ஏற்கனவே அந்தப் படத்தைப் பார்த்திருக்கிறேன்.
பரமன் தான் அழகர்சாமியின் குதிரையையும் மௌன குருவையும் வாங்கிக் கொடுத்தான். அவனிடம் சொல்லிவிட்டால் போதும். புலிப்
பாலைக் கூடச் சாயந்திரத்துக்குள் கொண்டுவந்து கொடுத்துவிடுவான்.
சொல்ல முடியாது. ஐயப்பனைக் கூட, அவனுடன் ஆட்டோவில் ‘ஒண்ணுபோல’ ஏற்றிக்கொண்டு வந்து நம் வீட்டில் இறங்கி, ‘என்ன கல்யாணி, யாரு வந்திருக்கா, பாத்தீங்களா?’ என்று கேட்பான்.
மௌனகுருவை எனக்குப் பிடித்திருந்தது. வீட்டில் நாலைந்து பேரோடு,
அவ்வப்போதின் கவன விலகல்களோடு பார்த்தபோதும், அது என்னை
ஏதோ சிலவகைகளில் தொந்தரவு செய்துகொண்டிருந்தது. அந்தப்
படத்தின் பல பேருடன் வாழ்வது போலவும் வாழவேண்டும் போலவும்
இருந்தது.
ஒரு மூன்று நாட்களுக்குள் என்னென்னவோ நடந்துவிடுகிறது . மூன்று நாட்கள் அதிகம். மூன்று நொடிகளில் மனம் தடம் புரள்கிறதற்கான
எல்லாச் சாத்தியங்களுடன்தான் சமீபத்திய நாட்கள் இருக்கின்றன. உங்கள் கையில் ஒரு கழச்சிக்கல்லைப் பொத்திவைத்திருந்தால் எப்படி, உள்ளே
ஏதோ ஒன்று இருப்பதை உணர்வீர்களோ அதே போல, என் விலா எலும்புகளுக்குள் இருதயத்தின் இருப்பைப் பௌதிகமாகக் கனத்து உணர
முடிகிறவனாக இருந்தேன்.
என்னை நானே என்னிடமிருந்து வெளியேற்றிக் கொள்ளவேண்டும். இது பெரிய சிரமம். உலகத்திலேயே அதிகம் சுலபமற்றது, நமக்குள் நாம்
நுழைவதும், நம்மிடமிருந்து நாம் வெளியேறுவதும்தான். அதுவும் சலனம்
எதுவும் இன்றி. இன்னும் எனக்கு அற்புதமாகப் படுவது, ஒரு பறவை தன்
சிறகை விரிப்பதும், பறத்தல் முடிந்து கிளையமர்கையில் தன் சிறகை
ஒடுக்குவதும். நான் அந்த விரித்தலுக்காகவும் ஒடுங்குதலுக்காகவுமான
பயில்தலை நோற்கிறேன்.
இசை கேட்கலாம். இந்தச் சுவர்களுக்கு மத்தியில் சேர்ந்திசை போல அந்தந்த நேரத்து ஆனந்தமோ துக்கமோ வாசிக்கிற அமைதியைக் கூடக் கேட்கலாம். எப்போதாவது அப்படியெல்லாம் அமைதியை இசையாகக் கேட்டதும் உண்டு. முக்கியமாக என்னுடைய சென்னை தினங்களில். இப்போது முடியாது. இந்த மனநிலை அதற்கு ஒத்துவராது. இடிபாடுகளுக்கு இடையே இருந்துகொண்டு கடைசிச் செங்கலை உருவுவது அது.
எனக்குக் கொஞ்சம் நெருக்கமான அசைவு, நெருக்கமான சத்தம், நெருக்க
மிகு மனிதர்கள் வேண்டியது இருந்தது. நான் அந்தப் பின்னிரவில் எந்தத்
தயக்கமும் இன்றி, ‘மௌன குரு’வைத் தேர்ந்து கொண்டேன்.
மௌனகுரு திரைப்படத்தின் இயக்குநர் பெயரை இப்போது கூட எனக்கு நினைவில்லை. ஆனால் கருணாகரன் எனும், பழனியம்மாள் எனும், ஆர்த்தி எனும், ராஜேந்திரன்,செல்வம், பெருமாள் எனும் பெயர்கள் ஞாபகம் இருக்கின்றன. படத்தில் பெயர் அற்றவர்களாக வருகிற கருணாகரனின்
அம்மாவும், அந்த ‘ஃபாதர்’ என அழைக்கப் படும் கல்லூரி முதல்வரும்
ஞாபகம் இருக்கிறார்கள்.
இதுவரை பழனியம்மா என்று எந்தத் தமிழ்ப்படப் பெண்ணிற்காவது பெயரிட்டிருப்பதை நாம் இதற்கு முன் அறிந்திருக்கிறோமா? அதுவும்
காவல் துறையில் ஆய்வாளர் என்கிற இடைநிலை அதிகாரியாக?
சூலுற்ற வயிற்றோடு நடமாடுகிறவராக. ஏற்கனவே ‘அன்பே சிவம்’ படத்தில் ஒரு தோழராகக் கண்ட உமா ரியாஸ்கானை மீண்டும் இந்தப் பழனியம்மாவாக காண நிறைவாக இருந்தது. மகப்பேற்றால் அடிவயிறு
இறங்கின ஒரு நடையில், ஒரு சூலியின் முகச் சோர்வில், ஒரு கணினித் திரையை உற்றுப் பார்க்கிறதில், ஒரு கூரியரை வாசிக்கிறதில், மருத்துவ சோதனைக்குக் காத்திருக்கும் நேரத்தில் அலுவலகரீதியாக வரும் தொலைபேச்சை முடித்துவிட்டு ஜன்னல் சட்டம் வழி வெளியே பார்க்கையில், கல்லூரி முதல்வர் தன் மகனைப் பற்றி வெளிப்படுத்தி
உடைந்து குலுங்கும்போது அவரைக் கனிவுடன் எதிர்கொள்கையில், கடைசிக் காட்சியில் கருணாகரனிடம் தன் கைகளில் எதுவும் இல்லை
என்பதை கனத்த வெளிப்படைக் குரலில் நிதானமாகச் சொல்கையில்
எல்லாம், அவர் உமா ரியாஸ் அல்ல, பழனியம்மா மட்டுமே.
கருணாவின் அம்மா பாத்திரத்திற்கென்ன? ஒரு இடத்தில் கூட, துரும்பு
அளவு இங்கங்கு விலகி, ஒரு தமிழ்த் திரைப்படத்தின் இதுவரையிலான
அம்மாவாகிவிடாத, அசல் அம்மா அல்லவா அது. அதனுடய குரலும்
சொல்லும் பேச்சும் பாவனையும் சாதாரணமானது அல்ல. ஒரு காட்சியில்
கருணாவும் ஆர்த்தியும் தோள்சாய்ந்து நிற்பதைப் பார்த்துவிட்டு அவர்
அந்தப் பெண் போகிற வரை காத்திருந்து, தன் மகனைக் கோபமாக
அறைகிறார். வளர்த்தியான மகனும், குட்டையான தாயும் உலகத்தில் இல்லாதவர்களா? கன்னத்தில் அல்ல, மகனின் நெஞ்சில் சப்புச் சப்பென்று
அறைகிறாள். . மேலும் நான்கு வார்த்தை பேசுகிறாள். மேலும் நெஞ்சில்
அறைகிறாள். ஹ, என்ன காட்சி அது.
வாகை சூடவா படத்திலேயே இனியாவின் கண்களில் எவ்வளவோ இருந்தன. வாசிக்கத் தந்துகொண்டே இருக்கும் படியான கண்கள் இதற்கு முன்பு ஸ்ரீவிதயாவுக்கு உண்டு. இப்போது இந்தப் பெண்ணுக்கு. மிகச் சிறிய பாத்திரத்தைச் சரியாகச் சுமப்பதுதான், ஒரு நடிகனின் முன் வைக்கப் படும் மிகக் கூர்மையான சவாலாக இருக்கும். இனியா தொடர்ந்து வெல்வதற்குச் சாத்தியமான நிறைய இடங்களை இயக்குநர்
தர, முழுமையாக அந்தப் பெண் அவற்றை நிரப்பியிருக்கிறது.
அந்த ‘ஃபாதர்” எனப்படும் பிரின்சிபால் முகத்தை, எந்தக் கிறிஸ்துவக் கல்லூரியில் படித்த, விடுதியில் இருந்த யாரும் உடனடியாகத் தன்
ஞாபகங்களின் வியர்வையோடு உணரமுடியும். அச்சு அசலான முகம். ஒரு உண்மையின் துயரத்துடன், துயரத்த்தின் உண்மையுடன் பரிசுத்தமாக
வாழ விரும்புகிற அந்த முகம் எனக்கு என்னுடைய ஜான் ஸாரை நினைவு படுத்துகிறது. ஜான் ஸார் அற்புதமான என் ஆறாம் வகுப்பு ஆசிரியர். மிகக் கனத்த கண்ணாடி அணிந்திருப்பார். ஆங்கிலமும் கணக்கும்
அவர் போட்ட பிச்சை. அவருக்கு தியோடர் என்று இப்படியொரு மகன்,
கெட்ட குமாரன் உண்டு. ஜான் ஸார் அதிக நாட்கள் ஒரு பிஸ்கட் கலர்
புஷ் கோட் போட்டிருப்பார். மீசை கிடையாது. இந்த அங்கியணிந்த, வீட்டில கை வைத்த பனியன் அணிகிற, மீசை வைத்த, அக்கறையுள்ள பிரின்சிபால்
நிச்சயம் ஜான் ஸாரின் இன்னொரு பதிப்புத்தான். மனிதரின் வகைமாதிரி
என்று பார்க்கப் போனால், இப்படித் திரும்பத் திரும்பப் பதிப்பிக்க வேண்டிய அளவுக்குக் கம்மிதான் போல.
இவ்வளவு பேரைப் பற்றி சொல்கிறவனுக்கு கருணாகரனைப் பற்றிச் சொல்ல எவ்வளவு இருக்கும். எவ்வளவோ இருப்பதைப் பற்றி நம்மால்
எப்போதுமே குறைவாகத்தான் சொல்லமுடிகிறது. அல்லது நாம் சொல்வதே இல்லை.
அதிக பட்ச உண்மை. அதிக பட்ச நேர்மை என்பதே எனக்கு நானே
இதுவரை வரித்துக்கொண்ட என் வாழ்வின் அறமாக இருக்கிறது. இந்த
‘மௌன குரு’வை மீண்டும் பார்க்க அவசியம் நேர்ந்த ஒரு அலைக்கழிப்பு நிறைந்த தருணம் கூட, என் அந்த நேர்மையும் உண்மையும் மிகவும் மோசமாகச் சந்தேகிக்கப்பட்ட ஒரு நாளின் காயம் நிறைந்த, சற்றும் வலிகுறையாப் பின்னிரவில்தான்.
என்னால் முழுமையாக, கருணாகரனை, கருணாகரனைப் போன்றவர்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. என்னுடைய ஒரு சிறிய அம்சம் அவரிடமோ, அவருடைய ஒரு சிறிய அம்சம் என்னிடமோ இருக்கிறது.
‘சில வருடங்களுக்குப் பிறகு’ என்ற அந்த வாசகம் ஒருவேளை எனக்கும்
தேவைப் படலாம். எனக்குத் தண்டனை முடிந்திருக்கும். மன நலக் காப்பகத்திலிருந்து நான் திரும்பியிருப்பேன். அப்போது கருணாகரனைப் போல, மிகச் சந்தோஷமாக, சைகைகள் மொழியில் நான் கற்றுக் கொடுத்துக் கொண்டிருபேன்.
என் சைகைகளைப் புரிந்து கொள்கிறவர்கள் மட்டும் என் எதிரிலும்,
என்னுடனும் இருப்பார்கள்.
அன்பு கல்யாணி அண்ணனுக்கு,
ReplyDeleteமௌனகுரு என்னையும் வியப்பில் ஆழ்த்திய படம்... இதுவரை பழனியம்மாளைப் போன்ற காவல் அதிகாரியை, தமிழ்ப்படம் காட்டியதே இல்லை... அதிலும் இன்ஸ்பெக்டராய் வருபவரின் அவஸ்தைகளும், பயமும், தனது அதிகாரி மீதிருக்கும் வெறுப்பும் இத்தனை அழகாய் யாரும் காட்டியதில்லை... ஆர்த்தியும், நாயகனின் அம்மாவும் அத்தனை பாந்தம்... சில சின்ன சின்ன பாத்திரங்கள் கூட அத்தனை நேர்த்தி... ஆர்த்தி அக்கா, நாயகனின் அண்ணன், ஹாஸ்டல் வார்டன் என்று எல்லோரும் எத்தனை யதார்த்தமாய் நாம் பார்த்தவர்களாய் உலாவுகிறார்கள்?
சின்ன சின்ன தவறுகளையும் மீறி படம் அத்தனை ஒட்டிக் கொண்டது எனக்குள்... பாஸ்டரை ஃபாதர் என்பது மாத்திரம் கொஞ்சம் உறுத்தியது... நீங்கள் எழுத இன்னொரு முறை பார்க்கத் தோன்றுகிறது... பருத்திவீரன், பசங்க படத்தின் மூலம் அறிமுகமான சில அம்மாக்கள் அத்தனை அழகாய் நான் பார்த்த அம்மாக்களை, அக்காக்களை, அண்ணி, சித்திக்களை ஞாபகப்படுத்திவிடுகிறார்கள். எங்கிருந்தார்கள் இந்த கலைஞர்கள் எல்லாம் இத்தனை காலமும் என்று தோன்றுகிறது...
கூத்துப்பட்டறையில் இருந்து வந்தவர் என்று கலாராணியை மிகவும் எதிர்பார்த்தேன்... ஆனால் அவர் அத்தனை சிறப்பாய் முன்னகரவில்லை... இந்த அம்மாக்களை எங்கிருந்து கண்டார்களோ... தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வளர்ச்சி இது போன்ற பாத்திரப்படைப்புகள் மூலம் தெளிவாகிறது...
அழகர்சாமியின் குதிரை பற்றியும் எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.
அன்புடன்
ராகவன்