Wednesday 28 November 2012

அசையும் உணர்கொம்புகள்


மரணம் கலைத்துப்போட்ட
பிளாஸ்டிக்  நாற்காலியில்
தனித்திருந்தேன்.
அந்தக் குழந்தை என்னிடம் வந்தது.
‘தாத்தா, எனக்கு நத்தை வேண்டும்”
வேப்ப மரத்தைக் காட்டி, கேட்டது.
ஒரு மஞ்சணத்திக் காய் போல
அப்பியிருந்த நத்தையை
பிய்த்து எடுத்துக் கொடுத்தேன்.
பிஞ்சு உள்ளங்கையில்
பயணமற்றுக் கிடந்தது நத்தை.
‘வெயிலில் விடு’ என யாரோ சொன்னார்கள்.
‘புல்லில் விட’ச் சொன்னேன் நான்.
வெயிலும் புல்லும் அற்ற
தண்ணீர் கசியும் ரப்பர்குழாயின்
நெளிவின்மத்தியில் இட்டது அதை.
சற்றுக் காத்திருந்தது.
கையை விரித்து, உதடு பிதுக்கி
நத்தையுடனான அதனுடைய
ஒப்பந்தத்தை ரத்து செய்து
வேறொரு உலகம் சிருஷ்டிக்க
குழந்தை நகர்ந்தது.
உறவு முறையை உரக்கச் சொல்லி
வெடித்துக் கதறியபடி இறங்கி
வாகனக் கதவு திறப்பவர்களிடம்
தரையில் கிடந்த வெயில் ஓடிப்போகையில்
காணாமல் போயிருந்த வேப்பமர ஞாபகத்துடன்
ஊர்ந்துசெல்லத் துவங்கியிருந்தது
உணர்கொம்புகள் அசையும் நத்தை.

%

’கல்யாணி’ எனக் கனவில் கூப்பிட்ட
அதே ‘அவன்’ ஞாபகமாக.

அழைக்கிறவன்.


இன்னும் அந்தக் கனவிலிருந்து என்னால் வெளியேறிவிட முடியவில்லை. ஒரு  மூன்று தினங்களாக அந்தக் கனவு துரத்திக் கொடிருக்கிறது. ‘கல்யாணி, கல்யாணி’ என்று  அவன் கூப்பிடும் குரலை நான் உதறிவிட்டுத் தப்பித்து வந்துவிட்ட குற்றவுணர்வின் பளு என்னை நசுக்கிக்கொண்டு இருக்கிறது. இந்த குளிர் இறங்கிக்கொண்டிருக்கும் தொட்டதோகூர் அடுக்ககம் ஒன்றின் முன்னனறையில் என் பின்னிருந்து அந்தக் குரல் எட்டிப்பார்த்துக்கொண்டு இருக்கிறது.

அவன், என் கதைகளில் வரும் ‘சிவன்’,என்னைத் தனியனாக்கிவிட்டுப்
போய்  கிட்டத்தட்ட  நான்கு மாதங்கள் இருக்கும். என்னை விட அவன் ஏழு வயது சின்னவன். ஆனால் ஏழு பிறவிகள் மூத்தவன். என்னை அவன் தன்னோடு வைத்துக்கொள்ள இவ்வளவு விரும்பியிருப்பான் என்பது, இந்தக் கனவு வரை தெரியாமலே போயிற்று.

இத்தனைக்கும் அந்த இரவு திருநெல்வேலியுடையது கூட அல்ல.   இதற்கு முந்திய நான்கைந்தாக, சென்னையில் இருந்த தினங்களில் அவனுடைய ஞாபகம் ஒரு முறை வந்தது என்று சொல்லிக்கொள்ள எந்தத் தருணமும் இல்லை. வாசிப்பதற்கு எந்தப் புத்தகமும் எடுத்துக்கொள்ளாத தப்பைச் செய்த, வழக்கம் போல அதிகம் உரையாடலற்ற சதாப்திப் பயணத்திற்குப் பிந்திய மின்னணுநகரின் இரவில் அவன் அவ்வளவு தீவிரமாக என்னை அழைக்கும் கனவு வர எந்த முகாந்திரமும் இல்லை. நட்பை விடக் கூடுதல் முகாந்திரம் என்ன வேண்டியதிருக்கிறது?

அதே வெள்ளைக் கதர் சட்டை. கதர் வேட்டி. அவனும் நானும் ஏதோ ஒரு நகரமும் கிராமமும் அற்ற ஊரில் நடந்து போய்க்கொண்டு இருக்கிறோம். பகலா இரவா, தெரியவில்லை. வெயில் அல்ல, நிலவு அடிக்கிற பின்னிரவு போலத்தான் தெரு தன்னை வைத்திருக்கிறது. ஒரு வீட்டின் துப்புரவான திண்ணை  நிறைய இறந்த காலத்தை அதன்மேல் பாய் போல விரித்து வைத்திருந்தது. அந்த மரத் தூணின் வயதை அனுமானிக்க முடியவில்லை. அந்தக் கொல்லம் ஓடுகளுக்கு என்ன வயதோ, அதற்குக் கூடக் குறைய தூணுக்கும் இருக்கலாம். எங்களைத் தவிர யாரின் நடமாட்டமும் இல்லை. அவன் பேசிக்கொண்டே வருகிறான். வாய்க்கு வாய் சிரிக்கிறான். சொல்லுக்குச் சொல். ‘கல்யாணி’ என்கிறான்.  கையில் எதையோ வைத்திருக்கிறான். என்ன என்று அவனும் சொல்லவில்லை. எப்போதும் போல நானும் கேட்கவில்லை. எனக்கு அல்லது யாருக்கோ கொடுத்து விடுவதற்கானதாக அதை அவன் வைத்திருக்க வேண்டும் என்று இப்போது தோன்றுகிறது.

ஒரு இடத்தில் பாதை திரும்பியது. நீர்க்கருவை மரங்கள் நிறைந்த பகுதி அது. அந்த இடத்தை மட்டும் ஏற்கனவே பார்த்த மாதிரி எனக்குத் தோன்றுகிறது. பார்க்கவே பார்க்காத ஊரில், ஏற்கனவே பார்த்த மரங்கள் எப்படி முளைத்தன எனத் தெரியவில்லை. அவன் குனிந்து கையில் வைத்திருந்ததை அந்த முள் மரங்களின் மூட்டில் வைக்கிறான்.

‘வாங்க கல்யாணி.இப்படி போய்விட்டு வருவோம்’ என்கிறான். அவன் கூப்பிட்டால் இதுவரை எங்கும் போனவன்தான். இன்றும் போகத் தயாராக
பக்கத்தில் நிற்கிறேன். ‘இதையும் எடுத்துக் கொள்கிறேன்’ என அவன்
குனிகிற இடம் காலியாக இருக்கிறது. ‘இங்கேதானே வைத்தேன்’ என அவன் சொன்ன இடத்தின் காலியில்தான் எனக்கு ஏதோ  ஒரு இருட்டு பிடிபடுகிறது. இல்லாமல் போனவன் எப்படி இருக்கிறான் என்று யோசிக்கும் போதே நான் விலகத் துவங்கிவிட்டேன். அவன் இங்கும் அங்கும் தேடித் தேடி நகர நகர,  நான் ஒரு பதற்றத்தை அடைந்திருந்தேன்.  அவனுக்கும் எனக்குமான இடை வெளியை அவனறியாமல் அதிகப்படுத்தும் கேவலமான உபாயங்களை நான் தேர்ந்தெடுக்கத் துவங்கிவிட்டேன். எனக்கும் அவனுக்கும் இடையே  சாம்பல் படுதா அலைய, நான் இதுவரை என்னைச் செருகிவைத்திருந்த இடத்தில் இருந்து என்னைச் சத்தமே இன்றி உருவியபடி, என்னுடைய வேறொரு திசையைக் கண்டுபிடித்துவிட்டேன்.

கல்யாணி’ என்று அவனுடைய கூப்பிடுதலின் முதல் சத்தத்தை உடனடியாக நான் கத்தரித்துக்கொண்டவிதம், இப்போது நினைக்கையில் அருவெறுப்பு உண்டாக்குகிறது. எந்த அழைப்புக்காக நான் ஒவ்வொருதினமும் சமீப நாட்களில் தொடர்ந்து தவித்தேனோ, அதைத் தவிர்ப்பதற்கு, ஏறக்குறைய  நான் ஓடத் துவங்கியிருந்தேன்.  அவன் திரும்பத் திரும்ப, ‘கல்யாணி, கல்யாணி’ என்று கூப்பிடுகிறான். ‘போகாதீங்க கல்யாணி’ என்று அவன் சொல்லவில்லை.

‘கல்யாணி, கல்யாணி’ என்ற அந்த அழைப்பைப் புறக்கணிக்க முடிகிற
 இத்தனை அசிங்கமான ஒருவனாக நான் எப்போது மாறினேன் என்று தெரியவில்லை. அல்லது ஏற்கனவே நான் அப்படித்தான் இருந்து, அப்படி இல்லாதவனாகப் பாசாங்கு செய்துகொண்டு இருக்கிறேனா?

நான் வாய்விட்டு உளறிக்கொண்டு விழித்தபோது , அவனுடைய  பெயரைச் சொல்லியிருக்கலாம். . நிச்சயமாக என் கனவில்  விட, நனவில் நான் உண்மையாக இருந்திருப்பேன்.  முன்பின் பரிச்சயமற்ற இந்த வீட்டின் கட்டிலில் அதிர்ந்து எழுந்து உட்கார்ந்த போது, அவனுடைய குரல் ‘கல்யாணி’ என்று கூப்பிடுவது இன்னும் எனக்குக் கேட்டுக்கொண்டே இருந்தது.

துக்கமும் தவிப்பும் அடர்ந்த அந்தக் குரலின் அழைப்பை ஒப்புக்கொள்ள நான் இந்த நிமிடம் தயாராக இருக்கிறேன் என்பதை அவனிடம் எப்படிச் சொல்ல?.

Tuesday 20 November 2012

நேற்று, ஒன்று. நன்று.
இன்றைக்கு தமிழச்சியிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. அவர் விகடனின் ‘இன்று, ஒன்று, நன்று வழிப் பகிர்வில் கவிதைகள் குறித்துப் பேசுகிறாராம். என்னுடைய கவிதைகளை
மேற்கோள்கிறாராம். முடிந்தால் கேட்டுப்பாருங்கள் என்று அனுப்பியிருந்தார். கேட்டேன்.

ஒரே பாதையில்
ஒரு விளக்கடியில்
அவனும் அவளும்
விலகி நடக்க,
நீளச் சரிந்த நிழல்கள் மட்டும்
கூடிக் கூடிக்
குலவிப் பிரிந்தன

என்ற ஒன்றும்

ஆற்றில் குளிப்பவர் எல்லோர்க்கும்
பிடித்திருக்கிறது
அசைந்து மிதந்துவரும் பூவை.
அது தங்களுக்கு என்று
நினைத்து நீந்துகிறார்கள்
அதன் திசையில்.
பூவோ நகர்கிறது
நீச்சல் தெரியாது
ஆறு பார்த்து அமர்ந்திருக்கும்
சிறுபெண் நோக்கி.

என்ற மற்றொன்றும்..

இந்த இரண்டாவது கவிதையாவது சமீபத்தியது. ‘மணல் உள்ள
ஆறுதொகுப்பில் இருக்கிறது. ஆனால் அந்த முதல் கவிதைக்கு குறைந்தது 35 அல்லது 36 வயது இருக்கும். நான் என்னுடைய
முதிர் இருபதுகளில் திருநெல்வேலி பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் காசாளராக வேலை பார்க்கையில் எழுதியது. அதை
நானே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அனுப்ப, எங்கள் வங்கியின் ‘இல்ல இதழ்ஆன COLLEAGUE வெளியிட்டு இருந்தது. கூடவே, அதற்கான் சன்மானக் காசோலை வேறு. நாற்பது ரூபாய் என்று
ஞாபகம். எழுபதுக்களில் நாற்பது என்பது சிறிய தொகை அல்ல.
பம்பாய்த் தபால்களில் ஒன்றாக அதுவும் வந்திருந்ததால், கிளை மேலாளரின் பார்வையில் பிரிக்கப்பட்டு, எனக்கு திருவேங்கட தாஸ் என்கிற ‘டபேதார்கையால் வழங்கப் பட்டது. கிளை மேலாளர்கள் காசாளரைத் திரும்பிப் பார்க்கக் கூட மாட்டார்கள். அது அவர்களின் மரியாதைப் படிநிலைகளுக்கு ஒவ்வாதது. நான் தாஸிடமிருந்து சந்தோஷமாக வாங்கிக் கொண்டேன். தாஸிற்குக் கடுமையான ஆஸ்த்மா உண்டு. வருடத்தில் ஆறுமாதங்களேனும் அவர் அந்த அவஸ்தையில், பேசக் கூட முடியாதவராக இருப்பார். (பேச முடிகிற சமயங்களில்   அவரிடம் இருந்து வீசப்பட்டுத் தாழ்வாரங்களில் குவிந்து கிடக்கிற கெட்ட வார்த்தைகளை அள்ளி முடியாது).  பேச முடியாததை ஈடுகட்டிவிடுகிற மாதிரி ஒரு சிரிப்பை முகம் எப்போதும் வைத்திருக்கும்.
எண்பதாம் ஆண்டிற்குப் பிறகு என்னைப் பார்த்தவர்களுக்கு என் முகத்திலும் அந்தச் சிரிப்பைப் பார்த்திருக்க முடியும்.  நுரையீரல்
காற்றறைகளில் சிலந்திக் கூடு கட்ட ஆரம்பித்த பின் நானும் அந்தச் சிரிப்பைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருந்தேன். அந்த வகையில் திருவேங்கட தாஸ் என்னுடைய ஆசான் ஆகிறார். அவரிடமிருந்து இந்தக் கவிதைக்கான். என் காசோலையைப் பெற்றுக் கொண்டதில் எனக்கு இப்போது மகிழ்ச்சிதான்.
அந்தக் கவிதையை தமிழச்சி எடுத்துச் சொல்லி, என்னை சுமார் முப்பத்தைந்து வருடங்கள் பின்னகர்த்தி இருக்கிறார். அதைவிட
ஆச்சரியமும் மகிழ்ச்சியும் தருவது, தானும் தொடர்ந்து கவிஞராக  இயங்கிகொண்டு இருக்கும் ஒருவருக்கு, அதுவும் அதிகம் ஆங்கில இலக்கிய வாசிப்பு உடையவருக்கு, ஊடகம்
தந்திருக்கிற, நிறையப் பேரை அடைய முடிகிற ஒரு தொலை பேச்சு வாய்ப்பில் சொல்லத் தோன்றுகிற அளவுக்கு, ஏதோ ஒரு வகையில் இந்தக் கவிதை நினைவில் நின்றிருப்பது.

இந்தக் கவிதையை எழுதியதற்காக என்பதை விட, இது ஆங்கில வடிவில் வெளியானதற்காக என் கைகளைக் குலுக்கிய அழகிய நம்பி இப்போது இல்லை. தாஸ் எந்த இடையூறுமற்று தன் மூச்சை நிறுத்திவிட்டார்.. சொல்லப் போனால் சமீபத்தில் தீவிர ஆஸ்த்மா தொந்தரவுகள் அதிகமற்ற எனக்கு, ஒருவேளை இன்று மூச்சிழைப்பு வரலாம்.
அதிகம் உணர்ச்சிவசப்படும் போது, உறங்கிக் கொண்டிருக்கும் ஆஸ்த்மா தீவிரமடைந்து கூத்தாடுகிற முன் அனுபவங்கள் எனக்கு உண்டு. நான் என்னுடைய அந்த முப்பத்தைந்து வருடங்களுக்கு முந்திய அந்த எளிய கவிதையைக் கொண்டாடும்
வகையிலேனும்  இன்னும் சில அதிக தடவைகள், என்னுடைய தினசரி உபயோகத்தில் இருக்கும் ’அஸ்த்தாலின் இன்ஹேலரை’ இன்றிரவு உபயோகிக்க விரும்புகிறேன்.
இதோ துவங்குகிறது என் நுரையீரல் உட்சுவர்களுள் ஒரு இழை பின்னும் சிலந்தியில் எடையற்ற நடமாட்டம்.

Monday 12 November 2012

அசையாத புல் போல
அநேகமாக பிற்பகலில்
நீங்கள் நடுக்கூடத்தில்
விருந்தினர்களோடு பேசிக்கொண்டிருக்கையில்
குடுகுடுப்பைகாரன் வருகிறான்.
அசையும் திரைகளினூடு
பனியால் வரைந்தது போல்
அவன் வாசலில் நிற்பது தெரிகிறது.
குடுகுடுப்பையின் வேகத்திற்கு நிகரான
அவனது குரல்
முற்றிலும் புரியவில்லை உங்களுக்கு.
ஒரு பயம் மட்டும்
உருளத் துவங்குகிறது
உங்களது அடிவயிற்றில்.
அவனை ஏதாவது சொல்லி
அப்புறப்படுத்திவிட்டால் நல்லது எனும்
தவிப்பைத் தவிர்க்க முடியவில்லை
உங்களுக்கு.
கை வளையல்களை அனாவசியமாக
நகர்த்திக் கொள்கிறீர்கள்.
எதிரில் இருப்பவர் மீதான
கவனம் முற்றிலும் சிதறின முகத்துடன்
நீங்கள் வியர்வையை ஒற்றிக் கொள்கையில்
விருந்தினர் வீட்டுப்பையன்
அவனாக எழுந்து போய்
குடுகுடுப்பைக்காரனைப்  பார்க்கிறான்.
கொஞ்சம் சிரிக்கவும் செய்கிறான்.
ஒன்றும் சொல்லாமல்
சட்டைக்காலர் நுனியைக்
கடித்துக்கொண்டு மேலும் பார்க்கிறான்.
அசையாத புல்போல
ஒரு சிறு பொழுது
அவர்களுக்கிடையில் நிற்கிறது.
குடுகுப்பைக்காரன் காலடியில்
அடுத்தடுத்த வீட்டுக் கோலம்
வந்துவிடுகிறது இப்போது.

%

தீபாவளியின், பொங்கலின் பிற்பகலில் எங்கள் வீட்டு வாசலுக்கு
வரும் குடுகுடுப்பைக்காரர்களும் பாம்புப் பிடாரன்களும்  இப்போது
எங்கே போனார்கள். அந்த குடுகுடுப்பைச் சத்தமும் மகுடிச்சத்தமும்
உண்டாக்கிய பயம் நிறைந்த ஈர்ப்பெல்லாவற்றையும்  இந்த தினத்தின்
பிள்ளைகள் இனிமேல் ஒருபோதும் உணர்வதற்கில்லை.  அந்த வேகம்
நிறைந்தசொற்கள் குடுகுடுப்பையின் இருபக்கத் தோல்வட்டத்தில் மோதி மோதி அதிர்ந்துவருவதையும், ஒரு பசித்த அடிவயிற்றின் கடைசி
மடிப்பில் இருந்து உந்தப்பட்ட காற்றில் மகுடி விம்மிப் படமெடுத்து
ஒலித்து அடங்குவதையும்  நான் ஒருபோதும் மறப்பதற்கில்லை. 

சட்டைகாலரைக் கடித்துக்கொண்டு சிரிக்கவும் செய்கிற பையனுக்கும் பிடாரனுக்கும் இடையில் உள்ள தூரம் அல்லது நெருக்கம் என்னவென
உணர்ந்தால் மட்டுமே, அவர்களுக்கு இடையில் நிற்கிற, ‘அசையாத புல்
போல் ஒரு சிறு பொழுதை’ நாம் அறியமுடியும். அதற்கு முந்திய வரிகள் வரை, வழக்கம் போல ஒரு சித்திரத்தை வரைந்துவந்த நான், அசையாத புல் போல் என்ற அந்த இடத்திலிருந்து கவிதையாக்கிவிடுகிறேன். அந்த குடுகுப்பைகாரன் காலடியில் அடுத்தடுத்த வீட்டுக் கோலம் வந்து விடுவது எப்படி? 

எப்படியென்றெல்லாம் தீர்மானித்துச் சொல்லமுடியாது. அப்படித்தான் அவை வரும். அசையாத புல் போன்ற சிறு பொழுதிற்கு அதுவெல்லாம் சாத்தியமானதே.

%

உறக்கமற்ற மழைத்துளி
தொகுப்பில் இருந்து.

Saturday 10 November 2012

எச்சிலை மட்டும்


முற்றிலும்  குளிரூட்டப்பட்ட அறை.
தடுப்புக் கண்ணாடிகளை
ஊடுருவ முடியாது பார்வையால்.
நீங்கள் அமர்ந்திருக்கிற
உயர்தர இருக்கைகளிலிருந்து
சுழன்று திரும்பலாம்
அனைத்து திசைகளிலும்.
தேனீரோ காஃபியோ
காகிதக் குவளைகளில் சூடுபறக்க
நீங்களே ஏந்தி அருந்தலாம்.
மனதில் விழாத மெல்லிய இசை
காதில் விழும்.
செயற்கைக் கூழாங்கற்களை நனைக்கிற
செயற்கை நீரூற்றுக்கள் மூலைகளில்.
மிக விரைவில்
நாகரீகமான அடிக்குரலில்
பேசும்படி உங்களை நீங்களே
கட்டுப்படுத்திக் கொள்வீர்கள்.
உங்களைச் சுற்றிமட்டுமல்ல,
கழிப்பறையிலும் உணரமுடியும்
வாசனைத் தெளிப்பான்களை.
எந்தச் சிரமும் உங்களுக்கின்றி
எல்லாம் தானியங்க,
மேலாளரின் அறையிலிருந்து
திரும்புமுன், உங்கள் முகத்தில்
துப்பப்பட்டிருக்கிற எச்சிலைமட்டும்
நீங்களே துடைத்துக் கொண்டால்
போதும்.

%

உறக்கமற்ற மழைத்துளி
தொகுப்பிலிருந்து.
கல்யாண்ஜி.

Wednesday 7 November 2012

எப்போதும்நீ மீன் சாப்பிடுவாயா?
சாப்பிடுவேன் எப்போதாவது.
எத்தனை மீன்களின் பெயர்கள் தெரியும்?
என் எல்லா மீன்களுக்கும்
மீன் என்பது மட்டுமே பெயர்.
போகிற வழியில் மீன்கடைகளைத்
தாண்டிப் போவதுண்டா?
எதையும் தாண்டாமல்
எங்கும் போகமுடியாது.
மீன் வாங்கும் நண்பருடன் போனால்
விற்பவரே சொல்லிவிடக் கூடுமே
மீனின் பெயர்களை?
மீன்களின் நீந்தும் பெயர்களை
அதனதன் தண்ணீரிலிருந்து
அறிந்துகொள்ளவே  ஆசை.
உன்பேச்சில் உப்பிருக்கிறது.
ஆமாம். நம் எல்லோரிடமும்
ஒரு கடல் இருக்கிறது.
கடல் இருக்கட்டும். நீ எப்படி இருக்கிறாய்?
நாம், அவ்வப்போது இருக்கிறோம்,
மீன்களாக, நீந்திக் கொண்டு
அல்லது, ஒரு தூண்டில் முள் முன்.
அல்லது ஒரு கச்சிதமான
கண்ணாடித் தொட்டிக்குள் எப்போதும்.

%

இன்னொரு கேலிச்சித்திரம்
தொகுப்பிலிருந்து.

Tuesday 6 November 2012

இன்னும் சில


எப்படி இந்தச் சாத்தியம்
என்று நம்பமுடியவில்லை எனக்கு.
சகபயணியின் வாசிப்பில்
இருந்த புத்தகம்
இறந்துபோன யமுனாவுக்கு நான்
கையெழுத்திட்டுக் கொடுத்தது.
சில கவிதைகளின் தலைப்பை
டிக் செய்திருந்தாள்.
சிலவற்றில் பெருக்கல் குறிகள்.
இரண்டு மூன்று வரிகளின்
இடப்புறம் அங்கங்கே
பென்சில் சுவராக யமுனாவே
நின்றுகொண்டிருந்தாள்.
சில சொற்களுக்கு மட்டும்
அடிக்கோடு இருந்தது.
சில அச்சுப்பிழைகளுக்குத்
திருத்தங்கள் கூட.
ஒரு கவிதையின் கடைசிவரிகளை
அவளே வேறுவிதமாக
எழுதிப்பார்த்திருந்தாள்.
புரட்டிக்கொண்டே வந்தால்
ஐம்பத்து மூன்றாம் பக்கத்திற்கு
அப்புறம்  எந்தவிதமான
அடையாளங்களும் இல்லை.
பென்சில் முனைமுறிந்துபோனதா?
யமுனா மீதிப்பக்கங்களை
வாசிக்கவில்லையா?
அல்லது
எண்பதாம் பக்கத்திற்கும்
இதற்கும் இடையில்தான்
உறக்க மாத்திரைகளை அவள்
விழுங்கத் துவங்கினாளா?
ஒரு கவிதைப் புத்தகத்தில் இவ்வாறாக
ஒளித்துவைக்கப்பட்டிருந்தது
எழுதப்படாத ஒரு தற்கொலைக் குறிப்பும்
இன்னும் சிலவும்

%

இன்னொரு கேலிச்சித்திரம்
தொகுப்பிலிருந்து.

Saturday 3 November 2012

கொஞ்சம் சிந்தியிருந்தது...நானும்.


எனக்கு வாசிக்கத் தெரியாது.
நானும் வைத்திருக்கிறேன்
ஒரு புல்லாங்குழல்.


%

சுற்றுச் சுவர்களில்.


எதிர்பார்க்கவே இல்லை.
அந்தக் கவிஞரின் புதிய வீட்டுச்
சுற்றுச் சுவர்களில்
எந்தப் பறவைகளும்
பூனைக்குட்டிகளும்
அமர முடியாதபடி
கண்னாடிச் சில்லுகள்
பதிக்கப்பட்டிருக்கும் என.

%

சொல்லப்போகும்...


இரண்டே இரண்டு கிளிகள்
வந்தமர்ந்த மின்கம்பத்தில்
பத்து அமர்ந்து பறந்ததாகச்
சொன்னபோது அவள் கைகளும்
விரிந்து பறந்தன.
பெய்யாத ஆலங்கட்டி மழையைப்
பொறுக்கி வாயில் இட்டதும்
பல் கூசியதாக சினேகிதியிடம் சொல்கையில்
இரண்டு கன்னங்களிலும்
கைகள் பொத்தியிருந்தன.
வீட்டிற்குள் வந்து அவசரமாக,
தண்ணீர் குடித்து ஓடிய நேரம்
அடுத்து அவள் சொல்லப் போகும்
பொய் கொஞ்சம் சிந்தியிருந்தது
மண்பானையின் அருகில்.

%

இன்னொரு கேலிச் சித்திரம்
தொகுப்பில் இருந்து.


Friday 2 November 2012

கலங்கிய கடல்


நேற்று கடல் பார்த்தேன். இது வரை பார்த்த கடல் இல்லை. வேறு மாதிரி இருந்தது.அனேகமாக நீலத்தைத் தொலைத்திருந்தது. கடைசி விளிம்பில் ஒரு இழை போல ஒட்டிக்கொண்டிருந்த நீலத்தில் அடங்காமல் கடல் மழைக்காலக்
குளம் போல மண் நிறத்தில் புரண்டுகொண்டிருப்பதை அதிக நேரம் பார்த்துக் கொண்டு நிற்கமுடியவில்லை. நிஜமாகவே என் காலகளுக்குக் கீழ் இருந்த நிலத்தை அது உருவியது மணல் பறித்து. ஒரு பயத்துடனும் துக்கத்துடனும் நான் பின் வாங்கினேன். கடலுக்குள் இறங்கப் பயப்பட்ட தன்னுடைய சினேகிதியின் கையைப் பிடித்து இழுத்து, காலடியில் அலைவரக் காத்திருந்த அந்த சோனகன் விளை முகத்துச் சிரிப்பை நின்று ரசிக்க இயலவில்லை. பயந்த கொலுசுக் கால்களின் மங்கல் வெள்ளி மினுக்கத்தின் மீது உப்புக் கரிக்கும் முன்பு  நான் கடலில் இருந்து விலகிவிட்டேன்.

சற்று மேடான பகுதியில் இருந்து வேறு ஒரு கோணத்தில் பார்க்கும் போதும் கடலின் அந்த மண் நிறம் துன்புறுத்தியது. அது என்னை விடவும் ஒரு பெரும் வலியில் புரள்வதாகவே நினைத்தேன். ஒரு பொது மருத்துவ மனைக் கட்டிலில்  தன் தீக்காயங்களின் இறுதி அவஸ்தையில் தன் ஞாபகமற்று முனங்கிய முகம்  மறுபடியும் தோல் பொசுங்கிக் துடித்தது. இதுவரை கடல் என சேமித்துவைத்திருந்த அத்தனை நீலச் சித்திரத்தையும்  அது அழித்துக் கொண்டிருந்தது. ஒருவேளை, அதற்கு முந்திய நாள் கரைகடந்த ‘நீலம்’ புயலின் தூரத்துப் பாதிப்பாகக் கூட அது  இருக்கலாம். கடல்  என்னிடம் அது குறித்து ஏதும் சொல்ல விரும்பியிருக்குமோ.? நான் தான் நின்று கேட்காமல்
கடலின் வாதை நிரம்பிய குரலைப் புறக்கணித்து விட்டேனோ?

%

வீடு திரும்பிய பிறகும்  கடலின் கலங்கல்  நிறம் மங்கவில்லை.
அர்ச்சனைப் பிரசாதம் வைத்துக்கொடுத்திருந்த அந்த சிவப்பு விளிம்பு ஓலைக் கொட்டானில், திருநீறு வாசம் அடிக்கிற தேங்காய்ப் பிளவில், வதங்கல் பூ வாடைக்கே உரிய ஈர்ப்புடன் தொய்ந்துகிடக்கும் மாலையில் எல்லாம் அந்தக் கலங்கல் கடல் மிச்சம் இருந்தது. ஒலியற்று ஓடும் திரைப்படம் போல  என் எட்டுத் திக்கிலும் ஒரு பழுப்பு நிற அலையடிப்பு இருப்பதையும்,  நான் அதில் கால் நனையாமல் கரைவாங்குவதையும் யாரும் அறிந்திருக்கவில்லை.

அன்று முழுவதும் எட்டிப் பார்த்திராத முகப் புத்தகத்தை திருப்பும் போது, மிகத் தற்செயலாக, அந்த நிலைத் தகவலும் வண்ணப்படமும் வெளி ரெங்கராஜன் அவர்களால் இடப்பட்டிருந்தது.  ‘தமிழால் இணைவோம் ...’ என்ற தலைப்பில் திரு. ட்டி. செல்வகுமார் எடுத்திருந்த அந்த அற்புதமான படம் என்னை ஒரே கணத்தில் கடலில் இருந்து அகற்றிவிட்டது.
இரண்டு தப்பாட்டக் கலைஞர்கள், தங்களை மறந்த லயத்துடன், ஒரு பெரும் நடனமாக ஒத்திசையும் உடலசைவுகளுடன்,வியர்வை மினுமினுங்க,  புல் தரைக்கு மேல் ஒரு சாண் உயரத்தில் அவர்களின் சலங்கை கட்டிய கால்கள் அந்தரத்தில் மிதக்கிறார்கள். எனக்குத் தப்பாட்ட நுணுக்கமும் தெரியாது. கலை என்ற அளவுகோலுடன்  புகைப்பட நுணுக்கங்களும் தெரியாது.  ஆனால் நான் தப்பாட்டம் ஆடிக்கொண்டிருந்தேன், அந்தப் படத்தில் இல்லாத மூன்றாவது மனிதனாக. எனக்குப் பறையொலி கேட்டது. சலங்கை ஒலி கேட்டது. என் உடல் வியர்த்திருந்தது. சற்று அந்தரத்தில் உடலை வீசியிருக்கும்  என்னை வாங்கிக் கொள்ள, புற்கள் பச்சையாக அண்ணாந்து நிற்பதை உணரமுடிந்தது.
பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு முன் திருப்பரங்குன்றம் கலையிரவில் முதல் முதல் பார்த்த தப்பாட்டம் - சக்தி குழுவா அது? -  மறுபடி, மின்சாரம் தவறிய இந்த சிதம்பர நகர் தெருவில் பெருந்துள்ளலுடன் நிகழ்ந்தது.இரண்டு விரல்களைக் கடைவாயில் செருகி அடிக்கிற ‘சீட்டி’ ஒலியில், தொலைபேசி இழையில் வழக்கமாக உட்கார்ந்திருக்கிற இடத்தை விட்டு  ஆந்தை பறந்து போனது.
எனக்கு அந்தப் பைத்தியக்காரி நினைவுக்கு வந்தாள். அதுவும் மதுரைதான். எஸ்.எஸ்.காலனியில் என் நண்பர் சந்திரனின் தேவன் மெடிக்கல்ஸ் கடை வாசலில் நிற்கிறேன். எதிரே என்ன நல்லதோ, கெட்டதோ தெரியவில்லை. வைக்கோல் துரும்பை எரித்து, அதில் தப்பு வாசிப்பதற்கு முந்திய ஏற்பாடாக, ‘பறை காய்ச்சு’கிறார்கள். அகலாது அணுகாது தீக்காய்ந்து, தப்புவினுடைய  தோலுக்கு முறுக்கேற்றுகிறார்கள். இடையிடையே  கண்கண்ணென்று சுண்டிப்பார்த்துக் கொள்கிறார்கள். அந்த ஆரஞ்சு நிறத் தீயையும், அவர்கள் பறை காயச்சுவதையும் அந்தப் பைத்தியக்காரி அசையாமல் பார்த்தபடி அப்படியே நிற்கிறாள். பித்தின் அந்தப் பெருநிலை அவளைப் பேரழகியாக்கி இருந்தது. ஒருவேளை பித்தம் தெளிந்த கணமாகக் கூட அது இருந்திருக்கும்.
அக்கணம் அவள் அழகி. அத் தீ அழகு.

%

இன்று அதிகாலை அந்த விகடன் கட்டுரையை வாசித்திருக்கக் கூடாது. “நேற்று நான் விடுதலைப் போராளி. இன்று ...பாலியல் தொழிலாளி” என்ற
அந்தப் பெண்புலியின் வாக்கு மூலம், ஏற்கனவே வெவ்வேறு விதமாகச் சின்னாபின்னப் பட்டுக்கொண்டிருக்கிற மனநிலையுடைய  என்னைப் போன்றவர்களை முற்றிலும் நிலைகுலைக்கிறது ஒவ்வொரு வரியும்.
ஒரே ஒரு பெண்ணுடைய,பிரசுரத்திற்குரிய வகையில் தணிக்கைசெய்யப் பட்டிருக்கும் வாய்ப்புள்ள, வாக்குமூலமே இப்படி இருக்கும் எனில், இதை விட வெளிப்படையான, ஒளித்துவைக்கப்பட்ட,முடக்கப்பட்ட, புதைந்துபோன ஆயிரமாயிரம் குரல்கள் எப்படியிருக்கும்?

 பெயர்      மாற்றப்பட்ட அந்தப் பெயரை , மறைத்துவைக்கப்பட்டிருக்கும்   அந்த  முகத்தை ‘உணர’முடிகிறது. ஈழப்போரை, விடுதலைப் புலிகள் இயக்கத்தை ,பிரபாகரனை, பெண் போராளிகளை, அந்த முள்ளிவாய்க்கால் தினத்தின் பெண் போராளிகள் அடைந்த கோரச்சிதைவுகளை,சிங்களப் பேரினவாத மிருகத்தனங்களை எல்லாம், இந்த ஒரே பதிவின் மூலம் என்னால்  முழுதாகஅறிந்து கொள்ள முடிகிறது. அடக்கமுடியாது பெருகுகிற கண்ணீரையும் விட வேறு எந்த வரிவடிவ ஆவணங்களும் அவசியமில்லை,

பாரதி ஏற்கனவே சொல்லிவிட்டான். “ சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும், சிந்தை இரங்காரடி கிளியே, செம்மை மறந்தாரடி” என்று.
நாம் நம்முடைய நடிப்புச் சுதேசிப் பாரம்பரியத்தை இப்போதும் காப்பாற்றிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆன்மாவை விற்பதற்கு நமக்கு சற்றும் எந்தத் தயக்கமும் இல்லை. சரியான விலை படிந்தால் சரிதான்.  அந்த விலை ‘வித்யாராணி’யாக இருந்தால் கூட.

%

கலங்கிய கடல், அந்தர அசைவுகளுடைய அந்த தப்பாட்டம், கொந்தளிப்பு நிறைந்த இந்த வித்யாராணியின் சொற்கள் ...  யோசித்துப் பார்த்தால், மூன்றும்
வேறுவேறு அல்ல. ஒன்றுதான் என்று தோன்றுகிறது.
நான் நேற்றுப் பார்த்தது அச்சடிப்பதற்கு முந்திய, கலங்கிய கடலாக இருக்கும்.

*