Thursday 27 February 2014

அப்பாவின் தண்டனைகள் - ம. தவசியின் மாய இருப்பு.
அப்பாவின் தண்டனைகள்
ம. தவசியின் மாய இருப்பு.
_________________________________

ஆயிரம் பக்கங்கள் எல்லாம் இல்லை.
264 பக்கங்கள் தான் ம. தவசியின் ‘அப்பாவின் தண்டனைகள்’. அதைக் கூட இரண்டு பிற்பகல்களில்தான் வாசித்தேன். முடிக்கும் போது நேற்றின் மாலை துவங்கும் நேரம். அந்த வேளைக்கு மணி நிமிடம் எல்லாம் கிடையாது. மனம் ஒருபோதும் கடிகாரம் பார்ப்பதில்லை. கொஞ்சம் அப்படியே இருந்தேன்.

வெளியே அசையாது, தன் சிற்றிலைகள் தாழ்த்தி நின்ற பெருங்கொன்றை மட்டும் என்னை நுனிப்பார்வை பார்த்தது. அசைந்திருந்தால் இப்போது அது நினவில் இருந்திராது. அசையாது சமைந்த உட்கணத்தின் சித்திரத்தைச் சட்டமிடும் அசைவறு வெளிக்கணம் அது. நிசி நதியில் நீர் அள்ளி, அருந்துகையில் அது சிந்தி, நிசி நதியில் துளிகலத்தல் அது.

எனக்குக் கோணங்கியிடம் பேச வேண்டும் போல இருந்தது. ‘ என்ன இளங்கோ, நல்லா இருக்கியா? இப்படி ஒரு பாவி நம்மை உலுக்குகிற மாதிரி எழுதிவிட்டுப் போயிட்டான் பார்த்தியா? என்று கேட்கத் தோன்றியது. மு.சுயம்புலிங்கத்தை. சோ. தர்மனை, யூமா வாசுகிக்குள் குகை ஓவியம் போல இருக்கும் மாரிமுத்துவை, சமீபத்தில் சாம்ராஜ் விருது நிகழ்வில் ஒரு சிறுகணம் அருகிருந்த பெருமாள்முருகனை, சந்தியா பதிப்பகம் அரங்கிற்கு புத்தகக் கண்காட்சியில் வந்த சமயம், ‘பாடுங்க கண்மணிஎன்று சொன்ன மறு நொடி பாடத்துவங்கிய கண்மணி குணசேகரனை, மறைந்த ஆர். ஷண்முகசுந்தரத்தைக் கூட, பார்க்கவேண்டும் போல இருந்தது.

தவசி மறைந்தும் இந்த மார்ச் 9ம் தேதி வந்தால் ஒரு வருடம் ஆகப் போகிறது . அதற்கு நான்கு மாதங்களுக்கு முன், தீவிர உடல் நலிவுக்கும் நோயின் உச்ச வதைநிலைக்கும் இடையில் இந்த ‘அப்பாவின் தண்டனைகள்படைப்பை எழுதியிருக்கிறார். எந்த ஒரு இடத்திலும் வலியின் சிறு முனகல் இல்லை. தன் 37 வயதையும் இளஞ்செம்பூர் வாழ்வையும் மனிதரையும் ஒரு உன்னத மனநிலையில், வதையின் பரவசத்தில் என்று கூடச் சொல்லலாம், எழுதியிருப்பார் போல. ஒரு பெரும் வலுமிக்க திடம் நிறைந்த மனம்தான், தன்னைத் தன் புனைவு நெடுக, ‘நோஞ்சான்என்று பெயரிட்டு அழைத்துக்கொள்ள முடியும்.

காலம் காலமாக அப்பாவுக்கும் மகனுக்குமான கயிறிழுப்புப் போட்டி நடந்துகொண்டுதான் இருக்கிறதா? எந்த நிலக் காட்சியின் வரைபடப் புழுதியிலும் ஒரு தந்தையும் மகனும் மல்லுக் கட்டிப் புரண்ட தூசி அடங்காமல் கமறத்தான் செய்யுமா? மகன்களை எவ்வளவு விரும்புகிறார்களோ, அவ்வளவு வெறுக்கிறவர்களாகவே அப்பாக்கள் இருப்பார்களா? அப்பாக்களை பயம் சார்ந்த மரியாதைக்கு உரியவராயும், தன் ஆயுள் மொத்தத்துக்குமான ஒரே ஒரு அருவாள் வீச்சிற்கான முதல் தேர்வாகவும் கொள்ளும்படி மகன்கள் இருக்க நேர்வதன் உளவியல் அடிப்படை அல்லது உளவியல் சிக்கல் என்ன? பார்க்கப் போனால் இந்த எல்லா அப்பாக்களும் எல்லா மகன்களும் நல்லவர்களாகத்தானே இருக்கிறார்கள். இவ்வளவு அருமையான ‘நோஞ்சானுக்கு ஏன் இவ்வளவு இம்சிக்கும் தண்டனைகள்? இவ்வளவு எளிமையான நோஞ்சான் 
அப்பாவுக்கு ஏன் இத்தனை ஈரமற்ற வன்சாவுகள்?

புரியவில்லை. ஆனால் தவசிக்கு அப்பாக்களை மகன்களை எல்லாம் மிகத் துல்லியமாகப் புரிந்திருக்கிறது. காட்டுப் பனையை, கதுவாலியை, செவலை மறை பிருவையை அஞ்சுதலை நாகத்தை, நெருஞ்சிப் பூ வாசனையைப் புரிந்தவனுக்கு  இவையெல்லாம் புரிந்துவிடத்தான் செய்யும். இருப்பின் மாயத்தையும் மாயத்தின் இருப்பையும் மரணத்தின் கூப்பிடு தூரத்தில் புரிந்து நிற்ற புரிதல் இது.

‘குறுகிய காலத்தில் மிக வேகமாக எழுதிச் சென்ற தவசியின் எழுத்துக்கள் அவரைப் போலவே மாய இருப்பில் ஆழ்த்துபவை என்று ம.தவசி பற்றிய தன் முன்குறிப்பை , அவரை மிக நெருக்கமாக அறிந்த போப்பு முடிக்கிறார். 

அசலான வாழ்வொன்றின் மாய இருப்பை, அழகான படைப்பு ஒன்றின் மாய யதார்த்தத்தை முன் வைக்கும் இந்தப் பக்கங்களை நான் எழுதியிருக்க வேண்டும். நான் செத்துப் போயிருக்க வேண்டும்.


%

அப்பாவின் தண்டனைகள் - ம. தவசி.
வெளியீடு: சந்தியா பதிப்பகம், சென்னை.83.