Wednesday 3 August 2016

அம்மாச்சி, நீங்கள் குளிப்பாட்டுகிறவர், இரா. முருகன் மற்றும் நான்.அம்மாச்சி நேற்று என் கனவில் வந்தாள். அவள்தான் எங்களை வளர்த்து ஆளாக்கியவள். 79ம் வருடத்தில் நிறைந்து மறைந்த மனுஷி. இரண்டாவது அல்லது மூன்றாவது முறையாக வருகிறாள்.
மிகவும் மெலிந்திருந்தாள். கருப்பு நிற ஆடையில் வந்த அவளைத் தாங்கிப் பிடிக்கிறேன். ‘அப்படியே நடையிலே உக்காருஎன்கிறேன். உட்கார்கிறாள்.
நாளை ஆடி அமாவாசை. எனக்கு அதற்குப் பிறகு உறக்கம். வரவில்லை. பகலில் தான் புத்தக அடுக்குகளைத் தலைமாட்டில் இருந்து அப்புறப்படுத்தியிருந்தேன். முக நூலில் இரண்டு மணிக்கும் நடமாட்டம் இருந்தது. நேசமிகு ராஜகுமாரன் மகள் நேசிகாவின் புதிய நிறுவனம் WTFற்கு புதிதாக இரண்டு பேர் அந்த நேரம் வாழ்த்துச் சொன்னார்கள். சுரேஷ் கண்ணன் என் சுவரில் கொழுவியிருந்த என்னுடைய இந்து ஞானக்கூத்தன் அஞ்சலி வரிகளை, ஒருவர்வெண்ணைதாசன்...முடியலடா சாமிஎன்று பின்னூட்டி இருந்தார்.
ஐந்து மணிக்கு அலாரம் வைத்திருந்தேன். அதிகாலை ரயில் நிலையம் போய் அழைத்துவர வேண்டியது இருந்தது. கார் ஓட்டத் தெரியும். நின்றால் பழுது பார்க்கத் தெரியாது. ரயில் நிலையம் பக்கம் நின்றுவிட்டது. ரயிலில் வரவேண்டியவர்கள் வந்துவிட்டார்கள். வெள்ளைச்சட்டை வியர்வையில் உடலோடு ஒட்டிக்கொண்டது.
பொதுவாக அப்படி எல்லாம் கேட்பதற்கு யோசிப்பேன். ஆனால் இன்று கேட்க முடிந்தது. வாடகைக் கார்கள் நிற்கும் பகுதிக்குப் போய் அங்கிருந்த ஓட்டுநர்களிடம் உதவி கேட்டேன். முதலில் என்னை இந்த தினத்தின் முதல் வாடிக்கையாளன் என்று நினைத்த முகங்கள், எந்த ஏமாற்றமும் இன்றி, ஒரு உற்சாகத்துடன்,’வண்டி எங்கே சார் நிக்கி?’ என்றார்கள். நான்கு பேர் வந்து, ஒருவர் ஓட்ட, மூன்று பேர் தள்ள, இரண்டாம் நிமிடம் வண்டி ஓடத் தயார் ஆகி வட்டமடித்து எங்கள் அருகில் நின்றது. நன்றி சொல்லிக் கும்பிட்டேன். ‘கும்பிடல்லாம் செய்யாதீங்க சார்என்று நான்கு பேருமே சொல்லிசிரிச்சாப்பிலவழி அனுப்பினார்கள்.
காலை நடையை இன்று மீண்டும் தொடர முடிந்தது, தென்றல் நகர் முடிந்து பாரதி நகர்த் திருப்பம். மருத்துவர் வீட்டிற்கு எதிரே அவர் கை கூப்பினார். நடை நேர அறிமுகம் தான். நல்ல ஆங்கிலம் பேசுகிற, தமிழிலும் வாசிக்கிற, எனக்குச் சற்று இளையவர். என்னை நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்ப்பதற்கு சந்தோஷப் பட்டார். புதிதாக என்னுடையது என்ன புத்தகம் வந்திருக்கிறது என விசாரித்துக் கொண்டார். திடீரென்று ஞாபகம் வந்தது போல, ‘தமிழ் ஹிண்டுல ஞானக் கூத்தனுக்கு நீங்க சொல்லியிருந்ததைப் படித்தேன். நல்லா இருந்தது. வேறு மாதிரி ஆழமாஎன்று கையைப் பிடித்தார். எனக்கு இரவு முக நூலில் படித்த பின்னூட்டம் நினைவு வந்தது. அவர் கையையும் சேர்த்து இவர் கையை அதிக நேரம் பிடித்துக் கொண்டு நின்றேன்.
எல்லாம் வாட்ஸ் ஆப். எல்லாம் விர்ச்சுவல் டயலாக், நீங்களும் நானும் தான் கையைப் பிடிச்சுப் பேசிக்கிறோம்என்று நேர்த்தியான ஆங்கில உச்சரிப்பில் சொல்லியபடி ,
வளைவு திரும்பிப் போனார்.
ஒரு வகையான சிலிர்ப்பில் எனக்கு அர்த்த ராத்திரிச் சொப்பனத்தில் வந்த அம்மாச்சி ஞாபகம் வந்தது. அவள் இடது கைப் பெருவிரலில் தேள்ப் பச்சை குத்தியிருப்பாள். ஆனால் உள்ளங்கை அவ்வளவு மிருது.
எல்லோர் கையும் அப்படி இராது. இருப்பதாக நினைத்துக் கொண்டால் தப்பா என்ன?
Top of Form
LikeShow more reactions

%
Vannadasan Sivasankaran S
நீங்கள் அவரைக் குளிப்பாட்டுகிறீர்கள்.
தன்னை அறியாத ஆடையற்ற பொம்மையாக முக்காலியில் இருக்கிறார்.
நீர்த்தாரை வழிந்திறங்கும் எல்லா மடிப்புகளையும் உங்களால் தொடமுடிகிறது.
முதுகின் மீது திரிந்து சறுக்கும் சோப்பு நுரையில் உங்களுக்கு கண் கலங்குகிறது.
வெட்டப்படாத கால் நகங்களில் சிக்கி துண்டின் இழை பிரிய
வென்னீர் வெப்பம் அடங்காத குளியலறையில் இருந்து அவருடன் வெளியேறுகிறீர்கள்.
சவரம் செய்யப் படாத ஈர முகம் யாருமற்ற திசையில் சிரிக்கிறது.
இத்தனை யுகமாக உங்கள் அப்பா மீது இருந்த கடும் கோபம்
இப்போது துளிக்கூட உங்களிடம் இல்லை.

%
மேலே இருக்கும் இரண்டு பதிவுகளையும்  வழக்கத்தை விடவும் உணர்வுமயமான, பிசையப்பட்ட ஒரு மனநிலையில் உருண்டு உருண்டு எங்கள் குடும்பத்து நீத்தார்களின் பாதம் வரை போய்ப் பற்றிக் கிடந்த விரல்களால் செய்திருந்தேன்.
எல்லோர்க்கும் அம்மாச்சி உண்டு. யாவரும் இப்படி யாரையேனும் குளிப்பாட்டி இருப்பார் தாமே. எனவே, காற்றில் இலை விலகிக் கனி தெரிந்து இலை மூடியது போல், ஒரு நூற்றுச் சொச்சம் பேரை, அவர்களின் ஈரமான ஒரு பகுதியின் தீக்குள் விரல் விரல்வைத்துத் தீண்டும் இன்பம் காணச் செய்தது.
இரா.முருகன் அவர்களில் ஒருவர். அவர் தியூப்ளே விதியிலிருந்த,அரசூரில் இருந்த, இரட்டைத் தெருவில் இருந்த அவருடைய அத்தனை இரா. முருகன்களையும் ஒன்றாகக் கூட்டிக் கொண்டு , என் உள்ப்பெட்டிக்கு வந்து விட்டார்.  எழுத்தில் என்ன தான் விஸ்வரூபம் எடுத்தாலும், எங்களுக்குக் கடைசியில் எதிரெதிர் அமர்ந்து பேசுகையில் மிஞ்சப்போவது எங்களின் ரூபம் மட்டுமே.
இரா. முருகன் ’நீங்கள் அவரைக் குளிப்பாட்டுகிறீர்க’ளால் பாதிக்கப்பட்டு இருந்தார். மரம் அசையாமல், கிளை அசையாமல், நுனி அசையாமல் இரண்டே இரண்டு இலைகள் நடுங்கி அசைய இருந்திருக்கிறார். என்னிடம் ஏதோ பேச, சொல்லத் தோன்றியிருக்கிறது. உள்ப் பெட்டிக்கு வந்து’ ‘அன்பு கல்யாண்ஜி, நலம் தானே?’ என்று உரையாடலைத் துவக்கிவிட்டார். என் மதகு உடைந்துவிட்டது.அந்த உரையாடல்கள் அப்படியே இத்துடன்.
%
அன்பு கல்யாண்ஜி நலம் தானே? யாவரும் இங்கே நலம் அப்பா பற்றிய கவிதை காலையில் படித்தது முதல் மனம் அதிலேயே சுருண்டு, பிரிந்து மறுபடி சுருள்கிறது. முன்னிலைப் பன்மையில், ‘நீங்கள் அவரைக் குளிப்பாட்டுகிறீர்கள்என்று கவிதை போகும்போது அருண் கொலட்கர் நினைவு வருகிறார் - இன்னொரு உன்னதமான கவிஞர் ஆயிற்றே அவரும். தன்மை ஒருமையை விட இது விலகி நின்று காட்சிப் படுத்துவது வித்தியாசமான அனுபவம். நான் - வரும் கவிதையில் இருக்கும் மனக் குமைச்சல் இப்போது வாசகரில்


மனதுக்குக் குடிபெயர்ந்து விடுகிறது. கொலட்கரின் இந்தக் கவிதை உடனடி நினைவில் - கிழவி ---- அய்யா, உங்களை லாடக் கோவிலுக்குக் கூட்டிப் போறேன். உங்கள் கையைப் பிடித்து இழுத்தபடி கூடவே வருகிறாள் கிழவி. அவளுக்கு ஐம்பது காசு வேணும். நீங்கள் லாடக் கோவிலை ஏற்கனவே பார்த்தாச்சு. தள்ளாடித் தள்ளாடி உங்கள் கையை இறுகப் பற்றிக் கொண்டு கூடவே அவள். கிழவிகளைத்தான் தெரியுமே, அட்டை மாதிரி ஒட்டிக் கொள்வார்கள். நீங்கள் திரும்பி நின்று அவளைத் தீர்மானத்தோடு பார்க்கிறீர்கள். இந்தக் கூத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டியதுதான். அப்போ அவள் சொல்றாள், இந்த உருப்படாத மலையிலே என்னை மாதிரி வயசான ஒரு பொம்பளை வேறே என்னதான் செய்ய முடியும் ? குண்டு துளைத்தது போல குழிந்த அவள் கண் வழியே வானத்தைப் பார்க்கிறீர்கள். நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவள் கண்களைச் சுற்றி எழுந்த விரிசல்கள் அவளைக் கடந்து பரவுகின்றன. குன்றுகளில் விரிசல் கோவில்களில் விரிசல். கண்ணாடித் தட்டு நொறுங்கியதுபோல் வானம் சுற்றிலும் உதிர்ந்து விழ, சலனமே இல்லாமல் கிழவி நிற்கிறாள். அவள் கையில் சில்லறை போல் நீங்கள் சுருங்கித்தான் போகிறீர்கள்.
வணக்கம் முருகன். வயது எழுபது நிறையப் போகிறது. மூன்று வாரங்கள் இந்த வீட்டில் தனியாக இருக்க நேர்ந்தது. முன்பும் இருந்திருக்கிறேன். ஆனால் இந்த முறை மறைந்த அப்பா நினைவு கணபதி அண்ணன் நினவின் துரத்தல் அதிகம்.
https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-xpf1/v/t1.0-1/p32x32/12791013_1112974672059498_220789629618998858_n.jpg?oh=c5f92c8dedb88aad41615f0f316227a5&oe=582915FD&__gda__=1478522198_da28088aeb544f2d7a499006f49c4d0b
புரிகிறது கல்யாண்ஜி. நானும் 63-ல் இந்த மாதம் அடியெடுத்து வைக்கிறேன். இது எனக்கும் பொருந்தும் கவிதை. என் மகனுக்கும் பொருந்தி வரும். தனியாக மூன்று வாரம் இருப்பது துன்பமானது. மகனும் மருமகளும் ஐபிஎல்-விளையாட்டுக்கு இரண்டு மாதம் போயிருக்க நானும் அனுபவித்தது இது. மனைவி பிரிந்திருக்கிறார்.
குளியல் அறை, கழிவறைகளில், இரண்டரை வருடங்களுக்குப் பின்பும் அப்பா வாடையை துல்லியமாகப் பிரித்து என்னால் உணர முடிந்தது. அமானுஷ்யமான உணர்வு அல்ல. நெருக்கமான, பாதுகாப்பான உணர்வு அது. நான் தயாரித்துக் கொடுத்த தேநீரை அருந்திக் கொண்டு, ' நீயா போட்டே கல்யாணி. எனக்கு வென்னி வைக்கக் கூடத் தெரியாது' என்று அவர் சிரித்த சிரிப்பு, நான் தேநீர் கலக்கும் நேரத்து நீல ஜ்வாலை நேரத்தில் தவறாமல் கேட்டது.
https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-xpf1/v/t1.0-1/p32x32/12791013_1112974672059498_220789629618998858_n.jpg?oh=c5f92c8dedb88aad41615f0f316227a5&oe=582915FD&__gda__=1478522198_da28088aeb544f2d7a499006f49c4d0b
அடடா...
பெட்ரோ ஆல்மடோவரின் வல்வர் ஸ்பானிஷ் திரைப்படத்தில் பெனலோப் க்ரூஸ் அம்மா வாடையை குளிமுறியில் உணர்வாள். அம்மா இறந்து போயிருந்ததாகக் கதை முன்னால் போயிருக்கும்...
தி.ஜாவின் பாபு கையைப் பிடித்துக் கச்சேரி கேட்கக் கூட்டிப் போய், ராத்திரி நாய் துரத்தத் திரும்பும் அப்பாக்களின் உலகம்.. ஒவ்வொரு அனுபவமும் மகத்தானது ஆச்சே.. ஐயா தி..சி அவர்களைச் செயலோடு இருந்து தான் பார்த்திருக்கிறேன்.. முதுமையின் தளர்ச்சி உங்கள் பகிர்வு மூலம் தான் உணர்ந்தேன்
இண்டேன் கேஸ் வந்திருக்கு... வரேன்
என் அண்ணனின் நல்ல, மோசமான சாயல்கள் என் இயல்பில் அதிகம். கண்ணாடியில் என் உடலில் அவன் உடலின் சாயல்கள் நிறையத் தெரிவதாகப் பட்டது. இதுவும் மரண பயம் அல்ல. ஏதோ ஒரு வருத்தத்தில் இந்த வீட்டுக்குள் முதல் அறை தவிர, வேறு எங்கும் எட்டிக் கூடப் பார்த்திராத அவன், கருணையுடன், அவனுக்கு மிகப் பிடித்த நிலைக் கண்ணாடியை என் மூலம் பார்க்கும் ஒரு வினோத அன்புணர்வு.
https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-xpf1/v/t1.0-1/p32x32/12791013_1112974672059498_220789629618998858_n.jpg?oh=c5f92c8dedb88aad41615f0f316227a5&oe=582915FD&__gda__=1478522198_da28088aeb544f2d7a499006f49c4d0b
.. அவர் ஏழெட்டு வருஷம் முன்பு மரித்தார் என்று கேட்டிருக்கிறேன்... நிலைக் கண்ணாடி ... தனியான அனுபவம். நடு ராத்திரி கடந்து தூக்கம் விழித்து பாத்ரூம் போய் வரும் போது என்னோடு யாராரோ வருவதாக டிரஸ்ஸிங் டேபிள் கண்ணாடி சொல்வதால் அதைப் பார்ப்பதைத் தவிர்த்து விடுவேன்
எங்களை எங்கள் அம்மாச்சியே வளர்த்து ஆளாக்கினாள். அம்மா செல்லப் பிள்ளை ஆச்சிக்கு. என் ஆளுமையும் வார்ப்பும் என் அம்மாத்தாத்தா தந்தது. ஆச்சி சொப்பனத்தில், இறந்த இந்த 37 ஆண்டுகளில் மூன்று நான்கு முறைகளே வந்திருக்கிறாள். ஆடி அமாவாசைக்கு முதல்நாள் ராத்திரி ஒரு கருப்புப் புடவையில் வந்தாள். ஆச்சி நல்ல நிறம். பாப்பாத்தி போல இருந்ததால், அவளைப் பாப்பாத்தி ஆச்சி என்றுதான் எல்லோரும் சொல்வார்கள். தாத்தா பெயர்- கல்யாண சுந்தரம்- எனக்கு என்பதால் என்னிடம் பிரியம் ஜாஸ்தி. என்னை முருகா என்றும் ஐயா என்றுமே கூப்பிடுவாள். அவள் தாலி உருக்கிச் செய்த மோதிரம் தான் என் வலது விரலில் இப்போதும். அவளை அவ்வளவு மெலிந்து, கருப்புச் சீலையில் பார்க்க எப்படியோ இருந்தது. ஆச்சிக்கும் தாத்தாவுக்கும் நாந்தான் கொள்ளி வைத்தேன். ஆச்சி என்னிடம் என்ன சொல்கிறாள், என்ன கேட்கிறாள் என்று தெரியாது தூங்காமல் கிடந்தேன்.காலையில் ரயிலே ஸ்டேஷன் வேறு போக வேண்டியது இருந்தது.
இந்த இரண்டு மூன்று நாத்களின் மன நிலையிலேயே இந்த வரிகளை எழுதியிருக்க வேண்டும்.
https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-xpf1/v/t1.0-1/p32x32/12791013_1112974672059498_220789629618998858_n.jpg?oh=c5f92c8dedb88aad41615f0f316227a5&oe=582915FD&__gda__=1478522198_da28088aeb544f2d7a499006f49c4d0b
அடடா அடடா
எனக்கு அதிக அனுபவம் கிடையாது. வாசிப்புக் கிடையாது. எனக்கு கொலத்கர் தெரியாது. எனக்குத் தெரிந்தது இரா.முருகன் போல இரண்டு மூன்று பேர். அப்புறம் எது நல்லது, எது கெட்டது என்ற உள்ளுணர்வு.
https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-xpf1/v/t1.0-1/p32x32/12791013_1112974672059498_220789629618998858_n.jpg?oh=c5f92c8dedb88aad41615f0f316227a5&oe=582915FD&__gda__=1478522198_da28088aeb544f2d7a499006f49c4d0b
அம்மா முணுமுணுவென்று கனவில் முன்பெல்லாம் பேசிக் கொண்டிருந்தாள். என்ன சொல்கிறாள் என்று தெரியாமலே போன கனவுகள் அவை. அவளோடு தரைக்கு ஒரு அடி மேலே பறந்து போகிற கனவுகள் அவை..
போதும் முருகன்.
https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-xpf1/v/t1.0-1/p32x32/12791013_1112974672059498_220789629618998858_n.jpg?oh=c5f92c8dedb88aad41615f0f316227a5&oe=582915FD&__gda__=1478522198_da28088aeb544f2d7a499006f49c4d0b
உங்களை நாங்கள் வாசிக்கிறோம் அந்த அனுபவம் போதும்
நல்லது நல்லா இருங்க.
https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-xpf1/v/t1.0-1/p32x32/12791013_1112974672059498_220789629618998858_n.jpg?oh=c5f92c8dedb88aad41615f0f316227a5&oe=582915FD&__gda__=1478522198_da28088aeb544f2d7a499006f49c4d0b
சரி, சந்திப்போம். நன்றி.
இங்கு பேசியதை ஒரு ப்ளாக் ஆக ஆவணப்படுத்துங்க ப்ளீஸ்.. எது தவிர்க்கணும்னு நினைக்கறீங்களோ அது தவிர - அப்படி இருக்கறதாத் தெரியலே கல்யாண்ஜி
Chat Conversation End
Type a message...

%