Wednesday, 28 November 2012

அசையும் உணர்கொம்புகள்


மரணம் கலைத்துப்போட்ட
பிளாஸ்டிக்  நாற்காலியில்
தனித்திருந்தேன்.
அந்தக் குழந்தை என்னிடம் வந்தது.
‘தாத்தா, எனக்கு நத்தை வேண்டும்”
வேப்ப மரத்தைக் காட்டி, கேட்டது.
ஒரு மஞ்சணத்திக் காய் போல
அப்பியிருந்த நத்தையை
பிய்த்து எடுத்துக் கொடுத்தேன்.
பிஞ்சு உள்ளங்கையில்
பயணமற்றுக் கிடந்தது நத்தை.
‘வெயிலில் விடு’ என யாரோ சொன்னார்கள்.
‘புல்லில் விட’ச் சொன்னேன் நான்.
வெயிலும் புல்லும் அற்ற
தண்ணீர் கசியும் ரப்பர்குழாயின்
நெளிவின்மத்தியில் இட்டது அதை.
சற்றுக் காத்திருந்தது.
கையை விரித்து, உதடு பிதுக்கி
நத்தையுடனான அதனுடைய
ஒப்பந்தத்தை ரத்து செய்து
வேறொரு உலகம் சிருஷ்டிக்க
குழந்தை நகர்ந்தது.
உறவு முறையை உரக்கச் சொல்லி
வெடித்துக் கதறியபடி இறங்கி
வாகனக் கதவு திறப்பவர்களிடம்
தரையில் கிடந்த வெயில் ஓடிப்போகையில்
காணாமல் போயிருந்த வேப்பமர ஞாபகத்துடன்
ஊர்ந்துசெல்லத் துவங்கியிருந்தது
உணர்கொம்புகள் அசையும் நத்தை.

%

’கல்யாணி’ எனக் கனவில் கூப்பிட்ட
அதே ‘அவன்’ ஞாபகமாக.

2 comments:

  1. அதனுடைய
    ஒப்பந்தத்தை ரத்து செய்து

    இந்த வரிகள் அல்லது இதற்கு நிகரானா வரிகள் உங்களின் சமீப இன்னொரு கவிதையிலும் வந்தது என்ற ஞாபகம்

    ReplyDelete
    Replies
    1. தெரியவில்லை ராம்ஜி. இதே வரிகளை முன்பே சமவெளியில்
      பதிவேற்றியிருக்கிறேனோ என்னவோ. 21 ஆகஸ்ட் என்று தேதி இட்டிருக்கிறேன் கையெழுத்து வரிகளின் கீழ். மறைந்த என் நண்பனின் ‘பதினாறு’ விஷேசத்தன்றுதான் அந்தக் குழந்தைக்கு நான் நத்தையை ‘பிய்த்துக்’ கொடுத்தேன். கனவில் என் பெயர் சொல்லி மறுபடி மறுபடி ‘அவன்’ அழைக்கிறபோது, என்னுடைய சில வரிகள் மறுபடி வந்தால்தான் என்ன?

      Delete