Monday 24 December 2012

தக்கையின் மீது ஆயிரம் கண்கள்.






எதிர்வரும்  புத்தக விழாவையொட்டி, சந்தியா பதிப்பகம் என்னுடைய சமீபத்திய கவிதைகளின் தொகுப்பாக இருக்கும் “ மீனைப் போல இருக்கிற
மீன் ” புத்தகத்தை வெளியிடுகிறது.

'உயிர் எழுத்து’வில் வந்த கவிதைகளும், உயிர் எழுத்துக்காக எழுதிய கவிதைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளும் அடங்கியது இது.
சென்ற டிசம்பர் மாதத்தில் இருந்து இந்த ஆகஸ்ட் வரை நான் தொடர்ந்து வெவ்வேறு மனநிலையில் , வெவ்வேறு கவிதைகளை எழுதிவந்திருக்கிற
என்னுடைய  வாழ்நிலை, வெறும் மூன்றே மூன்று சிறுகதைகள் மட்டுமே எழுதுவதற்கே அனுமதித்தது அல்லது  போதுமானதாக  இருந்தது.

சென்ற வருடம் துவங்குகையில், நான் அடுத்தவருடத்திற்கு ஒரு சிறுகதைத்
தொகுப்புக்குரிய கதைகளை எழுதிவிடும் ஆசையிலேயே இருந்தேன். அந்த ‘ஒளியிலே தெரிவது’ தொகுப்பில்  நான் அடைந்திருந்த ஒரு குறிப்பிட்ட நகர்வு மேலும் நான் நகர்ந்துசெல்வதற்கான அல்லது நகர்ந்து செல்வேன் என்ற  விழைவை என்னிடம் உண்டாக்கியிருந்தன.இதற்கு முன்பும் நான்
இப்படியெல்லாம்  தொடர்ந்து கதைகள் எழுத ஆசைப்பட்டிருக்கிறேன்,  அதை
 அடையாமல் என்னை நானே ஏமாற்றிக்கொண்டும் இருக்கிறேன். அதைக்
குறித்து அதன் பின் எந்தக் கவலையும் அடைந்ததில்லை. ஆனால், முதல் முறையாக, கடந்த வருடம் நான் எழுதாமல் போன கதைகளுக்காக நான்  இந்த,  இதை எழுதும் மார்கழி இரவில் , மிகக் கூர்மையான தவிப்பை உணர்கிறேன். செயலற்றுக் கழிகிறதோ என் காலம் என்ற கேள்வி கூட பெரியஎழுத்துக்களில் எனக்குள் உண்டாகிறது.

என் எழுது மேஜையில் நான் இதற்காகக் கவிழ்ந்து படுத்து துக்கிக்கையில் என் தோளில் விழுந்து ஆறுதல் படுத்தும் கையாக இந்த ”மீனைப் போல இருக்கிற மீன்” தொகுப்பு இருக்கிறது. “நிலா பார்த்தல்” தொகுப்பு வரை என்னிடமிருந்த குரல் சற்று வேறுவிதமாகத் துவங்கியது, “உறக்கமற்ற மழைத் துளி’ என்ற தொகுப்பிலிருந்துதான். அதற்கு அடுத்து, “இன்னொரு கேலிச் சித்திரம்”. சென்ற புத்தக்க் காட்சியில், “மணல் உள்ள ஆறு”. இப்போது இது,

நான் முன்பை விடவும் மனிதரிடம், மரங்களிடம், பறவைகளிடம், எதிர்ப்படும் உயிர்களிடம் நெருங்கியிருக்கிறேன், அப்படி நெருங்குவதன் மூலம் எனக்கும் வாழ்வுக்குமான நெருக்கத்தை அதிகப்படுத்தியிருக்கிறேன் என்பதை இந்தக் கவிதைகளை மீண்டும் வாசிக்கையில் நானே உணர்கிறேன்.

                                                 சில சமயம் கடலைப் போல
                                                 சில சமயம் ஆற்றைப் போல
                                                 ஓடையைப் போல
                                                 கிணற்றைப் போல
                                                 கண்ணாடித் தொட்டியைப் போல
                                                 சுருக்கமாக
                                                 நீரைப் போல இருக்கிற மீன்
                                                 மீனைப் போலவும் இருக்கிறது
                                                 தூண்டில் தருணங்களில்.


சில சமயம் நான் ஓவியனைப் போல, சில சமயம் நான் கவிஞனைப் போல, சிலசமயம் சிறுகதையாளனைப் போல இருக்கிற நான், என்னைப் போலவே இருக்கிறேன், இந்தத் தொகுப்பில்.

என்னுடைய தூண்டில் தருணம் இது.





4 comments:

  1. நன்றிகள் சார்
    வழக்கம் போல இந்தப் படைப்பும் எங்கள் (வாசகர்களின்) சிந்தனைகளை, பார்வைகளை இன்னும் கூடுதல் மேம்படுத்தும்

    ReplyDelete
  2. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.

    ReplyDelete
  3. மீனைப் போலவே மீன் இருக்கிறது
    உங்களைப் போலவே நாங்கள் இருக்க முயலுகிறோம்
    காத்திருக்கிறோம். மகிழ்ச்சி.

    ReplyDelete
  4. எதிர்பார்ப்புடனும் ஆவலுடனும்..

    ReplyDelete