Tuesday 30 October 2012

இப்போதும்...


சமீபத்தில் பதிவு செய்யப்பட்ட மதுரை நிலையபொதிகைத் தொலைக்காட்சி
நேர்காணல் ஒன்றில்,சற்று வித்தியாசமான ஒரு கேள்வி இருந்தது. கமலவேலன் அந்தக் கேள்விக்கான தூண்டுதலை எங்கிருந்து பெற்றார் எனத் தெரியவில்லை.
என்னுடைய,‘ கூறல் ’ சிறுகதை அதிகம் கவனிக்கப்படாத என்னுடைய நல்ல் கதைகளில் ஒன்று என எஸ்.ராமகிருஷ்ணன் சொல்லி இருப்பதாகவும், அவரே இதை ஆங்கிலத்தில்  மொழிபெயர்த்திருப்பதாகவும் சொன்னார். (அந்த ஆங்கில மொழியாக்கம் குறித்து எனக்குத் தகவல் இல்லை. அது கமலவேலன் என் மீது அல்லது அந்தக் கதையின் மீது கொண்டிருக்கும் விருப்பத்தின் நீட்சியாக இருக்கலாம்). “இப்படி உங்களின் வேறு எந்தெந்தக் கதைகள், எழுதிய உங்களுக்குப் பிடித்து வாசகர்களால்  கவனிக்கப்படவில்லை என நீங்கள் நினைக்கிறீர்கள்?” என்பதுதான் அவர் கேள்வி. இந்த நீண்ட படைப்பியக்கத்தில், அந்தக் கேள்விக்குப் பதிலாகச் சொல்ல, கணிசமான கதைகள் அடங்கிய  ஒரு பட்டியல் என்னிடம் மட்டும் அல்ல, என்னுடைய  சக படைப்பாளிகளிடமும் நிறைய இருக்கும்.என்றே நினைக்கிறேன்.

தனிப்பட்ட கதைகளை விடுங்கள். என்னுடைய சில தொகுப்புக்களே கூட, அந்தக் கேள்விக்கு உள்ளாகியிருக்கின்றன.அதுவும் என்னிடமே. ’பெய்தலும் ஓய்தலும்’ என்ற சிறுகதைத் தொகுப்பும், ’உறக்கமற்ற மழைத் துளி”, “இன்னொரு கேலிச் சித்திரம்” ஆகிய கவிதைத் தொகுப்புக்களும்  யாரிடம் போய்ச் சேர்ந்தன என்றே எனக்குத் தெரியவில்லை.  அதற்குப் பிந்திய கதை, கவிதைத் தொகுப்புக்கள் விற்பனையாகிவிட்டதாக அறிகிற நிலையில், நான் நிஜமாகவே, வெகு தொலைவில் ஒரு புள்ளியைப் போலத் தெரியும் வாசகன் ஒருவன், நெருங்கி உருப் பெருகி, என்னிடம் அவற்றில் உள்ள ஏதேனும் ஒரு வரியைப் பகிர்ந்துகொள்ள மாட்டானா என இறுக்கமாகவும் துக்கத்துடனும் எதிர்பார்க்கத் துவங்கியிருக்கிறேன்.  “

மணல் உள்ள ஆறு” தொகுப்புக்கு அடுத்ததொரு ஒரு கவிதைத் தொகுப்பிற்குத் தயாராகிற என் மன நிலையை,’இன்னொரு கேலிச் சித்திரம்’ தொகுதி இன்னும் விற்றுத் தீரவில்லை, அதுவும் எவ்வளவு, வெறும் முன்னூறு பிரதிகள், என்று அறிவது, எப்படிக் குலைக்காமல் போகும்?  சந்தியா பதிப்பகம்  என்னிடம் காட்டும் தொடர்ந்த பரிவை, என் படைப்புக்கள் மேல் அவர்கள் வைத்திருக்கும் தீராத மரியாதையை. நான் சுரண்டுகிறேனோ என்ற கவலை எனக்கு உண்டு.

என்னுடைய அடுத்த கவிதைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதுவதற்கு முன், அந்தத் தொகுப்புக்கு ஒரு தலைப்பைத் தீர்மானிக்கு முன் இந்தக் கேள்விகளை எல்லாம் என்னிடமே நான் கேட்டுக் கொள்ளவேண்டியதிருக்கிறது. வேறு யாரிடமும் கேட்கமுடியாது என்பதும், கேட்பதற்கில்லை என்பதும் தானே உண்மையும்.

%

‘இன்னொரு கேலிச் சித்திரம்’ தொகுப்பில் இருந்து ஒரு கவிதை.

மின்வெட்டுச் சுமத்திய அடர் இருள்.
நான்
முதல் நொடி புத்தனைப்பற்றி யோசிக்கிற
கடைசி நொடி சித்தார்த்தனாக
அமர்ந்திருக்கிறேன்.
நிரந்தர அமைதிக்கும் 
அ-சத்தத்திற்கும் நடுவில்
தூரத்துப் போதி மரம்
தன் மாய அசைவின்மையுடன்.
*
ஒரு சதுரங்கக் காயைப் போல
தன்னை நகர்த்துகிற
உன்னுடைய திறமையைப்
பாராட்டுகிறான் புத்தன்.
அறுபத்து நான்கு
கருப்பு வெள்ளைக் கட்டங்களில்
அவனைச் சிப்பாய் ஆக்கிப்
பகடை ஆடுகிறாய் நீ.
*
புத்தரைப் போல்
நின்றுபார்த்தேன்.
கூடவில்லை.
புத்தரைப் போல்
அமர்ந்து பார்த்தேன்.
இயலவில்லை.
சுலபம்தான் என்று
புத்தரைப் போலச்
சிரிக்க முயன்றேன்.
புத்தர்தான் நிரித்துக்கொண்டிருந்தார்
என்னைப் பார்த்து இப்போதும்.

%

1 comment:

 1. உங்களுடைய 'அழைக்கிறவர்கள்' சிறுகதை என் விருப்பத்திற்குரிய கதைகளில் ஒன்று. அலர்மேலு நரசைய்யா போன்றவர்களின் சிநேகிதம், தூறல் மழையில் பூச்செண்டு கொடுத்துவிட்டு போகும் தோழியின் அன்பை போல அற்புதமான ஒன்று. இன்னொரு சிறுகதை எனக்கு சரியாக ஞாபகம் இல்லை, ஆனால் 'குன்னங்குளம் டொமினிக்' என்ற ஒரு கதாபாத்திரம் வாதம் பழங்களை பொறுக்கிக்கொண்டு மனதை கைபிடித்து அழைத்து செல்லும் ஒரு கதை அது. ஒவ்வொரு கதையிலும் அப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறேன் நான், இன்று வரை, இனிமேலும்.

  'சூரியனை-
  ஆற்றங்கரை மணலை-
  தொட்டார்சுருங்கிச் செடியை-
  பாசெஞ்சர் ரயிலின்
  அற்புத இரைச்சலை-
  பட்டாம்பூச்சியைத்-
  தொலைத்துவிட்டு
  நாற்காலிக் கால்களில்
  நசுங்கிக் கிடக்கிறது
  சோற்றுகலையும் வாழ்க்கை.'

  இனி வரும் காலங்களில் என்னால் ஆற்றங்கரை மணலை பார்க்க முடியாது. அம்மா அக்காகளோடு ஆடி பதினெட்டு அன்று ஆத்துக்கு சென்று இருட்டிய பிறகும் விளையாடிய நாட்களை எல்லாம் நான் என் வருங்கால மக்களிடம் சொன்னால் புரியுமா என்றே தெரியாது. சோற்றுக்கலையும் இந்த வாழ்க்கையில் உங்கள் கதைகள், அழகான விடியலை நோக்கி சற்றே பாரம் இறங்க தூங்க வைக்கிறது.

  ReplyDelete