Saturday 2 June 2012

அபிதா

முகநூலில் P.G.சரவணனின் ‘ வனஞ்சுற்றிப் பறவை” இணைப்பு நேற்று
இருந்தது.   வனத்தை ஒரு பறவையாகச் சுற்றுதல் சரவணனுக்கு வாய்த்திருப்பதை அவர் பதிவின் வரிகள் உறுதி செய்கின்றன. வனத்தின் தொன்மை, வனத்தின் ஆதிமை அவருடையசொற்களில் கலந்து ஒரு சங்கப் பாடலின் குரலைத் தந்திருக்கின்றன. ஒருபறவையின் குரலை எனக்  கூடச் சொல்லலாம்.  ஒரு வனம், தொடர்ந்த அழிவின் மத்தியிலும் இன்னும்எப்படிப்  புதிதாகவும், புத்துணர்வூட்டுவதாகவும் இருக்கிறதோ, அப்படியே பறவைகளின் குரலும் இருக்கிறது.  ஒரு எந்தச்சாயுங்காலத்தின் கூடடையும் பறவைகளின் குரல்களும் அவரவர் அறிந்த, அறியாத ஒரு கானகத்தை, மரச் செறிவை வெயில் மயங்கி இருள் படரும் அந்த மாயப் பொழுதில் உருவாக்கிவிடுகின்றன.

நெல்லை-மதுரை புறவழிச் சாலையை விட்டு விலகி,  கங்கை கொண்டான் ஊருக்குள் போகிற பஸ்ஸில் உங்களுக்குப் பயணம் செய்கிற வாய்ப்புக் கிடைத்தால் நீங்கள் பாக்கியசாலி. போலீஸ் ஸ்டேஷன் பக்கம் ஒரே ஒரு பேருந்து நிறுத்தம் தான் உண்டு.    அது என்ன மரம் எனக் கவனிக்க விட்டுப் போயிற்று.   அத்தனை பறவைகளை ஏற்றுக் கொள்கிற அளவுக்கு அது ஓர் பெரு மரம்.  மரத்தடி பூராவும்   தரையே தெரியாத அளவுக்கு ஒரே பறவை எச்சம். கொடுத்து வைத்த ஊர். கொடுத்துவைத்த மனிதர்கள்.

 இங்கே தமிழ்ப் பண்பாட்டு மையம் இருக்கும் பகுதிக்கு உழுவைச் சாலை என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.  ட்ராக்டர் என்பதற்கான புதிய தமிழ்ச் சொல்லாக்கம் உழுவை.  அங்கு  வரிசையாக மூன்று நான்கு வாகை
மரங்கள்.  எல்லாம் பூத்துக் குலுங்கும் பறவைக் குரல்களால்.  ஒரு மரம் அதனதன் பருவங்களில் பூக்களையும்.  தினம்தோறும்  பறவைகளின்  குரல்களையும்  உதிர்க்கிறது.
எதை யாருக்கு     முடிகிறதோ அவர்கள் அதைப் பொறுக்கிக்கொள்ளலாம்.                                                                                                        
தேர்தல் சமயம் அந்தப் பக்கத்துப் பள்ளிக் கூடத்தில்தான் வாக்குச் சாவடி இருக்கும்.  பெரும்பாலும் வாக்குப் பதிவு ஐந்து மணிக்கே  அனேகமாக முடிந்துவிடுகிறது. இந்தப் பறவைகள் அடைகிற,  மறை ஓதுவது போலப் பறவைகள் ஆனந்தம் பாடும் அந்தக் கருக்கலில், பறவைகளின் ஒலியைக் கேட்ட காதோடு யாரும் வாக்குச் செலுத்துவார்கள் எனில், அந்தக் கணமே  ’திருமங்கலம் சூத்திரங்கள்’ தோற்றுப் போய்விட்டிருக்கும்

வாகைமரப் பூவும், பறவைகளும், காற்றும் அந்தப் பொழுதில் தங்களுக்குக்
கீழாக, ஊடாக வாக்குச் செலுத்தச் செல்கிறவர்களின் ‘பொன்னான’
விரல்களைச் சரியான பொத்தான்களை அழுத்தச் செய்யும் மேன்மையை
உடையவை. தேர்தலைப் புறக்கணிக்கச் செய்யும் முடிவைக் கூடக் கடைசி
நேரத்தில் எடுக்கவைக்கச் செய்யவும் கூடும் அந்தப் பறவைக் குரல்கள்.

நான் இளஞ்சிவப்புச் சாமரங்கள் போல உதிர்ந்து கிடக்கும் வாகைப்
பூக்களைப் பொறுக்கி எடுத்துக் கொள்ளாமல் வருவதில்லை.  பறவை
எச்சத்தால் மெழுகப்பட்டிருக்கிற தார்ச்சாலையில் இருந்து அப்படி ஓரிரு
பூக்களை  என்னைப் போலவே குனிந்து  (ரேஷன் கடையில் வாங்கிய நீல மண்ணெண்ணெய் அலம்பும் ப்ளாஸ்டிக் கேனை கீழே வைத்துவிட்டு)            எடுத்துக்கொண்ட,  ஒக்கலில் பிள்ளை வைத்திருந்த   அந்தப் பெண்ணை
மறுபடியும் பார்க்கமுடியவில்லை.   ஒரே சித்திரத்தை இரண்டாம் முறை
வரைவதென்பது கடந்து போகும் எந்த தினத்தின் ‘ஏட்டிலும்’ கிடையவே
கிடையாது.

வனஞ்சுற்றிப் பறவையில் ஆரம்பித்து எங்கேயோ போயாயிற்று. .  அது வனத்தின் குணம்.   எங்கெங்கோ திக்குத்தெரியாது சுற்றச் சொல்லும்.  அது பறவையின் இயல்பு.   எங்கெங்கோ சுற்றிப் பறந்து தரையிறங்கும்.

வனஞ்சுற்றிப் பறவை என்பதைச் சற்றே மாற்றி , மனஞ்சுற்றிப் பறவை
என்று சொல்லிப் பார்க்கிறேன். அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.  ஒரு
மனத்தை விடப் பெரிய வனம் இல்லை. ஒரு மனதைப் போன்று உயரச் சிறகடிக்கும் பறவையும் இல்லை.
மனஞ் சுற்றிப் பறவை , மனங்கொத்திப் பறவை.
எத்தனையோ வருடங்களுக்கு முன்பு நான் எழுதிய ‘அபிதா’ கவிதையை
நினைக்கத் தோன்றுகிறது. அது லா.ச.ரா எழுதிய ‘அபிதா’ வந்திருந்த நேரம்.
நான் பழுத்திருந்த போது /  பழங்கடிக்க வராமல் / உளுத்துவிட்டதும்/
புழுப் பொறுக்க/ ஓடிவரும் மனங்கொத்தி நீ” என்ற அந்தக் கவிதையில்
முதன் முதலில் உட்கார்ந்த அந்தப் பறவை, அதற்குப் பின் திரைப்பாடல், கட்டுரைத் தொடர், சினிமாத் தலைப்பு என்று நிறைய இடங்களில் பறந்து
பறந்து உட்கார்ந்துகொண்டு இருக்கிறது. 

ஒரு பறவை என்றால் அப்படித் தானே இருக்கவும் வேண்டும்

9 comments:

 1. கங்கை கொண்டான் ஊர் எனக்கு எப்போதும் நினைவில் இருக்கும்.

  பட்டய கணக்காலப் படிப்பின் பொழுது நானும் என் நண்பன் குமரனும்
  உலகமயமாக்கல் கொள்கையின் முதல் கல்லை அங்குதான் நட்டோம்
  கங்கை கொண்டான் கனரா வங்கியில் தான், நரசிம்மம் கமிட்டி பரிந்துரைத்த
  NPA (non performing asset) ரிப்போர்ட்டை தொடங்கினோம்.

  விவசாயக் கடனால் அரசிற்கு லாபமில்லை என்ற முதல் பாவ வாக்கியத்தை அங்குதான் எழுதத் தொடங்கினோம்

  ReplyDelete
 2. "வனஞ் சுற்றிப் பறவை" உங்களின் மனஞ் சுற்றி நினைவு வெளியிலும் பறந்தது கண்டு பெருங்களிப்பும் பேரன்பும்.

  நெகிழ் அன்பில்
  வாசமலர்ப் பூக்களுடன்
  சரவணன். :)

  ReplyDelete
 3. //வனத்தின் ஆதிமை அவருடையசொற்களில் கலந்து ஒரு சங்கப் பாடலின் குரலைத் தந்திருக்கின்றன. //இந்த வரிகள் என் நண்பன் ஊர்சுத்திக்கு இன்னும் அதிக தூரம் பறக்க வலிமை தரும் என நம்புகிறேன்.

  ReplyDelete
 4. வனஞ்சுற்றிப்பறவை மனஞ்சுற்றிப் பறவை இரண்டிலும் பறக்கத்தான் வேண்டும். இரண்டும் கவிஞனுக்கான பறவைகள்.

  ReplyDelete
 5. வனஞ்சுற்றி பறவை மனஞ்சுற்றி பறவை இரண்டிலும் பறந்தேன்
  ஒரு கவிஞனாய். எனக்கும் அந்த பெரிய தெரியாத விருட்சத்தை விருட்சத்தின் கீழான் அந்த எச்சப்பெருக்கைக் காணத்தான் ஆசை கல்யாண்ஜி.

  ReplyDelete
 6. ”வனஞ் சுற்றிப் பறவை” யில் எமது கவிஞர் பறவைகளின் மனங்களைச் சுற்றி வந்திருப்பார்.... பறவைகளின் பாசை அறிந்தவர் போலிருக்கு!. எமது கவிஞரின் தனிச்சிறப்பு அவருடைய படைப்புகளில் யாரைக் குறிப்பிடுகிறாரோ அவர்களாகவே மாறிவிடுவார். எமது கவிஞரை இந்த அளவிற்குப் பாராட்டி ஊக்கமளித்த உமக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள் பல...........:-)

  ReplyDelete
 7. சரவணனின் கவிதைகளை வாசிக்கும்போது தமிழின் இனிமையைப் போற்றத் தோன்றுகிறது. இறுக்கமாகக் கட்டப்பட்ட கதம்பம் போன்ற வரிகள். உங்கள் எழுத்தில் வனஞ்சுற்றிப் பறவையானது 'மனஞ்சுற்றிப் பறவை'யானதில் மகிழ்ச்சி. மரங்களும் மலர்களும் பறவைகளும் மழையும் இல்லையென்றால்,இந்த பூமியில் வாழ்வு பொருளற்றதே.

  உங்களைச் சந்திக்க நேர்ந்ததில் மகிழ்ச்சி. திருநெல்வேலிப் பயணம் பற்றி எழுத நினைத்துக்கொண்டிருக்கிறேன்... நினைத்துக்கொண்டிருக்கிறேன்....

  ReplyDelete
 8. இந்த "அவசரம்" என்று அநேகமாக எல்லோராலும் கூறப்பட்டுவரும் கான்க்ரீட் காலத்தில்... பி.ஜி.சரவணன் ஒரு தனித்துவம் .
  அவரை 'அது' என்று அழைப்பது பொருந்தும்...
  "காடு" "மரம்" "வானம்" நிலா" "மழை" "காற்று" "அலை" "பறவை" "புல்" "பனி" "பி.ஜி.சரவணன்"....!!!!
  'அவன் அதுவாகக் கரைந்தான்' என்று படித்திருக்கிறேன்... இதோ ஒரு வாழும் உதாரணம்....
  அந்தக் 'கரைதலின்' பாகு அவரிடம் இருந்து வரும் வரிகள்...
  அதில் தொன்மத்தின் தடங்கள் அதிகம் இருப்பது ஆச்சர்யமில்லை.
  தொன்மத்தின் வடிவம்தானே நானும் நீங்களும் இயற்கையும் எல்லாமும்...?
  இப்படிப்பட்ட ஒரு அபூர்வத்தின் வெளிப்பாடு 'வண்ணதாசன்' அவர்களால் அங்கீகரிக்கப்படுவது இன்னும் ஒரு வைரம்...

  ReplyDelete