Thursday 27 December 2012

ஒரு விடை பெறல்.



பனி பெய்திருக்கிறது.
காற்றழுத்தத்திற்குக் கீழ்ப் படிந்து இந்த 7.44ல் கூட இன்னும் இன்றைய வெயில் வரவில்லை. மைனாக்கள் பேசுகின்றன. பூவரசம் பூ பூத்திருக்கிறது. மைதானப் புல்லை மேயும் கலப்பினப் பசுக்களில் ஒன்றின் பின்னால், கன்றுக்குட்டிக் களை மாறாத ஒரு இளங்காளை தன் முன்காலகளைத் தூக்கிப்போடுகிறது. நாரைகளுக்கு அது மிகவும் பழகிய காட்சி போல. ஒற்றை மூக்குத்தியுடன் முக்காடிட்டுப் போகிற பெண், இன்னும் கட்டுமானத்தின் கடைசி நிலையில் இருக்கிற தேவாலயத்தின் திசை நோக்கிச் சிலுவைக் குறியிட்டுத் தன்வழி திரும்புகிறார். எதிரே கணவருடன் நடந்து வரும், தூக்கம் மிச்சமிருக்கிற முகத்துப் பெண் தன்னைச் சீர்திருத்தி, சேலைத்தலைப்பை இழுத்துவிட்டு, அப்படி இழுத்துவிட்ட நொடியின் புதுப்பித்தலுடன் என்னை லட்சியப்படுத்தி அலட்சியப்படுத்த முயல்கிறார். தூரத்து இணைகோட்டுத் தெருவில், அலகில் முள்தைத்த வினோதப் பறவையின் குரலில், இடியாப்பம் விற்கிறவர் கூவிக்கொண்டு செல்லும் சைக்கிள் நகர்கிறது.

எல்லாம் சரிதான்.
ஆனால் இத்தனைக்கு மத்தியிலும், இத்தனையுடனும் இன்னொரு நிழல் இழுபடுகிறது. திரும்பத் திரும்ப ஜோ பால் சார் நினைவுக்கு வருகிறார். ஜோ பால் சாருடன் எனக்கு அதிகப் பழக்கமில்லை. இதுவரை ஐந்து ஆறுமுறைகள் பேசியிருந்தால் அதிகம். ஜோ பால் அதிகம் பேசமாட்டார். அதிகம் சிரிப்பார். அதிகம் செய்வார். அதிகம் செயல்படுகிறவர்கள் முகத்தில் இப்படியொரு களங்கமே அற்ற துல்லியமான சிரிப்புத் திரண்டுவிடும் போல.

ஜோ பால் சாரை எனக்கு தங்கராஜ்தான் அறிமுகம் செய்துவைத்தான். ஜோ பால் அதிகாரியாகப் பணியாற்றிய - ஒரு அருமையான மனிதரை இப்ப்டி, “பணியாற்றிய” என்ற இறந்தகால வினைச்சொல்லுடன் சம்பந்தப்ப்டுத்துவது என்பது எத்தனை துயரம் நிரம்பிய கொடுமை - வங்கியில் ஏற்கனவே இருந்த வரவுசெலவு  நடைமுறைகளில் உடனடியாகச் சில மாற்றங்கள் தேவைப் பட்டன. நான் அடிப்படையில் இன்னொரு வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவன்தான் எனினும் , ஒரு வாடிக்கையாளன் வாடிக்கையாளனாக மட்டும் தானே நடத்தப் படுவான். நானும் அப்படித்தான்  நடத்தப்பட விரும்புவேன். என் முறை வரும்வரை வரிசையில் நிற்பது எனக்கு எப்போதும் சந்தோஷமானதே.  ஆனால், எனக்குத் தேவைப்பட்ட , அந்த  குறிப்பிட்ட வேலையில், வங்கிச் சேவைத் தடுப்புக்கு உட்புறம் அமர்ந்திருக்கிறவரின் புரிதலும் உதவியும் என்னைப் போன்ற தயக்கம் நிறைந்த, தொட்டால் சிணுங்கும் வாடிக்கையாளனுக்குத் தேவைப்பட்டது.

எடுத்த எடுப்பிலேயே, ஜோ பாலிடம் அந்தப் புரிதல் இருந்தது. மிக மிருதுவான அவருடைய பார்வையும் சொற்களும்,  அவர் என்னை உட்காரச் சொன்ன நாற்காலியையும் விட  வசதியாக இருந்தன. ஒரு கிறிஸ்தவக கருணையும் நட்பும் உடைய  கைகுலுக்கல் அவருடையது. தங்கராஜின் தொலைபேசி அறிமுகம் இல்லாவிட்டாலும் கூட, அவருடைய கண்களிலும் கைகளிலும் இந்த மிருது இருந்திருக்கத்தான் செய்யும். என்னை மட்டுமல்ல, தன்னருகில் வருகிற யாரையுமே ஜோ பால் சார் அப்படித்தான் பார்த்திருப்பார், மேஜை மேல் கணினி முகப்புக்கு முன், சற்று இறங்கி மூக்கில் நழுவியிருக்கும் கண்ணாடியுள் தன் பருத்த கண்களுடன் ஏறிட்டுப் பார்த்த அவருடைய முதல் பார்வை என்னிடம் பத்திரமாக இருக்கிறது.

நேற்று, தொலைபேசிக் கட்டணம் செலுத்த அதே வங்கிக் கிளைக்குப் போயிருந்தேன்.கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பிந்திய வேலை நாள்.  கூட்டம் அதிகமிருக்கும் என்று நினைத்தேன். இல்லை. என் வரவுசெலவு வரிசையில் நின்றபோது எல்லாம் நான் ஜோ பால் சாரின் நடமாட்டத்தைத் தேடினேன். அவரிடம் கைகுலுக்கிவிட்டு கிறிஸ்துமஸ் விசாரிப்பைச் செய்துகொள்ள நினைத்தேன். கண்களில் அவர் படவே இல்லை.

இனிமேல் காணவேமுடியாது  போவார் என்று நேற்றிரவு அதே தங்கராஜ்தான் சொன்னான்.  நேற்று நான் போயிருந்த சமயம் ஜோ பால் வங்கியில்தான் இருந்திருக்கிறார். நான் முதன் முதலில் அவரைச் சந்தித்த , அதே இடதுபக்க அறையில்தான் , அதே நாற்காலியில்தான் அவருக்கு  தீவிர மாரடைப்பு
வந்திருக்கிறது. அதே மேஜையில்தான் அவர் சரிந்திருக்க வேண்டும். இந்த முட்டாள் கணினிக்கு என்ன தெரியும்? தன் எதிரே ஒருவர் முற்றிலும் விடைபெற்றுக்கொண்டு இருந்ததைச் சற்றும் அறியாமல், அதனுடைய மென்பொருள் ஆணைகளுக்குக் கீழ்ப்படிந்த கணக்கு இலக்கங்களுடன் தொடர்ந்து இயங்கும் ஒரு இயந்திரச் சாட்சியாக மட்டும்  இருந்திருக்கும்

நான் ஜோ பாலுடன் கடைசியாகப் பேசியபோது, அவர் தலையை மட்டுமே
அசைத்தார்.  அந்த வங்கியில் , நான் சென்ற அந்த முந்திய தினத்தில் தணிக்கை நடந்துகொண்டு இருப்பதை என்னால் உணரமுடிந்தது.  தணிக்கை நடக்கும் வங்கியின் சுவர்கள் கூட ஒரு பதற்றத்தில் இருக்கும். ஊழியர், அதிகாரிகள் எல்லோரும் வேறொரு முகத்தை அணிந்திருப்பார்கள், வழக்கமான உயிர்ப்பும் கலகலப்பும் அற்ற, அவசர நிலைப் பிரகடன விரைப்பு அவர்களுக்கு வந்திருக்கும்.  அன்றைக்கு அப்படித்தான் இருந்தது .

நான் ஜோ பால் சாரிடம், “ஆடிட் நடக்கிறதா?” என்று தணிவான குரலில் கேட்டேன். ஜோ பால் சார் வாய் திறந்து பதில் சொல்லவில்லை. குனிந்து கொண்டிருந்த முகத்துடன், மூக்கிலே இறங்கியிருந்த கண்ணாடிக்கு மேல்
என்னைப் பார்த்தார். தலையை மட்டும் அசைத்தார்.

அது தலையசைப்பு என்றுதான் நினைத்தேன். விடைபெறல் என்று தெரியாமல் போயிற்று.

%

1 comment: