Tuesday 25 December 2012

மீனுரை




சந்தியா பதிப்பகம் வெளியிடயிருக்கும் என் கவிதைத் தொகுப்புக்கான என்னுடைய முன்னுரை.





மீனைப் போல இருக்கிற மீன்.
               கல்யாண்ஜி



மெய்ப்புத் திருத்த அனுப்பியிருக்கிறார்கள்.
திருத்த வேண்டுமா என்றிருக்கிறது. எல்லாப் பிழைகளையும் நான் திருத்திவிடமுடியுமா? நான் செய்த பிழைகளை நானே திருத்தும் போது, ஏதோ ஒரு கட்டத்தில், ஒரு இருபது அல்லது இருபத்தி இரண்டாம் பக்கத்தில், என் பிழைகளை நானே ரசிக்கவும் ஆரம்பித்து விடுகிறேனே என்ன செய்ய?
7ம் பக்க்ததில் முதல் கவிதையின் அச்சடிப்பு இருக்கிறது. 6ம் பக்கம் காலியாக இருக்கிறது ,  ஒரு எழுத்து. ஒரு புள்ளி கூட அற்ற வெள்ளையாக. அதற்கு முந்திய 1 முதல் 5 பக்கங்களை, இதை எழுதுகிற இந்த நொடிப் பிளவில், யூகிக்கமட்டுமே வேண்டியதிருக்கிறது. மற்றவர்களையும் உள்ளடக்கி, பொதுவாக எல்லாக் கவிதைகளையும் பற்றிச் சொல்ல எனக்கு வக்கு இல்லை.
என்னுடைய இந்தத் தொகுப்பின் கவிதைகளுக்கு முன்னாலும் இப்படி யூகிக்கவேண்டிய, காலியான பகுதிகள் இருக்கின்றனவோ என்று தோன்றுகிறது.  முன்னாலோ பின்னாலோ அப்படி இருந்தால்தான் என்ன என்றும், அப்படி இருப்பதுதானெ இயல்பு என்றும் கூடக் கேட்கவும் சொல்லவும் செய்யலாம். நானோ, என் வாழ்வோ எந்தப் பிழைகளும் இன்றி, எந்தக் காலியிடங்களும் இன்றி, எந்த யூகங்களும் அவசியப்படாமல் அப்படியே மெய் மிகுத்து, துலாம்பரமாக் நிரம்பி வழிகிறோமா என்ன? ஒரு மேல்நிலைத் தொட்டி போல நிரம்பிக் கொண்டு, தேவைப்படுகிற நேரங்களில், தேவைப்படுகிற குழாய்களைத் திறந்துவிட்டுக் கொள்வது போல என்னுடைய கவிதைகள் இருக்குமெனில், அது மாநகராட்சிக் குடிநீர் வாரியம் பெருமைப்பட்டுக் கொள்ளவேண்டிய விஷயமே தவிர, ப்ளீச்சிங் பவுடர் வாடையடிக்கிற அந்த சுத்தீகரிக்கப்பட்ட கவிதைகளை வைத்து நான் என்ன செய்ய?

போன டிசம்பரில் இருந்து, அனேகமாக இந்த 2012 ஆகஸ்ட் இறுதி வரை இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளையும், இதற்கு மேல் பத்துப் பன்னிரெண்டையும் நான் எழுதியிருப்பேன். இரண்டோ மூன்றோதான் சிறுகதைகள் எழுத முடிந்தது என்ற சிறிய கவலை ஒரு பக்கம் இருந்தாலும், இத்தனை கவிதைகள் எழுதியிருக்கிறேன் என்கிற சிறிய சந்தோஷமும் இருக்கவே செய்கிறது. எப்போதுமே பெரிதினும் பெரிதுதான் கேட்க வேண்டுமா? அப்புறம் சிறிதினும் சிறிதை யார் கேட்பது? அப்படிச் சிறிதினும் சிறிதைக் கேட்கிற ஒருவனாக இருப்பதிலும், அப்படி இருந்து இவற்றை எழுதியதிலும் எனக்கு மகிழ்ச்சிதான்,

இது மழைக்காலம். ஐப்பசி முடியப் போகிறது. சரஸ்வதி பூஜைக்கு முன்னால் கொஞ்சம் மழை பெய்தது.  கொஞ்சம்தான். அந்தக் கொஞ்ச மழையை முதலில் புல் கொண்டாடுகிறது. அதற்குப் பின் கொழுஞ்சி தன் கருநீலச் சிறு பூக்களால். பத்து நாட்கள் போனால் தரையோடு தரையாய் மஞ்சட் பூக்கள். பெயர் தெரியாத தாவரங்கள் தன் சின்னஞ்சிறு வெள்ளைப் பூக்களுடன் அடுத்து கொண்டாட்டத்தின் வரிசையில் நிற்கும். போகப் போக, தும்பை பூத்துவிடும். ஈசல் பறந்த வெளியில் தட்டான்கள். என் புல், என் கரு நீல, என் மஞ்சள், என் வெள்ளை, என் தும்பை முளைத்தும் பூத்தும் கிடக்கிற இவற்றின் இடையே தான், என்னுடைய நீண்டகால ஒற்றையடிப் பாதை வளைந்தும் நெளிந்தும் வகிடெடுத்துக் கிடக்கிறது, காளான்கள் பார்த்தபடி.


இவை எழுதப்பட, ‘உயிர் எழுத்து சுதீர்செந்தில் மட்டுமே காரணம். அவருடைய சென்ற பிறந்த நாளில் நான் அவருக்கு வாழ்த்துச் சொல்லும் போது, ‘எனக்கு ஒரு பிறந்த நாள் பரிசு தருவீர்களா சுந்தரம்?என்றார். நான் இந்த பிறந்ததினக் கொண்டாட்டங்கள், வாழ்த்துச் சொல்லல், பரிசு கொடுத்தல் எல்லாம் அவ்வளவாய் பழகாதவன். வரவர எல்லாவற்றையும் தானே பழகிக்கொள்ள வேண்டியதிருக்கிறது. ஒரு பிறந்த நாள் தொடர்பான் சந்தோஷமான உரையாடலில் ஜாக்கிரதை உணர்வு எல்லாம் இருக்காது அல்லவா? ‘ சொல்லுங்க சுதீர்என்றேன்.
’2012  உயிர் எழுத்து முழுவதற்கும் கடைசிப் பக்கக் கவிதைகள் எழுதவேண்டும். பத்தில் இருந்து பன்னிரண்டு தேதிக்குள் எனக்குக் கவிதைகள் கிடைத்தால் போதும்என்றார். ஒப்புக் கொண்டேன். கல்யாணி.சி என்ற பெயரில் வெளிவரட்டும் என்று நானே அவரிடம் கேட்டுக்கொண்டேன். பெயர்தான் ஜாடையா என்ன? இத்தனை வருடங்களாக எழுதுகிற எழுத்தின் ஜாடையைத் தெரியாமலா போவார்கள்? அப்படியெல்லாம் ஒன்று தெரியாமல் போகாது. தெரியாதது போல வேண்டுமானால் இருப்பார்கள். அப்படி இருப்பவர்களுக்காக, நான் என் கூர்நுனிக் குறைவான மூக்கால் நுகராதும், இடைவெளியுள்ள முன் பற்களால் சிரிக்காதும் இருக்க முடியுமா?  நான் தேடியடைந்ததை, என்னைத் தேடி வந்ததை, எனக்குக் கிடைக்கிறவைகளைக் கண்டு, கேட்டு, உண்டு, உற்று, உயிர்த்தபடி இருக்கிறேன் எனில், அந்த உயிர்ப்பின் ஜாடை என் சொல்லில் இல்லாதா போகும்?

என் எல்லைகளை நான் அறிந்திருக்கிறேன்.
எழுதுகிறவனுக்கு எல்லைக் குறைவுகளும் இல்லை. எல்லை நிறைவுகளும் இல்லை. அது ஒரு மாயத் தொலைவும் மாய இருப்பும் உடைய தபசில் சொத்து. நான் குடியிருக்கிற வீடு எத்தனை சதுர அடி என்றால் எனக்குத் தெரியாது. நாங்கள் புழங்கப் போதுமானதாக இருக்கிறது. நீங்கள் வந்தால் உட்கார இடம் உண்டு. எங்கள் அப்பா படுத்திருந்து ஓய்வெடுக்கிற நிலையில்  தன் இத்தனை எண்பத்தேழு வருடங்களையும் திரும்பிப்பார்த்து அசைபோடும் கட்டிலை இட, ஜன்னலும் வெளிச்சமும் நிரம்பிய இடம் உண்டு. சங்கரி பொறுக்கிய முதல் காக்கைச் சிறகும், எதுவும் அணியாது ஒரு சிறிய பிரம்பு நாற்காலியில் கை ஊன்றி ஒரு அப்பழுக்கற்ற சுடர் போல ராஜு நிற்கும் அந்த ஐஸோலி காமெரா புகைப்படமும் இங்கேதான் எங்கோ இறந்தகாலத்தின் இழுப்பறை ஒன்றில் இருக்கும். அர்ச்சனாவோ அல்லது ஆதித்யாவோ ஒளிந்துவிளையாடத் தோதுவான மூலைகளை அவர்களே இங்கே தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும். நான் உட்கார்ந்து மழை பார்க்க வெள்ளை நிற பிளாஸ்டிக் நாற்காலி இருக்கிறது. அடிக்கடி வகை மாறும் சாம்பல் பூனைகள் நடமாட மதில் சுவருக்குக் குறைவில்லை. நேற்று என்ன கிழமை? புதனா?‘ அய்யா. லெப்பர் அய்யாஎன்ற நகமற்ற குரலுடன் நான்கைந்து தொழுமுகங்கள் என்னைக் கூப்பிட ஒரு வாசல் இருக்கிறது. புருவம் அடர்த்தி குறைந்த அந்த வளர்த்தியான மனிதரின்சிரிப்பு வெயில் போல் பளீரென்று அடித்து மங்கி நிழலாடி அவருடன் நகர்ந்துவிடுகிறது உடனடியாக. பக்கத்து வீட்டு தீபாவளி வெடிகளின் உதிரித் தாள் சிதறிக் கிடக்கும் கோலத்தின் மேல் நரம்பு புடைத்த ஒரு சருகு இலை இவையெல்லாவற்றையும் விட, எனக்கு அல்லது அவளுக்கு மனது முட்டிப் போய் பெருமூச்சு விட, தனித்தனியாகக் கண்ணீர் பெருக்கிக் கொள்ள அவரவர்க்கான பிரத்யேக இடங்கள் உண்டு. போதாதா என்ன?

இந்த இடங்களை உணர்ந்தவனுக்கு எந்த இடங்களையும் உணர முடியும்தானே. மனது அளவைமானியாகி விடுகையில், உப்புக் கல்லில் கடலோசை கேட்காமலா போகும். பேருந்தில் போகும் நமக்கு, சாலையோரத்தில் எங்கோ காகிதம் கருகும் வாடை நூலகம் எரியும் என்னென்ன பதற்றங்களைச் சில சமயம் உண்டாக்கிவிடுகிறது. ஊஞ்சல் கட்டின, நிலைக்கண்ணாடி இருக்கிற ஏதோ ஒரு பூர்வீக வீட்டில் எப்போதோ அவித்துக் கிண்டியிருந்த நெல்லை வந்து வந்து கொத்திப் போகும் சிட்டுக் குருவி அமர்ந்த ஜன்னல்கதவின் விளிம்பில் நான் ஏன் இப்போது உட்கார்ந்து சிறகு கோதுகிறேன்? நான் எங்கெங்கெல்லாம் பறந்திருக்கிறேன்.  என்னென்னவெல்லாம் என் முன் விசிறப்பட்டன?

கலாப்ரியாவுக்கும் சுகுமாரனுக்கும் சமயவேலுவுக்கும் தேவதச்சனுக்கும்  ரமேஷிற்கும் ஒரு சிறிய பறவை போல, அவர்களின் முற்றத்தில் நான் தானியம் பொறுக்குகிற அலகுடன் நடமாடுகிறேன் என்று தெரிந்திருக்காது. இளைய பாரதியும் யுவன் சந்திரசேகரும் மாலதி மைத்ரியும் குட்டி ரேவதியும் அவர்கள் கொடிக் கம்பியில் உலரும் துணிகளின் மேல் இட்டிருக்கும் எச்சம் என்னுடையது என்பதை அறியமாட்டார்கள். மனுஷ்யபுத்திரனும் லட்சுமி மணிவண்ணனும் கரிகாலனும் யவனிகா ஸ்ரீராமும் பிரான்சிஸ் கிருபாவும் அவர்களின் அசையும் கிளைகளில் ஒரு சிறு பொழுது அமர்ந்துவிட்டுப் பறந்து போயிருக்கும் என் சாயலைக் கண்டிருக்க வாய்ப்பில்லை. அதே பறவையாக, அதே அலகால்தான் எஸ்.செந்தில்குமார் அல்லது முகுந்த் நாகராஜன் அல்லது சங்கர ராம சுப்ரமணியன் அல்லது ராணிதிலக்கின் அல்லது இசையின் முற்றங்களிலிருந்து என் தானியங்களைச் சேகரித்துக்கொண்டே போகிறேன்.
இதோ இதை எழுதுவதற்கு முந்திய இரவில் வாசித்துப் பார்த்த
சாம்ராஜின் முதல் தொகுப்புக்கான கவிதைகள், அதைவிடவும் அதற்கான முன்னுரை உண்டாக்கிய பெரும் அதிர்வு இன்னும்
தணியாமல் இருக்கிறது. ஒருவகை சிலிர்ப்பு நிரம்பிய இந்தச் சமயத்தில் மிகுந்த நெருக்கத்துடன் சாம்ராஜுக்கு நல்வரவு சொல்கிறேன்.
என்னுடைய இந்தத் தொகுப்பின் கவிதைகளைத் தேர்ந்தெடுத்தவர்
என்பது மட்டுமல்ல, சலனங்கள் மிக்க, சமீபத்திய என்னுடைய தனிப்பட்ட பத்தாண்டு வாழ்வில் படர்ந்த  இருட்டையும் வெளிச்சத்தையும் மற்றெவரையும் விட மிக அதிகமாக அறிந்தவர் அவர். இந்தத் தொகுப்பை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்.
இக்கணம் என் அலகில் இருப்பது அவருடைய தானியமே.


கல்யாணி.சி                              19.சிதம்பரம் நகர்
15.11.2012.                                பெருமாள்புரம்
                                         திருநெல்வேலி-7.


2 comments:

  1. குத்தால அருவியப் பாக்கையில, மெய் மறந்து பாத்துக்கிட்டே இருக்கத்தான தோணுது ! அதப் பத்தி பேசவா தோணுது ..

    ReplyDelete
  2. கலக்கல் தலைவரே

    ReplyDelete