் இறுதி வரை இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளையும், இதற்கு மேல் பத்துப் பன்னிரெண்டையும் நான் எழுதியிருப்பேன். இரண்டோ மூன்றோதான் சிறுகதைகள் எழுத முடிந்தது என்ற சிறிய கவலை ஒரு பக்கம் இருந்தாலும், இத்தனை கவிதைகள் எழுதியிருக்கிறேன் என்கிற சிறிய சந்தோஷமும் இருக்கவே செய்கிறது. எப்போதுமே பெரிதினும் பெரிதுதான் கேட்க வேண்டுமா? அப்புறம் சிறிதினும் சிறிதை யார் கேட்பது? அப்படிச் சிறிதினும் சிறிதைக் கேட்கிற ஒருவனாக இருப்பதிலும், அப்படி இருந்து இவற்றை எழுதியதிலும் எனக்கு மகிழ்ச்சிதான்,

இது மழைக்காலம். ஐப்பசி முடியப் போகிறது. சரஸ்வதி பூஜைக்கு முன்னால் கொஞ்சம் மழை பெய்தது.  கொஞ்சம்தான். அந்தக் கொஞ்ச மழையை முதலில் புல் கொண்டாடுகிறது. அதற்குப் பின் கொழுஞ்சி தன் கருநீலச் சிறு பூக்களால். பத்து நாட்கள் போனால் தரையோடு தரையாய் மஞ்சட் பூக்கள். பெயர் தெரியாத தாவரங்கள் தன் சின்னஞ்சிறு வெள்ளைப் பூக்களுடன் அடுத்து கொண்டாட்டத்தின் வரிசையில் நிற்கும். போகப் போக, தும்பை பூத்துவிடும். ஈசல் பறந்த வெளியில் தட்டான்கள். என் புல், என் கரு நீல, என் மஞ்சள், என் வெள்ளை, என் தும்பை முளைத்தும் பூத்தும் கிடக்கிற இவற்றின் இடையே தான், என்னுடைய நீண்டகால ஒற்றையடிப் பாதை வளைந்தும் நெளிந்தும் வகிடெடுத்துக் கிடக்கிறது, காளான்கள் பார்த்தபடி.


இவை எழுதப்பட, ‘உயிர் எழுத்து சுதீர்செந்தில் மட்டுமே காரணம். அவருடைய சென்ற பிறந்த நாளில் நான் அவருக்கு வாழ்த்துச் சொல்லும் போது, ‘எனக்கு ஒரு பிறந்த நாள் பரிசு தருவீர்களா சுந்தரம்?என்றார். நான் இந்த பிறந்ததினக் கொண்டாட்டங்கள், வாழ்த்துச் சொல்லல், பரிசு கொடுத்தல் எல்லாம் அவ்வளவாய் பழகாதவன். வரவர எல்லாவற்றையும் தானே பழகிக்கொள்ள வேண்டியதிருக்கிறது. ஒரு பிறந்த நாள் தொடர்பான் சந்தோஷமான உரையாடலில் ஜாக்கிரதை உணர்வு எல்லாம் இருக்காது அல்லவா? ‘ சொல்லுங்க சுதீர்என்றேன்.
’2012  உயிர் எழுத்து முழுவதற்கும் கடைசிப் பக்கக் கவிதைகள் எழுதவேண்டும். பத்தில் இருந்து பன்னிரண்டு தேதிக்குள் எனக்குக் கவிதைகள் கிடைத்தால் போதும்என்றார். ஒப்புக் கொண்டேன். கல்யாணி.சி என்ற பெயரில் வெளிவரட்டும் என்று நானே அவரிடம் கேட்டுக்கொண்டேன். பெயர்தான் ஜாடையா என்ன? இத்தனை வருடங்களாக எழுதுகிற எழுத்தின் ஜாடையைத் தெரியாமலா போவார்கள்? அப்படியெல்லாம் ஒன்று தெரியாமல் போகாது. தெரியாதது போல வேண்டுமானால் இருப்பார்கள். அப்படி இருப்பவர்களுக்காக, நான் என் கூர்நுனிக் குறைவான மூக்கால் நுகராதும், இடைவெளியுள்ள முன் பற்களால் சிரிக்காதும் இருக்க முடியுமா?  நான் தேடியடைந்ததை, என்னைத் தேடி வந்ததை, எனக்குக் கிடைக்கிறவைகளைக் கண்டு, கேட்டு, உண்டு, உற்று, உயிர்த்தபடி இருக்கிறேன் எனில், அந்த உயிர்ப்பின் ஜாடை என் சொல்லில் இல்லாதா போகும்?

என் எல்லைகளை நான் அறிந்திருக்கிறேன்.
எழுதுகிறவனுக்கு எல்லைக் குறைவுகளும் இல்லை. எல்லை நிறைவுகளும் இல்லை. அது ஒரு மாயத் தொலைவும் மாய இருப்பும் உடைய தபசில் சொத்து. நான் குடியிருக்கிற வீடு எத்தனை சதுர அடி என்றால் எனக்குத் தெரியாது. நாங்கள் புழங்கப் போதுமானதாக இருக்கிறது. நீங்கள் வந்தால் உட்கார இடம் உண்டு. எங்கள் அப்பா படுத்திருந்து ஓய்வெடுக்கிற நிலையில்  தன் இத்தனை எண்பத்தேழு வருடங்களையும் திரும்பிப்பார்த்து அசைபோடும் கட்டிலை இட, ஜன்னலும் வெளிச்சமும் நிரம்பிய இடம் உண்டு. சங்கரி பொறுக்கிய முதல் காக்கைச் சிறகும், எதுவும் அணியாது ஒரு சிறிய பிரம்பு நாற்காலியில் கை ஊன்றி ஒரு அப்பழுக்கற்ற சுடர் போல ராஜு நிற்கும் அந்த ஐஸோலி காமெரா புகைப்படமும் இங்கேதான் எங்கோ இறந்தகாலத்தின் இழுப்பறை ஒன்றில் இருக்கும். அர்ச்சனாவோ அல்லது ஆதித்யாவோ ஒளிந்துவிளையாடத் தோதுவான மூலைகளை அவர்களே இங்கே தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும். நான் உட்கார்ந்து மழை பார்க்க வெள்ளை நிற பிளாஸ்டிக் நாற்காலி இருக்கிறது. அடிக்கடி வகை மாறும் சாம்பல் பூனைகள் நடமாட மதில் சுவருக்குக் குறைவில்லை. நேற்று என்ன கிழமை? புதனா?‘ அய்யா. லெப்பர் அய்யாஎன்ற நகமற்ற குரலுடன் நான்கைந்து தொழுமுகங்கள் என்னைக் கூப்பிட ஒரு வாசல் இருக்கிறது. புருவம் அடர்த்தி குறைந்த அந்த வளர்த்தியான மனிதரின்சிரிப்பு வெயில் போல் பளீரென்று அடித்து மங்கி நிழலாடி அவருடன் நகர்ந்துவிடுகிறது உடனடியாக. பக்கத்து வீட்டு தீபாவளி வெடிகளின் உதிரித் தாள் சிதறிக் கிடக்கும் கோலத்தின் மேல் நரம்பு புடைத்த ஒரு சருகு இலை இவையெல்லாவற்றையும் விட, எனக்கு அல்லது அவளுக்கு மனது முட்டிப் போய் பெருமூச்சு விட, தனித்தனியாகக் கண்ணீர் பெருக்கிக் கொள்ள அவரவர்க்கான பிரத்யேக இடங்கள் உண்டு. போதாதா என்ன?

இந்த இடங்களை உணர்ந்தவனுக்கு எந்த இடங்களையும் உணர முடியும்தானே. மனது அளவைமானியாகி விடுகையில், உப்புக் கல்லில் கடலோசை கேட்காமலா போகும். பேருந்தில் போகும் நமக்கு, சாலையோரத்தில் எங்கோ காகிதம் கருகும் வாடை நூலகம் எரியும் என்னென்ன பதற்றங்களைச் சில சமயம் உண்டாக்கிவிடுகிறது. ஊஞ்சல் கட்டின, நிலைக்கண்ணாடி இருக்கிற ஏதோ ஒரு பூர்வீக வீட்டில் எப்போதோ அவித்துக் கிண்டியிருந்த நெல்லை வந்து வந்து கொத்திப் போகும் சிட்டுக் குருவி அமர்ந்த ஜன்னல்கதவின் விளிம்பில் நான் ஏன் இப்போது உட்கார்ந்து சிறகு கோதுகிறேன்? நான் எங்கெங்கெல்லாம் பறந்திருக்கிறேன்.  என்னென்னவெல்லாம் என் முன் விசிறப்பட்டன?

கலாப்ரியாவுக்கும் சுகுமாரனுக்கும் சமயவேலுவுக்கும் தேவதச்சனுக்கும்  ரமேஷிற்கும் ஒரு சிறிய பறவை போல, அவர்களின் முற்றத்தில் நான் தானியம் பொறுக்குகிற அலகுடன் நடமாடுகிறேன் என்று தெரிந்திருக்காது. இளைய பாரதியும் யுவன் சந்திரசேகரும் மாலதி மைத்ரியும் குட்டி ரேவதியும் அவர்கள் கொடிக் கம்பியில் உலரும் துணிகளின் மேல் இட்டிருக்கும் எச்சம் என்னுடையது என்பதை அறியமாட்டார்கள். மனுஷ்யபுத்திரனும் லட்சுமி மணிவண்ணனும் கரிகாலனும் யவனிகா ஸ்ரீராமும் பிரான்சிஸ் கிருபாவும் அவர்களின் அசையும் கிளைகளில் ஒரு சிறு பொழுது அமர்ந்துவிட்டுப் பறந்து போயிருக்கும் என் சாயலைக் கண்டிருக்க வாய்ப்பில்லை. அதே பறவையாக, அதே அலகால்தான் எஸ்.செந்தில்குமார் அல்லது முகுந்த் நாகராஜன் அல்லது சங்கர ராம சுப்ரமணியன் அல்லது ராணிதிலக்கின் அல்லது இசையின் முற்றங்களிலிருந்து என் தானியங்களைச் சேகரித்துக்கொண்டே போகிறேன்.
இதோ இதை எழுதுவதற்கு முந்திய இரவில் வாசித்துப் பார்த்த
சாம்ராஜின் முதல் தொகுப்புக்கான கவிதைகள், அதைவிடவும் அதற்கான முன்னுரை உண்டாக்கிய பெரும் அதிர்வு இன்னும்
தணியாமல் இருக்கிறது. ஒருவகை சிலிர்ப்பு நிரம்பிய இந்தச் சமயத்தில் மிகுந்த நெருக்கத்துடன் சாம்ராஜுக்கு நல்வரவு சொல்கிறேன்.
என்னுடைய இந்தத் தொகுப்பின் கவிதைகளைத் தேர்ந்தெடுத்தவர்
என்பது மட்டுமல்ல, சலனங்கள் மிக்க, சமீபத்திய என்னுடைய தனிப்பட்ட பத்தாண்டு வாழ்வில் படர்ந்த  இருட்டையும் வெளிச்சத்தையும் மற்றெவரையும் விட மிக அதிகமாக அறிந்தவர் அவர். இந்தத் தொகுப்பை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்.
இக்கணம் என் அலகில் இருப்பது அவருடைய தானியமே.


கல்யாணி.சி                              19.சிதம்பரம் நகர்
15.11.2012.                                பெருமாள்புரம்
                                         திருநெல்வேலி-7.


Monday 24 December 2012

தக்கையின் மீது ஆயிரம் கண்கள்.


எதிர்வரும்  புத்தக விழாவையொட்டி, சந்தியா பதிப்பகம் என்னுடைய சமீபத்திய கவிதைகளின் தொகுப்பாக இருக்கும் “ மீனைப் போல இருக்கிற
மீன் ” புத்தகத்தை வெளியிடுகிறது.

'உயிர் எழுத்து’வில் வந்த கவிதைகளும், உயிர் எழுத்துக்காக எழுதிய கவிதைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளும் அடங்கியது இது.
சென்ற டிசம்பர் மாதத்தில் இருந்து இந்த ஆகஸ்ட் வரை நான் தொடர்ந்து வெவ்வேறு மனநிலையில் , வெவ்வேறு கவிதைகளை எழுதிவந்திருக்கிற
என்னுடைய  வாழ்நிலை, வெறும் மூன்றே மூன்று சிறுகதைகள் மட்டுமே எழுதுவதற்கே அனுமதித்தது அல்லது  போதுமானதாக  இருந்தது.

சென்ற வருடம் துவங்குகையில், நான் அடுத்தவருடத்திற்கு ஒரு சிறுகதைத்
தொகுப்புக்குரிய கதைகளை எழுதிவிடும் ஆசையிலேயே இருந்தேன். அந்த ‘ஒளியிலே தெரிவது’ தொகுப்பில்  நான் அடைந்திருந்த ஒரு குறிப்பிட்ட நகர்வு மேலும் நான் நகர்ந்துசெல்வதற்கான அல்லது நகர்ந்து செல்வேன் என்ற  விழைவை என்னிடம் உண்டாக்கியிருந்தன.இதற்கு முன்பும் நான்
இப்படியெல்லாம்  தொடர்ந்து கதைகள் எழுத ஆசைப்பட்டிருக்கிறேன்,  அதை
 அடையாமல் என்னை நானே ஏமாற்றிக்கொண்டும் இருக்கிறேன். அதைக்
குறித்து அதன் பின் எந்தக் கவலையும் அடைந்ததில்லை. ஆனால், முதல் முறையாக, கடந்த வருடம் நான் எழுதாமல் போன கதைகளுக்காக நான்  இந்த,  இதை எழுதும் மார்கழி இரவில் , மிகக் கூர்மையான தவிப்பை உணர்கிறேன். செயலற்றுக் கழிகிறதோ என் காலம் என்ற கேள்வி கூட பெரியஎழுத்துக்களில் எனக்குள் உண்டாகிறது.

என் எழுது மேஜையில் நான் இதற்காகக் கவிழ்ந்து படுத்து துக்கிக்கையில் என் தோளில் விழுந்து ஆறுதல் படுத்தும் கையாக இந்த ”மீனைப் போல இருக்கிற மீன்” தொகுப்பு இருக்கிறது. “நிலா பார்த்தல்” தொகுப்பு வரை என்னிடமிருந்த குரல் சற்று வேறுவிதமாகத் துவங்கியது, “உறக்கமற்ற மழைத் துளி’ என்ற தொகுப்பிலிருந்துதான். அதற்கு அடுத்து, “இன்னொரு கேலிச் சித்திரம்”. சென்ற புத்தக்க் காட்சியில், “மணல் உள்ள ஆறு”. இப்போது இது,

நான் முன்பை விடவும் மனிதரிடம், மரங்களிடம், பறவைகளிடம், எதிர்ப்படும் உயிர்களிடம் நெருங்கியிருக்கிறேன், அப்படி நெருங்குவதன் மூலம் எனக்கும் வாழ்வுக்குமான நெருக்கத்தை அதிகப்படுத்தியிருக்கிறேன் என்பதை இந்தக் கவிதைகளை மீண்டும் வாசிக்கையில் நானே உணர்கிறேன்.

                                                 சில சமயம் கடலைப் போல
                                                 சில சமயம் ஆற்றைப் போல
                                                 ஓடையைப் போல
                                                 கிணற்றைப் போல
                                                 கண்ணாடித் தொட்டியைப் போல
                                                 சுருக்கமாக
                                                 நீரைப் போல இருக்கிற மீன்
                                                 மீனைப் போலவும் இருக்கிறது
                                                 தூண்டில் தருணங்களில்.


சில சமயம் நான் ஓவியனைப் போல, சில சமயம் நான் கவிஞனைப் போல, சிலசமயம் சிறுகதையாளனைப் போல இருக்கிற நான், என்னைப் போலவே இருக்கிறேன், இந்தத் தொகுப்பில்.

என்னுடைய தூண்டில் தருணம் இது.

Saturday 22 December 2012

செப்பேலோ...

அதற்கு மேல் ஞாபகம் வரவே இல்லை.
திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்க்கிறேன். “போய பிழையும், புகுதருவான் நின்றனவும், தீயினில் தூசாகும், செப்பேலோர் எம்பாவாய்”. அதற்கு முந்திய
எந்த அடிகளும் வரிசைகலைந்து கூட, பக்கத்தில் நெஞ்சுக்கு எட்டின தூரத்தில் காணோம்.

ஏற்கனவே பனிக் காலம். அதிகாலை மழையும் சேர்ந்திருந்தது. பனிக்கு ஒரு குளிர். மழைக்கு ஒரு குளிர். குளிரும் குளிரும் சேர்ந்த தீக்குளிர். இன்று சற்று பிந்தித்தான் நடக்க ஆரம்பித்திருந்தேன். தரையெங்கும் புல்லும் புல்லிடை மஞ்சட் பூவும். இந்தச் சிறு பூக்களின் களங்கமின்மை சூரியனை மறக்கடிக்க வைக்கிறது. இந்தப் பூவின் பெயர் தெரிந்தவர்கள் யாரேனும் இருப்பார்கள்.  ஒரு ஆதிச் சித்தர் நிச்சயம் இந்த மஞ்சட் பூப் படுகை பற்றிப் பாடியிருப்பார்.
நான் ஒரு முன் பனிக்காலத்தில் கண்மூடுவேன் எனில், என் மேல் தூவப்பட
விரும்பும் பூக்கள் இவையே.

வழக்கமான தெருவில்தான் நடக்கிறேன். வழக்கமாக எதிர்ப்படுகிறவர்தான் எல்லோரும். ஆனால் அவர் வழக்கமானவர் இல்லை. ஆனால் தெரிந்தவர். ஒரு  உல்லாசமான மன நிலையில் இருந்திருக்கவேண்டும்  என்பது அவர் உடையில் தெரிந்தது. இந்தப் பக்கம் அதிகம் அணியக் காணமுடியாத அந்த லக்னோ குர்த்தாவை இந்தக் காலைக்குத் தேர்ந்திருந்தார்.’எங்கே இந்தப் பக்கம்?’ என நானும் கேட்கவில்லை. அவரும் கேட்கவில்லை. இதுபோன்ற வெற்றுக் கேள்விகளைக் கேட்காமல் இருக்கும்படி செய்திருந்தது அந்தக் குளிர்ந்த காலை. புன்னகைத்துக் கொண்டோம். அவர் சிரிப்பில் அவரின் இந்த உடை குறித்த சிறிய வெட்கம் இருந்தது. அவரவர் திசை சொல்லும் கைகாட்டிகள் அந்தப் புன்னகையில் அம்புக் குறியிடப்பட்டிருந்தன.
நீண்ட இடைவெளிக்குப் பின் நான்கைந்து  பஞ்சரட்டைக் குருவிகள் தெருவின்  இரண்டுபக்கக் கம்பிகளிலும்.  ஆழ்ந்த தியானத்தில் இருப்பது போல, எந்தச் சாபமும் இடாது தியானம் கலைத்து மறுபடி உறங்கிய  அந்த மூன்று நாய்களை, அதன் கழுத்து அசைவை இப்போது வரையத் தோன்றுகிறது. உறைந்த கடல், ஒருகணம் உருகி,ஒரே  ஒரு அலையடித்து என் கால் வரை எறிந்து, மறுபடி உறைந்துவிட்ட அசைவு அது.

சற்று நீண்ட தொலைவுக்கு யாரும் எதிர்ப்படவில்லை.  வேறு எதையும் பார்த்த நினைவில்லை. இரண்டே இரண்டு பூவரசம் பூ மட்டும் என்று சொல்ல
ஆசை. அப்படிச் சொன்னால் அது வேறொரு தினம் பார்த்த பூவை நேற்றில் ஒட்டவைப்பது ஆகிவிடும். செம்மண் மைதானம் விரிந்து கிடந்தது. எது எல்லாம் நம் முன் விசாலமாகக் கிடக்கிறதோ, அது எல்லாம் நம்மை மேலும் விசாலம் ஆக்குகிறது தானே.  நான்குசக்கர வாகனப் பயிற்சியில் ஈரச் செம்மண் உழுதுபோடப்பட்டது போல வட்ட,நீள்வட்டத் தடங்களுடன் கிடக்கிறது.  யாருமே இல்லை. வேறு ஏதோ ஒரு பூகோளத்தைப் பெயர்த்துத் துண்டாக்கி இங்கே வைத்துவிட்டுப் போனதாக அந்தச் செம்மண் தரை அந்த வாகனத் தடங்களுக்குள் சுழல்கிறது.

என் காலடியில் ஒரே ஒரு இலை. கொய்யா இலை போல, சற்றுத் தடித்த நரம்புகள் உடைய, மொரமொரப்பான இலை. ஒரு  ஒற்றை இலை மட்டும். நான் அதை உதிர்த்த மரத்தைப் பார்க்க விரும்பினேன். முடிந்தால், அந்த மரத்தின் கிளைகளில் அமர்ந்திருக்கும் சிறுபறவைகளைக் கூட.

எதிரே வந்தவர் கூட ஒரு பறவை போலத் தான் இருந்தார். வெகு தூரம் திசை தப்பிப் பறந்துகொண்டே இருக்கிற களைத்துப் போன பறவை. முப்பது முப்பத்தைந்து வயது தான் இருக்கும். தனக்குத் தானே பேசிக்கொண்டு செல்கிறவர்களை மேற்கு மாம்பலத்தில் பார்த்திருக்கிறேன். இங்கு அபூர்வம்.
“எல்லாம் ஓப்பன் சீக்ரெட் ஆயிட்டுது. ஓப்பன் சீக்ரெட்” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே போனார். என்னைத் தவிர யாருமற்ற அந்தப் பிரதேசத்தில், அவருடைய அந்த திறந்த ரகசியத்தைத் தாங்கமுடியாமல் துடித்து அந்த ஒற்றை இலை மட்டும் சற்று நகர்ந்திருக்கக் கூடும்.

எதிரே நாம் கண்டடைவதை எல்லாம் தொலைத்துவிட்டு, உள்ளே வேறு ஏதோ ஒரு தேடல் நடந்துகொண்டிருந்ததில், “வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து” என்ற வரி பிடிபட்டு, ஏற்கனவே வசப்பட்ட இரண்டு அடிகளுடன் சேர்ந்துகொண்டது.

நுனிக்கொம்பிலிருந்து அடிமரத்துக்கு இறங்குகிற பித்தத்தில்  பாசுரத்தின் விழுதில் தொங்கி வேருக்குப் போகிற முயற்சி. அந்த மூன்று வரிகளை மட்டும் சொல்வது ஒரு விளையாட்டுப் போல் ஆகிவிட்டது. மைதானம் முடிகிற இடத்தில் வலது புறம் திரும்பினால் தென்றல் நகர். அதையும் தாண்டினால், பாரதி நகர் மூன்றாம் தெரு. அதற்குள் முழுதும் ஞாபகம் வராமலா போகும்?
இடது புறப் பச்சையைப் பார்த்துக் கொண்டே போகிறேன். அப்படி ஒரு அடர்த்தியுடன் புல் முளைத்துக் கிடக்கிறது. மழைக்குப் பிந்திய தாவரங்கள் பனிக்காலத்தில் பூப்படைந்து விடுகின்றன. கரும்பச்சை மினுமினுப்புடன் புல்லே பூவாகத்தான் இருந்தது.

புல்லுக்கிடையில் வெள்ளையாகப் பூத்தது போல ஏதோ கிடந்தன. ‘கொக்குப் பூத்த வயல்’ என்ற தேவதேவன் வைத்த நாவல் தலைப்பு ஞாபகம் வந்தது. வயலுக்கு மேல் நாரைகள் பறக்கிற, அவரவர் பார்த்த காட்சிகள், உங்களுக்கும் எனக்கும்  இப்போது வந்திருக்கும்.  தூரத்தில் ஒரு அவுரிச்செடி அசைவு. நாம் தூரத்திலும் பக்கத்திலும் பார்க்கிறவர்கள். சில பொழுதுகளில் தூரமே அற்றும்
பக்கத்திலிருந்து விலகியும்.

புற்களின் இடையில் சுக்கல் சுக்கலாகக் கிடந்தது ஒரு கடிதம். அப்போதுதான் கிழித்து எறியப்பட்டிருக்கக் கூடிய பீங்கான் வெள்ளையில் அவை எந்தச் சிறு கசங்கலும் இன்றி, பச்சை வலையில் பிடிக்கப்பட்ட  வெள்ளைச் சதுர மீன்களாக வாய்பிளந்த தன் கடைசிச் சுவாசத்தில் தவித்துக்கொண்டிருந்தன.
யார் யாருக்கு எழுதிய கடிதமோ? எழுதியவரோ பெற்றவரோ முழுதுக்கத்துடன் அல்லது முழு வெறுப்புடன் கிழித்து வீசியிருக்க வேண்டும். விரல் நுனி வரை பரவியிருந்த ஆவேசத்துடன், இதற்கு மேல் அடைய வாய்ப்பற்ற ஆகச் சிறிய
துணுக்குகளாக அவை அப்படிக் கிடப்பது எனக்கு ஏன் அவ்வளவு பதற்றம்
உண்டாக்கியது என்று இப்போதுவரை தெரியவில்லை.

அடுத்த பத்தாவது அடியில், நனைந்து கருத்த தார் மினுங்கும் ஜல்லிக்கல் பாதையில்  பவளம் உருள்வது போல், ஒரு வெல்வெட் பூச்சி இடமிருந்து வலமாக நகர்ந்துகொண்டிருந்தது.

நான் வருவதை அவர்கள் பார்த்துவிட்டார்கள். எனக்கு எதிரே வருவதற்கு அவர்களுக்குச் சம்மதமில்லை. முக்கியமாக அந்த அம்மாவுக்கு. தன்னுடைய வீட்டின் அகலமான இரும்பு கேட்டிற்குள் தன்னையும் தன் மனவளர்ச்சியற்ற மகனையும் ஒளித்துவைத்துக் கொள்வது போல், உள் ஒடுங்கி நின்றார்கள். அந்த இருபது இருபத்தைந்து வயது ஆணின் முகம் இந்தக் காலையில் அவனுக்கு மட்டும் நட்சத்திரங்கள் உதித்துக்கிடக்கும் வானத்தில் போய் அமர்ந்திருப்பது போல் சிரித்துக்கொண்டிருந்தது. வெளியே வந்துவிடும் ஆர்வத்தில்  அந்த இரும்புக் கதவை நடுவில் பிளப்பது போல அவன் உந்தித் தள்ள, ஆதாரம் தவறி அந்தத் தாய், புகைப்படத்துக்கு சாத்திய மாலை அதன் ஒருபக்க ஆணியில் இருந்து அவிழ்ந்துதொங்குவதாக, சட்டென்று தன் பாதி உடலுடன் வெளியே சரிந்து, நிதானித்தது. விழுந்துவிடவில்லை. அத்துடன் விட்டிருக்கலாம். அந்தப் பையன் முகத்தில் வேகமாகக் கையை வீசி அடித்தது. நெஞ்சில் கைவைத்து மகனை உள்ளே தள்ளியதை  நான் பார்த்துவிட்டதும், அழ ஆரம்பித்தது.

எனக்கு மறுபடியும் புல்லுக்கு இடையில் சுக்கல் சுக்கலாகக் கிடந்த அந்த வெள்ளைத் துணுக்குகள் ஞாபகம் வந்தன. இதுவரை உச்சரித்துக்கொண்டு இருந்த வரிகள் உட்பட எல்லாவரிகளும்  தீயினில் தூசாகிவிட்டிருந்தன.

இப்போது செப்புவதற்கு ஒன்றுமே இல்லை என்னிடம்.

%

Wednesday 28 November 2012

அசையும் உணர்கொம்புகள்


மரணம் கலைத்துப்போட்ட
பிளாஸ்டிக்  நாற்காலியில்
தனித்திருந்தேன்.
அந்தக் குழந்தை என்னிடம் வந்தது.
‘தாத்தா, எனக்கு நத்தை வேண்டும்”
வேப்ப மரத்தைக் காட்டி, கேட்டது.
ஒரு மஞ்சணத்திக் காய் போல
அப்பியிருந்த நத்தையை
பிய்த்து எடுத்துக் கொடுத்தேன்.
பிஞ்சு உள்ளங்கையில்
பயணமற்றுக் கிடந்தது நத்தை.
‘வெயிலில் விடு’ என யாரோ சொன்னார்கள்.
‘புல்லில் விட’ச் சொன்னேன் நான்.
வெயிலும் புல்லும் அற்ற
தண்ணீர் கசியும் ரப்பர்குழாயின்
நெளிவின்மத்தியில் இட்டது அதை.
சற்றுக் காத்திருந்தது.
கையை விரித்து, உதடு பிதுக்கி
நத்தையுடனான அதனுடைய
ஒப்பந்தத்தை ரத்து செய்து
வேறொரு உலகம் சிருஷ்டிக்க
குழந்தை நகர்ந்தது.
உறவு முறையை உரக்கச் சொல்லி
வெடித்துக் கதறியபடி இறங்கி
வாகனக் கதவு திறப்பவர்களிடம்
தரையில் கிடந்த வெயில் ஓடிப்போகையில்
காணாமல் போயிருந்த வேப்பமர ஞாபகத்துடன்
ஊர்ந்துசெல்லத் துவங்கியிருந்தது
உணர்கொம்புகள் அசையும் நத்தை.

%

’கல்யாணி’ எனக் கனவில் கூப்பிட்ட
அதே ‘அவன்’ ஞாபகமாக.

அழைக்கிறவன்.


இன்னும் அந்தக் கனவிலிருந்து என்னால் வெளியேறிவிட முடியவில்லை. ஒரு  மூன்று தினங்களாக அந்தக் கனவு துரத்திக் கொடிருக்கிறது. ‘கல்யாணி, கல்யாணி’ என்று  அவன் கூப்பிடும் குரலை நான் உதறிவிட்டுத் தப்பித்து வந்துவிட்ட குற்றவுணர்வின் பளு என்னை நசுக்கிக்கொண்டு இருக்கிறது. இந்த குளிர் இறங்கிக்கொண்டிருக்கும் தொட்டதோகூர் அடுக்ககம் ஒன்றின் முன்னனறையில் என் பின்னிருந்து அந்தக் குரல் எட்டிப்பார்த்துக்கொண்டு இருக்கிறது.

அவன், என் கதைகளில் வரும் ‘சிவன்’,என்னைத் தனியனாக்கிவிட்டுப்
போய்  கிட்டத்தட்ட  நான்கு மாதங்கள் இருக்கும். என்னை விட அவன் ஏழு வயது சின்னவன். ஆனால் ஏழு பிறவிகள் மூத்தவன். என்னை அவன் தன்னோடு வைத்துக்கொள்ள இவ்வளவு விரும்பியிருப்பான் என்பது, இந்தக் கனவு வரை தெரியாமலே போயிற்று.

இத்தனைக்கும் அந்த இரவு திருநெல்வேலியுடையது கூட அல்ல.   இதற்கு முந்திய நான்கைந்தாக, சென்னையில் இருந்த தினங்களில் அவனுடைய ஞாபகம் ஒரு முறை வந்தது என்று சொல்லிக்கொள்ள எந்தத் தருணமும் இல்லை. வாசிப்பதற்கு எந்தப் புத்தகமும் எடுத்துக்கொள்ளாத தப்பைச் செய்த, வழக்கம் போல அதிகம் உரையாடலற்ற சதாப்திப் பயணத்திற்குப் பிந்திய மின்னணுநகரின் இரவில் அவன் அவ்வளவு தீவிரமாக என்னை அழைக்கும் கனவு வர எந்த முகாந்திரமும் இல்லை. நட்பை விடக் கூடுதல் முகாந்திரம் என்ன வேண்டியதிருக்கிறது?

அதே வெள்ளைக் கதர் சட்டை. கதர் வேட்டி. அவனும் நானும் ஏதோ ஒரு நகரமும் கிராமமும் அற்ற ஊரில் நடந்து போய்க்கொண்டு இருக்கிறோம். பகலா இரவா, தெரியவில்லை. வெயில் அல்ல, நிலவு அடிக்கிற பின்னிரவு போலத்தான் தெரு தன்னை வைத்திருக்கிறது. ஒரு வீட்டின் துப்புரவான திண்ணை  நிறைய இறந்த காலத்தை அதன்மேல் பாய் போல விரித்து வைத்திருந்தது. அந்த மரத் தூணின் வயதை அனுமானிக்க முடியவில்லை. அந்தக் கொல்லம் ஓடுகளுக்கு என்ன வயதோ, அதற்குக் கூடக் குறைய தூணுக்கும் இருக்கலாம். எங்களைத் தவிர யாரின் நடமாட்டமும் இல்லை. அவன் பேசிக்கொண்டே வருகிறான். வாய்க்கு வாய் சிரிக்கிறான். சொல்லுக்குச் சொல். ‘கல்யாணி’ என்கிறான்.  கையில் எதையோ வைத்திருக்கிறான். என்ன என்று அவனும் சொல்லவில்லை. எப்போதும் போல நானும் கேட்கவில்லை. எனக்கு அல்லது யாருக்கோ கொடுத்து விடுவதற்கானதாக அதை அவன் வைத்திருக்க வேண்டும் என்று இப்போது தோன்றுகிறது.

ஒரு இடத்தில் பாதை திரும்பியது. நீர்க்கருவை மரங்கள் நிறைந்த பகுதி அது. அந்த இடத்தை மட்டும் ஏற்கனவே பார்த்த மாதிரி எனக்குத் தோன்றுகிறது. பார்க்கவே பார்க்காத ஊரில், ஏற்கனவே பார்த்த மரங்கள் எப்படி முளைத்தன எனத் தெரியவில்லை. அவன் குனிந்து கையில் வைத்திருந்ததை அந்த முள் மரங்களின் மூட்டில் வைக்கிறான்.

‘வாங்க கல்யாணி.இப்படி போய்விட்டு வருவோம்’ என்கிறான். அவன் கூப்பிட்டால் இதுவரை எங்கும் போனவன்தான். இன்றும் போகத் தயாராக
பக்கத்தில் நிற்கிறேன். ‘இதையும் எடுத்துக் கொள்கிறேன்’ என அவன்
குனிகிற இடம் காலியாக இருக்கிறது. ‘இங்கேதானே வைத்தேன்’ என அவன் சொன்ன இடத்தின் காலியில்தான் எனக்கு ஏதோ  ஒரு இருட்டு பிடிபடுகிறது. இல்லாமல் போனவன் எப்படி இருக்கிறான் என்று யோசிக்கும் போதே நான் விலகத் துவங்கிவிட்டேன். அவன் இங்கும் அங்கும் தேடித் தேடி நகர நகர,  நான் ஒரு பதற்றத்தை அடைந்திருந்தேன்.  அவனுக்கும் எனக்குமான இடை வெளியை அவனறியாமல் அதிகப்படுத்தும் கேவலமான உபாயங்களை நான் தேர்ந்தெடுக்கத் துவங்கிவிட்டேன். எனக்கும் அவனுக்கும் இடையே  சாம்பல் படுதா அலைய, நான் இதுவரை என்னைச் செருகிவைத்திருந்த இடத்தில் இருந்து என்னைச் சத்தமே இன்றி உருவியபடி, என்னுடைய வேறொரு திசையைக் கண்டுபிடித்துவிட்டேன்.

கல்யாணி’ என்று அவனுடைய கூப்பிடுதலின் முதல் சத்தத்தை உடனடியாக நான் கத்தரித்துக்கொண்டவிதம், இப்போது நினைக்கையில் அருவெறுப்பு உண்டாக்குகிறது. எந்த அழைப்புக்காக நான் ஒவ்வொருதினமும் சமீப நாட்களில் தொடர்ந்து தவித்தேனோ, அதைத் தவிர்ப்பதற்கு, ஏறக்குறைய  நான் ஓடத் துவங்கியிருந்தேன்.  அவன் திரும்பத் திரும்ப, ‘கல்யாணி, கல்யாணி’ என்று கூப்பிடுகிறான். ‘போகாதீங்க கல்யாணி’ என்று அவன் சொல்லவில்லை.

‘கல்யாணி, கல்யாணி’ என்ற அந்த அழைப்பைப் புறக்கணிக்க முடிகிற
 இத்தனை அசிங்கமான ஒருவனாக நான் எப்போது மாறினேன் என்று தெரியவில்லை. அல்லது ஏற்கனவே நான் அப்படித்தான் இருந்து, அப்படி இல்லாதவனாகப் பாசாங்கு செய்துகொண்டு இருக்கிறேனா?

நான் வாய்விட்டு உளறிக்கொண்டு விழித்தபோது , அவனுடைய  பெயரைச் சொல்லியிருக்கலாம். . நிச்சயமாக என் கனவில்  விட, நனவில் நான் உண்மையாக இருந்திருப்பேன்.  முன்பின் பரிச்சயமற்ற இந்த வீட்டின் கட்டிலில் அதிர்ந்து எழுந்து உட்கார்ந்த போது, அவனுடைய குரல் ‘கல்யாணி’ என்று கூப்பிடுவது இன்னும் எனக்குக் கேட்டுக்கொண்டே இருந்தது.

துக்கமும் தவிப்பும் அடர்ந்த அந்தக் குரலின் அழைப்பை ஒப்புக்கொள்ள நான் இந்த நிமிடம் தயாராக இருக்கிறேன் என்பதை அவனிடம் எப்படிச் சொல்ல?.

Tuesday 20 November 2012

நேற்று, ஒன்று. நன்று.
இன்றைக்கு தமிழச்சியிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. அவர் விகடனின் ‘இன்று, ஒன்று, நன்று வழிப் பகிர்வில் கவிதைகள் குறித்துப் பேசுகிறாராம். என்னுடைய கவிதைகளை
மேற்கோள்கிறாராம். முடிந்தால் கேட்டுப்பாருங்கள் என்று அனுப்பியிருந்தார். கேட்டேன்.

ஒரே பாதையில்
ஒரு விளக்கடியில்
அவனும் அவளும்
விலகி நடக்க,
நீளச் சரிந்த நிழல்கள் மட்டும்
கூடிக் கூடிக்
குலவிப் பிரிந்தன

என்ற ஒன்றும்

ஆற்றில் குளிப்பவர் எல்லோர்க்கும்
பிடித்திருக்கிறது
அசைந்து மிதந்துவரும் பூவை.
அது தங்களுக்கு என்று
நினைத்து நீந்துகிறார்கள்
அதன் திசையில்.
பூவோ நகர்கிறது
நீச்சல் தெரியாது
ஆறு பார்த்து அமர்ந்திருக்கும்
சிறுபெண் நோக்கி.

என்ற மற்றொன்றும்..

இந்த இரண்டாவது கவிதையாவது சமீபத்தியது. ‘மணல் உள்ள
ஆறுதொகுப்பில் இருக்கிறது. ஆனால் அந்த முதல் கவிதைக்கு குறைந்தது 35 அல்லது 36 வயது இருக்கும். நான் என்னுடைய
முதிர் இருபதுகளில் திருநெல்வேலி பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் காசாளராக வேலை பார்க்கையில் எழுதியது. அதை
நானே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அனுப்ப, எங்கள் வங்கியின் ‘இல்ல இதழ்ஆன COLLEAGUE வெளியிட்டு இருந்தது. கூடவே, அதற்கான் சன்மானக் காசோலை வேறு. நாற்பது ரூபாய் என்று
ஞாபகம். எழுபதுக்களில் நாற்பது என்பது சிறிய தொகை அல்ல.
பம்பாய்த் தபால்களில் ஒன்றாக அதுவும் வந்திருந்ததால், கிளை மேலாளரின் பார்வையில் பிரிக்கப்பட்டு, எனக்கு திருவேங்கட தாஸ் என்கிற ‘டபேதார்கையால் வழங்கப் பட்டது. கிளை மேலாளர்கள் காசாளரைத் திரும்பிப் பார்க்கக் கூட மாட்டார்கள். அது அவர்களின் மரியாதைப் படிநிலைகளுக்கு ஒவ்வாதது. நான் தாஸிடமிருந்து சந்தோஷமாக வாங்கிக் கொண்டேன். தாஸிற்குக் கடுமையான ஆஸ்த்மா உண்டு. வருடத்தில் ஆறுமாதங்களேனும் அவர் அந்த அவஸ்தையில், பேசக் கூட முடியாதவராக இருப்பார். (பேச முடிகிற சமயங்களில்   அவரிடம் இருந்து வீசப்பட்டுத் தாழ்வாரங்களில் குவிந்து கிடக்கிற கெட்ட வார்த்தைகளை அள்ளி முடியாது).  பேச முடியாததை ஈடுகட்டிவிடுகிற மாதிரி ஒரு சிரிப்பை முகம் எப்போதும் வைத்திருக்கும்.
எண்பதாம் ஆண்டிற்குப் பிறகு என்னைப் பார்த்தவர்களுக்கு என் முகத்திலும் அந்தச் சிரிப்பைப் பார்த்திருக்க முடியும்.  நுரையீரல்
காற்றறைகளில் சிலந்திக் கூடு கட்ட ஆரம்பித்த பின் நானும் அந்தச் சிரிப்பைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருந்தேன். அந்த வகையில் திருவேங்கட தாஸ் என்னுடைய ஆசான் ஆகிறார். அவரிடமிருந்து இந்தக் கவிதைக்கான். என் காசோலையைப் பெற்றுக் கொண்டதில் எனக்கு இப்போது மகிழ்ச்சிதான்.
அந்தக் கவிதையை தமிழச்சி எடுத்துச் சொல்லி, என்னை சுமார் முப்பத்தைந்து வருடங்கள் பின்னகர்த்தி இருக்கிறார். அதைவிட
ஆச்சரியமும் மகிழ்ச்சியும் தருவது, தானும் தொடர்ந்து கவிஞராக  இயங்கிகொண்டு இருக்கும் ஒருவருக்கு, அதுவும் அதிகம் ஆங்கில இலக்கிய வாசிப்பு உடையவருக்கு, ஊடகம்
தந்திருக்கிற, நிறையப் பேரை அடைய முடிகிற ஒரு தொலை பேச்சு வாய்ப்பில் சொல்லத் தோன்றுகிற அளவுக்கு, ஏதோ ஒரு வகையில் இந்தக் கவிதை நினைவில் நின்றிருப்பது.

இந்தக் கவிதையை எழுதியதற்காக என்பதை விட, இது ஆங்கில வடிவில் வெளியானதற்காக என் கைகளைக் குலுக்கிய அழகிய நம்பி இப்போது இல்லை. தாஸ் எந்த இடையூறுமற்று தன் மூச்சை நிறுத்திவிட்டார்.. சொல்லப் போனால் சமீபத்தில் தீவிர ஆஸ்த்மா தொந்தரவுகள் அதிகமற்ற எனக்கு, ஒருவேளை இன்று மூச்சிழைப்பு வரலாம்.
அதிகம் உணர்ச்சிவசப்படும் போது, உறங்கிக் கொண்டிருக்கும் ஆஸ்த்மா தீவிரமடைந்து கூத்தாடுகிற முன் அனுபவங்கள் எனக்கு உண்டு. நான் என்னுடைய அந்த முப்பத்தைந்து வருடங்களுக்கு முந்திய அந்த எளிய கவிதையைக் கொண்டாடும்
வகையிலேனும்  இன்னும் சில அதிக தடவைகள், என்னுடைய தினசரி உபயோகத்தில் இருக்கும் ’அஸ்த்தாலின் இன்ஹேலரை’ இன்றிரவு உபயோகிக்க விரும்புகிறேன்.
இதோ துவங்குகிறது என் நுரையீரல் உட்சுவர்களுள் ஒரு இழை பின்னும் சிலந்தியில் எடையற்ற நடமாட்டம்.

Monday 12 November 2012

அசையாத புல் போல
அநேகமாக பிற்பகலில்
நீங்கள் நடுக்கூடத்தில்
விருந்தினர்களோடு பேசிக்கொண்டிருக்கையில்
குடுகுடுப்பைகாரன் வருகிறான்.
அசையும் திரைகளினூடு
பனியால் வரைந்தது போல்
அவன் வாசலில் நிற்பது தெரிகிறது.
குடுகுடுப்பையின் வேகத்திற்கு நிகரான
அவனது குரல்
முற்றிலும் புரியவில்லை உங்களுக்கு.
ஒரு பயம் மட்டும்
உருளத் துவங்குகிறது
உங்களது அடிவயிற்றில்.
அவனை ஏதாவது சொல்லி
அப்புறப்படுத்திவிட்டால் நல்லது எனும்
தவிப்பைத் தவிர்க்க முடியவில்லை
உங்களுக்கு.
கை வளையல்களை அனாவசியமாக
நகர்த்திக் கொள்கிறீர்கள்.
எதிரில் இருப்பவர் மீதான
கவனம் முற்றிலும் சிதறின முகத்துடன்
நீங்கள் வியர்வையை ஒற்றிக் கொள்கையில்
விருந்தினர் வீட்டுப்பையன்
அவனாக எழுந்து போய்
குடுகுடுப்பைக்காரனைப்  பார்க்கிறான்.
கொஞ்சம் சிரிக்கவும் செய்கிறான்.
ஒன்றும் சொல்லாமல்
சட்டைக்காலர் நுனியைக்
கடித்துக்கொண்டு மேலும் பார்க்கிறான்.
அசையாத புல்போல
ஒரு சிறு பொழுது
அவர்களுக்கிடையில் நிற்கிறது.
குடுகுப்பைக்காரன் காலடியில்
அடுத்தடுத்த வீட்டுக் கோலம்
வந்துவிடுகிறது இப்போது.

%

தீபாவளியின், பொங்கலின் பிற்பகலில் எங்கள் வீட்டு வாசலுக்கு
வரும் குடுகுடுப்பைக்காரர்களும் பாம்புப் பிடாரன்களும்  இப்போது
எங்கே போனார்கள். அந்த குடுகுடுப்பைச் சத்தமும் மகுடிச்சத்தமும்
உண்டாக்கிய பயம் நிறைந்த ஈர்ப்பெல்லாவற்றையும்  இந்த தினத்தின்
பிள்ளைகள் இனிமேல் ஒருபோதும் உணர்வதற்கில்லை.  அந்த வேகம்
நிறைந்தசொற்கள் குடுகுடுப்பையின் இருபக்கத் தோல்வட்டத்தில் மோதி மோதி அதிர்ந்துவருவதையும், ஒரு பசித்த அடிவயிற்றின் கடைசி
மடிப்பில் இருந்து உந்தப்பட்ட காற்றில் மகுடி விம்மிப் படமெடுத்து
ஒலித்து அடங்குவதையும்  நான் ஒருபோதும் மறப்பதற்கில்லை. 

சட்டைகாலரைக் கடித்துக்கொண்டு சிரிக்கவும் செய்கிற பையனுக்கும் பிடாரனுக்கும் இடையில் உள்ள தூரம் அல்லது நெருக்கம் என்னவென
உணர்ந்தால் மட்டுமே, அவர்களுக்கு இடையில் நிற்கிற, ‘அசையாத புல்
போல் ஒரு சிறு பொழுதை’ நாம் அறியமுடியும். அதற்கு முந்திய வரிகள் வரை, வழக்கம் போல ஒரு சித்திரத்தை வரைந்துவந்த நான், அசையாத புல் போல் என்ற அந்த இடத்திலிருந்து கவிதையாக்கிவிடுகிறேன். அந்த குடுகுப்பைகாரன் காலடியில் அடுத்தடுத்த வீட்டுக் கோலம் வந்து விடுவது எப்படி? 

எப்படியென்றெல்லாம் தீர்மானித்துச் சொல்லமுடியாது. அப்படித்தான் அவை வரும். அசையாத புல் போன்ற சிறு பொழுதிற்கு அதுவெல்லாம் சாத்தியமானதே.

%

உறக்கமற்ற மழைத்துளி
தொகுப்பில் இருந்து.

Saturday 10 November 2012

எச்சிலை மட்டும்


முற்றிலும்  குளிரூட்டப்பட்ட அறை.
தடுப்புக் கண்ணாடிகளை
ஊடுருவ முடியாது பார்வையால்.
நீங்கள் அமர்ந்திருக்கிற
உயர்தர இருக்கைகளிலிருந்து
சுழன்று திரும்பலாம்
அனைத்து திசைகளிலும்.
தேனீரோ காஃபியோ
காகிதக் குவளைகளில் சூடுபறக்க
நீங்களே ஏந்தி அருந்தலாம்.
மனதில் விழாத மெல்லிய இசை
காதில் விழும்.
செயற்கைக் கூழாங்கற்களை நனைக்கிற
செயற்கை நீரூற்றுக்கள் மூலைகளில்.
மிக விரைவில்
நாகரீகமான அடிக்குரலில்
பேசும்படி உங்களை நீங்களே
கட்டுப்படுத்திக் கொள்வீர்கள்.
உங்களைச் சுற்றிமட்டுமல்ல,
கழிப்பறையிலும் உணரமுடியும்
வாசனைத் தெளிப்பான்களை.
எந்தச் சிரமும் உங்களுக்கின்றி
எல்லாம் தானியங்க,
மேலாளரின் அறையிலிருந்து
திரும்புமுன், உங்கள் முகத்தில்
துப்பப்பட்டிருக்கிற எச்சிலைமட்டும்
நீங்களே துடைத்துக் கொண்டால்
போதும்.

%

உறக்கமற்ற மழைத்துளி
தொகுப்பிலிருந்து.
கல்யாண்ஜி.

Wednesday 7 November 2012

எப்போதும்நீ மீன் சாப்பிடுவாயா?
சாப்பிடுவேன் எப்போதாவது.
எத்தனை மீன்களின் பெயர்கள் தெரியும்?
என் எல்லா மீன்களுக்கும்
மீன் என்பது மட்டுமே பெயர்.
போகிற வழியில் மீன்கடைகளைத்
தாண்டிப் போவதுண்டா?
எதையும் தாண்டாமல்
எங்கும் போகமுடியாது.
மீன் வாங்கும் நண்பருடன் போனால்
விற்பவரே சொல்லிவிடக் கூடுமே
மீனின் பெயர்களை?
மீன்களின் நீந்தும் பெயர்களை
அதனதன் தண்ணீரிலிருந்து
அறிந்துகொள்ளவே  ஆசை.
உன்பேச்சில் உப்பிருக்கிறது.
ஆமாம். நம் எல்லோரிடமும்
ஒரு கடல் இருக்கிறது.
கடல் இருக்கட்டும். நீ எப்படி இருக்கிறாய்?
நாம், அவ்வப்போது இருக்கிறோம்,
மீன்களாக, நீந்திக் கொண்டு
அல்லது, ஒரு தூண்டில் முள் முன்.
அல்லது ஒரு கச்சிதமான
கண்ணாடித் தொட்டிக்குள் எப்போதும்.

%

இன்னொரு கேலிச்சித்திரம்
தொகுப்பிலிருந்து.

Tuesday 6 November 2012

இன்னும் சில


எப்படி இந்தச் சாத்தியம்
என்று நம்பமுடியவில்லை எனக்கு.
சகபயணியின் வாசிப்பில்
இருந்த புத்தகம்
இறந்துபோன யமுனாவுக்கு நான்
கையெழுத்திட்டுக் கொடுத்தது.
சில கவிதைகளின் தலைப்பை
டிக் செய்திருந்தாள்.
சிலவற்றில் பெருக்கல் குறிகள்.
இரண்டு மூன்று வரிகளின்
இடப்புறம் அங்கங்கே
பென்சில் சுவராக யமுனாவே
நின்றுகொண்டிருந்தாள்.
சில சொற்களுக்கு மட்டும்
அடிக்கோடு இருந்தது.
சில அச்சுப்பிழைகளுக்குத்
திருத்தங்கள் கூட.
ஒரு கவிதையின் கடைசிவரிகளை
அவளே வேறுவிதமாக
எழுதிப்பார்த்திருந்தாள்.
புரட்டிக்கொண்டே வந்தால்
ஐம்பத்து மூன்றாம் பக்கத்திற்கு
அப்புறம்  எந்தவிதமான
அடையாளங்களும் இல்லை.
பென்சில் முனைமுறிந்துபோனதா?
யமுனா மீதிப்பக்கங்களை
வாசிக்கவில்லையா?
அல்லது
எண்பதாம் பக்கத்திற்கும்
இதற்கும் இடையில்தான்
உறக்க மாத்திரைகளை அவள்
விழுங்கத் துவங்கினாளா?
ஒரு கவிதைப் புத்தகத்தில் இவ்வாறாக
ஒளித்துவைக்கப்பட்டிருந்தது
எழுதப்படாத ஒரு தற்கொலைக் குறிப்பும்
இன்னும் சிலவும்

%

இன்னொரு கேலிச்சித்திரம்
தொகுப்பிலிருந்து.

Saturday 3 November 2012

கொஞ்சம் சிந்தியிருந்தது...நானும்.


எனக்கு வாசிக்கத் தெரியாது.
நானும் வைத்திருக்கிறேன்
ஒரு புல்லாங்குழல்.


%

சுற்றுச் சுவர்களில்.


எதிர்பார்க்கவே இல்லை.
அந்தக் கவிஞரின் புதிய வீட்டுச்
சுற்றுச் சுவர்களில்
எந்தப் பறவைகளும்
பூனைக்குட்டிகளும்
அமர முடியாதபடி
கண்னாடிச் சில்லுகள்
பதிக்கப்பட்டிருக்கும் என.

%

சொல்லப்போகும்...


இரண்டே இரண்டு கிளிகள்
வந்தமர்ந்த மின்கம்பத்தில்
பத்து அமர்ந்து பறந்ததாகச்
சொன்னபோது அவள் கைகளும்
விரிந்து பறந்தன.
பெய்யாத ஆலங்கட்டி மழையைப்
பொறுக்கி வாயில் இட்டதும்
பல் கூசியதாக சினேகிதியிடம் சொல்கையில்
இரண்டு கன்னங்களிலும்
கைகள் பொத்தியிருந்தன.
வீட்டிற்குள் வந்து அவசரமாக,
தண்ணீர் குடித்து ஓடிய நேரம்
அடுத்து அவள் சொல்லப் போகும்
பொய் கொஞ்சம் சிந்தியிருந்தது
மண்பானையின் அருகில்.

%

இன்னொரு கேலிச் சித்திரம்
தொகுப்பில் இருந்து.


Friday 2 November 2012

கலங்கிய கடல்


நேற்று கடல் பார்த்தேன். இது வரை பார்த்த கடல் இல்லை. வேறு மாதிரி இருந்தது.அனேகமாக நீலத்தைத் தொலைத்திருந்தது. கடைசி விளிம்பில் ஒரு இழை போல ஒட்டிக்கொண்டிருந்த நீலத்தில் அடங்காமல் கடல் மழைக்காலக்
குளம் போல மண் நிறத்தில் புரண்டுகொண்டிருப்பதை அதிக நேரம் பார்த்துக் கொண்டு நிற்கமுடியவில்லை. நிஜமாகவே என் காலகளுக்குக் கீழ் இருந்த நிலத்தை அது உருவியது மணல் பறித்து. ஒரு பயத்துடனும் துக்கத்துடனும் நான் பின் வாங்கினேன். கடலுக்குள் இறங்கப் பயப்பட்ட தன்னுடைய சினேகிதியின் கையைப் பிடித்து இழுத்து, காலடியில் அலைவரக் காத்திருந்த அந்த சோனகன் விளை முகத்துச் சிரிப்பை நின்று ரசிக்க இயலவில்லை. பயந்த கொலுசுக் கால்களின் மங்கல் வெள்ளி மினுக்கத்தின் மீது உப்புக் கரிக்கும் முன்பு  நான் கடலில் இருந்து விலகிவிட்டேன்.

சற்று மேடான பகுதியில் இருந்து வேறு ஒரு கோணத்தில் பார்க்கும் போதும் கடலின் அந்த மண் நிறம் துன்புறுத்தியது. அது என்னை விடவும் ஒரு பெரும் வலியில் புரள்வதாகவே நினைத்தேன். ஒரு பொது மருத்துவ மனைக் கட்டிலில்  தன் தீக்காயங்களின் இறுதி அவஸ்தையில் தன் ஞாபகமற்று முனங்கிய முகம்  மறுபடியும் தோல் பொசுங்கிக் துடித்தது. இதுவரை கடல் என சேமித்துவைத்திருந்த அத்தனை நீலச் சித்திரத்தையும்  அது அழித்துக் கொண்டிருந்தது. ஒருவேளை, அதற்கு முந்திய நாள் கரைகடந்த ‘நீலம்’ புயலின் தூரத்துப் பாதிப்பாகக் கூட அது  இருக்கலாம். கடல்  என்னிடம் அது குறித்து ஏதும் சொல்ல விரும்பியிருக்குமோ.? நான் தான் நின்று கேட்காமல்
கடலின் வாதை நிரம்பிய குரலைப் புறக்கணித்து விட்டேனோ?

%

வீடு திரும்பிய பிறகும்  கடலின் கலங்கல்  நிறம் மங்கவில்லை.
அர்ச்சனைப் பிரசாதம் வைத்துக்கொடுத்திருந்த அந்த சிவப்பு விளிம்பு ஓலைக் கொட்டானில், திருநீறு வாசம் அடிக்கிற தேங்காய்ப் பிளவில், வதங்கல் பூ வாடைக்கே உரிய ஈர்ப்புடன் தொய்ந்துகிடக்கும் மாலையில் எல்லாம் அந்தக் கலங்கல் கடல் மிச்சம் இருந்தது. ஒலியற்று ஓடும் திரைப்படம் போல  என் எட்டுத் திக்கிலும் ஒரு பழுப்பு நிற அலையடிப்பு இருப்பதையும்,  நான் அதில் கால் நனையாமல் கரைவாங்குவதையும் யாரும் அறிந்திருக்கவில்லை.

அன்று முழுவதும் எட்டிப் பார்த்திராத முகப் புத்தகத்தை திருப்பும் போது, மிகத் தற்செயலாக, அந்த நிலைத் தகவலும் வண்ணப்படமும் வெளி ரெங்கராஜன் அவர்களால் இடப்பட்டிருந்தது.  ‘தமிழால் இணைவோம் ...’ என்ற தலைப்பில் திரு. ட்டி. செல்வகுமார் எடுத்திருந்த அந்த அற்புதமான படம் என்னை ஒரே கணத்தில் கடலில் இருந்து அகற்றிவிட்டது.
இரண்டு தப்பாட்டக் கலைஞர்கள், தங்களை மறந்த லயத்துடன், ஒரு பெரும் நடனமாக ஒத்திசையும் உடலசைவுகளுடன்,வியர்வை மினுமினுங்க,  புல் தரைக்கு மேல் ஒரு சாண் உயரத்தில் அவர்களின் சலங்கை கட்டிய கால்கள் அந்தரத்தில் மிதக்கிறார்கள். எனக்குத் தப்பாட்ட நுணுக்கமும் தெரியாது. கலை என்ற அளவுகோலுடன்  புகைப்பட நுணுக்கங்களும் தெரியாது.  ஆனால் நான் தப்பாட்டம் ஆடிக்கொண்டிருந்தேன், அந்தப் படத்தில் இல்லாத மூன்றாவது மனிதனாக. எனக்குப் பறையொலி கேட்டது. சலங்கை ஒலி கேட்டது. என் உடல் வியர்த்திருந்தது. சற்று அந்தரத்தில் உடலை வீசியிருக்கும்  என்னை வாங்கிக் கொள்ள, புற்கள் பச்சையாக அண்ணாந்து நிற்பதை உணரமுடிந்தது.
பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு முன் திருப்பரங்குன்றம் கலையிரவில் முதல் முதல் பார்த்த தப்பாட்டம் - சக்தி குழுவா அது? -  மறுபடி, மின்சாரம் தவறிய இந்த சிதம்பர நகர் தெருவில் பெருந்துள்ளலுடன் நிகழ்ந்தது.இரண்டு விரல்களைக் கடைவாயில் செருகி அடிக்கிற ‘சீட்டி’ ஒலியில், தொலைபேசி இழையில் வழக்கமாக உட்கார்ந்திருக்கிற இடத்தை விட்டு  ஆந்தை பறந்து போனது.
எனக்கு அந்தப் பைத்தியக்காரி நினைவுக்கு வந்தாள். அதுவும் மதுரைதான். எஸ்.எஸ்.காலனியில் என் நண்பர் சந்திரனின் தேவன் மெடிக்கல்ஸ் கடை வாசலில் நிற்கிறேன். எதிரே என்ன நல்லதோ, கெட்டதோ தெரியவில்லை. வைக்கோல் துரும்பை எரித்து, அதில் தப்பு வாசிப்பதற்கு முந்திய ஏற்பாடாக, ‘பறை காய்ச்சு’கிறார்கள். அகலாது அணுகாது தீக்காய்ந்து, தப்புவினுடைய  தோலுக்கு முறுக்கேற்றுகிறார்கள். இடையிடையே  கண்கண்ணென்று சுண்டிப்பார்த்துக் கொள்கிறார்கள். அந்த ஆரஞ்சு நிறத் தீயையும், அவர்கள் பறை காயச்சுவதையும் அந்தப் பைத்தியக்காரி அசையாமல் பார்த்தபடி அப்படியே நிற்கிறாள். பித்தின் அந்தப் பெருநிலை அவளைப் பேரழகியாக்கி இருந்தது. ஒருவேளை பித்தம் தெளிந்த கணமாகக் கூட அது இருந்திருக்கும்.
அக்கணம் அவள் அழகி. அத் தீ அழகு.

%

இன்று அதிகாலை அந்த விகடன் கட்டுரையை வாசித்திருக்கக் கூடாது. “நேற்று நான் விடுதலைப் போராளி. இன்று ...பாலியல் தொழிலாளி” என்ற
அந்தப் பெண்புலியின் வாக்கு மூலம், ஏற்கனவே வெவ்வேறு விதமாகச் சின்னாபின்னப் பட்டுக்கொண்டிருக்கிற மனநிலையுடைய  என்னைப் போன்றவர்களை முற்றிலும் நிலைகுலைக்கிறது ஒவ்வொரு வரியும்.
ஒரே ஒரு பெண்ணுடைய,பிரசுரத்திற்குரிய வகையில் தணிக்கைசெய்யப் பட்டிருக்கும் வாய்ப்புள்ள, வாக்குமூலமே இப்படி இருக்கும் எனில், இதை விட வெளிப்படையான, ஒளித்துவைக்கப்பட்ட,முடக்கப்பட்ட, புதைந்துபோன ஆயிரமாயிரம் குரல்கள் எப்படியிருக்கும்?

 பெயர்      மாற்றப்பட்ட அந்தப் பெயரை , மறைத்துவைக்கப்பட்டிருக்கும்   அந்த  முகத்தை ‘உணர’முடிகிறது. ஈழப்போரை, விடுதலைப் புலிகள் இயக்கத்தை ,பிரபாகரனை, பெண் போராளிகளை, அந்த முள்ளிவாய்க்கால் தினத்தின் பெண் போராளிகள் அடைந்த கோரச்சிதைவுகளை,சிங்களப் பேரினவாத மிருகத்தனங்களை எல்லாம், இந்த ஒரே பதிவின் மூலம் என்னால்  முழுதாகஅறிந்து கொள்ள முடிகிறது. அடக்கமுடியாது பெருகுகிற கண்ணீரையும் விட வேறு எந்த வரிவடிவ ஆவணங்களும் அவசியமில்லை,

பாரதி ஏற்கனவே சொல்லிவிட்டான். “ சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும், சிந்தை இரங்காரடி கிளியே, செம்மை மறந்தாரடி” என்று.
நாம் நம்முடைய நடிப்புச் சுதேசிப் பாரம்பரியத்தை இப்போதும் காப்பாற்றிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆன்மாவை விற்பதற்கு நமக்கு சற்றும் எந்தத் தயக்கமும் இல்லை. சரியான விலை படிந்தால் சரிதான்.  அந்த விலை ‘வித்யாராணி’யாக இருந்தால் கூட.

%

கலங்கிய கடல், அந்தர அசைவுகளுடைய அந்த தப்பாட்டம், கொந்தளிப்பு நிறைந்த இந்த வித்யாராணியின் சொற்கள் ...  யோசித்துப் பார்த்தால், மூன்றும்
வேறுவேறு அல்ல. ஒன்றுதான் என்று தோன்றுகிறது.
நான் நேற்றுப் பார்த்தது அச்சடிப்பதற்கு முந்திய, கலங்கிய கடலாக இருக்கும்.

*
Tuesday 30 October 2012

இப்போதும்...


சமீபத்தில் பதிவு செய்யப்பட்ட மதுரை நிலையபொதிகைத் தொலைக்காட்சி
நேர்காணல் ஒன்றில்,சற்று வித்தியாசமான ஒரு கேள்வி இருந்தது. கமலவேலன் அந்தக் கேள்விக்கான தூண்டுதலை எங்கிருந்து பெற்றார் எனத் தெரியவில்லை.
என்னுடைய,‘ கூறல் ’ சிறுகதை அதிகம் கவனிக்கப்படாத என்னுடைய நல்ல் கதைகளில் ஒன்று என எஸ்.ராமகிருஷ்ணன் சொல்லி இருப்பதாகவும், அவரே இதை ஆங்கிலத்தில்  மொழிபெயர்த்திருப்பதாகவும் சொன்னார். (அந்த ஆங்கில மொழியாக்கம் குறித்து எனக்குத் தகவல் இல்லை. அது கமலவேலன் என் மீது அல்லது அந்தக் கதையின் மீது கொண்டிருக்கும் விருப்பத்தின் நீட்சியாக இருக்கலாம்). “இப்படி உங்களின் வேறு எந்தெந்தக் கதைகள், எழுதிய உங்களுக்குப் பிடித்து வாசகர்களால்  கவனிக்கப்படவில்லை என நீங்கள் நினைக்கிறீர்கள்?” என்பதுதான் அவர் கேள்வி. இந்த நீண்ட படைப்பியக்கத்தில், அந்தக் கேள்விக்குப் பதிலாகச் சொல்ல, கணிசமான கதைகள் அடங்கிய  ஒரு பட்டியல் என்னிடம் மட்டும் அல்ல, என்னுடைய  சக படைப்பாளிகளிடமும் நிறைய இருக்கும்.என்றே நினைக்கிறேன்.

தனிப்பட்ட கதைகளை விடுங்கள். என்னுடைய சில தொகுப்புக்களே கூட, அந்தக் கேள்விக்கு உள்ளாகியிருக்கின்றன.அதுவும் என்னிடமே. ’பெய்தலும் ஓய்தலும்’ என்ற சிறுகதைத் தொகுப்பும், ’உறக்கமற்ற மழைத் துளி”, “இன்னொரு கேலிச் சித்திரம்” ஆகிய கவிதைத் தொகுப்புக்களும்  யாரிடம் போய்ச் சேர்ந்தன என்றே எனக்குத் தெரியவில்லை.  அதற்குப் பிந்திய கதை, கவிதைத் தொகுப்புக்கள் விற்பனையாகிவிட்டதாக அறிகிற நிலையில், நான் நிஜமாகவே, வெகு தொலைவில் ஒரு புள்ளியைப் போலத் தெரியும் வாசகன் ஒருவன், நெருங்கி உருப் பெருகி, என்னிடம் அவற்றில் உள்ள ஏதேனும் ஒரு வரியைப் பகிர்ந்துகொள்ள மாட்டானா என இறுக்கமாகவும் துக்கத்துடனும் எதிர்பார்க்கத் துவங்கியிருக்கிறேன்.  “

மணல் உள்ள ஆறு” தொகுப்புக்கு அடுத்ததொரு ஒரு கவிதைத் தொகுப்பிற்குத் தயாராகிற என் மன நிலையை,’இன்னொரு கேலிச் சித்திரம்’ தொகுதி இன்னும் விற்றுத் தீரவில்லை, அதுவும் எவ்வளவு, வெறும் முன்னூறு பிரதிகள், என்று அறிவது, எப்படிக் குலைக்காமல் போகும்?  சந்தியா பதிப்பகம்  என்னிடம் காட்டும் தொடர்ந்த பரிவை, என் படைப்புக்கள் மேல் அவர்கள் வைத்திருக்கும் தீராத மரியாதையை. நான் சுரண்டுகிறேனோ என்ற கவலை எனக்கு உண்டு.

என்னுடைய அடுத்த கவிதைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதுவதற்கு முன், அந்தத் தொகுப்புக்கு ஒரு தலைப்பைத் தீர்மானிக்கு முன் இந்தக் கேள்விகளை எல்லாம் என்னிடமே நான் கேட்டுக் கொள்ளவேண்டியதிருக்கிறது. வேறு யாரிடமும் கேட்கமுடியாது என்பதும், கேட்பதற்கில்லை என்பதும் தானே உண்மையும்.

%

‘இன்னொரு கேலிச் சித்திரம்’ தொகுப்பில் இருந்து ஒரு கவிதை.

மின்வெட்டுச் சுமத்திய அடர் இருள்.
நான்
முதல் நொடி புத்தனைப்பற்றி யோசிக்கிற
கடைசி நொடி சித்தார்த்தனாக
அமர்ந்திருக்கிறேன்.
நிரந்தர அமைதிக்கும் 
அ-சத்தத்திற்கும் நடுவில்
தூரத்துப் போதி மரம்
தன் மாய அசைவின்மையுடன்.
*
ஒரு சதுரங்கக் காயைப் போல
தன்னை நகர்த்துகிற
உன்னுடைய திறமையைப்
பாராட்டுகிறான் புத்தன்.
அறுபத்து நான்கு
கருப்பு வெள்ளைக் கட்டங்களில்
அவனைச் சிப்பாய் ஆக்கிப்
பகடை ஆடுகிறாய் நீ.
*
புத்தரைப் போல்
நின்றுபார்த்தேன்.
கூடவில்லை.
புத்தரைப் போல்
அமர்ந்து பார்த்தேன்.
இயலவில்லை.
சுலபம்தான் என்று
புத்தரைப் போலச்
சிரிக்க முயன்றேன்.
புத்தர்தான் நிரித்துக்கொண்டிருந்தார்
என்னைப் பார்த்து இப்போதும்.

%

Monday 29 October 2012

கைகள்.


‘உன்னுடைய கைகள்தானே
வேறு யாருடைய கைகளோ போல்
பார்க்கிறாயே’ - என்றான்.
என்னுடைய கைகளைத்தான்
வேறு யாருடைய கைகளையோ போல்
பார்க்கிறேன்.
என்னுடைய கைகளை
என்னுடையதாகப் பார்ப்பதில்
என்ன இருக்கிறது?

%

விரலகளைப்  பிரிக்கும்போதே
கைக்குள் இருந்தது
இலைகளை அசைப்பதற்கு முந்திய  காற்று.
மணலை அள்ளினேன்.
கையில் காற்சுவடுகளுடன்
கரை இருந்தது.
நீரை அள்ளினேன்.
கையில் முடிவற்ற நதி இருந்தது.
அகண்டு கிடந்த
ஆகாயத்தை அள்ளிவிட்டு,
உள்ளேதான் இருக்கும்  என்று
திறக்காமல் வைத்திருக்கிறேன்
கையை.

%

உள்ளங் கைக்குள் ஏந்தக்கூடிய
முட்டை  அளவுக்கு அழகானது உண்மை.
நான் கை நழுவ விட்டிருக்கிறேன்.
அதைப் பொறுக்கி எடுத்ததும்
நான் தான் எனினும்
மஞ்சட் கருவும் வெள்ளைக் கருவும்
சிந்திச் சிதறி
உண்மையின் அருவெறுத்த முடை நாற்றம்.
தோடுகள் மட்டும் இன்னும் அழகாக்.
நீங்கள் உங்கள் முட்டைகளைச்
சிதறவிடுவதில்லை.
உயிரும் சிறகும் நிரம்பிய
ஒரு பறவையைப் பறக்க விட்டிருக்கிறீர்கள்
அதிலிருந்து.
ஏற்கனவே வானம் அழகானது.
மேலும் அழகாகியிருக்கிறது
அந்தப் பறவையால்.

%

கல்யாண்ஜி கவிதைத் தொகுப்பில் இருந்து.
Saturday 27 October 2012

வெளி மூச்சு.


பலிச் சோறு படைப்பது போலிருக்கிறது
ஆவி பறக்கிற உன் காமம்.
பீறிட்டுக் கொண்டிருக்கிற
வக்கிரம் அனைத்தையும்
உன் வெதுவெதுப்பான மார்பு  கரைத்துவிடுகிறது.
காணாமல் போன சீப்பை முன்வைத்து
நிலைக் கண்ணாடி உடைக்கிற என் கோபத்தை
உறிஞ்சிக் கொள்கிறது உன் ஆழ்ந்த முகம்.
மாந்தளிர் அசைக்கும் சிறுசெடிக்கு
நீர் வார்க்கிறது உன் முத்தம்.
விருப்பு வெறுப்புகளின் அமில எச்சிலை
என் வாயோரங்களிலிருந்து துடைத்துக் கொண்டிருக்கிறது
உன் வெளிறிய விரல்கள்.
எஞ்சிய என் கருத்த கசடுகளின்
ரகசிய அம்பு எய்யப்படக்
காத்திருக்கிறக்கிறது உன் உந்திச் சுழி.
குருவையும் கடவுளையும் பிரீதி செய்ததில்
செம்பருத்தி உருண்டு விழுகிறது உன் யோனியில்.

அப்பழுக்கற்றதாக இருக்கிறதாகச்
சொல்கிறார்கள்
வீட்டுக்கு வெளியில் நான்
விடுகின்ற மூச்சு.

%

கல்யாண்ஜி கவிதைத் தொகுப்பிலிருந்து.

Friday 26 October 2012

யாராவது ஒருவர்யாராவது ஒருவர்
குடித்துவிட்டு விழுந்துகிடக்கிறார்கள்.
யாராவது
திறக்காத கடைவாசலில் தூங்குகிறார்கள்.
செருப்புத் தைக்கக் கொடுத்துவிட்டுக்
காத்து நிற்கிறார்கள்.
வெற்றிலைச் சாற்றைப்
 பாதையில் துப்புகிறார்கள்.
யாராவது ஒருவர்
தலைக்கு வைத்த் பூவைத்
தவற விடுகிறார்கள்.
அழுது கலங்குகிற பெண்ணிடம்
ஒதுங்கி நின்று பேசுகிறார்கள்.
சாதுவாக வருகிற கருப்புப் பசுவுக்குத்
தேவைக்கதிகமாகப் பயப்படுகிறார்கள்.
யாராவது ஒருவர்
தொலைபேசியில் சத்தமாகப் பேசுகிறார்கள்.
தேய்த்து அடுக்கிய சலவை உடைகளைச்
சூடாக ஏந்திப் போகிறார்கள்.
என்னைப் போல
யாராவது ஒருவர் -
பள்ளிக்கூடம்   போய்க்கொண்டிருக்கிற
சிறுவர் இருவரில்
சின்னப் பையனின் தலையை வருடுகிறார்கள்.

%

கல்யாண்ஜி கவிதைகள் தொகுப்பிலிருந்து.

Thursday 25 October 2012

கனவுகள் நதி போல.அது சிவசைலம் ஆறு போல இருக்கிறது. அந்த ஆற்றில்தான் அனேகமாக எப்போதும் கரண்டை அளவு தண்ணீர் ஓடும். புன்னைக் காய்கள் உருண்டு வரும். ஆற்று ஓரம் உள்ள தாழம்புதர்களில் இருந்து யாராவது ஒருத்தர் தாழம் பூ பறித்துக் கொண்டு தொடை வரை உயர்த்திய வேட்டியோடு தண்ணீரை வினோதமாகக் கிழித்துக் கிழித்து நடந்துவந்து கொண்டிருப்பார். அவர் பாதங்களுக்குக் கீழ் அமுங்கும் ஆற்றுமணலை அவர் முகத்தில் கிட்டத்தட்ட ஒரு சிரிப்பின் சாயலைத் தொடுகிற, மாறும் பாவனைகளால் நம்மால் உணர முடியும்.

அந்த கரண்டை அளவு தண்ணீரில் பத்மாசனம் இட்டு நான் தியானம் செய்து கொண்டு இருக்கிறேன்.   பரல் பரலான மணலையும் ஸ்படிகப் பளிங்கில் ஓடும் நீரை யாரும் வரைந்து விடலாம்..  ஆற்றங் கரையில், என் இடது தோள் வழியாகப் பக்கவாட்டில் பார்த்தால் தெரிகிற மாதிரி அமர்ந்து இருக்கிற சங்கரியம்மா என்னை ஒரு திசையில் பார்க்கச் சொல்கிறார். ஒரு நெடுங் கோபுரம், பார்க்கும்போது கூட அது வளர்ந்துகொண்டு போகிற மாதிரி, தெரிந்தது.   என் கிட்டப் பார்வைக் குறைவுகளையும் மீறி, மிகத் துல்லிய உயரத்தில் தெரிகிற சிமெண்ட் நிறப் பழமை படிந்த கோபுரம். இப்போது என்னிடம் யாரோ சைகை காட்டுகிறார்கள்..

என் பின் பக்கம் நிறையத் தண்ணீர் ஓடுவதாகவும், நான் அதில் நீந்திச் செல்லலாம் எனவும் அந்தக் குரல் சொல்கிறது. நான் பெருகிப் பிரவகிக்கிற நீரோட்டத்தில் நீந்தத் துவங்குகிறேன். ஒரு  ஆதி நீர் உயிரியின் இயல்பான சுலபமும் , ஒரு கரை உயிரியின் ஆனந்தமும் விகசித்து வெளிப்படும் நீச்சல் அது. தளும்பிப் பரவின நீர்வெளியிலும் அதே ஆனந்த அலையடிப்பு.  நதி என்னையும் நான் நதியையும் புரிந்து, ஏற்றுக் கொண்ட நிலை.  ஒரு பலா இலை போல நான் மிதக்கிறேன்.

எனக்கு முழுமையான பத்மாசனம் இட வராது. எனக்கு நீச்சலும் தெரியாது.
கனவு அனைத்தையும் எனக்குக் கற்றுக் கொடுத்திருந்தது.

நனவிலிருந்து போல, கனவிலிருந்தும் கற்றுக் கொள்ள எனக்குச் சம்மதம்.

%

விரட்டி விரட்டித்
துரத்துகின்றன யானைகள்.
துலாக் கிணற்றில்
நீர் இறைத்து
வேட்டி துவைக்கிறார் தாத்தா.
நாகம் இறங்கி வருகிறது
எங்கள் வீட்டு மச்சுப் படிக்கட்டில்.
அந்த மலைஜாதிப் பெண்
யார் போலவோ இருக்கிறாள்
என்னை மார்பில் புதைக்கையில்.
காகிதப் பூக்கள் போல
உயிரற்றுக் குலுங்குகின்றன
வனம் முழுவதும்.
குகைகளின் உட்புறச் சுவர்களில்
தீப்பந்தச் சுவாலையில்
நடுங்குகின்றன சித்திர வரிசைகள்.
பகவதி கோவில் தரிசன வரிசையில்
பயமும் தவிப்புமாக.

கனவுகள் நதி போல.
நானோ ஒரு ரிஷி போல.

%