Tuesday, 6 November 2012

இன்னும் சில






எப்படி இந்தச் சாத்தியம்
என்று நம்பமுடியவில்லை எனக்கு.
சகபயணியின் வாசிப்பில்
இருந்த புத்தகம்
இறந்துபோன யமுனாவுக்கு நான்
கையெழுத்திட்டுக் கொடுத்தது.
சில கவிதைகளின் தலைப்பை
டிக் செய்திருந்தாள்.
சிலவற்றில் பெருக்கல் குறிகள்.
இரண்டு மூன்று வரிகளின்
இடப்புறம் அங்கங்கே
பென்சில் சுவராக யமுனாவே
நின்றுகொண்டிருந்தாள்.
சில சொற்களுக்கு மட்டும்
அடிக்கோடு இருந்தது.
சில அச்சுப்பிழைகளுக்குத்
திருத்தங்கள் கூட.
ஒரு கவிதையின் கடைசிவரிகளை
அவளே வேறுவிதமாக
எழுதிப்பார்த்திருந்தாள்.
புரட்டிக்கொண்டே வந்தால்
ஐம்பத்து மூன்றாம் பக்கத்திற்கு
அப்புறம்  எந்தவிதமான
அடையாளங்களும் இல்லை.
பென்சில் முனைமுறிந்துபோனதா?
யமுனா மீதிப்பக்கங்களை
வாசிக்கவில்லையா?
அல்லது
எண்பதாம் பக்கத்திற்கும்
இதற்கும் இடையில்தான்
உறக்க மாத்திரைகளை அவள்
விழுங்கத் துவங்கினாளா?
ஒரு கவிதைப் புத்தகத்தில் இவ்வாறாக
ஒளித்துவைக்கப்பட்டிருந்தது
எழுதப்படாத ஒரு தற்கொலைக் குறிப்பும்
இன்னும் சிலவும்

%

இன்னொரு கேலிச்சித்திரம்
தொகுப்பிலிருந்து.

3 comments:

  1. அடிக்கடி நான் வாசிக்கும் என் பிரியமான கவிதை இது. முதல் முறை படித்தபோது உணர்ந்த அதிர்வும் வலியும் ஒவ்வொரு முறையும் அதே வீச்சில் உணர்கிறேன். உயிருடன் இருப்பதை உணரக் கிள்ளுவது போல் வலியே இருப்பை உணர்த்துகிறது.

    ReplyDelete
  2. அழுத்தமான பின்புலம் உள்ள அருமையான மனதை பாதிக்கும் வரிகள்..

    ReplyDelete