Tuesday 15 May 2012

ஒரு ஒற்றையடிப்பாதை, ஒரு மரம்.

நான் நேற்றுக் காலையில் இருந்து மிகுந்த துக்கத்துடன் இருக்கிறேன்.
இந்த வாழ்வில் நான் என்னளவில் அடைந்த துக்கங்களை விடக் கூடுதலாகவே இது இன்னும் இருக்கிறது. இது என் எழுத்து சார்ந்தது. எழுதியும் எழுதாமல் போனது குறித்தது.
சில் தினங்களுக்கு முன்னால் குருதேவையும் ஹெலென் கெல்லரையும்
பற்றி எழுதும் போது எனக்கிருந்த மன நிலையின் தீவிரம் நேற்றும் இருந்தது. விளையாட்டுப் போல, இன்றைக்கு ஏதாவது பதிவேற்றுவோமே
என்றுதான் துவங்கினேன். ஐம்பது வருடங்களாக எழுதுகிற ஒருவனுக்கு எங்கிருந்தாவது துவங்கி எங்காவது போய்விடத் தெரியாதா என்ன?
எழுத ஆரம்பித்தது என்னவோ, முழுப் பரீட்சை லீவுக்குத் தாத்தா வீட்டுக்கு வந்திருக்கிற என் பேத்தி அர்ச்சனா பற்றியும் பேரன் ஆதி பற்றியும் தான்.
ஆதியைப் பற்றிய முதல் வரியோடு துவங்கினதாகத்தான் ஞாபகம். ஆனால் அது எங்கெங்கோ என்னை இழுத்துக் கொண்டு போயிற்று. கவிதை குறித்தும், இந்த வாழ்வு குறித்தும் என அது அழகாக ,   பாறைக்காக விலகி, பாறைக்கு அப்புறம் இணைகிற நதியின் த்டம் என மிக அழகான சொற்களிலும் வரிகளிலும், அந்தந்த நேரத்தில் தோன்றிய இடங்களில் தன்னிச்சையாக முத்தமிட்டுக் கொண்டு, அந்தந்தக் கணத்தில்
தோன்றிய பாடல்களை இசைத்துக் கொண்டு, இக் கிளையில் இருந்து இன்னொரு கிளைக்கு மாறிக் கொண்டு, ஒரு பூ உதிர்த்து, ஒரு கனி கடித்துஅது வெயிலெனில் என் தெருக்கடைசி வரை பளீரிட்டு, அது மழையெனில் எங்களின் பூர்வீக வீட்டுப் புறவாசலில் கிடக்கிற கல்லுரலின்
நடுக்குழி நிரப்பி, பொருக்காடிய என் புண்களைத் தோண்டி,  தன் ரத்தம் பார்க்கும் தருணத்தின் தவம் பெருக்கி, அறியாதோர் வாத்தியம் இசைத்து.   டையாதோர்  தீச்சுகம் மிகுத்து, சுட்ட பழம் ஒதுக்கி, கெட்ட பழம் ருசித்து,
வேரோடி,  தேரோடி  விரிந்துகொண்டே போயிற்று.
ஆதியை முன்வைத்தும் அர்ச்சனாவை முன்வைத்தும் என்னை இடவலம்
அற்றுப் பார்த்துக் கொள்கிற பளிங்குப்பலகையாக அந்த ஏழரை மணி
வெளிச்சம் இருந்தது.  என் விலாப்புறங்களில் இவ்வளவு பெரிய சிறகுகளை நான் சமீபத்தில் உணர்ந்தது கிடையாது.. வரைந்துகொண்டிருக்கும் போதே ஒருபோதும் வரையும் ஓவியம் புலப்படுவதே இல்லை.  கடைசி வரி எது என அறியாக் கடலில் தான்
முதல் வரியின் கல் துணை பூட்டிப் பாய்ச்சப் படுகிறோம்.  அதுதான் வழக்கம்.  நேற்று அப்படி இல்லை. கடைசி வரியை என்னால் வாசிக்க முடிந்தது.  தக்கை அமிழ்வது தெரிந்தே தூண்டில் கடித்தேன்.
எப்போது என் காலடிப் பலகையை உருவினார்கள் என்று தெரியவில்லை.
என் மொத்த வரிகளும் ஒற்றைச் சொடுக்கில் தூக்கில் இடப் பட்டுவிட்டன.
ஒரு கால் உதறல் இல்லை. ஒரு தொடைப் பிறாண்டல் இல்லை.  மலம்
இளகவில்லை. விந்தொழுகவில்லை. ஆனால் முடிந்தது எல்லாம்.
எனக்கென்ன தெரியும்? இந்த நாலைந்து வருட மடிக்கணினிப் புழக்கத்தில்
தமிழில் தட்டெழுதத் தெரியும்.  ஒரு மென்பொருள், வன்பொருள் அறியாமல் என்னைப் போல் எத்தனை கோடிப் பேர் இருப்பார்கள் கணினிப் பயனீட்டிக்கொண்டு. அவர்களில் ஒரு சிலர் இந்த என்னுடைய திங்கட் கிழமைக் காலைத் துக்கத்தை உணரமுடிகிறவர்களாக இருப்பார்கள் என
நினைக்கிறேன்.
எத்தனை கடிதங்கள், எத்தனை கதைகள், எத்தனை கவிதைகள் எழுதியிருப்பேன் இதுவரை. அவற்றில் ஒன்றைக்கூட என்னால் மீண்டும் ஞாபகத்தில் இருந்து சொல்லவே இயலாது எனக்கு.  முந்தின வரியாக
எழுதியதை அடுத்தவரியில் நினைவில் இருத்தமுடியாதவனாகவே தொடர்ந்து இருக்கிறேன்.
முதன் முறையாக, கணினியில் நேரடியாக எழுதத் துவங்கியிருக்கும் இந்த சமீபத்திய பயிற்சிக்காக வருத்தப் படுகிறேன்.  என் நண்பர்கள், என் உறவினர்கள் குழந்தைகள் அவர்கள் கண்ணெதிரே விபத்துக்குள்ளாகி
இழந்து துடித்திருக்கிறார்கள்.  அவர்களின் அத்தனை துயரமும் விம்மலும்  நேற்றிலிருந்து என்னிடம் உண்டு.
எனக்கு கோபாலைத் தவிர யாரைத் தெரியும். அவனிடம்தான் சொன்னேன். அவன் அவனுடைய மகள் தரணியிடம் சொன்னான். கோபாலுக்கு எப்படி நான் கல்யாணியண்ணனோ அப்படித்தான் அவன் பிள்ளைகளுக்கும். நேற்று என்னவோ தரணி என்னை,’பெரியப்பாஎன்றாள். எப்போது எப்படிக் கூப்பிட
வேண்டும் என்ற நுட்பம் இந்தப் பெண்பிள்ளைகளுக்கு எப்படி வருகிறது என்று தெரியவில்லை.  அவ்வளவு இதமாக இருந்தது அந்தக் குரலும் அழைப்பும்.
அவளாலும் அந்தப் பக்கத்தை மீட்டுத் தரமுடியவில்லை.
அவள் வேறு ஒன்றைச் செய்தாள். அந்த நீல இடைஞ்சலை அப்புறப் படுத்தி விட்டாள். பாலைவெளியின் மணல்வரிகளையும் அந்த குத்துச்
செடியையும் அகற்றி விட்டாள். ஒரே ஒரு மரம் நட்டிருக்கிறாள். ஒரு ஒற்றையடிப் பாதையும் இட்டிருக்கிறாள்.
மீண்டும் நான் நடக்க வேண்டும்.
1 comment: