Monday, 7 May 2012

பெயர் தெரியாமல் சில பறவைகள்.

கொஞ்ச நேரம் 'சமவெளி'  பக்கத்தையே பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.
கோபால் சொல்லச் சொல்ல ஒவ்வொன்றாகச் செய்துகொண்டு வந்தேனே தவிர, அதற்கு முந்தி ஆனா ஆவன்னாவும் தெரியாது. அதற்குப் பிந்தியும் அவ்வன்னா அக்கன்னாவும் தெரியாது. தெரிந்து கொள்ளவும் பெரிய ஆசை
ஒன்றும் இல்லை.
அந்தப் பக்கத்தின் நிறமே நன்றாக இருக்கிறது. சாயம் போன ஜமுக்காளம்
மாதிரி இருக்கிற அதற்கு என்ன நிறம் என்று சொல்லலாம்?.    தவிட்டு கலர், பிஸ்கட் கலர் எல்லாம் கூடச் சரியாக இராது. எப்போதோ எங்கள் அம்மா சொன்ன ‘கொக்கோ’ கலர் சரியாக இருக்கும் போலிருக்கிறது. கொக்கோ என்றால் அசல் கொக்கோ இல்லை. ஒரு டம்ளர் பாலில் ஒரு கரண்டி போட்டுக் கலக்கின கொக்கோ.  மண் கலர், யானைக் கலர், சிலேட்டுக் கலர், செங்காமட்டைக் கலர் என்று அன்றாடத்தின் புழக்கத்தில் இருக்கிற ஏதோ ஒன்றின் ஜாடைக்கு மிக நெருக்கமாக நிறங்களைக் கொண்டுவந்துவிடும் நேர்த்தி இப்போது இருக்கிறதா? தேன் கலர் சீப்பு என்று யோசித்துப் பார்த்தால் தலைவாரும் சீப்பை விட, ‘ஒசரத்தில்’ இருந்து உள்ளங்கையில் நாடாவாக ஊற்றப்படும் தேனின் பிசுபிசுப்பான அழகு எவ்வளவு அழகாக ஞாபகம் வருகிறது.
நமக்கு ஏன் இப்படி எளிதாக ஞாபகம் வைத்திருக்கவும். எளிதாக ஞாபகப் படுத்தவும் வர வரத் தெரியாமலே போய்க்கொண்டிருக்கிறது?
இந்த வலைபக்கத்தின் நிறத்தைப் போலவே, வலது ஓரமாக ‘ரெட்டை
ரெட்டை’யாக ஆறு பறவைகள், எந்த என்னுடைய முயற்சியும் இல்லாமல்
பறந்துகொண்டிருப்பது எனக்குப் பிடித்திருக்கிறது. ஒவ்வொரு தடவை
ஏதாவது பதிவேற்றும் போது, பதிவேற்றலாமா என நினைத்துக் கடையைத் திறந்து கொண்டு உட்கார்ந்திருக்கிறபோது, ஒன்று இரண்டு, மூன்று என ஆறும் சரியாக இருக்கிறதா, ஏதாவது ஒன்று பறந்துபோய்விட்டதா எனவும்
பார்த்துக் கொள்கிறேன். சமயத்தில் அவை அப்படியே மொத்தமாக வலது பக்கத்தில் இருந்து பறந்து வெளியே போய்விட்டு, நான் என்னுடைய கடைசி வரியைத் தட்டெழுதி முடிக்கும் போது, இடது பக்கத்தின் வழியாக ஏன் நுழையக் கூடாது என்றும் தோன்றுகிறது.
கிறுக்குத்தனம் என்று ஆனபின், அதற்கு ஏதாவது அளவு உண்டா?  அவை
அங்கிருக்கிறது மட்டும் அல்லாமல், அதனதன் குரலில் சத்தம் போடுவது கூட எனக்குக் கேட்கிறது. பறக்கிற சமயம் பொதுவாக, பறவைகள் சத்தம் இட்டுக் கொண்டு பறக்காது எனினும், வலைப்பக்கப் பறவைகளுக்கு அந்த சுதந்திரம் இருக்காவிட்டால் எப்படி?   எனக்கு சின்ன வயதில் இருந்தே அடைக்கலாங் குருவிகளே அதிகப் பழக்கம் என்பதால், தற்சமயத்துக்கு
எனக்குக் கேட்பது அந்தச் சத்தம்தான். போகப் போக கிளிச் சத்தம், வேனில் காலத்தில் இப்போது நடப்பில் உள்ள அக்காக் குருவிச் சத்தம் எல்லாம் கேட்கத்தானே செய்யும்.
இதையெல்லாம் விட இந்த என் பக்கங்களை வாசிக்கிற ராம்ஜி யாஹூவுக்கோ குமரகுருபரனுக்கோ அல்லது வாசிக்கப் போகிற நிலாமகள், சித்திரவீதிக்காரனுக்கோ அவரவர்களுக்கு விருப்பமான பறவைகளின் குரல்கள் கேட்கும்.   அப்படிக் கேட்குமெனில், இந்தப் பறவைகள் மட்டும் அல்ல, நானுமே கடைசி வரை பெயர் தெரியாது
இருக்கச் சம்மதம்.

3 comments:

  1. இப்போதுதான் கவனித்தேன் ஆறு பறவைகளையும்
    (உங்க எழுத்தப் படிக்க ஆரம்பிச்சா, தோள் கண்டார் தோளே கண்டார், என்ற நிலைக்கு ஆளாகிறேன் )


    கலாப்ரியாவின் கவிதையைக் காப்பி அடித்தே சொல்ல வேண்டியது தான்

    வண்ணதாசன் அவர்களின் எழுத்தில் மயங்கி வாயடைத்துக் கிடக்கும் வாசகனே
    எங்கள் அறுவரின் பெயர்களும் குரல்களும் அவர் அறிவார், நாங்களும் அறிவோம்
    உன்னிடமும் சொல்ல ஆசைதான், ஆனால் உனது பாஷை நாங்கள் அறியோம்.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. எல்லாவற்றையும் நீங்களே சொல்லிவிடுகிறீர்கள். பக்கத்திலிருப்பதையும், இருப்பவர்களையும் கூட நீங்கள் சொல்லித்தான் தெரிந்துகொள்ள வேண்டியதிருக்கிறது.தெரிந்துகொள்ளுதல் என்றால் இத்தனை நாட்களாக இல்லாமலான தெரிந்துகொள்ளல்தானே...

    இந்த எழுத்துக்களினால் ஆன பலன் உங்களுக்கு தெரிந்திருக்குமா என எப்போதும் எனக்கு சந்தேகம்தான். காற்றின் அற்புதமோ, அருவியின் இயல்போ, கடலின் பிரம்மாண்டமோ போல ஏதோ ஒன்றாக..அதனதன் இயல்பில் எப்படியோ அப்படி...உட்கார்ந்தோ, நின்றுகொண்டோ, உறவுகளுடனோ,நட்புக்களுடனோ பார்த்துக்கொண்டிருக்கிறது போல நாங்கள்..எங்கெங்கோ தொலைத்ததையெல்லாம் இங்கே கண்டடைகிறது போலாகிவிடுகிறது பல நேரங்களில்..

    எந்த வார்த்தைகளால் சொன்னால் அந்த நன்றி பொருள் பொதிந்ததாய் இருக்ககூடும் என்கிற வார்த்தைகளை தேடிக்கொண்டேதான் இருக்கிறோம்..ஒவ்வொரு வார்த்தைகளுக்கு பின்னாலும்..

    எந்த இயந்திரத்தின் பல்சக்கரங்களுக்கிடையிலும் உங்களின் வேட்டி நுனி சிக்கிக்கொள்ளாமலிருந்ததே எனக்கான ஆசுவாசமாக இருக்கிறது எப்போதும்.

    ஒரே ஒரு கண்ணீர்துளியாவது நிபந்தனையற்று பிரிவதே வாசிப்பின் உச்சமென எண்ணிக்கொள்கிறேன் வழக்கம் போலவே...

    ReplyDelete