Thursday, 31 May 2012

இந்தப் பனிக் காட்டில்...


அதற்குப் பின்னால்
------------------


ஒரு முதிர்ந்த யானை போல
இந்தப் பனிக்காட்டில்
மூங்கில்புதரின் திசையில் நடக்கிறேன்.
தும்பிக்கைக்கு மட்டும் வயது குறைந்து
உல்லாசமாகத் துளாவுகிறது வழிச் செடிகளை.
பாறையொன்றுக்கு ஆரம் சூட்டுகிறது
காற்றைச் சுழற்றி.
கலவிக்குப் பிந்திய
காதல்மடப்பிடியின் மணம்
அகாலம் தாண்டி எழுகிறது
பெருமழைத் தாரை கருவரியிட்ட
கல்தொடர்ச்சியில்.
நான் குதிக்கவிருக்கும் பேரருவி விழுவது
அதற்குப் பின்னுள்ள
ஆழங்காணாப் பள்ளத்தில் தான்.


கஸல்
------

நான் இப்போது
ஒரு கஸல் பாடிக் கொண்டிருக்கிறேன்.
குரல் ஹரிஹரனுடையது.
வரிகள் அப்துல் ரகுமானுடையது.
கண்ணீர்மட்டும் என்னுடையது.


இது போன்ற
---------------------


எந்தக் குப்பையைப் புறம் தள்ளும்போதோ
ஏறிய சிலாம்பு குடைகிறது.
வலது சுட்டு விரலில் வாதை.
எருக்கம் பால் வைத்துக்கொண்டே
இவள் சொன்னாள்,
‘கல்லடி பட்டால் காய்த்த மரம்.
காயம் பட்டால் ஏறுமுகம்.
கருப்பு வண்ணத்துப் பூச்சி
அமர்ந்து பறக்கும்
ஒரு கருநீலப் பூங்கொத்து
காற்றிலும் அசையாது கேட்கவிரும்புவது
இது போன்ற எளிய சொற்களைத்தான்.


அப்படியொன்றும்
---------------------------- 

இதே பகுதியின்
மூன்றாம் குறுக்குத் தெருவில்
என் சினேகிதியின் முதிய பாட்டியை
கண்ணாடிப் பெட்டிக்கு வெளியே
நீண்டுகிடக்கும் ஆணிவேர்களுடன்
அசையா விழுதுகளுடன்
பார்த்து நின்றாயிற்று.
இந்த அடுக்கக இரண்டாம் தளத்தின்
தெற்குப் பார்த்த வீட்டில்
மூன்றே நாட்களின் வெயிலுக்குக்
கூசிய கண்களுடன்
மடி நிறைப்பது, உறவினருடைய
மகள் வயிற்றுப் பேரன்.
அப்படியொன்றும் அதிகமில்லை
இறப்புக்கும் பிறப்புக்கும்
இடைப்பட்ட தூரம்.

%

கல்யாண்ஜி
உயிர் எழுத்து - மார்ச்.2012.

1 comment:

  1. / கஸல்
    ------

    நான் இப்போது
    ஒரு கஸல் பாடிக் கொண்டிருக்கிறேன்.
    குரல் ஹரிஹரனுடையது.
    வரிகள் அப்துல் ரகுமானுடையது.
    கண்ணீர்மட்டும் என்னுடையது./

    உன்னதம்!:)

    ReplyDelete