Saturday, 19 May 2012

கல்யாணி.சி - ஒரு பிறந்த நாள் பரிசு.

தேதி சரியாக ஞாபகமில்லை.
சுதீர்செந்திலின் பிறந்த நாள் அக்டோபர் கடைசியில் வரும்.  அப்படியெல்லாம் சரியாக அட்டவணைப்படுத்தி, அதிகாலையில் முதல் வேலையாக வாழ்த்துச் சொல்லும் பழக்கம் ஆதியில் இருந்தே எனக்கு இல்லை. போன வருஷம் சொல்லியிருப்பேன். இந்த வருஷம் கல்யாணி
அனுப்புவான் என்று எதிர்பார்ப்பார்கள். அனுப்பியிருக்க மாட்டேன். சில பேருக்கு சாயுங்காலம், ஒரு தடவை ராத்திரி பத்து மணிக்குக் கூட, அல்லது இரண்டு நாட்கள் கழித்து எல்லாம் அனுப்புவேன். எப்போது ஞாபகம் வருகிறதோ அப்போது.  புள்ளி வைத்தது மாதிரி, காலையில் பேப்பரை விரித்ததும் குரு பெயர்ச்சி, அட்சய திருதியை என்று மேலே
விழுந்து ஆவி சேர்த்துக் கட்டுகிறது போல எல்லாம் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லக் கட்டுபடியாகுமா நமக்கு?
இன்றைக்குக் கூட ஒரு குறுஞ் செய்தி வந்திருக்கிறது, “இன்று நீங்கள் என்னை ஆசீர்வதிக்கலாம். எனக்கு சந்தோஷம் தருவது அது” என ஆங்கில
நெருக்கத்தில். நெருக்கம் தானே உண்டு. அதென்ன ஆங்கில நெருக்கம்
என்று கேட்கத் தோன்றும்.   மொழி சில காரியங்களைப் பண்ணுகிறது. சில சமயம் தென்னந்தோப்பு நிழல், சிலசமயம் அரச மரநிழல், சில சமயம் ஆற்றங்கரை மருத மர நிழல். நிழல்தான், ஆனால் மரம் வேறுவேறாகிச்
சில காரியங்களைப் பண்ணுகிறது இல்லையா, அப்படி.
சுதீர் செந்திலுக்கு அனேகமாக குறுஞ்செய்திதான் அனுப்பியிருப்பேன் என நினைக்கிறேன். தொலைபேச்சு உரையாடலுக்கும் நமக்கும் அவ்வளவாக
எப்போதுமே தோதுப்படாது. பிறந்த நாள் வாழ்த்துச் சொன்னதும் சுதீர்
செந்தில், ’எனக்கு ஒரு பிறந்த நாள் பரிசு தரவேண்டும்’ என்று கேட்டார்.
நமக்குத் தெரியாதா, வெள்ளரிப் பிஞ்சு விற்கிற பெண்ணிடம், மிஞ்சி
மிஞ்சிப் போனால் கூட ஒரு பிஞ்சு போடச் சொல்லப் போகிறார்கள்.
பொது நூலகம் என்றால் , நாம் இப்போது படித்துக் கொண்டிருக்கும் பத்திரிக்கை, நம் வாசிப்புக்குப் பிறகு அவர்களுக்குத் தேவைப்படுகிறது.
கட்டை விரலை உயர்த்தி புத்தகப் பையும் அரக்குக் கலர் ட்ராயருமாக
ஒரு பையன் குலவணிகர்புரம் கேட் பக்கம் கைகாட்டினால், ஊசிக் கோபுரம் ஸ்டாப் பக்கம் அவனை இறக்கிவிடவேண்டும். நம்மை மாதிரி  எழுதுகிறவனாக இருந்தால் அடுத்த இதழுக்கு ஒரு கதை தர வேண்டும்.
அதற்கு மேல் தர நம்மிடம் என்ன வக்கு இருக்கிறது?
சுதீர் கதை கேட்கவில்லை. கவிதை கேட்டார். அடுத்த மாதத்திற்கு அல்ல. அடுத்த வருடம் முழுவதற்கும். ‘பன்னிரண்டு இஷ்யூவுக்கும்
கடைசி பக்க கவிதை தரணும் சுந்தரம்’ என்றார். ஒப்புக் கொண்டேன். க்டைசித் தவணை வரை அனுப்பாமல் நாளைக் கடத்துகிறவன் என்பதால்,
‘மாசா மாசம் எத்தனாம் தேதிக்குள்ள அனுப்பணும்?’  என்று கேட்டதற்கு சுதீர்,  ‘உங்களுக்காக இது.  பன்னிரண்டாம் தேதி லாஸ்ட் டேட்’
என்றார்.
இதைச் சுதீர் சொன்னதும் நான் கேட்டுக் கொண்டதும் எல்லாம் அக்டோபர் மாதம்.    விகடனில் அதற்குச் சற்று முன்பாக ஒரு வாரத்தில்தான் அந்த
என்னுடைய சிறுகதை, ‘எண்கள் தேவையற்ற உரையாடல்கள்’ வெளியாகி இருந்தது.  நான் தொடர்ந்து சிறுகதை எழுதும் உத்தேசத்தில்தான் இருந்தேன். என் உள்ளூர ஆசை,   2013க்கு ஒரு புதிய சிறுகதைத் தொகுப்பு கொண்டுவருவது.  ஆனால், நான் தொடர்ந்து கவிதைகள் எழுத ஆரம்பித்துவிட்டேன். ‘மணலுள்ள ஆறு’ தொகுப்பின் மன நிலை மேலும்
கண்ணி விலகாமல் சங்கிலி கோர்த்தது.   உயிர் எழுத்து இதழுக்கு மாதா மாதம் என்று ஒப்புக்கொண்டது, விகடன் கதையையே இன்றுவரையிலான
என் சமீபத்திய ஒன்றாக வைத்திருக்கிறது.
மாதம் ஒன்று அனுப்பச் சொல்லியிருந்தார். நான் ஏழெட்டு, சமயத்தில்
பத்துப் பனிரெண்டு கவிதைகள் அனுப்பிவைத்தேன். கடைசி பக்கக் கவிதை என்பது கடைசிப் பக்கத்திலும் கவிதை என்றாயிற்று. இந்த ஐந்து மாதங்களிலும் உயிர் எழுத்துவில் முப்பதுக்குக் குறையாமல் வெளியாகி
இருக்கும்.  வேறு யாருக்குப் பிடித்திருக்கிறதோ, இல்லையோ , எழுதுகிற
எனக்குப் பிடித்திருக்கிறது. இதுவரை நான் கவிதையென எழுதிவந்ததன்
 சாயல் மாறாமலும். அங்கேயே நிற்காமல் முன் நகர்ந்தும், என் சற்றே
மனத்தடைகள் குறைந்த இந்த வயதின் விசாலத்துடனும் வாழ்வு குறித்த அக்கறையுடனும் அவை இருப்பதாக நான் நினைக்கிறேன்.
எஸ்.ஐ.சுல்தான் தொடர்ந்து என்னுடைய கவிதைகளைப் பிரசுரித்த போது எல்லாம் அந்தக் கவிதைகளுக்கு அதிக வாசிப்பும். அவர் எப்போதெல்லாம் என் கதைகளைப் பதிவேற்றினாரோ அப்போதெல்லாம் அதற்குக் கவிதைகளுக்கு உரியதை விடக் குறைவான வாசிப்பும் நிகழ்வதை உணர முடிந்தது.
இதுவரை, இந்த சமவெளியில், வண்ணதாசனை மட்டும் அறிந்தவர்கள் போக, கல்யாண்ஜி ஆகவும் என்னை எதிர்பார்க்கிற ஒரு பகுதியினர் இருக்கக்கூடும் அல்லவா. அவர்களுக்காக, அந்த ஏற்கனவே இதுவரை பிரசுரமான, ஏற்கனவே வாசிக்கப் பட்ட,  உயிர் எழுத்துக் கவிதைகளில்
சிலவற்றை இங்கே தரத் தோன்றுகிறது.  மிகுதி இருக்கிற ஜூலை முதல் டிசம்பர் வரையிலான இதழ்களுக்குக் கவிதை தந்த பிறகும், நான் கவிதைகள் எழுதுவேன் ஆகில், எழுத எழுத நேரடியாக இங்கே பதிவேற்றவும் விரும்புகிறேன்.
ஒரு துவக்கம் ஆக, உயிர் எழுத்து கவிதைகள்.
கல்யாண்ஜி என்றால் என்ன, கல்யாணி.சி என்றால் என்ன, எல்லாம் ஒன்றுதான் என உங்களுக்குத் தெரியாதா?

உயிர் எழுத்து ஜனவரி-2012.

இதற்குமேல் உருளமுடியாது
கல் நதியைவிட்டுக் கரையேறிற்று.
இதற்குமேல் வழவழப்பாக்க முடியாது
கல்லை ஒதுக்கிவிட்டு
நதி ஏகிற்று.


2.
முதன்முதல் பார்க்கையில்
ஒரு கை உடைந்திருந்த
மர நாற்காலியில்
உட்கார்ந்திருந்தார் முருகேச மாமா
ஓரம்தைத்த பனையோலை விசிறி
ஒன்றை வீசிக்கொண்டு.
ஒடிந்த பின் நாற்காலியும்
கிழிந்த பின் விசிறியும்
இறந்தபின் மாமாவும்
எனக்குள் ஒன்றாக அப்படியே
இருப்பது எப்படி?

3.
பார்த்தாயிற்று இந்தப் பனிக்காலத்தின்
முதல் மஞ்சள் பூவை
விரையும் ஜன்னல் வழியாக
நேற்றே என் ரயில் பயணத்தில்.
பீர்க்கங் கொடி படர்ந்த
நீர்க்கருவையின் பச்சை மறைவிலிருந்து
அவசரமாக எழவேண்டியவராக இருந்தார்கள்
அந்த இரண்டு பெண்களும்.
என் 66ம் வயதை நோக்கி
சலனமின்றி நகர்ந்துகொண்டிருந்த
இந்த டிசம்பர் அதிகாலையின்
முதல் ரயில் பூச்சியை அடையாளம் காட்டுவதாக
ஞாயிற்றுக் கிழமை ஆராதனை மணி.
எப்போதோ பார்த்த வளையல் பூச்சியின்
முதுகுப் புள்ளிகள் தேடி
ஊர்ந்துகொண்டிருந்தது ஆயுள்
என் ஆயிரம் நரைமயிர் அசைத்து.
சிவப்பாக வாசலில் தொங்கும்
முதல் கிறிஸ்துமஸ் நட்சத்திரத்தை
காண்பிக்கும் இரவு வரும்போது
சாம்பல் பூனை மதில் மேலிருக்க
கணவனின் சினேகிதி ஒருத்தியுடன்
கைபேசியில் சிரித்துப் பேசும்
உங்களைப் போல ஒருவர் நிற்பதைப்
பார்க்கமுடிந்தால் இருக்கும் உன்னதமாய்.



4 comments:

  1. /மிகுதி இருக்கிற ஜூலை முதல் டிசம்பர் வரையிலான இதழ்களுக்குக் கவிதை தந்த பிறகும், நான் கவிதைகள் எழுதுவேன் ஆகில், எழுத எழுத நேரடியாக இங்கே பதிவேற்றவும் விரும்புகிறேன்./

    நன்றி சார்:)

    ReplyDelete
  2. இரண்டாவது கவிதை சொன்னதைப் போல் எனக்குள் எத்தனை பேரை அடக்கியிருக்கிறேன் என்று தேடத் துவங்கிவிட்டேன். பொக்கிஷம் திறந்தது போலிருக்கிறது. நன்றி சார்.

    ReplyDelete
  3. /எஸ்.ஐ.சுல்தான் தொடர்ந்து என்னுடைய கவிதைகளைப் பிரசுரித்த போது எல்லாம் அந்தக் கவிதைகளுக்கு அதிக வாசிப்பும். அவர் எப்போதெல்லாம் என் கதைகளைப் பதிவேற்றினாரோ அப்போதெல்லாம் அதற்குக் கவிதைகளுக்கு உரியதை விடக் குறைவான வாசிப்பும் நிகழ்வதை உணர முடிந்தது./

    நானும் சுல்தான் பதிவுகளைத் தொடர்ந்து வாசிப்பவந்தான். வலைப்பதிவுகள் அதிலும் குறிப்பாக உங்கள் போன்றவர்களின் எழுத்து தினமும் தேடிப்படிக்கப்படுவது. அது பெரும்பாலும் அலுவலக இறுக்கத்தில், அது தரும் அயர்ச்சியிலிருந்து ஒரு தற்காலிக சிரமபரிகாரம். உங்கள் கதைகளை நான் புத்தகத்தில் படித்திருந்தாலும் சுல்தான் வெளியிடும்போதெல்லாம் பெரும்பாலும் மதிய உணவுக்குப் பின்னரே படிப்பேன். அது தரும் தாக்கத்திலிருந்து மீள்வது கடினம். சில கதைகள் பெரும் உற்சாகம்தரும். வேலை நிமித்தம் முற்பகலில் வெறுத்த என் ஊழியர்களை உங்களின் கதைகள் சிலவற்றைப் படித்த நாட்களில் அதன் பிறகு வெறுப்பின்றி பார்க்க முடிந்திருக்கிறது.

    ஆனால் உங்கள் கவிதைகள் அப்படியில்லை. இதோ இங்கு பதிப்பித்த மாதிரி சிறியவை. புழுக்கமான ஒரு பொழுதில் சன்னலருகில் போனதும் ஒரு நொடி வீசும் குளிர்ந்த காற்றுபோல் ஒரு உற்சாகம் தரும். சற்றே சாவகாசமான தருணங்களில் திரும்பத் திரும்பப் படித்து தோன்றியபடியெல்லாம் புது அர்த்தம் காணமுடியும். உங்கள் கதைகளை மனதில் சுமக்காமல் படித்ததும் இறக்கிவிட்டுப் போக முடிவதில்லை. கைவளைவில் ஏந்திக் கொண்ட குழந்தையை அவ்வப்போது பார்த்துச் சிரிப்பதுபோல் ரசிக்க வேண்டியிருக்கிறது.

    ReplyDelete
  4. உங்கள் போன்றவர்களின் எழுத்து தினமும் தேடிப்படிக்கப்படுவது. அது பெரும்பாலும் அலுவலக இறுக்கத்தில், அது தரும் அயர்ச்சியிலிருந்து ஒரு தற்காலிக சிரமபரிகாரம்.

    class poems sir

    ReplyDelete