Wednesday 28 November 2012

அழைக்கிறவன்.


இன்னும் அந்தக் கனவிலிருந்து என்னால் வெளியேறிவிட முடியவில்லை. ஒரு  மூன்று தினங்களாக அந்தக் கனவு துரத்திக் கொடிருக்கிறது. ‘கல்யாணி, கல்யாணி’ என்று  அவன் கூப்பிடும் குரலை நான் உதறிவிட்டுத் தப்பித்து வந்துவிட்ட குற்றவுணர்வின் பளு என்னை நசுக்கிக்கொண்டு இருக்கிறது. இந்த குளிர் இறங்கிக்கொண்டிருக்கும் தொட்டதோகூர் அடுக்ககம் ஒன்றின் முன்னனறையில் என் பின்னிருந்து அந்தக் குரல் எட்டிப்பார்த்துக்கொண்டு இருக்கிறது.

அவன், என் கதைகளில் வரும் ‘சிவன்’,என்னைத் தனியனாக்கிவிட்டுப்
போய்  கிட்டத்தட்ட  நான்கு மாதங்கள் இருக்கும். என்னை விட அவன் ஏழு வயது சின்னவன். ஆனால் ஏழு பிறவிகள் மூத்தவன். என்னை அவன் தன்னோடு வைத்துக்கொள்ள இவ்வளவு விரும்பியிருப்பான் என்பது, இந்தக் கனவு வரை தெரியாமலே போயிற்று.

இத்தனைக்கும் அந்த இரவு திருநெல்வேலியுடையது கூட அல்ல.   இதற்கு முந்திய நான்கைந்தாக, சென்னையில் இருந்த தினங்களில் அவனுடைய ஞாபகம் ஒரு முறை வந்தது என்று சொல்லிக்கொள்ள எந்தத் தருணமும் இல்லை. வாசிப்பதற்கு எந்தப் புத்தகமும் எடுத்துக்கொள்ளாத தப்பைச் செய்த, வழக்கம் போல அதிகம் உரையாடலற்ற சதாப்திப் பயணத்திற்குப் பிந்திய மின்னணுநகரின் இரவில் அவன் அவ்வளவு தீவிரமாக என்னை அழைக்கும் கனவு வர எந்த முகாந்திரமும் இல்லை. நட்பை விடக் கூடுதல் முகாந்திரம் என்ன வேண்டியதிருக்கிறது?

அதே வெள்ளைக் கதர் சட்டை. கதர் வேட்டி. அவனும் நானும் ஏதோ ஒரு நகரமும் கிராமமும் அற்ற ஊரில் நடந்து போய்க்கொண்டு இருக்கிறோம். பகலா இரவா, தெரியவில்லை. வெயில் அல்ல, நிலவு அடிக்கிற பின்னிரவு போலத்தான் தெரு தன்னை வைத்திருக்கிறது. ஒரு வீட்டின் துப்புரவான திண்ணை  நிறைய இறந்த காலத்தை அதன்மேல் பாய் போல விரித்து வைத்திருந்தது. அந்த மரத் தூணின் வயதை அனுமானிக்க முடியவில்லை. அந்தக் கொல்லம் ஓடுகளுக்கு என்ன வயதோ, அதற்குக் கூடக் குறைய தூணுக்கும் இருக்கலாம். எங்களைத் தவிர யாரின் நடமாட்டமும் இல்லை. அவன் பேசிக்கொண்டே வருகிறான். வாய்க்கு வாய் சிரிக்கிறான். சொல்லுக்குச் சொல். ‘கல்யாணி’ என்கிறான்.  கையில் எதையோ வைத்திருக்கிறான். என்ன என்று அவனும் சொல்லவில்லை. எப்போதும் போல நானும் கேட்கவில்லை. எனக்கு அல்லது யாருக்கோ கொடுத்து விடுவதற்கானதாக அதை அவன் வைத்திருக்க வேண்டும் என்று இப்போது தோன்றுகிறது.

ஒரு இடத்தில் பாதை திரும்பியது. நீர்க்கருவை மரங்கள் நிறைந்த பகுதி அது. அந்த இடத்தை மட்டும் ஏற்கனவே பார்த்த மாதிரி எனக்குத் தோன்றுகிறது. பார்க்கவே பார்க்காத ஊரில், ஏற்கனவே பார்த்த மரங்கள் எப்படி முளைத்தன எனத் தெரியவில்லை. அவன் குனிந்து கையில் வைத்திருந்ததை அந்த முள் மரங்களின் மூட்டில் வைக்கிறான்.

‘வாங்க கல்யாணி.இப்படி போய்விட்டு வருவோம்’ என்கிறான். அவன் கூப்பிட்டால் இதுவரை எங்கும் போனவன்தான். இன்றும் போகத் தயாராக
பக்கத்தில் நிற்கிறேன். ‘இதையும் எடுத்துக் கொள்கிறேன்’ என அவன்
குனிகிற இடம் காலியாக இருக்கிறது. ‘இங்கேதானே வைத்தேன்’ என அவன் சொன்ன இடத்தின் காலியில்தான் எனக்கு ஏதோ  ஒரு இருட்டு பிடிபடுகிறது. இல்லாமல் போனவன் எப்படி இருக்கிறான் என்று யோசிக்கும் போதே நான் விலகத் துவங்கிவிட்டேன். அவன் இங்கும் அங்கும் தேடித் தேடி நகர நகர,  நான் ஒரு பதற்றத்தை அடைந்திருந்தேன்.  அவனுக்கும் எனக்குமான இடை வெளியை அவனறியாமல் அதிகப்படுத்தும் கேவலமான உபாயங்களை நான் தேர்ந்தெடுக்கத் துவங்கிவிட்டேன். எனக்கும் அவனுக்கும் இடையே  சாம்பல் படுதா அலைய, நான் இதுவரை என்னைச் செருகிவைத்திருந்த இடத்தில் இருந்து என்னைச் சத்தமே இன்றி உருவியபடி, என்னுடைய வேறொரு திசையைக் கண்டுபிடித்துவிட்டேன்.

கல்யாணி’ என்று அவனுடைய கூப்பிடுதலின் முதல் சத்தத்தை உடனடியாக நான் கத்தரித்துக்கொண்டவிதம், இப்போது நினைக்கையில் அருவெறுப்பு உண்டாக்குகிறது. எந்த அழைப்புக்காக நான் ஒவ்வொருதினமும் சமீப நாட்களில் தொடர்ந்து தவித்தேனோ, அதைத் தவிர்ப்பதற்கு, ஏறக்குறைய  நான் ஓடத் துவங்கியிருந்தேன்.  அவன் திரும்பத் திரும்ப, ‘கல்யாணி, கல்யாணி’ என்று கூப்பிடுகிறான். ‘போகாதீங்க கல்யாணி’ என்று அவன் சொல்லவில்லை.

‘கல்யாணி, கல்யாணி’ என்ற அந்த அழைப்பைப் புறக்கணிக்க முடிகிற
 இத்தனை அசிங்கமான ஒருவனாக நான் எப்போது மாறினேன் என்று தெரியவில்லை. அல்லது ஏற்கனவே நான் அப்படித்தான் இருந்து, அப்படி இல்லாதவனாகப் பாசாங்கு செய்துகொண்டு இருக்கிறேனா?

நான் வாய்விட்டு உளறிக்கொண்டு விழித்தபோது , அவனுடைய  பெயரைச் சொல்லியிருக்கலாம். . நிச்சயமாக என் கனவில்  விட, நனவில் நான் உண்மையாக இருந்திருப்பேன்.  முன்பின் பரிச்சயமற்ற இந்த வீட்டின் கட்டிலில் அதிர்ந்து எழுந்து உட்கார்ந்த போது, அவனுடைய குரல் ‘கல்யாணி’ என்று கூப்பிடுவது இன்னும் எனக்குக் கேட்டுக்கொண்டே இருந்தது.

துக்கமும் தவிப்பும் அடர்ந்த அந்தக் குரலின் அழைப்பை ஒப்புக்கொள்ள நான் இந்த நிமிடம் தயாராக இருக்கிறேன் என்பதை அவனிடம் எப்படிச் சொல்ல?.

2 comments:

  1. ஏதோ சாயல்ல பழகுன அனுபவமாத் தான் தோணுது..ஆனா.. தெளிவா பிடி கெடைக்கல.. கொஞ்சம் டயம் வேணும்.. கண்டிப்பா எழுதணும்..

    ReplyDelete
  2. கனவுகள் இல்லாத தூக்கம் வாய்த்ததில்லை.. நல்ல வேளை, கனவுகள் பெரும்பாலும் நினைவில் நிற்பதும் இல்லை! 'கனவுகள் சம்பந்தமே இல்லாமல் வருகிறது' என்று பொதுப்படையாக சொல்லிவிட்டு அதை ஆராய்ச்சி செய்யாமல் விலகி விடுவது வழக்கம். உங்கள் மன உளைச்சலைப் பார்க்கையில் அது நல்லதோ என்று தோன்றுகிறது.. இருந்தாலும் ,கனவு சமீபத்தில் மரணமடைந்த நண்பனைப் பற்றியதாக இருந்தால், அது நம்மை ஒரு உலுக்கு உலுக்கி விடத்தானே செய்யும்...அதுவும், கற்பனையும் உணர்வுகளும் மிகுந்த ஒரு கவி உள்ளம்...

    ReplyDelete