Friday 18 May 2012

காந்தியைப் போல் ஒரு...


காந்திமதியை நான் இதுவரை பார்த்ததில்லை.
சங்கரியம்மாதான் பார்த்திருக்கிறாள். யார் யாரிடமோ எல்லாம் விசாரித்து, இந்த மாதிரி வீடு பெருக்கித் துப்புரவாக வைக்க வேண்டும், குடிப்பதற்கு ஆற்றுத்தண்ணீர் இரண்டு குடம் பிடித்துவைக்க வேண்டும், சாப்பிட்ட ஏனம், தட்டு, தம்ளர், டிஃபன் கேரியர் கழுவிக் கவிழ்த்த வேண்டும். ஆத்திர அவசரத்துக்கு ஒரு மடக்கு வென்னீர் தேவை என்றால் வைத்துக் கொடுக்க வேண்டும். ‘ஒண்ர வாடத்துக்கு ஒருக்கதுணி துவைத்துப் போட வேண்டும்.
இதைவிட முக்கியமானது. குளியலறையைப் பாசி பிடிக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். வயசாளி நடமாடுகிற இடம். ஒன்று கிடக்க ஒன்று ஆகிவிடக் கூடாது ‘  என்று நல்ல  விதமாக எடுத்துச் சொல்லி அமர்த்திவிட, எல்லாவற்றையும் சரி சரி என்று
‘ஏத்துக்கொண்டு ‘  வேலையை ஒப்புக் கொண்டவள்தான் காந்திமதி.
காந்திமதியை இனி, காந்தி என்றே சொல்லுவோம். எப்படி எல்லோரும் கூப்பிடுகிறார்களோ அப்படிச் சொன்னால் தப்பு இல்லையே. அதுதானே நன்றாகவும் இருக்கிறது. காந்திக்கு
என்ன வயதிருக்கும், எத்தனை பிள்ளைகள், வீட்டுக்காரர்
என்ன வேலை பார்க்கிறார், முன்னே பின்னே ஆள் எப்படி,
அப்படி இப்படி பேச்சு ஒன்றும் இல்லையே. இதுக்கு முந்தி வேலை பாத்த வீட்டில இருந்து அவ ஏன்
நாம கூப்பிட்ட உடனே டக்குண்ணு நிண்ணுட்டா. வாய்
நீண்டுட்டாக்கூட பரவா இல்ல. கை நீண்ட்ரப் பிடாதுல்லா..
இப்படி ஏகப் பட்ட விசாரணைக்கு அப்புறம்தான் , “ அப்போ
வார ஒண்ணாந்தேதியில இருந்து வேலைக்கு வந்திரு. நாளும் கிழமையுமா இருக்கு. இன்ணைக்கே தூத்துப் பெருக்கி, வாசல்ல தண்ணி தெளிச்சு விட்டுப் போயிரு, என்ன காந்தி? “ என்ற வார்த்தையே வந்திருக்கும்.
இவ்வளவும் அப்பா இருக்கிற 21.இ. சுடலைமாடன் கோவில்
தெரு வீட்டைப் பராமரிக்கவும், ‘ பத்து நாளைக்கு ஒருக்க, ஒட்டரை அடிச்சு நூலாம்படை இல்லாமல் பார்த்துக் கொள்ளவும் தான். காந்தி வேலைக்குச் சேர்ந்து ஒரு வருஷத்துக்கு மேல் இருக்கும். அப்பாவைப் பார்க்கப் போகிற ஒரு தடவை கூட நான் காந்தியைப் பார்த்ததில்லை. அதைப் பற்றி அப்பாவிடம் பேச்சு
எடுத்ததும் கிடையாது. பேச்சு வாக்கில் அப்பாவோ, வள்ளிநாயகமோ காந்தி சத்துணவுக் கூடத்தில் ஆயாவாக இருப்பதாகச் சொன்ன ஞாபகம். சங்கரியம்மா கூடக் கேட்பாள்.
“ வேலைக்காரி ஒழுங்கா வாராளாமா. வீடு பாக்கிறதுக்குத் துப்புரவா இருக்கா? பாத் ரூம்லாம் கழுவிடுதாளா. அப்படியே வழு
வழுண்ணு வழுக்கிவிழுத மாதிரிக் கிடக்கா? “ . பொதுவாகவே இந்த ஒழுங்கு, துப்புரவு குறித்து எல்லாம் அதிக அக்கறை இல்லாத நான் அதற்கான பதிலை வேறு மாதிரி சொல்வேன்.
பார்க்கதுக்கு அப்பா நல்லா இருக்கா “. யார் நன்றாக இருக்க வேண்டுமோ அவர்கள் நன்றாக இருந்தால் போதாதா? இடங்களை விட மனிதர்கள் அல்லவா முக்கியம். எப்பவாவது ஒரு தடவைதான் அப்பாவையே பார்க்கிறேன். அந்த நேரத்தில் அப்பாவையே பார்த்துவிட்டுப் போகிறேன். அதை விட்டுவிட்டு, கதவுக்குப் பின்னால் ஒட்டரை தொங்குகிறதா, புறவாசல் கதவை ஒழுங்காக தாழ்ப்பாள் போட்டிருக்கிறார்களா? வாசல் கல்லில் இரண்டு மூன்று நாய் படுத்திருக்குமே. குடம் செப்(பு)பானை எல்லாம் களிம்பு இல்லாமல் விளக்கியிருக்கிறதா? இதையெல்லாம் பார்த்து அந்த நேரத்தை வம்பாக்க முடியுமா?
மேலும் வாசல் கல்லில் இரண்டு நாய் படுத்திருப்பது, ஒருவகையில் ஆள் நடமாட்டம் இல்லாத அந்த வாசலில் நன்றாகத்தானே இருக்கிறது.  ஒரு முதுமையும் முதிர்ச்சியும் நிறைந்த மனிதர் தனியாக இருக்கும் வீட்டின் சித்திரத்தை அவை 
அப்படிப் படுத்திருப்பதன் மூலம் முழுமைப் படுத்துகின்றன என்பதுதானே நிஜம்.  செப்புப் பானை, ஆற்றுக்குள் கிடக்கிற
வட்டப் பாறை மாதிரி எப்படிப் பார்த்தாலும் அழகாகத்தானே இருக்கும்.

காந்தி என்கிற மனுஷி, அந்தச் செப்புப் பானையை விட, கல்நாய்களை விட ஒருபோதும் குறைந்தவளாக இருக்க முடியாது அல்லவா. அவளைப் பார்க்க அவசியம் இல்லை.
அவள் ஒழுங்காக, அவளுடைய சத்துணவு வேலை போக ஒழிந்த நேரங்களில், நிச்சயம் அப்பா இருக்கிற வீட்டை சுத்தமாகவே வைத்துக் கொள்வாள். நிச்சயம் குடிக்க தண்ணீர் இல்லாமல்
வெற்றுப் பானையாக இருக்க விட்டிருக்க மாட்டாள். கண்டிப்பாக
‘என்ன ய்யா. இந்த நேரத்துல படுத்துக் கிடக்க மாட்டியளே. ஒடம்புக்குக் கிடம்பு சரியில்லையா. சுடுதண்ணி வச்சுத் தரட்டுமா.  சாப்பிட்டேளா இல்லயா. சந்திப்பிள்ளையார் முக்குக் கடையில சுக்குவென்னி வாங்கியாரவா?’  என ஒரு நாளாவது அப்பாவைப் பார்த்துக் கேட்டிருப்பாள்.  எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது.
அப்பாவிடம், எந்த மனிதரும் மனுஷியும், அப்பாவைப் போலவே உண்மையாக மட்டுமே இருக்க முடியும்.  அப்பா அப்படி.
அப்பா அப்படி எனபது அப்பாவைப் பார்த்த நிமிடமே யாருக்கும் தெரிந்துவிடும். காந்திக்கு மட்டும் தெரிந்திருக்காதா என்ன?
கொஞ்சம் அல்ல, ரொம்பவே தெரிந்திருந்தது.  
வே.முத்துகுமார் நடத்துகிற ‘தி.க.சிவலைப்பூவை சமீபத்தில்,
அப்பாவின் புகைப்படங்கள் தேவைப்பட்ட ஒரு அவசரமான
மாலையில், திரும்பவும் திருப்பிக் கொண்டிருந்தேன். அதில் இருக்கிற சமீபத்திய அப்பாவின் புகைப் படங்கள் மிக அழகானவை. எது அழகு? கனிவுதான் அழகு. அப்பா அவ்வளவுகனிந்து இருக்கிறார்கள். கனிவின் ஆனந்தம் சதா மினுங்கும் உடல் மொழியை காலம் அப்பாவின் மடியில் வைத்திருக்கிறது.
மனிதர்கள் வாழ்வாலும் அனுபவத்தாலும், அப்படி அனுபவித்து  அனுபவித்து இந்த வாழ்வைப் புரிந்துகொள்வதாலும் இப்படி
அழகுற்றுக் கொண்டேதானே வருகிறார்கள். அவர்கள் அழகாக
இல்லாதவர்கள் போல இருந்த இளம் வயதை விடவும், அத்தனை தாத்தாக்களும் பாட்டிகளும், தோலில் ஆயிரம் சுருக்கங்களோடு பொக்கை வாயோடு இடுங்கின கண்களில்
சுடரும் அபூர்வ ஒளியோடு இப்போது அழகாகத்தானே இருக்கிறார்கள். ஒன்று நமக்கு அவர்கள் கையைப் பிடித்துக்
கொள்ளத் தோன்றுகிறது. அல்லது அவர்கள் நம்முடைய கையைப் பிடித்து அவர்கள் கைக்குள் வைத்துக் கொள்கிறார்கள்.
அப்பாவுக்கு அப்படிச் சுருக்கம் எல்லாம் விழுந்து விடவில்லை.
அப்பாவைப் பார்க்கும் போது, ஒரு சாயலில் தற்சமயம் அவர்
ஆர்.கே.நாராயண் போலவும், ஆர்.கே.லக்‌ஷ்மண் போலவும்
எல்லாம் எனக்குத் தோன்றுகிறது. அப்பாவின் மூக்கு நுனி
தன்னிச்சையாக ஒரு வாதமுடக்கி நெற்றைக் கடிக்கிற
பச்சைக்கிளியின் அலகு போல இருக்கிறது. அப்பாவைப் பார்க்கிற போது ஒரு பறக்கும் கிளிச்சத்தம் கேட்கிறது என்று கூடச் சொல்வேன்.
அப்படியான புகைப்படத்துக்கான தேடலில்தான், அப்பாவின்
88 வது பிறந்த தினத்தை அப்பா தன் நண்பர்கள் சிலரோடு எங்கள் வளவுக்குள்ளேயே கொண்டாடியிருப்பதைப் பற்றிய
பதிவு இருந்தது. அறிவரசன், சுபாஷிணி, கழனியூரன், திவான், பொன்.வள்ளி நாயகம், கிருஷி, இன்னும் ஏகப்பட்ட பேர்
அப்பாவைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள். சமீபத்தில் வார்னிஷ்
அடிக்காமல்,வெயிலிலும் மழையிலும் ‘அலரிப்போனநாலைந்து
மரத் தூண்கள் ஒருபக்கமும். வெள்ளையடிக்கப்பட்ட சதுரக்

கல் தூண்கள் மறுபக்கத்திலும் இருக்கும் அந்த வாசலில்,ஒரு
பத்துப் பதினைந்து பேர் பிளாஸ்டிக் நாற்காலிகள் இட்டு உட்கார்ந்து, பேசுகிறவர்களின் முகத்தை மிகக் கவனமாக உற்றுப் பார்த்திருக்கும் படங்கள் அவ்வளவு அழகாக இருந்தன. அங்கேயே பந்தல் போட்டு, ‘மணவடை கட்டி மூன்று தலைமுறைக் கல்யாணங்கள் நடந்த போதெல்லாம் கூட அந்த வாசல் இவ்வளவு அழகாக இருந்திருக்காது. நாங்கள் டில்லி சாய்பு என்று அழைக்கிற யுனானி மருத்துவரின் நரைத்த தாடியுடனான அன்றைய முகம் போலப் பேரழகுடைய ஒரு முகத்தை நான் அதுவரை பார்த்ததே இல்லை என்றே சொல்லவேண்டும்.
இப்படி எல்லோரையும், எல்லாவற்றையும் அழகாக்குகிற பொழுதாக அது இருந்திருக்கிறது.. அதனால்தான் ஒருவர் பாக்கி இல்லாமல் எல்லோரும் அப்பாவைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள். எல்லோரும் பேசினது கூடப் பெரிதில்லை.
அந்தப் பதிவு இப்படி முடிகிறது.
தி.க.சி.வீட்டு இல்லப் பணியாளர் தோழி.காந்திமதி, வளவு வீட்டு சகோதரி திருமதி. சுந்தரி ஆகியோர் தி.க.சி அவர்களின் பண்பு நலன் குறித்துப் பேசியது விழாவின் சிறப்பம்சமாக இருந்தது
அப்பாவை தி.க.சி என்று அறியாத. நடு வீட்டுத் தாத்தா என்று
மட்டும் அறிந்த அந்த சுந்தரியும், ஒரு ஐயாவாக ஒரு வயசாளியாக, ஒரு மனிதராக மட்டும் அறிந்த காந்திமதியும் அந்தப் பொழுதில்
பேசிய பேச்சு எவ்வளவு அருமையாக இருந்திருக்கும்.  சுந்தரி என்கிற வளவு வீட்டுப் பெண் சேர்ந்தாற்போல நான்கு வார்த்தைகள் ‘ஆம்பிளைகள் முன்னால’ இதற்கு முன்பு பேசியிருக்கவே மாட்டார்கள்.
காந்தி மட்டும் என்ன, தினசரி சாயுங்காலம் மைக்கைப் பிடித்துப் பேசிவிட்டு இறங்கிக் கொண்டிருப்பவரா என்ன? அவர்கள் இருவரும் என்ன
பேசியிருப்பார்கள்? அவர்களைப் பேசத் தூண்டின அப்பாவின் அம்சம் எது?
ஒரு வயதில், ஒரு கட்டத்தில், அப்படிப் பிரித்துப் பார்க்கவும் பிரித்துச் சொல்லவும் தனித் தனி அம்சங்கள் இன்றி, அந்த மனிதனே ஒரு பேரம்சம் ஆகிவிடுவார் போல.
அப்பா அப்படித்தான் அன்றைக்கு ஆகி இருந்திருக்க வேண்டும்.
அன்றைக்குக் காலை அப்பாவைப் போய் பார்த்துப் பேசிவிட்டுவந்தேன்.
ஆனால் அந்த சாயுங்காலத்தை நான் இழந்துதான் போனேன். முக்கியமாக, சுந்தரியின் பேச்சை, காந்தியின் பேச்சை எல்லாம்.
எனக்கு இப்போது அப்பாவைப் பார்க்கத் தோன்றுகிறது.
அப்பாவை விட காந்தி என்கிற, இதுவரை நான் பார்க்கவே பார்க்காத அந்த காந்திமதியை.

1 comment:

 1. Sir,

  This is just a suggestion.Before you publish your post, you will see Options icon in the editor box on your right.

  1. Choose the radio button 'Interpret typed HTML' in 'Compose Mode' under options.
  2. Choose 'Press Enter for line breaks' in Line breaks and Press Done.

  This will neatly arrange your post with proper paragraph indentation and other settings.

  Your writing is mesmerising.

  Thanks.

  ReplyDelete