Thursday, 27 December 2012

எதன் கொலோ?
பசித்தவன் மட்டுமா பழங்கணக்குப் பார்க்கிறான்? என்னைப் போல, எழுதுகிறவன் பார்க்கிறவை அனைத்தும் பழங்கணக்குதானே. மீள் பார்த்தல் அற்ற எழுத்து சாத்தியமா? அறுபதுக்களின் கலைமகள் தீபாவளி மலர்களில்
ஃபோட்டொ என். ராமகிருஷ்ணா என்று கீழே பெயருள்ள நிறையப் புகைப்படங்கள் வரும். அனேகமாக புகைப்படக்காரரின் குடும்பத்துப் பெண்களும் குழந்தைகளும் இருப்பார்கள். அது அல்ல விஷயம். அவர் எடுத்த
தூரத்துக் காட்சிகளில், அனேகமாகக் கட்டிடங்களின் படங்களின் மேலோர
இடது அல்லது வலது விளிம்பில் ஒரு மரக்கிளையோ இலையோ தெரிந்து, அந்தப் படங்களின் அழகை உயர்த்திவிடும். அந்த எட்டிப்பார்க்கும் கிளையோ இலையோ மாதிரி, கொஞ்சமாவது பழைய ஞாபகங்கள் எட்டிப்பார்க்கிற புனைவுகள் மேலும் ஒரு அடர்த்தியை அடைந்துவிடுகின்றன.

நான் சமீபத்தில் உபயோகித்த ஒரு கோடுபோட்ட நோட்டை, அதன் அத்தனை பக்கங்களும் எழுதித் தீர்ந்துவிட்ட நிலையில், திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் அட்டை வடிவமைப்பே நன்றாக இருக்கிறது. இளம் பச்சை நிறம்.  கீழே வரவர பச்சை அடர்கிறது. நடுவில் மேல் நோக்கிய முகம், மேல் நோக்கி விரித்த கைகளுடன் ஒரு பெண்ணென யூகிக்கவைக்கும் கோட்டுருவம். அவரே விருட்சமாகித் தளைத்தது போல,கிளைவிட்டு இலை விட்டது போல, கோட்டுருவக் கிளைகளும் ஒளிச்சேர்க்கை நடத்தி உயரும்
இலைகளும்.

உள்ளே என்னென்னவெல்லாமோ. நிறையக் கவிதைகள், பிரசுரமானவையும், பிரசுரத்திற்கு லாயக்கற்றவை என நான் தீர்மானித்தவையும்.  சமீபத்தில் ராஜுமுருகனுக்கு  நெருக்கடி மிகுந்த ஒரு மனநிலையில் எழுதியனுப்பிய முன்னுரை, இதையெல்லாம் விட முக்கியமாக, சென்ற விடுமுறையில் வந்திருந்த என் பேரனுக்கு வரைந்து காட்டியிருந்த , அவன் விரும்பிக் கேட்ட,
ஆந்தை, தவளை, மாடு,கன்றுக்குட்டி மற்றும் ‘காக்காய்’ படங்கள். ஒரு ரோபோ, ஒரு கார். அவையும் அவனுடைய விருப்பமாகத்தான் இருக்கும்.
போதாதா இவை? திரும்பிபார்க்க ஒரு நோட்டுப் புத்தகத்தில் இவ்வளவு இருந்தால், அதன் வரிகளுக்குள் வராததாக எவ்வளவு இருக்கும்? வரிகளின் இடையில் எவ்வளவு ஒளிந்தும் ஒளித்துவைக்கப் பட்டும் இருக்கும்?

இந்த மூன்று கவிதைகளையும், அதன் கவிதைத் தன்மைக்காக அல்ல, வாசகனுக்கு அல்லாமல், எழுதிய எனக்கே மீட்டுத் தரும்  அந்த வரிகள் கிழித்துப் பறக்கவிட்டிருக்கும் என் தேதிகளுக்காக, பத்திரப்படுத்துகிறேன்.

%

விபத்துக்கு உள்ளாக்குவேன்
என பயமிருக்கும் எவரும்
இந்த வாகனத்தில் இருந்து
இறங்கிக் கொள்ளலாம்.
இப்போதுதான் அரசு உரிமம் பெற்றிருக்கிறேன்
எனினும்
இந்த வாகனத்தை நான் செலுத்திக் கொண்டிருப்பது
பிறவியில் இருந்து.
இறங்கும் முன்
இதுவரை அமர்ந்து நீங்கள் கொறித்த
அவதூறுப் பட்டாணிகளை
நீங்கள் வாசித்த நாற்றமெடுக்கும்
புலனாய்வுப் பத்திரிக்கைகளை,
உங்கள் கூந்தலில் சூடி உதிர்ந்த
பூக்களைக் கூட இங்கே
விட்டுவிட்டுச் செல்ல வேண்டாம்.
உங்களின் இதுவரையிலான சுவாசத்தை
நான் இன்னும் சிறிது தூரத்தில்
ஒப்படைத்துவிடுவேன்
என் பயணத்தின் நெடுஞ்சாலைக் காற்றிடம்.

%

நேற்று முன்தினம்
நீண்ட ஓர் இரவுப் பயணத்தில்
பழுதான பேருந்தில் இருந்து இறங்கி
ஒரே ஒரு நட்சத்திரம் பார்ப்பதற்காக
வாழ்ந்தது போல இருந்தது.
நேற்று எனிலோ
அடர்வனம் புகுந்து, நெடுவழி தொலைந்து
ஆளற்ற அருவியின்
நீர்ச்சிற்பம் பார்த்து
நிற்பதற்கென.
விடிவதற்கு முன்பே, இன்றெழுந்து
பசி கிள்ளும் வயிற்றுடன்
தச்சுவேலைக்குச் செல்லும்
இவர்களைப் பார்த்து நிற்பது
எதன் கொலோ?

%

இந்த கோடைகால முற்பகலில்
உங்களுக்கு விதிக்கப்பட்ட ச்ப்தங்களுக்கு
மத்தியில் நீங்கள் இருப்பீர்கள்.
முற்றிலும் நரைத்துவிட்ட
என் கன்னங்களில் படியும்
வெயிலை நசுக்குகின்றன,
ஒரு மரத் தச்சனின் இழைப்பு.
ஒரு புதர்ப்பறவையின் அதிரும் குரல்,
ஒரு தாமதச் சேவல் மற்றும்
கினிக்கோழியின் ஒன்றின்மேலொன்றாக
அடுக்கப்பட்டுச் சரியும்
கொலைபடு குரல்.
\இதையெல்லாம்விடத் துயரமான ஒன்று.
யார் வீட்டுப் பின் முற்றத்திலோ
தொடர்ந்து அலையடித்துத் தெறிக்கும்
துணிதுவைப்பின் ஈரச்சத்தம்.
பப்பாளி மரத்தில் அமர்ந்த
முதல் காக்கையில் துவங்கி,\
கூரியர் வினியோகிப்பவர் சைக்கிள் டயர்
பிருபிருத்து மணல் உதிர்க்கும் 
இன்னொடிவரை
கல் தேய, கை தேய
துவைக்கும் சேற்றுப் புண்நிரம்பிய\
அந்த விரல்கள் நெறிக்கட்டும்
வேப்பம் பூக்களில் இளைப்பாறும்
இந்த வியாழக்கிழமை சூரியனின் கழுத்தை,
என்னைச் சாட்சி வைத்து.

%

1 comment:

  1. இன்று அலுவலகம் செல்லவில்லை. முதுகு வலி அழவைக்கிறது. ஆனால், சில நாட்களாக படிக்காமல், உங்கள் சமீபத்திய பதிவுகளை இப்போது வாசிக்கும்போது, வலியையும் தாண்டி ஒரு சந்தோஷமான மனநிலைக்கு இட்டுச்செல்கிறது. கடைசிக்கவிதையில் இந்த தருணம் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.

    புத்தாண்டு வாழ்த்துக்கள் கல்யாணி அங்கிள். :)

    ReplyDelete