Thursday 12 December 2019

வண்டு









கிருஷ்ணன் கோவில் பக்கத்து மாந்தோப்பு அது.
பாண்டியன் கடையில் ஓசிப் பல்பொடி வாங்கித் தேய்த்துக்கொண்டே
ஈசானிய மடத்தின் பக்கம் வந்தால் தானாக கால் நின்றுவிடும். முள்
கம்பியை ஏற்கனவே பல காலம் பல பேர் அகற்றியிருப்பதால் முதுகுத்
தோல் கிழியாமல் தோப்புக்குள் போய்விடலாம்.
கிளிமூக்கு மாங்காய் சீசன் முடிந்து விட்டது. எனக்குப் பிடித்தது கிளிமூக்குப்
பிஞ்சுகள் தான். இன்றைக்கு ஒன்று கூட அகப்படவில்லை. கிருஷ்ணன்
கோவில் நடைப்பக்கம் உட்கார்ந்து அதிரசம் விற்கிற ஒல்லியான அக்கா
மாந்தோப்புச் சருகைக் கூட்டியபடி இருந்தாள். அவளுடைய சூம்பிய இடது
கை தொங்கிய நிலையில் பின்பக்கமாக இடுப்பில் கிடந்தது. சிவப்பு ரப்பர்
வளையல்கள்.
தோப்பைப் பெருக்கி அதிக காலம் இருக்கலாம். வெயிலில் சுக்காக உலர்ந்த
மா இலைச் சருகுகள் நொறுங்கின. . நெளிந்த சருகுகள் நகரும் சத்தம்
பெருக்குமாருக்குப் பின்னால் அலைந்தது. வெயிலின் சாந்தமான சாய்வில்
புகைபோல எழும் புழுதியில் மண்ணின் சிறு பரல்கள் அதன் பருமனுக்கும்
கனத்துக்கும் ஏற்ற உயரம் போய்க் கீழிறங்கின. சாம்பல் கருப்பான ஒரு
அடுக்கின் கீழிருந்து மிகச் சிறு பூச்சிகள் கலைந்து பதற்றம் கொண்டன.
நான் வார் போட்ட டிராயர் அணிந்திருந்தேன். ‘மாடசாமி மகன் தானே நீ/”
என்று கேட்கும் போது பெருக்குவது நின்றிருந்தது. பெருக்குமார்
அடிக்கட்டையை உள்ளங்கையில் குத்திச் சமன் பண்ணியவள், ‘அவனை

மாதிரியே இருக்கே நீ” என்று சிரித்தாள். எனக்கும் பேசத் தோன்றியது.
‘கிருஷ்ணங்கோயில்ல உங்களப் பாத்திருக்கேன்’ என்று சிரித்தேன். ‘ தேருக்கு
மேல நானும் முத்தையாவும் ஏறி விளையாண்டுக்கிட்டு இருந்ததைப் பார்த்து,
நீங்க எங்களைச் சத்தம் போட்டு விரட்டி விட்டிருக்கீங்க’ என்பதையும்
சொன்னேன்.
நான் மாங்காய் பொறுக்க வந்தது அந்த அக்காவுக்குத் தெரிந்துவிட்டது. ‘கிளி
மூக்கு காய்ப்பு ஓஞ்சு போச்சு. தெக்குக் கடைசியிலே நீலஞ்சாதி ரெண்டு
நிக்குல்லா. அது மூட்டில கீழ விழுந்து கிடந்ததை நாலஞ்சு குமிச்சு
வச்சிருக்கேன். உனக்கு ரெண்டு எடுத்துக்கிட்டு மீதியை ஈசான மடத்து
சாமியார் கிட்டே கொடுத்துரு’ என்றாள். மறுபடியும் பெருக்க ஆரம்பித்தாள்.
சருகு படலம் படலமாக நகர்வது பார்க்க நன்றாக இருந்தது.
‘என்ன அங்கனயே நிக்கே?’ என்று அந்த அக்கா சிரித்தாள். ‘சும்மா தான்’
என்று சொல்லும் போது, ‘ கிறுக்குப் பய’ என்று சொல்லிவிட்டு மறுபடி
குனிந்தாள். அந்தத் தெற்கு ஓர மரங்களின் கீழ் நிழலாகக் கிடந்தது. இரண்டு
அணில்கள் சரியாக அந்த நிழல் முடிந்து வெயில் துவங்குகிற இடம் வரை
போய்ப் போய்த் திரும்பி வந்து, மரத்தில் ஏறி இறங்கி விளையாட்டுக்
காட்டின. ஒரு சுள்ளி, சருகு இல்லாமல் தரை சுத்தமாகக் கிடந்தது. தென்னை
ஈர்க்குவாரியல் பரசின தடம் பெரியாச்சி வீட்டு முன்வாசலை ஞாபகப்
படுத்தியது. பெரியாச்சி அந்த இடத்தில் ஒரு கால் மேல் மறுகால் பின்னி
நீட்டி உட்கார்ந்திருந்துவிட்டுக் காணாமல் போனாள்.
மரத்து மூட்டில் நான்கைந்து பழங்கள். ராத்திரியோடு ராத்திரியாக வௌவால்
கடித்துப் போட்டவை. ஒன்று கூடப் பிஞ்சு இல்லை. எல்லாம் பருத்தவை.
கை தண்டி கூட ஒன்று இருந்தது. நான் டிரவுசர் பாக்கெட்டில் எதையும்
வைக்கவில்லை. பல்பொடிக் கறை இருந்த இடது உள்ளங்கையையும் வலது
சுட்டு விரலையும் மா மரத்துப் பட்டையில் தேய்த்தேன். அடித் தூரில் என்
கை பட்டது மேலே எப்படித் தெரிந்தது ? ஒரு பறவை இடம் மாறி வேறு
ஒரு கிளையில் அமர்ந்தது. இரண்டு கைகளிலும் பழங்களை எடுத்துக்
கொண்டேன்.

’உனக்குப் போக மிச்சத்தைச் சாமியார்கிட்டே கொடுத்திரு இவனே’ என்று
அக்கா அங்கே நின்றுகொண்டு சத்தம் கொடுத்தாள். வெயிலுக்கு நெற்றியில்
கையை மடக்கித் தடுப்புவைத்து என் பக்கம் திரும்பி நின்றாள்.
சாமியார் மடத்துக் கல் நடையிலேயே உட்கார்ந்திருந்தார். குளித்துத் திருநீறு
பூசி அகலமாகக் குங்குமம் . நீளம் குறைவான நரைத்த தாடிக்குள்
அவருடைய சிரிப்பு இருந்தது. பக்கத்தில் ஒரு சின்னக் குடம் அளவு செப்புச்
செம்பு ஒன்று. அடித்த கையோடு பட்டறையில் இருந்து எடுத்து வந்த தாமிர
நிறம். வெயில் பட்டால் இதை விட நன்றாக இருக்கும். செம்பு பக்கத்தில்
ஒரு நாகலிங்கப் பூ. இப்போதுதான் பூத்ததுவாக. எப்போதுமே பூத்திருப்பதாக.
நான் அவர் முன்னால் போய் கைகளை நீட்டி, ‘அந்த அக்கா உங்ககிட்டே
கொடுக்கச் சொல்லுச்சு’ என்று சொல்லும் போதே
‘அம்புட்டும் எனக்கா? உனக்கு வேண்டாமா?’ என்று சிரித்தார். இரையெடுக்கக்
குஞ்சு தலையை நீட்டுவது போல சிரிப்பு தாடிக்குள்ளே இருந்து வந்துவிட்டு
உள்ளே போனது.
‘அம்மாப் பொண்ணு உன் கிட்டே என்ன சொன்னா? நீ ரெண்டு எடுத்துக்கிட்டு
அவரு கிட்டே கொடுண்ணு சொல்லியிருப்பாளே’ என்றார். அது எப்படி
இவருக்குத் தெரியும்?
‘உனக்குப் போகத்தான் மிச்சம் எனக்கு” என்று நடைக்கல்லில் உட்காரச்
சொன்னார். கீழ் நடையில் உட்கார்ந்து அவரை ஏறிட்டுப் பார்த்தேன். நடைக்
கல்லுக்கும் சுவர்க்கும் இடையில் வாடா மல்லிச் செடி பூத்திருந்தது.
‘தானா முளைச்சுத் தானாப் பூத்திரும் சிலது இப்படி’ என்று என் கண்களைப்
பார்த்துச் சொன்னார். வெள்ளை வெளேர் நிறத்துக் கண்ணில் ஓரத்தில்
சிவப்புக் கீறல்கள்.
சாமியார் அந்தச் செம்பை எடுத்துத் தண்ணீரை ஊற்றி, ‘கையைக் கழுவிக்கோ’
என்றார். பாபநாசம் ஆற்றில் கை வைத்தது போல இருந்தது. செம்புக்குள்
இருந்து நான்கைந்து மீன் புரண்டு வந்து நகக் கண் கவ்விவிட்டு மறுபடி
செம்புக்குள் போய்விட்டதாகவும்.

‘என்ன, மீன் கடிச்சுதோ?’ என்றார். நான் கொண்டுவந்த நான்கைந்தையும்
கழுவினார். ஒவ்வொன்றாக உருட்டி உருட்டிப் பார்த்து என்கையில் வைத்து,
‘எதுல வண்டு இருக்கும்ணு சொல்லு பாப்போம்’ என்றார். எனக்கு எப்படித்
தெரியும் என்று சொல்லவில்லை. வெட்கமாக இருந்தது. நான் அவரையே
பார்த்துக்கொண்டு இருந்தேன். குனிந்த அவருடைய காவித்துண்டுக்கு உள்ளே
இருந்து ஒரு மணிமாலை தொங்கியது. ஒரே ஒரு உத்திராட்சமும் இரண்டு
ஸ்படிகமும் நடுவில்.
இடுப்பு வேட்டியைத் தளர்த்தி, மடியில் இருந்து ஒரு கொத்தை எடுத்தார்.
கொம்புப் பிடியுள்ள ஒரு கத்தியும் முள் வாங்கியும் இருந்தது. மடியில்
விபூதிப் பையும் இருந்திருக்கவேண்டும். அர்ச்சனைப் பன்னீர் வாசனை.
’உனக்குத் தெரியும். ஆனால் சொல்ல மாட்டேங்க,’ என்று சொன்னார்.
வண்டு எதில் இருக்கும் என்பது எனக்கு எப்படித் தெரியும்?’ சாமியார்
வேடிக்கை பண்ணுகிறார்.
‘ எல்லாத்துக்கும் எல்லாம் தெரியும். ஆனால் யாரும் சொல்கிறது இல்லை.
அப்படித்தானே?’ என்று சொல்லிக்கொண்டே என் உச்சந்தலையில் கை
வைத்தார். முதுகில் தடவிவிட்டார். எனக்கு ராட்டினம் சுற்றுகிற மாதிரி
ஆகிவிட்டது.
‘வாண வேடிக்கை நடந்துதா?’ என்று சிரித்தபடியே ஒவ்வொன்றாக எடுத்து
அந்தத் தாமிரச் செம்பின் பக்கத்தில் வைத்தார். ’பெருசா இருந்தா உள்ள
வண்டு இருக்கும்னு நினைக்கப் படாது’ அவர் அப்படிச் சொல்லி
இருப்பதிலேயே பருத்த ஒன்றை அப்புறமாக வைத்த போது, பக்கத்தில்
இருந்த நாகலிங்கப் பூ ஊர்ந்து வந்து அதைத் தொடுவது போலச் சரிந்தது.
நான் என் கையில் மிச்சமாக எஞ்சியிருக்கும் ஒரே ஒரு பழத்தைப்
பார்த்தேன். புண் திறந்தது போல மஞ்சளாக அது கடிபட்டு இருந்தது. ஒரு
கீற்றுப் போல மாங்கொட்டை மினுங்கியது.
‘கொஞ்சம் இரு. வந்திருதேன்’ என்று சாமியார் எழுந்து மடத்துக்குள் போனார்.
ஒவ்வொரு தட்டாக ,மடத்தின் வாசல் நிலைகளைத் தாண்டிப் போய்,
புறவாசலை அடைந்த போது, அவர் காவித் துண்டும் வேட்டியும் வெயிலில்

தீப்பற்றி எரிந்தன. போனது போலவே, ஒவ்வொரு வாசலாக வந்து முழு
உருவில் மீண்ட போது, அவர் கையில் மினுமினுப்பும் தடிப்புமாக ஒரு இலை
இருந்தது.
‘பின்னால ரெண்டு பிலா நிக்கி’ என்றார். ‘அடுத்த தடவை வா. பிலாச் சுளை
தாரேன்’ என்று அந்த இலையையும் கழுவினார். என் கையில் இருந்த
பழத்தை எடுத்துத் தோல் நீக்கினார். வெட்டிய சிறு துண்டுகளைக் கத்தி
நுனியால் பலா இலையில் தள்ளினார். மேலும் துண்டு போடக் கத்தியை
நகர்த்திக்கொண்டு வரும்போது, ஒரு இடத்தில் கரு கருவென்று தூள் தட்டுப்
பட்டது, ‘இப்போ பார்’ என்று என் முகத்திற்கு மிக அருகில் கொண்டு வந்தார்.
நீலம் மாம்பழ வாடை மூக்கைத் துளைத்தது.
கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கருந்தூள் மேலும் வெளியே சரிய, முன்
கால்கள் பரபரக்க மாங்கொட்டைக்குள் இருந்து ஒரு வண்டு வெளியே
வந்தது. ஒரு கணம் தன் அசைவை எல்லாம் நிறுத்தி அப்படியே அசைவற்று
உறைந்தது. சாமியார் கண்களில் ஒரு பரவசம் இருந்தது. அவ்வளவு கருத்த
பூச்சியின் அசைவுகளை என்னால் தொடர்ந்து பார்க்க முடியவில்லை.
‘இதோ பறக்கப் போகுது ’ என்று சொல்லி, ‘இந்தா பறந்துட்டுது’ என்று
சொல்லும் போது, அந்த வண்டு தன் சிறகுகளின் முதல் விரிப்புடன்
வெயிலுக்குள் புகுந்து காணாமல் போய்விட்டது.
சாமியார் தன் இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி அப்படியே நின்றார்.
சற்று நேரத்தில் கூப்பிய கைகளைக் கும்மியடிப்பது போல வலமும் இடமும்
சுற்றித் தட்டினார்.
’சாப்பிடு’ என்று பலா இலையை மாம்பழத் துணுக்குகளோடு சாமியார்
நீட்டும் போது சருகுகளைப் பெருக்கும் சத்தம் எனக்குக் கேட்டது போல
இருந்தது,
அந்த அக்காவைப் போல என் இடது கையைப் பின் பக்கமாக மடக்கி
இடுப்பில் கொண்டு போய் வைத்து, வலது கையை நீட்டினேன்.

என் கையில் மாம்பழத் துண்டுகளைத் தந்துவிட்டு, நின்ற நிலையில் கீழே
சாய்ந்து விழுந்தவரின் கையில் பலா இலை மட்டும் அப்படியே இருந்தது.


%