Friday 25 May 2012

தொடரும் பிப்ரவரி...முற்றிலும்
-----------------

பார்த்துக் கொண்டிருந்தது
இத்தனைக்கும்
பேருந்து நிழற்குடையில் நின்றவளின்
கனத்த மார்பை மட்டுமே.
காலுக்கருகில் நிற்கும் கருப்பு நாய்க்கு
மேலும் ஒதுங்க இடம் அனுமதித்து,
உலகு புரந்து ஊட்டத் திறந்திருந்தபடி,
கருகமணிப் பாசியணிந்த தோழியிடம்
தணிந்த குரலில் உரையாடிய அவள்
அறியவேயில்லை உறிஞ்சும் என் பார்வையை.
உரிய பஸ் வந்து ஏறும் சமயமும்
எந்தத் திருத்தமும் செய்யவில்லை உடையில்.
கருகமணிப் பாசிப் பெண், மற்றும்
கருப்பு நாய் மிஞ்சிய இடத்தில்
பேருந்தில் சென்றவரை நிறுத்திப் பார்த்தேன்.
கால் விரல் தெரிந்தது, கை நகம் தெரிந்தது.
முன்சிகை கலைந்த முழு முகம் தெரிந்தது.
மார்பு முற்றிலும்
மறைந்து போயிருந்தது.

அரைகுறையாக
-------------------------

முழுதாகப் பார்த்திருகிறாயாடா நீ?
இடப் பக்கம்போகிறவர்
வலப் பக்கம் போகிறவரிடம் கேட்டார்.
எதைப் பார்ப்பது பற்றி அவர்
இப்படிக் கேட்டாரோ?
எதையும் முழுதாகப் பார்க்கமுடியாது என்றும்
எதற்குமுழுவதையும் பார்க்கவேண்டும் என்றும்
எதுவுமே முழுதல்ல என்றும்
அடுத்தடுத்து எனக்கு
அரைகுறையாகத் தோன்றுவதை
உங்களைத் தவிர
இயம்புவேன் யாரிடம்?


எதிரொளிக்கும்
------------------------


தேயிலை கொதிக்கும்
வாசனையை விரும்பிய முகத்துடன்
வால் உயர்த்திப் போகிறது கரிய பூனை.
சென்ற நூற்றாண்டின் நீராவியிலிருந்து
இந்த வெயில்தினத்திற்கு நகர்கிற பார்வையுடன்
சினேகிதனின் அப்பா பிரம்பு நாற்காலியில்
சரிந்திருக்கிறார், இடுப்பு வார் அணிந்த
அரைக்கால் சட்டையுடன்.
தோல் சுருங்கிய முதிய ஒற்றை விரலால்
தட்டெழுத்துச் செய்யும் வயோதிகச் சத்தம்
விலகும் காகிதத்தின் மேல் ஒலிக்கிறது
வினோதமாக உள் அறையிலிருந்து.
மரப்படிகளின் வழி மேலேறிப் போன சினேகிதன்
விசிலடித்து அவனுடைய
வளர்ப்புப் பறவையுடன் பேசுகிறான்
காதலி பெயர் சொல்லி.
சுவரோரம் சாத்திவைத்துவிட்டு வந்த
சைக்கிளின் கைப்பிடியில்
எதிரொளிக்கும்  ஒளிக்கிரணம்
ஏளனமாகச் சிரிக்கிறது என்
வியர்வைக்கறை படிந்த
நீலச்சட்டையைப் பார்த்து.
இசைத்தகடு இரவல் வாங்குவதற்கு
வந்ததாகவே சொல்லியிருக்கிறேன்.
இரண்டே இரண்டு வருக்கியும்
கருப்புத் தேனீருமாவது தராமலா போவார்கள்?


முற்றிலும் குலைகிற
-----------------------------------


இந்தப் பாதையைத் தவிர்த்துவிட்டு
பேருந்து நிறுத்தத்திற்குச் செல்ல
எந்த மாற்றும் இல்லை எனக்கு.
நீண்ட காலமாகவே தொங்குகிறது
அகற்றவே அகற்றாமல்
மூன்றாம் வீட்டு வாசலில்
அந்தத் திரைச்சீலை
ரத்தத்தில் நெய்த நிறத்தில்.
நெடுங்குருதி எனும் வர்ணிப்புக்கு
முற்றிலும் பொருந்துவது அது.
சித்தம் கலங்கிக் காற்றில் புரள்வதும்
அப்போதுதான் கத்தி செருகப்பட்டதாக
வெயிலில் துடிப்பதுமாக அது
உண்டாக்கும் பதற்றத்திற்குக்
கணக்கே இல்லை.
இரண்டாவது வீட்டைத் தாண்டும்போதே
முற்றிலும் குலைகிற நிம்மதியுடன்
மிச்சமிருக்கும் ஒவ்வொரு நாளையும்
எப்படிக் கழிப்பது நான்,
நீங்களே சொல்லுங்கள்.


கல்யாண்ஜி
உயிரெழுத்து - பிப்ரவரி 2012.

1 comment:

  1. இரண்டாம் வரியிலேயே சிந்தனைப் போக்கை
    மாற்றி விடும் கவிதை வரிகள் சார்

    ReplyDelete