Tuesday, 20 November 2012

நேற்று, ஒன்று. நன்று.




இன்றைக்கு தமிழச்சியிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. அவர் விகடனின் ‘இன்று, ஒன்று, நன்று வழிப் பகிர்வில் கவிதைகள் குறித்துப் பேசுகிறாராம். என்னுடைய கவிதைகளை
மேற்கோள்கிறாராம். முடிந்தால் கேட்டுப்பாருங்கள் என்று அனுப்பியிருந்தார். கேட்டேன்.

ஒரே பாதையில்
ஒரு விளக்கடியில்
அவனும் அவளும்
விலகி நடக்க,
நீளச் சரிந்த நிழல்கள் மட்டும்
கூடிக் கூடிக்
குலவிப் பிரிந்தன

என்ற ஒன்றும்

ஆற்றில் குளிப்பவர் எல்லோர்க்கும்
பிடித்திருக்கிறது
அசைந்து மிதந்துவரும் பூவை.
அது தங்களுக்கு என்று
நினைத்து நீந்துகிறார்கள்
அதன் திசையில்.
பூவோ நகர்கிறது
நீச்சல் தெரியாது
ஆறு பார்த்து அமர்ந்திருக்கும்
சிறுபெண் நோக்கி.

என்ற மற்றொன்றும்..

இந்த இரண்டாவது கவிதையாவது சமீபத்தியது. ‘மணல் உள்ள
ஆறுதொகுப்பில் இருக்கிறது. ஆனால் அந்த முதல் கவிதைக்கு குறைந்தது 35 அல்லது 36 வயது இருக்கும். நான் என்னுடைய
முதிர் இருபதுகளில் திருநெல்வேலி பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் காசாளராக வேலை பார்க்கையில் எழுதியது. அதை
நானே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அனுப்ப, எங்கள் வங்கியின் ‘இல்ல இதழ்ஆன COLLEAGUE வெளியிட்டு இருந்தது. கூடவே, அதற்கான் சன்மானக் காசோலை வேறு. நாற்பது ரூபாய் என்று
ஞாபகம். எழுபதுக்களில் நாற்பது என்பது சிறிய தொகை அல்ல.
பம்பாய்த் தபால்களில் ஒன்றாக அதுவும் வந்திருந்ததால், கிளை மேலாளரின் பார்வையில் பிரிக்கப்பட்டு, எனக்கு திருவேங்கட தாஸ் என்கிற ‘டபேதார்கையால் வழங்கப் பட்டது. கிளை மேலாளர்கள் காசாளரைத் திரும்பிப் பார்க்கக் கூட மாட்டார்கள். அது அவர்களின் மரியாதைப் படிநிலைகளுக்கு ஒவ்வாதது. நான் தாஸிடமிருந்து சந்தோஷமாக வாங்கிக் கொண்டேன். தாஸிற்குக் கடுமையான ஆஸ்த்மா உண்டு. வருடத்தில் ஆறுமாதங்களேனும் அவர் அந்த அவஸ்தையில், பேசக் கூட முடியாதவராக இருப்பார். (பேச முடிகிற சமயங்களில்   அவரிடம் இருந்து வீசப்பட்டுத் தாழ்வாரங்களில் குவிந்து கிடக்கிற கெட்ட வார்த்தைகளை அள்ளி முடியாது).  பேச முடியாததை ஈடுகட்டிவிடுகிற மாதிரி ஒரு சிரிப்பை முகம் எப்போதும் வைத்திருக்கும்.
எண்பதாம் ஆண்டிற்குப் பிறகு என்னைப் பார்த்தவர்களுக்கு என் முகத்திலும் அந்தச் சிரிப்பைப் பார்த்திருக்க முடியும்.  நுரையீரல்
காற்றறைகளில் சிலந்திக் கூடு கட்ட ஆரம்பித்த பின் நானும் அந்தச் சிரிப்பைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருந்தேன். அந்த வகையில் திருவேங்கட தாஸ் என்னுடைய ஆசான் ஆகிறார். அவரிடமிருந்து இந்தக் கவிதைக்கான். என் காசோலையைப் பெற்றுக் கொண்டதில் எனக்கு இப்போது மகிழ்ச்சிதான்.
அந்தக் கவிதையை தமிழச்சி எடுத்துச் சொல்லி, என்னை சுமார் முப்பத்தைந்து வருடங்கள் பின்னகர்த்தி இருக்கிறார். அதைவிட
ஆச்சரியமும் மகிழ்ச்சியும் தருவது, தானும் தொடர்ந்து கவிஞராக  இயங்கிகொண்டு இருக்கும் ஒருவருக்கு, அதுவும் அதிகம் ஆங்கில இலக்கிய வாசிப்பு உடையவருக்கு, ஊடகம்
தந்திருக்கிற, நிறையப் பேரை அடைய முடிகிற ஒரு தொலை பேச்சு வாய்ப்பில் சொல்லத் தோன்றுகிற அளவுக்கு, ஏதோ ஒரு வகையில் இந்தக் கவிதை நினைவில் நின்றிருப்பது.

இந்தக் கவிதையை எழுதியதற்காக என்பதை விட, இது ஆங்கில வடிவில் வெளியானதற்காக என் கைகளைக் குலுக்கிய அழகிய நம்பி இப்போது இல்லை. தாஸ் எந்த இடையூறுமற்று தன் மூச்சை நிறுத்திவிட்டார்.. சொல்லப் போனால் சமீபத்தில் தீவிர ஆஸ்த்மா தொந்தரவுகள் அதிகமற்ற எனக்கு, ஒருவேளை இன்று மூச்சிழைப்பு வரலாம்.
அதிகம் உணர்ச்சிவசப்படும் போது, உறங்கிக் கொண்டிருக்கும் ஆஸ்த்மா தீவிரமடைந்து கூத்தாடுகிற முன் அனுபவங்கள் எனக்கு உண்டு. நான் என்னுடைய அந்த முப்பத்தைந்து வருடங்களுக்கு முந்திய அந்த எளிய கவிதையைக் கொண்டாடும்
வகையிலேனும்  இன்னும் சில அதிக தடவைகள், என்னுடைய தினசரி உபயோகத்தில் இருக்கும் ’அஸ்த்தாலின் இன்ஹேலரை’ இன்றிரவு உபயோகிக்க விரும்புகிறேன்.
இதோ துவங்குகிறது என் நுரையீரல் உட்சுவர்களுள் ஒரு இழை பின்னும் சிலந்தியில் எடையற்ற நடமாட்டம்.

2 comments:

  1. இந்த கவிதை (இரண்டாம் கவிதையும்)
    முப்பத்தி ஐந்து அல்ல முன்னூறு வருடங்கள்
    கழித்தும் ரசிக்கப் படும், போற்றப் படுபவை .

    இந்த தாஸ் அவர்கள் தான்,

    ஒரு அலுவலக சைக்கிள் கதை ,
    பெண் ஊழியர் ஒரு கோப்பை மறந்து வைத்து விடுவார் , அதை எடுக்க அலுவலக நேரம்
    முடிந்து எடுத்து பத்திரப் படுத்தப் போவார்

    என்ற கதைகளில் வரும் அற்புத மனிதரா.


    நாற்காலி ரிப்பேர் கடையில் கூட வருவாரோ

    ReplyDelete
  2. தலையணை தலையணையாக எழுதினாலும் படித்தாலும் கிடைக்காத வாழ்க்கை தரிசனம்,உங்களுடைய எளிய சிறிய கவிதை வரிகளில் பளிச்சென்று கிடைத்து விடுகிறது !!

    ReplyDelete