Friday 24 November 2017

ஓசையுற்றதோர் உலகம் கண்டேன்









ரசூல் பூக்குட்டியை ‘ரெசுல் பூ குட்டி’ என்றுதான் ஆங்கிலத்தில் இட்டிருந்தார்கள் அந்த எட்டாம் பக்கத்தில்.

‘எய்யா, ரெசூலூ, கொஞ்சம் இங்க வந்து என்னாண்ணு கேட்டுட்டுப் போ’ என்று ஒரு குரலை, அது ரசூலின் அம்மாவைப் பெற்ற பாட்டியின் குரலாக, நான் கேட்டுக்கொண்டே அந்தப் பக்கத்துக்குள் போனேன்.

அது ரசூல் பூக்குட்டியின் மிகச் சிறிய நேர்காணல். நிறையப் பேசுகிறவராக ஒரு வேளை ரசூல் இருந்திருக்க மாட்டார். ஒரு ரசூல்  நாளின் கடைசி ஒன்றாக,  களைத்த இரவில்    அது எடுக்கப்பட்டிருக்கிறது. நேர்காண்பவர் நுழையும் போது, ஆஸ்கர் வென்ற ரசூல் அவருடைய  சட்டையைத்  தேய்த்துக்கொண்டு இருக்கிறார்.

‘ஒரு கதை சொல்லட்டுமா?’  என்ற படத்தில் - அப்படிச் சொல்லக் கூடாது தான் - அவர் நடிக்கிறார். அவருடைய ஓசைப் புலன்களின் 360 பாகையில் அது எடுக்கப் பட்டிருக்கிறது. அவர் சொல்வது, ‘அந்தப் படம் அதுவாக நிகழ்ந்தது, அவர் வாழ்வில் நிகழ்ந்திருக்கும் மற்ற   எத்தனையோ போல’.


அவருக்கு, இந்த உலகத்தின் மா பெரும் நிகழ்வுகளில் ஒன்றான பூரம் திருவிழாவின் ஓசையைப் பதிவு செய்ய வேண்டும் என்பது  கனவாக இருந்திருக்கிறது. ‘நூறு யானைகள், முன்னூறு இசைக்கலைஞருடனான அந்த எழுபது ஏக்கர் நிகழ்வில், ரசூல் ஓர் இடத்தில் , அரைகுறைப் பார்வையே உள்ள ஒரு யானையைப் பார்க்கிறார். (ஒரு பார்வை இழந்த யானையை, ஒரு பார்வை இழந்த குரங்கை, ஒரு பார்வை இழந்த நாகத்தை, ஒரு பார்வை இழந்த சிட்டுக்குருவியை என்னால் யோசிக்கவே முடியவில்லை).

அரைப் பார்வை உள்ள அந்த யானையிடமிருந்து, ரசூல் பார்வையற்ற ஒரு மனிதர் அந்தப் பூரம் திருவிழா ஓசையை, அந்த இடத்திலேயே அவர் இல்லாமல் எப்படி அனுபவிப்பார்? என்ற ஒரு உணர்வுக்கு நகர்கிறார்.  பார்வையற்றதோர் உலகிலிருந்து, ஓசையுற்றதோர் உலகம் !   அங்கிருந்துதான் இந்தத் திரைப்படம் துவங்குகிறது. ரெசுல் பூ குட்டி நாயகனாகும் விபத்து நடக்கிறது.

ஒரு ஓசையின்மையைப் பற்றிய கேள்விக்கு, இந்த பொது சினிமாக்காரர்கள்  ஓசையின்மைக்கு - அமைதிக்கு - ப் பயப்படுகிறார்கள் என்கிறார்/

ரசூலிடம்  கேட்கப்படும்  ஆஸ்கர் விருது பற்றிய கடைசிக் கேள்விக்கு, அவர் சிரித்துக்கொண்டு, ‘ அது என் வங்கிக் காப்பறையில் இருக்கிறது. வருடத்திற்கு ஒருமுறை எடுத்துத் துடைத்து வைத்துவிடுகிறேன்’ என்று பதில்கிறார்.

நான் என் வங்கிக் காப்பறையைப் பற்றி நினைப்பதைத் தவிர்க்க முடியவில்லை.


Thursday 16 November 2017

வெயிலை வரைவது











ஒரு சாப்பாட்டு மேஜையை வரைவது என்று தீர்மானித்தாயிற்று.
நான்கு மர நாற்காலிகளை வரைவது நான்கு காடுகளை வரைவது.
ஒரு காடு போதுமென ஒரே ஒரு மர நாற்காலி மட்டும்.
துணிச் சுருக்கங்களை வரையும் கை நேர்த்தி எனக்குக் குறைவு.
கற்பனையில் எட்டிப் பார்த்த பூப் போட்ட மேஜை விரிப்பைத்
தவிர்த்துவிட்டேன்.
கண்ணாடிப் பழ ஜாடிகளையும் திரட்சி மினுங்கும் ஆப்பிள்,
திராட்சைக்குலைகளையும் அப்புறப் படுத்தினேன்,
தினசரிப் பார்வையில் பதிந்த  அன்றாட ஏனங்கள், தட்டு, தம்ளர்,
கரண்டிகள் மட்டுமே.
செவ்வியல் ஓவியங்களில்  எப்போதும் சாப்பாட்டு மேஜையின்
கீழ் ஒரு பூனை உட்கார்ந்திருக்கும்.
அசையா ஒன்றை வரைகையில் அசையும் ஒன்று தரும்  சுரீரென்ற
உயிர்ப்புக்காக  அதையும் வரைந்தாயிற்று.
தூரிகை நுனிக்கு வர, இறுதிவரத் தன்னை  அனுமதிக்க மறுத்தது
பக்கவாட்டிலிருந்து சாய்ந்து
மேஜையில் இடது ஓரம் விழுந்து மஞ்சள் திரவமாக மடிந்து கீழே
வழிந்துகொண்டு இருந்த வெயில் தான்.
ஒப்புக் கொள்கிறேன், வெயிலை வரைவது என்பது வெயிலிடம்
தோற்பதே.

Monday 13 November 2017

தானியப் பறவைகள்.







இந்த வீட்டிற்கு வந்த இரண்டாம் நாள் அந்தச் சிறுபறவை
(கடைசி வரி வரை அதைச் சிறு பறவை என்றே வைத்துக் கொள்வோம்).
பூந்தொட்டி விளிம்பில் உட்கார்ந்திருந்தது.
தேவைக்கு அதிகமான தூக்க மாத்திரை எடுத்தது போல்
கண்ணை மூடியே இருந்தது.
பகலைப் பார்ப்பதில்லை என்ற அதன் வைராக்கியத்திற்குக்
காரணங்கள் இருக்கலாம்.
கிட்டத் தட்ட அதன் அலகுக்கு எட்டும் நெருக்கத்தில்
இந்த வீட்டின் மிக இளைய நபர்  வைத்த சிறுதானியங்களை
மிக உறுதியாக அது அலட்சியப்படுத்தியது.
அவனுடைய இரவு வணக்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
காலை வணக்கமும் தெரிவிக்காமல் பறந்துபோயிருந்தது.
முற்றிலும் அது வந்து போனதை மறந்து போகும் படி
சதா ஒரு மழையிருட்டில் நாட்கள் இருந்தன.
இன்றைய சன்னல் திறப்பில்  உள்நுழைந்த குளிர்வெயிலில்
 தொட்டிச் செடி ஒருமுழு நீள இலையை
இடுப்பிலிருந்து உருவி வீசித் தனிப்பயிற்சியில் இருந்தது.
நிராயுதத்துடன் நெருங்கிப் பார்க்கையில்
மேலும் நிகழ்ந்திருந்தன சில பச்சை அதிசயங்கள்.
இந்த வீட்டின் மிக இளைய நபரின் பெயரை
அடுத்தடுத்துச் சொன்ன அதிர்வில் அந்த நொடி நெளிந்தது.
‘சிறு பறவை வந்துவிட்டதா மறுபடியும்?’
தொட்டி வரிசைக்கு ஓடிவந்தவனிடம்  காட்டினேன்
“பார், எத்தனை சிறிய பறவைகள்!”.
சிற்றிலைகளுடன், பறவையினும் அதி பறவையென
முளைவிட்டிருந்தன  அவன் சிறுகை அளாவி வீசிய
அன்றிரவின் சென்னிறச் சிறு தானியங்கள்.

Saturday 11 November 2017

ஆற்றுக்குத் திரும்பிய மீன்










 இந்த மீனை எப்படிப் பிடித்தாய்?'
'நீங்கள் தூண்டிலை இரவல் தந்தீர்கள். மீன் தானாக விழுந்தது'
' முதன் முறையிலே மீன் விழும் ரகசியம் என்ன?'
' மீனின் ரகசியத்தை ஆற்றிடம் தான் கேட்கவேண்டும்'
' மீன் விழும் என நீ எப்படி நம்பினாய்'
' விழும் என்றும், விழாதென்றும் நான் நம்பவே இல்லை'
' தக்கையின் சலனம் எப்படிப் பிடிபட்டது'
' நீரின் பாடலை மட்டுமே கேட்டுக்கொண்டு இருந்தேன்'
' மீனைக் குடுவையில் போட்டுவிட்டாயா?'
' அப்போதே அது ஆற்றுக்குத் திரும்பிவிட்டதே'


%

வில்லியம் சரோயன் என்கிற பெயரை முதன் முதலில் சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து’ இதழ் மூலமாக அறிந்தேன். சரோயன் என்கிற பின் பெயர் எனக்குப் பிடித்திருந்தது. நிறைய வெவ்வேறு - வாசிப்புத் தொடர்பற்ற - தனிமைகளில் ‘வில்லியம் சரோயன்’ என்று குடும்ப நபரைக் கூப்பிடும் குரலில்
சொல்லிப் பார்த்திருக்கிறேன்..
இப்போது தான் வில்லியம் சரோயன் கதைகளை வாசிக்க வாய்த்தது. இவ்வளவு தூரம் வந்த பின் வாசிக்க வேண்டிய கதைகளே அவை.
நண்பர் பாவண்ணன் தான் ‘ என் பெயர் ஆரம்’ என்ற தொகுப்பைக் கொடுத்தார். வில்லியம் சரோயனின் 14 கதைகள். 2005 டிசம்பரில் ’அகல்’ வெளியிட்டு இருக்கிறது. பஷீர் மொழி பெயர்த்திருக்கிறார். தமிழினி வசந்தகுமாருக்கு வடிவமைப்புச் செய்து தரும் பஷீராகத்தான் இருக்கும். முகவரியும் தமிழினியுடையதே.
30.06.1940 என்று வில்லியம் சரோயன் அவருடைய முன்னுரையில் தேதியிட்டு இருக்கிறார்.எங்கோ ஒரு தூர தேச அடுக்ககத்தின் ஐந்தாம் தளத் தனிமையில் 11.11.2017ல் வாசிக்கும் ஒருவனிடம் ஓர் அகரம் மாறாமல் அப்படியே அந்த ஆரம் எனும் பெயருடையவனின் உலகும் வாழ்வும் வந்து சேர்கின்றன.
அழகிய வெண் புரவியுடன் ஒரு கோடைக்காலம்,
மாதுளை மரங்கள், ஒரு அருமையான பழைய பாணிக் காதல், மாதா கோவில் பாடகர்கள், சர்க்கஸ், மூன்று நீச்சல்காரர்களும் யேல் நகர மளிகை வியாபாரியும்,லோகோமோட்டிவ் 36, ஓஜிப்வே எனும் அற்புதக் கதைகளால், நெருக்கமான மொழி பெயர்ப்பால் நான் நிரம்பியிருக்கிறேன்.
அப்படி ஒரு நிரம்பிய மன நிலையின் இடையே, ‘என் பெயர் ஆரம். வாசித்து முடித்துத் ததும்பிய வெளியில் தான், ;இந்த மீனை எப்படிப் பிடித்தாய்?’ என்ற வரிகளில் துவங்கும் பதிவை எழுதினேன். ‘மூன்று நீச்சல்காரர்களும் யேல் நகர மளிகை வியாபாரியும்’ கதையை வாசித்துக்கொண்டு இருக்கும் போதே, அந்த மீனும் ஆறும் தெரிந்துவிட்டது.
புழுவைப் பற்றிக் கேட்டிருக்கும் நல்ல நண்பரே,
தூண்டிலில் விழுந்தும் ஆற்றுக்குத் திரும்புகிற மீனுக்குப் புழு எல்லாம் வேண்டியதில்லை. முள்ளில் செருகப்பட்டிருக்கும் தூண்டில் காரனையே அது விரும்பி வருகிறது.

LikeShow More Reactions
Comment

Thursday 9 November 2017

வேம்பலை எனும் ஒரு வெளி







எங்கள்   நிலவெளி   உங்களுக்கு  உவப்பானதல்ல.
கருநிற நத்தையோடுகள் அப்பிய பாறைகள் நிறைந்தவை.
கருணையுடன் எப்போதோ பெய்த மழையின் ஞாபகம்
உடைய  புழுதியில் விழுந்திருக்கிறது நீங்கள் வந்த தடம்.
திக்கற்ற சாலைகளில் நடக்கும்  அயல்நிலப் பைத்தியம்   போல்
அறுவடைக்குப் பிந்திய இடுபொருட்களில்  வேய்ந்த  கூரையில்
வெயில் அலைந்துகொண்டே இருக்கும்.
தழுவிக்கொள்ளத் தோதுவான மதுரமான வழவழப்பு
எங்கள் மரங்களில் வாய்த்திருக்கவில்லை.
பட்டை வெடித்த தூர்களில், சோர்ந்த கண்களுள்ள கால்நடைகள்
கழுத்தை உரசிக்கொள்வதைப் பார்க்க முடியும்.
புளிப்பிலிருந்து இனிப்பாகும் கனிகள் அல்ல,
கசப்பிலிருந்து இனிப்பாகும் காய்ப்பு   உடையவை.
கோடிக்கணக்கில் சூடத்தகாத நுண் பூக்கள் உதிரும்
அதிகாலைகளை   அதனிடமிருந்தே பெறுகிறோம்..
கருஞ்சிறகுப்  பறவைகள் தகரம் உரசும் கருப்புக் குரலில்
‘விழித்திரு, பசித்திரு’ பாடலைப் பாடுகின்றன..
தணிந்த குத்துச் செடிகளில் கூடு பின்னும்
மண் நிறச்  சிறு குருவிகளின் பறத்தலோசையில்
கிழிபடும் பிற்பகலில் வந்திருக்கிறீர்கள்.
சமையலுக்கு அடுப்புக்கூட்டும் இரவு வரை
உங்களுக்கு நெடுநேரக் காத்திருப்பு இருக்கும்.
எப்போதும்  நிழலடியில் கிடக்கிறது
மூன்று தலைமுறை தாண்டிவந்த நார்க் கட்டில்.
வேண்டுமானால் நீங்கள் அதில் தனியமர்ந்து
நகரத்திலிருந்து  கொண்டுவந்திருக்கும் உங்கள்
கனவுகளுடன் கதைத்துக் கொண்டிருங்கள்.

நினைவின் இரண்டாவது பொத்தான்.








அந்த டேபிள் ஃபேன் நினைவு வந்துவிட்டது.
கடைசி வரை அம்மாவின் தலைமாட்டில்
ஒரு ஸ்டூலில் சுற்றிக்கொண்டு இருந்தது.
(இப்போது அந்த மரஸ்டூலின் நினைவைத்
தவிர்க்க முடியவில்லை.
எல்லா நினைவுகளும் அதனதன் கச்சிதமான
வர்ணனைகள் உடையவை)
சிவப்பு இலைகளும் கம்பி வலைத்தடுப்பும்
காலத்தைச் சுழற்றிக் கடகடப்பிடும்.
நான்கு பொத்தான்களில் இரண்டாவது
மிதமான வேகத்திற்கு விசைகூட்டுவது.
அம்மா விரல் அழுத்தலில் அதன் குப்பி கழன்று
உலோக எலும்பு துருத்தியிருக்கும் அதில்.
ராமையா மாமா  கடைக்கு எடுத்துப் போய்
பழுது பார்த்து வருவதாக ஏற்பாடு.
’ஓடுகிறவரை ஓடட்டும், போதும்’
திட்டமாக அம்மா சொல்லிவிட்டாள்.
அது சற்றுக் குளிர்ந்த ஒரு மார்கழிப் பின்னிரவு.
அம்மாதான் முதலில் ஓட்டத்தை நிறுத்தினாள்.
அதற்குப் பின் அந்தச் சிவப்பு இலைகளை
நாங்கள்  யாரும்  சுழல விடவே இல்லை.
நினைவின் கடகடப்பு கேட்கிற இப் பிற்பகலில்
அந்த இரண்டாவது பொத்தானை  அழுத்த முடிந்தால்
மீதி இருக்கும் வியாழனுடன்
அந்த மர ஸ்டூல்  பற்றிப் பேசிக்கொண்டிருக்கலாம்..

Friday 3 November 2017

வியனுலகு முழுவதையும் ...






நான் நன்றி சொல்ல வேண்டியது சந்தியா பதிப்பகத்திற்கா? அல்லது மரபின் மைந்தன் முத்தையாவுக்கா? நன்றி சொல்லவேண்டும் என்ற நல்லுணர்வு சுடர்ந்த பின், இவருக்கு அவருக்கு என்னாமல் எல்லோர்க்கும் நன்றி சொன்னால் தான் என்ன? எல்லோரும் என் நன்றிக்குரியோர் தாமே. ‘என்னை நன்றாக இறைவன் வைத்தனன்’ எனில், அதை விடவும் நன்றாக,   அதனினும் அவனினும் மேலாகத்தானே  என்னைச் சுற்றியிருக்கிற எல்லோரும், அல்லது நான் சுற்றிவரும் எல்லோரும் என்னை வைத்திருக்கிறார்கள்.

எனக்கு நிகழ்ந்த எல்லா நற்செயலும் தற்செயலே என்றே நான் நம்புகிறேன். நேற்றும் அப்படி மற்றொன்று நிகழ்ந்தது. அஃதொப்பதில்லாத விரல்களின் அடுத்தூர்தலில், சந்தியா பதிப்பகத்தின் அந்தப் பதிவு இருந்தது முகநூலில். ஜெயகாந்தன் உரை குறித்த ஒரு ’சவுண்ட் க்ளௌட்’  இணைப்பு அது.. சில முகங்களைத் தாண்டிப் போகமுடிவதில்லை. முகம் பார்த்தவுடன் குரல் கேட்கத் துவங்கும் நிலைகளும் உண்டுதானே. நான் ஒலியின் மேகங்களுக்கு உடனே நகர்ந்தேன்.

சவுண்ட் கிளௌட் பதிவு மரபின் மைந்தன் முத்தையாவால் இரு பகுதிகளாகச் செய்யப்பட்டிருந்தது. பாரதியின் ஆன்மீகப் பார்வை என்ற தலைப்பில் அல்லது பொருளில் ஜெயகாந்தன் நிகழ்த்தியது. கோவையிலாக இருக்க வேண்டும், ‘ நண்பர்களே’ என்று துவங்கி, ஒரு மௌனம் காத்து, அந்த மௌனத்தில் மடியிலிருந்து பீச்சுவது போல் மறுபடியும், ‘ நண்பர் சிதம்பரநாதன் சொன்னது போல இது ஒரு வளமான கூட்டம்’ என்று மேற்செல்வது அப்படித்தான் யூகிக்க வைக்கிறது.
‘வித்தையேதும் கல்லாதவன், என்னுளே வேத நுட்பம் விளங்கிடச் செய்தனை’ என்று அங்கிருந்து அவர் பாரதியின் ஆன்மீகப் பார்வையை விதந்தோத, ஓத நிச்சயம், அந்தச் சபை அன்று வேதபுரம் ஆகியிருக்கும். அங்குறு சபையோர் ஒரு வேத வாழ்வு வாழ்ந்திருப்பர்,

’வியனுலகு முழுவதையும் அமுதென நுகரும் வேத வாழ்வு ‘ என்பதன் நீட்சியாகவும் மடங்குகளாகவும் நிறுவுவதாகவும், ஜெயகாந்தன் அவருக்கே உரிய தோய்வோடும் ஆய்வோடும், முரணோடும் இசைவோடும் ஒரு பாரதி தரிசனம் உண்டாக்குகிறார். மிகவும் மேற்கொளப்படுகிற, “ விஸ்வரூபம் என்பது காட்டுவது அல்ல, காண்பது’ என்ற தெறி அந்தப் பேச்சிடை மின்னிய ஒன்றுதான்.

நான் அந்த உரையைக் கேட்ட உன்மத்தத்தில், ஜெயகாந்தனின் குரலில் எனக்குள் அவர் பேசிக் கேட்டவற்றுள் நினைவுறுவதை, அவர் பாணியில் எனக்குள் போலிசெய்துகொண்டே இருக்கிறேன். அது ஒரு சிறு பிள்ளைத்தனம் எனினும், யாரும் அருகிலற்ற இந்தத் தனிமையில் அதுவே எனக்கு விருப்பமான பெரும் பிள்ளைத்தனமாகவும் படுகிறது.

பொன்னீலன் பாரதியைப் பேசுகிற குரலில், பாரதி கிருஷ்ணகுமார் ஜெயகாந்தனைப் பேசுகிற குரலில் நான் என்னுடைய குரலை வடிவமைத்துக்கொண்டு,, மறைவாக நமக்குள்ளே, பேசத் துவங்குகிறேன்.

‘நண்பர்களே, நாம் பாரதியைப் பயில்வோம். ஜெயகாந்தனைப் பயில்வோம். அப்படிப் பயில்வதன் முகத்தான் வேதத்தைப் புதுமை செய்வது போல, பாரதியைப் புதுமை செய்வோம். ஜெயகாந்தனைப் புதுமை செய்வோம். நாம் புதுமை செய்ய அவசியமின்றி, அவர்களே புதுமையுறுவர். அப்படி அவர் புதுமையுறுவர் எனில் நாம் புதுமையுறுவோம். நம் வாழ்வு புதுமை கொள்ளும். வியனுலகு முழுவதையும் அமுதென நுகரும் வேதம் நமக்கு வசப்படும்… .. “
*




Thursday 2 November 2017

அற்ற ஒரு சுடராய்













மழை கொஞ்சம் வெறித்திருந்தது.

எங்கேயாவது போய், யாரையாவது பார்க்கலாம் என்று தோன்றியது. என் வயதில் என் வயதுக்காரனைத்தானே பார்க்க முடியும்.

செருப்பில் செம்மண் அப்பிய கனம். 19ம் நம்பர் வீடு ரொம்ப தூரமில்லை. அவன் வீட்டிலும் உதிர்ந்து கிடந்த பன்னீர்ப் பூ. ஊடே நகரும் முதல் வளையல் பூச்சி.

புறவாசலில் இருக்கிறதாகச் சொன்னார்கள். வீட்டைச் சுற்றிப் போய்க் கொள்கிறேன். கதவைத் திறக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். இன்னும் பைக் ஓட்டுகிறான். ஆனால் துடைக்கவே மாட்டான் போல. பின் என்ன? வெளியூருக்குப் போனால் முன் விளக்கு அடைப்பில் பறவை முட்டை இடத்தான் செய்யும்.

செருப்புச் சத்தத்தைக் கேட்டே,’வா சுந்தரம்’ என்றான். காதும் மூக்கும் அத்தனை கூர்மை. அவன் ஒரு மிருகமாம். அவனே,’நான் மிருக ஷ்ரீச நட்சத்திரம்’ என்று சிரிப்பான். ‘என்ன நடக்கு? உங்க ஊரில மழை உண்டா?’ என்ற பழைய பாணி உரையாடலைத் துவக்கினேன். அந்தந்தப் பருவத்திற்கு அந்தந்த உரையாடல். அதில் தப்பில்லை.

கூடுமானவரை வெயில் அடிக்கிற இடத்தில் கல்யாணி குத்த வைத்து உட்கார்ந்திருந்தான். பக்கத்தில் ஒரு வெங்கல விளக்கு எரிந்து கொண்டு இருந்தது. பச்சை, சிவப்பு தீப்பெட்டி மத்தாப்புப் பெட்டிகள் நாலைந்து. கூடுதலாகவே இருக்கும்.

ஒவ்வொரு குச்சியாய் மத்தாப்பை எடுத்து, விளக்குச் சுடரில் பொருத்தி, கண் மட்டத்திற்கு உயர்த்தி அணையும் வரை வைத்திருந்து கீழே போட்டான். மறுபடி ஒன்றைப் பொருத்தி என் பக்கம் உயர்த்தி, ‘பச்சைக்கலர் மத்தாப்பு; நல்லாருக்கா என்றான்?’

நான் சிரித்துக்கொண்டே பக்கத்தில் புறவாசல் நடையில் உட்கார்ந்தேன். ‘நீ பொருத்துதியா?’ என்று என் பக்கம் ஒரு பெட்டியை நீட்டினான். அது சிவப்பு மத்தாப்புத் தீப்பெட்டி. ‘தீவாளிக்குப் பிள்ளைகள் வந்திருக்கும் போது வாங்குனதுல மிச்சம்’ என்று அவனே சொன்னான்.

நான் ஒரு குச்சியை எடுத்துப் பக்கவாட்டில் உரசினேன். பிடிக்கவில்லை. மறுபடி உரசினேன். ‘எல்லாம் நயத்துப் போச்சு. இங்கே வா’ என்றான். நான் அவன் பக்கம் போய் விளக்கில் பொருத்தினேன். சுருசுரு என்கிற கருப்புப் பாகம் நுரைத்து முடிந்து சிவப்பு நுனியில் அடர்த்தியாக ஒளிர்ந்தது.’ பச்சையை விட சிவப்பு நல்லா எரியுது’ என்றேன்.

‘நல்லாப் பாரு சுந்தரம் சிவப்பு எரியும் போது உச்சியிலே லேசா ஒரு பச்சை தெரியும். அது சிவப்பை விட பாக்க நல்லா இருக்கும்’ என்று கையில் கொழுத்திய பச்சை மத்தாப்புடன் சிரித்தான்.

நான் இன்னும் கொஞ்சம் அவன் பக்கத்தில் போய் உட்கார்ந்து, அவன் கொழுத்தி வைத்திருக்கும் பச்சை மத்தாப்பில் என் சிவப்பு மத்தாப்பைக் கொழுத்தினேன். ஒன்றிலிருந்து ஒன்று பற்றி, சிவப்பைப் பச்சையாக்கி, பச்சையைச் சிவப்பாக்கி, சிவப்பும் பச்சையும் அற்ற ஒரு சுடராய் மலர்ந்தது.

‘நல்லாருக்கில்லா?’ என்று அவனும் சொன்னான்.


‘நல்லாருக்கு’ என்று அதே சமயத்தில் நானும் சொன்னேன்.

Wednesday 1 November 2017

அதற்குப் பிறகு








டாஸ்மாக் கடைக்குத் தனியாக வருபவர் நீங்கள்.
உங்கள் அடிக்கடி வருகையால்
டாஸ்மாக் கடைக்கு இப்போது
டாஸ்மாக் கடை வாடை கிடையாதாயிற்று.
இந்த டாஸ்மாக்கிற்கு முதன் முதல் வருகையில்
தனியாக மேஜையில் இருந்தவர் உங்களை
அவருடன் ஒரு மிடறு அருந்த உபசரித்தார்.
நீங்கள் போய் அமர்கையில் அவருடைய மேஜையில்
அதற்கு முந்திய நொடியில் மலர்ந்த,
அடுத்த நொடியின் பொன் மஞ்சளுடன் பறித்த
ஒரு பூவரசம் பூ  நீளக் காம்புடன் இருந்தது.
அடுத்தடுத்த எண்ணிலி மிடறுகளுக்குப் பின்
அது சிவந்திருந்ததைப் பார்த்தீர்கள்.
உங்களை உபசரித்தவரிடம் அனுமதி கேட்டு
அந்தப் பூவை  வாஞ்சையுடன்  கையில் எடுத்தீர்கள்.
அப்போதும் அது சொரசொரப்பாகவே இருந்தது.
‘எப்போதும் சொரசொரப்பானது இந்த வாழ்வு’ என்று
யாரோ சொல்வது போல நீங்கள் சொன்னீர்கள்.
மிக உச்ச விசையுடன்  உங்கள் கன்னத்தில்
உடனடியாக உங்களை உபசரித்தவர் அறைந்தார்.
வேறெங்கும் இன்றி இந்த டாஸ்மாக் கடைக்கு மட்டுமே
நீங்கள் வரத் துவங்கியது அதற்குப் பிறகுதான்.