இன்றும் இன்னொரு புகைப்படமே உதவிக்கு வருகிறது.
இதுவும் ஹிந்து ஞாயிறு இணைப்பில் வெளியாகியிருக்கும் ஒன்றுதான்.
மிக எளிய ஒன்று. சுலபமாகத் தாண்டிபோய்விட முடிவது போல, ஆனால் அப்படி முடியாமல், பார்வையைத் தானிருக்கும் மேல்பக்க மூலையிலேயே
நிறுத்துவது.
அந்தப் பெயரை எப்படி உச்சரிப்பது என்று தெரியவில்லை. அயல் பெயர்களை, அந்தந்த மொழி, அது சார்ந்த இன, பிராந்திய மரபு தெரியாது
முழுமையாக அழைக்க இயலாது. Sebastian Cortes என்பதன் பின் பெயரை
எப்படிஎழுதுவது, கோர்ட்ஸ் எனறா, கோர்ட் என்றா அல்லது வேறெதுவும்
ஆகவா? எந்த எழுத்தில் மௌனம், எந்த எழுத்தில் அழுத்தம்? பேசாமல்,
செபாஸ்டியன் என்பதை வண்ணநிலவன் குரலில் ’செபஸ்தி’ என்று
கூப்பிட்டுவிடலாம். நன்றாகத்தான் இருக்கும்.
செபஸ்தியின் அம்மா வழி இத்தாலி. அப்பா வழி பெருவியா. ஆனால்
செபஸ்தியிடம் இருப்பது அமெரிக்க கடவுச் சீட்டு. 2004 ல் இருந்து மனைவியோடும் இரண்டு குழந்தைகளோடும் ஆரோவில் நகரியத்தில் இருக்கிறார். அவர் பாண்டிச்சேரியை எடுத்த புகைப்பட - கட்டுரைப் புத்தகம்
வெளியாகியிருக்கிறது. அதில் உள்ள ஒன்றுதான் ஹிந்துவில்.
ஒரு பழைய பாண்டிச்சேரி ‘தெருவடி’ வீடு. இடது பக்கம் மூடிய கதவுகள்
உள்ள ஒரு கம்பி ஜன்னல். நடுவே வீட்டு வாசல். ஒன்று சற்றுத் திறந்திருக்கிற, இன்னொன்று மூடியிருக்கிற மரக் கதவுகள். வலதுபக்கமும்
ஜன்னல் உண்டு. அது திறந்திருக்கிறது. ஒரு சிவப்பு சைக்கிள் குறுக்காக.
லேடீஸ் சைக்கிள். வேறு இருசக்கர வாகனங்களும் உண்டு போல. ஏற்றி இறக்க ஒரு சாய்தளம். ஒரு சருகு இல்லாத துப்புரவான தெருப்பக்க நடை
பாதை. கருப்பு வெள்ளை போக்குவரத்து விளிம்பு பளிச்சென்று. இதை
எல்லாம் விட முக்கியமானதும், புகைப்படத்தின் ரத்த ஓட்டமும் ஆக, அளந்து எடுத்தது போல மைய ஒழுங்குடன், கவிந்து கிடக்கும் அற்புதச்
சிவப்பு பொகைன்விலா பூக்கள்.
அந்த அடர்த்தியான பூச் சிவப்பு, படத்தின் குவளையை இப்படி மூன்றில் ஒரு பங்கு நிரப்பியிராவிட்டால், இது இவ்வளவு அழகாக இருக்குமா? அந்த சிவப்பு சைக்கிள் இல்லாவிட்டால்? அந்த இடதுபக்க மூடிய ஜன்னலும்
வலதுபக்க திறந்த ஜன்னலும் இல்லாவிட்டால்? இந்த கருப்பு வெள்ளை இல்லாமல் நடைபாதை விளிம்பு நிறமற்று இருந்திருந்தால் இந்தப் புகைப்படம் எப்படி இருந்திருக்கும்?
நிச்சயம் இவ்வளவு அழகாக இருந்திராது. எல்லாம் சேர்ந்து இந்தப் படத்தை
நிரப்புகின்றன. ஒரு படுகைக் கூழாங் கல் ஆற்றை நிரப்புவது போல. ஒரே ஒரு ‘நசுக்கூட்டான்’ புழு முருங்கை மரத்தை நிரப்புவது போல. ஒற்றைப்
பெருவிரல் பாலுண்ணி கே. அருணாசலத்தின் அண்ணன் பரமானந்தத்தின்
ஞாபகத்தை நிரப்புவது போல. எல்லா முழுமையும் ஒரு சிறு புள்ளி வந்து சேரக் காத்திருக்கிறது. ஒரே ஒரு துளி வந்து சேரத் தவித்திருக்கிறது கடல். ஒரே ஒரு சருகை நகர்த்தக் காத்திருக்கிறது கொடுங்காற்று.
அந்த செபஸ்தி புகைப்பட பொகைன்விலா பூக்களைப் போல எங்கள் தெருவிலும் ஒரு காலத்தில் காணக் கிடைத்தது. அப்போது அது பொகைன்
விலா என்றோ போகன் விலா என்றோ தன் அகராதி மற்றும் தாவரவியல் உச்சரிப்புக்களை அடைந்திருக்கவில்லை. எல்லோரும் சொன்னது போல,
‘தாள் பூ’ என்றுதான் நாங்களும் சொன்னோம்.
அது தெருவோர மரம் இல்லை. கட்டளை ஆபீஸின் கீழ்ப் பக்கமாகவும், தெருவிலிருந்து வடபக்கமாகவும் உள்ளே போனால், ராமச்சந்திர பிள்ளையன் வீடு, வாத்தியார் சிதம்பரம் பிள்ளை வீடு, உலகம்மாச்சி வீடு
எல்லாம் தாண்டினால், சங்கரையா பிள்ளையன் வீடு வரும். அந்த வீட்டில்
தான் தாள் பூ அப்படிப் பூத்துக் குலுங்கும்.
வசதியான வீடு. மரக்கட்டை ரீப்பர் அடித்து மேலே படரவிட்டிருப்பார்கள்.
இடது உள்ளங்கையை வட்டமாகக் குவித்து, அதன் மேல் தாள் பூ இலையை வைத்து, வலது கையை அகல விரித்து அடிப்போம். ‘டொப்’
என்று சத்தம் வரும். அது ஒரு விளையாட்டு. அது எல்லாவற்றையும் ஒரு
விளையாட்டாக ஏற்றுக்கொள்கிற மனம் இப்போதும் இருந்தால் எவ்வளவு
நன்றாக இருக்கும்.
இந்த வயதில் அல்ல, முறுக்கி முறுக்கி மேலே ஏறிப் படர்ந்திருக்கிற தாள்
பூ கொடியின் / மரத்தின் தாவர அமைப்பு, அதை முதன்முதலில் பார்த்த
சின்ன வயதிலேயெ என்னை ஒரு புதிர் போல ஈர்த்தது. புதிரை சற்று அவிழ்ப்பதற்குப் பதிலாக, தவறுதலான திசைகளில் தன்னுடைய பிரியை
முறுக்கிக் கொள்வது போல், சமீபத்தில் அந்த வீட்டில் துக்கம் கேட்கப்
போயிருந்த சமயத்தில் கூட, முன்னிலும் அதிகமாக தனக்கு மத்தியில்
அது காலத்தைப் பின்னிப் படர்ந்து கிடந்தது. அந்த வீட்டில் நிகழ்ந்திருந்த
மரணத்தையொட்டி, ‘காடு மாதிரிக் கிடந்த’ அதை ‘அரக்கி’விட்டிருந்தார்கள்.
எந்த இலையும் எந்தப் பூவும் இன்றி, அது தான் இது காறும் வளர்ந்து
நிற்கிற வீட்டின் துக்கத்தைக் காத்துக்கொண்டு இருந்தது. தன் அத்தனை
விரல்களையும் இழந்த பிறகும் மீண்டும் தன் பூக்கால ஓவியம் ஒன்றை
வரைவதற்கான தீவிரமான வண்ணங்களைச் சேகரிக்கத் துவங்கிவிடும் தீர்மானத்தில் இருப்பதை என்னிடம் சொல்லியது.
ஒரு காலத்தில் அது அப்படிப் பூத்தது.
ஆனி, ஆடியில் அடிக்கிற காற்றில் அந்தப் பூக்கள் தெருவில் தரையோடு தரையாய் நகரும். நான் படித்து முடித்து வேலை கிடைக்காது இருந்த,
பறப்பதற்கு முந்திய புழுக்காலம் அது.. தெருவாசல் நடையிலேயே தனியாக நின்றுகொண்டு இருப்பேன். தரையில் நகர்கிற அந்தத் தாள் பூ எதுவரைஅப்படிச் செல்லும் எனப் பார்க்கப் பார்க்க, பார்வை மயக்கத்தில் தெருவே இளம் சிவப்பாகி நகர்கிற மாதிரி இருக்கும். உலகத்தில் தாள் பூவை அச்சு அசலாக வரைந்துவிடக் கூடிய ஓவியர்களின் பட்டியலில் முன்வரிசையில் இருக்கும் தகுதி அப்போது எனக்கு இருந்தது.
கண்ணதாசனில் வெளிவந்த என்னுடைய ‘புளிப்புக் கனிகள்’ கதையில்
பிரபா வருகிற போது இந்த பொகைன்விலா பூக்களும் வரும். ‘செம்பூக்கள்
காற்றில் தரையை மெழுகியபடி’ என எழுதியிருப்பேன். பிரபா காணாமல்
போய்விட்டாள். இந்தப் பூக்கள் காணாமல் போய்விட்டன. ஒரு வார்த்தை
கூட யாருடனும் பேசாமல், மிக நேர்த்தியான உடைகளில் சாயுங்காலம் மட்டும் தெருவில் நடந்து செல்லும் அந்த வீட்டுக்கார சங்கரையா பிள்ளையனும். நடு வகிடு எடுத்து சுருட்டை முடி வாரி, முண்டா பனியன் தெரிய மல் ஜிப்பா போட்டு வேட்டி கட்டி, நாம் பார்த்தால் நம்மைப்
பார்த்துச் சிரிக்கிற அவருடைய மூத்த மகனும். சமீபத்தில் அதற்கு அடுத்த மகனும் காணாமல் போய்விட்டார்கள்.
தெருவும் நானும் மட்டும் என்ன வாழ்கிறோம்?
நாங்களும் காணாமல் போய்விட்ட மாதிரிதான். பொதுவாக, ஏற்கனவே
காணாமல் போன ஒன்று, இப்போது வேறு எதையோ தொலைத்துவிட்டுத்
தேடும் போது, தற்செயலாகக் கிடைக்கும் இல்லையா. செபஸ்தியின் இந்தப் புகைப்படத்தின் மூலம், காணாமல் போன எங்கள் 69 -70 ம் வருடத் தெரு இன்று கிடைத்துவிட்டது. தாள் பூ கிடைத்துவிட்டது. சொல்ல முடியாது, பிரபா கூடக் கிடைத்து விடுவாள்.
கிடைக்காமலே இருக்கப் போகிறவன் எப்போதும் நானாகத்தான் இருக்கும்.
அல்லது இப்படி வைத்துக் கொள்ளலாம். தொலைத்துவிட்டுத் தேடிக்கொண்டு இருப்பது இப்போதும் கூட என்னைத்தான்.
ஒற்றைப் புகைப்படம் எத்தனை மனிதர்களின் நினைவை மீட்டுத் தந்திருக்கிறது.:)
ReplyDelete