Sunday 27 May 2012

உள் ஆறுகள்.


பாலருவி ஆரியங்காவு வனச்சரகத்தில் இருக்கிறது.
முந்திய நாள்வரை அருவியில் தண்ணீர் இல்லையாம். அன்றைய எங்கள்
தினம் நீரால் ஆசீர்வதிக்கப் பட்டிருந்தது. வாகனத்திற்கும் பயணிகளுக்கும்
சுங்கத் தீர்வை, அனுமதிக் கட்டணம் உண்டு. செலுத்தினால்தான் மேற்
கொண்டு செல்ல முடியும்.

காத்திருந்த சமயத்தில் விற்பனைக்கு வந்த அந்தப் பெண் மாங்காய்க் கீற்றுகளுடன் வேறொன்றையும் சிறு தட்டில் ஏந்திக்கொண்டிருந்தாள். கருத்த பெண். மினுமினுக்கும் அந்தக் கருப்புக்கு வேறு உதாரணங்கள் இல்லை. அப்படியொரு பல் வரிசை. சுடரும் கண்கள். பதினெட்டு அல்ல. இருபது அல்ல.முப்பத்தைந்து இருக்கலாம். இந்த வாழ்வின் துக்கத்தை, சந்தோஷத்தை, ஆணை, குழந்தைகளை அறிந்திருந்த முழுமை.

காகிதக் கப்புகளில் வைத்திருந்ததை ‘பன்னீர் கொய்யா’ என்றாள். அது
கொய்யாவை விட்டு வெகு தூரத்தில் இருந்தது.  பழ வடிவு கிடையாது.
பூ வடிவில் இருந்தது. ஒரு மலைபடு பூவாகக் கூட இருக்கலாம் அது.
மஞ்சளும் ஆரஞ்சுமாக நிறத்தில் ஒரு பழுக்கிற தக்காளியை ஞாபகப் படுத்தியது.

இரண்டு பேர்களிடம் துவக்கிய வியாபாரத்தில், நான் வாங்கத் தயாராகி விட்டேன் என்பதை அந்தப் பெண்ணால் படித்துவிட முடிந்தது. ‘வாங்கிக்
கொள்ளுங்கள். ருசியாக இருக்கும்’ - என்னிடம் நியாயப் படுத்தினாள்.
வாங்குவதா வேண்டாமா என்ற தயக்கத்தின்  புள்ளியை நான் அடைந்து
விடும் முன் என்னுடைய கையில் அதைச் சேர்த்துவிடும் நேரத்தை ஒரு
சிரிப்புடன் அந்தப் பெண் அறிந்திருந்தாள்.

வாங்கிக் கொண்டேன். வியாபாரம் நவீனமடைந்து, ஒரு காகிதக் கப்பில்
அவை அடுக்கப்பட்டிருந்த விதம் எனக்குப் பிடித்திருந்தது. தின்றுபார்த்தால்
அடிப்படையில் அரி நெல்லிக்காய் ருசியுடன் துவங்கி,    அப்புறம் எந்த
ருசியும் அற்றுப் போனது.
ருசியற்ற இடத்தை அடைந்ததுதான் ருசியைவிட எனக்குப் பிடித்திருந்தது.

%

முரப்ப நாடு வல்ல நாட்டுக்கு முந்திய கிராமம்.
சிவகாமசுந்தரி சமேத கைலாச நாதர் கோவில் ஆற்றின் கரையில் இருந்தது. நாங்கள் கோவில் துறையில் குளிக்கவில்லை. அதைவிட்டு விலகி இன்னொரு துறை இருந்தது. சிந்து பூந்துறையும், குறுக்குத் துறையும், முன்னடித் துறையும், கருப்பந்துறையும் மணலற்றுப் போக,
தாமிரபரணி இங்கே மணல் உள்ள ஆறாக ஓடிக்கொண்டு இருந்தது.  நல்ல
‘இழுப்பு’ தண்ணீரில். ஆனால் இடுப்பளவு இருந்தால் அதிகம்.  மீன் கடித்தது.
குனிந்து மணல் அள்ளினால் சிப்பி  கிடைத்தது. கூழாங்கல் கிடைத்தது.  ஆகாயத் தாமரை ஒன்றிரண்டாக தண்ணீர் ஓட்டத்தில் நம்மைத் தாண்டி
பச்சை அகலாய் நகர்ந்து போனது.

ஓடுகிற தண்ணீர் காலத்தைத் தொலைக்கிறது. வயதை அழிக்கிறது. கவலை
எதுவும் உண்டெனில் அதைக் கழற்றிக் கரையில் வைத்துவிடுகிறது.  நீரில்
சிரிக்க மட்டுமே முடியும். எல்லோரிடமும் மகிழ்ச்சியின் ஈரம் மட்டுமே. எல்லோருடைய கண்களும் சிவந்து, ஒரே ஒருவருடைய கண்களாகி.

குளித்து முடித்து, ஒரு வேப்பமரத்தடியில் உட்கார்ந்து சாப்பிட்டோம். அந்தப் பாட்டி வந்தாள். பாட்டி என்பது நன்றாக இல்லை.  ‘என்னமோ’ மாதிரி இருக்கிறது. ஆச்சி வந்தாள். அதுதான் சரி.  ஆச்சிக்கு பசலிக்கொடி
மாதிரி உடம்பு. மருந்துக்குக் கூடப் பல் இல்லை. ( மருந்துக்கு எதற்குப்
பல்? விருந்துக்குத் தானே வேண்டும்.).  பொக்கை வாய்க்கு ஒரு அழகு வந்துவிடுகிறது. பள்ளத்தாக்குக்கு ஒரு அழகு. காலியாகக் கிடக்கும்
மத்தியானத் தெருவுக்கு ஒரு அழகு.  எண்ணெய் தேய்த்துக் குளிக்கத் தோடு மூக்குத்தி கழற்றிய முகத்துக்கு ஒரு அழகு. இப்படியாக இதுவும்.
வயது எழுபதுக்கு மேல் எதுவுமாக இருக்கலாம். மைல்கல் இல்லாவிடில்
ஊர்போய்ச் சேர முடியாதா என்ன?

ஒரு கம்பை ஊன்றியபடி விரைப்பாக வந்தாள். கூனல்கிடையாது. ஆச்சிக்கு
முன்னால் ஆச்சி சிரிப்பு வந்தது.
‘ஆச்சி, இட்லி தரட்டுமா? எங்க கூட இருந்து ரெண்டு சாப்பிடுதியா?’
‘சாப்பாடு ஆச்சுய்யா’ - இதுவும் சிரிப்போடுதான். ஆச்சி கை நீட்டிக் காசு எதுவும் கேட்கவில்லை.    நான் கொடுத்தால் அது   நன்றாக   இருக்காது இல்லையா.  இரண்டரை வயது ஆதியிடம், ‘ஆச்சிகிட்ட கொடு’ என்றேன்.
ஆதி கொடுத்தான். சந்தோஷமாக வாங்கிக் கொண்டாள்.  எவ்வளவு காசு
அது, எட்டணாவா, ஒரு ரூபாயா, இரண்டா, ஐந்தா என்று எல்லாம் பார்த்துக்
கொள்ளவில்லை. ‘மகராசன்’ என்று ஆதியை முத்தினாள். எந்த ஊரிலிருந்து வந்திருக்கிறோம் எனக் கேட்டாள். ஆற்றில் ‘நல்லா’க் குளித்தீர்களா?  கோவிலுக்குப் போய் சாமி கும்பிட்டீர்களா?  என்று விசாரித்தாள். குனிந்து
அணிலோ வௌவாலோ கடித்துப் போட்டிருந்த மாம்பழத்தை எடுத்துக்
கொண்டாள்.  ‘வீட்டுக்குப் போ(கு)ம் போது ஒரு குடத்துல ஆத்(து)த்தண்ணி
எடுத்துகிட்டுப் போங்க. கைலாச நாதரு தீர்த்தம்’ லா அது’ என்று அதற்கும்
சிரித்தாள். சிவகாமசுந்தரிச் சிரிப்பு.

இது எல்லாம் பெரிதில்லை.  அவள் அடுத்துச் சொன்னதுதான் முக்கியம்.
‘எல்லாரும் ஏ(ன்) வீட்டுக்கு வந்துட்டு, வெயில் தாழப் போ(க)லாம் ‘லா’
சிரிக்காமல் இதையும் அவளால் சொல்லமுடியவில்லை. சிரிப்பு இல்லை. ஆனந்தம்.   வெயில் மாதிரி, நாங்கள் உட்கார்ந்திருந்த வேப்பமர நிழல் மாதிரி, ஆச்சியின் சிரிப்பு எல்லோர் மேலும் பிரகாசமாக, குளுமையாக
விழுந்தது.
நாங்கள் பதிலே சொல்லவில்லை.  சொல்ல முடியவில்லை.  உலகத்தில்
எல்லாவற்றிற்கும் பதில் சொல்லவேண்டும் என்று கட்டாயமா என்ன?

%

முக்கூடல் ஆறு அத்தனை தெளிவாக இருந்தது.
பளிங்கு மாதிரித் தண்ணீர். கடுகையோ மிளகையோ போட்டால், விழுந்த இடத்தில் அப்படியே மணலோடு அள்ளிவிடலாம்.  அப்படி ஒரு  சுத்தம்.

ஓடுகிற ஆற்றில் மணலை அள்ளிப் பார்க்க வேண்டும்.      அது   ஒரு அனுபவம். முதலில் ஒரு குத்துத் தண்ணீரை அள்ளுகிற மாதிரி இருக்கும். அப்புறம் ஒரு குத்து மணலை அள்ளின மாதிரி இருக்கும். பின்பு யார் யாரின் அஸ்தியையோ ஒரு குத்து அள்ளின மாதிரி. ஒரு குத்து காலத்தை
அள்ளிய மாதிரி உற்றுப் பார்த்தால் உள்ளங் கையில் அகாலத்தின் பொன் மினுங்கும்.  கைப்பிடியில் மணல்கடிகை ஒழுகிக் காலம்அளக்கும. மணலை
அள்ளுவதற்கே கை. கையால் அள்ளப்படுவதற்கே மணல் என்பதே கணக்கு
அல்லது கணக்கின்மை.

இரண்டு மூன்று பேரிடம் கேட்டுவிட்டோம். முக்கூடல் (திரிவேணிசங்கமம்
என்பதற்கு எவ்வளவு அழகிய தமிழ்) என்றால் என்னென்ன ஆறுகள்? முதல்
ஆறு தாமிர பரணி. இரண்டாம் மூன்றாம் ஆறுகள் எவை?      யாருக்கும் தெரியவில்லை. தெரியவில்லை என்று சொல்லமாட்டார்கள் அல்லவா.
சிரித்தார்கள். ஆறும் நீரும் சிரிக்கச் சொல்லும்.    ஆற்றங்கரைச்    சிரிப்பு
ஆற்றங்கரை நாணல் மாதிரி, தாழை மாதிரி.

கரையோரம்தான் கோவில். முத்துமாலை அம்மன் கோவில்.  அப்புறம் போகாவிட்டால் எப்படி?  முத்துமாலை அம்மன் அழகாக இருந்தாள்.  பொதுவாக நான் பார்த்த எல்லா அம்மன்களுமே இப்படி நன்றாகத்தான் இருக்கிறார்கள். உயரமாக, தீர்க்கமாக, வாட்ட சாட்டமாக, நேரில் நிற்கிற மாதிரி. 
கோவில் என்றால் பக்கத்தில் இரண்டு கடை இல்லாமலா? ஒரு கடை இருந்தது.‘டீ கிடைக்குமா?’ என்று கேட்டோம்.
’இருக்கு’ என்று சிரித்தார். ஒடுங்கிய ‘சித்துப் போல’ முகம். நரைத்த தலை. நரைத்த மீசை. நரைத்த சிரிப்பு. எல்லாம் பஞ்சு மாதிரி.    டவுண்காரர்களின் சந்தேகம் நம்மை விட்டுப் போகுமா?
‘தம் டீயா தாத்தா?’
தாத்தா சிரிப்பு மாறாமல் இடப்பக்கம் கையைக் காட்டினார்.  ப்ரூ கலவை
இயந்திரம். காஃபி சதுரம் தனி. தேனீர் சதுரம் தனியாக. ‘எவ்வளவு?’ என்று
நாங்கள் கேட்போம் என்று நினைத்திருப்பார் போல.  ‘ரெண்டும் ஆறாறு
ரூவா; என்றார். அப்படிச் சொல்லும் போதே என் கையில் ஏந்தியிருந்த
ஆதியின் கன்னத்தை லேசாகத் தடவினார். முதலில் இரண்டு பேர் குடித்து
‘டேஸ்ட்’ பார்த்தோம். நன்றாக இருக்கிறது என்று மேலும் மூன்று பேர்
குடித்தார்கள்.  அவர்களுக்கும் பிடித்துப் போகவே, தூரத்தில் மரத்தடியில்
நின்ற பெண்கள் இருவரை வரச் சொல்லிக் குடிக்கச் சொன்னோம்.
மொத்தமாகச் சொன்னால் என்ன என்று அவர் அலுத்துக்கொள்ளவில்லை.
‘கணக்கு ஒழம்பீராம’ என முணுமுணுக்கவில்லை. சிரித்துக் கொண்டே
ஒவ்வொரு கப்பாக ஊற்றிக் கொடுத்தார். ஒரு துணியால் அவ்வப்போது
சிந்திய துளிகளைத் துடைத்தார். ‘சூடா இருக்கா? ஆத்திக் கொடுக்கவா?’
என்று அர்ச்சனாவைப் பார்த்துக் கேட்டார்.   ‘ஒங்க பேத்தியா, முழுப்பரிட்ச
லீவுக்கு வந்திருக்காளா?’ என்ற கேள்வி என்னிடம்.

‘எவ்வளவு ஆச்சு?’ என்று கணக்கு முடிக்கும் போது எனக்கு அவரிடம்
கேட்கத் தோன்றியது. ‘இந்த முக்கூடல்னு சொல்லுதாங்களே. மூணு ஆறு
எதெல்லாம்?  ஒண்ணு தாமிரபரணி . மத்த ரெண்டு?’
அது புறப்பட்டு வருகிற திசைகள் எல்லாம் சொல்லி,   ‘ ரெண்டாவது கருணை ஆறு.  மூணாவது உள்ளாறு” என்றார்.
எனக்கு மூன்றாம் ஆற்றின் பெயர் பிடிபடவில்லை.  ‘மூணாவது ஆறு என்ன?’ மறுபடி கேட்டேன்.
‘உள். உள். உள்ளாறு. உள்ளே வெளியேண்ணு சொல்லுதோம்லா. அந்த உள். கண்ணுக்குத் தெரியாம உள்ளே ஓடுத ஆறு. எப்பவுமே கண்ணுக்குத் தெரியாம ஓடுத ஆறுதான் விஷேசம்’ அவர் சொல்லி முடித்தார்.  சிரிப்பு
இப்போதும் இருந்தது. கண்ணுக்குத் தெரியாத ஆறு மாதிரிச் சிரிப்பு அது.
‘வடக்கே கூட இப்படித்தான். கங்கே தெரியும். யமுனே தெரியும். மூணாவது ஆறு சரஸ்வதி கண்ணுக்குத் தெரிய மாட்டா. அவ உள்ளாறு,    உள்ளாறு
தான் எப்பவுமே விஷேசம்’  அவர் எங்களைப் பார்த்து அல்ல, முக்கூடல்
ஆற்றைப் பார்த்துச் சொல்லிக்கொண்டிருப்பது போல இருந்தது.

நாங்கள் புறப்படும் போது ஒரு அமைதி வந்துவிட்டிருந்தது. அதுவரை
தொங்கி அசைந்துநின்ற ஆலமரவிழுதுகள் எல்லாம் அங்கங்கே அசைவை
நிறுத்தி இந்தக் கடையைப் பார்த்துபோல இருந்தது.  அவரிடம் சொல்லிக் கொள்வது போல சிரித்தேன். அவர் பின்னால் திரும்பினார். கடையில் ஒரு
முருகன் படம் இருந்தது.  அதற்கு முன்பு ஒரு கொத்து மயில் பீலிகள். அதிலிருந்து ஒன்றை உருவி ஆதியின் கையில் கொடுத்தார். மறுபடியும்
கன்னம் தடவிச் சிரித்தார். ஆதி என்னிடம் காட்டிச் சிரித்தான்.

எனக்கு மறுபடியும் முங்கிக் குளிக்கிற மாதிரி இருந்தது.  அதுவும் அந்த
 கண்ணுக்குத் தெரியாத உள் ஆற்றில்.

9 comments:

 1. நல்ல பயணமாக அமைந்து இருக்கிறது

  முரப்ப நாடு, மணக்கரை, கருங்குளம் எல்லாம்
  அற்புதமான பகுதிகள்

  ReplyDelete
 2. இரண்டு பேர்களிடம் துவக்கிய வியாபாரத்தில், நான் வாங்கத் தயாராகி விட்டேன் என்பதை அந்தப் பெண்ணால் படித்துவிட முடிந்தது. ‘வாங்கிக்
  கொள்ளுங்கள். ருசியாக இருக்கும்’ - என்னிடம் நியாயப் படுத்தினாள்.
  வாங்குவதா வேண்டாமா என்ற தயக்கத்தின் புள்ளியை நான் அடைந்து
  விடும் முன் என்னுடைய கையில் அதைச் சேர்த்துவிடும் நேரத்தை ஒரு
  சிரிப்புடன் அந்தப் பெண் அறிந்திருந்தாள்.

  இந்த கூர்ந்த எழுத்துக்கள் , கணங்கள் தான் சார் உங்களின், தி ஜா வின், RK narayanan's தனிச் சிறப்பு

  எத்தனையோ புதிய இணைய எழுத்தாளர்கள் வந்தாலும் யாராலும் இவற்றின் அருகே வர முடிவதில்லை

  ReplyDelete
 3. காவேரி ஆற்றுக் கரையில வளர்ந்த எனக்கு, ஆறு மாதம் முன் முதல் தடவையா தாமிரபரணியைப் பார்த்தேன் ரசித்தேன், மயங்கி போயிட்டேன். இனி கொஞ்ச நாள் அதன் கரையில் கழிக்கனும்னு ஆசையா இருக்கு. பார்ப்போம்.

  ReplyDelete
 4. உள்ளாறு,எங்கள் வாசுதேவநல்லூரிலும் என்ன ஒரு நடை உருகச்செய்யும் எழுத்து.
  தியாகராஜன்

  ReplyDelete
 5. ஒவ்வொரு சின்னப் பயணமும் விந்தை மனிதர்களை மனதில் பதியவைத்து விடுகிறது. எந்தக் கல்லூரியிலும் விற்பனை மேலாண்மை படித்திராத, பார்வையிலேயே மனங்களைப் படிக்கிற வித்தை அறிந்தவர்கள். அருமை.

  ReplyDelete
 6. தாமிரபரணி ஆறு போல உங்கள் எழுத்து ! முங்கி குளிச்சூட்டோம்

  ReplyDelete
 7. எத்தனையோ இடங்களுக்கு பயணப்படுகிறோம், ஆனால் அதை நண்பர்களிடம் சொல்கிற பாங்கில் அழகாய் நேர்த்தியாய் வரைந்து ''முக்கூடலுக்கு'' விளக்கத்தையும் கேட்டு பதிவுசெய்துள்ளது, தங்களின் படைப்பு தனித்தன்மை. ''தேடல் உணர்வைத்தூண்டி, அதற்கு விடையையும் தந்துவிட்டால் அந்த படைப்பு நிலைத் தன்மையை பெற்றுவிடும்'' என்பதை உங்கள் படைப்பு உறுதி செய்துவிட்டது. -- முனைவர். சி.இரா.இளங்கோவன்

  ReplyDelete
 8. ஆறு எப்போதுமே அழகுதான் .ஆறு பார்ப்பதை விட நீங்கள் ஆறு பற்றிச் சொல்வது அழகு .
  சௌந்தர மகாதேவன்

  ReplyDelete
 9. நான் எட்டாம் வகுப்பு படித்து முடித்து பெரியம்மா மகள் அக்காவின் கல்யாணத்துக்காக கல்லிடைக்குறிச்சி போனபோது தாமிரபரணியில் ஒருவாரம் ( ஒரு நாளைக்கு எத்தனை முறை என்பது கணக்கில் இல்லை) நன்றாக முங்கி குளித்திருக்கிறேன். எனது மற்ற சகோதரர்களுடன். அந்த குதூகலம் தங்களது இந்த படைப்பை வாசித்ததில் இருந்தது. நன்றி ஐயா வண்ணதாசன்.

  ReplyDelete