Friday 11 May 2012

பெய்தலும் நனைதலும்.

எதிர்பார்க்கவில்லை. எப்போதுமே எதையும் எதிர்பார்க்காத மனநிலையில்தான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன்.’எதிர்பாராதது’ என்ற ஐம்பது வருடத்திற்கு முந்திய ஒரு திரைப்படத் தலைப்பு அப்போதே எனக்குப் பிடித்திருந்ததற்கு இப்படி ஏதாவது உளவியல் அடிப்படைகள் இருக்கலாம்.
மறுபடியும், நேற்றைய எதிர்பாராத பிற்பகல் பற்றி. அந்த நேரத்தின் கோடை
மழை பற்றி.  கோடையின் பிற்பகல்கள் எப்போதுமே இப்படி மழை வருவது போலமூடாக்குப் போட்டு அழகு காட்டுபவை. தணிந்து வருகிற வெயில் மட்டும் தெருவில் நடந்து போய்க் கொண்டிருக்கும்.  மிகுந்த அவசரமான வேலை ஒன்று முடிக்கவேண்டிய அவசியத்துடன் காத்திருப்பது போல, அது சத்தம் காட்டாமல் நிழலோடு போகும். ஏற்கனவே பிற்பகல்கள் மௌனமானவை. மௌனத்திற்கு ஒரு அழகு உண்டு. அழகுக்குப் பயம் உண்டாக்கும் ஒரு கூரிய விளிம்பு உண்டு.  ஒரு பறவைக் குரல் இருக்காது. அங்கங்கு இருக்கும் அந்தந்த மர இலைகளின் கீழ், பறவையின் குரல்கள் ஒரு கூட்டுப் புழுக் கூடு போல் தொங்கிக் கொண்டிருக்கும்.  ஒரு செருப்புச் சத்தம் கேட்டால் ஆச்சரியம்.
‘இதே ஜோலியா போச்சு இதுக்கு. இப்பதான் அடிச்சுக் கொட்ட போகிறது மாதிரி பாவலா பண்ணும். ஒரு காத்து வந்து அப்படியே மழையக் கொண்டு
போயிரும்’.   இயற்கையின் பாவலாக்கள் அழகானவை.   புலி வருகிறது என்று நான்கு தடவைகள் சொல்லி ஏமாற்றி, வராதென ஏமாந்திருக்கும் ஐந்தாம் தடவை வரும் புலி அழகாகத்தான் இருக்கும். நேற்றைய மழை ஐந்தாம் தடவைப் புலி.
மழை இன்னும் என்னை என்னவோதான் செய்கிறது.
அதற்கு முந்திய நேரம் வரை இருந்தவனாக ஒருபோதும் இருப்பதில்லை. என்னுடைய மேகங்களும் கருத்துவிடுகின்றன. உறுமி அலைகின்றன. காற்றால் அலைக்கழிக்கப் படுகின்றன. தன் பாரம் தனக்கே கனத்து, தன்னை உடைத்துச் சிதறிக் கீழிறங்குகின்றன. பெய்யெனச் சொல்லாதே பெய்கின்றன.
நான் நீண்ட ஒரு காலத்தின் பின் மழைபார்க்க உட்கார்ந்தேன். இரண்டு வெள்ளை ப்ளாஸ்டிக் நாற்காலிகளை ஒன்றின் மேல் ஒன்றாகப் போட்டு
உட்கார்ந்து இந்த நந்தியாவட்டையில் ஊர்ந்து செல்லும் கடுத்தான் எறும்பு
பிரக்ஞையில் இருக்க, புத்தகங்கள் வாசிக்கும் என்னை சமீபத்தில் யாரும்
பார்த்திருக்கவில்லை. புத்தகங்கள் வாசிப்புப் போலத்தான் மழை வாசிப்பும். நீங்கள் பக்கங்களைத் திருப்ப வேண்டியதில்லை, மழையே தன் பக்கங்களைத் திருப்பித் தரும்.  நீங்கள் வாசிக்க விரும்புகிறவையாக அவை இராமல், மழை வாசிக்கத் தரும் தேர்ந்தெடுத்த பக்கங்கள் அவை.
நான், என் கிட்டப் பார்வையின் எல்லைக் குறைவுடன் ஏழாம் வகுப்பில் இருந்து வாழ்கிறவன் தானே. ஒரு கரும் பலகைக்கும் எனக்கும் உள்ள
தூரத்தின் மங்கிய எழுத்துக்களை, பாட்டு பாடிக் கொண்டே கண்பரிசோதனை  செய்யும் கிருஷ்ணமூர்த்தி டாக்டராலும். ஒரு வினோதமான விருப்ப வாசனை அடிக்கும் ஜெனித் ஆப்டிகல்ஸ் அண்ணாச்சி ஒருவராலும் தெளிவுறப் பெற்றவன் அல்லவா.
‘சிலேட்டில் எழுதி அழித்தது போல’ என்று ஒரு நிரந்தரமான உவமையை என்னிடம் வைத்திருக்கிறேன். அது ஒரு துயரமான இசை எனத் தொடர்ந்து எனக்கு மட்டும் கேட்டுக் கொண்டே இருக்கும். நிறைந்து பெருகும் குற்றால அருவி, ஏக பொதிகை உச்சியில் இருந்து நான் பார்த்த பாபநாசமும் அம்பாசமுத்திரமும்,  பிள்ளையைப் போட்டு பலாப் பழம் எடுத்த ஓடைக்குள் பிணைந்துகொண்டிருந்த பாம்புகள், பூனை உண்ட
எச்சமாய் நான்கு நாட்களுக்கு முன், கதவைத் திறக்கையில் விசிறிக் கிடந்த பறவைச் சிறகுகள் ... எல்லாமே எனக்கு இப்படி சிலேட்டில் எழுதி அழித்த காட்சிகள் தான். ஒரு கிளி பறந்துபோவதை நீங்கள் காட்டினால்,
உங்கள் விரல்கள் நீள்கிற திசையில் நான் ஒரு பச்சைப் பறவையை வரைந்து கொள்வேன். நான் பார்க்கிற கிளி, எப்போதும் நீங்கள் காட்டிய
கிளியை விட அழகானது.
நேற்றுப் பார்த்த மழையும் அப்படித்தான் அழகாக இருந்தது.
தூரத்தில் இருப்பவை அடையாளம் அற அழிக்கப் படுவதால்,  அதற்கு முன் மரங்களாக இருந்தவை வெறும் அசைவுகளாகி இருக்கும். அதற்கு அடுத்த கட்டிடங்களின் அழிப்பு, அதைவிடச் சற்றுக் குறைவானது என்று தெளிவடைந்துகொண்டே வரும் என் பார்வையில் ஒரு சீனிக்கல்லின் மேல் தெறிக்கிற மழைத்துளி அற்புதமான துல்லியம் அடைந்துவிடுகிறது.
நான் வாசிக்கிற ஒரு புத்தகவரிகளின் அபாரமான வடிவ அழகு உங்களுக்குக் கிடையாது.  கைத் தயாரிப்புக் காகிதங்களில் இழையோடும்
தாவரத் துரும்பை என்னைப் போல உங்களால் ‘உணர’  முடியாது.  ஒரு செய்தித் தாள், அல்லது பத்திரிக்கைப் பக்கத்தின் மீது நான் கொள்கிற வாசனை மிக்க காதலை நீங்கள் கொள்ளவே முடியாது. அதிகம் வெளித்
தெரியாத ஒரு காகிதத் தழும்பை என்னால் மட்டுமே வருடிக் கொடுக்க முடியும். மழையையும் அப்படித்தான் அதன் வாசனையோடு, தழும்போடு
பார்த்து அமர்ந்திருந்தேன்.
இது ஒன்றும் புதிய செய்தி அல்ல. கண்டு பிடிப்பு அல்ல. மழையின் போது
மழை மட்டுமே எஞ்சும். மழையைத் தவிர, மழை வேறெதையும் நம்மை நினைக்கவிடாது. மழை ஈரமே எனினும் அது நம்மை பஸ்பமாக்கும்.
அவரவர் சாம்பலின் வெதுவெதுப்பான குவியலில் அவரவ்ரை நிறுத்தி.’உருவாய் அருவாய், உளதாய் இலதாய்’ நம்மை மழை ஆக்கும்.
ஒரு தெருவோரப் பசு மழையில் அசையாது நிற்பதை நாம் நிறைய அவதானித்திருக்கிறோம். இந்த நொடி கல்லூர்ப் பிள்ளை கடையில் குனிந்து எச்சில் இலையைத் தின்றுகொண்டிருக்கிற கிழட்டுப் பசு, மழையில் ஒரு செவலை நிறச் சிலையாகிறது. அதன் கடை வாயில் தொங்கும் நரம்பு தென்னிய முரட்டு வாழையிலை ஒரு பச்சைக் கல் தகடாகச் செதுக்கப் பட்டுவிட்டது. கல்லில் செவலைக் கல் உண்டா, பச்சைக் கல் உண்டா? உண்டு. மழை எல்லா நிறத்தும் சிலை செய்யும். 
மழை உலகத்தின் சொற்களைப் பூராவும் அது பெய்கிறவரை அள்ளி, கடலில் எறிந்துவிடுகிறது. மழையின் போது உரையாட முடிகிறவரை நான் சந்தேகிக்கிறேன். 
எந்தச் சந்தேகமும் இன்றி, எந்த உரையாடலும் இன்றி மழை பார்த்துக் கொண்டே இருந்தேன்.  அல்லது மழை என்னைப் பார்க்கும்படி இருந்தேன்.
எங்கள் வீட்டு இரும்புக் கதவில் தபால்காரர் செருகி வைத்துவிட்டுப் போயிருந்த பத்திரிக்கைகளை மிகுந்த தாமதத்துடன் தான் பார்க்கிறேன்.
நானாகக் கூட அல்ல. பக்கத்துக் கட்டுமானத் தொழிலாளி தன் மஞ்சள்,
ஆரஞ்சுக் குடங்களோடு தண்ணீர் பிடிக்க வருகிறார். நான் ஒன்றும் கேட்கவில்லை. ‘மழை  செத்த வெறிச்சுட்டுல்லா’ என்கிறார். மழை சற்று விட்டுவிட்டது. நான் குடங்களில் தண்ணீர் பிடித்துக் கொள்கிறேன் என்று அர்த்தம். அவர் தோளில் தூக்கிவைத்த குடத்தோடு-’என்னமோ பொஸ்தகம் சொருவி வச்சிருக்கு’- சொல்லிவிட்டுக் கதவைச் சாத்துகிறார். இடது கையிலும் குடம் இருக்கிறது. இல்லாவிடில் அவரே எடுத்துக் கொடுத்துவிட்டுப் போயிருப்பார். இது போன்ற சிறு செயல்களின் மூலம் நம்மைக் காட்டிக் கொள்ளவிடாமல், இது போன்ற நிரம்பிய குடங்கள்
வழியடைக்கின்றன.
நான் அந்த இரு பத்திரிக்கைகளையும் எடுக்கிறேன்.
ஒன்றின் மீது ஒன்றாக மடித்துச் செருகப்பட்டவை. மேலே இருந்த பத்திரிக்கையில் மழையில் நனைந்த சந்தோஷத்தை உணர முடிந்தது. இரண்டாவது நனையவில்லை.’உயிர் எழுத்து’ நனைய விடாத சுற்றுத்
தாள் உடையது.
நான் அது நனைந்திருக்க விரும்பினேன். அதில் வெளிவந்து கொண்டிருக்கும் என் சமீபத்திய கவிதைகளும் நனைந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றியது.


4 comments:

 1. மழை குறித்து அற்புதமாகப் பகிர்ந்து உள்ளீர்கள்
  வாசிக்கையில் நானும் பெருமாள் புரத்து உள்ளும், விலக்கிலும் பெய்யும் மழையை உணர முடிந்தது
  கல்லூர் தொடங்கி சுத்தமல்லி விலக்கு, பேட்டை நூற்ப்பாலை, மீனாட்சி திரை அரங்கு எல்லாம்
  36 ஆம் என் பேருந்தில் மழை பெய்யும் பொழுது பயணிக்கும் உணர்வை
  உங்களின் இந்தப் பதிவில் அடைந்தேன்.

  உங்கள் அளவிற்கு மழையை உணரா விட்டாலும்
  ஓரளவிற்கு இந்தப் பாலைவன நிலத்தில் அமர்ந்து கொண்டு
  மழையை உணர உங்கள் எழுத்து உதவியது


  என்ன இருந்தாலும், கேராளவில் மழையின் பொழுது இருக்கும் அழகு தனி சார்
  அந்த அழகை நாம் எத்தனை முயற்சித்தாலும் நம் தமிழ் நாட்டில் கொண்டு வர முடிவதில்லை

  ReplyDelete
 2. எனக்கு மழையை எவ்வளவு பிடிக்குமோ, அவ்வளவு பிடிக்கும் மழையை எழுதுபவர்களையும். இப்ப இங்க நீங்க எழுதியிருக்கிங்க, என்ன சொல்ல...!!!!!!

  இவ்வளவு தாமதமாகவா வருவேன் என்று என்னையே கேட்டுக்கொண்டிருக்கிறேன், ரொம்ப சந்தோசம் சார்.... :-)

  ReplyDelete
 3. அன்பு கல்யாணி அண்ணன் அவர்களுக்கு,

  ஒரு முகமன் இல்லாமல் எப்படி ஆரம்பிப்பது எதையுமே என்று தெரியவில்லை. வெறும் முகமனாய் இல்லாமல், ஆழ்ந்த உறவு நிலையின் ஒரு பிரகடனம் போல தான் இருக்கிறது எந்த முகமனும். மழை அழகானது, நீங்கள் அதை எழுதியதைப் படிக்கும் போது எங்கோ ஒரு கவிழ்த்து வைத்த ஒரு பித்தளை பாத்திரத்தில் கூரையில் இருந்து தன் மிகுதித் தூறலை ஒரே தாளகதியில் இறக்கிக் கொண்டிருக்கிறது.

  கென்யாவில் இப்போது மழைக்காலம், கடும் கோடைக்கு அடுத்து மழை, போதும் மக்களே நீங்கள் காய்ந்தது என்று தூவி எல்லாரிடத்திலும் ஈரத்தை விட்டுச் செல்கிறது. குளிர்ந்த மனதுடன் எனக்காய் வாகனம் ஓட்டுபவரையும் என் வீட்டில் வேலைக்கு இருக்கும் பெண்ணையும் என் தகப்பனாயும் என் சிறுவயதில் வீட்டில் வேலைக்கு இருந்த மீனாம்மாளாகவும் பார்க்கத் தோன்றுகிறது. மழைக்காலத்தில் எல்லாருமே, எல்லாமே அழகாகி விடுகிறது. இங்கு நாய்கள் அதிகம் இல்லை, பூனைகள் அதிகம். மழையில் நனைந்த பூனை அபூர்வம் நம்மூரில், இங்கே அது மிக இயல்பு, மழை போற்றும் பூனைகள்.

  மழை எனக்கும் நிறைய ஞாபகங்களை வைத்திருக்கிறது தனது ஈரப்பக்கங்களில். மழை நெய்யும் நேரிழை, அம்மையின் பழந்துணியாய் வெம்மை தருவதும் உண்டு தான். திரையா, காட்சியா மழை என்று தோன்றும் சில சமயம். மழை, செல்வமாம் என் அப்பா சொல்வதுண்டு. மழைத்தண்ணீர் பிடித்து சமைக்கச் சொல்வார் அம்மாவை. நேரே வாளியில் பிடித்த தண்ணீர் அத்தனை தித்திப்பாய் இருக்க கண்டிருக்கிறேன். அதன் சோறு உலையில் கொதிக்கும் போது மழை மணக்கும்.

  அற்புதமான எழுத்து உங்களுடையது... தட்டச்சும் போது வெளியே மழை பெய்கிறது. உங்கள் எழுத்தில் மழை வாசிப்பது நிஜமழை.

  அன்புடன்
  ராகவன்

  ReplyDelete
 4. Aamaam Raghavan. Mazhai azhagaa kottuthu inga. :-)

  ReplyDelete