அவரவர் திசையில்
-------------------------------
தும்பைச் செடிகளுக்கிடையே
ஒற்றையடிப் பாதையில் வந்த அவர்
கட்டுமானம் முடியாத
தேவாலயம் நோக்கிய பிரார்த்தனையில்.
மழைக்காலப் புனலோடிய
கருநீல மினுமினுப்புக்கு அப்பால்
செம்மண் மைதானத்தில் பூத்திருந்த
மண்புழுத்துளைகளை
பறித்துக் கொண்டிருந்தது என் பார்வை.
இரண்டுபேருக்கும் சமதூரத்தில்
ஒரு ஒற்றைச் செருப்பு,
அப்போதுதான் இறந்த
வெதுவெதுப்பான பறவையாக
மல்லாந்து.
சேதாரமற்ற அதன் சாம்பல்நிறப் புரளலை
பார்த்துவந்த அவரும் சொன்னார்
அடிபட்ட மைனாவாக அதை நினைத்ததை.
ஒரு துக்கமான சிரிப்பின் சிறகுவிரித்தலுடன்
அவரவர் திசையில்
பறக்கத் துவங்கினோம் அப்புறம்
திங்கட்கிழமைக்காரர்களுக்கு.
ஒரு திங்கட் கிழமை காலைபோலவே இல்லை
இந்தத் திங்கட் கிழமை காலை.
பனி தன் சதுரங்கத்தை நிகழ்த்துகிறது
வேறுவேறு காய்நகர்த்துதல்கள் கொண்டு.
மற்றொரு வீட்டுப்பெண்ணின்
தளர்வாடை ஒன்றைத் தவறாக
நம் உருப்படிகளில் வைத்துவிட்ட
சலவையாளராகச் சிரிக்கிறது
வேறொரு வாரத்தின் வியாழக்கிழமையை
வெதுவெதுப்புடன் மடித்து
என்முன் கொடுக்கும் டிசம்பர் 12ம் தேதி.
இந்த நாளை இன்னொரு நாளாகவும்
இன்னொரு காலையை இன்றின் காலையாகவும்
வாழும் நெருக்கடி புதிதில்லை
உங்களுக்கும் எனக்கும்.
எந்த ஆட்சேபணையும்
இராது என நம்புகிறேன்
இந்தத் திங்கட் கிழமை காலை
எந்த ஒரு திங்கட்கிழமை காலைபோலவே
இருக்கிறது எனும் அறிந்த பொய்யுடன்
இறுதிவரியை முடிப்பதில்.
இன்னொன்றாக.
---------------
தும்புக் கயிறு தரையில் இழுபட,
தொலைதூரக் காம்புகளிலிருந்து
ஓடிவரும் செவலைக் கன்றுக்குட்டி
திகைத்து நிற்கிறது
தெரு தொலைந்துபோன மிரட்சியில்.
ஈரப்பதம் உலர்த்தி நகரும்
டிசம்பர் இளவெயிலில்
மேகத் துணுக்கொன்றின்
நிழல் விழுந்து அகல்கிறது
இன்னொன்றாக உண்டாகிவிட்ட
புதிய தெருவில்,
என் மேல்.
முடிந்தால்
-----------------
முடிந்தால்,
பொத்தான் உதிர்ந்த உங்களின்
பழைய சட்டை ஒன்றை
உடையாத கண்ணாடிமுன் இப்போது
தனியாக அணிந்து பாருங்கள்.
முடிந்தால்,
உங்கள் கருப்பு வெள்ளைப் புகைப்படத்தின்
களங்கமின்மையை
துரோகம் மினுங்கும் இன்றைய வெளிச்சத்தில்
கை நடுங்க உற்றுப் பாருங்கள்.
முடிந்தால்,
குடைவரையாய் மனதில் செதுக்கிய
ஐந்து இலக்கத் தொலைபேசி எண்ணில்
உங்களின் ஒளித்துவைக்கப் பட்ட காதலியுடன்
ஒரு ஏழு இலக்க உரையாடல் நிகழ்த்துங்கள்.
முடிந்தால்,
உங்களுக்குப் பிடித்த கண்டசாலா பாடலை
இரண்டாவது ஆட்டம் பார்த்துத் திரும்பிய
இன்றைய இரவில்
அயர்ந்துறங்கும் மனைவியின்
ஒருச்சாய்ந்த உடல்பார்த்தபடி கேளுங்கள்.
முடிந்தால்,
உச்சமாகத் துய்த்த கலவியொன்றின்
உன்மத்த ஞாபகங்களுடன்
உபயோகமற்றுப் போன உங்களின் குறியை
பழைய பம்பரமாகப் பாருங்கள்.
முடிந்தால்,
இதற்கு முந்திய வாடகை வீட்டில்
ஜன்னல்வழி எறிந்ததில் முளைத்த
சப்போட்டா மரக் கிளையில்
பதிபோட்டுக் காத்திருக்கும் பூனையை
பாருங்கள், ஒரு பூனையைப் போலவே.
முடிந்தால்,
உங்களுடைய ஆதி நாட்குறிப்பு ஒன்றின்
முடியாத கசப்பு வரிகளுடைய கவிதையை
என்னிடமிருந்து திருடப்பட்டிருக்கும்
இந்தப் பேனாவால் இப்போதே
எழுதி முடித்துவிடுங்கள்.
இப்படித்தான்.
---------------------
நீண்ட காலம் ஆயிற்று
சுவரில் கோடிட்டுச் செல்லும்
சிற்றெறும்புகளின் ஊர்வலம் பார்த்து.
எதிரெதிர் நின்று பறிமாறிக்கொள்ளும்
முத்த ரகசியம் வழியும்
ஈர நைப்புணர்ந்து.
காரணமற்ற வன்மத்தின் பெரும் கிளர்ச்சியுடன்
வரிசை கலைக்கத் துடிக்கும்
வலது சுட்டுவிரலைத்
திசை திருப்பிக் கொண்டிருந்தது
வெயிலை இழுத்திழுத்து நகரும்
இலை விளிம்புப் புழு ஒன்று.
ஒரு கலகம், ஒரு வன்முறை நிகழாமல்
தவிர்க்கப்படுவதெல்லாம்
இப்படித்தான்
எளிதாக, தானாக.
%
கல்யாண்ஜி
உயிரெழுத்து - பிப்ரவரி 2012
.
அஞ்சும் அருமை சார்.
ReplyDeleteஅருமை சார்
ReplyDeleteஅதிலும் முதல் கவிதை
இரு மனிதர்களுக்கும் ஒரே சிந்தனை தோன்றுவது